உக்ரேனிய ட்ரொட்ஸ்கிசவாதியான போக்டன் சிரோட்டியுக்கை விடுதலை செய்ய ரோஜர் வாட்டர்ஸ் அழைப்பு விடுத்துள்ளார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அதிவலது ஜெலென்ஸ்கி அரசாங்கம் மற்றும் ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்கும் இடையிலான நேட்டோவினால் தூண்டிவிடப்பட்ட போருக்கு எதிரான அவரது சோசலிச எதிர்ப்புக்காக, ஏப்ரல் 25 அன்று உக்ரேனிய இரகசிய சேவையால் (SBU) கைது செய்யப்பட்ட உக்ரேனிய ட்ரொட்ஸ்கிசவாதி போக்டான் சிரோட்டியுக்கை விடுவிப்பதற்கான பிரச்சாரம் சமீபத்திய நாட்களில், உத்வேகம் பெற்றுள்ளது.

உடல் நலம் குன்றிய, 25 வயதான சிரோடியுக், இப்போது SBU ஆல் உக்ரேனில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பாசிசக் கூறுபாடுகளை கொண்டிருக்கின்ற SBU இழிபுகழ் பெற்றதாகும். சிரோடியுக் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர் 15 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை எதிர்கொள்கிறார். இது சமகால உக்ரேனில் மரண தண்டனைக்கு சமமானதாகும்.

புதன்கிழமை, பிங்க் ஃபுளோய்ட் (Pink Floyd) என்ற ராக் இசைக்குழுவின் இணை-ஸ்தாபகரும் முன்னணி பாடகருமான ரோஜர் வாட்டர்ஸ், முன்னர் ட்விட்டர் (Twitter) என்றழைக்கப்பட்ட எக்ஸ் (X) இல் சிரோட்டியுக்கின் விடுதலைக்கு அழைப்புவிடுத்ததுடன், உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவர் டேவிட் நோர்த்தின் காணொளி அறிக்கையை அவரது 600,000 க்கும் அதிகமான பின்தொடர்பவர்களுடன் பகிர்ந்து கொண்டார். போருக்கு எதிரான அவரது கோட்பாட்டு ரீதியான எதிர்ப்புக்காகவும் ஜூலியன் அசான்ஜ் போன்ற பிரமுகர்களைப் பாதுகாப்பதற்காகவும் பரவலாக அறியப்பட்டவரும் மதிக்கப்படுபவருமான வாட்டர்ஸ், “போக்டான் சிரோட்டியுக்கை விடுதலை செய், ஜெலென்ஸ்கி யார் என்பதை அம்பலப்படுத்தியதற்காக டேவிட் நோர்த்துக்கு நன்றி” என்று எழுதினார்.

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

இதை எழுதிக் கொண்டிருக்கையில், முதலில் ஏப்ரல் 30 அன்று எக்ஸ்/ட்விட்டரில் பதிவிடப்பட்ட அந்த காணொளி அறிக்கை 80,000 க்கும் அதிகமானவர்களால் பார்க்கப்பட்டுள்ளது. போக்டன் சிரோடியுக்கை விடுவிக்கக் கோரும் மனுவில் 1,400 க்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டுள்ளனர்.

ஸ்பெயினில், இடது வலைத் தளமான ரெபெலியோன் (Rebelión), சிரோட்டியுக்கின் விடுதலைக்கு அழைப்பு விடுத்து டேவிட் நோர்த் வெளியிட்ட அறிக்கையை மறுபிரசுரம் செய்தது. இந்த அறிக்கை ட்விட்டர்/எக்ஸில் கிரேசோன் (Grayzone) நிருபர் ஆரோன் மேட்டால் (Aaron Maté) மீண்டும் வெளியிடப்பட்டது.

லத்தீன் அமெரிக்காவில், அனைத்துலகக் குழுவுடனான அதன் கணிசமான மற்றும் நன்கு ஆவணப்படுத்தப்பட்ட கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும், போக்டன் சிரோட்டியுக்கின் கைது பற்றி ஒரு அறிக்கையை பொலிட்டிகா ஒப்ரேரா (Politica Obrera) வெளியிட்டுள்ளது, இது இடதுசாரி இயக்கங்கள் மீதான ஜெலென்ஸ்கி ஆட்சியின் ஒடுக்குமுறையின் ஒரு பகுதியாக இருப்பதாக விளக்கியுள்ளது. அக்கட்டுரை பின்வருமாறு நிறைவு செய்தது, “போக்டானின் விடுதலைக்கான போராட்டமானது ஏகாதிபத்திய போர், இனப்படுகொலை மற்றும் பாசிசவாதத்திற்கு எதிரான போராட்டத்தின் பாகமாகும். போக்டன் சிரோடியுக்கிற்கு உடனடி விடுதலை!”

துருக்கியில், பல ஊடகங்கள் சமீபத்திய நாட்களில் போக்டானின் கைது குறித்து செய்தி வெளியிட்டுள்ளன. தொழிலாளர் கட்சியின் (EMEP) தினசரி செய்தித்தாள், Evrensel Gazetesi, அதன் எக்ஸ்/ட்விட்டர் கணக்கு கிட்டத்தட்ட 840,000 பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளது, போக்டானின் கைது குறித்தும் அவரைப் பாதுகாக்க WSWS இன் பிரச்சாரம் குறித்தும் செய்தி வெளியிட்டது. துருக்கிய பத்திரிகையாளர் செய்டா கரனும் (Ceyda Karan) புதன்கிழமை தனது வானொலி நிகழ்ச்சியான ஸ்புட்னிக் டர்கியேவில் (Sputnik Türkiye) இந்த விவகாரத்தை குறிப்பிட்டார். இதேபோல், துருக்கிய இணைய வெளியீடுகளான dokuz8HABER மற்றும் Tüm Haberler தங்கள் வாசகர்களுக்கு கைது மற்றும் போக்டனுக்கு ஆதரவான பிரச்சாரம் குறித்து தெரிவித்தன.

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

இந்த பிரச்சாரம் உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே பெருகிய முறையில் ஆதரவைப் பெற்று வருகிறது. ஆஸ்திரேலியாவில், கல்வியாளர்களின் சாமானிய தொழிலாளர் குழு ஒன்று சிரோட்டியுக்கை பாதுகாக்கும் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. ஆஸ்திரேலியாவில் உள்ள சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பின் (IYSSE) பல கிளப்புகளும் இதேபோல் போக்டானை விடுவிக்க கோரியும், “அவரது சுதந்திரத்திற்கான ஒரு உலகளாவிய போராட்டத்தைக் கட்டியெழுப்புவதற்கான போராட்டத்தின் பாகமாக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யும்” என்றும் உறுதியளித்து தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளன.

ஜேர்மனியில், இரயில் ஓட்டுநர்களின் ஒரு சாமானிய தொழிலாளர் குழு, சிரோட்டியூக்கை விடுதலை செய்யக் கோரி ஒரு சக்திவாய்ந்த தீர்மானத்தை நிறைவேற்றியதுடன், ரஷ்யாவுக்கு எதிராக நேட்டோ போர் அபிவிருத்தி அடைந்து வருவது மற்றும் காசாவில் இனப்படுகொலை ஆகியவற்றிற்கு மத்தியில் பொக்டான் கைது செய்யப்பட்டிருப்பதன் பரந்த அரசியல் தாக்கங்களை சுட்டிக்காட்டியது.

அது கூறியது,

ஒரு நடவடிக்கைக் குழுவாக, உக்ரேனிய போருக்கு ஜேர்மன் அரசாங்கத்தின் ஆதரவுக்கு எதிராகவும், நடந்து வரும் ஆயுத விநியோகங்களுக்கு எதிராகவும் முந்தைய  வேண்டுகோள்களில் நாங்கள் ஏற்கனவே வலுவாகவும் தெளிவாகவும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளோம்.

அந்த நேரத்தில், ஜேர்மன் அரசாங்கம் மற்றும் ஊடகங்கள், ஆயுத விநியோகம் மற்றும் போருக்கான ஆதரவு ஆகியவை தற்காப்பு நோக்கத்திற்காக சேவை செய்கின்றன என்ற கூற்று ஒரு மோசமான பொய் என்பதை நாங்கள் வலியுறுத்தினோம். ஜேர்மனியில் உற்பத்தி செய்யப்படும் ஆயுதங்களும் வெடிமருந்துகளும் மக்களையும், சிப்பாய்களையும், பொதுமக்களையும் ஒரே மாதிரியாகக் கொல்கின்றன. காசாவில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாரிய படுகொலை சுய பாதுகாப்புக்கு அல்ல. உக்ரேனிய-ரஷ்ய முன்னணியில் முட்டாள்தனமான படுகொலைகள் உக்ரேனின் பாதுகாப்புக்கு சேவையாற்றவில்லை. மாறாக ரஷ்யாவை மண்டியிட வைப்பதற்கும், பிளவுபடுத்துவதற்கும் சேவையாற்றுகின்றன. இப்போது கைது செய்யப்பட்டிருக்கும் போக்டன் சிரோட்டியுக்கை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுப்பது எவ்வளவு முக்கியமானது மற்றும் அவசரமானது என்பதை தெளிவுபடுத்துகிறது. போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் பல்கலைக்கழகங்களில் மிருகத்தனமாக அடக்கப்படுகின்றன. நாளை, இராணுவ போக்குவரத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் சக ஊழியர்கள் துன்புறுத்தப்படலாம். இது நடக்க அனுமதிக்கக் கூடாது! போக்டன் சிரோட்டியுக் கைது செய்யப்பட்டதற்கு எதிரான போராட்டம் போர் மற்றும் சர்வாதிகாரத்திற்கு எதிரான போராட்டத்தின் ஒரு முக்கிய பகுதியாகும்.

உலகெங்கிலும் உள்ள வாசகர்கள் கிரேக்கம், அமெரிக்கா மற்றும் ரஷ்யா உட்பட, சிரோடியூக்கின் அரசியல் துன்புறுத்தலை எதிர்த்து WSWS க்கு கருத்துக்களை தொடர்ந்து சமர்ப்பித்து வருகின்றனர்.

அமெரிக்காவில் உள்ள ராபர்ட், “போக்டன் சிரோடியுக்கின் சிறைவாசம் என்பது பைடென் மற்றும் காங்கிரஸால் ‘சுதந்திரம் மற்றும் ஜனநாயகம்’ என்ற பெயரில் ஜெலென்ஸ்கி போன்ற தலைவர்களை ஊக்குவிக்க உலகம் முழுவதும் அனுப்பியுள்ள பில்லியன் கணக்கான பணத்தால் நிதியளிக்கப்பட்ட மற்றும் சாத்தியப்படுத்தப்பட்ட எண்ணற்ற கொடுமைகளில் ஒன்றாகும்” என்று எழுதினார்.

ஜோன் என்பவர், “நான் கலிபோர்னியாவில் ஒரு சிவில் உரிமைகள் வழக்கறிஞர் ஆவேன், குறிப்பாக பொலிஸ் அடக்குமுறைக்கு எதிராக போராடுவதில் நிபுணத்துவம் பெற்றுள்ளேன். போக்டன் மற்றும் அரசியல் குற்றச்சாட்டுக்களின் பேரில் உலகெங்கிலும் உள்ள அனைத்து கைதிகளையும் விடுதலை செய்யுங்கள்” என்று எழுதினார்.

அமெரிக்காவைச் சேர்ந்த ஃபிரடெரிக் ஸ்மித் WSWS க்கு பின்வரும் அறிக்கையை சமர்ப்பித்தார்: “ரஷ்யாவின் நலனுக்கு சேவை செய்வதாக கூறி போக்டன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதை மறுபரிசீலனை செய்யுமாறு உக்ரேனிய அதிகாரிகளுக்கு நான் அழைப்பு விடுக்கிறேன். புட்டின் மற்றும் உக்ரைன் மீதான அவரது படையெடுப்பை எதிர்ப்பவராக போக்டன் உலகம் முழுவதும் அறியப்படுகிறார். உலகெங்கிலும் உள்ள தொழிலாள வர்க்க மக்களின் ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதை நானும் அவரும் ஆதரிக்கிறோம். தயவுசெய்து உடனடியாக போக்டனை விடுதலை செய்யுங்கள்.”

காசாவில் இனப்படுகொலைக்கு எதிராக வளர்ந்து வரும் வெகுஜன எதிர்ப்பு இயக்கத்தின் மத்தியில் போக்டன் சிரோட்டியுக்கை விடுவிப்பதற்கான ஆதரவு அதிகரித்து வருவது பெரும் புறநிலை முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. போக்டனின் விடுதலைக்கான பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்த அறிக்கையில் டேவிட் நோர்த் விளக்கியவாறு,

உலகெங்கிலும் உள்ள தொழிலாள வர்க்கமும் இளைஞர்களும், காஸா மக்களுக்கு எதிராக பைடென் நிர்வாகம் மற்றும் நேட்டோவின் ஆதரவுடன் இஸ்ரேல் நடத்தி வருகின்ற குற்றவியல் போரால் நியாயமான முறையில் சீற்றம் அடைந்துள்ளனர். ஆனால், காஸா இனப்படுகொலைக்கு ஒத்துழைக்கும் அதே அரசாங்கங்கள், உக்ரேனில் பினாமிப் போருக்கு நிதியுதவி செய்கின்றன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். காஸா மற்றும் உக்ரேனில் இடம்பெற்றுவரும் வன்முறைகள், அணு ஆயுத பேரழிவால் மனிதகுலத்தை அச்சுறுத்தும் இராணுவ மோதல்களின் உலகளாவிய விரிவாக்கத்தில் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட இரு போர்முனைகளாகும்.

போக்டனின் விடுதலைக்கான போராட்டம் மற்றும் பினாமிப் போருக்கு முடிவு கட்டும் போராட்டமானது, ஏகாதிபத்தியம், இனப்படுகொலை மற்றும் பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தின் இன்றியமையாத அங்கமாக பார்க்கப்பட வேண்டும்.

இன்று இந்த மனுவில் கையெழுத்திட்டு, இந்த பிரச்சாரத்தின் வளர்ச்சிக்காக நிதியுதவி செய்யவும், அறிக்கை மற்றும் மனுவை முடிந்தவரை பரவலாக விநியோகிக்கவும், WSWS க்கு கடிதம் மூலம் நேரடியாக ஈடுபடவும் எங்கள் வாசகர்கள் அனைவரையும் அழைக்கிறோம்.

Loading