முன்னோக்கு

அலபாமாவில் மெர்சிடிஸ்-பென்ஸ் தொழிலாளர்கள் மத்தியில் UAW வாக்குகளை இழக்கிறது:  அரசியல் பிரச்சினைகள்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

அலபாமாவின் டஸ்கலூசாவில் செய்தியாளர் சந்திப்பைத் தொடர்ந்து UAW தலைவர் ஷான் ஃபைன், மே 17, 2024 [AP Photo/Kim Chandler]

அலபாமாவில் உள்ள மெர்சிடிஸ்-பென்ஸ் வாகனத் தொழிலாளர்கள் 56-44 சதவிகிதம் என்ற வித்தியாசத்தில் வாக்களித்து, ஐக்கிய வாகன தொழிலாளர் சங்கத்துடன் (UAW) இணைவதை நிராகரித்ததானது, தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கு கிடைத்த ஒரு படுதோல்வியாகும்.

90 சதவிகித வாக்குப்பதிவைக் கொண்ட இந்த தேர்தலில் ஏற்பட்ட தோல்வியானது, UAW இன் பிரச்சாரம் முற்றிலும் மேல்-கீழ் முயற்சியாக இருந்ததோடு, தொழிற்சங்க எந்திரத்தால் தொடங்கப்பட்டு இயக்கப்பட்டது என்ற உண்மையைப் பிரதிபலிக்கிறது. UAW ஆனது, பெருநிறுவன அதிகாரத்திற்கு சவால் விடுவதற்கு கீழிருந்து வரும் ஒரு உண்மையான இயக்கம் அல்ல என்ற உண்மையை பிரதிபலிக்கிறது.

உண்மையில், டென்னசி (Tennessee) மாநிலம் சாட்டனூகாவில் (Chattanooga) உள்ள வோல்ஸ்வாகன் தொழிற்சாலையில் UAW வெற்றிக்கும், டஸ்கலூசாவுக்கு (Tuscaloosa) அருகிலுள்ள அலபாமாவின் வான்ஸ் தொழிற்சாலையில் அதன் தோல்விக்கும் இடையேயான முக்கிய வேறுபாடு என்னவென்றால், வோக்ஸ்வாகன் (VW) தொழிற்சங்க பிரச்சாரத்தை வரவேற்றது, அதே நேரத்தில் மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz) தொழிற்சங்கத்தை எதிர்த்து, தொழிற்சங்க எதிர்ப்பு பிரச்சாரத்தை நடத்தியது.

ஜேர்மனியில் IG Metall மற்றும் பிரேசில், மெக்சிகோ மற்றும் பிற இடங்களில் உள்ள ஆலைகளிலுள்ள தொழிற்சங்கங்களுடனான அதன் பெருநிறுவன உறவுகளின் முன்மாதிரியாக, வாகனத் தொழிலாளர்களைச் சுரண்டுவதில் UAW எந்திரத்தை ஒரு முக்கிய பங்காளியாக வோல்ஸ்வாகன் கருதுகிறது. சட்டனூகா ஆலை அதன் உலகளாவிய சாம்ராஜ்யத்தில் தொழிற்சங்கம் அல்லாத ஒரே தொழிற்சாலை ஆகும்.

மெர்சிடிஸ்-பென்ஸ், அதன் பங்கிற்கு, UAW க்கு எதிராக பிரச்சாரம் செய்தது.  தினசரி குறுஞ்செய்திகளை அனுப்பி, வேலை நேரங்களில் கட்டாயக் கூட்டங்களை நடத்திய நிறுவனம், தொழிற்சங்க நிர்வாகம் மற்றும் தொழிலாளர் சக்திக்கும் இடையிலான உறவில் விரும்பத்தகாத மூன்றாம் தரப்பு என்று கண்டனம் செய்தது. இது அலபாமா ஆளுநர் கேட் ஐவி மற்றும் பிற தெற்கு குடியரசுக் கட்சியின் ஆளுநர்களிடமிருந்து தொழிற்சங்க எதிர்ப்பு பிரச்சாரத்தின் ஒரு கூர்மையான பிரச்சாரத்துடன் இணைந்திருந்தது (VW இன் தொழிற்சங்க சார்பு நிலைப்பாட்டின் காரணமாக டென்னசியில் இவர்களது முயற்சிகள் தோல்வியடைந்தன).

“தெற்கை ஒழுங்கமைக்கும்” என்ற UAW இன் பிரச்சாரம், பைடென் நிர்வாகத்தின் ஆதரவு மற்றும் பெருநிறுவன கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்களில் சாதகமான அறிக்கைகள் இருந்தபோதிலும், நிர்வாகத்திடம் இருந்து வந்த முதல் தீவிர எதிர்ப்பால் அது தோல்வியடைந்தது.

மொத்த வாக்குகள் அறிவிக்கப்பட்ட பின்னர், UAW தலைவர் ஷான் பெயின், மெர்சிடஸ் நிர்வாகத்தின் சட்டவிரோத தலையீடு இருப்பதாக குற்றம்சாட்டி, தொழிற்சங்கம் இந்த தேர்தல் முடிவை எதிர்க்கும் என்று கூறி, உடனடியாக சேதக் கட்டுப்பாட்டு முறைக்கு சென்றார். “இந்த நிறுவனம் அப்பட்டமான மற்றும் சட்டவிரோத நடத்தையில் ஈடுபட்டுள்ளது,” என்று அவர் கூறினார்.

ஆனால், தொழிலாளி வர்க்கத்தின் போராட்டங்கள் எப்பொழுது முதல் நிர்வாகத்தின் நல்ல நடத்தையின் மீது நிபந்தனையாக இருந்தன? 1930களில், UAW தொழிற்சங்கம் கட்டமைக்கப்பட்டபோது, நிறுவனங்கள் திட்டமிட்ட வன்முறையில் ஈடுபட்டன. அவை போர்க்குணமிக்க தொழிலாளர்களை அடித்தல், கொலை செய்தல், ஆயுதமேந்திய குண்டர்கள், பொலிஸ் மற்றும் தேசிய பாதுகாப்புப் படையினரை கட்டவிழ்த்துவிட்டு மறியல் அணிவகுப்புகளைத் தாக்கவும் வேலைநிறுத்தங்களை உடைக்கவும் பயன்படுத்தின.

இந்த நடவடிக்கைகள், தொழிலாளர்கள் வெற்றிபெறுவதில் இருந்து தடுக்கவில்லை, ஏனென்றால் ஊதியங்களை உயர்த்துவதற்கும், வேலையிட நிலைமைகளை மேம்படுத்துவதற்கும், நிறுவனத்தால் வழங்கப்படும் மருத்துவக் கவனிப்பு மற்றும் ஓய்வூதியங்களுக்கு உத்தரவாதம் அளிப்பதற்கும், மற்றும் சகிக்கத்தக்க வேலையிட நிலைமைகளை வென்றெடுப்பதற்கும் ஒரு வர்க்கப் போராட்டத்தை நடத்துவதற்கு தொழிற்சங்க அமைப்பு இன்றியமையாதது என்று அவர்கள் கண்டனர். அவர்கள் வெகுஜன மறியல்கள், பொது வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆலை ஆக்கிரமிப்புக்களை நடத்தினர், இதில் தொழிலாளர்கள் தொழிற்சாலைகளைக் கைப்பற்றி முதலாளித்துவ சொத்துடைமைக்கு நேரடியாக சவால் விடுத்தனர்.

இதற்கு நேர்மாறாக, தெற்கில் UAW எந்திரத்தின் உந்துதல் எந்தவொரு தீவிரமான வேலைத்திட்டத்துடனும் தொடர்புடையதாக இருக்கவில்லை. ஊதியம், சலுகைகள் அல்லது வேறு நிபந்தனைகள் குறித்து தொழிற்சங்கம் எந்த கோரிக்கைகளையும் முன்வைக்கவில்லை.

இது, UAWன் தலைவர் ஃபைன் & கோவின் (Fain&Co) தரப்பில் மிகவும் வேண்டுமென்றே செய்யப்படுகிறது. அமெரிக்காவின் ஜனநாயக சோசலிஸ்டுகள் (DSA) கட்சியின் பல உறுப்பினர்களை முன்னணி பதவிகளில் நிறுவியுள்ள UAW எந்திரம், கீழிருந்து வெளிப்படும் ஒரு இயக்கத்தை விரும்பவில்லை. ஏனெனில், இது நிறுவனங்கள் மற்றும் முதலாளித்துவ அரசியல் ஸ்தாபகத்துடனான அதன் சொந்த உறவுகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தும். உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான பிரம்மாண்டமான போர் செலவு, காஸாவில் இனப்படுகொலை, ஈரானுடனான போர் மற்றும் சீனாவுக்கு எதிராக தொடரும் அமெரிக்க இராணுவ கட்டமைவு ஆகியவற்றால் ஏற்பட்ட பிரம்மாண்டமான செலவுகளுக்கு, தொழிலாளர்களை அவர்களின் வேலைகள் மற்றும் வாழ்க்கைத் தரங்களுடன் விலை செலுத்த நிர்பந்திக்கும் ஒரு “போர்க்கால பொருளாதாரத்தை” திணிக்க பைடென் நிர்வாகத்துடன் ஃபைன் நெருக்கமாக செயல்பட்டு வருகிறார்.

2023 ஆம் ஆண்டு, டெட்ராய்ட் பெரிய மூன்று நிறுவனங்களின் (Detroit Big Three) ஒப்பந்தப் போராட்டத்தில் “வரலாற்று வெற்றியை” பெற்றதாகக் கூறிய போதிலும், பல தசாப்தங்களாக UAW இன் நிர்வாக-சார்பு பெருநிறுவன கொள்கை ஃபைனின் கீழ் தொடர்கிறது. ஃபைன் ஒரு போலியான “தனிமையான வேலைநிறுத்தத்திற்கு” அழைப்பு விடுத்தார். உண்மையில் இது ஒரு வேலைநிறுத்தம் அல்ல, இது பெரும்பாலான தொழிலாளர்களை தங்கள் பணியிடங்களில் விட்டுவிட்டு, நிர்வாகத்திற்கு லாபம் ஈட்ட அனுமதித்தது.

இறுதி ஒப்பந்த உடன்பாடு தொழிலாளர்களின் அனைத்து முக்கிய கோரிக்கைகளையும் கைவிட்டு, பணவீக்கத்திற்கும் குறைவான ஊதிய உயர்வை வழங்கியது. இது ஃபைன் மற்றும் ஜோ பைடனால் “சாதனையளவிலான ஒப்பந்தம்” என்று பாராட்டப்பட்டது. இந்த ஒப்பந்தம் ஒப்புதலளிக்கப்பட்டதில் இருந்து, டெட்ராயிட்டைத் தளமாகக் கொண்ட மூன்று வாகனத்துறை நிறுவனங்களும் UAW யின் தரப்பில் இருந்து எந்த எதிர்ப்பும் இல்லாமல் பாரிய வேலை வெட்டுக்களை நடத்தியுள்ளன. புதிய ஒப்பந்தத்தின் கீழ் முழுநேர வேலை என்று பொய்யாக வாக்குறுதியளிக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான தற்காலிக தொழிலாளர்களை வேலையிலிருந்து நீக்குவதும் இதில் அடங்கும்.

ஜெனரல் மோட்டார்ஸ் (GM), ஃபோர்ட் (Ford) மற்றும் ஸ்டெல்லாண்டிஸ் (Stellantis) ஆகியவற்றில் UAW எந்திரங்களால் திணிக்கப்பட்ட நிலைமைகள் மெர்சிடஸ்-பென்ஸ் இல் இருப்பதை விட சற்றே மேம்பட்டவையாக உள்ளன. தரக்குறைவான ஊதியம் மற்றும் சலுகைகள், ஊதிய அடுக்குகள், பகுதி-நேர வேலை பரவல், கட்டாய கூடுதல் நேர வேலை மற்றும் பாதுகாப்பு இல்லாமை ஆகியவை இதில் உள்ளடங்கும். சமூக ஊடகங்களில் பல தொழிலாளர்கள் UAW- பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சாலைகளில் சமீபத்திய வேலை வெட்டு அலைகளையும், UAW ஊழல் தொடர்பான நன்கு ஆவணப்படுத்தப்பட்ட பதிவுகளையும் சுட்டிக்காட்டியுள்ளனர். மெர்சிடிஸ்-பென்ஸ் நிர்வாகம் சமீபத்தில் UAW-பெரிய மூன்று ஒப்பந்தங்களின் கீழ் வழங்கப்பட்ட அற்பமான, பணவீக்கத்திற்கும் குறைவான உயர்வுகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் ஊதிய உயர்வை மேற்கொண்டது.

நீண்டகாலமாக மிகவும் ஒடுக்கப்பட்ட மற்றும் வறுமைக்குள்ளான ஒரு பகுதியாக இருந்துவரும் அமெரிக்காவின் தெற்கில் தொழிற்சங்கமயமாக்கலுக்கான ஆர்வம், கூட்டு எதிர்ப்பின் தேவை பற்றிய வளர்ந்து வரும் புரிதலை பிரதிபலிக்கிறது. ஆனால், தெற்கில் தொழிற்சங்கமயமாக்கும் UAWன் உந்துதலானது, இந்த போராட்ட உணர்வை பயன்படுத்திக் கொண்டு தொழிலாளர்களுக்கு போர்க்குணமிக்க தலைமையையும் வழிகாட்டுதலையும் வழங்குவதற்கான முயற்சி அல்ல. மாறாக, தொழிற்சங்க-நிர்வாக ஒத்துழைப்பு என்ற பெருநிறுவன வலையில், தொழிலாளர்களை சிக்க வைப்பதன் மூலம், ஒரு உண்மையான போராட்டத்தை தடுப்பதே அதன் நோக்கமாகும்.

AFL-CIO அதிகாரத்துவத்தின் பெருநிறுவன சார்பு கொள்கைகளின் விளைவாக, தெற்கில் மிக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தொழிற்சங்க முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன, இதில் மெர்சிடஸ் பென்ஸ் ஆலையில் இருந்து சில மைல்கள் தொலைவில் அலபாமாவின் பெஸ்ஸெமரில் (Bessemer) உள்ள பிரமாண்டமான அமேசான் விநியோக மையத்தில் இரண்டு தொடர்ச்சியான வாக்குகளும் இதில் அடங்கும்.

வளர்ந்து வரும் எதிர்ப்பு உணர்வு தொழிலாளர் அதிகாரத்துவத்திற்கு எதிரான வெளிப்படையான கிளர்ச்சியை நோக்கிச் செல்கிறது. வளாகத்தில் இனப்படுகொலைக்கு எதிரான போராட்டங்களை பொலிஸ் ஒடுக்குவதை எதிர்த்து கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் 48,000 கல்வித்துறை தொழிலாளர்கள் கடந்த வாரம் நடத்திய வேலைநிறுத்த வாக்களிப்பே இதன் கூர்மையான வெளிப்பாடாகும்.

இந்த வெளிப்படையான அரசியல் வேலைநிறுத்தம், UAW இன் சாமானிய உறுப்பினர்களை, ஜனாதிபதி பைடெனை ஆதரித்துவரும் ஃபைன் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் மற்ற பகுதிகளுடன் நேரடி மோதலில் வைத்துள்ளது. அதே ஜனாதிபதிதான் பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் படுகொலை செய்வதையும், அமெரிக்காவில் மாணவர் போராட்டங்களை வன்முறையாக ஒடுக்குவதையும் மேற்பார்வையிடுகிறார்.

வேலைநிறுத்த வாக்கெடுப்புக்குப் பிறகு உடனடியாக, வெளிநடப்பு என்பது பரந்த மாநிலந் தழுவிய அமைப்புமுறையில் ஒரேயொரு வளாகத்துடன் மட்டுப்படுத்தப்படும் என்று UAW அறிவித்தது. இது சாமானிய தொழிலாளர்கள் தங்கள் சொந்த வேலைநிறுத்த ஆணைகளை செயல்படுத்த வேண்டிய அவசியத்தை எழுப்பி, UAW இன் அனைத்து உறுப்பினர்களிடையேயும் வேலைநிறுத்தத்தை பரப்ப வேண்டியதன் அவசியத்தை எழுப்பியுள்ளது.

UAW ஏதாவதொரு ஆலைக்குள் கொண்டு வரப்பட்டாலும், இல்லாவிட்டாலும், தொழிலாளர்கள் ஒரே அடிப்படைப் பிரச்சினையைத்தான் எதிர்கொள்கின்றனர்: அதாவது, தொழிலாளர்களாலேயே கட்டுப்படுத்தப்படும், பெருநிறுவன எந்திரத்தில் இருந்து சுயாதீனமான சாமானிய தொழிலாளர் அமைப்புகளை உருவாக்குவதற்கான அவசியம் ஆகும்.

மார்ச் 2023 இல், ஃபைனின் வெற்றியில் உச்சக்கட்டத்தை அடைந்த UAW சங்கத் தேர்தல்களின் போது, ​​பைடென் நிர்வாகத்தின் ஆதரவுடன் தொழிற்சங்க எந்திரத்தால் ஒழுங்கமைக்கப்பட்ட வாக்காளர் அடக்குமுறையால் குறிக்கப்பட்ட தேர்தலில், சாமானிய மேக் டிரக்ஸ் தொழிலாளி வில் லெஹ்மன் கிட்டத்தட்ட 5,000ம் வாக்குகளைப் பெற்றார்.

ஒரு சோசலிஸ்டான லெஹ்மன், ஒட்டுமொத்த தொழிற்சங்க எந்திரத்தையும் ஒழித்து, அதிகாரத்தை சாமானிய தொழிலாளர்களின் கைகளுக்கு மாற்றும் ஒரு வேலைத்திட்டத்தின் மீது பிரச்சாரம் செய்தார். அமெரிக்காவிலும் மற்றும் உலகெங்கிலுமான ஏனைய ஆலைகள் மற்றும் ஏனைய தொழில்துறைகளில் உள்ள வாகனத்துறை தொழிலாளர்களை இணைக்க, சர்வதேச தொழிலாளர் குழுக்களின் சாமானிய தொழிலாளர் கூட்டணியின் ஒரு பாகமாக, சாமானிய தொழிலாளர் குழுக்களின் ஒரு வலையமைப்பைக் கட்டியெழுப்புவதற்கு அவர் அழைப்புவிடுத்தார்.

லெஹ்மனுக்கு கிடைத்த வாக்குகள் என்பது, சலுகைகளை நிறுத்தவும், பிற்போக்கு தொழிற்சங்க எந்திரத்தின் சர்வாதிகாரப் பிடியை உடைக்கவும் பாடுபடும் தொழிலாளர்களிடையே ஒரு கிளர்ச்சிக்கான பரந்த ஆதரவைப் பிரதிபலிக்கிறது. தொழிற்சங்கங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்தும் அத்தகைய இயக்கத்தின் மூலம்தான் முதலாளித்துவ சுரண்டலுக்கு எதிரான ஒரு போராட்டத்தை அபிவிருத்தி செய்ய முடியும்.

Loading