உக்ரேன் போரை நேட்டோ தீவிரப்படுத்தியுள்ள நிலையில், ரஷ்யா-சீனா உச்சிமாநாட்டில் ஷியை புட்டின் சந்திக்கிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

மார்ச் மாதம் ரஷ்ய ஜனாதிபதியாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் மே 16-17 தேதிகளில், விளாடிமீர் புட்டின் பெய்ஜிங்கிற்கும், மூலோபாய வடகிழக்கு சீன நகரமான ஹார்பனுக்கும் விஜயம் செய்தார். வாஷிங்டன் மற்றும் ஐரோப்பா மற்றும் பசிபிக்கில் உள்ள அதன் ஏகாதிபத்திய கூட்டாளிகளிடம் இருந்து வரும் அச்சுறுத்தல்கள் எவ்வாறு மாஸ்கோவையும் பெய்ஜிங்கையும் முன்பினும் நெருக்கமான கூட்டணிக்குள் தள்ளி வருகின்றன என்பதை அந்த உச்சிமாநாடு எடுத்துக்காட்டியது.

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், இடது, மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆகியோர் மே 16, 2024 வியாழக்கிழமையன்று, சீனாவின் பெய்ஜிங்கில் நடந்த உத்தியோகபூர்வ வரவேற்பு விழாவின் போது மரியாதை செலுத்தும் படைகளை பார்வையிடுகின்றனர்.  [AP Photo/Sergei Bobylev]

உக்ரேனில் நேட்டோ-ரஷ்யா போருக்கு மத்தியில் ரஷ்யாவுடனான அதன் உறவுகளைத் துண்டிக்க சீனா மீது அமெரிக்க-நேட்டோ அழுத்தத்திற்கு பெய்ஜிங் அளித்த ஒரு தெளிவான கண்டனமாக இது இருந்தது. கடந்த மாதம், வெளியுறவுத்துறை செயலர் அன்டனி பிளிங்கன் தலைமையிலான அமெரிக்க அதிகாரிகள், சாத்தியமான இராணுவ பயன்பாடுகளைக் கொண்ட “இரட்டை பயன்பாட்டு” தயாரிப்புகளின் மூலம் ரஷ்யாவுடனான சீன வர்த்தகத்திற்கு நிதியளிக்கும் எந்தவொரு சீன வங்கிகளுக்கும் அமெரிக்க டாலருக்கான அணுகலை வெட்ட அச்சுறுத்தினர். ஆயினும்கூட, சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் ரஷ்யாவுடன் வர்த்தகம் மற்றும் நல்ல உறவுகளைத் தொடர பெய்ஜிங்கின் விருப்பத்தை வலியுறுத்தினார்.

“ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு நான் செல்லும் முதல் நாடாக சீனாவை தேர்வு செய்ததே நமது நாடுகளுக்கிடையே இருந்த முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்த மூலோபாய கூட்டாண்மை ஆகும்” என்று தெரிவித்த புட்டின், “தொழில்துறை மற்றும் உயர் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அமைதியான அணு எரிசக்தி, செயற்கை நுண்ணறிவு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்கள் மற்றும் பிற புதுமையான துறைகளில் நெருக்கமான ஒத்துழைப்பை ஏற்படுத்த நாங்கள் முயற்சிப்போம்” என்று பெய்ஜிங்கில் கூறினார்.

ஷி, சீனாவையும் ரஷ்யாவையும் “நல்ல அண்டை நாடுகள், நல்ல நண்பர்கள், நல்ல பங்காளிகள்” என்று அழைத்தார், அவரும் புட்டினும் அரசாங்கங்களுக்கு இடையிலான மற்றும் வர்த்தக உறவுகளை அபிவிருத்தி செய்வதற்கான ஒரு உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர். “இன்று சீனா-ரஷ்யா உறவு கடினமாக சம்பாதித்தது, இரு தரப்பினரும் அதை போற்றி வளர்க்க வேண்டும்” என்றும், “சீனா தயாராக உள்ளது ... அந்தந்த நாடுகளின் வளர்ச்சி மற்றும் புத்துணர்ச்சியை கூட்டாக அடைவதோடு, உலகில் நியாயத்தையும் நீதியையும் நிலைநிறுத்த ஒன்றிணைந்து செயல்படுவோம்” என்று ஷி ஜின்பிங் கூறினார்.

புட்டினும் ஷியும் அவர்களின் நட்புறவுகளை வலியுறுத்திய அதேவேளையில், உக்ரேனிய போர் மற்றும் பேரழிவுகரமான இராணுவ விரிவாக்க அபாயத்தில் இருந்து அவர்களால் ஒட்டுமொத்தமாக தப்பிக்க முடியவில்லை. ரஷ்ய துருப்புகள் உக்ரேனிய நகரமான கார்கோவை நோக்கி ஒரு தாக்குதலைத் தொடங்கிய நிலையில், அமெரிக்க, பிரிட்டன் மற்றும் உக்ரேனிய அதிகாரிகள் ரஷ்யாவிற்குள் ஆழமான தாக்குதல்களுக்காக, நேட்டோவால் உக்ரேனுக்கு வழங்கப்பட்ட நீண்ட தூர ஏவுகணைகளைப் பயன்படுத்த அச்சுறுத்திய நிலையில், சீனாவுக்கான புட்டினின் விஜயம் நடந்துள்ளது. எனவே உக்ரேன் போர் தொடர்பாக வெடித்துள்ள சர்வதேச பதட்டங்களை தங்களால் சமாளிக்க முடியும் என்று வலியுறுத்த புட்டினும் ஜின்பிங்கும் சிரமப்பட்டனர்.

“உக்ரேனிய நிலைமை” குறித்து ஷிக்கு விளக்கமளிக்க வாக்குறுதியளித்த புட்டின், “நிலைமையை சீர்படுத்து நமது சீன சகாக்கள் மற்றும் நண்பர்களின் முன்முயற்சிக்கு நன்றி” தெரிவிப்பதாக தெரிவித்தார். அதேவேளையில், “ஐரோப்பா விரைவில் அமைதி மற்றும் ஸ்திரப்பாட்டிற்கு திரும்பும் என்று நம்புகின்ற சீனா, இதை நோக்கி ஒரு ஆக்கபூர்வமான பாத்திரத்தை தொடர்ந்து வகிக்கும்” என்று ஷி கூறினார்.

குறிப்பாக உக்ரேன் போருக்கு அமைதியான முறையில் தீர்வு காண ரஷ்யா விரும்புகிறது என்று புட்டின் வலியுறுத்தினார். “நாங்கள் ஒருபோதும் பேச்சுவார்த்தை நடத்த மறுத்ததில்லை” என்று அவர் சீனாவின் சின்ஹுவா செய்தி நிறுவனத்திடம் கூறினார். “அமைதியான வழிமுறைகள் மூலம் இந்த மோதலுக்கு விரிவான, நிலையான மற்றும் நியாயமான தீர்வை நாங்கள் எதிர்பார்க்கிறோம். உக்ரேன் மீதான ஒரு பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால், அதுபோன்ற பேச்சுவார்த்தைகள் நம்முடையது உட்பட மோதலில் சம்பந்தப்பட்ட அனைத்து நாடுகளின் நலன்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்,” என்று அவர் குறிப்பிட்டார்.

நேட்டோ சக்திகளுடனான மோதலைக் குறைத்துக் காட்டிய புட்டின், “ரஷ்யாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகள் சந்தர்ப்பவாதமானவை அல்ல என்பதும், அவை எவருக்கும் எதிராக செலுத்தப்படவில்லை என்பதும் இன்றியமையாத முக்கியத்துவம் வாய்ந்ததாகும்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

உச்சிமாநாட்டின் ஏற்பாட்டாளர்கள் உண்மையில் ரஷ்ய-சீன, அல்லது, இன்னும் துல்லியமாக, சோவியத்-சீன உறவுகளை முன்னிலைப்படுத்த வேலை செய்தனர். 1949 சீனப் புரட்சியின் போது சீன மக்கள் குடியரசை சோவியத் அங்கீகரித்த 75 வது ஆண்டு நிறைவை அவை குறித்தன. இந்தப் புரட்சியில், லியோன் ட்ரொட்ஸ்கியால் ஸ்தாபிக்கப்பட்ட செம்படை ஒரு முக்கிய பாத்திரம் வகித்தது — 1945 இல் சீனாவில் ஜப்பானிய ஆக்கிரமிப்புப் படைகளை நசுக்கிய பின்னர், சீன தேசியவாத ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சி செய்த சீனத் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளை ஆதரித்தது. புட்டின் விஜயம் செய்த ஹார்பின், செம்படையின் வசம் இருந்த பிராந்தியத்தின் மையத்தில் அமைந்துள்ளது.

ஹார்பனில் புட்டின் செயின்ட் பீட்டர்ஸ்பேர்க் அரச பல்கலைக்கழகத்துடன் கூட்டுத் திட்டங்களை அபிவிருத்தி செய்யும் பொறியியல் பள்ளிக்கு விஜயம் செய்தார். ரஷ்யா-சீன பங்காண்மை, “எவருக்கும் எதிரானதல்ல” என்று புட்டின் மீண்டும் வலியுறுத்தினார். “இது ஒரு விடயத்தை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதாவது, நமது நாடுகளின் அபிவிருத்திக்கு சிறந்த நிலைமைகளை உருவாக்குவது மற்றும் சீன மற்றும் ரஷ்ய கூட்டமைப்பு மக்களின் நல்வாழ்வை மேம்படுத்துவது” என்று குறிப்பிட்ட அவர், இந்த பங்காண்மையுடன், வளர்ந்து வரும் பன்முக உலகம்... இப்போது நம் கண் முன்னே வடிவம் பெற்று வருகிறது” என்று புட்டின் தெரிவித்தார்.

எவ்வாறிருப்பினும், தற்போதைய ரஷ்ய-சீன உறவு யாரையும் இலக்கில் கொண்டதல்ல என்று புட்டின் கூறுவது ஒரு அபத்தமான பொய்யாகும். ரஷ்யாவுடனான போருக்காக நேட்டோ ஏகாதிபத்திய சக்திகள் உக்ரேன் மற்றும் கிழக்கு ஐரோப்பாவை ஆயுதமயப்படுத்துவதற்கும், சீனாவை இலக்கில் வைக்கும் ஆஸ்திரேலியா-பிரிட்டன்-அமெரிக்கா கூட்டணிக்குள் வாஷிங்டன் ஜப்பானை ஒருங்கிணைப்பது போன்ற நகர்வுகளுக்கும் விடையிறுப்பாக மாஸ்கோவும் பெய்ஜிங்கும் நெருக்கமாக நகர்ந்து வருகின்றன. அதாவது, ரஷ்யா மற்றும் சீனாவை அச்சுறுத்துவதற்கும், தாக்குவதற்கும், மற்றும் சாத்தியமான வகையில் துண்டாடுவதற்குமான ஏகாதிபத்தியத்தின் பிரச்சாரத்தை நோக்கமாக கொண்ட ஒரு பெருமளவிலான தற்காப்பு உறவை அவை அபிவிருத்தி செய்து கொண்டிருக்கின்றன.

ஏகாதிபத்திய சக்திகள் உக்ரேன் மூலமாக ரஷ்யா மீது வெளிப்படையாக போர் தொடுத்து வருகின்ற நிலையில், அவை சீனா மீது பொருளாதாரப் போரைத் தொடுத்து வருவதுடன், அதன் மைக்ரோ சிப்புகளின் இறக்குமதிகளைத் தடுத்து வருகின்றன மற்றும் அதன் மின்சார வாகனங்கள் மற்றும் பிற முக்கிய ஏற்றுமதிகள் மீது பாரிய சுங்கவரிகளை விதித்து வருகின்றன. இந்த பொருளாதாரப் போர் இப்போது உக்ரேனில் நேட்டோ போருடன் நேரடியாக பிணைந்துள்ளது.

உக்ரேன் போர் தொடங்கியதில் இருந்து, ரஷ்யா-சீன வர்த்தகம் ஆண்டுக்கு 240 பில்லியன் டாலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது — ரஷ்யா சீனாவிற்கு எரிசக்தி மற்றும் உணவை விநியோகிக்கின்ற நிலையில், ரஷ்யா முன்னர் ஐரோப்பாவில் இருந்து இறக்குமதி செய்த, ஆனால் இப்போது நேட்டோ பொருளாதார தடையாணைகளால் பாதிக்கப்பட்டுள்ள உற்பத்தி பொருட்களை சீனா விநியோகிக்கின்றது. ஆனால், இந்த வணிகம் ஆண்டு தொடக்கத்தில் கிட்டத்தட்ட 10 சதவிகிதம் சரிந்தது. ஏனெனில் அமெரிக்க கருவூலம் அமெரிக்க டாலரைப் பயன்படுத்தி ரஷ்யாவுடனான வணிகத்திற்கு சீன வங்கிகள் நிதியளிக்கும் நிதியை முற்றிலுமாக வெட்டிவிடுவதாக அச்சுறுத்தியுள்ளது.

“சீனாவில் உள்ள பெரிய வங்கிகளின் நிதிய சொத்துக்களை பாதுகாப்பது சீனாவின் முக்கிய நலன் ஆகும்” என்று பெய்ஜிங்கின் ரென்மின் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஷி யின்ஹோங் நியூ யோர்க் டைம்ஸிடம் கூறினார். சீனாவுக்கு ஒரு பிரச்சினை என்னவென்றால், அமெரிக்க டாலரில் இருந்து விலகிச் செல்வதற்கான இடம் “மட்டுப்படுத்தப்பட்டதாக” உள்ளது என்று ஷி மேலும் கூறினார்.

புட்டினும் ஷியும் சீனாவில் சந்தித்துக் கொண்டிருந்த அதேநேரத்தில், அமெரிக்க அதிகாரிகள் ரஷ்யாவுக்கு எதிரான இராணுவ அச்சுறுத்தல்களைத் தீவிரப்படுத்திக் கொண்டிருந்தனர். உக்ரேனிய தலைநகருக்கு விஜயம் செய்த பிளிங்கன், ரஷ்யாவிற்குள் நேரடியாக தாக்குதல்களுக்கு அமெரிக்க ATACMS ஏவுகணைகளைப் பயன்படுத்தக்கூடும் என்று உக்ரேனிய ஆட்சிக்கு சமிக்ஞை செய்தார். “நாங்கள் உக்ரேனுக்கு வெளியே தாக்குதல்களை ஊக்குவிக்கவோ அல்லது செயல்படுத்தவோ இல்லை, ஆனால் இறுதியில் உக்ரேன் இந்த போரை எவ்வாறு நடத்தப் போகிறது என்பது குறித்து தனக்குத்தானே முடிவுகளை எடுக்க வேண்டும்” என்று பிளிங்கன் தெரிவித்தார்.

இதுபோன்ற தாக்குதல்களுக்கு பச்சைக்கொடி காட்டும் ஒரு நேட்டோ நாட்டுக்கு எதிராக மாஸ்கோ இராணுவரீதியில் பதிலடி கொடுக்கும் என்று எச்சரித்ததன் மூலமாக, ரஷ்ய அதிகாரிகள் முன்னதாக ரஷ்யா மீது நீண்டதூர ஏவுகணைத் தாக்குதல்களை ஊக்குவிப்பதில் இருந்து நேட்டோவைத் தடுக்க முயன்றிருந்த நிலையில், இந்த அறிக்கை மலைப்பூட்டும் வகையில் பொறுப்பற்றதாக இருந்தது. இருப்பினும், இது ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே ஒரு நேரடி போர் அபாயம் இருந்தாலும் கூட, பிளிங்கன் முன்னோக்கி சென்றுள்ளார்.

இது, பிப்ரவரி கூட்டு 2022 அறிக்கையில் முன்வைக்கப்பட்ட இந்த தற்போதைய போரில், மாஸ்கோ மற்றும் பெய்ஜிங்கின் கொள்கையின் கீழமைந்துள்ள முன்னோக்கின் இன்றியமையாத திவால்தன்மையை அம்பலப்படுத்துகிறது. “சர்வதேச அளவில் சிறுபான்மையினரை பிரதிநிதித்துவப்படுத்தும் பங்காளர்கள், சர்வதேச பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் பலாத்காரத்தை நாடுவதற்கும் ஒருதலைப்பட்சமான அணுகுமுறைகளை தொடர்ந்து பரிந்துரைக்கின்றனர்” என்று அந்த அறிக்கை எச்சரித்தது.

அது இன்னமும் முதலாளித்துவ தேசிய-அரசு அமைப்புமுறையை அடிப்படையாகக் கொண்ட, ஆனால் “பன்முகத்தன்மை, பொருளாதார பூகோளமயமாக்கல், தகவல் சமூகத்தின் வருகை, கலாச்சார பன்முகத்தன்மை, உலகளாவிய ஆளுகை கட்டமைப்பின் உருமாற்றம் மற்றும் உலக ஒழுங்கு” ஆகியவற்றைக் கொண்ட ஒரு புதிய உலக ஒழுங்கைக் கட்டியெழுப்ப முன்மொழிந்தது.

ஏகாதிபத்தியத்துடன் ஒரு நீடித்த சகவாழ்வை நாடுகின்ற இந்த எதிர்ப்புரட்சிகர, சோசலிச-விரோத முன்னோக்கு, ரஷ்ய மற்றும் சீன முதலாளித்துவ ஆட்சிகள் இரண்டினதும் ஸ்ராலினிச மூலங்களைப் பிரதிபலிக்கிறது. ஸ்ராலின் “தனி ஒரு நாட்டில் சோசலிசம்” என்ற பொய்யான தத்துவத்தையும், சர்வதேச சோசலிசப் புரட்சியின் முன்னோக்கிற்கு எதிராக ஏகாதிபத்திய சக்திகளுடன் “சமாதான சகவாழ்வு” என்ற சோவியத் அதிகாரத்துவத்தின் கருத்தாக்கத்தையும் முன்னெடுத்தார். முதலாளித்துவத்தை மீட்சி செய்து 1989-1991 இல் சோவியத் ஒன்றியத்தைக் கலைத்த பின்னர், மாஸ்கோ மற்றும் பெய்ஜிங்கில் உள்ள ஆட்சிகள் இப்போது வெறுமனே ஏகாதிபத்தியத்தைக் கொண்டு உலகை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மறுவடிவமைப்பு செய்ய முனைகின்றன.

ஆனால் வாஷிங்டன் தலைமையிலான ஏகாதிபத்திய சக்திகள், மாஸ்கோ மற்றும் பெய்ஜிங்கின் நலன்களுக்கு இடமளிக்க உத்தேசிக்காமல், அவைகளை நசுக்கவே உத்தேசித்துள்ளன. அவை இடைவிடாத இராணுவ மற்றும் நிதியியல் விரிவாக்கத்தை பின்தொடர்கின்றன. இதற்கு எதிராக, தொழிலாள வர்க்கத்திற்கு எதையும் வழங்காத ஒரு “பலதுருவ” முதலாளித்துவ உலக ஒழுங்கைக் கட்டியெழுப்பும் முன்னோக்கானது, உலகெங்கிலும் காஸா இனப்படுகொலைக்கு எதிரான பாரிய போராட்டங்களில் வெடித்துள்ள போருக்கு எதிரான பாரிய சர்வதேச எதிர்ப்பை அணித்திரட்டுவதற்கு இலாயக்கற்றதாக இருக்கின்றன. அதற்கு பதிலாக, மாஸ்கோவும் பெய்ஜிங்கும் உலகளாவிய அணு ஆயுத போரைத் தூண்டும் அபாயத்தைக் கொண்ட இராணுவ அச்சுறுத்தல்களை வெறுமனே தீவிரப்படுத்துகின்றன.

உலக முதலாளித்துவத்தின் இந்த நெருக்கடிக்கு ஒரே முற்போக்கான தீர்வு, முதலாளித்துவம் மற்றும் ஸ்ராலினிசம் இரண்டையும் எதிர்க்கும் ஒரு ட்ரொட்ஸ்கிச முன்னோக்கின் அடிப்படையில், தொழிலாள வர்க்கத்தில் ஏகாதிபத்திய போருக்கு எதிரான ஒரு சர்வதேச, சோசலிச இயக்கத்தைக் கட்டியெழுப்புவதாகும்.

Loading