முன்னோக்கு

சர்வதேச குற்றவியல் நீதிமன்ற வழக்கறிஞர் நெதன்யாகு மீது "படுகொலை" மற்றும் பொதுமக்களை "அழித்ததாக" குற்றம் சாட்டியுள்ளார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

திங்களன்று, சர்வதேச குற்றவியல் (ICC) நீதிமன்றத்தின் தலைமை வழக்கறிஞர், இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பாதுகாப்பு மந்திரி யோவ் கேலண்ட் ஆகியோரைக் கைது செய்யும் பிடியாணைகளுக்கு விண்ணப்பித்தார்.

இஸ்ரேலிய தலைவர்கள், பாலஸ்தீனியர்களை “படுகொலை” செய்வதற்கும் “அழித்தொழிப்பதற்கும்” தலைமை தாங்குவதாக குற்றஞ்சாட்டியுள்ள ICC வழக்கறிஞர் கரீம் கான் (Karim Khan), “காஸா பொதுமக்களுக்கு எதிரான போர் மற்றும் பிற வன்முறைச் செயல்களின் ஒரு வழிமுறையாக, பட்டினியைப் பயன்படுத்துவதற்கான பொதுவான திட்டத்தின் ஒரு பகுதியாக, காஸாவின் பொதுமக்களை ஒட்டுமொத்தமாக தண்டிக்கின்றனர்” என்று தெரிவித்தார்.

காஸாவில் இடிபாடுகளின் காட்சி, டிசம்பர் 2023. [Photo by Tasnim News Agency / CC BY-SA 4.0]

ICC வழக்கறிஞர், நெதன்யாகு மற்றும் கேலண்ட் மீது குற்றஞ்சாட்டியதுடன், “பின்வரும் போர்க்குற்றங்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள்” என்று குற்றச்சாட்டுக்களை அறிவித்துள்ளார்: அதாவது, “ஒரு போர் வழிமுறையாக பொதுமக்களை பட்டினி போடுவது ஒரு போர்க்குற்றமாகும்”; “வேண்டுமென்றே பெரும் துன்பத்தை அல்லது உடலுக்கோ ஆரோக்கியத்திற்கோ கடுமையான காயத்தையோ பாதிப்பையோ ஏற்படுத்துவது ... அல்லது கொடூரமாக நடத்துதல் ஒரு போர்க்குற்றமாகும்”; “வேண்டுமென்றே கொலை... அல்லது படுகொலை ஒரு போர்க்குற்றமாகும்”; பட்டினியால் ஏற்படும் மரணங்கள் உட்பட “அழித்தொழிப்பு மற்றும் / அல்லது சட்டவிரோதக் கொலை...,.” போர்க்குற்றமாகும் என்று வழக்கறிஞர் குற்றம் சுமத்தியுள்ளார்.

“மனிதகுலத்திற்கு எதிரான குற்றம் சாட்டப்பட்ட குற்றங்களானது, அரசு கொள்கையைப் பின்பற்றி பாலஸ்தீனிய குடிமக்களுக்கு எதிரான ஒரு பரவலான மற்றும் திட்டமிட்ட தாக்குதலின் பாகமாக நடத்தப்பட்டவை என்பதை நாங்கள் சமர்ப்பிக்கிறோம். இந்தக் குற்றங்கள், எங்கள் மதிப்பீட்டின்படி, இன்றுவரை தொடர்கின்றன” என்று ICC வழக்கறிஞர் அறிவித்தார்.

நெதன்யாகு மற்றும் கேலண்ட் ஆகியோருடன் சேர்த்து, ஹமாஸ் தலைவர்களுக்கு எதிராகவும் வழக்கறிஞர் கான் கைது செய்யும் பிடியாணைகளுக்கு விண்ணப்பித்தார்; இது முதலாளித்துவ அரசாங்கங்கள் மற்றும் இஸ்ரேலின் ஆதரவாளர்களிடம் இருந்து வரும் அழுத்தத்தை பிரதிபலிக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எவ்வாறிருப்பினும், கைது செய்யும் பிடியாணைகளுக்கான கோரிக்கையின் பிரதான அரசியல் முக்கியத்துவம் தெளிவாக உள்ளது: அதாவது இஸ்ரேல் அரசு ஒரு குற்றவியல் ஆட்சியாகும்.

ஆளும் வர்க்கம் மற்றும் ஊடகங்களிடம் இருந்து விஷமத்தனமான அவதூறுகளுக்கு உள்ளாகி வருகின்ற, கடந்த ஏழு மாதங்களாக வெடித்துள்ள உலகளாவிய பாரிய போராட்டங்களை இந்த குற்றச்சாட்டுக்கள் முழுமையாக ஊர்ஜிதப்படுத்துகின்றன. நவீன காலத்தின் மாபெரும் போர்க் குற்றங்களில் ஒன்றைக் கண்டனம் செய்ததற்காகவும் மற்றும் அதைத் தடுத்து நிறுத்த முனைந்ததற்காகவும் போராட்டக்காரர்கள் தாக்கப்பட்டுள்ளனர், கைது செய்யப்பட்டுள்ளனர் மற்றும் “யூத-எதிர்ப்பாளர்கள்” என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.

இந்த குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கையில், இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு, “ஹமாஸின் அரக்கர்களை உலகின் மிகவும் தார்மீக இராணுவமான இஸ்ரேலியப் பாதுகாப்புப் படை (IDF) இன் சிப்பாய்களுடன் ஒப்பிட உங்களுக்கு என்ன துணிச்சல் உள்ளது?” என்று அறிவித்தார்.

இந்த “உலகின் மிகவும் தார்மீக இராணுவம்” காஸாவில் உள்ள பெரும்பான்மையான வீடுகள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளையும், ஒவ்வொரு பல்கலைக்கழகத்தையும் அழித்துள்ளது. அதன் தலைவர்கள், “மின்சாரம், உணவு, எரிபொருள் எதுவும் கொடுக்கக் கூடாது” என்று அறிவித்ததுடன், காஸாவின் அப்பாவி மக்களை “விலங்குகள்” என்று குறிப்பிட்டு, ஒரு “ஒட்டுமொத்த தேசத்திற்கு” எதிராக கூட்டுத் தண்டனையை நிறைவேற்றுவதற்கான அவர்களின் நோக்கத்தை வலியுறுத்தினர்.

உண்மையில், ஹிட்லரின் இராணுவத்திற்குப் (Wehrmacht) பின்னர் “மிகவும் தார்மீக இராணுவம்”, இஸ்ரேலிய இராணுவமாகும்.

பைடென் நிர்வாகம் ICC வழக்கறிஞரின் குற்றச்சாட்டுக்களுக்கு அதன் சொந்த ஆவேசமான கண்டனங்களுடன் பதிலளித்தது. ஒரு அறிக்கையில், பைடென் பின்வருமாறு அறிவித்தார், “இஸ்ரேலிய தலைவர்களுக்கு எதிராக கைது செய்யும் பிடியாணைகளுக்கான ICC வழக்கறிஞரின் விண்ணப்பம் மூர்க்கத்தனமானது. நான் தெளிவாகச் சொல்கிறேன்: இந்த வழக்குரைஞர் என்ன அர்த்தப்படுத்தினாலும், இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் எந்த சமநிலைத் தன்மையும் இல்லை - எதுவுமில்லை. இஸ்ரேலின் பாதுகாப்புக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களுக்கு எதிராக நாங்கள் எப்போதும் துணை நிற்போம்” என்றார்.

உண்மையில், சமநிலைத் தன்மை இல்லை. பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலின் ஒடுக்குமுறை மற்றும் சட்டவிரோத ஆக்கிரமிப்பின் கொடூரமான நிலைமைகளின் கீழ் வாழ்ந்து வருகின்றனர். ஒடுக்குமுறையாளரான இஸ்ரேலுக்கும் ஒடுக்கப்பட்ட பாலஸ்தீனியர்களுக்கும் இடையில் ஒருவர் சமமான அடையாளத்தை வரைந்தாலும் கூட, அக்டோபர் 7 தாக்குதல்களில் கொல்லப்பட்ட ஒவ்வொரு இஸ்ரேலியருக்கும் பதிலாக 40 காஸா மக்களை இஸ்ரேல் கொன்றுள்ளது.

“நான் ... சண்டையை நிறுத்துவதற்கு, உடனடியாக போர் நிறுத்தம் செய்ய கோரியிருந்தேன்” என்று பைடென் ஜோர்ஜியாவில் உள்ள மோர்ஹவுஸ் கல்லூரியில் உரையாற்றி 24 மணி நேரத்திற்கும் குறைவான நேரத்திற்குப் பின்னர், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் மீதான அவரது கண்டனம் வந்தது. ஆனால், நெதன்யாகு அரசாங்கத்தின் மீதான பைடெனின் விமர்சனங்கள், காஸா இனப்படுகொலையை எளிதாக்குவதையும், செயல்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட, சேதத்தைக் கட்டுப்படுத்தும் சிடுமூஞ்சித்தனமான நடைமுறைகள் என்பதை ICC வழக்கறிஞரின் குற்றச்சாட்டுக்கு பைடெனின் பதில் தெளிவுபடுத்துகிறது.

ICC வழக்கறிஞரின் குற்றப்பத்திரிகையை மறுப்பதற்கான பைடென் நிர்வாகத்தின் முயற்சிகள் ஒன்றன் பின் ஒன்றாக அபத்தங்களைக் கொண்டுள்ளன.

“இந்த விடயத்தில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ICC) எந்தச் சட்ட அதிகார வரம்பும் கிடையாது என்பதில் தற்போதைய மோதலுக்கு முன்பிருந்தே அமெரிக்கா தெளிவாக அறிந்து வந்துள்ளது,” என்று வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மத்தேயு மில்லர் அறிவித்தார். இது உண்மையல்ல. 2021 ஆம் ஆண்டில், சர்வதேச குற்றவியல் நீதிமன்றமானது (ICC) 2015 ஆம் ஆண்டில் பாலஸ்தீனத்தால் ரோம் சாசனம் (Rome Statute) ஏற்றுக்கொள்ளப்பட்டதை தொடர்ந்து, காஸா மற்றும் மேற்குக் கரை உட்பட “பாலஸ்தீன அரசின் நிலைமையில் நீதிமன்றம் தனது குற்றவியல் அதிகார சட்ட வரம்பைப் பயன்படுத்தலாம்” என்று தீர்ப்பளித்தது.

உக்ரேன் அல்லது ரஷ்யா ரோம் சாசனத்தில் (Rome Statute) கையெழுத்திடவில்லை என்ற உண்மை இருந்தபோதிலும், உக்ரேன் போர் தொடர்பாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு எதிரான ICCயின் நடவடிக்கைகளை வெள்ளை மாளிகை ஆதரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் போர்க்குற்றங்களை இழைக்கிறதா என்று கூறுவதற்கு யாருக்கு சட்ட அதிகாரம் உள்ளது என்பதற்குப் பதிலளிக்குமாறு அழுத்தம் கொடுக்கப்பட்டபோது, மில்லர் அபத்தமாக “இஸ்ரேல்” என்று பதிலளித்தார். அதாவது, குற்றவாளிகள் தாங்கள் செய்த குற்றங்களுக்கு, தாம் குற்றவாளிகளா இல்லையா என்பதை தீர்ப்பளிக்க வேண்டும்.

இந்தக் குற்றச்சாட்டானது “காஸாவில் இருந்து பணயக்கைதிகளை வெளியேற்றும் மற்றும் மனிதாபிமான உதவிகளை அதிகரிக்கும் ஒரு போர்நிறுத்த உடன்படிக்கையை எட்டுவதற்கான தற்போதைய முயற்சிகளை சீர்குலைக்கக்கூடும்” என்று மில்லர் அறிவித்தார். ஆனால் போர் நிறுத்தத்திற்கு ஈடாக பணயக்கைதிகளை விடுவிக்க அமெரிக்கா முன்வைத்த நிபந்தனைகளை ஹமாஸ் ஏற்கனவே ஏற்றுக்கொண்டுள்ளது. ஆனால், இந்த நிபந்தனைகள் இஸ்ரேலால் நிராகரிக்கப்பட்டன.

ICC வழக்கறிஞரின் நடவடிக்கைகளை கண்டிப்பதில் ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சிகளின் முன்னணி அதிகாரிகளுடன் பைடெனும் இணைந்திருந்தார். பிரதிநிதிகள் சபையின் குடியரசுக் கட்சியின் சபாநாயகர் மைக் ஜோன்சன் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு தண்டனை அளிக்க அச்சுறுத்தினார். இது சர்வதேச சட்டத்தை மீறும் செயலாகும்.

இஸ்ரேலுக்கு ஆதரவு கொடுப்பது ஒருபுறம் இருக்க, அமெரிக்க அதிகாரிகளின் பதிலளிப்பானது ICC வழக்கறிஞர் விவரித்த அனைத்துக் குற்றங்களுக்கும் தாங்கள் உதவி மற்றும் ஆதரவு கொடுத்த குற்றங்களை செய்த குற்றவாளிகள் என்பதை ஒப்புக் கொண்டுள்ளது. ஜோன்சன் இந்த இடர்பாட்டை வெளிப்படையாக அறிவித்து, “இஸ்ரேலிய தலைவர்களை அச்சுறுத்த ICC அனுமதிக்கப்பட்டால், அடுத்தது நம்முடையதாக இருக்கலாம்,” என்று எச்சரித்தார்.

ஜோன்சன் மற்றும் பைடென் உட்பட, உண்மையில். அமெரிக்காவின் ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகமும், ஒரு இனப்படுகொலைக்கு நிதியளித்தல், ஆயுதமளித்தல் மற்றும் அரசியல்ரீதியாக நியாயப்படுத்துகின்ற குற்றவாளிகளாக உள்ளனர்.

இந்த குற்றப்பத்திரிகையை நிறைவு செய்கையில், ICC வழக்கறிஞர் இவ்வாறு அறிவித்தார், “சட்டத்தை சமமாக செயல்படுத்துவதற்கான நமது விருப்பத்தை நாம் எடுத்துக்காட்டவில்லை என்றால், அது தேர்ந்தெடுக்கப்பட்ட முறையில் செயல்படுத்தப்படுவதாக காணப்பட்டால், அது உருக்குலைவதற்கான நிலைமைகளை நாம் உருவாக்கி விடுவோம்...”

இந்தச் சூழ்நிலையானது ஒரு தொலைதூர அனுமானம் அல்ல. ஆனால் ஒரு யதார்த்தமாகின்றன. ஒவ்வொரு கட்டத்திலும் சர்வதேசச் சட்டத்தை மீறி அவர்கள் தமக்கென ஒரு சட்டமாக செயல்படுகின்றன.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றமானது (ICC) நிச்சயமாக தார்மீக எடையைக் கொண்டிருந்தாலும், ஏகாதிபத்திய அரசாங்கங்களின் கொள்கைகள் மீது அது எந்த விளைவையும் ஏற்படுத்தாது. பாலஸ்தீன பொதுமக்களை கொல்வதையும் பட்டினி போடுவதையும் நிறுத்துமாறு இஸ்ரேலுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டு கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் ஆகிவிட்டன. அப்பொழுதில் இருந்து, பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர், முழு மக்களுக்கும் உணவு, தண்ணீர் மற்றும் மருத்துவ பராமரிப்பு மறுக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர்களும் இளைஞர்களும் காஸா இனப்படுகொலையை நிறுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபையிலோ (ஐ.நா) அல்லது சர்வதேச சட்டத்தின் வேறு எந்த முதலாளித்துவ அமைப்புகளிலோ எந்தப் பிரமைகளையும் கொண்டிருக்கக் கூடாது.

சியோனிசம், ஏகாதிபத்தியம் மற்றும் முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான போராட்டத்திற்கு தலைமை தாங்குவதற்கு, உலகெங்கிலுமான இளைஞர்களுடன் சேர்ந்து, தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதன் மூலமாக மட்டுமே அதை நடைமுறைப்படுத்த முடியும்.

Loading