முன்னோக்கு

ஏகாதிபத்திய குற்றவாளிகளின் கூட்டணி சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை கண்டிக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

செவ்வாயன்று செனட் நிதி ஒதுக்கீட்டுக் குழுவிற்கு அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் சாட்சியமளித்த போது, காஸா இனப்படுகொலைக்கு அமெரிக்கா ஆதரவளித்ததை எதிர்த்து ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கள் சிவப்பு வண்ணம் பூசப்பட்ட கைகளை உயர்த்துகின்றனர். [Photo: C-Span]

இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பாதுகாப்புச் செயலர் யோவ் கேலண்ட் மீது போர் குற்றங்களுக்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன்னணி வழக்கறிஞர் குற்றஞ்சாட்டியமையானது, உலகின் முன்னணி ஏகாதிபத்திய போர் குற்றவாளிகளிடம் இருந்து கோபக் கூச்சல்களைப் பெற்றுள்ளது.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை (ICC) கண்டனம் செய்யவும், தண்டனையிலிருந்து விலக்கீட்டுரிமையுடன் போர் குற்றங்களை செய்வதற்கு இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் உரிமையை வலியுறுத்தவும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் மற்றும் வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் ஆகியோர் பாசிசவாத கிறிஸ்தவ அடிப்படைவாத குடியரசுக் கட்சியினரான மைக் ஜோன்சன் மற்றும் லிண்ட்சே கிரஹாம் ஆகியோருடன் கைகோர்த்துள்ளனர்.

திங்கட்கிழமை கருத்து தெரிவிக்கையில், பைடென் ICC யை கண்டித்தார், அதாவது “இஸ்ரேலிய தலைவர்களுக்கு எதிராக ICC இன் கைது பிடியாணைகளுக்கான விண்ணப்பத்தை நாங்கள் நிராகரிக்கிறோம்,” என்று அறிவித்தார்.

பைடென் அபத்தமாக பின்வருமாறு அறிவித்தார், “இஸ்ரேல் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த அதனால் முடிந்த அனைத்தையும் செய்ய விரும்புகிறது என்பது தெளிவாக உள்ளது. சர்வதேச நீதிமன்றத்தால் இஸ்ரேலுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு மாறாக, நடப்பது இனப்படுகொலை அல்ல. அதை நாங்கள் நிராகரிக்கிறோம்” என்றார்.

பைடென் எந்த உலகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்? சர்வதேச குற்றவியல் நீதிமன்ற வழக்குத்தொடுனர்களால் குற்றஞ்சாட்டப்பட்ட இருவரும், பத்தாயிரக் கணக்கான அப்பாவி மக்களைக் கொன்றது மட்டுமல்ல, இந்தப் படுகொலையானது இனப்படுகொலை நோக்கத்தால் உந்துதல் பெற்றது என்பதையும் அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். நெதன்யாகு பாலஸ்தீனர்களை “அரக்கர்கள்” மற்றும் “அமலேக்கர்கள்” என்று குறிப்பிட்டார், அதேவேளையில் கேலண்ட் பாலஸ்தீனர்களை “மனித விலங்குகள்” என்று குறிப்பிட்டார்.

இது ஒரு இனப்படுகொலை இல்லையென்றால் வேறு என்ன?

உண்மையில், ICC குற்றச்சாட்டுக்களுக்கு பைடெனின் பதில், இஸ்ரேலால் பாலஸ்தீன மக்களை சரீரரீதியில் அழித்தொழிப்பதற்கு அவரது அரசாங்கத்தின் வெளிப்படையான மற்றும் வெட்கமற்ற ஆதரவை அம்பலப்படுத்தியுள்ளது. 

செவ்வாயன்று செனட் நிதி ஒதுக்கீட்டுக் குழுவின் முன் சாட்சியமளித்த பிளிங்கன், ICC க்கு தண்டனை அளிக்க அமெரிக்க பாராளுமன்றத்தில் குடியரசுக் கட்சியினருடன் “வேலை செய்வதாக” உறுதியளித்தார்.

குடியரசுக் கட்சி செனட்டர் கிரஹாம், இந்த மாதத் தொடக்கத்தில் “ஹிரோஷிமா மற்றும் நாகசாகி” முன்னுதாரணத்தைப் பயன்படுத்தி காஸாவுக்கு எதிராக இஸ்ரேல் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று மறைமுகமாக குறிப்பிட்டதற்கு விடையிறுப்பாக பிளிங்கன் இந்த அறிக்கையை வெளியிட்டார்.

செவ்வாயன்று ஒரு காங்கிரஸ் விசாரணையில் தன்னுடைய கருத்துக்களில், இஸ்ரேல் மீதான குற்ற விசாரணையானது போர்க்குற்றங்களுக்காக அமெரிக்காவை குற்ற விசாரணைக்கு உட்படுத்துவதற்கு ஒரு முன்னோடியை அமைக்கிறது என்று கிரஹாம் கூறினார். “அவர்கள் இஸ்ரேலுக்கு இதைச் செய்தால், நாங்கள் அடுத்ததாக இருப்போம்” என்று கிரஹாம் கூறினார்.

கிரஹாம், பிளிங்கனை இவ்வாறு வற்புறுத்தினார், “எனவே நான் நடவடிக்கை எடுக்க விரும்புகிறேன், வெறும் வார்த்தைகளில் அல்ல. இஸ்ரேலுக்கு எதிரான சீற்றத்திற்காக மட்டுமல்ல, மாறாக எதிர்காலத்தில் நமது சொந்த நலன்களைப் பாதுகாப்பதற்காகவும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் மீது தண்டனை விதிக்கும் ஒரு இருகட்சி முயற்சியை நீங்கள் ஆதரிப்பீர்களா?”

இதற்கு, பிளிங்கன், “உங்களுடன் இணைந்து பணியாற்றுவதை நான் வரவேற்கிறேன்” என்று பதிலளித்தார்.

இஸ்ரேல் நடத்த அனுமதிக்கப்பட வேண்டிய அப்பாவி மக்களின் உயிரிழப்புகளின் எண்ணிக்கையில் “வரம்புகள் ஏதும் இல்லை” என்று முன்னர் கூறிய கிரஹாம், காஸா மக்கள் “தீவிரமயப்பட்ட மக்கள்” என்பதால் அவர்களுக்கு எதிரான கூட்டு தண்டனையை பாதுகாத்தார். நெதன்யாகு மற்றும் கேலண்ட்டுக்கு எதிரான போர் குற்ற குற்றச்சாட்டுக்களுக்கு பிளிங்கன் மற்றும் பைடென் அளித்த பதிலளிப்புக்காக அவர்களைப் பாராட்டினார்.

“நான் உங்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்,” என்று கிரஹாம் கூறினார். “ஒரு வலுவான அறிக்கையை வெளியிட்டதற்காக ஜனாதிபதி பைடெனுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். உங்கள் அறிக்கை அருமையாக இருந்தது மிஸ்டர் செக்ரட்டரி” என்று கிரஹாம் கூறினார்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை (ICC) பைடென் பகிரங்கமாக கண்டித்துக் கொண்டிருக்கையில், அவரது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் இஸ்ரேலில் யோவ் கேலண்டுடன் கைகுலுக்கிக் கொண்டே புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தார். இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் ரஃபா மீதான தாக்குதலை விரிவுபடுத்துவதற்கான தனது நோக்கத்தை வலியுறுத்தினார். “ரஃபாவில் தரை நடவடிக்கையை விரிவுபடுத்த நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்” என்று கேலண்ட் சல்லிவனிடம் கூறினார்.

இஸ்ரேலின் இனப்படுகொலை தாக்குதலானது ஏழரை மாதங்களாக தடையின்றி நடந்து வருகிறது. இது உத்தியோகபூர்வமாக 35,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களின் உயிர்களை பறித்துள்ளது, அவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர். உத்தியோகபூர்வமற்ற முறையில், 45,000க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கான சடலங்கள் இடிபாடுகளுக்கு இடையே கண்டுபிடிக்கப்படாமல் உள்ளன. 75,000 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர், மேலும் அந்த பகுதியின் 70 சதவீதத்திற்கும் அதிகமான வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் காஸாவின் மக்கள்தொகையில் 5 சதவீதத்தினரை கொன்றுள்ளன அல்லது ஊனமாக்கியுள்ளன.

ஏகாதிபத்திய சக்திகளின் ஆதரவு இல்லாமல், இந்தக் குற்றங்கள் எதுவுமே கற்பனை செய்யக் கூடியதாக இருந்திருக்காது. அமெரிக்க மற்றும் ஜேர்மன் ஏகாதிபத்தியங்கள் அதிவலது சியோனிச ஆட்சிக்கு உயர் சக்திவாய்ந்த ஆயுதங்கள் மற்றும் இராணுவ தளவாடங்களை விநியோகிப்பதில் முன்னிலை வகித்து வருகின்றன.

உள்நாட்டில், வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகள் இனப்படுகொலையின் அனைத்து எதிர்ப்பாளர்களையும் “யூத-எதிர்ப்பாளர்கள்” என்று வேட்டையாடி, போராட்டங்களைத் தடை செய்துள்ளன. அத்துடன் இனப்படுகொலை எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் எதிர்ப்பு முகாம்களில் கலகம் ஒடுக்கும் பொலிஸை கட்டவிழ்த்து விட்டுள்ளன.

காஸாவில் நடந்த வருகின்ற காட்டுமிராண்டித்தனமான இனப்படுகொலையில் ஏகாதிபத்திய சக்திகள் உடந்தையாக இருந்தமையானது, “ஜனநாயகம்” மற்றும் “மனித உரிமைகளின்” பாதுகாவலர்களாக அவற்றின் சிடுமூஞ்சித்தனமான தோரணையை தகர்க்கிறது. ஸ்ராலினிசத்தால் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதற்குப் பின்னர் இருந்து ஒவ்வொரு ஆக்கிரமிப்பு போர்களிலும் அவற்றை விற்பதற்கு, அவைகளைப் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.

முதலாவது வளைகுடாப் போரில் தொடங்கி, அமெரிக்க ஏகாதிபத்தியம் மூன்று தசாப்தங்களுக்கும் அதிகமான இடைவிடாத இராணுவ மோதலாக மாறியுள்ள ஒன்றன்பின் ஒன்றாக போர்களைக் கட்டவிழ்த்து விட்டு வருகிறது. அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் ஐரோப்பிய கூட்டாளிகளும் “மனித உரிமைகளின்” மிகவும் சளைக்காத ஆதரவாளர்களாக இருந்தனர் என்ற வலியுறுத்தல், இந்த போர்களை நியாயப்படுத்துவதற்காக அவர்களின் அரசியல் மற்றும் ஊடக பிரச்சாரகர்களுக்கு சேவையாற்றியது.

முதலாவது வளைகுடாப் போர், குவைத்தில் இன்குபேட்டர்களில் குழந்தைகளைக் கொன்று குர்திஷ்களை ஒடுக்கி வந்த காட்டுமிராண்டித்தனமான ஹுசைன் ஆட்சியிடமிருந்து ஈராக்கை விடுவிப்பதற்கான ஒரு சிலுவைப் போர் என்று அனைவருக்கும் கூறப்பட்டது. 1999 இல் நேட்டோ போர் விமானங்களால் பிரதான ஐரோப்பிய நகரமான பெல்கிரேட் அழிக்கப்பட்டதை நியாயப்படுத்துவதற்காக, சேர்பிய ஜனாதிபதி ஸ்லோபோடன் மிலோசெவிக் பொஸ்னியர்கள் மற்றும் கொசோவோ அல்பேனியர்களுக்கு எதிராக ஒரு “இனப்படுகொலை” செய்த குற்றவாளியாகவும், ஹிட்லரின் மறுபிறவியாகவும் சித்தரிக்கப்பட்டார்.

அல்-கெய்டாவின் 9/11 பயங்கரவாத தாக்குதலைப் பற்றிக்கொண்டு, ஆப்கானிஸ்தான் மீதான இரண்டு தசாப்த கால நவகாலனித்துவ ஆக்கிரமிப்பிற்கு வாஷிங்டன் தலைமை கொடுத்தமையானது, “பெண்களின் உரிமைகளை” பாதுகாப்பதற்கும் நீண்டகாலமாக பாதிக்கப்பட்டுள்ள மத்திய ஆசிய நாட்டிற்கு “ஜனநாயகத்தை” கொண்டு வருவதற்குமான ஒரு பணியாக சித்தரிக்கப்பட்டது. 2003 சட்டவிரோத படையெடுப்பைத் தொடர்ந்து ஈராக்கிய சமூகத்தை அழித்த அமெரிக்க தலைமையிலான “விருப்பத்தின் கூட்டணி” ஆனது, அப்பாவி மக்களைப் படுகொலை செய்தும் மற்றும் உட்பூசல்களின் மூலம் இன மற்றும் மத மோதல்களுக்கு எரியூட்டிய நிலையில், தன்னை ஒரு “விடுதலைப்” படையாக சித்தரித்துக் கொண்டது.

லிபியா மீதான நேட்டோவின் 2011 விமானப் போரானது பத்தாயிரக் கணக்கானவர்களின் உயிர்களைப் பறித்தது. இந்தப்போர், மௌம்மர் கடாபியின் கொடூரமான படுகொலைக்கு இட்டுச் சென்றதுடன், அக்கண்டத்தின் மிக முன்னேறிய சமூகங்களில் ஒன்றை இன்றுவரை தொடர்கின்ற ஒரு சகோதரத்துவ உள்நாட்டுப் போருக்குள் மூழ்கடித்தது. அதற்காக வக்காலத்துவாங்கியவர்கள், கனேடிய அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்ட ஒரு திட்டத்தில் தயாரிக்கப்பட்ட ஒரு பாசாங்குத்தனமான போர்-ஆதரவு கல்வித்துறை தத்துவத்தைச் சார்ந்து, கடாபியின் வரவிருக்கும் படுகொலையில் இருந்து அப்பாவி மக்களைப் பாதுகாப்பதற்கான ஏகாதிபத்தியத்தின் “பொறுப்பால்” போர் நியாயப்படுத்தப்பட்டதாக வலியுறுத்தினர். சிரியாவில் அசாத் ஆட்சிக்கு எதிரான உள்நாட்டு போர் தூண்டுதலை நியாயப்படுத்தவும் இதேபோன்ற பொய்கள் பயன்படுத்தப்பட்டன, இது டமாஸ்கஸில் “ஆட்சி மாற்றத்தை” உருவாக்கும் என்று ஏகாதிபத்தியவாதிகள் நம்பினர்.

இந்தக் குற்றங்களானது இப்போது காட்டுமிராண்டித்தனத்தின் ஒரு புதிய மட்டத்தை எட்டியுள்ளன. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இடைவிடாத தொடர்ச்சியான போர்களானது சந்தைகள், மூலப் பொருட்கள் மற்றும் புவிசார் மூலோபாய செல்வாக்கிற்கான ஒரு உலகளாவிய போராட்டத்தில் அனைத்து பிரதான சக்திகளும் சம்பந்தப்பட்ட ஒரு துரிதமாக தீவிரமடைந்து வரும் மூன்றாம் உலக போராக உருமாற்றம் அடைந்துள்ளது. பாலஸ்தீனிய பிரச்சினைக்கான இஸ்ரேலின் “இறுதி தீர்வை” வாஷிங்டன் ஆதரிப்பது, மத்திய கிழக்கில் அமெரிக்க மேலாதிக்கத்தை வலுப்படுத்தும் நோக்கில், ஈரானுக்கு எதிரான பிராந்திய அளவிலான போருக்கான அதன் தயாரிப்புக்களுடன் பின்னிப்பிணைந்துள்ளது.

இந்தப் போரில் மற்ற இரண்டு பிரதான போர்முனைகள் உக்ரேனில் உள்ளன, அங்கு “மனித உரிமைகளுக்கான” சிலுவைப்போர் வீரர்கள் உண்மையான யூத-எதிர்ப்பாளர்களுடனும் மற்றும் ரஷ்யாவுக்கு எதிரான அவர்களின் போரில் நாஜி ஒத்துழைப்பாளர்களின் அரசியல் வாரிசுகளுடனும், சீனாவுக்கு எதிரான ஆசிய-பசிபிக்கிலும் கூட்டணி வைத்துள்ளனர்.

அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் ஐரோப்பிய கூட்டாளிகளும் இந்த இரண்டு நாடுகளையும் (ரஷ்யா மற்றும் சீனா) அரை-காலனித்துவ அந்தஸ்துக்கு அடிபணிய வைக்க முனைகின்றன. இதன் மூலமாக அவைகள் இயற்கை வளங்களைக் கைப்பற்ற முடியும், அத்துடன் சீனாவை, ஒரு பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் “சக போட்டியாளராக” மேலெழுவதை அதனால் தடுக்க முடியும். இதற்காக, அவர்கள் இனப்படுகொலை உட்பட எந்தவொரு குற்றத்தையும் இழைக்கவும், மற்றும் ஒரு அணு ஆயுத மோதல் மூலமாக மனித உயிர்களை அழிக்கும் அபாயத்தையும் எடுக்கவும் தயாராக உள்ளனர்.

இத்தகைய சூறையாடும் இலக்குகளைப் பின்தொடர்வதற்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் மிகப் பிற்போக்குத்தன அரசியல் சக்திகள் அணிதிரட்டப்பட வேண்டும். செப்டம்பர் 2023 இல் நாஜி போர் குற்றவாளியான யாரோஸ்லாவ் ஹுன்காவுக்கு கனேடிய நாடாளுமன்றம் எழுந்து நின்று கரவொலி எழுப்பி மரியாதை வழங்கியது. ஒவ்வொரு ஜி-7 அங்கத்துவ நாடுகளின் இராஜதந்திர பிரதிநிதிகளும் இணைந்து, உலகளாவிய ஏகாதிபத்திய போர், பாசிசம் மற்றும் சர்வாதிகாரத்தை புனருவாக்கம் செய்வதுடன் கைகோர்த்து செல்ல வேண்டும் என்பதை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இனப்படுகொலை எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய அரசாங்கங்களால் நடத்தப்பட்டுவரும் கொடூரமான ஒடுக்குமுறை தொழிலாளர்களின் ஜனநாயக உரிமைகளை பறிப்பதன் பாகமாக இருக்கின்றன.

உலக சோசலிச வலைத் தளமானது அதன் 2024 புத்தாண்டு அறிக்கையில் எழுதியதைப் போல, “நாகரிகத்தை காட்டுமிராண்டித்தனத்தில் இருந்து வேறுபடுத்திக் காட்டும் அனைத்து ‘சிவப்புக் கோடுகளும்’ அழிக்கப்பட்டு வருகின்றன. முதலாளித்துவ அரசாங்கங்களின் குறிக்கோள்: ‘குற்றவியல் எதுவும் நமக்கு அந்நியமானதல்ல’ என்பதாகும்.

உலகெங்கிலுமான மில்லியன் கணக்கான தொழிலாளர்களும் இளைஞர்களும் ஏகாதிபத்திய சக்திகளின் பாசாங்குத்தனத்தையும் அராஜகத்தையும் உணர்ந்துள்ளனர். இனப்படுகொலை எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது மிருகத்தனமான பொலிஸ் ஒடுக்குமுறையை எதிர்த்து அமெரிக்க கல்வித்துறை தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் நடத்தியது உட்பட, காஸா இனப்படுகொலைக்கு எதிரான வெகுஜன இயக்கத்தால் இது சாட்சியமளிக்கப்படுகிறது. ஆனால் இந்த உண்மைகளிலிருந்து அரசியல் முடிவுகளை எடுப்பதே இப்போது முன்வைக்கப்படும் சவாலாக இருக்கின்றது.

அபிசீனியாவைச் சூறையாடியும் மற்றும் ஒன்றன்பின் ஒன்றாக ஐரோப்பிய தலைநகரங்களுக்குள் அணிவகுத்துச் சென்றதுடன், சர்வதேச சங்கத்தின் (League of Nations) கூட்டணியை இகழ்ச்சியுடன் ஒதுக்கித் தள்ளிய, முசோலினி மற்றும் ஹிட்லரைப் போலவே, 21 ஆம் நூற்றாண்டின் முன்னணி ஏகாதிபத்திய காட்டுமிராண்டிகளான பைடென், ஷொல்ஸ், சுனக் மற்றும் மக்ரோன் ஆகியோரும் ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா) அல்லது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) ஆகியவை அவர்களைக் கட்டுப்படுத்த அனுமதிக்க மாட்டார்கள். நெதன்யாகு அல்லது பைடென் போன்ற போர்க் குற்றவாளிகளை பொறுப்புக்கூற வைக்க இந்த அமைப்புகளுக்கு முறையீடுகள் செய்வது தோல்வியைத்தான் ஏற்படுத்தும்.

ஏகாதிபத்திய காட்டுமிராண்டித்தனத்தை உருவாக்கும் அதே முதலாளித்துவ முரண்பாடுகள்தான் சர்வதேச தொழிலாள வர்க்கத்தை போராட்டத்திற்குள் உந்தித் தள்ளுகின்றன. இனப்படுகொலை மற்றும் ஏகாதிபத்திய அரசாங்கங்களின் உடந்தைகளை எதிர்க்கும் மாணவர்களும் இளைஞர்களும் இந்த சமூக சக்தியான சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் அணிதிரள்வுக்காக போராட வேண்டும். போர்க்குற்றவாளிகளுக்கு எதிராக தண்டனையளிப்பது, இனப்படுகொலையை நிறுத்துவது, மற்றும் ஒரு மூன்றாம் உலகப் போர் மேலும் தீவிரமடைவதைத் தடுப்பது ஆகியவை தொழிலாள வர்க்கத்தின் தலைமையின் கீழ் சமூகத்தை புரட்சிகரமாக மாற்றுவதற்கான போராட்டத்துடன் பிரிக்கவியலாமல் தொடர்புபட்ட பணிகளாகும், இதன் மூலம் தான் முதலாளித்துவ காட்டுமிராண்டித்தனத்தை சோசலிசத்தைக் கொண்டு பிரதியீடு செய்யப்பட முடியும்.

Loading