நேட்டோவின் ஆயுதங்களைக் கொண்டு ரஷ்யா மீது குண்டுவீச உக்ரேனை அனுமதிக்க நேட்டோ தயாராகி வரும் நிலையில், கிரெம்ளின் உக்ரேனில் போர்நிறுத்தம் செய்வதற்கான சாத்தியக்கூறுகளை எழுப்புகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

வெள்ளியன்று, உக்ரேனிய ஆட்சியானது கிரிமியாவில் உள்ள ரஷ்யப் படைகள் மீது அமெரிக்கா வழங்கிய நீண்ட தூர ATACMS ஏவுகணைகளை ஏவிய நிலையில், நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டொல்டென்பேர்க் (Jens Stoltenberg) போரை ஒரு பரந்த விரிவாக்கத்திற்கு அழைப்பு விடுத்தார். இதில் உக்ரேன் நேட்டோ ஏவுகணைகளைப் பயன்படுத்தி ரஷ்யா மீது குண்டு வீசும்.

நேட்டோவின் விரிவாக்கம், உக்ரேனின் ஆயுதப் படைகளின் விரைவான சரிவுக்கு விடையிறுக்கும் வகையில், போர் பற்றிய அதன் சொந்த பொய்களை விரைவாக அம்பலப்படுத்துகிறது. ஸ்டொல்டென்பேர்க் தி எகனாமிஸ்ட் (The Economist) பத்திரிகையிடம் பேசிக் கொண்டிருந்த சமயத்தில், ராய்ட்டர்ஸ் (Reuters) ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினின் மூத்த உதவியாளர்களுடனான தொடர்ச்சியான நேர்காணல்களை வெளியிட்டு வந்தது. அவர்கள், போர்நிறுத்தத்திற்கு நேட்டோ சக்திகளுக்கு அழைப்பு விடுத்ததுடன், அணுஆயுத போர் அபாயத்தைக் குறித்தும் எச்சரிக்கை விடுத்தனர். ஐரோப்பாவிலும் உலகெங்கிலும் விரைவாக ஒரு முழுவீச்சிலான போரைக் கட்டவிழ்த்து விட அச்சுறுத்திக் கொண்டிருக்கும் போருக்குப் பின்னால் இருப்பது மாஸ்கோ அல்ல, மாறாக வாஷிங்டன் தலைமையிலான நேட்டோ சக்திகள் ஆகும்.

மே 17, 2024 வெள்ளிக்கிழமை, உக்ரேனின் கார்கிவ் நகரில் ரஷ்யா நடத்திய தாக்குதலுக்குப் பிறகு புகை எழுகிறது. [AP Photo/Evgeniy Maloletka]

அமெரிக்க வெளியுறவுச் செயலர் அந்தோனி பிளிங்கன் (Anthony Blinken) மற்றும் பிரிட்டிஷ் வெளியுறவுச் செயலர் டேவிட் கேமரூன் (David Cameron) ஆகியோரின் கருத்துக்களை எதிரொலிக்கும் வகையில், ஸ்டொல்டென்பேர்க் ரஷ்யா மீது குண்டுவீச நேட்டோவின் நீண்ட தூர ஏவுகணைகளைப் பயன்படுத்துமாறு உக்ரேனுக்கு அழைப்புவிடுத்தார். “உக்ரேனுக்கு அவர்கள் வழங்கிய ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கு அவர்கள் விதித்துள்ள சில கட்டுப்பாடுகளை நீக்க வேண்டுமா என்பதை நட்பு நாடுகள் பரிசீலிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது” என்று அவர் கூறினார். “ரஷ்ய பிராந்தியத்தில் முறையான இராணுவ இலக்குகளுக்கு எதிராக இந்த ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான திறனை உக்ரேனுக்கு வழங்க மறுப்பது, அவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதை மிகவும் கடினமாக்குகிறது” என்று அவர் கூறினார்.

“நாங்கள் இந்த மோதலில் பங்கேற்க மாட்டோம்,” என்று ஸ்டோல்டென்பேர்க் வாக்குறுதியளித்தார். எவ்வாறிருப்பினும், ரஷ்யாவில் உள்ள இலக்குகளுக்கு எதிராக அது விரும்பும் எந்தவொரு தாக்குதல்களுக்கும் அதன் ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கு நேட்டோ உக்ரேனுக்கு ஒரு சுதந்திர-நியாயமான அணுகுமுறையை வழங்க வேண்டும் என்று அவர் உடனடியாக வலியுறுத்தினார்: “உக்ரேனுக்கு தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள உரிமை உண்டு. ரஷ்ய பிராந்தியத்தில் உள்ள இலக்குகளைத் தாக்குவதும் இதில் அடங்கும் “ என்று அவர் மேலும் கூறினார்.

ரஷ்யாவுடனான ஒரு நேரடியான போரில் நேட்டோவை ஈடுபடுத்தாது என்ற பொய்யின் பின்னால், போர் விரிவாக்கத்திற்கான தனது பொறுப்பற்ற திட்டத்தை ஸ்டோல்டன்பெர்க் மறைக்கிறார். ஆனால் ஆளும் வட்டாரத்தில், இது பொய் என்பது நன்கு அறியப்பட்டதாகும். ஜேர்மன் இராணுவ அதிகாரிகளுக்கு இடையிலான ஒரு தொலைபேசி உரையாடல் கசிவு, ரஷ்யாவிற்கு எதிராக இலக்கு வைத்து ஏவுகணைகளை ஏவுவதற்கு உக்ரேனிய துருப்புக்களுக்கு உதவ அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் துருப்புக்கள் ஏற்கனவே உக்ரேனில் உள்ளன என்பதை வெளிப்படுத்திக் காட்டியது. இதனடிப்படையில், ரஷ்ய அதிகாரிகள் ரஷ்யா மீது குண்டுவீச உக்ரேனுக்கு ஆயுதங்களை வழங்கும் நேட்டோ நாடுகளைத் தாக்கப்போவதாக மிரட்டியுள்ளனர்.

நேட்டோ தனது மூலோபாயத்தை மேம்படுத்துவதென்பது, ரஷ்யா மீது ஒரு அவமானகரமான மற்றும் பேரழிவுகரமான தோல்வியைத் திணிக்க என்னென்ன நடவடிக்கைகள் அவசியமோ அவற்றை எடுப்பதை அர்த்தப்படுத்துகிறது என்று ஸ்டொல்டென்பேர்க் வாதிட்டார். ஆனால், தற்போதைய மூலோபாயத்தில் உள்ள பிரச்சனை என்னவென்றால், நேட்டோ அரசாங்கங்கள் “ரஷ்யா தோற்காத வகையில் உக்ரேன் வெற்றிபெற நேட்டோ அரசாங்கங்கள் விரும்புகின்றன” என்று வலியுறுத்தினார்.

போரில் நேட்டோவின் நேரடித் தலையீட்டிற்கு மக்கள் மத்தியில் நிலவும் ஆழ்ந்த எதிர்ப்புதான் ஆளும் உயரடுக்குகள் எதிர்கொண்டுள்ள மைய இடர்பாடாகும். பிரெஞ்சு மக்களில் 68 சதவீதத்தினரும், ஜேர்மனியர்களில் 80 சதவீதத்தினரும் மற்றும் போலந்து மக்களில் 90 சதவீதத்தினரும் ஒரு முழுவீச்சிலான போருக்கு இட்டுச் செல்லக்கூடிய உக்ரேனுக்கு துருப்புகளை அனுப்புவது போன்ற நடவடிக்கைகளை எதிர்ப்பதாக கருத்துக்கணிப்புகள் எடுத்துக்காட்டுகின்றன. எவ்வாறாயினும், ஏகாதிபத்திய நேட்டோ சக்திகள் அத்தகைய போரை எதிர்காலத்தில் கட்டவிழ்த்துவிட முடியும் என்ற ஆபத்தை மக்கள் இன்னும் பெருமளவில் குறைத்து மதிப்பிடுகின்றனர்.

ரஷ்யா நேட்டோவை சரீரரீதியில் தாக்கவில்லை என்றாலும் கூட, ரஷ்யாவைத் தாக்குவதற்கான ஒரு நியாயப்படுத்தலை ஸ்டொல்டென்பேர்க் முன்வைத்தார். ரஷ்ய இணையவழி தாக்குதல்கள் குறித்த நேட்டோவின் குற்றச்சாட்டுக்கள், போரை நியாயப்படுத்த நேட்டோ உடன்படிக்கையின் ஷரத்து 5 ஐ கையிலெடுக்க தூண்டக்கூடும் என்று கூறிய அவர், “(ரஷ்ய சைபர் தாக்குதல்களின்) அளவு தீவிரமாக இருந்தால் [...] நேட்டோ நட்பு நாடுகளைப் பாதுகாக்க நாம் ஷரத்து 5 ஐத் தூண்டலாம் மற்றும் இதர பகுதிகளிலும் பதிலடி கொடுக்கலாம்” என்று அவர் கூறினார்.

இந்தக் கூற்று அதிர்ச்சியளிக்கிறது. சைபர் தாக்குதல்களைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினம், ரஷ்யாவை தளமாகக் கொண்ட கணினிகளிலிருந்து ரஷ்யாவுக்கு வெளியே உள்ள ஒருவரால் சைபர் தாக்குதலை எளிதாக நடத்த முடியும்; ஆயினும், ஸ்டொல்டென்பேர்க்கின் வாதத்தின்படி, ரஷ்யாவுக்கு எதிரான நேட்டோ இராணுவ நடவடிக்கையை நியாயப்படுத்த அது அப்போதும் சேவையாற்றும். முற்றுமுழுதான மற்றும் மிகப்பெரும் பொறுப்பற்ற நடவடிக்கையில், அது ஒரு அணுஆயுதமேந்திய வல்லரசுக்கு எதிரான இராணுவ ஆக்கிரமிப்பை அவர் நியாயப்படுத்துகிறார்.

நேட்டோ அதிகாரிகளின் இராணுவ நடவடிக்கைக்கான அழைப்புகளானது, மொத்த யுத்தத்திற்கு வழிவகுக்கும் என்று மாஸ்கோ கூறியுள்ளது. நேட்டோவிலுள்ள முக்கிய நாடுகளின் ஆளும் வர்க்கங்களில், இந்த இராணுவ நடவடிக்கையானது ரஷ்யாவுடனான யுத்தத்திற்கான முடிவு ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளது என்பதைக் காட்டுகிறது.

நேற்று, ஹங்கேரிய பிரதம மந்திரி விக்டொர் ஓர்பன் (Viktor Orban) ரஷ்ய அரசு ஊடகமான RT க்கு, “இன்று புரூசெல்ஸ் மற்றும் வாஷிங்டனில் என்ன நடந்து வருகிறதோ... ஒரு நேரடி இராணுவ மோதலுக்கான சாத்தியக்கூறு வெப்பமடைவது போல் தோன்றுகிறது. போருக்குள் ஐரோப்பா நுழைவதற்கான தயாரிப்பு என்று இதை நாம் பாதுகாப்பாக அழைக்க முடியும்” என்று கூறினார். RT செய்தியின்படி, “நேட்டோவிற்குள் செயற்குழுக்கள் உள்ளன, அவை மோதலில் அதன் பங்களிப்பை இன்னும் கூடுதலாக அதிகரிப்பதற்கான சிறந்த வழிகளை மதிப்பீடு செய்து வருகின்றன,” என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.

ரஷ்யாவுக்கு எதிராக நேட்டோ பரபரப்புடன் தயாரிப்பு செய்து வருகின்ற போரில் ஈடுபடுவதைத் தவிர்ப்பதற்கான வழிகளைக் காண அவரது அரசாங்கம் விரும்புவதாக ஓர்பன் வாதிட்டார். “ஹங்கேரியின் நிலைப்பாடு மறுவரையறை செய்யப்பட வேண்டும், எங்கள் வழக்கறிஞர்களும் அதிகாரிகளும் முகாமின் எல்லைக்கு வெளியே நேட்டோ நடவடிக்கைகளில் பங்கேற்காமல் ஹங்கேரியை ஒரு நேட்டோ அங்கத்துவ நாடாக தொடர்ந்து இருக்க அனுமதிப்பதற்கான வழிகளில் செயல்பட்டு வருகின்றனர். நாம் ஒரு புதிய அணுகுமுறையை, நேட்டோவிற்குள் ஒரு சமாதான-ஆதரவு சக்தியாக நமது நிலைப்பாட்டிற்கு ஒரு புதிய வரையறையை உருவாக்க வேண்டும்,” என்றார்.

இந்த வாக்குறுதிகள் பயனற்றவை. நேட்டோ ரஷ்யாவைத் தாக்கினால், ஹங்கேரி —ஸ்லோவாக்கியா மற்றும் பல்கேரியா போன்ற போர் குறித்து கவலைகளை வெளிப்படுத்தும் தலைவர்களைக் கொண்ட ஏனைய கிழக்கு ஐரோப்பிய அரசுகளைப் போலவே— அவற்றின் அரசாங்கங்களின் சட்டபூர்வ நிலைப்பாடு என்னவாக இருந்தாலும், ஒரு கண்டந்தழுவிய மற்றும் உலகளாவிய போரில் மூழ்கி அழிக்கப்படும். அனைத்திற்கும் மேலாக, போர் விரைவாக நிறுத்தப்படாவிட்டால், அவர்களும் உலகின் பெரும்பகுதியும் அணு ஆயுதங்களால் எரிக்கப்படும்.

நேட்டோ கட்டவிழ்த்து விட்டுள்ள பேரழிவைத் தவிர்ப்பதற்கு அங்கே எந்த தேசிய வழியும் இல்லை. ஸ்ராலினிச ஆட்சிகளால் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டமை மற்றும் 1989-1991 இல் கிழக்கு ஐரோப்பாவில் முதலாளித்துவ மீட்சி ஆகியவற்றின் பேரழிவுகரமான தாக்கங்கள் அதிகரித்தளவில் வெளிப்படையாகி வருகின்றன. ரஷ்யாவுடனான போருக்கான ஒரு தளமாக உக்ரேனைப் பயன்படுத்தி, ஏகாதிபத்திய சக்திகள் முன்னாள்-சோவியத் குடியரசுகளை ஒருவருக்கொருவர் எதிராக நிறுத்த அனுமதிக்கப்பட்டன, கிழக்கு ஐரோப்பா ஒரு நேட்டோ கூட்டணியில் இணைந்தது, அது மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம் குறித்த வாய்வீச்சின் கீழ், ஈவிரக்கமின்றி ஏகாதிபத்திய போர்களை நடத்துகிறது.

ஏகாதிபத்தியத்திற்கு எதிரான எந்தவொரு தேசிய எதிர்ப்பின் திவால்தன்மையும் புட்டினின் கொள்கையில் தெளிவாக உள்ளது. ரஷ்யாவின் பரந்த இராணுவ வலிமை நேட்டோ சக்திகளை பேச்சுவார்த்தை மேசைக்கு கொண்டு வரும் என்ற நம்பிக்கையில், ரஷ்யாவுக்கு எதிராக உக்ரேனை ஆயுதபாணியாக்குவதை நிறுத்த அவருடன் ஒரு ஒப்பந்தத்தை பேச்சுவார்த்தை நடத்த நேட்டோ சக்திகளை கட்டாயப்படுத்தும் முயற்சியில் அவர் 2022 இல் உக்ரேன் மீதான அவரது பிற்போக்குத்தனமான படையெடுப்பைத் தொடங்கினார். ஆனால் இது ஒரு மாயை என்பது நிரூபணமானது. ரஷ்ய இராணுவம் போர்க்களத்தில் நேட்டோ-ஆயுதமேந்திய உக்ரேனிய படைப்பிரிவுகளை நசுக்குகின்ற நிலையிலும் கூட, நேட்டோ சக்திகள் ஆட்சி மாற்றத்திற்கான அல்லது ரஷ்யாவுக்கு எதிரான போருக்கான அவற்றின் முயற்சிகளை இரட்டிப்பாக்கி வருகின்றன.

“புட்டினின் பரிவாரங்களில் நடந்த விவாதங்களை நன்கு அறிந்தவர்கள்” அல்லது “புட்டினுடன் இணைந்து வேலை செய்தவர்கள்” என்று அவர் விவரித்த ஐந்து மூத்த ரஷ்ய அதிகாரிகளுடனான நேர்காணல்களின் அடிப்படையில், “தற்போதைய போர் முன்னரங்க நிலைகளில் புட்டின் உக்ரேனில் ஒரு போர்நிறுத்தத்தை விரும்புகிறார்” என்று தலைப்பிட்ட ஒரு அறிக்கையை வெள்ளியன்று ராய்ட்டர்ஸ் வெளியிட்டது. இவர்கள் அனைவரும் கிரெம்ளின் அதன் இராணுவ அனுகூலத்தைப் பயன்படுத்தி உக்ரேனிய நிலப்பரப்பை பெரும் அளவில் கைப்பற்றும் விருப்பத்தைக் கொண்டிருக்கவில்லை என்றும் அது பெரும்பிரயத்தனத்துடன் நேட்டோவுடன் போர்நிறுத்தத்தை நாடுகிறது என்றும் வலியுறுத்தினர்.

“புட்டின் எவ்வளவு காலம் வேண்டுமானாலும் போரிடலாம், ஆனால் போரை முடக்க போர் நிறுத்தத்திற்கும் புட்டின் தயாராக இருக்கிறார்” என்று ஒரு வட்டாரம் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளது. “பேச்சுவார்த்தைகளைத் தடுப்பதற்கான மேற்கத்திய ஆதரவு முயற்சிகள் மற்றும் பேச்சுவார்த்தைகளைத் தவிர்ப்பதற்கான உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கியின் முடிவு குறித்து ஒரு சிறிய ஆலோசகர் குழுவிடம் புட்டின் விரக்தியை வெளிப்படுத்தியதாக” அந்த நபர் ராய்ட்டர்ஸ்சிடம் மேலும் கூறினார்.

ரஷ்யாவின் தற்போதைய தாக்குதல் உக்ரேனிய இராணுவம் மற்றும் ஆட்சியை நசுக்குவதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை என்பதை வலியுறுத்திய மற்றொரு ஆதாரம், “[உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர்] செலென்ஸ்கி போரை நிறுத்துவதற்கான ஒரு வாய்ப்பைக் கொண்டு வரும் வரை புட்டின் மெதுவாக பிராந்தியங்களை கைப்பற்றுவார்” என்று உறுதியளித்தது.

இந்த ஆதாரங்கள், புட்டின் ரஷ்யாவிற்குள் போருக்கு கட்டாய இராணுவ சேவையில் சேர்க்கப்படுவதற்கு மக்கள் எதிர்ப்பு குறித்தும், அணுவாயுதப் போர் குறித்தும் கவலை கொண்டுள்ளார் என்பதை வலியுறுத்தின. “உக்ரேன் நிலைப்பாடு தொடர்பாக அணுஆயுத விரிவாக்கம் உட்பட மேற்குடன் அதிகரித்து வரும் அபாயம் குறித்து ரஷ்யாவின் கவலைகளை இரண்டு ஆதாரங்கள் மேற்கோள் காட்டின,” என்று ராய்ட்டர்ஸ் அறிவித்தது. “எந்தவொரு வியத்தகு புதிய முன்னேற்றத்திற்கும் மற்றொரு தேசியளவிலான அணிதிரட்டல் தேவைப்படும் என்பதை புட்டின் புரிந்துகொண்டதாக மூன்று ஆதாரங்கள் தெரிவித்தன என்றும், அவர் அதை அவர் விரும்பவில்லை” என்றும் அது மேலும் தெரிவித்தது.

எவ்வாறிருப்பினும், ஸ்டொல்டென்பேர்க், பிளிங்கன் மற்றும் கேமரூனின் கருத்துக்கள், நேட்டோ சக்திகளுக்கு புட்டினுடன் ஒரு உடன்பாட்டை எட்டுவதில் எந்த ஆர்வமும் இல்லை என்பதையே எடுத்துக்காட்டுகின்றன. அவர்கள் ஆட்சி மாற்றத்திற்கான ஒரு போரில் ரஷ்யாவையும் புட்டினையும் இலக்கில் வைத்துள்ளனர். நடைமுறையில் ஐரோப்பாவில் மூன்றாம் உலகப் போராக எழுந்துள்ள ஒன்றின் பேரழிவுகரமான தீவிரப்பாட்டை, தொழிலாள வர்க்கத்தில் ஏகாதிபத்திய போருக்கு எதிரான ஒரு பாரிய சோசலிச இயக்கத்தைக் கட்டியெழுப்புவதன் மூலமாகவும், நேட்டோ அரசாங்கங்கள் மற்றும் அவற்றின் கூட்டாளிகள் இரண்டிற்கும் எதிராகவும், மற்றும் புட்டினின் சோவியத்துக்குப் பிந்தைய ரஷ்ய முதலாளித்துவ ஆட்சிக்கும் எதிரான போராட்டத்தில் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துவதன் மூலமாகவும் மட்டுமே போரை தவிர்க்க முடியும்.

Loading