முன்னோக்கு

இனப்படுகொலைக்கு எதிரான உடன்படிக்கை சட்டத்தைக் கையிலெடுத்து, ரஃபா தாக்குதலை நிறுத்துமாறு இஸ்ரேலுக்கு சர்வதேச நீதிமன்றம் (ICJ) உத்தரவு

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம் 

1948 இனப்படுகொலைக்கு எதிரான உடன்படிக்கை சட்டத்தின் கீழ் இஸ்ரேலுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அவசர உத்தரவு பிறப்பித்தது. மே 18 நிலவரப்படி “ரஃபாவில் இருந்து 800,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்” என்ற செய்திகளை மேற்கோளிட்டு, “இஸ்ரேல் அதன் இராணுவ தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும்” மற்றும் “காஸாவில் உள்ள பாலஸ்தீனிய குழு மீது அதன் சரீரரீதியான அழிவை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ கொண்டு வரக்கூடிய வாழ்க்கை நிலைமைகளை திணிக்கும்” நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்று ICJ 13 க்கு 2 என்ற வாக்கு வித்தியாசத்தில் தீர்ப்பளித்தது.

மே 7, 2024 செவ்வாய்க்கிழமை, தெற்கு காஸா பகுதியின் ரஃபாவில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து புகை எழுகிறது. [AP Photo/Ramez Habboub]

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலில் உள்ள அரசியல் தலைவர்கள் உடனடியாக இந்த தீர்ப்பை இறுமாப்பான மூர்க்கத்துடன் எதிர்கொண்டு, ரஃபாவில் இஸ்ரேலின் தாக்குதல் தொடர வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இஸ்ரேலின் அதிவலது நிதி அமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச், அதே மூச்சில், ICJ ஐ “நாஜிக்கள்,” “ஹமாஸ்” மற்றும் “ISIS” உடன் ஒப்பிட்டு இந்த தீர்ப்புக்கு பதிலளித்தார். ஹிரோஷிமா மற்றும் நாகசாகியைப் போல காஸா மீதும் குண்டுவீசப்பட வேண்டும் என்று இம்மாத தொடக்கத்தில் அழைப்பு விடுத்த அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரஹாம், “ICJ நரகத்திற்குச் செல்லலாம்” என்று அறிவித்து அந்த தீர்ப்புக்கு பதிலளித்தார்.

“ஐ.நா.வுடன் தொடர்புடைய இந்த சர்வதேச நீதி அமைப்புகள் என்று அழைக்கப்படுபவற்றை எதிர்த்து நிற்பதற்கான நேரம் கடந்துவிட்டது, இது இஸ்ரேலால் புறக்கணிக்கப்பட வேண்டும்.” என்று கிரஹாம் அறிவித்தார்.

ICJ தீர்ப்புக்கு அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய அதிகாரிகளின் பதிலளிப்புகள், 1945 இல் நாஜி போர் குற்றவாளிகள் மீதான நூரெம்பேர்க் விசாரணைகளின் போது அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி ரோபர்ட் ஜாக்சன் அவரது ஆரம்ப அறிக்கையில் கூறிய வார்த்தைகளை மீண்டுமொருமுறை நினைவூட்டுகின்றன. “இந்த மனிதர்கள் இதுதான் சட்டம் என்று ஆச்சரியப்படுகிறார்கள், சட்டம் என்று ஒன்று இருக்கிறதா என்று உண்மையிலேயே ஆச்சரியப்படுகிறார்கள் .... எந்த ஒரு சட்டமும் இந்த மனிதர்களுக்கு வெறுமனே ஒரு பிரச்சார உபாயமாகவே இருந்தது, அது உதவும் போது பயன்படுத்த வேண்டும், அவர்கள் செய்ய விரும்புவதை அது கண்டிக்கும் போது புறக்கணிக்கப்பட வேண்டும்” என்று ஜாக்சன் கூறினார்.

காஸா இனப்படுகொலையை முழுமையாக ஆதரிக்கின்ற அதேவேளையில், ரஷ்யா, சீனா மற்றும் ஈரானுக்கு எதிரான அதன் போர் திட்டங்களை “விதிகள் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கைப் பேணுவதாக” கூறிக் கொள்கிறது என்ற போர்வையில் மூடிமறைத்து வந்துள்ள அமெரிக்க-நேட்டோ ஏகாதிபத்தியத்தை, ICJ தீர்ப்பானது பாரியளவில் மதிப்பிழக்கச் செய்து அம்பலப்படுத்துகிறது.

ICJ தீர்ப்புக்கு அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய அரசியல் தலைவர்களின் அலட்சியமான பதிலளிப்புகள், சோவியத் ஒன்றியத்தின் கலைப்பைத் தொடர்ந்து தீவிரமடைந்துள்ள போருக்குப் பிந்தைய சர்வதேச ஒழுங்கமைப்பின் பொறிவில் ஒரு மைல்கல்லாகவும், அத்துடன் உலகளாவிய வெகுஜன நனவில் அதன் தவிர்க்கவியலாத தாக்கத்தின் அர்த்தத்திலும் அதாவது இரண்டின் அர்த்தத்திலும் நீண்டகால வரலாற்று தாக்கங்களைக் கொண்டுள்ளன.

காஸா இனப்படுகொலை எதிர்ப்பாளர்களை “யூத-எதிர்ப்பாளர்கள்” என்று முத்திரை குத்துவதற்கான நேர்மையற்ற முயற்சிகளுக்கு முகம்கொடுக்கின்ற நிலையில், அதற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் உலகெங்கிலும் மில்லியன் கணக்கான மக்கள் பங்கெடுத்து வருவதை ICJ தீர்ப்பு ஊர்ஜிதப்படுத்துகிறது.

கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் வேலைநிறுத்தத்திற்கு வாக்களித்தவர்களைப் போலவே, இந்த தீர்ப்பும் மாணவர்கள் மற்றும் கல்வித்துறை தொழிலாளர்களால் கொண்டாடப்படும். பொலிஸ் அடிதடிகள், இரப்பர் தோட்டாக்கள், மிளகு தூவுதல், வெளியேற்றம், அவதூறு மற்றும் அமைதியான ஆர்ப்பாட்டங்களில் உரத்த குரலில் பேச முயற்சித்ததற்காக பெருந்திரளான கைதுகள் போன்றவற்றுற்கு முகம் கொடுத்த இவர்கள், இருகட்சிகளின் நடவடிக்கையை துணிச்சலுடன் எதிர்கொண்டனர், என்று ஹேக்கில் வெள்ளியன்று ICJ இன் தலைமை நீதிபதி தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் உயரிய நீதிமன்றமான ICJ, இனப்படுகொலை தொடர்பான உடன்படிக்கையின் கீழ், கடந்த டிசம்பர் முதல் இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, பூர்வாங்க நடவடிக்கைகள் அல்லது அவசரகால இடைக்கால உத்தரவுகளுக்கான தென்னாப்பிரிக்காவின் சமீபத்திய கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் வெள்ளிக்கிழமை தனது தீர்ப்பை வெளியிட்டது. கடந்த வார விசாரணைகளில், தென்னாபிரிக்காவின் பிரதிநிதிகள், “பாலஸ்தீனிய வாழ்க்கையின் அடிப்படை அடித்தளங்களை அழிப்பதை நோக்கமாகக் கொண்ட ஒருங்கிணைந்த திட்டத்தை” இஸ்ரேல் பின்பற்றுவதாக குற்றம் சாட்டினர்.

கடந்த வெள்ளிக்கிழமை ICJ இன் தீர்ப்பானது, காஸாவின் பிற பகுதிகளில் இருந்து, பெரும்பாலும் பல முறை இடம்பெயர்ந்துள்ள நூறாயிரக்கணக்கான மக்களின் “கடைசி புகலிடமாக” இருந்த ரஃபா மீதான இஸ்ரேலிய இராணுவ தாக்குதலுக்கு குறிப்பாக முக்கியத்துவம் அளிக்கிறது. இந்த நிலைமைகளின் கீழ், இஸ்ரேலின் பாரிய “வெளியேற்ற உத்தரவுகள்” பாதிக்கப்பட்ட மக்கள் இருத்தலையே இல்லாமல் செய்வதை நிறுத்துவதற்கான உத்தரவுகளுக்கு ஒப்பாகும், ஏனென்றால் காஸாவிலுள்ள மக்கள் வெளியேறி செல்வதற்கு வேறு எந்த இடமும் எஞ்சியிருக்கவில்லை.

முன்னதாக ரஃபாவில் இஸ்ரேலிய இராணுவ தாக்குதலை “சிவப்புக் கோடு” என்று அழைத்த பின்னர், பைடென் நிர்வாகம் பின்னர் விட்டுக்கொடுத்து, இந்த மாதம் அந்த நடவடிக்கையை முன்னோக்கி செல்ல இஸ்ரேலை அனுமதித்தது. எந்தவொரு வழக்கமான அர்த்தத்திலும் ஓர் இராணுவ தாக்குதல் அல்ல, பட்டினியால் வாடும் அகதிகளை இலக்கு வைத்த ஒரு கொலைவெறி வேட்டையான இந்த நடவடிக்கை இதுவரையில், உண்மையில் மொத்தத்தில் அண்மித்து ஒரு மில்லியன் மக்களை இடம்பெயரச் செய்துள்ளது.

ரஃபா மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்துமாறு கோருவதற்கும் மேலும், ஐ.நா. போர்க்குற்ற விசாரணையாளர்கள் காஸாவிற்குள் நுழைவதை இஸ்ரேல் அனுமதிக்க வேண்டும் என்றும் ICJ இன் தீர்ப்பு வலியுறுத்துகிறது. இனப்படுகொலைக்கு எதிரான உடன்படிக்கையின் சட்ட எல்லைக்குள் “செயல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பான ஆதாரங்களைப் பாதுகாக்க” வேண்டும் என்ற ஜனவரி மாத உத்தரவை இஸ்ரேல் மீறியதாகவும் அது குற்றம் சாட்டுகிறது.

ICJ இன் தீர்ப்பு ஒரு சம்பிரதாயமான, இயந்திரத்தனமான பாணியில் எழுதப்பட்டிருந்தாலும், இந்த விபரங்கள், இனப்படுகொலை குற்றத்திற்கான வழக்குகள் முன்கூட்டியே முடிக்கப்படவில்லை என்பதற்கு ஒரு சந்தேகத்திற்கிடமற்ற சமிக்ஞையை அனுப்புகின்றன. “அவசரமாக தேவைப்படும் அடிப்படை சேவைகள் மற்றும் மனிதாபிமான உதவிகளை சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தடையற்ற ஏற்பாட்டை” கோரும் மார்ச் 28 உத்தரவை இஸ்ரேல் புறக்கணித்ததாகவும் ICJ குற்றம் சாட்டியது.

இஸ்ரேலின் பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பாதுகாப்பு மந்திரி யோவ் கேலண்ட் ஆகியோர் பொதுமக்கள்மீது “படுகொலை” மற்றும் “அழித்தொழிப்பை” மேற்கொண்டதாக குற்றம் சாட்டி, அவர்களுக்கு எதிராக கைது செய்ய பிடியாணைகளுக்கு விண்ணப்பித்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) தலைமை வழக்கறிஞர் அறிவித்த சில நாட்களுக்குப் பிறகு சர்வதேச நீதிமன்றத்தின் (ICJ) இந்தத் தீர்ப்பு வந்துள்ளது.

கடந்த ஆண்டு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு எதிரான ICC கைது செய்வதற்கான பிடியாணையைக் கொண்டாடிய போதிலும், கைது ஆணைகளுக்கான தற்போதைய கோரிக்கைகளுக்கு பைடென் நிர்வாகம் அவற்றை “மூர்க்கத்தனமானது” என்று அழைப்பதன் மூலம் பதிலளித்தது. ஆனால், இஸ்ரேலோ அல்லது அமெரிக்காவோ கையெழுத்திடாத ஒரு உடன்படிக்கையால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உருவாக்கப்பட்டிருந்தாலும், ICJ அதன் அதிகாரத்தை 1945 இல் அமெரிக்கா கையெழுத்திட்ட ஐ.நா. சாசனத்தில் இருந்து பெறுகிறது. 1948 ஆம் ஆண்டு இனப்படுகொலைக்கு எதிரான உடன்படிக்கை சட்டத்தை அமெரிக்கா முறைப்படி அங்கீகரித்தது.

ICJ இன் தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்ற அதேவேளையில், அது நீண்டகாலமாக நிலுவையில் உள்ளது என்பதுடன் இப்போதைய ஏகாதிபத்திய கட்டமைப்பிற்குள் நடைமுறைப்படுத்துவதற்கான எந்த வழிவகையும் அதற்கு இல்லை. நடந்து கொண்டிருக்கும் ICJ விசாரணைகள் முழுவதிலும் தென்னாபிரிக்காவின் பிரதிநிதிகள் திறம்பட எடுத்துக்காட்டியதைப் போல, இஸ்ரேலிய அரசாங்கம், சர்வதேச சட்டத்தையும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் கட்டுப்படுத்தும் முடிவுகளையும், ICJ இன் தீர்ப்புகளையும் தண்டனையிலிருந்து விலக்கீட்டுரிமையுடன் புறக்கணிக்கிறது.

கடந்த வாரம் தென்னாப்பிரிக்கா சார்பாக இந்த வழக்கை வாதிட்ட வழக்கறிஞர் வான் லோவ், கூடியிருந்த நீதிபதிகளிடம், “பாலஸ்தீனிய மக்கள் காஸாவில் இனப்படுகொலையை எதிர்கொள்கின்றனர், உங்கள் முந்தைய உத்தரவுகள் அவர்களுக்கு எதிராக அவர்களைப் பாதுகாப்பதில் வெற்றி பெறவில்லை” என்று நேரடியாக கூறினார்.

ஜனவரியில் ICJ நடவடிக்கைகளுக்கு விடையிறுக்கையில், நீதிமன்றம் வழங்கிய எந்தவொரு தீர்ப்பையும் அவர் புறக்கணிக்கப் போவதாக பகிரங்கமாக பெருமைபீற்றிய நெதன்யாகு, “யாரும் நம்மைத் தடுக்க மாட்டார்கள் - ஹேக் அல்ல, தீமையின் அச்சு அல்ல, வேறு யாரும் அல்ல” என்று கூறினார்.

அமெரிக்காவில் பைடென் நிர்வாகத்தின் ஆதரவுடன், ICJ தீர்ப்பைப் பொருட்படுத்தாமல் இஸ்ரேல் ரஃபாவில் அதன் இராணுவ நடவடிக்கையைத் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. “நாங்கள் ரஃபாவில் எங்கள் முயற்சியை பலப்படுத்துகிறோம்” என்று கேலண்ட் வியாழக்கிழமை கூறினார். அதாவது “இந்த நடவடிக்கையை அதிகரிப்போம், அதிக எண்ணிக்கையிலான தரைப்படைகள் மற்றும் கூடுதல் விமானப்படையை இந்த நடவடிக்கையில் ஈடுபடுத்துவோம்” என்று கூறினார்.

காஸா இனப்படுகொலைக்கு எதிரான உலகளாவிய எதிர்ப்பு இயக்கம் ICJ தீர்ப்பால் நியாயமாக ஊக்குவிக்கப்படும். சமீபத்தில், இந்த போராட்டங்கள், கலிபோர்னியாவிலுள்ள பல்கலைக்கழக அமைப்புமுறையில் கல்வித்துறை தொழிலாளர்கள் மத்தியில் நிலவும் சக்திவாய்ந்த வேலைநிறுத்த இயக்கம் தொடர்பாக லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் பயன்படுத்திய ஒரு சொற்றொடரைப் பயன்படுத்துவதானால், தொழிலாள வர்க்கம் “ஒரு அரசியல் பிரச்சினையில் அதன் பலத்தை காட்ட” தொடங்கியுள்ளது.

சர்வதேச தொழிலாளர் வர்க்கத்தின் சக்தியானது, உண்மையில் இனப் படுகொலை மற்றும் அடக்குமுறைக்கு பின்னால் உள்ள சக்திகளை விட ஆயிரம் மடங்கு அதிகமாகும். ஆனால் அந்த சக்தியை முழுமையாக செயல்படுத்துவதற்கு, அதன் அரசியல் சுயாதீனத்திற்கான போராட்டம் தேவைப்படுகிறது. இது அவர்களை ஒவ்வொரு நாட்டிலும் உள்ள முதலாளித்துவ அரசியல் நிறுவனங்களினதும் கருத்துக்களினதும் முடக்கும் செல்வாக்கிலிருந்து விடுவிக்கிறது, மேலும் அவர்களை சோசலிசத்தை நோக்கி நெறிப்படுத்துகிறது.

Loading