இலங்கை: உக்ரேனிய சோசலிஸ்ட் போக்டன் சிரோட்டியுக்கை உடனடியாக விடுவிக்கக் கோரும் அறிக்கைகள்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

உக்ரேனின் பாதுகாப்பு சேவையால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள போல்ஷிவிக்-லெனினிஸ்டுகளின் இளம் காவலர்கள் (YGBL) அமைப்பின் தலைவரான தோழர் போக்டன் சிரோட்டியுக்கை விடுவிக்குமாறு இலங்கையில் உள்ள ஒரு கல்விமான்கள், சிரேஷ்ட ஊடகவியலாளர் மற்றும் பல பிரதான கலைஞர்களின் அறிக்கைகளை கீழே வெளியிடுகிறோம். இந்த அறிக்கைகள் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் (ICFI) மற்றும் உலக சோசலிச வலைத் தளமும் (WSWS) முன்னெடுக்கும் உலகளாவிய பிரச்சாரத்தின் பாகமாகும்.

போக்டன், ஏப்ரல் 25 அன்று, ரஷ்யாவில் புட்டின் ஆட்சியின் முகவர் என்ற போலிக் குற்றச்சாட்டுகளின் பேரில், பாசிச செலென்ஸ்கி ஆட்சியின் இரகசியப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். போக்டன் கைது செய்யப்பட்டதற்கான உண்மையான காரணம், அவர் ரஷ்யாவிற்கு எதிராக போர் நடத்தும் அமெரிக்கா-நேட்டோவுக்கும் அவற்றுடன் சம்பந்தப்பட்ட அனைத்து அரசாங்கங்களுக்கும் எதிராக, ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் உக்ரேனிய மற்றும் ரஷ்ய தொழிலாளர்களை ஐக்கியப்படுத்தப் போராடியமையே ஆகும். அனைத்து வாசகர்களும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு பிரசுரித்துள்ள மனுவில் இங்கே கையெழுத்திடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அமீன் இஸ்ஸதீன், கொழும்பை தளமாகக் கொண்ட டெய்லி மிரர் பத்திரிகையின் சர்வதேச விவகார ஆய்வாளரும், உலகளாவிய நீதி மற்றும் ஊடக சுதந்திரத்திற்கான பரிந்துரையாளரும் ஆவார்:

ஒரு சிரேஷ்ட பத்திரிக்கையாளரும் உலகளாவிய நீதி மற்றும் ஊடக சுதந்திரத்திற்கான பரிந்துரையாளர் என்ற முறையில், தற்போது தெற்கு உக்ரேனில், நிகோலயேவ்யில் உள்ள உயர்பாதுகாப்பு சிறையில் அடைக்கப்பட்டுள்ள போல்ஷிவிக்-லெனினிஸ்டுகளின் இளம் காவலர் (YGBL) அமைப்பின் தலைவரான போக்டன் சிரோட்டியுக் கைது செய்யப்பட்டதற்கு எதிராக உலகளாவிய எதிர்ப்பிற்கு அழைப்பு விடுக்கிறேன்.

போலியான குற்றச்சாட்டுகளின் பேரில் அவர் கைது செய்யப்பட்டிருப்பது, உக்ரேனில் கருத்துச் சுதந்திரம் மற்றும் சோசலிச அரசியல் கருத்துக்களுக்கான அரசியல் வெளி வேகமாகச் சுருங்கி வருவதைப் பற்றி தீவிர கவலையை எழுப்புகிறது. ஜனநாயகத் தேர்தல்கள் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதோடு, உச்சபட்ச தேசத்துரோகக் குற்றச்சாட்டின் பேரில் சிரோட்டியுக் கைது செய்யப்பட்டிருப்பதும் உக்ரேன் வலதுசாரி அதி-தீவிரவாதத்தில் தலைகீழாக மூழ்கிப் போவதைக் குறிக்கிறது.

அமீன் இஸ்ஸாதீன்

சிரோட்டியுக் கைது செய்யப்பட்டமை, சமூகத்தில் ஜனநாயக எதிர்ப்பை மௌனமாக்கும் முயற்சியாகும். ஆட்சியை விமர்சிக்கும் கருத்துக்களை வெளியிடுபவர்கள் மீது பயங்கரவாத முத்திரை குத்தவும் அவர்களை தகவல் பயங்கரவாதிகள் என்று அவதூறு செய்வதற்குமான உக்ரேன் அரசாங்கத்தின் முயற்சியை நான் கடும் அக்கறையுடன் நோக்குகிறேன்.

சிரோட்டியுக்கிற்கு எதிரான குற்றச்சாட்டுகளை ஆதரிப்பதற்காக, உக்ரேனிய அதிகாரிகள், அவர் உலக சோசலிச வலைத் தளத்திற்கு அவர் அளித்த பங்களிப்பை மேற்கோள் காட்டியுள்ளனர். உக்ரேனிய ஆட்சியின் ஆதாரமற்ற கூற்றுக்கள் WSWS ஐ ஒரு ரஷ்ய பிரச்சாரக் கடை என்று முத்திரை குத்தினாலும், WSWS அமெரிக்காவில் இருந்து செயல்படுகிறது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அதன் பரந்த வாசகர்கள் மற்றும் சமாதான சார்பு செயற்பாடுகள் மற்றும் சுயாதீன பத்திரிகைக்கான அர்ப்பணிப்பும் ரஷ்ய சார்பு பிரச்சாரமாக வகைப்படுத்தப்பட முடியாதவை.

ஊடக சுதந்திர ஆர்வலர் என்ற முறையில், இளம் அரசியல் தலைவரின் கைதுக்கு எதிராக உலகம் முழுவதும் எழுந்துள்ள கண்டனத்திற்கு எனது குரலையும் சேர்த்து, அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று கோருகிறேன்.

பேராதனை பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானப் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் சுமுது வலாகுலுகே:

பாசிச செலென்ஸ்கி ஆட்சியினதும் நேட்டோ மற்றும் உலகளாவிய முதலாளித்துவ ஏகாதிபத்திய சக்திகளின் தலைமையில் நடக்கும் உக்ரேன்-ரஷ்யா போரின் எதிரியான போக்டன் சிரோட்டியுக் உக்ரேனின் பாதுகாப்பு சேவையால் (SBU) கைது செய்யப்பட்டுள்ளார்.

சுமுது வலகுலுகே

உக்ரேனின் பிராந்திய ஒருமைப்பாட்டை நாசப்படுத்தினார் மற்றும் ரஷ்யாவின் நலன்களுக்கு சேவை செய்தார் என்ற மோசடி குற்றச்சாட்டின் பேரில் போக்டன் கைது செய்யப்பட்டுள்ளார். பாசிச மற்றும் இனவாத ஆட்சிகள் இரத்தம் தோய்ந்த ஏகாதிபத்திய போரின் உண்மையான எதிரிகள் அனைவருக்கும் எதிராக இவ்வாறான வெட்கமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துவது வரலாறு முழுவதும் பொதுவானது ஆகும். ஆரம்பத்தில் இருந்தே, போக்டன் அமெரிக்க தலைமையிலான நேட்டோ, செலென்ஸ்கி நிர்வாகம் மற்றும் ஆட்டங்கண்ட மாஸ்கோ ஆட்சிக்கு எதிராக போராடினார்.

நேட்டோ-செலென்ஸ்கி கூட்டணியின் ஒரு பகுதியாக ஒழுங்கமைக்கப்பட்டிருக்கக்கூடிய எஸ்.பி.யூ., போக்டனுக்கு எதிராக சோடித்துள்ள குற்றச்சாட்டுகள், அவரும் WSWS உம் ரஷ்ய பிரச்சாரத்தின் கருவிகள் என்று பொய்யாகக் கூறுகின்றன.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மற்றும் அதன் பகிரங்க வெளியீடான WSWS உட்பட சோசலிச எதிர்ப்பிற்கு விரோதமான கோழைத்தனமான ஒரு போருக்கு அழைப்பு விடுக்க செலென்ஸ்கி ஆட்சி இந்த மாதிரியான சூழ்ச்சியை கையாண்டுள்ளது. மேற்கத்திய முதலாளித்துவம் மற்றும் செலென்ஸ்கியின் கைப்பாவை ஆட்சியால் தூண்டப்பட்ட போருக்கு எதிராக, உக்ரேனிய தொழிலாள வர்க்க ஒற்றுமை அதிகரித்து வரும் நிலையிலே இந்த சம்பவம் நடந்துள்ளது. செலென்ஸ்கி ஆட்சி அனைத்து இடதுசாரி இயக்கங்களையும் கொடூரமாக நசுக்குகிறது என்பதை இது நிரூபிக்கிறது.

கவிஞர் மற்றும் மார்க்சிய கலை விமர்சகரான தர்ஷன மேதிஸ்:

செலென்ஸ்கி ஆட்சியின் பாசிச சக்திகளால் உக்ரேனில் போல்ஷிவிக்-லெனினிஸ்டுகளின் இளம் காவலர்கள் (YGBL) அமைப்பின் தலைவரான போக்டன் சிரோட்டியுக், மோசடியான முறையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருப்பதை நான் கடுமையாக கண்டிக்கிறேன். ஒரு மாதத்திற்கு முன்பு அவர் “உச்சகட்ட துரோகம்” என்று அழைக்கப்படும் குற்றச்சாட்டால் அவர் தடுத்து வைக்கப்பட்டிருப்பது பொய்யான மற்றும் அபத்தமான குற்றச்சாட்டுகளை அடிப்படையாகக் கொண்டது. தெற்கு உக்ரைனில் உள்ள உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில், விடுதலைக்கான எந்த அறிகுறியும் இல்லாமல் கொடூரமான சூழ்நிலையில் அவர் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.

தர்ஷன மேதிஸ்

தோழர் போக்டன் ஒரு தனிப்பட்ட இலக்கு மட்டுமல்ல, YGBL மற்றும் அதன் அரசியல் கூட்டாளிகளுக்கு எதிரான அரச கட்டமைப்பின் பலிகடா என்பது தெளிவாகிறது. உக்ரேனில் மட்டுமின்றி ரஷ்யா மற்றும் கிழக்கு ஐரோப்பாவிலும் செயல்படும் YGBL, உலக ட்ரொட்ஸ்கிச இயக்கமான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடன் இணைந்துள்ளது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மட்டுமே இன்று உலகில் உள்ள ஒரே உண்மையான மார்க்சிச சக்தியாகும் என்பதும், ஒருபுறம் ஏகாதிபத்தியம் மற்றும் அதன் கைப்பாவைகளுக்கு எதிராகவும், மறுபுறம் போலி-இடதுசாரிகளுக்கு எதிராகவும் அது போராடுகிறது என்பது அனைவரும் அறிந்த உண்மை ஆகும். ரஷ்யாவின் புடின் ஆட்சி உக்ரேன் மீது முன்னெடுத்த படையெடுப்பையும் அமெரிக்க-நேட்டோ ஆதரவு செலென்ஸ்கி ஆட்சியையும் இது அடிப்படையில் எதிர்க்கிறது. இந்த இரண்டு ஆட்சிகளும் ரஷ்ய மற்றும் உக்ரேனிய தொழிலாளர்களின் ஐக்கியத்தைக் காண விரும்பவில்லை. இதுவே போக்டன் குறிவைக்கப்பட்டதன் உண்மையான நோக்கம் ஆகும்.

ஆளும் வர்க்கத்தால் நடத்தப்படும் போர்களை மேற்கூறிய மார்க்சிச வழிகளில் எதிர்க்கும் சோசலிச மற்றும் சர்வதேச எதிர்ப்பாளரான தோழர் போக்டன் மற்றும் அவரது YGBL இன் சமீபத்திய நடவடிக்கைகள், போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகின்றன. இது ஒரு ஆழமான உண்மையை வெளிப்படுத்துகிறது: லெனினின் மறைவுக்குப் பிறகு அனுபவித்த மோசமான சரீரத் தாக்குதல்கள் உட்பட எத்தகைய அரசியல் அழுத்தங்கள் இருந்தாலும், ட்ரொட்ஸ்கிசம் இறந்துவிடவில்லை, மற்றும் முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளில் அதை வெறுமனே அழித்துவிட முடியாது. அது தொடர்ந்து தலை நிமிர்ந்து நின்று உலக முதலாளித்துவத்தை பூகோளத்தில் இருந்து அகற்றுவதற்கான தனது கடமைகளை நிறைவேற்றும்.

விருது பெற்ற திரைப்பட தயாரிப்பாளரும் வானொலி நாடக ஆசிரியருமான மாலக தேவப்ரிய:

உக்ரேனில் உள்ள செலென்ஸ்கி ஆட்சி, உக்ரேன் போரை எதிர்க்கும் போர்-எதிர்ப்பு ஆர்வலர்கள் கிரெம்ளினுக்கு ஆதரவானவர்கள் என்று ஒரு அபத்தமான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. இந்த மோசமான குற்றச்சாட்டுகளை தூக்கி எறிந்து, ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் போரை எதிர்க்கும் போக்டன் சிரோட்டியுக் கைது செய்யப்பட்டு ரஷ்ய சார்பு முத்திரை குத்தப்பட்டுள்ளார். உக்ரேனில் போர் எதிர்ப்பு ஆர்வலர்கள் எதிர்கொள்ளும் தலைவிதிக்கு இது ஒரு பாரதூரமான சான்று என்று நான் நினைக்கிறேன். ஒரு கலைஞராக, இந்த இளம் சோசலிசப் போராளியின் விடுதலைக்காக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் சர்வதேசப் பிரச்சாரத்திற்கு எனது முழு ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறேன், மேலும் அவர் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்று கோருகிறேன்.

மாலக தேவப்பிரிய

உலகெங்கிலும் உள்ள கலைஞர்கள் போருக்கு ஆதரவான நிலைப்பாட்டை வெளிப்படுத்தவில்லை என்று நான் கருதுகிறேன். இலங்கையிலும் சர்வதேச ரீதியிலும் பல்வேறு மோதல்கள் இடம்பெற்று வரும் நிலையில், மனித உயிர்களும் சொத்துக்களும் அழிக்கப்படுகின்ற பிளவுபட்ட சமூக சூழலை நாம் காண்கிறோம். சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டு, முதலாளித்துவம் மீண்டும் நிலைபெற்ற பிறகு உருவான ஆட்சிகளில் ரஷ்ய மக்கள் எப்படி ஏழ்மை, அரச சொத்துக் கொள்ளை, போர் போன்ற பேரழிவுகளுக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்பதை நாம் பார்க்கலாம். ரஷ்யா-உக்ரேன் போரின் வெடிப்பு 1991ல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதுடன் நெருக்கமாக பிணைந்துள்ளது.

முதலாளித்துவத்தின் முரண்பாடுகள் மற்றும் உக்ரேன் போர் மற்றும் இஸ்ரேலின் பாலஸ்தீன எதிர்ப்பு இனப்படுகொலை ஆகியவை மூன்றாம் உலகப் போராக உருவாகும் உண்மையான அச்சுறுத்தல் போன்ற, போருக்கு இட்டுச் செல்லும் பொருளியல் காரணிகளை மக்கள் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். அதே சமயம், போர்களில் மனித உயிர்கள் பலியான வரலாற்று அனுபவங்களும் நம்மிடம் உள்ளன. இரண்டாம் உலகப் போரின் போது இலட்சக் கணக்கான உயிர்கள் பலியாகின. நாங்கள் இலங்கையில் மூன்று தசாப்தங்களாக நீடித்து ஒரு இலட்சத்திற்கும் அதிகமான உயிர்களைப் பலிகொண்ட இனவாதப் போரை அனுபவித்திருக்கின்றோம்.

ஒரு ஓவியரான சுஜித் ரத்நாயக்க:

போக்டன், கொல்லப்படும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் சார்பாக போருக்கு எதிராக போராடியதால் உக்ரேன் ஆட்சி எதேச்சதிகாரமாக போக்டன் சிரோட்டியுக்கை கைது செய்துள்ளது. அவர் சோசலிசத்தில் காலூன்றிக்கொண்டவர். போர் மனப்பான்மை உருவாகும்போது எதிர்ப்புக்கு இடமில்லை என்பது உண்மைதான். ஒரு ஓவியன் என்ற முறையில் போக்டன் சிரோட்டியுக் கைது செய்யப்பட்டதை நான் கண்டிக்கிறேன், பெர்டோல்ட் ப்ரெக்ட் கலையை ஹிட்லருக்கும் போருக்கும் எதிராகப் பயன்படுத்தியதைப் போல ஒரு ஓவியராக நான் கலையைப் பயன்படுத்துகிறேன்.

சுஜித் ரத்நாயக்க

உக்ரேன் மற்றும் ரஷ்யாவில் எந்த காரணமும் இல்லாமல் உயிர் இழப்பது ஒடுக்கப்பட்ட மக்கள் தான். பிரெக்ட் கூறியது போல், ஒரு போர் தொடங்கும் போது இடைத்தடைகள் இருக்காது. “நல்ல” போர்கள் மற்றும் “கெட்ட” போர்கள் என்று எதவும் கிடையாது. போர் என்பது போர் தான்.

கார்ட்டூனிஸ்டும் அரச பாடசாலை ஆசிரியருமான வசந்த விஜேசிறி:

போக்டன் சிரோட்டியுக் உக்ரேனில் செலென்ஸ்கி அரசாங்கத்தால் போலிக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது தெளிவாகிறது. இது WSWS ஐ வெளியிடுகின்ற உலக மார்க்சிஸ-ட்ரொட்ஸ்கிச இயக்கமான நான்காம் அகிலத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்று நான் நினைக்கிறேன்.

வசந்த விஜேசிறி

அனைத்துலகக் குழுவின் இன் வேலைத்திட்டத்தின் அடிப்படையில் உக்ரேனிய மற்றும் ரஷ்ய தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்காக சிரோட்டியுக் மற்றும் அவரது தோழர்கள் முன்னெடுத்த தீர்க்கமான போராட்டத்தை தடுப்பதும் இந்த காட்டுமிராண்டித்தனமான போரின் உண்மை நிலைமையை மூடிமறைப்பதுமே இந்த அச்சுறுத்தும் கைது நடவடிக்கையின் நோக்கமாகும்.

இந்த அடக்குமுறை மற்றும் எதேச்சதிகாரமான கைது மற்றும் முதலாளித்துவ போருக்கு எதிராக ஒரு வெகுஜன இயக்கம் கட்டியெழுப்பப்பட வேண்டும். அமெரிக்காவின் உலக ஒழுங்கையும், நேட்டோ மூலம் பிராந்தியத்தில் அதிகாரத்தைக் கைப்பற்றும் முயற்சியையும் நாம் எதிர்க்க வேண்டும். அதை அம்பலப்படுத்த வேண்டும். இவ்வகையில் தோழர் போக்டன் சிரோட்டியுக்கின் முதலாளித்துவ எதிர்ப்பு மற்றும் போர் எதிர்ப்புப் போராட்டத்தை நாம் ஆதரிப்பதோடு இந்தப் போராட்டம் வெற்றியடைய வாழ்த்த வேண்டும்.