முன்னோக்கு

நியூ யோர்க்கில் ட்ரம்ப் மீதான தண்டனையும் 2024 தேர்தல் நெருக்கடியும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

ஒரு தேர்தல் ஆண்டில், நியூ யோர்க்கில் நடந்த வழக்கு விசாரணையில் வணிகப் பதிவுகளை பொய்யாக்கியதற்காக 34 குற்ற வழக்குகளில் டொனால்ட் ட்ரம்ப் மீது விதிக்கப்பட்ட தண்டனையானது, முன்னெப்போதும் இல்லாத மற்றும் தீவிரமடைந்து வரும் அரசியல் நெருக்கடி மற்றும் ஆளும் வர்க்கத்தினுள் இருக்கும் கன்னைப் போர் ஆகியவற்றால் ஆதிக்கம் செலுத்தப்படும் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாகும்.

முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், டிரம்ப் டவரில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது பேசுகிறார்.  வெள்ளிக்கிழமை, மே 31, 2024, நியூ யோர்க் [AP Photo/Julia Nikhinson]

கடந்த வெள்ளிக்கிழமை, ஜனாதிபதி ஜோ பைடென் வெள்ளை மாளிகையில் இருந்து, இந்த வழக்கு குறித்து பேசினார். இந்த தண்டனையானது, “எவரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல” என்ற அமெரிக்கக் கொள்கையை மீண்டும் உறுதிப்படுத்துவதுடன், “கிட்டத்தட்ட 250 ஆண்டுகளாக” “அமெரிக்காவின் மூலக்கல்லாக” நிற்கும் நமது “நீதி அமைப்பை” நிலைநிறுத்துகிறது என்று பைடென் கூறினார்.

“இந்த இழிவான வழக்கில் இருந்து வெளிவரும் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், சட்டத்தின் ஆட்சி அனைவரையும், அவர்கள் முன்னாள் ஜனாதிபதிகளாக இருந்தாலும் கூட பிணைத்து வைத்திருக்கிறது என்பதற்கான சான்றாகும்” என்று நியூ யோர்க் டைம்ஸ் ஒரு கட்டுரை தலையங்கத்தில் எழுதியது.

என்ன ஒரு மோசடி! எல்லாவற்றிற்கும் மேலாக, ட்ரம்ப் அமெரிக்க மக்களுக்கு எதிரான, அவரது கடுமையான மற்றும் அடிப்படைக் குற்றங்களான பாசிச ஆட்சிக்கவிழ்ப்பில், அரசியலமைப்பையும் 2020 தேர்தல் முடிவுகளையும் தூக்கியெறிந்தற்காக அவர் மேற்கொண்ட முயற்சிக்கு இந்த தண்டனை வழங்கப்படவில்லை. மாறாக, 2016 தேர்தலுக்கு முன்னதாக ஒரு மோசமான பாலியல் ஊழலை மறைக்க வணிக பதிவுகளை பொய்யாக்கியது தொடர்பாகவே அவருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

“சட்டத்தின் ஆட்சியின்” பாதுகாவலராக தன்னைக் காட்டிக் கொள்ளும் பைடெனின் முயற்சியைப் பொறுத்தவரை, வெள்ளை மாளிகையின் தற்போதைய குடியிருப்பாளர், மனித உரிமைகள் மீதான சர்வதேச சட்ட மரபுகளை நிராகரித்துள்ளதோடு, காஸாவில் இஸ்ரேலின் இனப்படுகொலையைப் பாதுகாப்பதற்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மற்றும் சர்வதேச நீதிமன்றம் போன்ற நீதிமன்றங்களையும் கண்டனம் செய்தார்.

ட்ரம்ப் மீதான தண்டனை, பாசிச முன்னாள் ஜனாதிபதியின் குற்றங்களுக்கு ஓரளவு பொறுப்புக்கூறலைக் கொண்டுவரும் என்ற நம்பிக்கை சில மக்கள் பிரிவினரிடையே இருக்கலாம். ஆனால், அமெரிக்க ஜனநாயகத்தின் ஆழமான மற்றும் இறுதி நெருக்கடிக்கு எளிய தீர்வுகள் கிடையாது.

இந்த தண்டனை ட்ரம்பின் தனிப்பட்ட தலைவிதியில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தெளிவாக இல்லை. இருப்பினும் முன்னாள் ஜனாதிபதி தாக்குதலை மேற்கொள்வதன் மூலம் இதற்கு பதிலளித்துள்ளார். வெள்ளிக்கிழமை, ஒரு பாசிச கூச்சலை மேற்கொண்ட டிரம்ப், இந்த விசாரணையை “மோசடி” என்று கண்டனம் செய்ததோடு, இந்த வழக்கை மேற்பார்வையிடும் நீதிபதியை “பிசாசு” என்று அழைத்தார்.

ஏறக்குறைய முழு குடியரசுக் கட்சித் தலைமையும் ட்ரம்பை ஆதரிக்க அணிதிரண்டதோடு, இந்த தீர்ப்பை நீதி அமைப்பின் “ஆயுதமாக்கல்” என்று கண்டனம் செய்தன. செனட்டர் மிட்ச் மெக்கானெல் போன்ற மிதவாதிகள் என்று அழைக்கப்படுபவர்கள் மற்றும் சூசன் காலின்ஸ் முதல் கிறிஸ்தவ தேசியவாத பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் மைக் ஜோன்சன் போன்ற பாசிஸ்டுகள் மற்றும் QAnon ஆதரவாளர் மார்ஜோரி டெய்லர் கிரீன் வரை, குடியரசுக் கட்சியினர் இந்த விசாரணையை கண்டிப்பதற்கு வரிசையில் நின்றனர்.

குடியரசுக் கட்சியினர் கட்டுப்படுத்தும் மாநிலங்களில் பைடெனுக்கு வாக்களிப்பதில் இருந்து விலக்கி வைப்பதற்கான முயற்சிகள் உட்பட, குடியரசுக் கட்சியினர் ஜனநாயகக் கட்சியினருக்கு எதிராக பழிவாங்கும் நடவடிக்கைகளை எடுப்பார்கள் என்பதற்கான அறிகுறிகள் ஏற்கனவே உள்ளன.

உலகப் போர் மற்றும் சர்வாதிகாரத்தை நோக்கி அக்கறை கொண்டுள்ள பெருநிறுவன மற்றும் நிதிய தன்னலக்குழுவின் இரண்டு போட்டிப் பிரிவுகளால் மேற்பார்வையிடப்படும் ஒரு அதிர்ச்சியூட்டும் உலகளாவிய மற்றும் உள்நாட்டு நெருக்கடியின் நிலைமைகளின் கீழ், தேர்தல் நடக்க இருக்கிறது.

ஜனநாயகக் கட்சியினர் ட்ரம்ப்பை ஓரங்கட்ட முற்பட்டது ஜனநாயகத்திற்கு எதிரான அவரது குற்றங்களுக்காக அல்ல. ஆளும் வர்க்கத்தின் கணிசமான பிரிவுகள் அவரை அமெரிக்க ஏகாதிபத்திய வெளியுறவுக் கொள்கையின் நம்பகமான பொறுப்பாளராகக் கருதவில்லை.

நவம்பருக்கு முந்தைய அடுத்த ஐந்து மாதங்கள், ரஷ்யாவிற்கு எதிராக உக்ரேனில் தீவிரமடைந்து வரும் போர் மற்றும் உலகை முன்பை விட அணுஆயுதப் பேரழிவிற்கு நெருக்கமாக கொண்டு வரும் நிலைமைகளின் கீழ் வெளிப்படும். இப்போது டிரம்பின் பின்னால் அணிவகுத்து நிற்கும் அதே குடியரசுக் கட்சித் தலைவர்களுடன் ஒரு கூட்டணியை உருவாக்க வேலை செய்த பைடென் நிர்வாகத்தின் மைய முன்னுரிமை இதுவாகும்.

ட்ரம்பிற்கு தீர்ப்பு வழங்கப்பட்ட அதே நாளில், ரஷ்யாவின் பகுதிகளைத் தாக்குவதற்கு அமெரிக்க ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான கியேவ் மீதான தடையை முடிவுக்குக் கொண்டுவருவதாக வெள்ளை மாளிகை அறிவித்தது. இது முழுமையான போருக்கு வழிவகுக்கும் ஒரு பாரிய போர் விரிவாக்கம் ஆகும்.

உலகப் போரின் விரிவாக்கமானது, உள்நாட்டில் ஜனநாயக உரிமைகள் மீதான வன்முறைத் தாக்குதல்களை அவசியமாக்குகிறது. இஸ்ரேலிய இனப்படுகொலைக்கான பைடெனின் ஆதரவை எதிர்த்து, அமைதியான பல்கலைக்கழக வளாக போராட்டங்களுக்கு எதிராக நாடு தழுவிய போலீஸ் வெறியாட்டத்தை அவர் கட்டவிழ்த்து வருகிறார்.

டிரம்ப் மீதான தீர்ப்பு வெளியான அன்று காலை, டெட்ராய்டில் உள்ள வெய்ன் அரச பல்கலைக்கழகத்தில் இருந்த போராட்ட முகாமை போலீசார் தரைமட்டமாக்கி 12 மாணவர்களை கைது செய்தனர். வெள்ளிக்கிழமை காலை, கலிபோர்னியா பல்கலைக்கழக சான்டா குரூஸ் முகாமில் போலீஸார் தாக்குதல் நடத்தி 80 பேரைக் கைது செய்தனர்.

அமெரிக்காவில் தற்போதைய அரசியல் சூழ்நிலையானது, அமெரிக்காவில் ஜனநாயக அரசாங்க வடிவங்களின் நீடித்த நெருக்கடியின் உச்சக்கட்டமாகும்.

ஜனநாயகக் கட்சியின் தேசியக் குழுவின் வாட்டர்கேட் ஹோட்டல் தலைமையகத்தில் ரிச்சர்ட் நிக்சனின் மறுதேர்தல் பிரச்சாரம் முறியடிக்கப்பட்டதால் ஏற்பட்ட நெருக்கடியின் விளைவாக, அவர் ராஜினாமா செய்து சரியாக 50 ஆண்டுகள் ஆகின்றன. இதன் பின்னர், வெள்ளை மாளிகையில் நிக்சனின் அப்பட்டமான குற்றச்செயல்கள், அவரது பதவி நீக்கத்தை கட்டாயப்படுத்த காங்கிரஸைத் தூண்டியது. காங்கிரசின் முயற்சிகளை ஆதரித்த உச்ச நீதிமன்றம், நிக்சன் தனது சக சதிகாரர்களுடன் நடத்திய விவாதங்களின் பதிவுகளை வெளியிட உத்தரவிட்டது.

பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு மாறாக, நிக்சனின் ராஜினாமா தொடர் அரசியல் நெருக்கடிகளுக்கு களம் அமைத்துக் கொடுத்தது. அவை, பில் கிளிண்டனின் ஒருமித்த பாலுறவு தொடர்பான குற்றச்சாட்டிலிருந்து, 2000ம் ஆண்டுத் தேர்தலை உச்ச நீதிமன்றம் மூலம் வலதுசாரிக் கும்பல் திருடுவதற்கும், ஜனவரி 6 அன்று நடந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி வரையான நெருக்கடிகளாகும்.

தற்போதுள்ள பொருளாதார, சமூக மற்றும் அரசியல் கட்டமைப்பிற்குள் எந்த முற்போக்கான தீர்வும் இல்லாத, அமெரிக்க முதலாளித்துவத்தின் சர்வதேச மற்றும் உள்நாட்டு முரண்பாடுகளின் வளர்ச்சியே இதற்கான அடிப்படைக் காரணம் ஆகும். குறிப்பாக, அமெரிக்க ஏகாதிபத்தியம் உலகப் பொருளாதார நிலையில், உலகளாவிய வீழ்ச்சியை ஈடுசெய்யும் அதன் வழிமுறையாக போரை நோக்கி திரும்பியுள்ளது. இது, 30 ஆண்டுகால ஆக்கிரமிப்பு மற்றும் ஆதிக்கம் செலுத்துவதற்கு இடைவிடாத போர்களுக்கு வழிவகுத்ததோடு, இன்று ஒரு புதிய உலகப் போரின் ஆரம்ப கட்டங்களில் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

இது சமூக சமத்துவமின்மையின் பிரமாண்டமான வளர்ச்சியுடன், முன்னெப்போதும் இல்லாத வகையில் செல்வம் மிக உயர்ந்த இடத்தில் குவிந்துள்ளது மற்றும் ஒரு கார்ப்பரேட்-நிதி தன்னலக்குழுவின் நடைமுறை ஆட்சி ஆகியவற்றுடன் சேர்ந்துள்ளது. அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் புத்தாண்டு அறிக்கையில், ஜனநாயக ஆட்சி வடிவங்களுடன் பொருந்தாத சமூக சமத்துவமின்மை நிலைகளை ஆவணப்படுத்தியுள்ளது. அதில் நாம் பின்வருமாறு எழுதினோம்:

உலகிலேயே அதிக பில்லியனர்கள் செறிந்து வாழும் நாடு அமெரிக்காவாகும். வரி நியாயத்திற்கான அமெரிக்கர்களின் கூற்றுப்படி, பில்லியனர்களின் கூட்டுச் சொத்து, நவம்பர் 2023 இல் $5.2 டிரில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது. இது, இதுவரை பதிவு செய்யப்படாத அதிகபட்ச தொகையாகும். 2023 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டின்படி, அமெரிக்க மக்கள்தொகையில் முதல் 10 சதவிகிதத்தினர் மொத்த சொத்துக்களில் மூன்றில் இரண்டு பங்கை குவித்து வைத்திருக்கின்றனர். அதே சமயம், அடி நிலையிலுள்ள பாதிப் பேர் 2.6 சதவிகித பங்கை மட்டுமே வைத்திருக்கின்றனர்.

இந்த தன்னலக்குழு வலுக்கட்டாயமாக சர்வாதிகார ஆட்சியைப் பயன்படுத்தி வருகிறது. 333 மில்லியன் மக்கள் வசிக்கும் ஒரு நாட்டில், முழு அரசியல் அமைப்பு முறையும் இரண்டு பிற்போக்குக் கட்சிகளால் ஆதிக்கம் செலுத்தப்படுகிறது. அதில், ஒன்று பெருகிய முறையில் பாசிசமாக உள்ளது, மற்றொன்று எல்லாவற்றிற்கும் மேலாக போரை தீவிரமாக்கும் கேள்வியில் கவனத்தை செலுத்துகிறது,

நவம்பரில் நடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தல் வரையிலுமான ஐந்து மாதங்களில் நிறைய விடயங்கள் நடக்கலாம். டிரம்ப் அல்லது பைடென் ஆகியோர், இரு பெருநிறுவனக் கட்டுப்பாட்டில் உள்ள கட்சிகளின் வேட்பாளர்களாக முடிவடைய மாட்டார்கள் என்பது சாத்தியம். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், ஒட்டுமொத்த அரசியல் அமைப்பு முறையும் வலது பக்கம் மாறுவது தொடரும்.

தொழிலாள வர்க்கத்தைப் பொறுத்தவரை, இந்த நெருக்கடியில் அதன் சொந்த வேலைத்திட்டம் மற்றும் அதன் சொந்த கொள்கைகளுடன் தலையிடுவதே மையப் பிரச்சினையாகும். தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் எந்தப் பிரச்சினையும், முதலாளித்துவ தன்னலக்குழுவின் செல்வம் மற்றும் சலுகைகள் மீதான ஒரு முன்முனைத் தாக்குதலை தொடுக்காமல் தீர்க்க முடியாது. அமெரிக்காவையும் முழு உலகத்தையும் நாசமாக்கிவரும் இந்த நெருக்கடியை பழுதுபார்ப்பதன் மூலம் தீர்க்க முடியாது. மாறாக, சமூக, பொருளாதார மற்றும் அரசியல் வாழ்வில் முழுமையான மறுஒழுங்கமைப்பு தேவை.

இதற்கு, போர் மற்றும் தன்னலக்குழுவிற்கு எதிரான ஒரு வேலைத்திட்டம் தேவை. சமத்துவம், அமைதி மற்றும் உண்மையான ஜனநாயகம் - அதாவது இந்த நெருக்கடிக்கு மூலகாரணமான முதலாளித்துவத்தை தூக்கியெறிவதற்கான ஒரு சோசலிச வேலைத்திட்டம் அவசியமாகும்.

Loading