போருக்கு எதிரான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் ஒரு சர்வதேச இயக்கத்தை ஒழுங்கமைப்பதற்காக!

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம் 

இந்த அறிக்கையானது, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுக்கு அதன் அரசியல் ஆதரவை அறிவித்துள்ள ரஷ்யாவில் உள்ள ஒரு அமைப்பான போல்ஷிவிக்-லெனினிஸ்டுகளின் இளம் காவலர் (YGBL) அமைப்பால் சமர்ப்பிக்கப்பட்டது. போருக்கு எதிரான இளைஞர்களின் ஒரு இயக்கத்தைக் கட்டியெழுப்புவது குறித்து விவாதிக்க அக்டோபர் 9, 2022 அன்று நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மற்றும் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர்கள் அமைப்பின் ஒரு கூட்டத்தில் YGBL இன் பிரதிநிதிகள் பங்கெடுத்திருந்தனர்.

1. போல்ஷிவிக்-லெனினிஸ்டுகளின் இளம் காவலர் (YGBL) அமைப்பானது, உக்ரேன் மீதான ரஷ்யாவுக்கும் அமெரிக்க-நேட்டோவுக்கும் இடையிலான போருக்கு எதிரான ஒரு சர்வதேச இளைஞர் இயக்கத்தை ஒழுங்கமைப்பதில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) மற்றும் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர்கள் அமைப்புடன் (IYSSE) அதன் ஒற்றுமையை பகிரங்கமாக அறிவிக்கிறது.

2. இந்த ஒற்றுமைக்கு ஆதாரமாக, YGBL பிரதிநிதிகள் அக்டோபர் 9 அன்று நடந்த போருக்கு எதிராக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மற்றும் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர்கள் அமைப்பின் சர்வதேச கூட்டத்தில் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில், YGBL ஆனது ICFI மற்றும் IYSSE க்கு அதன் அரசியல் ஆதரவை வெளிப்படுத்தியது. ஒரு சோசலிச முன்னோக்கிற்கான போராட்டத்தின் பாகமாக ஒரு சர்வதேச போர்-எதிர்ப்பு இளைஞர் இயக்கத்தை ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கவும் YGBL இன் பிரதிநிதிகள் வாக்களித்தனர்.

3. உலக முதலாளித்துவ அமைப்புமுறை இப்போது ஒரு கூர்மையான நெருக்கடியில் உள்ளது, இதுவே இறுதியில் முதலாளித்துவ நாடுகளின் பிற்போக்குத்தனமான கொள்கைகளையும் சமூகத்தில் வர்க்கப் போராட்டத்தின் இயக்கவியலையும் தீர்மானிக்கிறது. 20 ஆம் நூற்றாண்டின் தீர்க்கப்படாத பிரச்சினைகளின் காரணமாக, அனைத்திற்கும் மேலாக, உற்பத்தியின் சமூகக் குணாம்சத்திற்கும் தனியார்-முதலாளித்துவ கையகப்படுத்தல் வடிவத்திற்கும் இடையிலான முரண்பாடுகள், மற்றும் பூகோளமயமாக்கப்பட்ட பொருளாதாரத்திற்கும் உலகம் தேசிய-அரசுகளாக பிளவுபட்டிருப்பதற்கும் இடையிலான முரண்பாடுகளின் காரணமாக ஒட்டுமொத்த முதலாளித்துவ அமைப்புமுறையும் வெடித்துச் சிதறிக் கொண்டிருக்கிறது. இந்த முரண்பாடுகளின் மோசமடைதலானது முதலாளித்துவ நாடுகளை பிற்போக்குத்தனமான, பேரினவாத மற்றும் இராணுவவாத கொள்கைகளுக்கு இட்டுச் செல்கிறது. ஒரு கூர்மையான நெருக்கடியை முகங்கொடுக்கும் அமெரிக்கா, உலகை புதிய வரையறைகளில் மறுபங்கீடு செய்ய முனைகிறது.

4. அமெரிக்கா ஸ்தாபிக்க விரும்பும் புதிய உலக ஒழுங்கு மிகவும் சாத்தியமான சித்திரத்தைப் போலத் தெரிகிறது: ரஷ்யா மற்றும் சீனா ஆகியவற்றின் இயற்கை, தொழில்துறை-தொழில்நுட்ப மற்றும் மனித வளங்கள் மீதான நேரடியான கட்டுப்பாட்டைப் பேணுவதற்கு அவசியமானால், ஏகாதிபத்தியம் அவற்றை அடிபணிய வைக்க வேண்டும் மற்றும் பிளவுபடுத்த வேண்டும்.

5. உலகினை புதிதாக மறுபங்கீடு செய்வதற்கு ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகள், அவற்றின் சொந்த இடத்திற்காக அமெரிக்காவை ஆதரிக்கின்றன. அதேநேரத்தில், அமெரிக்காவினால் கட்டுப்படுத்தப்பட்டுள்ள ஐரோப்பிய ஏகாதிபத்தியமானது, அதன் இக்கட்டான பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் நிலையில் இருந்து வெளியேறுவதற்கும், அதன் முந்தைய மேன்மையை மீண்டும் பெறுவதற்கும் ஒரு வழியாக, உலகை மறுபங்கீடு செய்வதன் மூலமாக மட்டுமே அதைக் காண்கிறது.  

6. ஜப்பான், தென் கொரியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகியவை பசிபிக் பிராந்தியத்தில் சீனாவிற்கு எதிரான போராட்டத்தில் அவற்றின் நலன்களுக்கு எந்த அளவிற்கு பொருந்துகிறதோ, அந்தளவுக்குத்தான் அமெரிக்காவை ஆதரிக்கின்றன. இந்த நாடுகள் சீனாவுடன் போட்டியிட அனுமதிக்கும் வரை அமெரிக்காவை ஆதரிக்கும். செல்வாக்கு மண்டலங்களைப் பிரிக்கும் வழிவகை, பசிபிக் முதலாளித்துவ சக்திகளுக்கு இடையே உள்ள முரண்பாடுகளை புதுப்பிக்கும். அவையும் ஐரோப்பாவைப் போலவே உறுதியற்றவையாக உள்ளன.

7. 2008 நெருக்கடியானது உலகெங்கிலும் வர்க்கப் போராட்டங்களுக்கு புத்துயிரூட்டியது. 2010 களின் ஆரம்பத்தில் நடந்த அரபு வசந்தம், இந்த புதிப்பித்தலுக்கு தெளிவான சான்றாகும். அது அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தை இன்னும் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்க நிர்பந்தித்தது. 2014 இல், அவர்கள் உக்ரேனில் ஒரு ஆட்சிக் கவிழ்ப்பை ஆதரித்தனர். இந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதி மூலமாக, ரஷ்யாவுக்கு எதிரான ஒரு எதிர்கால போரில் ஒரு பாலத்தைக் கட்டியெழுப்புவதற்கான அனைத்து நிலைமைகளையும் அமெரிக்காவால் உருவாக்க முடிந்தது.

8. 2020 இல் வெடித்த கோவிட்-19 பெருந்தொற்று நோய் முதலாளித்துவத்தின் முரண்பாடுகளை தீவிரப்படுத்தியதுடன், ரஷ்யா மற்றும் சீனாவுக்கு எதிரான போருக்கான தயாரிப்பில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இன்னும் விரைவான விரிவாக்கத்திற்கு தூண்டுதலாக இருந்தது. ஆகஸ்ட் 2021 இல் நேட்டோ உச்சிமாநாட்டில் வெளிப்படுத்தப்பட்டபடி, “ஒரே சீனா” கொள்கையைக் கைவிட்டு, உக்ரேனுக்கான அதன் ஆதரவை அதிகரிப்பதற்கான மிகவும் ஆத்திரமூட்டும் பாதையில் அமெரிக்கா இறங்கியது, இது செலென்ஸ்கியின் “கிரிமியனுக்கான செயற்பாட்டுத் தளத்தை” (“Crimean platform”) ஆதரித்தது.

9. விளாடிமீர் புட்டினின் பிற்போக்கு ஆட்சியானது, ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் சோவியத் ஒன்றியம் துரோகத்தனமாக கலைக்கப்பட்டு முதலாளித்துவ மீட்சி செய்யப்பட்டதில் இருந்து எழுந்தது. புட்டினின் கொள்கைகள், இறுதி ஆய்வில், மேலிருந்து வரும் மேற்கத்திய ஏகாதிபத்தியத்தின் அழுத்தத்திற்கு எதிராகவும், இன்னும் விமர்சன ரீதியாக, கீழிருந்து ரஷ்ய தொழிலாள வர்க்கத்தின் இயக்கத்திற்கு எதிராகவும் சோவியத்துக்கு பிந்தைய தன்னலக்குழுவின் செல்வத்தைப் பாதுகாப்பதையே இலக்காகக் கொண்டுள்ளன.

10. இந்தப் பூகோள அரசியல் மற்றும் சமூக உள்ளடக்கத்திற்குள், பிப்ரவரி 24 அன்று உக்ரேன் மீதான புட்டினின் சாகசவாத படையெடுப்பு, கிழக்கு நோக்கிய நேட்டோவின் இடைவிடாத விரிவாக்கத்திற்கு ரஷ்ய செல்வந்த தன்னலக்குழுக்களின் விடையிறுப்பாக இருந்தது. புட்டினின் படையெடுப்புக்குக் காரணமான அமெரிக்க நேட்டோவின் கடைசிச் சுற்று “சிவப்புக் கோட்டைக்” கடந்து முடிவடைந்ததால், புட்டின் ஆட்சியின் முக்கிய இலக்கு, அதன் “சிறப்பு நடவடிக்கையின்” அழுத்தத்தின் மூலம் அமெரிக்க-நேட்டோவுடன் ஒரு புதிய சுற்று பேச்சுவார்த்தையை அடைவதாகும். [அழுத்தம் சேர்க்கப்பட்டது].

11. மேற்குடன் ஒரு “சமமான பங்காண்மைக்கு” ரஷ்ய முதலாளித்துவ வர்க்கத்தின் விருப்பம் மிகவும் கற்பனாவாத பிரமைகளில் ஒன்றாக இருந்தது. வரலாற்றுரீதியில் ஸ்ராலினின் “மக்கள் முன்னணிகள்” மற்றும் பின்னர் “சமாதான சகவாழ்வு” கொள்கையில் இருந்து பெறப்பட்ட இந்த மயக்கம், 1990 களில் ரஷ்ய முதலாளித்துவவாதிகளின் வளர்ந்து வந்த வர்க்கத்தின் மத்தியில் அபிவிருத்தி கண்டது.

12. புட்டின் ஆட்சியானது இந்த கற்பனாவாத மாயையில் இருந்து விடுபடவில்லை. ரஷ்ய தன்னலக்குழு “சம அந்தஸ்தில்” இருக்க விரும்பி, மேற்குடன் கையாளல் செய்து சமரசத்திற்கு முயல்வதே அதன் ஒட்டுமொத்த கொள்கையாக இருந்து வந்துள்ளது. மேற்கத்திய ஏகாதிபத்தியம், ரஷ்யாவை வெற்றிகொள்ளும் இலட்சியங்களைத் தவிர, புட்டினின் ஆட்சியின் இந்த சமரசத் தொனிகளைப் பற்றிக் கவலைப்படவில்லை.

13. உக்ரேனிய செல்வந்த தன்னலக்குழுவைப் பொறுத்த வரையில், அதன் வெளிப்படையான தரகு இயல்புடன், அதன் சுய-நிர்ணயத்துடன் கூடிய ஒரு சுதந்திரமான “ஜனநாயக” உக்ரேனின் கனவுகளை ஊக்குவிப்பது இலாபகரமானதாக இருந்தது. எவ்வாறிருந்த போதிலும், இந்த கற்பனாவாதம் உலக ஏகாதிபத்திய அமைப்புமுறையால் பிரதிநிதித்துவம் செய்யப்பட்ட யதார்த்தத்தின் சுவருக்கு எதிராக விரைவில் நொறுங்கியது, அங்கு அது ரஷ்யாவிற்கு எதிரான அதன் ஏகாதிபத்திய அபிலாஷைகளில் மேற்கத்திய மூலதனத்தின் கருவியாக ஆனது.

14. மேற்கத்திய நாடுகளுடன் “சமமான” பேச்சுவார்த்தை என்ற ரஷ்யாவின் கற்பனாவாத கனவுகளைப் போலவே, உக்ரேனின் சுதந்திரம் தொடங்குவதற்கு முன்பே முடிவுக்கு வந்தது. சோவியத் ஒன்றியத்தின் பேரழிவுகரமான பொறிவால் பாதிக்கப்பட்ட இரு நாடுகளும் ஒரு கடுமையான யதார்த்தத்தை எதிர்கொண்டன. இரண்டுமே தமது பிற்போக்குத்தனமான இலக்குகளை நடைமுறையில் அடைவதற்கான சாத்தியக்கூறைக் கொண்டிருக்கவில்லை.

15. முன்னாள் சோவியத் குடியரசுகளில் இருந்த இராணுவத் தளங்கள், ஒரு பரந்த அணு ஆயுத தளவாடங்கள் மற்றும் மூலப்பொருட்களின் ஒரு செல்வவளம் என சோவியத் பாரம்பரியத்தை அது கொண்டிருந்த மட்டத்திற்கு மட்டுமே முதலாளித்துவ ரஷ்யா சுதந்திரமாக இருந்தது. ரஷ்ய தன்னலக்குழு விரைவில் இரட்டை நிலைப்பாட்டைப் பெற்றது: மூலப்பொருட்களின் பிற்சேர்க்கையாக, அது மூலப்பொருட்கள் மற்றும் அவற்றிலிருந்து இலாபங்களை மாற்றுவதை சுயாதீனமாக நிர்வகிக்கவும் கட்டுப்படுத்தவும் விரும்பியது.

16. நிஜமான சுதந்திரம் குறித்த உக்ரேனின் கனவுகள் தற்போதைய முதலாளித்துவ அமைப்புமுறைக்குள் ஒரு கானல் நீராக உள்ளன. உக்ரேனிய பிரச்சினைக்கு ஒரே உண்மையான தீர்வு ஒரு உலக சோசலிசப் புரட்சியாக இருக்க முடியும். இது உக்ரேனிய பிரச்சினைக்கு மட்டும் பொருந்தாது. எந்தவொரு நாட்டின் பிரச்சினையும் இறுதியில் உலக அரங்கில், அதாவது ஒரு உலகளாவிய வழியில் மட்டுமே தீர்க்கப்பட முடியும்.

17. உக்ரேன் மீதான புட்டினின் படையெடுப்புக்குப் பிந்தைய போரின் போக்கு இந்த படையெடுப்பின் பிற்போக்குத் தன்மையை அதிகரித்தளவில் வலியுறுத்துகிறது. மேற்கத்திய ஏகாதிபத்தியத்தின் அச்சுறுத்தலில் இருந்து ரஷ்ய மக்களின் சுதந்திரத்திற்காக போராடுவதாக கூறிக்கொண்டாலும், உண்மையில் புட்டின் ரஷ்ய தொழிலாள வர்க்கத்தையும் நாட்டின் மூலப்பொருள் செல்வத்தையும் சுரண்டுவதற்கு ரஷ்ய தன்னலக்குழுவின் சுதந்திரத்தை மட்டுமே பாதுகாத்து வருகிறார்.

18. ரஷ்ய சமூகத்தின் தற்போதைய நெருக்கடியில் இருந்து வெளியேற புட்டின் ஆட்சிக்கு எந்த வழியும் இல்லை. எதிர்காலத்தில் அப்படி ஒரு வழியும் இருக்காது. புட்டின் ஆட்சியின் அனைத்து இராணுவ மற்றும் அரசியல் நடவடிக்கைகளும், மேற்கத்திய ஏகாதிபத்தியத்தின் விரிவாக்கத்திற்கும் ரஷ்ய, உக்ரேனிய மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் நிலைமைகள் மோசமடைவதற்கும் மட்டுமே பங்களிப்பு செய்யும்.

19. முதலாளித்துவ அமைப்புமுறையின் கட்டமைப்பிற்குள் சிந்தித்துப் பார்க்கையில், தற்போதைய போருக்கான வாய்ப்புகள் மிகவும் இருண்டதாகவே உள்ளன. முதலாவதாக, இந்தப் போர் ஒரு நீண்டகால தன்மையை எடுக்கும் மற்றும் உக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் மட்டும் சண்டையிடப்படாது. ஒரு மூன்றாம் உலகப் போர் அச்சுறுத்தல் தவிர்க்க முடியாதது என்ற புள்ளிக்கு உலக நிலைமையை எரியூட்டுவதில் இது முதல் படியாகும். எதிர்கால போரில் உலகின் அனைத்து நாடுகளும் பங்கேற்கும்.

20. இரண்டாவதாக, போரின் தன்மையானது ஆளும் வர்க்கங்களின் கொள்கைகளால் தீர்மானிக்கப்படும், அவை இப்போது அப்பட்டமான மனித-விரோத நிலைப்பாட்டில் நிற்கின்றன. இந்த மோதலில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதை நோக்கி பொறுப்பற்ற முறையில் நகர்ந்து கொண்டிருக்கின்ற, ஆளும் வர்க்கங்கள் ஓர் அணு ஆயுத  இறுதி அழிவுப்போரின் நிஜமான சாத்தியத்தை உருவாக்கி வருகின்றன. ஏகாதிபத்திய மற்றும் முதலாளித்துவ அரசாங்கங்களின் பைத்தியக்காரத்தனமான கொள்கைகளில் இருந்து பூமிக் கிரக அழிவின் கோரக்காட்சி எழுகிறது. ஆளும் முதலாளித்துவ உயரடுக்கின் பொறுப்பற்ற தன்மையானது, இளைஞர்களின்  எதிர்காலத்துக்கு அனுமதிக்கப்படுமா என்று கேட்கத் தூண்டுகிறது.

21. இருப்பினும், மனிதகுலம் தவிர்க்க முடியாத அழிவுக்கு விதிக்கப்படவில்லை. YGBL ஆனது அவநம்பிக்கைவாதிகளின் விதிவசவாதத்தை நிராகரிக்கிறது, இவர்களது கண்ணோட்டம் இப்போதைய இந்த உலக முதலாளித்துவ ஒழுங்கிற்குள் என்ன சாத்தியம் என்பதன் வரம்புகளுக்குள் சிக்கிக் கொண்டுள்ளது. சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒரு பாரிய அரசியல் போராட்டத்தின் உள்ளடக்கத்தில் அடையக்கூடிய ஒரு சோசலிச முன்னோக்கை அடித்தளமாக கொண்ட ஒரு நம்பிக்கையான விருப்புரிமையும் உள்ளது என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். உலகமானது ஏகாதிபத்தியவாதிகள் மற்றும் தன்னலக் குழுக்களால் மட்டும் ஆனது அல்ல. ஒரு பாரிய தொழிலாள வர்க்கமும் அதில் உள்ளது, அதன் கூட்டு உழைப்பு, அதன் அனைத்து மாறுபட்ட, சிக்கலான மற்றும் எல்லையற்ற படைப்பாற்றல் வடிவங்களில், மனித முன்னேற்றத்தின் உந்து சக்தியாக உள்ளது.

22. வறுமை, சமத்துவமின்மை, போர், நோய் மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவற்றைக் கையாள்வதற்கு, முதலாளித்துவத்தின் நெருக்கடியைத் தீர்க்க தகைமை கொண்ட ஒரே புரட்சிகர சக்தி சர்வதேச தொழிலாள வர்க்கம் மட்டுமே ஆகும். இந்த புரட்சிகர குணாம்சம் தொழிலாள வர்க்கத்தின் சமூக மற்றும் பொருளாதார நிலைமைகளில், வர்க்க ஒடுக்குமுறைக்கு எதிரான அதன் போராட்டத்தின் வரலாற்று அபிவிருத்தியில் பொதிந்துள்ளது.

23. ஆகவே, மேற்கத்திய ஏகாதிபத்தியம் மற்றும் புட்டின் ஆட்சி உட்பட ஏனைய முதலாளித்துவ நாடுகளுக்கு எதிரான போராட்டமானது, முதலாளித்துவ சமூகத்தை கம்யூனிச சமூகமாக மாற்றுவதற்கான போராட்டத்தின் பாகமாக தொழிலாள வர்க்கத்தை பரந்த அளவில் அணிதிரட்டுவதை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். இது தொழிலாள வர்க்கத்தில் ஒரு கற்பனையானதல்ல, ஒரு உண்மையான புரட்சிகரத் தலைமையைக் கட்டியெழுப்பும் சவாலை முன்னிறுத்துகிறது. அதுபோன்றவொரு தலைமையின் மூலமாக மட்டுமே தொழிலாள வர்க்கத்தின் அரசியல் நனவை சோசலிசப் புரட்சியை சாதிக்கும் மட்டத்திற்கு உயர்த்தவும் மற்றும் உலகெங்கிலும் அரசு அதிகாரத்தைக் கைப்பற்றவும் முடியும்.

24. தொழிலாள வர்க்கத்திற்கு நமது காலத்தின் மிகப் பெரிய நெருக்கடி புரட்சிகரத் தலைமையின் நெருக்கடியாகும். முதலாளித்துவ வர்க்கத்துக்கு எதிரான வெற்றிகரமான போராட்டத்தில் புரட்சிகரத் தலைமை என்பது பிரதான அம்சமாக உள்ளது. இயல்பில் அகவயமான இந்தக் காரணியானது, உலகெங்கிலும் சோசலிசப் புரட்சியை வெற்றிகரமாக பரப்புவதற்கும் திடப்படுத்துவதற்குமான கடைசி படியாக இருந்தாக வேண்டும்.

25. மார்க்சிசம் மற்றும் தொழிலாளர் இயக்கத்தின் கடந்தகால வரலாற்று அனுபவங்கள் அனைத்தையும் முறையாக செயல்முறைப்படுத்தி வந்திருக்கும் அமைப்பாக மட்டுமே தொழிலாள வர்க்கத்தின் உண்மையான புரட்சிகரத் தலைமை இருக்க முடியும். நவீன உலகில் பாட்டாளி வர்க்கத் தலைமையின் புரட்சிகர மூலோபாயமும் தந்திரோபாயமும் துல்லியமாக இந்த அனுபவத்தையும் அதேபோல் புறநிலைமைகளையும் உட்கிரகித்துக் கொள்வதன் அடிப்படையிலேயே வடிவம் பெறும்.

26. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மட்டுமே தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரத் தலைமை நெருக்கடியைத் தீர்க்க தகைமை கொண்ட ஒரே சர்வதேச அமைப்பு ஆகும். நான்காம் அகிலத்தின் மற்றும் லியோன் ட்ரொட்ஸ்கியின் ஒரே சட்டபூர்வமான வாரிசாக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மட்டுமே இருக்கிறது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவை நான்காம் அகிலம் என்று கூறுவது இன்னும் சரியானதாகவே இருக்கும்.

27. ட்ரொட்ஸ்கிசத்தை நோக்கிய YGBL இன் நோக்குநிலை என்பது ட்ரொட்ஸ்கிக்கு அனுதாபம் காட்டும் பல தனிநபர்களின் வெறுமனே விருப்பு வெறுப்பு அல்ல. ட்ரொட்ஸ்கிசம் மட்டுமே மார்க்சிசத்தின் ஒரே சட்டபூர்வமான வாரிசு என்ற உண்மையையும், சோசலிசத்திற்கான பாட்டாளி வர்க்கத்தின் போராட்டத்தில் அதன் சுயாதீனமான வழியை பிரதிநிதித்துவம் செய்வது ட்ரொட்ஸ்கிசம் என்பதையும், ட்ரொட்ஸ்கிசம் 21ம் நூற்றாண்டின் மார்க்சிசம் என்பதையும் அது அடிப்படையாகக் கொண்டுள்ளது. ட்ரொட்ஸ்கிசத்தின் அடித்தளத்தில் மட்டுமே உலகப் புரட்சியை யதார்த்தமாக்குவது சாத்தியமாகும்.

28. ஸ்ராலின் தலைமையிலான பிற்போக்குத்தனமான தேசியவாத அதிகாரத்துவ ஆட்சிக்கு எதிரான ட்ரொட்ஸ்கியின் வீரம் செறிந்த போராட்டம் —போல்ஷிவிக் கட்சி மற்றும் அக்டோபர் புரட்சியின் சவக்குழி தோண்டியவராக ஸ்ராலினின் பெயர் என்றென்றும் இழிபெயரில் வாழும்— வரலாற்றால் ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது. 1991 இல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டமையானது, ஸ்ராலினிச ஆட்சி, தொழிலாள வர்க்கத்தால் தூக்கியெறியப்படாவிட்டால், சோவியத் ஒன்றியத்தின் அழிவுக்கு இட்டுச் செல்லும் என்ற அவரது எச்சரிக்கையை உறுதிப்படுத்தியது.

29. அனைத்திற்கும் மேலாக, ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி கோட்பாடானது, “முதலாளித்துவத்தின் மரண ஓலம்” என்று அவர் மிகவும் ஆழமாக விவரித்த ஒரு சகாப்தத்தில் சர்வதேச வர்க்கப் போராட்டத்தின் அரசியல் இயக்கவியல் குறித்த ஒரு விஞ்ஞானபூர்வமான பகுப்பாய்வை வழங்கியது. ட்ரொட்ஸ்கிசம் உண்மையான வெளிப்பாடாக இருக்கும் மார்க்சிச நரம்பின் யதார்த்தத்தைப் புரிந்துகொள்வது மட்டுமே பாட்டாளி வர்க்கம் அதன் நிலையை உணர உதவும்.

30. சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர்கள் (IYSSE) அமைப்பானது நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இளைஞர் பிரிவாகும். இந்த இயக்கத்தின் முக்கிய பணி, சோசலிசத்திற்கான அவர்களின் பொதுவான போராட்டத்தில் இளைஞர்களுக்கும் தொழிலாள வர்க்கத்திற்கும் இடையே ஒரு தொடர்பை உறுதிப்படுத்துவதாகும். இளைஞர்களைப் பொறுத்த வரையில், மூன்றாம் உலகப் போர் தொடங்கக்கூடும் என்பதால், அவர்களின் எதிர்காலம் குறித்த கேள்வி முன்னெப்போதையும் விட இப்போது மிக முக்கியமானதாக உள்ளது.

31. இளைஞர்கள் தங்களுக்கு ஒரு சிறந்த எதிர்காலத்தை விரும்பினால், அவர்கள் அதற்காக போராட வேண்டும். அவர்களது வருங்காலத்திற்கான போராட்டம் தவிர்க்க முடியாமல் முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டமாக மாறும், அது இளைஞர்களை ஒரு சோசலிச முன்னோக்கிற்கு இட்டுச் செல்லும். ஆனால், இளைஞர்களின் போராட்டம் தனிமைப்படுத்தப்படக் கூடாது, இளைஞர்கள் வருங்காலத்திற்கான போராட்டத்தில் தங்கள் முக்கிய கூட்டாளி தொழிலாள வர்க்கம்தான் என்பதை உணர வேண்டும்.

32. சர்வதேச அளவில் இளைஞர்களை ஒழுங்கமைப்பதும் ஒருங்கிணைப்பதுமே சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர்கள் (IYSSE) அமைப்பின் நோக்கமாகும், தற்போதைய விவகாரங்களுக்குப் பொருத்தமான மிக முக்கியமான தத்துவார்த்த மற்றும் வரலாற்று கேள்விகளை இளைஞர்களுக்கு விளக்காமல் இது சாத்தியமில்லை. இளைஞர் இயக்கம் ஏகாதிபத்தியம் மற்றும் போருக்கு எதிரான சுயாதீனமான தொழிலாளர் இயக்கத்தின் ஒரு முக்கிய பாகமாகும். 

33. YGBL இன் இப்போதைய பணிகள், ரஷ்யாவிலும் ஏனைய முன்னாள் சோவியத் குடியரசுகளிலும் ICFI மற்றும் IYSSE குறித்தும், இந்த அமைப்புகள் மற்ற நாடுகளில் ஈடுபட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் அடிப்படை அறிவைப் பெற்றுள்ளது என்ற ஒரு தெளிவான புரிதலை அடிப்படையாகக் கொண்டவையாகும். ஆகவே, முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் வெகுஜனங்களின் நனவில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மற்றும் IYSSE இன் செல்வாக்கை விரிவாக்க YGBL முனையும்.

34. YGBL இன் அறிக்கைக்கு நீங்கள் ஒற்றுமையைத் தெரிவித்தால், ரஷ்யா, உக்ரேன் மற்றும் பிற முன்னாள் சோவியத் குடியரசுகளில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மற்றும் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர்கள் அமைப்பின் பிரிவுகளைக் கட்டியெழுப்புவதற்கான எங்கள் போராட்டத்தில் எங்களுடன் இணையுங்கள். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மற்றும் IYSSE பிரிவுகளைக் கட்டியெழுப்புவதானது, புரட்சிகரத் தலைமை நெருக்கடியைத் தீர்ப்பதையும் உலகெங்கிலும் ஒரு சோசலிசப் புரட்சியைக் கொண்டுவருவதையும் நோக்கிய ஒரு அத்தியாவசியமான படியாக இருக்கும்.

Loading