முன்னோக்கு

அந்தோனி ஃபௌசி, வூஹான் ஆய்வகப் பொய் மற்றும் பொது சுகாதாரத்தின் மீதான இருகட்சிப் போர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

கடந்த திங்களன்று நடைபெற்ற கொரோனா வைரஸ் தொற்றுநோய் தொடர்பான குடியரசுக் கட்சியின் தலைமையிலான நாடாளுமன்ற தேர்வுக் குழுவின் விசாரணை, டாக்டர். அந்தோனி ஃபௌசியின் சாட்சியத்துடன், ஒட்டுமொத்த அமெரிக்க அரசியல் ஸ்தாபனத்தால் நடத்தப்பட்ட அறிவியல் மற்றும் பொது சுகாதாரத்தின் மீதான இருகட்சிப் போரில் ஒரு புதிய வீழ்ச்சியைக் குறித்தது.

கோவிட்-19 பெருந்தொற்று நோயை உருவாக்க ஃபௌசி சீன அரசாங்கத்துடன் இணைந்து செயல்பட்டதாகவும், பின்னர் 1 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்கர்களின் மரணங்களில் அவரது சொந்தமான உடந்தை இருந்ததை மூடிமறைக்க ஏற்பாடு செய்தார் என்றும் கூறி, குடியரசுக் கட்சியினர் அவர்களின் பாசிசவாத அரசியலுக்கு எடுத்துக்காட்டாக, வூஹான் ஆய்வகச் சதி தத்துவத்தை வெட்கமின்றி ஊக்குவித்தனர். ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மற்றும் கண்டனங்கள் நிறைந்த இந்த மெக்கார்த்திய போலி விசாரணை, விஞ்ஞானிகளையும் தற்போதைய கோவிட்-19 பெருந்தொற்று நோய் மற்றும் எதிர்கால தொற்றுநோய்களின் அச்சுறுத்தலுக்கு எதிராக பொது சுகாதார நடவடிக்கைகளுக்காக வாதிடும் அனைவரையும் அச்சுறுத்துவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது.

ஜூன் 3, 2024 திங்கட்கிழமையன்று, தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்கள் நிறுவனத்தின் (National Institute of Allergy and Infectious Diseases) முன்னாள் இயக்குநரான டாக்டர் அந்தோனி ஃபௌசி, வாஷிங்டனில் உள்ள கேபிடோலில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோய் குறித்த சபையின் மேற்பார்வை மற்றும் பொறுப்புக்கூறல் குழு தேர்வுக் குழுவின் விசாரணையின் போதான காட்சி. [AP Photo/J. Scott Applewhite]

ஒரு அப்பட்டமான ஆத்திரமூட்டலில், டொனால்ட் ட்ரம்பின் ஜனவரி 6, 2021 ஆட்சிக்கவிழ்ப்பு சதி முயற்சியில் சம்பந்தப்பட்ட இரண்டு நன்கறியப்பட்ட பாசிசவாதிகள் ஃபௌசி சாட்சியமளிக்கையில் திரையில் தெரியும் வகையில் நேரடியாக அவருக்குப் பின்னால் அமர்ந்திருந்தனர். அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதியில் பங்கெடுத்ததற்காக சமீபத்தில் மூன்றாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பிராண்டன் ஃபெலோஸ் மற்றும் ஆட்சிக்கவிழ்ப்பு சதிகாரரும் ட்ரம்பின் கூட்டாளியுமான இவான் ரைக்லின் ஆகியோர் ஆவர். “என்னிடம் ஒரு ஆழமான அரசு இலக்கு பட்டியல் உள்ளது, அவர்கள் அனைவருக்காகவும் நான் வருகிறேன்” என்று இவான் ரைக்லின் ஒருமுறை கூறியிருந்தார்.

தனது சாட்சியத்தின் போது, அவரும் அவரது குடும்பத்தினரும் நம்பகமான மரண அச்சுறுத்தல்களின் இலக்காக இருந்ததாக ஃபௌசி குறிப்பிட்டார். இதுபோன்ற அச்சுறுத்தல்களைத் தூண்டியவர்களில் ஸ்டீவ் பானனும் ஒருவர். அவர் நவம்பர் 2020 இல் ஃபௌசியின் தலையைத் துண்டிக்க அழைப்பு விடுத்தார். போருக்கான அடித்தளத்தை சித்தாந்தரீதியில் தயாரிப்பதற்காக இந்த பெருந்தொற்று நோய்க்கு சீன அரசாங்கத்தை குற்றஞ்சாட்டிய வெளிநாட்டவர் விரோத சதி தத்துவமான வூஹான் ஆய்வக பொய்யின் அசல் தூதராகவும் பானன் இருந்தார்.

கோவிட்-19 பொது சுகாதார அவசரநிலை (PHE) அறிவிப்பை பைடென் நிர்வாகம் அகற்றி (பெருந்தொற்று நோய்க்கான எந்தவொரு உத்தியோகபூர்வ விடையிறுப்பின் சவப்பெட்டியில் அடிக்கப்பட்ட இறுதி ஆணி) வெறும் ஒரு வருடத்திற்குப் பின்னரும், மற்றும் சமீபத்திய நோயெதிர்ப்பை-தவிர்க்கும் KP.2 மற்றும் KP.3 திரிபு வகைகளால் உந்தப்பட்ட அமெரிக்காவில் வெகுஜன தொற்றுநோயின் புதிய அலை வளர்ந்து வரும் பின்னணியிலும் திங்களன்று நடந்த விசாரணை நடந்தது. கழிவுநீர் தரவுகளை அடிப்படையாகக் கொண்ட மாதிரிகளின்படி, ஒவ்வொரு நாளும் 190,000-440,000 அமெரிக்கர்கள் தற்போது கோவிட்-19 ஆல் பாதிக்கப்பட்டு வருகின்றனர், இது தினசரி பல்லாயிரக்கணக்கான புதிய நெடுங் கோவிட் தொற்றுகளுக்கு வழிவகுத்து வருகிறது.

அதே நேரத்தில், H5N1 “பறவைக் காய்ச்சல்” உலகளவில் டசின் கணக்கான உயிரினங்களிடையே பரவி வருகிறது மற்றும் மனித மக்கள்தொகையில் பரவ அச்சுறுத்துகிறது. இது கோவிட்-19 இன் சமூக தாக்கங்களை சிறியதாக்கக்கூடிய அளவிற்கு ஒரு பெருந்தொற்று நோயை ஏற்படுத்தும் சாத்தியக்கூறைக் கொண்டுள்ளது. பறவைக் காய்ச்சல் வரலாற்று ரீதியாக மனிதர்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமான இறப்பு விகிதத்தைக் கொண்டுள்ளது.

இந்த சமகால யதார்த்தம் எதுவும் விசாரணையில் எழுப்பப்படவில்லை. ஏனென்றால் இரண்டு முதலாளித்துவ அரசியல் கட்சிகளும் நிரந்தரமான பாரிய தொற்று, பலவீனப்படுத்தல் மற்றும் மரணம் என்ற “என்றென்றும் கோவிட்” கொள்கையை அமூல்படுத்த ஒன்றிணைந்துள்ளன. அதற்கு பதிலாக, எதிர்கால பெருந்தொற்று நோய்களைத் தடுப்பதற்கான பொது சுகாதாரத்தின் தகைமையைப் பலவீனப்படுத்தும் பொருட்டு இந்த பெருந்தொற்று நோயின் வரலாற்றைத் திருத்தி எழுதுவதே ஜனநாயகக் கட்சியினரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட துணைக்குழுவின் நோக்கமாகும்.

முகக்கவசம் மற்றும் தடுப்பூசி ஆணைகள், சமூக தொலைதூர வழிகாட்டுதல்கள், தற்காலிக பள்ளி மற்றும் வேலையிட மூடல்கள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய கோவிட்-19 பரவுவதை மெதுவாக்குவதற்காக செயல்படுத்தப்பட்ட ஒவ்வொரு மட்டுப்படுத்தப்பட்ட பொது சுகாதார நடவடிக்கைகளின் செல்லுபடியாகும் தன்மை குறித்து ஃபெளசியிடம் கேள்வி எழுப்ப திங்களன்று நடந்த விசாரணையின் பெரும்பகுதி அர்ப்பணிக்கப்பட்டது. ஒவ்வொரு விடயத்திலும், இந்த நடவடிக்கைகளின் “பொருளாதார செலவுகள்” தாங்க முடியாதவையாக கருதப்பட்டன, அதேவேளையில் அவற்றின் உயிர் காக்கும் விளைவுகள் முற்றிலும் மறுக்கப்பட்டன, இதற்கு மாறாக நிரூபிக்கப்பட்ட ஏராளமான விஞ்ஞான ஆய்வுகள் இருந்தபோதிலும் இது நடந்தேறியது.

இந்த விசாரணை குறித்த பெரும்பாலான ஊடக செய்திகள், பள்ளிகள் மற்றும் வேலையிடங்களில் பெருந்தொற்று நோயின் தொடக்கத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆறு அடி சமூக இடைவெளி வழிகாட்டுதல்கள் “தரவுகளின் அடிப்படையில் இல்லாத ஒரு அனுபவ முடிவு” என்று ஃபெளசி ஒப்புக் கொண்டதன் மீது கவனம் செலுத்தியுள்ளன.

முழு விசாரணையிலும் பெருந்தொற்று நோய் கொள்கை குறித்த ஒரே சரியான விமர்சனம் இதுவாக இருக்கலாம், இருப்பினும் ஃபெளசி அவரே குறிப்பிட்டதைப் போல, இந்த கொள்கை நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் (CDC) வரம்பின் கீழ் வருகிறது, அதை அவர் மேற்பார்வையிடவில்லை.

உண்மையில், இந்த ஆறடி சமூக இடைவெளி ஒழுங்குமுறையானது சுவாச நோய்க்கிருமிகளின் நீர்த்துளிகள் பரவுதல் பற்றிய காலாவதியான கருத்துக்கள் மற்றும் மிக உயர்ந்த மட்டங்களில் காற்றின் மூலம் பரவும் விஞ்ஞானத்தை வேண்டுமென்றே மறைத்தல் ஆகியவற்றிலிருந்து உருவானது. பெருந்தொற்று நோயின் தொடக்கத்தில், ஏப்ரல் 2020 இல், உலகின் முன்னணி காற்றில் பரவும் துகள்கள் ஆராயும் இயற்பியலாளர்கள் (aerosol physicists) மற்றும் பிற விஞ்ஞானிகள் உலக சுகாதார அமைப்புக்கு (WHO) தெளிவாக விளக்கினர். கோவிட்-19 ஐ ஏற்படுத்தும் SARS-CoV-2 வைரஸ், காற்றின் (aerosol) மூலம் பரவுகிறது, அவை மோசமான காற்றோட்ட நிலைமையுள்ள உட்புற இடங்களில் குவிகின்றன.

இந்த விஞ்ஞானிகளால் போதுமான மற்றும் தொடர்ச்சியான எச்சரிக்கைகள் இருந்தபோதிலும், உலக சுகாதார அமைப்பும் (WHO) பிற பொது சுகாதார நிறுவனங்களும் காற்றின் மூலம் பரவும் விஞ்ஞானம் குறித்து உலக மக்களுக்கு கல்வி கற்பிக்க மறுத்துவிட்டன அல்லது அனைத்து கட்டிடங்களிலும் சுத்தமான உட்புற காற்றை வழங்க உள்கட்டமைப்பை நிறுவனங்கள் புதுப்பிக்க வேண்டும் என்று கோர மறுத்துவிட்டன. கோவிட்-19 பெருந்தொற்று நோயின் மிகப் பெரிய உண்மையான குற்றங்களில் இதுவும் ஒன்றாகும்.

குடியரசுக் கட்சியினரின் கட்டுக்கடங்காத அறிக்கைகள் மற்றும் ஆத்திரமூட்டல்களுக்கு விடையிறுப்பாக, பிரதிநிதிகள் சபையின் ஜனநாயகக் கட்சியினர் ஃபௌசியை ஒரு மதிப்புமிக்க அரசியல் சொத்தாக அவர்கள் பார்க்கின்றனர். பொது சுகாதார நடவடிக்கைகளை குடியரசுக் கட்சியினர் இழிவுபடுத்துவதை எதிர்க்க அவர்கள் எதுவும் செய்யவில்லை என்பதோடு, இந்த பெருந்தொற்று நோயின் போது ஃபெளசி இழைத்த உண்மையான சமூக குற்றங்கள் குறித்து எந்த இடதுசாரி விமர்சனத்தையும் வழங்கவில்லை. இது ஏனென்றால் பொது சுகாதாரத்தை விட தனியார் இலாபம் முன்னுரிமை பெற வேண்டும் என்ற குடியரசுக் கட்சியினருடன் ஜனநாயகக் கட்சியினர் அடிப்படை உடன்பாட்டில் உள்ளனர்.

இந்த பெருந்தொற்று நோய் முழுவதிலும், ஒவ்வொரு முக்கிய கொள்கை முடிவையும், முதலில் ட்ரம்பின் கீழ், ஆனால் குறிப்பாக பைடெனின் கீழ், பெருந்தொற்று நோய்க்கான அனைத்து உத்தியோகபூர்வ விடையிறுப்புகளையும் முற்றிலுமாக அகற்றுவதை நியாயப்படுத்தி, ஒவ்வொரு முக்கிய கொள்கை முடிவையும் சட்டபூர்வமாக்குவதில் ஃபெளசி ஒரு மத்திய அரசியல் பாத்திரம் வகித்துள்ளார். ஜனவரி 2022 இல், ஓமிக்ரான் திரிபு வகையால் தூண்டப்பட்ட வெகுஜன இறப்புகளின் இரண்டாவது பெரிய அலைக்கு மத்தியில், ஃபெளசி, “ஒமிக்ரான் அனைவரும் எதிர்பார்க்கும் நேரடி வைரஸ் தடுப்பூசியாக இருக்கப் போகிறதா இல்லையா என்பது ஒரு திறந்த கேள்வி” என்று கூறினார்.

பெருந்தொற்று நோயின் மூன்றாவது குளிர்காலத்திற்கு மத்தியில், 2022 ஆம் ஆண்டின் இறுதியில் ஃபெளசி அரசாங்கத்தில் இருந்து ஓய்வு பெற்றார். பைடென் ஐந்து மாதங்களுக்குப் பிறகு, மே 2023 இல் COVID-19 பொது சுகாதார அவசரநிலையை (PHE) முடித்தபோது, ஃபெளசி எந்த விமர்சனத்தையும் வெளியிடவில்லை. ஆகஸ்ட் 2023 இல் பிபிசி உடனான நேர்காணலில், வயதானவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் மற்றும் ஊனமுற்றவர்கள் கோவிட்-19 இலிருந்து “ஓரம்கட்டப்படுவார்கள்” என்று ஃபெளசி கூறினார், இது முன்னணி பெருந்தொற்று அதிகாரிகளிடம் இருந்து வந்த இனத்தூய்மைவாத (eugenicist - இது பெரும்பாலும் விரும்பத்தக்க பண்புகளைக் கொண்ட மக்களின் இனப்பெருக்கத்தை ஊக்குவிப்பது மற்றும் குறைவான விரும்பத்தக்க பண்புகளைக் கொண்ட மக்களின் இனப்பெருக்கத்தைக் குறைப்பதை உள்ளடக்கியது) அறிக்கைகளின் வரிசையில் சமீபத்தியது.

ஃபௌசி எப்போதுமே ஒரு அரசியல் ஆளுமையாகவே இருந்து வந்துள்ளார். அமெரிக்க முதலாளித்துவத்தின் முற்றிலும் குற்றகரமான பெருந்தொற்று நோய் விடையிறுப்புக்கு ஒரு சட்டபூர்வத்தன்மையை வழங்குவதே அவரது நோக்கமாக இருந்து வந்துள்ளது.

எதிர்கால பெருந்தொற்று நோய்களைத் தடுக்க செயல்படும் ஒரு அரசு சாரா அமைப்பான ஈகோஹெல்த் அலையன்ஸ் (EcoHealth Alliance) நிறுவனத்திற்கு நிதியுதவியை நிறுத்துவதற்கும் தடை செய்வதற்கும் அமெரிக்க சுகாதார மற்றும் மனித சேவைகள் துறை (US Department of Health and Human Services - HHS) கடந்த மாதம் எடுத்த முடிவுடன் ஃபெளசி தனது உடன்பாட்டைக் கூறியபோது, திங்களன்று நடந்த விசாரணையின் போது மிகவும் மோசமான தருணமாக அது அவருக்கு இருந்தது.

ஈகோஹெல்த் அலையன்ஸ் (EcoHealth Alliance) மற்றும் அதன் தலைவர் டாக்டர் பீட்டர் டாசாக் ஆகியோர் வூஹான் ஆய்வக சதி கோட்பாட்டின் மைய இலக்காக உள்ளனர். இது வூஹான் வைரசு ஆய்வகம் (Wuhan Institute of Virology) சீன விஞ்ஞானிகளுடன் சேர்ந்து SARS-CoV-2 ஐ இந்த குழு வடிவமைத்ததாக வலியுறுத்துகிறது.

ஈக்கோஹெல்த் அலையன்ஸ் (EcoHealth Alliance) அல்லது டாசாக் (Daszak) பற்றி கூறப்பட்ட எந்தவொரு ஆதாரமற்ற கூற்றையும் உறுதிப்படுத்த ஒரு துளி ஆதாரம் கூட இல்லை. மேலும் நம்பகமான அறிவியல் இதழ்களில் வெளியிடப்பட்ட அனைத்து முக்கிய ஆவணங்களும், சீனாவின் வூஹானில் உள்ள ஒரு ஈரமான சந்தையில் ஏற்பட்ட ஒரு நோய் தொற்று நிகழ்வின் மூலம் சார்ஸ்-கொரோனா வைரஸ்-2 (SARS-CoV-2) மனிதர்களிடையே பரவத் தொடங்கியது என்பதைக் குறிக்கிறது.

கடந்த மாதம் டாசாக் இதே துணைக்குழுவின் முன் கொண்டுவரப்பட்டு, காட்டுமிராண்டித்தனமான இருகட்சி அவதூறு மற்றும் பலிகடாவாக்கலுக்கு உட்படுத்தப்பட்டார். இதையொட்டி HHS ஆனது ஈக்கோஹெல்த் அலையன்ஸிற்கான (EcoHealth Alliance) நிதியை வெட்டும் முடிவை எடுத்தது. இந்த பிற்போக்குத்தனமான நடவடிக்கைக்கு தனது ஆதரவுக் குரல் கொடுப்பதில், ஃபௌசி தனது முன்னாள் டாசாக் சகா மற்றும் டசின் கணக்கான கொள்கை மற்றும் தைரியமான விஞ்ஞானிகளை ஓநாய்களுக்கு வீசி எறிந்துள்ளார்.

கடந்த மூன்று மாதங்களாக அமெரிக்கா முழுவதிலும் கறவை மாடுகளிடையே H5N1 “பறவைக் காய்ச்சல்” பரவலாகப் பரவி வருகின்ற நிலைமைகளின் கீழ், டாசாக் மற்றும் ஈக்கோஹெல்த் அலையன்ஸ் (EcoHealth Alliance) மீதான இருகட்சி தாக்குதல்கள் குறிப்பாக அச்சுறுத்துவதாக உள்ளன. கடந்த வாரம், மிச்சிகனில் ஒரு பண்ணைத் தொழிலாளி சுவாச அறிகுறிகளுடன் பறவைக் காய்ச்சலுக்கு உட்பட்டதாக பரிசோதிக்கப்பட்டார். இது வைரஸ் உருவாகி வருகிறது என்பதற்கான அறிகுறியாகும். மேலும் இது மனிதனிடமிருந்து மனிதனுக்கு காற்றில் பரவும் திறனை உருவாக்கக்கூடும் என்பதற்கான அறிகுறியாகும். முன்னெப்போதையும் விட, வளர்ந்து வரும் தொற்று நோய்களின் அச்சுறுத்தலை நெருக்கமாக கண்காணிக்கவும் பதிலளிக்கவும் ஈக்கோஹெல்த் அலையன்ஸ் (EcoHealth Alliance) போன்ற அமைப்புகளுக்கு முழுமையாக நிதியளிக்கப்பட வேண்டும், இந்த தொற்று நோய்கள் வரவிருக்கும் ஆண்டுகளில் காலநிலை மாற்றம் ஆழமடையும் போது மட்டுமே துரிதப்படுத்தப்படும்.

2024 அமெரிக்க தேர்தல்களில், விஞ்ஞானம் மற்றும் பொது சுகாதாரம் மீதான இருகட்சி தாக்குதலுக்கு ஒரு இடதுசாரி எதிர்ப்பை முன்னெடுப்பது ஒருபுறம் இருக்கட்டும், ஃபௌசி மீதான விசாரணை குறித்து கருத்து தெரிவித்த ஒரே ஜனாதிபதி வேட்பாளர் சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்க) ஜனாதிபதி வேட்பாளர் ஜோசப் கிஷோர் மட்டுமே. இது குறித்து கிஷோர் தனது ட்விட்டர்/எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இலாபத்தை விட உயிர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் ஒரு சமூகத்திற்கான போராட்டம் சோசலிசத்திற்கான போராட்டமாகும். ஒவ்வொன்றையும் தனியார் இலாபத்திற்கும், முதலாளித்துவ செல்வந்த தட்டுக்களான தன்னலக்குழுவின் செல்வவளம் மற்றும் தனிச்சலுகைகளுக்கும் அடிபணியச் செய்வதை முதலாளித்துவம் அடிப்படையாகக் கொண்டுள்ளது. இந்த பெருந்தொற்று நோயின் போது பாரிய உயிரிழப்புகளை அவை இயல்பாக்கியுள்ள நிலையில், ஆளும் உயரடுக்குகள் இப்போது காஸாவில் இனப்படுகொலையையும் ரஷ்யாவுக்கு எதிரான அணு ஆயுதப் போரையும் இயல்பாக்கி வருகின்றன.

அமெரிக்காவிலும் உலகெங்கிலும் பொருளாதார வாழ்வின் சோசலிச மறுஒழுங்கமைப்பின் பாகமாக, சமூகமயப்படுத்தப்பட்ட மருத்துவத்திற்காக சோசலிச சமத்துவக் கட்சி போராடுகிறது. சுகாதாரப் பாதுகாப்பு என்பது ஒரு சமூக உரிமையாகும், அது அனைவருக்கும் இலவசமாக கிடைக்க வேண்டும். மிகப் பெரும் மருத்துவ நிறுவனங்கள் ஜனநாயக கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும். ஒட்டுண்ணித்தனமான காப்பீட்டு தொழில்துறை —இது முற்றிலும் மக்களுக்கு மருத்துவக் கவனிப்பை அணுகுவதை மறுப்பதற்காக இருக்கின்றது— ஒழிக்கப்பட்டு உலகளாவிய மருத்துவ பராமரிப்பைக் கொண்டு பிரதியீடு செய்யப்பட வேண்டும்...

கோவிட் -19 மற்றும் பிற வைரஸ்களை உலகளவில் ஒழிக்கும் கொள்கைக்காக சோசலிச சமத்துவக் கட்சி போராடுகிறது. கொடிய நோய்க்கிருமிகளை அகற்றுவதற்கும் ஒழிப்பதற்கும் தேவையான பொது சுகாதார நடவடிக்கைகள் நன்கு அறியப்பட்டவையாக இருக்கின்றன. முதலாளித்துவ அமைப்புமுறையும் ஆளும் தன்னலக்குழுவின் நலன்களும்தான் அவைகள் நடைமுறைப்படுத்தப்படுவதைத் தடுத்து வருகின்றன.

இந்த பெருந்தொற்று நோயின் போது உலகெங்கிலும் 27 மில்லியனுக்கும் அதிகமான மக்களின் தேவையற்ற மரணங்களை மேற்பார்வையிட்ட அதே முதலாளித்துவ ஆளும் உயரடுக்குகள் இப்போது மனிதகுலத்தை மூன்றாம் உலகப் போருக்குள் மூழ்கடித்துள்ளன. கோவிட்-19 ஐ எதிர்கொள்வதற்கும் எதிர்கால பெருந்தொற்று நோய்களைத் தடுப்பதற்கும் பதிலாக, சமூகத்தின் அனைத்து ஆதாரவளங்களும் போர் மற்றும் ஒரு சிறிய நிதியியல் செல்வந்த தன்னலக்குழுவின் தனிப்பட்ட செல்வவளப்படுத்தலில் வீணடிக்கப்படுகின்றன. காட்டுமிராண்டித்தனத்தை நோக்கிய இந்த வீழ்ச்சியை, சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் தலைமையில், முதலாளித்துவ சமூகத்தை சோசலிச சமூக முறையால் தூக்கிவீசுவதன் மூலமாக மட்டுமே தடுத்து நிறுத்த முடியும்.

Loading