பைடென், மக்ரோன் மற்றும் செலென்ஸ்கி ஆகியோர் நோர்மண்டி தரையிறக்க நினைவுவேந்தலில் ரஷ்யாவுக்கு எதிரான போர் அச்சுறுத்தல்களை தீவிரப்படுத்துகின்றனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

வெள்ளிக்கிழமை, ஜூன் 7, 2024 அன்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் பாரிஸில் உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கியுடன் கைகுலுக்குகிறார். [AP Photo/Evan Vucci]

இரண்டாம் உலகப் போரின் போது நோர்மண்டியில் நேச நாடுகளின் தரையிறக்க நினைவேந்தலின் 80 வது ஆண்டு நிறைவை உத்தியோகபூர்வமாக நினைவுகூர்ந்ததுக்கு மறுநாள், உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் மற்றும் பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஆகியோரை பிரான்சில் கொண்டாட்டத்தைத் தொடர்வதற்காக சந்தித்தார்.

உக்ரேனில் நேட்டோவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான இரண்டு ஆண்டு கால போரில் ஒரு ஆபத்தான கட்டத்தில் இந்த சந்திப்புகள் வந்துள்ளன. நேட்டோ ஆதரவிலான உக்ரேனிய ஆட்சியானது இராணுவ வீழ்ச்சியை முகங்கொடுத்து வருகையில், நேட்டோ ரஷ்யாவைத் தாக்க உக்ரேனுக்கு நீண்ட தூர ஏவுகணைகளைக் கொடுத்து வருவதுடன், உக்ரேனுக்கு நேரடியாக துருப்புகளை அனுப்பவும் அச்சுறுத்தி வருகிறது. நேற்று, செலென்ஸ்கியின் உதவியுடன், பைடெனும் மக்ரோனும், ஐரோப்பாவை ஒரு புதிய உலகப் போருக்குள் மூழ்கடிக்க அச்சுறுத்தும் ரஷ்யாவுக்கு எதிரான அவர்களின் தீவிரப்பாட்டை நியாயப்படுத்த, 1944 ஜூன் 6 இல் நோர்மண்டியில் அமெரிக்க-பிரிட்டிஷ்-கனேடிய தரையிறக்கங்களை சிடுமூஞ்சித்தனமாக கையிலெடுக்க முயன்றனர்.

ரஷ்யாவுடனான நேட்டோ போரை நியாயப்படுத்த நோர்மண்டி தரையிறக்கங்களை பிரார்த்திப்பது, வரலாற்று பொய்மைப்படுத்தல்களை அடிப்படையாகக் கொண்ட அரசியல் பொய்களாகும். இது நேற்று பிரெஞ்சு தேசிய பாராளுமன்றத்தில் செலென்ஸ்கி வழங்கிய உரையுடன் தொடங்கியது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினை ஹிட்லருடன் அப்பட்டமாக ஒப்பிட்ட செலென்ஸ்கி, தனது ஆட்சிதான் நோர்மண்டி போர்களின் வாரிசு என்று கூறினார்.

செலென்ஸ்கி பாராளுமன்றத்தில் பின்வருமாறு கூறினார்: “உண்மையிலேயே வெற்றிகொள்ளப்பட்ட இந்தப் போரை நாங்கள் இங்கு நினைவுகூருகிறோம், அதில் பங்கேற்றவர்களின் வாரிசுகளாக இருப்பதில் நாங்கள் பெருமைப்படுகிறோம்.”

இன்று புட்டின் “இந்தப் போரில் வெல்ல முடியுமா” என்று கேட்டதற்கு, செலன்ஸ்கி தனது சொந்த கேள்விக்கு பதிலளித்தார்: “இழக்க எங்களுக்கு உரிமை இல்லை. 80 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த போரைப் போலவே இந்தப் போரும் பரவலாம். … 1930களில், ஹிட்லர் ஒன்றன் பின் ஒன்றாக கோட்டைத் தாண்டினார். புட்டினும் அதையே செய்கிறார்.”

“ஏற்கனவே சிரியாவை அழித்துவிட்ட புட்டின், சாஹேலை சீர்குலைத்து வருகிறார்” என்று செலன்ஸ்கி புட்டினை கண்டித்தார். பிரெஞ்சு சிப்பாய்கள் மற்றும் அணுவாயுதத்திறன் கொண்ட மிராஜ் 2000 போர் விமானங்களை அனுப்புவதற்கான மக்ரோனின் வாக்குறுதி உட்பட, உக்ரேனுக்கு பிரெஞ்சு ஆயுத விநியோகங்களைப் பாராட்டிய பின்பு, “இந்தப் போரில், கலாச்சாரம் மற்றும் சர்வதேச சட்டம் மனிதகுலத்தின் பக்கத்தை தயக்கமின்றி தேர்ந்தெடுத்ததற்காக பிரான்சுக்கு நன்றி” என்று தனது உரையை நிறைவு செய்தார்.

இது அதிவலது போர் பிரச்சாரமாகும். ஹிட்லருடன் புட்டின் குறித்தும், ரஷ்யாவுக்கு எதிரான நேட்டோவின் போர் மற்றும் நாசி ஜேர்மனிக்கு எதிரான நேச நாடுகளின் போர் குறித்தும் செலென்ஸ்கி வரைந்த சமாந்தரங்கள், ஐரோப்பிய வரலாற்றின் ஒட்டுமொத்த போக்கையும் பொய்மைப்படுத்துகின்றன. தற்போதைய போரில், ரஷ்யா அல்ல, மாறாக நேட்டோ ஏகாதிபத்திய சக்திகள் தான் மிகவும் ஆக்ரோஷமான, பிற்போக்குத்தனமான பாத்திரத்தை வகித்து வருகின்றன.

ரஷ்யாவானது, நாஜி ஜேர்மனியைப் போலன்றி, கோடிக்கணக்கானவர்களின் உயிர்களைப் பலிகொண்ட ஒரு வரிசையான இராணுவ ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் ஐரோப்பா முழுவதையும் வென்றுள்ள ஒரு ஏகாதிபத்திய சக்தி அல்ல. 1991 இல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதற்குப் பின்னர், நேட்டோ கூட்டணி, அவ்வாறு செய்ய மாட்டோம் என்று ரஷ்ய அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளையும் மீறி, ரஷ்யாவின் எல்லைகள் வரை ஆக்ரோஷமாக தமது படைகளை அது விரிவுபடுத்தியுள்ளது. இப்போது, நேட்டோவானது ரஷ்ய மண்ணில் தாக்குதல்களுக்காக உக்ரேனில் இருந்து அதன் ஏவுகணைகளை ஏவத் தயாராக உள்ளது. மேலும், ரஷ்யாவை எதிர்த்துப் போரிட அதன் இராணுவங்களை உக்ரேனுக்கு அனுப்ப அச்சுறுத்தியும் வருகிறது.

சிரியா மற்றும் சாஹெல் விவகாரத்தில் புட்டினின் பாத்திரம் குறித்த செலென்ஸ்கியின் குறிப்புகள், பிரெஞ்சு ஏகாதிபத்தியம் ஏன் இந்தப் பிரமாண்ட பொறுப்பற்ற கொள்கையில் இறங்கியது என்பதற்கான சில காரணங்களை சுட்டிக்காட்டுகின்றன. 2011 இல் சிரியாவிலும் 2013 இல் மாலியிலும் நேட்டோவும் பிரான்சும் தொடங்கிய போர்கள் ஆட்சி மாற்றத்திற்கான அவற்றின் நோக்கங்களை எட்டத் தவறிய பின்னர், இந்த நாடுகளின் அரசாங்கங்கள் தங்களுக்கு உதவ ரஷ்ய துருப்புகளை அழைத்துள்ளன. இது பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தை சீற்றப்படுத்துகிறது. அது அதன் முன்னாள் காலனித்துவ சாம்ராஜ்யத்தில் இந்த நாடுகளை கட்டுப்படுத்தும் உரிமை பெற்றிருப்பதாக நம்புகிறது.

பிரான்ஸ் “கலாச்சாரம் மற்றும் சர்வதேச சட்டத்தை” ஆதரிக்கிறது என்ற செலென்ஸ்கியின் கூற்று ஒரு அப்பட்டமான பொய்யாகும். காஸாவில் நடந்து வரும் இஸ்ரேலிய இனப்படுகொலையை மக்ரோனின் அரசாங்கம் இடைவிடாது ஆதரித்து வருகிறது.

அனைத்திற்கும் மேலாக, உக்ரேன் மீதான புட்டினின் 2022 படையெடுப்பு எவ்வளவு திவாலானதாகவும் பிற்போக்குத்தனமானதாகவும் இருந்தபோதிலும், செலென்ஸ்கியின் ஆட்சியானது உக்ரேனில் ஸ்டீபன் பண்டேரா தலைமையிலான நாசி-ஒத்துழைப்பு சக்திகளின் நவ-பாசிசவாத சந்ததியினரை அடிப்படையாகக் கொண்டது என்ற உண்மையை அது மாற்றிவிடாது. பண்டேராவை செலென்ஸ்கியின் அரசாங்கத்தில் உள்ள பல உயர்மட்ட அதிகாரிகள் மட்டுமல்ல, மாறாக உக்ரேனில் ரஷ்ய இராணுவத்தை எதிர்த்துப் போரிடும் பல உக்ரேனிய ஆயுதக் குழுக்களும் நவ-நாசி படைப்பிரிவுகளாக இருக்கின்றன.

உக்ரேனிய திடீர் தாக்குதல் துருப்புக்களின் நவ-நாசி விசுவாசம், பிரெஞ்சு ஊடக பிரச்சாரத்தில் வழக்கமாக மறுக்கப்பட்டு வருகிறது. க்ரூஸ் பிராந்தியத்தில் உள்ள பிரெஞ்சு இராணுவத் தளமானது, உக்ரேனின் அசோவ் பட்டாலியனில் பெரிய “SS” பச்சை குத்தி விளையாடும் நவ-நாசிகளுக்கு பயிற்சி அளித்து வருவதாக கடந்த மாதம் தகவல்கள் வெளிவந்தன.

அசோவ் பட்டாலியனின் அனுதாபங்கள், அவர்கள் 1944 க்கு கொண்டு செல்லப்பட்டால், நோர்மண்டியில் தரையிறங்கும் துருப்புக்களுக்கு எதிராக இருக்காது. அசோவ் பட்டாலியன் அதன் சின்னமாக நாஜி SS  பேரரசுப் (Das Reich) பிரிவின் சின்னமான ஓநாய் தேவதையைக் (Wolfsangel) கொண்டுள்ளது. இப்பிரிவு ஜூன் 10, 1944 அன்று பிரெஞ்சு கிராமமான Ouradour-sur-Glane இல் படுகொலை செய்தது. இது, சோவியத் ஒன்றியத்தில் SS மேற்கொண்ட படுகொலைகளை முன்மாதிரியாகக் கொண்டது. க்ரூஸ் அருகிலுள்ள லிமோசின் பிராந்தியம் வழியாக, வடக்கே நோர்மண்டியில் அப்போதுதான் தரையிறங்கியிருந்த நேச நாட்டுப் படைகளுடன் சண்டையிடுவதற்காக SS சென்றது.

எவ்வாறிருந்த போதிலும், பைடெனும் மக்ரோனும் ரஷ்யாவுடனான போரைத் தீவிரப்படுத்த உக்ரேனிய இராணுவத்திற்கு பரந்த புதிய ஆயுதங்களை வழங்குவதாக அறிவித்தனர். வாஷிங்டன் ஏராளமான விமான எதிர்ப்பு ஏவுகணைகள், பீரங்கிகள், குண்டுகள், அத்துடன் டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் சிறிய ஆயுதங்களையும் அனுப்பும். ஒரு வான்வழி பாதுகாப்பு அமைப்புமுறையை அனுப்பவும், உக்ரேனுக்குள் பிராங்கோ-ஜேர்மன் ஆயுத உற்பத்தியாளர் KNDS இன் உற்பத்தி ஆலைகளை அமைக்கவும் பாரிஸ் சூளுரைத்தது.

அணுஆயுத சக்திகளுக்கு இடையே ஒரு நேரடி மோதலைத் தூண்டும் விளிம்பில் நேட்டோ இருப்பதாக மீண்டும் எச்சரித்து ரஷ்ய அதிகாரிகள் விடையிறுத்தனர். பிரான்ஸ் “இந்த மோதலில் நேரடியாக பங்கெடுக்க தயாராக உள்ளது” என்பதை மக்ரோனின் கருத்துக்கள் எடுத்துக்காட்டுவதாக கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்தார். திரு. மக்ரோன் உக்ரேனிய ஆட்சிக்கு முழுமையான ஆதரவைக் காட்டி வருகிறார் என்பதையும், இராணுவ மோதலில் நேரடியாக பங்கேற்க பிரெஞ்சு குடியரசு தயாராக இருப்பதாக அறிவிக்கிறார் என்பதையும் நாம் கூறுவோம்.”

நோர்மண்டியில் உள்ள Pointe du Hoc இல் பைடெனின் கருத்துக்கள் அன்றைய நிகழ்வுகளின் முடிவாக இருந்தன, இது தரையிறங்கும் போது அமெரிக்க இராணுவ ரேஞ்சர்களால் ஏறப்பட்ட இடமாகும். Pointe du Hoc இல் சண்டையிட்ட சிப்பாய்கள் தனது நிர்வாகத்தின் கொள்கைகளை ஆதரிக்க “எங்களை அழைக்கிறார்கள்” என்று பைடென் கூறினார்.

பைடென், “அவர்கள் எங்களை இந்த பாறைகளில் ஏறச் சொல்லவில்லை. ஆனால் அமெரிக்காவின் நிலைப்பாட்டில் உண்மையாக இருக்க வேண்டும் என்று அவர்கள் நம்மிடம் கேட்கிறார்கள். அவர்கள் எங்களிடம் கொடுக்கவோ அல்லது எங்கள் உயிரைப் பணயம் வைக்கவோ கேட்கவில்லை. ஆனால் நம்மை விட நம் நாட்டில் மற்றவர்கள் மீது அக்கறை காட்ட வேண்டும் என்று கேட்கிறார்கள். அவர்கள் நம்மை நமது வேலையைச் செய்யுமாறும், நமது காலத்தில் சுதந்திரத்தைப் பாதுகாக்குமாறும், ஜனநாயகத்தைப் பாதுகாக்குமாறும், வெளிநாடுகளிலும் உள்நாட்டிலும் ஆக்கிரமிப்பை எதிர்த்து நிற்குமாறும், நம்மை விட பெரிய ஏதோவொன்றின் பாகமாக இருக்குமாறும் கேட்கிறார்கள்” என்று குறிப்பிட்டார்.

ஜனநாயக மரபுகள் மற்றும் நாசிசத்திற்கான எதிர்ப்பு பற்றிய இந்த வெற்று பிரார்த்தனை ஏகாதிபத்திய சக்திகள் நடத்தி வரும் கொள்கைகளின் உண்மையான உள்ளடக்கத்துடன் நேரடியாக முரண்படுகிறது. யதார்த்தத்தில், வாஷிங்டனும் அதன் நேட்டோ கூட்டாளிகளும் ஏகாதிபத்திய போரை நடத்தவும் இனப்படுகொலையை ஆதரிக்கவும் உக்ரேனில் அதிவலது சக்திகளையும் இஸ்ரேலில் அதிவலது ஆட்சியையும் ஆதரித்து வருகின்றன.

Loading