சோ.ச.க. / IYSSE பகிரங்க இணையவழி கூட்டம்: இலங்கையில் வேலைநிறுத்தம் செய்யும் பல்கலைக்கழக ஊழியர்களுக்கு முன்னோக்கிய பாதை

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க.) மற்றும் சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் (IYSSE) அமைப்பும், முட்டுச்சந்துக்குள் வந்துள்ள பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் வேலைநிறுத்தத்திற்கான முன்னோக்கிய பாதை பற்றி கலந்துரையாட, ஜூன் 14 அன்று மாலை 7 மணிக்கு ஸூம் வழியாக ஒரு இணையவழி பொதுக் கூட்டத்தை நடத்தவுள்ளன.

கல்வி சாரா பல்கலைக்கழக ஊழியர்களை உள்ளடக்கிய தொழிற்சங்கங்களின் குடை அமைப்பான கல்விசாரா தொழிற்சங்க கூட்டு (NATUC) இந்த வார தொடக்கத்தில் உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவனை சந்தித்தது. பேச்சு வார்த்தைகள் தீர்மானம் இல்லாமல் முடிவடைந்ததாகக் கூறப்படும் நிலையில், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு என்ன கலந்துரையாடப்பட்டது என்பது தெரிவிக்கப்படவில்லை.

நாட்டின் 17 அரச பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த ஏறக்குறைய 13,000 கல்விசாரா ஊழியர்கள் மே 2 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். மாதாந்த இழப்பீட்டுத் தொகையில் (எம்.சி.ஏ.) 25 சதவீதம் அதிகரிப்பும் 'சம்பள முரண்பாடுகளை' அகற்றுவதற்கு 15 சதவீத ஊதிய உயர்வும் கோரி வருகின்றனர். சாதாரண உறுப்பினர்களின் அதிகரித்து வரும் அழுத்தம் காரணமாக வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்க நிர்ப்பந்திக்கப்பட்ட தொழிற்சங்கத் தலைமைத்துவம், அரசாங்கத்திடம் இருந்து ஒரு தலைதப்பும் 'வாக்குறுதியை' பெறுவதற்கு ஏக்கத்துடன் முயற்சிக்கின்றது. தொழிற்சங்க நடவடிக்கைகள் அனைத்தையும் முடிந்தவரை விரைவாக நிறுத்த இது பயன்படுத்தப்படும்.

அரசாங்கம் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளது. மே 28 அன்று, அரசாங்க அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான பந்துல குணவர்தன, இந்த ஆண்டு சம்பள முரண்பாடுகளை சரிசெய்ய அரசாங்கத்திடம் போதிய நிதி இல்லை என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியதாக அறிவித்தார். மாறாக தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஆராய ஒரு குழுவை அரசாங்கம் நியமிக்கும்.

வேலைநிறுத்தத்தை ஒடுக்குவதற்கான ஆளும் உயரடுக்கின் கோரிக்கைகளை எதிரொலித்த பிரதான அச்சு ஊடகங்கள், பல்கலைக்கழக மாணவர்களின் கல்வியை நாசப்படுத்துவதாக குற்றம் சாட்டி, தொழிலாளர்களை அவதூறு செய்யும் கட்டுரைகளை வெளியிட்டன. மாணவர்களுக்காக முதலைக் கண்ணீர் வடிக்கும் இதே ஊடகங்கள், வரவு செலவுத் திட்ட வெட்டுக்களின் நேரடி விளைவாகப் பல்கலைக்கழகங்களில் நிலைமை மோசமடைவதற்குக் காரணமான அடுத்தடுத்து பதிவிக்கு வந்த அரசாங்கங்களின் வகிபாகம் குறித்து மௌனம் சாதிக்கின்றன.

இந்த நிலைமைகளின் கீழ், வேலைநிறுத்தம் செய்யும் கல்விசாரா ஊழியர்கள் தொழிற்சங்கத் தலைவர்கள் மீது எந்த நம்பிக்கையும் வைத்திருக்க முடியாது. அவர்கள் தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் மற்றும் முதலாளித்துவ அரசியல் ஸ்தாபனத்தின் அனைத்துக் கட்சிகளிலிருந்தும் சுயாதீனமாக தங்கள் சொந்த நடவடிக்கைக் குழுக்களை ஸ்தாபிப்பதன் மூலம் விடயங்களைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்தக் குழுக்களின் மூலம் தொழிலாளர்கள் தங்களின் கோரிக்கைகள் மற்றும் அதற்கான போராட்டத்தை எப்படி நடத்துவது என்பது குறித்து ஜனநாயக ரீதியாக கலந்துரையாடி முடிவெடுக்க முடியும்.

கல்வி சாரா தொழிலாளர்கள் தீவு முழுவதும் உள்ள ஏனைய துறைகளில் உள்ள தங்கள் வர்க்க சகோதர சகோதரிகளுடன் ஒரு பொதுவான போராட்டத்தில் ஐக்கியப்பட வேண்டும். சர்வதேச நாணய நிதியத்தின் ஆணைகளின் கீழ் விக்கிரமசிங்க அரசாங்கம் சுமத்தியுள்ள கொடூரமான சிக்கன நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, இப்போது தங்களது தொழில், ஊதியம் மற்றும் வேலை நிலைமைகள் மீது கடுமையான தாக்குதல்களை எதிர்கொண்டுள்ள ஏனைய அரச ஊழியர்களும் இதில் உள்ளடக்கப்பட வேண்டும்.

சோ.ச.க./IYSSE கூட்டத்தில் இந்த போராட்டத்திற்கு தொழிலாளர்கள் பின்பற்ற வேண்டிய வேலைத்திட்டம் மற்றும் முன்னோக்கு பற்றி விரிவாக கலந்துரையாடப்படும்.

கல்வி சாரா தொழிலாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், கல்வியாளர்கள் மற்றும் பிற துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் இந்த முக்கியமான கூட்டத்தில் கலந்துகொள்ளவும், அரசாங்கத்தின் கொடூரமான தாக்குதல்களை எவ்வாறு எதிர்த்துப் போராடுவது என்பது பற்றிய கலந்துரையாடலில் பங்குபற்றவும் அழைக்கிறோம்.

திகதி மற்றும் நேரம்: ஜூன் 14, வெள்ளிக்கிழமை, இரவு 7 மணி.

பின்வரும் இணைப்பு மூலம் பதிவு செய்துகொள்ளுங்கள்:

https://us06web.zoom.us/meeting/register/tZMrfu2gpjMsHNTsx_9SN-sooWdau9IvP92g

Loading