முன்னோக்கு

உக்ரேன் அரசாங்கத்திற்கு பகிரங்கக் கடிதம்: போக்டன் சிரோடியுக்கை விடுதலை செய்!

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

ஜூன் 13, வியாழன் அன்று, சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவிடமிருந்து பின்வரும் கடிதம் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள உக்ரேனின் தூதுவர் ஒக்ஸானா மார்க்கரோவாவுக்கு வழங்கப்படும்.

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

திருமதி தூதர் அவர்கட்கு:

ஏப்ரல் 25, 2024 அன்று, உக்ரேனிய அரசாங்கத்தின் அரச பாதுகாப்பு சேவையினால் (SBU) போல்ஷிவிக்-லெனினிஸ்டுகளின் இளம் காவலர் அமைப்பின் தலைவரான போக்டன் சிரோடியுக், வயது 25, கைது செய்யப்பட்டுள்ளார். போல்ஷிவிக்-லெனினிஸ்டுகளின் இளம் காவலர் அமைப்பானது, ரஷ்யா, உக்ரேன் மற்றும் முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் ஒரு பகுதியாக இருந்த நாடுகளில் செயல்படும் ஒரு ட்ரொட்ஸ்கிச அமைப்பாகும். கடந்த ஏழு வாரங்களாக தோழர் சிரோடியுக், மைக்கோலாய்வில் உள்ள சிறைச்சாலையில் இரகசியமாக சிறை வைக்கப்பட்டுள்ளார். நீங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசாங்கத்தால் அவர் மீது சுமத்தப்பட்டுள்ள இழிவான குற்றச்சாட்டுகளை எதிர்ப்பதற்கு போதுமான சட்டப் பிரதிநிதித்துவத்தைப் பெறுவதில் இருந்து அவர் தடுக்கப்பட்டுள்ளார். உக்ரேனிய அரசாங்கத்தால் அரசியல் ரீதியாக தூண்டப்பட்ட வழக்குகள் மற்றும் ஜோடனைகளை எதிர்த்துப் போராடுவதில் அனுபவம் வாய்ந்த கியேவ் மற்றும் மைகோலெய்வில் இருக்கும் வழக்கறிஞர்கள், தங்கள் மீதான பழிவாங்கும் அச்சுறுத்தல்களைத் தொடர்ந்து, தனிப்பட்ட பாதுகாப்புக்கு பயந்து சிரோடியுக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தங்கள் விருப்பத்தைத் திரும்பப் பெற்றுள்ளனர்.

போக்டன் சிரோடியுக் மீதான குற்றச்சாட்டுகள் சிறிதளவும் அடிப்படை உண்மை அற்றவை. உலக சோசலிச வலைத் தளத்தில் [wsws.org] வெளியிடப்பட்ட கட்டுரைகளில் அவர் வெளிப்படுத்திய உக்ரேன் ரஷ்யா போருக்கான அவரது பொது எதிர்ப்பை முற்றிலும் அடிப்படையாகக் கொண்டிருந்த அவர், தேசத்துரோகத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

சிரோடியுக் தனது ஜனநாயக உரிமையான பேச்சுரிமையைப் பயன்படுத்துவதைக் குற்றமாக்குவதற்கான அவநம்பிக்கையான முயற்சியில், உலக சோசலிச வலைத் தளம் ஒரு ரஷ்ய பிரச்சாரம் மற்றும் தகவல் நிறுவனம் என்று SBU யின் ஜோடனையாளர்கள் தங்கள் குற்றச்சாட்டு ஆவணங்களில் கூறுகின்றனர்.

போக்டன் சிரோடியுக் அவரது அலுவலகத்தில்

இந்த மூர்க்கத்தனமான குற்றச்சாட்டை ஆதரிப்பதற்கு எந்தவொரு சிறிய ஆதாரமும் கிடையாது. 1923 இல் ட்ரொட்ஸ்கிச இயக்கம் நிறுவப்பட்டதில் இருந்து பாதுகாக்கப்பட்டுவரும் சோசலிச சர்வதேசிய கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) வரலாறு மற்றும் அரசியலை நன்கு அறிந்தவர்கள் ஒருபுறம் இருக்க, இந்தப் பொய்யின் அபத்தம் உலக சோசலிச வலைத் தளத்தின் ஒவ்வொரு வாசகருக்கும் தெளிவாகத் தெரியும்.

போர் வெடித்ததில் இருந்து உலக சோசலிச வலைத் தளத்தில் வெளியிடப்பட்ட நூற்றுக்கணக்கான கட்டுரைகளில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, உக்ரேனிய மற்றும் ரஷ்ய அரசாங்கங்களின் இராணுவக் கொள்கைகளுக்கு அதன் எதிர்ப்பை முற்றிலும் தெளிவாகக் கூறியுள்ளது. பிப்ரவரி 24, 2022 அன்று, ரஷ்ய படையெடுப்பு நாளில், அனைத்துலகக் குழுவின் குரலான WSWS பின்வருமாறு அறிவித்தது:

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் உலக சோசலிச வலைத் தளமும் உக்ரேனில் ரஷ்ய இராணுவத் தலையீட்டைக் கண்டிக்கின்றன. அமெரிக்க மற்றும் நேட்டோ சக்திகளின் ஆத்திரமூட்டல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும், உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பு சோசலிஸ்டுகள் மற்றும் வர்க்க நனவுள்ள தொழிலாளர்களால் எதிர்க்கப்பட வேண்டும். 1991ல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதன் மூலம் கட்டவிழ்த்து விடப்பட்ட பேரழிவை ரஷ்ய தேசியவாதத்தின் அடிப்படையில் தடுக்க முடியாது. இது, விளாடிமிர் புட்டின் பிரதிநிதித்துவப்படுத்தும் முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தின் நலன்களுக்கு சேவை செய்யும் ஆழ்ந்த பிற்போக்கு சித்தாந்தமாகும். 

இந்த இளம் மற்றும் துணிச்சலான சோசலிஸ்ட்டுக்கு எதிரான தேசத்துரோக குற்றச்சாட்டை தங்களால் நிரூபிக்க முடியாது என்பதை உக்ரேன் அரசின் பொலிஸ் நன்றாகவே அறிந்திருக்கிறது. ஆகவே, சோவியத் யூனியனின் ஸ்ராலினிச ஆட்சி, பயங்கரவாதம் மற்றும் மாஸ்கோ வழக்குகளின் சகாப்தத்தில் அதன் ட்ரொட்ஸ்கிச எதிர்ப்பாளர்களை நாசி ஜேர்மனியின் முகவர்கள் என்று கண்டித்த போது பயன்படுத்திய பொய்களின் விதியை அவர்கள் நாட வேண்டும். சோவியத் யூனியன் கலைக்கப்பட்டு, உக்ரேனில் முதலாளித்துவத்தை மீட்டெடுக்கப்பட்டிருந்த போதிலும், ஸ்ராலினிச போலீஸ் ஏஜென்சிகளின் வழிமுறைகளும் ஆவிகளும் இன்னமும் உயிர் வாழ்கின்றன.

போக்டன் சிரோடியுக்கும் மற்றும் WSWS ம், ரஷ்ய பிரச்சாரத்தின் முகவர்கள் என்ற அதன் குற்றச்சாட்டிற்கு முரணாக, சோசலிசப் புரட்சியின் மூலம் 'உலக சோசலிசத்தை நிறுவும் நோக்கத்துடன்', உலக சோசலிச வலைத் தளமானது, 'முதலாளித்துவ சந்தை முறைக்கு புரட்சிகர எதிர்ப்பின் நிலையிலிருந்து, உலகெங்கிலும் உள்ள முக்கிய சமூக-அரசியல் பிரச்சனைகளை உள்ளடக்கியது' என்பதை SBU குற்றப்பத்திரிகை ஒப்புக்கொள்கிறது.

உலக சோசலிச வலைத் தளத்தின் மார்க்சிச-ட்ரொட்ஸ்கிச வேலைத்திட்டத்தின் இந்த உண்மை விளக்கமானது, (இது புட்டினின் முதலாளித்துவ ஆட்சிக்கு வெறுக்கத்தக்கது) போக்டன் சிரோட்டியுக்கின் சிறைவாசம் மற்றும் வழக்கு விசாரணையின் மோசடித் தன்மையை அம்பலப்படுத்துகிறது.

அவர் துன்புறுத்தப்பட்டு ஆயுள் தண்டனைக்கு ஆளாக நேரிடும் என்று அச்சுறுத்தப்படுகிறார். ஏனெனில், அவர் இரு நாடுகளின் தன்னலக்குழு முதலாளித்துவ உயரடுக்கின் நலன்களுக்காக நடத்தப்படும் போருக்கு எதிராக உக்ரேனிய மற்றும் ரஷ்ய தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்திற்கு அழைப்பு விடுக்கிறார்.

2024 ஏப்ரல் நடுப்பகுதியில் போக்டன் சிரோடியுக்

உக்ரேனிய தொழிலாள வர்க்கத்தினரிடையே சோசலிச உணர்வுகள் மீண்டும் எழுச்சி பெறும் என்று அஞ்சுகிற உங்கள் அரசாங்கமானது, தஸ்கோரோபாட்ஸ்கி, பெட்லியுரா மற்றும் எல்லாவற்றையும் விட மோசமான நாசி சார்பு ஸ்டீபன் பண்டேரா மற்றும் அவரது உக்ரேனிய தேசியவாதிகளின் அமைப்பின் நாட்களில் இருந்தே, முதலாளித்துவ உக்ரேனிய தேசியவாத இயக்கங்களின் குணாதிசயங்களைக் கொண்ட தீவிரமான, பிற்போக்குத்தனமான சித்தாந்தங்கள் மற்றும் வேலைத்திட்டங்களை மகிமைப்படுத்தி வருகிறது. இது தவிர்க்க முடியாமல் ரஷ்யாவில் உள்ள தங்கள் வர்க்க சகோதர சகோதரிகளுடன் ஐக்கியம் மற்றும் போரை நிராகரிப்பதற்கான போராட்டத்தின் வடிவத்தை எடுக்கும். இதனால்தான் போக்டன் சிரோடியுக் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, உக்ரேன் முழுவதும் உலக சோசலிச வலைத் தளத்திற்கான இணைய அணுகலைத் தடை செய்ய ஜூன் 3, 2024 தேதியிட்ட அரச உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இராணுவச் சட்டத்தின் அடிப்படையில் தேர்தல்கள் மற்றும் விதிகளை ரத்து செய்துள்ள செலன்ஸ்கி ஆட்சி, உக்ரேனில் உள்ள அனைத்து இடதுசாரி மற்றும் சோசலிச அமைப்புகளையும் சட்டவிரோதமாக்கியுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. கடந்த மே மாதம், அமெரிக்க வெளியுறவுத்துறை கூட அதன் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் பணியகத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையில், உங்கள் அரசாங்கத்தின் கொடூரமான அடக்குமுறை தன்மைக்கு கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இந்த அறிக்கை, குறிப்பாக மனித உரிமை மீறல்களாக, 'வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்குதல், சித்திரவதைகள் மற்றும் கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது இழிவாக நடத்துதல் அல்லது தண்டனை; கடுமையான மற்றும் உயிருக்கு ஆபத்தான தடுப்புக்காவல் சிறை நிலைமைகள்; தன்னிச்சையான கைதுகள் அல்லது தடுத்து வைத்திருத்தல்; நீதித்துறையின் சுதந்திரத்தில் கடுமையான பிரச்சனைகள்; ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறை அல்லது வன்முறை அச்சுறுத்தல்கள், ஊடக உறுப்பினர்கள் உட்பட கருத்துச் சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடுகள்...”என்று குறிப்பிடுகிறது.

உங்கள் அரசாங்கத்தின் அநீதியால் போக்டன் சிரோடியுக் பாதிக்கப்பட்டுள்ளார். உக்ரேனிய தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே போருக்கு எதிராக அதிகரித்து வரும் எதிர்ப்பைப் பற்றி சர்வதேச செய்தி ஊடகங்களில் வெளியான பல அறிக்கைகளுக்கு மத்தியில், ஏப்ரல் 25 அன்று அவர் கைது செய்யப்பட்டார். உக்ரேனின் முதலாளித்துவ உயரடுக்கு மற்றும் அதன் ஏகாதிபத்திய கூட்டாளிகளின் நலன்களுக்காக, உங்கள் அரசாங்கம் முன்னெடுத்துச் செல்லும் போரை எதிர்ப்பவர்களை அச்சுறுத்துவதை நோக்கமாகக் கொண்டு, தேசத்துரோகக் குற்றச்சாட்டு சிரோடியுக் மீது ஜோடிக்கப்பட்டு சுமத்தப்பட்டது என்பது வெளிப்படையானது.

போக்டன் சிரோடியுக் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டமை, உலகம் முழுவதிலும் சீற்றமடைய வைத்துள்ளது. இந்த அரசியல் ஜோடிப்புக்கு எதிராக முற்போக்கு மற்றும் சோசலிச அமைப்புகள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.

அவரது விடுதலைக்கான சர்வதேச பிரச்சாரம் ஒவ்வொரு நாளும் வலுவடைந்து வருகிறது. உலகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் (தொழிலாளர்கள், இளைஞர்கள், கலைஞர்கள் மற்றும் கல்வியாளர்கள்) இந்த ஜோடனைகளை நிறுத்த வேண்டும் மற்றும் போக்டன் சிரோட்டியுக்கை சிறையில் இருந்து உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை மனுவில் கையெழுத்திட்டு வருகின்றனர்.

திருமதி தூதர் அவர்களே,

இந்தக் கடிதத்தையும், போக்டன் சிரோட்டியுக்கின் விடுதலைக்கான எங்கள் கோரிக்கையையும் உங்கள் அரசாங்கத்திற்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.

பொருத்தமான உணர்வுகளுடன்,

டேவிட் நோர்த்,

சோசலிச சமத்துவக் கட்சியின் தலைவர்,

உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவர்.

Loading