முன்னோக்கு

UAW ஊழல் பற்றிய புதிய விசாரணைகள், ஃபெயினின் கீழ் "சீர்திருத்த" மோசடியை அம்பலப்படுத்துகின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

நவம்பர் 2, 2023 அன்று நேரடியான ஒளிபரப்பின் போது UAW தலைவர் ஷான் ஃபெயின் மற்றும் ஸ்டெல்லாண்டிஸ் ரிச் பாயரின் UAW துணைத் தலைவர் நிற்கின்றனர். [Photo: UAW]

கடந்த திங்களன்று, ஐக்கிய வாகன தொழிலாளர் சங்கத்தின் (UAW) உயர்மட்டத் தலைமையானது ஃபெடரல் கண்காணிப்பாளரால் புதிய விசாரணைக்கு உட்பட்டுள்ளது என்பது தெரிய வந்துள்ளது, இது UAW தொழிற்சங்க எந்திரத்தைப் பற்றிக் கொண்டிருக்கும் நீண்டகால நெருக்கடியின் குறிப்பிடத்தக்க விரிவாக்கத்தைக் குறிக்கிறது.

திங்களன்று, ஃபெடரல் நீதிமன்றத்தில் கண்காணிப்பாளர் தாக்கல் செய்த அறிக்கையின்படி, UAW இன் இரண்டு உயர் பதவியில் இருக்கும் அதிகாரிகளான UAW ன் தலைவர் ஷான் ஃபெயின் மற்றும் UAW செயலர்-பொருளாளர் மார்கரெட் மோக் ஆகிய இருவரும் நிதி முறைகேடுகள் தொடர்பான போட்டி குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஒவ்வொருவரும் விசாரிக்கப்படுகிறார்கள். UAW இன் நிர்வாகக் குழுவின் மற்றொரு உறுப்பினரும், அறிக்கையில் பெயரிடப்படாத ஒரு பிராந்திய இயக்குநரும், மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பின்னர் விசாரணையில் உள்ளார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், தங்கள் கடமைகளைச் செய்யத் தவறிவிட்டதாகக் கூறி, ஃபெயின் முதலில் மார்கரெட் மோக்கையும், பின்னர் UAW யின் துணைத் தலைவர் ரிச் பாயரையும், அவர்களின் துறை சார்ந்த பணிகளில் இருந்து நீக்கினார். மார்கரெட் மோக்கும், ரிச் பாயரும், அவர்களின் பங்கிற்கு, இது ஃபெயினால் மேற்கொள்ளப்பட்ட தங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் என்றும், நிதி முறைகேடுகளில் ஈடுபட மறுத்ததற்கும், தொழிற்சங்க நிதியை தவறாகப் பயன்படுத்துவதற்கும் பழிவாங்கும் நடவடிக்கை என்றும் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த மூன்று பேர்களும் 2022-2023 தேசிய UAW தேர்தல்களில் ஐக்கிய / ஜனநாயகத்திற்கான அனைத்து தொழிலாளர்கள் (UAWD) சங்கத்தின் அணியில் ஒரே உறுப்பினர்களாக இருந்து போட்டியிட்டனர். மேலும், அவர்கள் UAW இல் “சீர்திருத்தங்களை” மேற்கொண்டு வருவதாகவும், ஊழலை வேரறுத்து “வெளிப்படைத்தன்மை” மற்றும் “தொழிற்சங்க ஜனநாயகத்தை” மீட்டெடுப்பதாகவும் கூறினர்.

ஆனால் வழக்கத்திற்கு மாறாக அப்பட்டமான மொழியில், விசாரணையின் ஒரு பகுதியாக கோரப்பட்ட பல்லாயிரக்கணக்கான ஆவணங்களை ஒப்படைக்க மறுத்து, ஃபெயினின் நிர்வாகம் அதன் விசாரணைகளைத் “தடுக்கிறது மற்றும் தலையிடுகிறது” என்று கண்காணிப்பாளர் கூறினார்.

கண்காணிப்பாளரின் அறிக்கை, பதில்களை விட அதிகமான கேள்விகளை எழுப்புவதுடன் கூறப்படும் தவறான நடத்தை பற்றிய விரிவான தகவலை வழங்கவில்லை. சுதந்திரமாக செயற்படுவதாக கூறப்படும் கண்காணிப்பகம் (உண்மையில் வாகன நிறுவனங்களுடன் நெருக்கமான உறவுகளைக் கொண்ட இரண்டு கார்ப்பரேட் சட்ட நிறுவனங்களால் பணியமர்த்தப்பட்டது) UAW எந்திரத்துடன் ஒரு உடன்பாட்டை எட்டுவதில் சிரமம் இருப்பதாக அதன் அறிக்கையில் தெளிவுபடுத்தியது. இது தொடர்புடைய ஆவணங்கள் ரகசியமாக வைக்கப்பட்டு, சாமானிய UAW உறுப்பினர்கள் மற்றும் பரந்த பொதுமக்களிடமிருந்து மறைக்கப்படும்.

எவ்வாறாயினும், தொழிலாளர்கள் தங்கள் நிலுவைத் தொகைகள் மற்றும் உயர்மட்ட UAW தலைவர்களால் அது தவறாகப் பயன்படுத்தப்படுவதை பற்றிய தகவல்களை அறிவதற்கு அடிப்படை உரிமை உள்ளது. மேக் டிரக்ஸ் தொழிலாளியான வில் லெஹ்மன் கோரிக்கை விடுத்துள்ளபடி, கண்காணிப்பாளரின் விசாரணை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் வெளியிட அவர்கள் கோர வேண்டும்.

கண்காணிப்பாளரிடம் இருந்து கிடைக்கப்பெறும் சிறிய தகவல்கள் கூட, UAW இல் தொடர்ந்தும் ஆதிக்கம் செலுத்தும் ஒரு ஊழல் பிடித்த மற்றும் சதிகார அதிகாரத்துவம் தான் இருந்து வருகிறது என்பதை வெளிப்படுத்திக் காட்டுகிறது.

ஃபெயினின் கீழ், UAW தொழிற்சங்க அதிகாரத்துவமானது, அது பிரதிநிதித்துவம் செய்வதாகக் கூறும் தொழிலாளர்களிடமிருந்து வேறுபட்ட மற்றும் விரோதமான சமூக மற்றும் பொருள் நலன்களைக் கொண்ட பெருநிறுவன சார்பு நிறுவனமாக நீடித்து வருகிறது. UAW இன் ஒற்றுமை இல்லத் தலைமையகத்தில் உள்ள நூற்றுக்கணக்கான அதிகாரத்துவத்தினர் தங்களின் ஆறு இலக்க சம்பளம் மற்றும் சிறப்பு சலுகைகளை தொடர்ந்து பெற்று வருகின்றனர். மேலும் UAW, Inc, தனது பங்கு மற்றும் முதலீட்டு இலாகாவை ‘ஒரு பில்லியன் டாலர்களுக்கும் மேலாக வளர்த்துள்ளது.

இதற்கிடையில், இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து மூன்று பெரிய நிறுவனங்களில் ஃபெயினின் “வரலாற்று” ஒப்பந்தங்கள் என்று அழைக்கப்படுவதன் கீழ் ஆயிரக்கணக்கான வாகனத் தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் அல்லது இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தொழிலாளர்களின் ஊதியம் 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட குறைவாகவே உள்ளது, பணவீக்கத்திற்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்பட்டுள்ளது, மேலும் வேலை வாரம் நீண்டதாகவும் சோர்வாகவும் மாறியுள்ளது. மற்றும் தொழிலாளர்கள் தொழிற்சாலைகளில் தொடர்ந்து கொடிய நிலைமைகளை எதிர்கொள்கின்றனர். சமீபத்தில் கேட்டர்பில்லர் ஃபவுண்டரியில் 28 வயதான டால்டன் சிம்மர்ஸின் கொடூரமான மரணம் இதனை நிரூபித்துள்ளது.

UAW தொழிற்சங்கத்தினுடைய ஊழல் பற்றிய கூட்டாட்சியின் விசாரணை கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்திற்கு முன்பு தொடங்கியது. 2015 இல் நிறுவனத்திற்கு சார்பான, UAW ன் ஆதரவு ஒப்பந்தத்திற்கு எதிராக ஃபியட் கிறைஸ்லர் வாகனத் தொழிலாளர்களின் கிளர்ச்சியைத் தொடர்ந்து இந்த விசாரணை தொடங்கப்பட்டது. மூத்த UAW அதிகாரிகளிடையே உள்ள அப்பட்டமான குற்றச்செயல்கள், சாமானிய தொழிலாளர்களை கட்டுப்படுத்தும் அவர்களின் திறனைக் கடுமையாக அரித்துக்கொண்டிருப்பதாக அரசின் முன்னணிப் பிரிவுகள் கவலைப்படுகின்றன.

அடுத்தடுத்த விசாரணையில், UAW தலைமைக்குள் தொழிலாளர்களின் நிலுவைத் தொகையை அபகரிப்பதற்கும், நிறுவனங்களுக்கு நட்பான ஒப்பந்தங்களுக்கு ஈடாக நிறுவனங்களிடம் இருந்து லஞ்சம் பெறுவதற்கும் ஒரு பரந்த சதி இருப்பதை வெளிப்படுத்திக் காட்டின. இரண்டு முன்னாள் UAW தலைவர்கள் - அவர்கள் ஒவ்வொருவரும் தொழிற்சங்க ஊழலை “சுத்தம் செய்கிறோம்” என்று முன்பு கூறினர் - இந்த சதியில் தங்கள் பங்கிற்காக குற்றம் சாட்டப்பட்டு குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.

UAW இன் நீண்டகால உறுப்பினர் ஆளும் குழுவின் எதிர்ப்பை எதிர்கொண்டு 2021 வாக்கெடுப்பில் UAW உறுப்பினர்கள் தங்களுக்கு ஆதரவாக பெருமளவில் வாக்களித்த பின்னர், 2022 இல் தொழிற்சங்கத்தின் தேசியத் தலைமைக்கான நேரடித் தேர்தல்கள் முதன்முறையாக நடத்தப்பட்டன.

எவ்வாறாயினும், UAW இல் வேரூன்றிய அதிகாரத்துவம், தொழிலாளர்களை தேர்தல்கள் குறித்து இருட்டில் வைத்திருக்கவும், அவர்கள் அவற்றில் பங்கேற்பதைத் தடுக்கவும் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்தது. முதல் சுற்றில், வாக்களிப்பு சதவீதம் வெறும் 9 சதவீதமாக மட்டுப்படுத்தப்பட்டது, இது அமெரிக்க வரலாற்றில் எந்தவொரு தேசிய தொழிற்சங்கத் தேர்தலிலும் இல்லாதது. 2023 UAW தலைவருக்கான தேர்தலில், ஃபெயின் வெறும் 500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார், இறுதியில் UAW இன் சாமானிய உறுப்பினர்களில் வெறும் 3 சதவீத ஆதரவுடன் பதவிக்கு வந்தார்.

UAW எந்திரமானது, குறிப்பாக ஒரு சோசலிஸ்ட்டும் மற்றும் மேக் ட்ரக்ஸ் ஊழியருமான வில் லெஹ்மன் தலைமையிலான UAW தலைவர் பதவிக்கான பிரச்சாரத்தை மௌனமாக்குவதில் ஆர்வமாக இருந்தது. வில் லெஹ்மன் மட்டுமே UAW அதிகாரத்துவத்தை சீர்திருத்தம் செய்யாமல் ஒழிப்பதற்கும், முடிவெடுக்கும் அதிகாரத்தை நேரடியாக தொழிலாளர்களுக்கு மாற்றுவதற்கும் அழைப்பு விடுத்த ஒரேயொரு வேட்பாளராக இருந்தார். UAW எந்திரம் வாக்காளர் எண்ணிக்கையை அடக்கிய போதிலும், முதல் சுற்றுத் தேர்தலில் லெஹ்மன் கிட்டத்தட்ட 5,000 வாக்குகளைப் பெற்றார்.

உத்தியோகபூர்வ சவால்கள் மற்றும் வழக்குகளின் தொடரில், வாக்களிக்கும் உரிமையை நசுக்க UAW எந்திரத்தின் முயற்சிகளை லெஹ்மன் ஆவணப்படுத்தி போராடினார். கடந்த நவம்பரில், வாக்களிக்கும் காலக்கெடு நீட்டிக்கப்பட வேண்டும் என்றும், அனைத்து UAW உறுப்பினர்களுக்கும் தேர்தல்கள் பற்றிய உண்மையான அறிவிப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் வில் லெஹ்மன் கோரிக்கை விடுத்தார்.

எவ்வாறாயினும், கூட்டாட்சியின் கண்காணிப்பாளர் மற்றும் பைடென் நிர்வாகத்தின் தொழிற் துறை ஆகியவை லெஹ்மனின் வழக்குக்கு எதிராக வாதிடுவதில் UAW எந்திரத்திற்கு பக்கபலமாக இருந்தன. அதற்கு பதிலாக, தேர்தல்களுக்கு சட்டபூர்வமான தன்மை மற்றும் ஃபெயினின் நிர்வாகத்திற்கு ஸ்திரத்தன்மையை அவை வழங்க முற்பட்டன.

ஆனால் இன்று, ஃபெயினின் நிர்வாகத்தின் நம்பகத்தன்மை, ஒருபோதும் உறுதியாக நிலைநிறுத்தப்படாமல், தீவிரமாக நொறுங்கத் தொடங்கியுள்ளது.

UAW தலைமைக்குள் மோதல்களின் துல்லியமான தோற்றம் எதுவாக இருந்தாலும், 2023 மூன்று பெரிய நிறுவனங்களின் தொழிலாளர்களின் போராட்டத்தை UAW விற்றுத்தள்ளியதுடன், ஃபெயின் மீதான அதிகரித்துவரும் கோபம் மற்றும் “இனப்படுகொலை ஜோ” பைடெனுக்கு UAW ஒப்புதல் அளித்தது ஆகியவற்றின் மீது சாமானிய உறுப்பினர்களிடையே அதிகரித்து வரும் கோபத்துடன் அவை சந்தேகத்திற்கு இடமின்றி பிணைக்கப்பட்டுள்ளன. கண்காணிப்பாளரின் அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு, UAW பல்லாயிரக்கணக்கான கலிபோர்னியா பல்கலைக்கழக கல்வித் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்தது.

ஐக்கிய வாகன தொழிலாளர் சங்க அதிகாரத்துவத்தின் பெருநிறுவனவாத, தொழிலாளர் விரோதக் கொள்கைகளுக்கு முகமாற்றம் கொடுப்பதை நோக்கமாகக் கொண்ட, ஃபெயின் & கோவின் சீர்திருத்த பாசாங்குகள், கபடத்தனமான பொய்களைத் தவிர வேறு ஒன்றும் இல்லை என்று திட்டவட்டமாக அம்பலப்படுத்துவதற்கு ஒரு வருடத்திற்கும் குறைவான காலத்தையே எடுத்துள்ளது. ஃபெயின் மற்றும் அவரது முதல் போட்டியில் இருந்த சகாக்கள் இருவரும் விமர்சகர்களாக மாறினார்கள். அவர்கள் ஒவ்வொருவரும், தங்கள் தொழிலை தொழிற்சங்க எந்திரத்தின் பதவி வரிசையில் ஏறிக்கொண்டு பல விற்றுத்தள்ளலில் ஈடுபட்டனர்.

அதே நேரத்தில், சமீபத்திய UAW ஊழல் வெள்ளை மாளிகைக்கு ஒரு நெருக்கடியை அளிக்கிறது. காஸாவில் இனப்படுகொலை மற்றும் கார்ப்பரேட் சார்பு கொள்கைகளில் அவரது பங்கிற்காக பெருகிய முறையில் இழிவுக்குள்ளான பைடென், UAW தலைவர் ஷான் ஃபெயினின் மீது சாய்ந்து, வாகனத் தொழிலாளர்களிடையே அதிகரித்து வரும் போர்க்குணத்தை கட்டுப்படுத்தவும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் தேசத்துக்கான உரையில் பெயினை ஒரு சிறந்த தொழிற்சங்கத் தலைவராக உயர்த்தவும் முயன்றார். தீவிரமான வாய்வீச்சு வாக்கியங்களை உச்சரிப்பதன் மூலம், பைடெனின் மறுதேர்தலுக்கு ஃபெயின் ஒரு முக்கிய சொத்தாக வெளிப்படுகிறார்.

எல்லாவற்றிற்கும் மேலாக, தொழிலாள வர்க்கத்தை போருக்கு அடிபணியச் செய்வதை இலக்காகக் கொண்ட கார்ப்பரேடிசம் (தொழிற்சங்க எந்திரத்தை அரசு மற்றும் பெருநிறுவன நிர்வாகத்துடன் ஒருங்கிணைத்தல்) என்ற கொள்கையை பைடென் பின்பற்றி வருகிறார். ஃபெயின் மற்றும் பைடென் இருவரும் “ஜனநாயகத்தின் ஆயுதக் களஞ்சியம்” பற்றிப் பேசும்போது, ​​ரஷ்யாவிற்கு எதிரான போரை அதிகரிக்கவும், சீனாவிற்கு எதிரான போருக்குத் தயாராகவும் ஒரு போர்க்காலப் பொருளாதாரத்தை அமுலாக்கம் செய்வதைப்பற்றி குறிக்கின்றனர்.

அதே நேரத்தில், சமீபத்திய வெளிப்பாடுகள், UAW எந்திரம் “சீர்திருத்தம்” செய்யப்பட்டு தொழிலாளர்களின் நலன்களுக்கு சேவை செய்ய முடியும் என்று கூறுகின்ற போலி-இடது ஜனநாயக சோசலிஸ்டுகள் (DSA) போன்ற அனைவரையும் பேரழிவுகரமாக அம்பலப்படுத்துகிறது. உண்மையில், ஃபெயினின் நிர்வாகம், DSA இன் ஜனநாயகக் கட்சியின் செயற்பாட்டாளர்களை UAW எந்திரத்திற்குள் முன்னணி பதவிகளுக்கு உயர்த்துவதற்கும், அதன் மூலோபாயவாதிகள், செய்தித் தொடர்பாளர்கள் வெள்ளை மாளிகைக்கு செல்லும் ஒரு குழாயாக செயல்பட்ட வருகின்றனர்.

DSA மற்றும் அதனுடன் இணைந்த இதழான Jacobin, அத்துடன் Labour Notes மற்றும் UAWD ஆகியவை, ஃபெயின் நிர்வாகத்தின் மீதான விசாரணையின் அறிவிப்பு வெளியான மூன்று நாட்களுக்குப் பிறகு குற்ற உணர்ச்சியுடன் மௌனம் சாதித்து வருகின்றன.

இந்த அனுபவத்திலிருந்து தொழிலாளர்கள் உறுதியான முடிவுகளை எடுக்க வேண்டும். UAW அதிகாரத்துவத்தின் உயர்மட்ட பதவிகளை மாற்றியமைப்பதன் மூலம், தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் எரியும் பிரச்சினைகள் எதையும் தீர்க்க முடியாது. UAW எந்திரம், மேலும், தொழிற்சங்க அதிகாரத்துவங்களின் பிற்போக்குத்தனமான, பெருநிறுவன சார்பு மற்றும் ஏகாதிபத்திய சார்பு பாத்திரத்தை, டீம்ஸ்டர்கள் முதல் அமெரிக்க ஆசிரியர்களின் கூட்டமைப்பு வரை மற்றும் அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் அவர்களின் பல தொடர்புகளையும் எந்திரம் வெளிப்படையாக வெளிப்படுத்திக் காட்டுகிறது.

மார்ச் 2023 இல், சாமானிய தொழிலாளர் குழுக்களின் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, “அரசாங்கம் மற்றும் பெருநிறுவனங்களுடனான UAW இன் ஒத்துழைப்பு, தொழிலாளர்களின் நலன்களுக்குத் துரோகம் செய்தல் மற்றும் தொழிலாளர்களின் ஜனநாயக உரிமைகளை நசுக்குதல் ஆகியவை கெரியிலிருந்து [முன்னாள் UAW தலைவர் ரே கெரி] ஃபெயினுக்கு மாற்றப்படுவதன் மூலம் தீர்க்கப்பட மாட்டாது.

“அதிகாரத்தை சாமானிய தொழிலாளர் குழுக்களுக்கு மாற்றுவது மற்றும் முழு UAW எந்திரத்தையும் அகற்றுவது அவசியமானது” என்று தீர்மானம் கூறுகிறது.

சாமானிய தொழிலாளர் குழுக்களின் வலையமைப்பைக் கட்டியெழுப்புவதும், சர்வதேச தொழிலாளர் கூட்டணியின் ஒரு பகுதியாக அமைப்பதும், தொழிலாளர் நலன்களுக்கான போராட்டத்தை இனப்படுகொலை மற்றும் ஏகாதிபத்தியப் போருக்கு எதிரான போராட்டத்துடன் இணைப்பதும் அவசரப் பணியாகும்.

Loading