ஜி7 தலைவர்கள் இத்தாலிய ஆடம்பர உல்லாச விடுதியில் உலகப் போரைத் தீவிரப்படுத்தவும் மற்றும் அதிவலதை ஊக்குவிக்கவும் சதி செய்கின்றனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

பாசிச இத்தாலிய பிரதம மந்திரி ஜியோர்ஜியா மெலோனியின் அழைப்பின் பேரில், உலகின் ஏழு பிரதான “ஜனநாயகங்களின்” தலைவர்கள் தற்போது தெற்கு இத்தாலியிலுள்ள உல்லாச விடுதியான போர்கோ எக்னாசியாவில் சந்தித்து வருகின்றனர். அங்கு ஓர் இரவுக்கு 2,500 யூரோ முதல் 11,000 யூரோ வரையிலான விலையில் ஒரு அறையைப் பெறலாம். இந்த இரண்டு நாள் கூட்டத்தின் திட்டநிரல் ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போரை ஒரேயடியாக தீவிரப்படுத்துவதற்கான திட்டங்களால் மேலாதிக்கம் செலுத்தப்படுவதுடன், ஸ்தாபக முதலாளித்துவ அரசியலுக்குள் ஐரோப்பிய அதிவலதை இன்னும் கூடுதலாக ஒருங்கிணைப்பது மீதான விவாதங்களும் இதில் உள்ளடங்கும்.

வலமிருந்து, பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், ஜப்பானின் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பிரிட்டனின் பிரதமர் ரிஷி சுனக், ஐரோப்பிய கவுன்சில் தலைவர் சார்லஸ் மைக்கேல், ஜெர்மன் சான்சிலர் ஓலாஃப் ஷோல்ஸ் மற்றும் இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி ஆகியோர் போர்கோ எக்னாசியாவில் நடக்கும் ஜி 7 உலகத் தலைவர்கள் உச்சிமாநாட்டின் போது ஸ்கை டைவிங் ஆர்ப்பாட்டத்தைப் பார்க்கின்றனர், இத்தாலி, வியாழன், ஜூன் 13, 2024. [AP Photo]

இந்த நிகழ்வு முதலாளித்துவ ஜனநாயகத்தின் அழுகிய நிலையை தெளிவாக சித்தரிப்பதுடன், அனைத்து பிரதான ஏகாதிபத்திய மையங்களிலும் நிதி மூலதனத்தின் அப்பட்டமான சர்வாதிகாரத்தை அம்பலப்படுத்துகிறது. 8,000 க்கும் அதிகமான இராணுவ மற்றும் பாதுகாப்பு சிப்பாய்களின் பாதுகாப்புடனும், மாநாட்டின் ஊடக மையத்தில் இருந்து 80 கிலோமீட்டர் தொலைவிலும், போர் குற்றவாளிகளின் ஒரு கும்பல், அவர்களின் போட்டியாளர்களுக்கு எதிரான வர்த்தக போர் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தவும் மற்றும் உலகெங்கிலும் ஏகாதிபத்திய போரை விரிவாக்கவும் சதி செய்து வருகிறது. இந்த ஏழு தலைவர்களும் வாக்காளர்களால் வெறுக்கப்படும் அரசாங்கங்களுக்கு தலைமை கொடுக்கின்றனர் என்பதோடு, பாலஸ்தீனர்களுக்கு எதிரான இஸ்ரேலின் இனப்படுகொலையை ஆதரித்துள்ளனர் மற்றும் ஒரு பேரழிவுகரமான அணுஆயுத மோதலின் அபாயத்தில் ரஷ்யா மீதான அமெரிக்க-நேட்டோ போரைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

சட்டவிரோத கொள்ளை மற்றும் சூறையாடல் முறைகளை அவர்கள் நாடுவதை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில், பிப்ரவரி 2022 இல் உக்ரேன் மீதான ரஷ்யாவின் அமெரிக்க-தூண்டுதல் படையெடுப்பைத் தொடர்ந்து ரஷ்ய மத்திய வங்கியில் இருந்து சட்டவிரோதமாக கைப்பற்றப்பட்ட நிதிகளைக் கொண்டு உக்ரேனில் இரத்தக்களரி படுகொலைக்கு நிதியளிப்பதற்கான ஒரு ஒப்பந்தத்தை உருவாக்குவதில் தலைவர்கள் முதல் நாளின் கணிசமான பகுதியை செலவிட்டனர். உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி கோரிய மொத்த 260 பில்லியன் யூரோ சொத்துக்களைக் காட்டிலும், கியேவில் அதிவலது ஆட்சிக்கு 47 பில்லியன் யூரோக்களை (50 பில்லியன் டாலர்) ஒப்படைப்பதற்கான முடிவு, உலகின் கையிருப்பு நாணயமாக டாலரின் ஏற்கனவே ஆபத்தான நிலையை பலவீனப்படுத்தாமல் போருக்கு தொடர்ந்து நிதியாதாரம் வழங்குவதை நோக்கமாக கொண்டிருந்தது.

போர்கோ எக்னாசியாவில் இருக்கும் ஏழு தலைவர்களும் அரசியல் ரீதியாக திவாலானவர்கள் ஆவர். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நவம்பரில் பாசிச டொனால்ட் டிரம்பிடம் அதிகாரத்தை இழக்க வாய்ப்புள்ளது. கடந்த ஞாயிறன்று நடந்த ஐரோப்பியத் தேர்தலில் 1887 க்குப் பின்னர் மிக மோசமான தேர்தல் முடிவுகளைப் பெற்ற சமூக ஜனநாயகக் கட்சியினரின் ஜேர்மன் சான்சிலர் ஓலாவ் ஷொல்ஸ், அதன் ஏகாதிபத்தியப் போர் மற்றும் சிக்கன நடவடிக்கைகளுக்கான வேலைத்திட்டத்திற்கு மக்கள் ஆதரவின் எந்த அடித்தளமும் இல்லாத ஒரு அரசாங்கத்திற்கு தலைமை கொடுக்கிறார். பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் இன்னும் சில வாரங்களில் பதவியில் இருந்து நீக்கப்படுவார். இவர்களது பிரெஞ்சு சமதரப்பான ஜனாதிபதி இமானுவல் மக்ரோன், அவரது கட்சியை விட இரண்டு மடங்கு வாக்குகளை வென்ற பாசிசவாத தேசிய பேரணி (Rassemblement National – RN) கட்சியிடம் ஐரோப்பியத் தேர்தல்களில் அவமானகரமான தோல்வியால் பாதிக்கப்பட்ட பின்னர், ஒரு முன்கூட்டிய நாடாளுமன்ற தேர்தலுக்கு அழைப்பு விடுத்தார். மக்ரோன் RN தலைவர் மரின் லு பென்னின் ஒரு “ஜனநாயக” எதிர்ப்பாளராக காட்டிக் கொண்ட அதேவேளையில், வெறும் சில நாட்களுக்குப் பின்னர் பாசிசவாத மெலோனியின் அழைப்பின் பேரில் ஒரு ஆடம்பர உல்லாச விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

முதலாளித்துவ வருணனையாளர்களே கூட ஒப்புக் கொள்ள நிர்பந்திக்கப்படும் இந்த பரவலான நெருக்கடிக்கு மத்தியில், “இல் டியூஸ்” பெனிட்டோ முசோலினியின் ஒரு அபிமானியான மெலோனியை “ஸ்திரப்பாட்டின்” பிரதான ஆதாரமாக சித்தரிக்க ஒரு ஒருங்கிணைந்த பிரச்சாரம் நடந்து வருகிறது. முசோலினியை ஒரு “சிக்கலான ஆளுமை” என்றும், அவரை “வரலாற்று உள்ளடக்கத்தில்” கருதப்பட வேண்டும் என்றும் 47 வயதான இத்தாலிய பிரதம மந்திரி விவரித்துள்ளார். இத்தாலியின் பாசிச சர்வாதிகாரியின் மரபியத்தை பாதுகாத்த ஒரு நவபாசிச அமைப்பான Movimento Sociale Italiano இல் மெலோனி தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். முசோலினியின் வழித்தோன்றல்களை தேர்தல் வேட்பாளர்களாக நியமித்துள்ள மற்றும் அதன் உறுப்பினர்கள் பொதுக் கூட்டங்களில் ரோமன் வணக்கத்தை வாடிக்கையாக செய்யும் ஒரு கட்சியான Fratelli d’Italia வை அவர் இப்பொழுது வழிநடத்துகிறார்.

கியேவ் ஆட்சிக்கு தொடர்ந்து நிதியளிப்பதிலும் ஞாயிற்றுக்கிழமை தேர்தலைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்ட அதிகாரிகளைத் தேர்ந்தெடுப்பதிலும் மெலோனி ஒரு “முக்கிய பாத்திரம்” வகிக்கிறார் என்று ஜேர்மன் நாளிதழ் Frankfurter Allgemeine Zeitung கூறுகிறது. உச்சிமாநாட்டில் பங்கெடுத்த மூன்று ஐரோப்பிய ஒன்றிய அரசு தலைவர்களை மதிப்பீடு செய்த இத்தாலிய கொரியர் டெல்லா செரா பத்திரிகையானது, ஷொல்ஸ் மற்றும் மக்ரோனை “நொண்டி வாத்துகள்” என்று விவரித்தது. “ஒரு அன்னமாக மாறியுள்ள முன்னாள் இறையாண்மைவாத அருவருப்பான வாத்து ஜியோர்ஜியா மெலோனியை” அவர்கள் சந்தித்து வருகின்றனர் என்று கொரியர் எழுதியது.

கூட்டத்தின் தொகுப்பாளராக, சவுதி அரேபியா, ஜோர்டான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் சர்வாதிகார தலைவர்கள், தீவிர வலதுசாரி இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அர்ஜென்டினாவின் பாசிச ஜனாதிபதி ஜேவியர் மிலேய் போன்ற நன்கு அறியப்பட்ட “ஜனநாயகவாதிகளை” பணி அமர்வுகளில் பங்கேற்க மெலோனி அழைத்தார். போர் வெறியர்கள் மற்றும் சர்வாதிகாரிகளின் இந்த கூட்டத்திற்கு போப் பிரான்சிஸ் தனது ஆசீர்வாதத்தை வழங்கினார். கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் அதன் 50 ஆண்டு வரலாற்றில் ஜி 7 உச்சிமாநாட்டில் பங்கேற்பது இதுவே முதல் முறையாகும்.

வெள்ளியன்று ஒரு சிறப்பு கூட்டத்தொடர் ஆபிரிக்காவில் முதலீடு செய்வது குறித்தும் ஐரோப்பாவிற்கு குடியேறுவதை நிறுத்துவது குறித்தும் அர்ப்பணிக்கப்படுகிறது. இதில் அல்ஜீரியா, துனிசியா மற்றும் மொரிட்டானியா ஆகிய நாடுகளின் சர்வாதிகார ஆட்சியாளர்களும் அடங்குவர். இந்தாண்டின் தொடக்கத்தில், துனிசியாவுடனான ஒரு அருவருப்பான உடன்படிக்கையை இறுதி செய்வதில் ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழுவின் தலைவர் ஊர்சுலா வொன் டெர் லெயனை (Ursula Von der Leyen) மெலோனி ஆதரித்தார். புலம்பெயர்ந்தவர்களில் பெரும்பாலானவர்கள் போர் மூலமாகவோ அல்லது சர்வதேச நாணய நிதியம் கட்டளையிட்ட பொருளாதார “சீர்திருத்தங்கள்” மூலமாகவோ ஏகாதிபத்திய சக்திகளால் நாசமாக்கப்பட்ட நாடுகளிலிருந்து தப்பி வருபவர்களை மத்திய தரைக்கடலைக் கடந்து தப்பி வருபவர்களைத் தடுப்பதற்கான ஆட்சியின் வாக்குறுதிக்கு பிரதிபலனாக, பில்லியன் கணக்கான யூரோக்களை ஆதரவாக வழங்கியது.

பெயரளவிலான “ஜனநாயக” அரசாங்கங்களுக்கும் மெலோனி, ஜேர்மனிக்கான மாற்றீடு (AFD) மற்றும் லு பென் போன்ற பாசிசவாத சக்திகளுக்கும் இடையிலான வேறுபாடு அதிகரித்தளவில் மறைந்து வருகிறது. ஸ்பெயினின் பாசிசவாத வோக்ஸ் (Vox) மற்றும் அதிவலது சுவீடன் ஜனநாயகக் கட்சியினரை உள்ளடக்கிய ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் இந்தக் கட்சிகளது ஒரு கூட்டணிக்கு தலைமை கொடுக்கும் மெலோனியை, இரண்டாவது பதவிக்காலத்திற்கு அவரை ஆதரிக்க சம்மதிக்க வைப்பதற்காக வொன் டெர் லெயென் அந்த உச்சிமாநாட்டில் அவர் தனது பிரசன்னத்தை சுரண்டிக் கொள்ள உத்தேசித்துள்ளார். ஜேர்மனியின் சமூக ஜனநாயகக் கட்சி தலைமையிலான அரசாங்கம், ரஷ்யாவுக்கு எதிரான போரைத் தொடுப்பதுக்கு அதன் மீள்இராணுவமயமாக்கல் மற்றும் ஆக்ரோஷமான பாத்திரத்தின் பாகமாக, AFD இன் புலம்பெயர்ந்தோர்-விரோத வேலைத்திட்டத்தை அமல்படுத்தியுள்ளதோடு, காஸாவில் இஸ்ரேலின் ஏகாதிபத்திய ஆதரவிலான இனப்படுகொலைக்கு எதிரான போராட்டங்களை மூர்க்கமாக ஒடுக்கி ஒரு போலிஸ் அரசை உருவாக்குவதற்கு களம் அமைத்துள்ளது.

இந்த நிகழ்ச்சிப்போக்கு அமெரிக்காவில் அதன் கூர்மையான வெளிப்பாட்டைக் காண்கிறது. இது, ஒரு சில மாதங்களில் ஒரு பாசிச கும்பலின் உதவியுடன் கடந்த ஜனாதிபதித் தேர்தலை கவிழ்க்க முயன்ற, குற்றவியல் முறையில் தண்டிக்கப்பட்டுள்ள ஒரு ஜனாதிபதியால் ஆளப்படலாம். வியாழக்கிழமை ஜி7 கூட்டங்களைத் தொடர்ந்து, பைடென் அதிவலது செலென்ஸ்கி ஆட்சியுடன் 10 ஆண்டு கால இருதரப்பு பாதுகாப்பு உடன்படிக்கையில் கையெழுத்திட்டார், இந்த ஆட்சி அமெரிக்க தலைமையிலான போர் எதிர்ப்பாளர்களை ஈவிரக்கமின்றி துன்புறுத்தி வருகிறது மற்றும் நூறாயிரக் கணக்கானவர்களை போர்முனையில் படுகொலை செய்வதற்கு இழுத்து வருகிறது. நாசி ஒத்துழைப்பாளர் ஸ்டீபன் பண்டேரா மற்றும் அவருடைய உக்ரேனிய தேசியவாதிகள் அமைப்பில் இருந்து உத்வேகம் பெறும் ஒரு பாசிசப் பிரிவான அசோவ் படைப்பிரிவுக்கு (Azov Battalion) ஆயுதங்கள் அனுப்புவதற்கான தடைகளையும் வெள்ளை மாளிகை அகற்றியுள்ளதாக வாஷிங்டன் போஸ்ட் முன்னதாக அறிவித்தது.

பிரதான முதலாளித்துவ நாடுகளில் ஆளும் உயரடுக்குகள் பாசிச வலதுசாரிகளை திட்டமிட்டு ஊக்குவிப்பதென்பது ஏகாதிபத்தியத்தின் நலன்களுடன் பொருந்துகிறது. ஜி-7 உச்சிமாநாட்டில், விவாதங்கள் ரஷ்யாவுக்கு எதிரான போரின் ஒரு பாரிய தீவிரப்பாட்டைச் சுற்றி வரும். இது, வளங்கள் நிறைந்த மற்றும் புவிசார் மூலோபாயரீதியில் முக்கியமான நாட்டை ஏகாதிபத்திய சக்திகளுக்கு அடிபணிய வைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் உலகை மறுபங்கீடு செய்வதில் ஈடுபட்டுள்ளனர். இதில் சீனாவிற்கு எதிரான போர் தயாரிப்புகள், மற்றும் ஈரானை இலக்கில் வைக்கும் மத்திய கிழக்கிலான ஒரு போரின் ஒரு கூறுபாடாக பாலஸ்தீனர்களுக்கு எதிரான இஸ்ரேலின் இனப்படுகொலையை ஆதரிப்பது ஆகியவை அடங்கும். அமெரிக்க ஏகாதிபத்தியம் இந்த பல்வேறு முனைகளையும் ஒரு ஒற்றை உலகளாவிய மோதலின் பாகமாக எவ்வாறு பார்க்கிறது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில், உக்ரேனில் போரை நடத்த ரஷ்யாவுக்கு உதவியதாக அது குற்றஞ்சாட்டும் 300 தனிநபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு எதிரான வாஷிங்டனின் சமீபத்திய தடையாணை தொகுப்பில் பல சீன நிறுவனங்களும் உள்ளடங்கும்.

உலகப் போரை நோக்கி பொறுப்பற்ற முறையில் திரும்பியுள்ள நிலையில், அனைத்து முக்கிய நாடுகளிலும் உள்ள ஏகாதிபத்தியவாதிகள் தங்கள் நிலைமையை தங்கள் போட்டியாளர்களின் இழப்பில் வலுப்படுத்திக் கொள்ள நோக்கம் கொண்டுள்ளனர். அந்த நாடுகளுடன் அவர்கள் தற்போது பெயரளவிற்கு இணைந்துள்ள நாடுகளும் உள்ளடங்கும். இந்த இலக்கிற்காக, ஏகாதிபத்தியம், லெனினின் வார்த்தைகளில் கூறுவதானால், “ஜனநாயகத்திற்காக அல்ல, மாறாக சர்வாதிகாரத்திற்காகவே பாடுபடுகிறது.” சமூக வாழ்வின் அனைத்து கூறுபாடுகளும் இராணுவவாதத்திற்கும் போர் தொடுப்பதற்கும் அடிபணியச் செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு நாட்டின் ஆளும் வர்க்கமும் எந்த வெகுஜன அதிருப்தியையும் சகித்துக் கொண்டிருக்க மாட்டாது. இல்லாவிட்டால் அது கொள்ளையடித்த பொருட்களில் அதன் பங்கை அபகரித்துக் கொள்ளும் அதன் திறன்களை குறைமதிப்பிற்கு உட்படுத்திவிடும்.

இரண்டாம் உலகப் போரை பாசிசத்திற்கு எதிராக “ஜனநாயகத்தை” பாதுகாப்பதற்கான ஒரு போராக சித்தரித்த அவர் காலத்திய முதலாளித்துவ பிரச்சாரகர்களுக்கு விடையிறுக்கையில், ட்ரொட்ஸ்கி இரண்டாம் உலகப் போரின் ஆரம்ப கட்டங்களில் “ஏகாதிபத்தியப் போர் மீதான நான்காம் அகிலத்தின் அறிக்கையில்” பின்வருமாறு எழுதினார்:

ஜனநாயகத்தை பிற்போக்குத்தனமான சர்வாதிகாரங்களாக மாற்றும் செயல்முறையை போர் நிறுத்தவில்லை, மாறாக இந்த நிகழ்ச்சிப்போக்கை நம் கண் முன்னாலேயே அதன் முடிவுக்கு கொண்டு சென்று கொண்டிருக்கிறது...

ஒரு சர்வாதிகார ஆட்சியின் அனுகூலங்களிலிருந்து ஆதாயம் தேடும் ஏகாதிபத்திய ஜனநாயகங்கள் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான தங்கள் முயற்சிகளை இரட்டிப்பாக்குவதன் மூலமும் புரட்சிகர அமைப்புகளைத் துன்புறுத்துவதன் மூலமும் தங்களுடைய சொந்த பாதுகாப்பைத் தொடங்குகின்றன. போரின் ஆபத்து, இப்போது போரே, எல்லாவற்றிற்கும் மேலாக அவர்களின் உள் எதிரிகளை நசுக்க உதவுகிறது. முதலாளித்துவம் மாறாத மற்றும் அசைக்க முடியாத விதியைப் பின்பற்றுகிறது: “முக்கிய எதிரி அதன் சொந்த நாட்டில் இருக்கிறது.”

ஏகாதிபத்திய உலகப் போர், இனப்படுகொலை மற்றும் பாசிசத்தை ஊக்குவித்தல் ஆகியவற்றுக்கு எதிரான போராட்டத்துக்கு சர்வதேச தொழிலாள வர்க்கம் மட்டுமே தலைமை கொடுக்க முடியும். காஸா இனப்படுகொலைக்கு எதிராக உலகம் முழுவதும் வெடித்துள்ள வேலைநிறுத்தங்கள் மற்றும் வெகுஜன எதிர்ப்புகள் என்பன இராணுவ மறுகட்டமைப்புக்கு பணம் செலுத்துவதற்காக தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தின் மீது நடத்தப்படும் பெரும் தாக்குதல்கள், மற்றும் ஏகாதிபத்திய போர் மற்றும் சூறையாடலுக்கு எதிரான மக்களின் பரந்த பகுதியினரிடையே உள்ள விரோதப் போக்கை எடுத்துக்காட்டுகின்றன. உலகப் போர் மற்றும் பாசிசத்தின் மீள்வருகையானது, முதலாளித்துவ இலாப அமைப்பு முறையில் வேரூன்றியுள்ளது என்பதையும், முதலாளித்துவ இலாப அமைப்பு முறை சோசலிசத்திற்கான தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர போராட்டத்தின் மூலம் ஒழிக்கப்பட வேண்டும் என்பதையும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் புரிந்து கொள்ள போராடுவதே அவசர பணியாகும்..

Loading