காஸா இனப்படுகொலை மற்றும் ரஷ்யாவுக்கு எதிரான நேட்டோ போர் வேண்டாம்! ஸ்டார்மரின் தொழிற்கட்சிக்கு ஒரு சோசலிச மாற்றீட்டிற்காக போராடு! ஒரு சோசலிச போர்-எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியெழுப்பு!

பொதுத் தேர்தல் விஞ்ஞாபனம்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

சோசலிச சமத்துவக் கட்சி (SEP) தொழிலாள வர்க்கத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு சோசலிச போர்-எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியெழுப்புவதற்காக பிரிட்டிஷ் பொதுத் தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்துகிறது.

காஸாவில் 38,000 க்கும் அதிகமான பாலஸ்தீனியர்களைக் கொன்ற இனப்படுகொலையை இஸ்ரேலிய அரசு நடத்தி வருகின்ற நிலையில், அதற்கு பழமைவாதிகள் மற்றும் தொழிற்கட்சி ஆதரவளிப்பதற்கும் ஆயுதமளிப்பதற்கும் ஐக்கிய இராஜ்ஜியத்தில் (UK) மில்லியன் கணக்கான தொழிலாளர்களும் இளைஞர்களும் அவர்களை வெறுப்பதுடன் ஒரு மாற்றீட்டை விரும்புகின்றனர்.

பிரிட்டன், அமெரிக்கா மற்றும் பிற ஏகாதிபத்திய சக்திகள் உக்ரேனில் அணுஆயுத பேரழிவை ஏற்படுத்தக்கூடிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அது பூமியில் உள்ள அனைத்து உயிர்களையும் அழிக்க அச்சுறுத்துகிறது என்பது நன்கு புரிந்து கொள்ளப்படவில்லை. இனப்படுகொலை மற்றும் போருக்கு அடித்தளத்தளமாக உள்ள காரணமான தீர்க்கவியலாத உலகளாவிய நெருக்கடியான உலக முதலாளித்துவ அமைப்புமுறை, காட்டுமிராண்டித்தனத்திற்குள் இறங்குகிறது.

தொழிலாள வர்க்கம் எதிர்கொள்ளும் கூர்மையான ஆபத்துக்கள் சம்பந்தமாக முதலாளித்துவ ஊடகங்கள், பிரதான கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் “இடது” என்று சொல்லிக் கொள்பவை கடந்து செல்லும் மௌனத்தின் சதியை உடைப்பதற்கு, சோசலிச சமத்துவக் கட்சி இந்தத் தேர்தலைப் பயன்படுத்துகிறது. நாங்கள் ஒரு சோசலிச மாற்றீட்டை கட்டியெழுப்ப விரும்புகிறோம்.

காஸாவில் பாலஸ்தீனியர்கள் மீதான இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு எதிரான பாரிய எதிர்ப்பானது, ஐக்கிய இராஜ்ஜியம் (UK), அமெரிக்கா மற்றும் பிற நேட்டோ ஏகாதிபத்திய சக்திகளின் பரந்த போர் நோக்கங்களுக்கு எதிரான ஒரு அரசியல் போராட்டத்தின் ஈட்டிமுனையாக மாற வேண்டும். இஸ்ரேலின் பாரிய படுகொலை மற்றும் இனச்சுத்திகரிப்பு ஆகியவற்றிற்கான அவர்களின் ஆதரவு, ரஷ்யா, ஈரான் மற்றும் சீனாவுடனான முன்னேறிய போர் தயாரிப்புகளை மையமாகக் கொண்ட உலகையும் அதன் ஆதார வளங்களையும் ஒரு புதிய இராணுவ துண்டாடலுக்கான திட்டங்களுடன் பின்னிப்பிணைந்துள்ளது.

ஒரு புதிய போர்-எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு தொழிற்கட்சியுடன் நிரந்தரமான முறிவு அவசியமாகும்.

காஸா இனப்படுகொலைக்கு கன்சர்வேடிவ் கட்சியின் ஆதரவைத் தொடரும் மற்றும் ரஷ்யாவுடனான அமெரிக்க தலைமையிலான போரில் பிரிட்டனின் முன்னணி பாத்திரத்தைத் தொடரும் ஒரு அரசாங்கத்தை அமைக்க சேர் கெய்ர் ஸ்டார்மர் விரும்புகிறார். உக்ரேனுக்கு நேட்டோ துருப்புகளை அனுப்புவதையும், பிரிட்டன், ஐரோப்பா மற்றும் உலகை போருக்குள் இழுக்கக் கூடிய நேட்டோ விநியோகித்த ஆயுதங்களையும் கொண்டு ரஷ்ய மண்ணில் ஏவுகணைத் தாக்குதல்களையும் தொழிற்கட்சி ஆதரிக்கிறது. அவற்றைப் பயன்படுத்துவேன் என்ற ஸ்டார்மரின் உறுதிமொழி ஆதரவுடன், பிரிட்டனின் அணு ஆயுதத் திட்டத்தை வலுப்படுத்த அது உறுதிபூண்டுள்ளது.

தொழிற்கட்சியின் தலைவர் சேர் கெய்ர் ஸ்டார்மர், மேற்கு சசெக்ஸில் பாதுகாப்பு குறித்து முக்கிய உரையை நிகழ்த்துகிறார், மே 27, 2024. [Photo by Keir Starmer/Flickr / CC BY-NC-ND 2.0]

இந்த அளவிலான ஒரு போர், ஏற்கனவே தொழிலாள வர்க்க இளைஞர்கள் மற்றும் குடும்பங்கள் உயிர்வாழ போராடிக்கொண்டிருக்கும் காட்டுமிராண்டித்தனமான சிக்கன நடவடிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று கோருகிறது. ஆளும் வர்க்கம் “சமாதான பங்காதாயத்தை முடிவுக்குக் கொண்டுவர” கோருகிறது, இதன் அர்த்தம், போருக்கு செலவிட தேசிய சுகாதார சேவை, சமூக பாதுகாப்பு மற்றும் அனைத்து அத்தியாவசிய சேவைகளுக்கும் ஒரு இறுதி மரண அடி வழங்கப்பட வேண்டும் என்பதாகும்.

இது, அதிவலதின் வளர்ச்சிக்கு எரியூட்டுகின்ற “பலமான எல்லைகளின்” தேவை மீது தேசியவாதம் மற்றும் புலம்பெயர்ந்தோர்-விரோத இனவெறி மனோபாவத்தை தூண்டிவிடுவதுடன் சேர்ந்துள்ளது. யூத எதிர்ப்பு என்ற பொய்யான குற்றச்சாட்டுக்களைப் பயன்படுத்தி காஸா மீதான எதிர்ப்புக்களை குற்றமாக்கும் பிரச்சாரத்துடன் ஜனநாயக உரிமைகள் மீதான ஒரு கூட்டு நேரடித் தாக்குதல் ஏற்கனவே தொடங்கிவிட்டது.

எனவேதான் சோசலிச சமத்துவக் கட்சி அதன் துணை தேசிய செயலாளர் ரொம் ஸ்க்ரிப்ஸை ஸ்டார்மருக்கு எதிராக ஹோல்போர்ன் மற்றும் செயின்ட் பான்கிராஸில் நிறுத்துகிறது. ஸ்டார்மர் மற்றும் தொழிற்கட்சிக்கு அளிக்கும் வாக்கு சிக்கன நடவடிக்கைகள், அடக்குமுறை, இனப்படுகொலை மற்றும் போருக்கான வாக்கு! ஸ்க்ரிப்ஸ் மற்றும் சோசலிச சமத்துவக் கட்சிக்கு அளிக்கும் வாக்கானது சமத்துவம், சமாதானம் மற்றும் சோசலிசத்திற்கான ஒரு வாக்கு ஆகும்!

ஸ்காட்லாந்தில், டேரன் பாக்ஸ்டன், இன்வெர்னெஸ், ஸ்கை மற்றும் வெஸ்ட் ரோஸ்-ஷையரில் நிற்கிறார்.

ரொம் ஸ்க்ரிப்ஸ் (இடது) மற்றும் டேரன் பாக்ஸ்டன்

பிரிட்டனின் போருக்கான தேர்தல்

பிரதம மந்திரி ரிஷி சுனக், தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்களுடன் ஒரு பெரிய மோதலைக் கோரும் ஐரோப்பிய அளவிலான போரில் ஒரு புதிய கட்டத்திற்கான அரசியல் கட்டமைப்பை உருவாக்க முன்கூட்டிய திடீர் பொதுத் தேர்தலுக்கு அழைப்பு விடுத்தார்.

பிரிட்டன், அமெரிக்கா மற்றும் பிற பிரதான சக்திகளின் ஆதரவுடன் நெதன்யாகுவின் அதிவலது அரசாங்கத்தால் காஸாவில் நடத்தப்பட்டு வருகின்ற கொடூரமான குற்றங்களுக்கு எதிரான பாரிய ஆர்ப்பாட்டங்கள் மில்லியன் கணக்கானவர்களை அணிதிரட்டி உள்ளன. இஸ்ரேலிய அரசாங்கம் அதன் இராணுவத் தாக்குதலை விரிவுபடுத்தி வருகின்ற நிலையிலும், ரஷ்யாவுடனான நேட்டோ போரின் முழு விளைவுகள் தெளிவாகி வருகின்ற நிலையிலும், ஆளும் வர்க்கம் இன்னும் பெரியளவில் எதிர்ப்பு வெடிக்கக்கூடும் என்று அஞ்சுகிறது.

காஸா நகரில் உள்ள ஷிஃபா மருத்துவமனையின் இடிபாடுகள், ஏப்ரல் 1, 2024 திங்கட்கிழமை. [AP Photo/Mohammed Hajjar]

“ரஷ்யா, ஈரான், வட கொரியா மற்றும் சீனா போன்ற சர்வாதிகார அரசுகளின் அச்சை” எதிர்த்துப் போராட வேண்டியதன் அவசியத்தை மேற்கோள் காட்டி, தேர்தலை தீர்மானிக்கும் முக்கிய பிரச்சினை தேசிய பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று சுனக் அறிவித்தார். இனப்படுகொலை எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை யூத எதிர்ப்பு என்று கண்டனம் செய்வதற்கு முன்பு, இந்த உலகளாவிய பதட்டங்கள் “நமது மதிப்புகளை குறைமதிப்பிற்கு உட்படுத்த முயலும் தீவிரவாதிகளால் சுரண்டப்படுகின்றன” என்று அவர் கூறினார்.

தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களின் எத்தகைய எதிர்ப்பையும் மீறி பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் போர்த் திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதே அடுத்த அரசாங்கத்தின் பணியாக இருக்கும் என்பதை இந்த அறிக்கைகள் தெளிவுபடுத்துகின்றன. பிரான்சில் ஒரு முன்கூட்டிய பொதுத் தேர்தல் குறித்த அறிவிப்பால் இது உறுதிப்படுத்தப்படுகிறது, அங்கு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் ரஷ்யா மீது போர் தொடுக்க ஏதோவொரு வடிவிலான தேசிய ஐக்கிய அரசாங்கத்தை உருவாக்க முனைவதன் மூலமாக அதிவலதின் வளர்ச்சிக்கு விடையிறுத்துள்ளார், அதற்காக அவர் பிரதான ஆலோசகராக ஆகியிருக்கிறார்.

மத்திய கிழக்கில், காஸாவில் இறப்பு எண்ணிக்கை பெருகுகையில், லெபனானில் ஹிஸ்புல்லாவிற்கு எதிரான இஸ்ரேலிய ஆக்கிரோஷம் அதிகரித்துள்ளதுடன், இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்கள் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன.

உக்ரேனில், நேட்டோ வழங்கிய நீண்ட தூர ஏவுகணைகள் மூலம் ரஷ்ய எல்லையைத் தாக்கும் கியேவ்வின் உடன்பாடு, நேட்டோ நாடுகளின் படையினர்களை போர் முன்னரங்கில் போரிட அனுப்பும் திட்டங்களுடன் சேர்ந்து, புதிய பீரங்கித் தீவனத்தை வழங்குவதற்கு கட்டாய இராணுவ சேவையைத் திணிக்கும் திட்டங்களுடன் சேர்ந்து வருகிறது. நூறாயிரக்கணக்கான துருப்புக்களை கிழக்கு போர்முனைக்கு விரைவாக நிலைநிறுத்த அனுமதிக்கும் வகையில் நேட்டோ ஐரோப்பாவில் இராணுவத்திற்கான வழங்கல் பாதைகளை அமைத்துள்ளது.

ஏப்ரல் 26, 2023 புதன்கிழமை உக்ரேனிய மற்றும் ரஷ்ய துருப்புக்களுக்கு இடையே கடுமையான போர்கள் நடந்த இடமான உக்ரைனின் பக்முத்தில் உள்ள கட்டிடங்களில் இருந்து புகை எழுகிறது. April 26, 2023. [AP Photo/Libkos]

1991 இல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதன் அடிப்படையிலும் மற்றும் 1917 அக்டோபர் புரட்சிக்குப் பின்னர் தேசியமயமாக்கப்பட்ட அரசு சொத்துக்களை தனியார்மயமாக்கி சூறையாடுவதன் அடிப்படையிலும் அதிகாரத்திற்கு வந்த ரஷ்ய முதலாளித்துவ செல்வந்த தன்னலக்குழுவின் நலன்களுக்காக ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் தொடங்கிய “சிறப்பு இராணுவ நடவடிக்கையில்” சிறிதளவும் முற்போக்கானது எதுவுமில்லை. புட்டின் அரசாங்கம், அதன் திவாலான “மாபெரும் ரஷ்ய” தேசியவாத முன்னோக்கின் அடிப்படையில், அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான அச்சுறுத்தல்கள் உட்பட அதன் சொந்த பொறுப்பற்ற மற்றும் ஆத்திரமூட்டும் இராணுவ தீவிரப்படுத்தல்களுக்கு உந்தப்பட்டு வருகிறது.

ஆனால், ரஷ்யாவின் படையெடுப்பிற்கான எதிர்ப்பு என்பது நேட்டோ ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவாக மாறக்கூடாது. நேட்டோ வேண்டுமென்றே கிரெம்ளினின் பிற்போக்குத்தனமான விடையிறுப்புக்கான நிலைமைகளை உருவாக்கி, 1990 முதல் ரஷ்யாவை நோக்கி அதன் இராணுவக் கூட்டணியை கிழக்கு நோக்கி தொடர்ந்து விரிவாக்கி, பின்னர் 2014 இல் வடிவமைக்கப்பட்ட மேற்கத்திய சார்பு ஆட்சிக்கவிழ்ப்பு சதி மூலம் உக்ரேனின் அரசியல் கட்டுப்பாட்டைக் கைப்பற்றியது.

ஜனநாயகத்தின் பாதுகாவலராக சித்தரிக்கப்படும் உக்ரேனிய ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி, நெதன்யாகுவைப் போலவே ஏகாதிபத்திய சக்திகளின் ஒரு வலதுசாரி கைக்கூலியாவார். அவர் நச்சுத்தனமான தேசியவாதிகள் மற்றும் அப்பட்டமான பாசிசவாதிகளின் ஒரு ஆட்சிக்கு தலைமை கொடுக்கிறார், அது வேலைநிறுத்தங்கள், பேச்சு சுதந்திரம் மற்றும் போருக்கு எதிரான அரசியல் எதிர்ப்பை ஈவிரக்கமின்றி ஒடுக்குகிறது, அதேவேளையில் அது அதன் குடிமக்களைச் சுற்றி வளைத்து அவர்களை மரணத்திற்கு செல்ல அனுப்புகிறது.

போருக்கு அதிகரித்து வரும் எதிர்ப்பு மற்றும் கட்டாய இராணுவ சேவைக்கு எதிர்ப்பு ஆகியவற்றுக்கு மத்தியில், ரஷ்யாவின் நலன்களுக்கு சேவை செய்தார் என்ற மோசடியான குற்றச்சாட்டுக்களின் பேரில் நமது தோழரான உக்ரேனிய சோசலிஸ்ட் போக்டன் சிரோடியுக்கை செலென்ஸ்கி அரசாங்கம் கைது செய்துள்ளது. போக்டன், முதலாளித்துவ புட்டின் ஆட்சிக்கும் உக்ரேன் மீதான அதன் படையெடுப்புக்கும் சமரசமற்ற எதிர்ப்பாளர் ஆவார், போருக்கு எதிராக உக்ரேனிய மற்றும் ரஷ்ய தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் ஐக்கியத்திற்காக போராடுகிறார்.

போக்டன் சிரோடியுக், April 2023

போக்டனின் தலைவிதி ஜூலியன் அசான்ஞ்சை பிரதிபலிக்கிறது. அசான்ஞ், இங்கிலாந்தால் 14 ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு, அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படுவதையும் போர்க்குற்றங்களை அம்பலப்படுத்தியதற்காக 175 ஆண்டு சிறைத்தண்டனையையும் எதிர்கொள்கிறார்.

ரஷ்யா, பின்னர் ஈரான் மற்றும் சீனாவுக்கு எதிராக போரை நடத்துவதன் மூலம், நேட்டோ அந்த அரசாங்கங்களை வீழ்த்தி, அத்தியாவசிய இயற்கை வளங்களை நேரடியாகக் கட்டுப்படுத்தும் ஆட்சி மாற்றத்தை செயல்படுத்த நம்புகிறது. இந்த பொறுப்பற்ற விரிவாக்கம் அணு ஆயுதப் போரைத் தூண்டிவிடும் அபாயம் உள்ளது, ஆனால், ஏகாதிபத்திய சக்திகள் அந்த ஆபத்தை எடுக்கத் தயாராக உள்ளன, ஏனென்றால் அவர்கள் எதிர்கொள்ளும் அவநம்பிக்கையான சூழ்நிலையிலிருந்து வெளியேற வேறு வழியைக் காணவில்லை - மேலும் அவை அனைத்து சட்டபூர்வத்தன்மையும் வற்றிப்போன நிலையில் வறிய மற்றும் அமைதியற்ற மக்கள் மீது ஆட்சி செய்கின்றன.

போர்க்கால “தேசிய ஐக்கியம்” என்ற பெயரில் ஜனநாயக உரிமைகளை ஒடுக்குவதற்கான நிலைமைகளை வெளிநாடுகளில் போர் உருவாக்குமென ஐக்கிய இராஜ்ஜியத்திலும் சர்வதேச அளவிலும் ஆளும் உயரடுக்குகள் கணக்கிடுகின்றன. தொழிலாள வர்க்கத்தின் பரந்த இயக்கம் பற்றிய பீதியை பிரதிபலிக்கும் வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை தடை செய்வதற்கான திட்டங்களும் இதில் அடங்கும். தொழிலாள வர்க்கம் தங்கள் உயிர்களை விலையாக கொடுத்து யுத்தத்திற்கு விலை கொடுக்க நிர்ப்பந்திக்கப்படும் மற்றும் சமூக வேலைத்திட்டங்களை அழிப்பதும் இதில் அடங்கும்.

ஸ்டார்மரின் இனப்படுகொலை மற்றும் போருக்கான தொழிற்கட்சி

ஸ்டார்மர் மற்றும் பிற தொழிற்கட்சி தலைவர்கள், “தற்காப்புக்கான உரிமையை” இஸ்ரேல் கோருவதை அடிப்படையாகக் கொண்டு, காஸாவில் பாரிய படுகொலை மற்றும் இனச் சுத்திகரிப்புக்கு ஆதரவளிப்பதற்காக வெறுக்கப்படுகிறார்கள். ஆனால், ஸ்டார்மரின் “சியோனிசத்தின் கட்சி”தான் “நேட்டோவின் கட்சியாகும்”. காஸா அட்டூழியங்களைவிட ஆயிரம் மடங்கு பெருகுவதைக் காணும் ஒரு போருக்கு பிரிட்டனை இழுக்க ஒரு தொழிற்கட்சி அரசாங்கத்தின் செயலூக்கமான மற்றும் மேம்பட்ட தயாரிப்பு பொதுமக்களின் பார்வையில் இருந்து மறைக்கப்பட்டுள்ளது.

சுனக்கின் திடீர் பொதுத் தேர்தல் அறிக்கைக்கு ஸ்டார்மர் பிரிட்டனை ஒரு போர் நிலைப்பாட்டில் வைக்க தனது சொந்த அழைப்புடன் பதிலளித்தார். “போருக்குப் பிந்தைய சகாப்தம் முடிந்துவிட்டது” என்று அவர் அறிவித்தார். “இந்த தொழிற்கட்சி நமது தேசத்தின் பாதுகாப்புக்கு முற்றிலும் அர்ப்பணிப்புடன் உள்ளது. குறப்பாக, நமது ஆயுதப் படைகளுக்கும் மற்றும், முக்கியமாக, நமது அணுசக்தி தடுப்புக்கு ஆகும்” என்று குறிப்பிட்டார்.

தொழிற்கட்சித் தலைவர் சேர் கெய்ர் ஸ்டார்மர் (கீழ் வலது) டிசம்பர் 21, 2023 அன்று எஸ்டோனியாவிற்கு விஜயம் செய்து, அங்குள்ள டாபா நேட்டோ மேம்படுத்தப்பட்ட முன்னோக்கி இருப்பு இயக்கத் தளத்தில் நிலைகொண்டுள்ள பிரிட்டிஷ் ஆயுதப் படைகளின் ஒரு டாங்கியில் ஏறுகிறார் [Photo by Keir Starmer/Flickr / CC BY-NC-ND 2.0]

தொழிற்கட்சி நான்கு புதிய அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்கும் என்று பெருமைபீற்றிய அவர், “அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கில் இருந்து உலகத் தலைவர்களுக்கு” அவரது அரசாங்கம் “நமது சர்வதேச கடமைப்பாடுகளை எப்போதும் பூர்த்தி செய்யும்” என்று உறுதியளித்தார்.

எனவேதான் வாஷிங்டனும் மற்ற ஏகாதிபத்திய தலைநகரங்களும், பிரிட்டிஷ் ஆயுதப் படைகளும் இலண்டன் நகரமும் ஒரு தொழிற்கட்சி அரசாங்கத்திற்குப் பின்னால் நிற்கின்றன. ரஷ்யாவுக்கு எதிராக போர் தொடுப்பது குறித்து விவாதிக்க ஜூலை 9 அன்று வாஷிங்டன் டி.சி.யில் நடக்கவிருக்கும் நேட்டோ உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதே பிரதம மந்திரியாக ஸ்டார்மரின் முதல் நடவடிக்கையாக இருக்கும்.

தொழிற்கட்சிக்கு வாக்களிப்பது என்பது, டோரிக்களை விட தொழிற்கட்சி “குறைந்த தீமை” என்ற பொய்யை சோசலிச சமத்துவக் கட்சி நிராகரிக்கிறது. புலம்பெயர்ந்தோரை ஒடுக்குவதற்கு ஒரு சிறந்த கொள்கையைக் கொண்டிருப்பதாக தொழிற்கட்சி பெருமையடித்துக் கொள்வதுடன், வரலாற்றிலேயே “மிகவும் வணிக நட்பு அரசாங்கத்தை” அமைக்க வாக்குறுதியளிக்கிறது.

ஆளும் வர்க்கத்திற்கு ஸ்டார்மரின் நிலைப்பாடு தொழிலாள வர்க்கத்தை கண்காணிக்கவும், காட்டிக் கொடுக்கவும், பெருநிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் ஆணைகளை சுமத்தவும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தில் உள்ள தன்னுடைய கூட்டாளிகளை நம்பலாம் என்பதாகும். ஒரு கட்டத்தில் இரண்டு மில்லியன் தொழிலாளர்களை உள்ளடக்கியிருந்த 2022-23 வேலைநிறுத்த அலைக்கு குழிபறிப்பதில் தொழிற்சங்க அதிகாரத்துவம் வகித்த பாத்திரத்தை அவரால் ஆதாரமாக மேற்கோளிட முடியும்.

காஸாவிற்காக ஒரு பெரிய எதிர்ப்பு போராட்ட வாக்கெடுப்பைக் கொண்டு வருவதற்காக அரசியல் வேறுபாடுகளை கைவிட வேண்டும் என்ற அழைப்பை சோசலிச சமத்துவக் கட்சி நிராகரிக்கிறது. போரை நிறுத்து கூட்டணி மற்றும் பல்வேறு போலி-இடது குழுக்களான “போர்நிறுத்தம் இல்லையானால், வாக்களிக்காதே” என்ற வாக்குறுதியானது, ஏனைய எல்லா இடங்களிலும் தொழிற்கட்சிக்கு வாக்களிக்க அழைப்பு விடுக்கின்ற அதேவேளையில், சில போராட்ட வேட்பாளர்களை ஆதரிப்பதை அர்த்தப்படுத்துகிறது. இஸ்ரேலை தொடர்ந்து ஆதரிக்கும் மற்றும் நேட்டோவின் போர்களை நடத்தும் ஒரு அரசாங்கத்தை உருவாக்குவதுடன் இது முடிவடைகிறது. ஜோன் மெக்டொன்னெல் மற்றும் டயான் அபோட் போன்ற தொழிற்கட்சி “இடதுகள்” அனைவரும் அதுபோன்றவொரு அரசாங்கத்திற்காக கடமையுணர்வுடன் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

வடக்கு இஸ்லிங்டனலில் சுயேச்சையாக போட்டியிடும் ஜெரமி கோர்பின், தொழிற்கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார் என்பதால் மட்டுமே அங்கு போட்டியிருகிறார். இப்போதும் கூட, காஸாவில் பாரிய படுகொலை மற்றும் இன சுத்திகரிப்பு, உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான நேட்டோவின் போர் அல்லது வேறு எதற்கும் தொழிற்கட்சியின் ஆதரவு குறித்து அவர் எந்த நேரடி விமர்சனமும் செய்யவில்லை. வடக்கு இஸ்லிங்டன் தொகுதி எல்லைகளுக்குள் தவிர வேறு எங்கும் தொழிற்கட்சியுடன் மோதக்கூடாது என்பதற்காக தன்னுடைய பிரச்சாரத்தை கவனமாக வடிவமைத்துள்ளார் மற்றும் கட்சியை விட்டு நீங்கி ஒரு புதிய அமைப்பை கட்டியெழுப்புமாறு எவருக்கும் அழைப்பு விடுக்கவில்லை.

தொழிற்கட்சித் தலைவராக கோர்பின் இருந்தபோது 2019 பொதுத் தேர்தலின் ஒரு நிகழ்வில், ஜெரமி கோர்பின் (இடது) மற்றும் சேர் கெய்ர் ஸ்டார்மர். [AP Photo/Matt Dunham, File]

2015ல் தொழிற் கட்சியை வழிநடத்துவதற்கு பெரும்பான்மையாக தேர்ந்தெடுக்கப்பட்ட கோர்பினும் அவரது ஆதரவாளர்களும், பிளேயரிசவாதிகளை வெளியேற்ற வேண்டும் என்ற தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் கோரிக்கைகளுக்கு முகம் கொடுக்கத் தவறியதால்தான், ஸ்டார்மர் 10 டவுனிங் தெருவுக்குள் நுழைய தயாராக இருப்பதற்கான ஒரே காரணமாகும். நேட்டோ அங்கத்துவம் மற்றும் அணு ஆயுதங்கள் உட்பட அனைத்து அடிப்படை பிரச்சினைகளிலும் கோர்பின் சரணடைந்தார், பின்னர் கட்சியை ஸ்டார்மரிடம் பணிவுடன் ஒப்படைத்தார். “இடது யூத-எதிர்ப்பு” என்ற பொய்யை எதிர்த்துப் போராட மறுத்தமை, பாரிய வெளியேற்றங்களுக்கும், இப்போது நூற்றுக்கணக்கான யூதர்களும் கலந்து கொண்ட காஸா போராட்டங்களை “வெறுப்பு பேரணிகளாக” விகாரமாக சித்தரிப்பதற்கும் அடித்தளம் அமைத்தது.

ஜோர்ஜ் காலோவேயின் பிரிட்டன் தொழிலாளர் கட்சி மாற்றீடு எதையும் வழங்கவில்லை. “பாரம்பரிய தொழிற்கட்சி மதிப்புகளுக்கு” திரும்புவதாக முன்னெடுக்கப்பட்ட அதன் தேசியவாத மற்றும் முதலாளித்துவ-சார்பு வேலைத்திட்டம், அகதிகளை இலக்கு வைத்து புலம்பெயர்வு மீதான ஒரு ஒடுக்குமுறையை உள்ளடக்கி உள்ளது. மேலும், இது ஆசிய வணிகர்கள், தொழிற்கட்சியின் சந்தர்ப்பவாத அதிகாரிகள், டோரி, தாராளவாத ஜனநாயகவாதிகள் மற்றும் இன்னும் மோசமானவர்களின் அரசியல் கூடாரமாக மாறியுள்ளது.

ஸ்காட்லாந்தில், ஆளும் ஸ்காட்டிஷ் தேசியக் கட்சி (SNP) காஸாவில் போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கிறது. ஆனால், நேட்டோவையும் உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான போரையும் நிபந்தனையின்றி ஆதரிக்கிறது. ஒரு சுதந்திர முதலாளித்துவ ஸ்கொட்லாந்திற்கான பிளவுபடுத்தும் முன்மொழிவுக்கு வெளியே, ஸ்காட்லாந்து தேசியக் கட்சி ஸ்டார்மரின் போர் தொழிற்கட்சியில் இருந்து கிட்டத்தட்ட பிரித்தறிய முடியாததாக உள்ளது.

சோசலிச சமத்துவக் கட்சியை கட்டியெழுப்புங்கள்

தொழிலாளர்களுக்கு, குறிப்பாக இளம் தலைமுறைக்கு சோசலிச சமத்துவக் கட்சி தெளிவாக கூறுவது: ஒரு புதிய மற்றும் உண்மையான சோசலிச தலைமையைக் கட்டியெழுப்புவது இப்போதே தொடங்கப்பட வேண்டும். இந்த புதிய தலைமை கட்டமைக்கப்பட வேண்டிய சோசலிச, சர்வதேசியவாத வேலைத்திட்டத்தை நாங்கள் முன்னெடுக்கிறோம்.

ஸ்ராலினிச அதிகாரத்துவத்திற்கும் அதன் குற்றங்களுக்கும் எதிரான ஒரு போராட்டத்தில் லியோன் ட்ரொட்ஸ்கியால் ஸ்தாபிக்கப்பட்ட, சோசலிசப் புரட்சிக்கான உலகக் கட்சியான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிட்டன் பிரிவே சோசலிச சமத்துவக் கட்சியாகும்.

ஒரு புதிய உலகப் போருக்கான அபாயமானது, முதலாளித்துவ அமைப்புமுறையின் அடிப்படை முரண்பாடுகளில் இருந்து —அதாவது ஒரு உலகளாவிய பொருளாதாரத்தின் அபிவிருத்திக்கும் உற்பத்தி சாதனங்களது தனியுடைமை வேரூன்றியுள்ள குரோதமான தேசிய அரசுகளாக அது பிளவுபட்டிருப்பதற்கும் இடையிலான முரண்பாடுகளில் இருந்து எழுகிறது. அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஏனைய ஏகாதிபத்திய சக்திகள் உலகின் மீது சவாலுக்கிடமற்ற மேலாதிக்கத்தை நாடுகின்ற நிலையில், இதுதான் அவற்றை உந்தித்தள்ளுகிறது.

சர்வதேச தொழிலாள வர்க்கம் மட்டுமே இந்த உலகளாவிய போர் வெடிப்பை நிறுத்தக்கூடிய ஒரே சமூக சக்தியாகும். “அணுஆயுத யுத்தத்தை நோக்கிய அமெரிக்க-நேட்டோ விரிவாக்கத்தை நிறுத்து! ஏகாதிபத்திய போர் மற்றும் இனப்படுகொலைக்கு எதிராக சர்வதேச தொழிலாள வர்க்கத்தை ஒன்றுபடுத்து!” என்ற அதன் ஜூன் 2 அறிக்கையில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு பின்வருமாறு விளக்குகிறது:

ஏகாதிபத்தியத்தை அணு ஆயுத போரின் விளிம்பிற்கு உந்தித் தள்ளும் அதே முரண்பாடுகள்தான் சமூகப் புரட்சிக்கான புறநிலை அடித்தளத்தை வழங்குகின்றன. சர்வதேச தொழிலாள வர்க்கம் ஒரு பாரிய சமூக சக்தியாகும், அதன் நலன்கள் முதலாளித்துவ சுரண்டல் மற்றும் ஏகாதிபத்திய காட்டுமிராண்டித்தனத்துடன் மோதுகின்றன... பேரழிவின் சுழலைத் தவிர்ப்பதற்கு ஒரே ஒரு வழி இருக்கிறது. அது, இந்தப் போருக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு தொழிலாள வர்க்கத்தின் தலையீடு ஆகும்.

பின்வரும் நான்கு அத்தியாவசிய கோட்பாடுகளின் அடிப்படையில் இனப்படுகொலை மற்றும் போருக்கு எதிரான ஒரு வெகுஜன இயக்கத்தை உருவாக்க சோசலிச சமத்துவக் கட்சி போராடுகிறது:

1. இனப்படுகொலை மற்றும் போருக்கு எதிரான ஒரு இயக்கம் தொழிலாள வர்க்கத்தை அடித்தளமாக கொண்டிருக்க வேண்டும். தொழிலாள வர்க்கம்தான் போரில் போரிட்டு மடிகிறது. தொழிலாள வர்க்கம்தான் இதற்கான விலையை கொடுக்க நிர்பந்திக்கப்படுகிறது. போரை உருவாக்கும் அதே முதலாளித்துவ நெருக்கடியானது, சமத்துவமின்மை, வறுமை மற்றும் ஊதியங்கள், வேலைகள், சுகாதாரப் பராமரிப்பு, கல்வி மற்றும் தொழிலாள வர்க்கத்தின் அத்தனை சமூக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக வளர்ந்து வரும் போராட்டங்களின் வடிவத்தில், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அடிப்படையையும் உருவாக்குகிறது.

2. அது முதலாளித்துவ வர்க்கத்தின் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புக்களில் இருந்தும், எல்லாவற்றிற்கும் மேலாக தொழிற்கட்சியில் இருந்தும் முற்றிலும் சுயாதீனமானதாகவும், அவற்றிற்கு விரோதமானதாகவும் இருக்க வேண்டும்.

3. அது சர்வதேசமயமானதாக இருக்க வேண்டும், ஒவ்வொரு நாட்டிலும் மற்றும் ஒவ்வொரு கண்டத்திலும் உள்ள தொழிலாளர்களை அவர்களின் பொதுவான வர்க்க நலன்களின் அடிப்படையில் ஐக்கியப்படுத்த வேண்டும். முதலாம் உலகப் போர் மற்றும் இரண்டாம் உலகப் போரைப் போலவே, தீவிரமடைந்து வரும் உலகளாவிய போரும், உலக முதலாளித்துவ அமைப்புமுறையின் முரண்பாடுகளில் இருந்து எழுகிறது. சமூகத்தின் அனைத்து செல்வங்களையும் உற்பத்தி செய்து, முதலாளித்துவ ஆளும் உயரடுக்கின் சதித்திட்டங்களை எதிர்க்கும் சமூக மற்றும் பொருளாதார சக்தியைக் கொண்ட உலக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதன் மூலம் மட்டுமே ஒரு புதிய உலகளாவிய மோதலைத் தடுக்க முடியும்.

4. அது முதலாளித்துவ-எதிர்ப்பு மற்றும் சோசலிசத் தன்மை கொண்டதாக இருந்தாக வேண்டும். ஏனென்றால், போருக்கு அடிப்படை காரணமான பொருளாதார அமைப்புமுறை மற்றும் நிதி மூலதனத்தின் சர்வாதிகாரத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான போராட்டம் இல்லாமல், போருக்கு எதிரான எந்த தீவிர போராட்டமும் இருக்க முடியாது.

முதலாளித்துவ வர்க்கம் மற்றும் அதன் பிரதிநிதிகளுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் மாபெரும் சமூக சக்தியை அணிதிரட்டுவது என்பது உலகளாவிய நெருக்கடியின் முன்னேறிய கட்டத்திற்கும் தற்போதைய வெகுஜன அரசியல் நனவின் மட்டத்திற்கும் இடையே உள்ள இடைவெளியைக் கடப்பது முக்கியமானதாகும். இது ஒரு மார்க்சிச-ட்ரொட்ஸ்கிச தலைமையைக் கட்டியெழுப்புவதன் மூலமும் சோசலிச கொள்கைகளின் அடிப்படையில் சர்வதேச தொழிலாளர் இயக்கத்தை புரட்சிகரமாக புதுப்பிப்பதன் மூலமும் மட்டுமே சாத்தியமாகும்.

சோசலிச சமத்துவக் கட்சியானது இந்த வரலாற்றுப் பணிக்கு தம்மை அர்ப்பணித்துக் கொண்டுள்ளது. ரஷ்யா, உக்ரேன் மற்றும் முன்னாள் சோவியத் ஒன்றியம் அனைத்திலும் உள்ள தொழிலாளர்கள், ஐரோப்பா, ஆசியா மற்றும் அமெரிக்காவில் உள்ள அவர்களின் சகோதர சகோதரிகளுடன் போருக்கு எதிராகவும் சோசலிசத்திற்காகவும் ஐக்கியப்படுவதற்காக எங்கள் சகோதர கட்சிகளுடன் இணைந்து நாங்கள் போராடுகிறோம். சோசலிச சமத்துவக் கட்சியில் இணைந்து, இந்தப் போராட்டத்தில் உங்களின் இடத்தைப் பெறுமாறு நாம் அனைத்து தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றோம்.

Loading