ஐநா ஆணையமானது “நிர்மூலமாக்கல்”, "மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள்,” பாலஸ்தீனியர்கள் மற்றும் இஸ்ரேலிய பணயக்கைதிகளைக் கொன்றதற்காகவும் இஸ்ரேலைக் குற்றவாளியாக கண்டுள்ளது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இஸ்ரேலிய அரசாங்கமும் இராணுவமும் காஸா மீதான எட்டு மாத கால தாக்குதலின் போது, ​​”நிர்மூலமாக்கல்” உட்பட, திட்டமிட்ட “மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களை” செய்துள்ளதாக ஒரு பிரதான ஐக்கிய நாடுகளின் ஆணையம் புதன்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையானது அக்டோபர் 7 முதல் நடந்த சம்பவங்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளுடன், விரிவான நேர்காணல்களின் அடிப்படையில் ஐக்கிய நாடுகள் சபையின் முதலாவது ஆழமான விசாரணையாகும். ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் மனித உரிமைகள் தலைவரான நவி பிள்ளை தலைமையில் இந்த மூவர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

ஆணையமானது, இஸ்ரேலிய இராணுவமும் அரசாங்கமும் “பட்டினி போடுவதை ஒரு போர் முறையாக கையாளும் போர்க் குற்றங்களைச் செய்தன; கொலை அல்லது வேண்டுமென்றே கொலை செய்தல்; பொதுமக்கள் மற்றும் பொதுமக்களின் பொருள்களுக்கு எதிராக வேண்டுமென்றே தாக்குதல்களை நடத்துதல்; கட்டாய இடமாற்றம்; பாலியல் வன்முறை; தனிப்பட்ட கண்ணியம் மீதான ஆத்திரமூட்டல்கள்; மற்றும் [பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறை] சித்திரவதை அல்லது மனிதாபிமானமற்ற மற்றும் கொடூரமான நடத்தைக்கு சமமானவற்றை,” செய்துள்ளது.

மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு இஸ்ரேல் பொறுப்பு என்று அறிக்கை கண்டுள்ளது. அறிக்கையின்படி “நிர்மூலமாக்கல்; படுகொலை; பாலஸ்தீனிய ஆண்கள் மற்றும் சிறுவர்களை குறிவைத்து பாலின துன்புறுத்தல்; கட்டாய இடமாற்றம்; மற்றும் சித்திரவதை மற்றும் மனிதாபிமானமற்ற மற்றும் கொடூரமான முறையில் நடத்துதலும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.”

8 ஜூன் 2024 அன்று காஸா பகுதியில் உள்ள நுசிராத் அகதிகள் முகாமில் இஸ்ரேலிய குண்டுவீச்சின் பின்விளைவுகளை பாலஸ்தீனியர்கள் பார்வையிடுகின்றனர். [AP Photo/Jehad Alshrafi]

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தலைமை வழக்கறிஞர் கரீம் கான், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்ட் ஆகியோர் போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களில் குற்றவாளிகள் என்று சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு இந்த அறிக்கை மேலும் வலு சேர்க்கிறது.

2023-24 காஸா இனப்படுகொலை, காஸா மீதான முந்தைய இஸ்ரேலிய தாக்குதல்களுடன் தொடர்புபட்டது என்றாலும், அது முற்றிலும் மாறுபட்ட அளவிலானதும் செறிவானதும் ஆகும். “காஸாவில் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கை மற்றும் தாக்குதல்கள் 1948 முதல் மிக நீண்டதும், மிகப்பெரியதும் இரத்தக்களரியானதும் ஆகும். இது பெரும் சேதத்தையும் உயிர் இழப்பையும் ஏற்படுத்தியுள்ளது” என்று அறிக்கை வலியுறுத்துகிறது.

“2005 மற்றும் 2023க்கு இடையேயான மோதல்களின் விளைவுகள், அக்டோபர் 7 முதல் ஏற்பட்ட மரணங்களில் பத்தில் ஒரு பங்கிற்கும் குறைவானதாகவே” இருந்தன என்று அது குறிப்பிடுகிறது. அது மேலும் கூறுவதாவது: “முந்தைய மோதல்களுடன் ஒப்பிடுகையில், பெண்கள் மற்றும் பிள்ளைகளின் மரணங்கள் எண்ணிக்கையில் அதிகரித்து வருவதையும் ஆணையம் அவதானித்துள்ளது.”

ஆணையத்தின் வார்த்தைகளில், “காஸா பகுதியில் பரவலாகவும் கண்மூடித்தனமாகவும் பொதுமக்களின் இருப்பிடங்களை குறிவைத்து தாக்க இஸ்ரேலிய அரசாங்கம் முழு அனுமதியையும் வழங்கியுள்ளமை” பாரிய பொதுமக்கள் மரண எண்ணிக்கைக்குக் காரணம் ஆகும்.”

பாலஸ்தீனிய குடிமக்கள் மீதான திட்டமிட்ட பாரிய குண்டுத் தாக்குதல்கள், கூட்டுத் தண்டனையின் வடிவத்தில் காஸாவின் மக்களை பட்டினி போடும் ஒரு திட்டமிட்ட முயற்சியுடன் தொடர்புபட்டதாகும்.

“இஸ்ரேல் போரின் ஒரு வழிமுறையாகப் பட்டினியை பயன்படுத்துவதானது, காஸா பகுதியின் முழு மக்களையும் பல தசாப்தங்களுக்கு பாதிக்கிறது, குறிப்பாக குழந்தைகளுக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்துகிறது” என்று அறிக்கை முடிக்கிறது. இது ஒரு போர்க்குற்றம் ஆகும்.

அறிக்கை முடிவுசெய்ததாவது:

இந்த அறிக்கையை எழுதும் நேரத்தில், கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நீரிழப்பு காரணமாக குழந்தைகள் ஏற்கனவே இறந்துவிட்டனர். அது மேற்கொண்ட முற்றுகையின் மூலம், இஸ்ரேல் மனிதாபிமான உதவி உட்பட, தண்ணீர், உணவு, மின்சாரம், எரிபொருள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களைத் துண்டித்து, உயிர்வாழும் தேவைகளைத் தடுத்து நிறுத்தும் அதிகாரத்தை எடுத்துக்கொண்டது. இது பொது மக்களுக்கு எதிரான கூட்டுத் தண்டனை மற்றும் பழிவாங்கலை உருவாக்குகிறது. இவை இரண்டும் [சர்வதேச மனிதாபிமான சட்டத்தின்] தெளிவான மீறல்கள் ஆகும்.

காஸா பகுதிக்குள் உணவு, தண்ணீர் மற்றும் மின்சாரம் நுழைவதை திட்டமிட்டுத் தடுப்பதை இந்த அறிக்கை ஆவணப்படுத்துகிறது. இதை இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்டின் பிரகடனத்தில் நியாயப்படுத்தப்பட்டது. “முழு முற்றுகை... மின்சாரம் இல்லை, தண்ணீர் இல்லை, உணவு இல்லை, எரிபொருள் இல்லை. நாங்கள் மனித விலங்குகளுடன் போராடுகிறோம், அதன்படி செயல்படுகிறோம்,” என்று அவர் அறிவித்தார்.

“அரசியல் மற்றும் இராணுவ நோக்கங்களை அடைவதற்காக காஸா பகுதி மக்களை பணயக்கைதிகளாக வைத்திருக்கும்” இஸ்ரேலிய அதிகாரிகளின் நோக்கங்களை வெளிப்படுத்தும் அவர்களின் கருத்துக்களை, “ஒரு சிலரின் செயல்களுக்கு ஒட்டுமொத்த மக்கள் மீதும் கூட்டுத் தண்டனையை நிறைவேற்றுவதை நோக்கமாகக் கொண்ட நடவடிக்கைகளும், இவை சர்வதேச மனிதாபிமான சட்டத்தை தெளிவான மீறுவதாகும்,” என ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது,

இஸ்ரேல் மீதான அக்டோபர் 7 தாக்குதலில் பங்கேற்ற ஹமாஸ் படைகள் பாரிய கற்பழிப்புகளில் ஈடுபட்டதாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய ஊடகங்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்தும் அதே வேளை, “அத்தகைய குற்றச்சாட்டுகளை ஆணையத்தால் சுயாதீனமாக சரிபார்க்க முடியவில்லை” என்றும் “குறிப்பிட்ட குற்றச்சாட்டுகள் தவறானவை, துல்லியமாக இல்லை அல்லது ஏனைய சான்றுகள் அல்லது அறிக்கைகளுடன் முரண்படுவதாகவும் அறிந்துகொண்டுள்ளதோடு” “அதன் மதிப்பீட்டில் இருந்து இவை ஓரங்கட்டப்பட்டன” என அந்த அறிக்கை முடிவு செய்கிறது.

அக்டோபர் 7 அன்று இஸ்ரேலிய இராணுவத்தின் செயலின்மையையும் மற்றும் அன்றைய தினம் இஸ்ரேலிய இராணுவமே இஸ்ரேலிய மக்களை வேண்டுமென்றே குறிவைத்து தாக்கியதையும் அறிக்கை விமர்சனரீதியாக ஆவணப்படுத்துகிறது.

அக்டோபர் 7 தாக்குதலுக்கு இஸ்ரேலிய இராணுவத்தின் பிரதிபலிப்பு “குறிப்பிடத்தக்க வகையில் தாமதமானதாக இருந்ததோடு பல இடங்களில் முற்றிலும் போதுமானதாக இருக்கவில்லை” என்று ஆணையம் கண்டறிந்தது. இஸ்ரேலிய இராணுவம் ஹமாஸின் தாக்குதலுக்கான போர்த் திட்டங்களை விரிவாக தெரிந்து வைத்திருந்த போதிலும், நிலைமை இவ்வாறு இருந்துள்ளது. தாக்குதல் நடந்த அன்று, இஸ்ரேலிய படைகள் வேண்டுமென்றே எல்லையில் இருந்து திருப்பி அழைக்கப்பட்டுள்ளன.

இஸ்ரேலியப் படைகள் வந்தவுடன், அவர்கள் இஸ்ரேலிய பணயக்கைதிகள் மற்றும் ஏனைய பொதுமக்களைத் தாக்கத் தொடங்கினர். அறிக்கை கூறுவதாவது:

கடத்தப்பட்ட ISF [இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள்] படையினர்களை ஏற்றிச் சென்றதாக சந்தேகிக்கப்படும் ஒரு வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதன் மூலம், ஹன்னிபால் கட்டளையைப் (கடத்தப்படுவதை விட சாவது மேல்) பயன்படுத்தியதை உறுதிசெய்து, ISF பீரங்கி குழுவினரின் ஒரு வாக்குமூலத்தை ஆணையம் ஆவணப்படுத்தியுள்ளது.

ஹன்னிபால் உத்தரவானது இஸ்ரேலிய படையினர் உயிரை விலைகொடுத்தேனும் எதிரிப் படைகளிடம் பிடிபடுவதைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் அர்த்தம் இஸ்ரேலியர்கள் ஹமாஸின் கைகளில் பிடிபடுவதை அனுமதிப்பதற்குப் பதிலாக, இஸ்ரேலிய பாதுகாப்புப் படை அவர்களைக் கொல்ல வேண்டும் என்பதாகும்.

அறிக்கை தொடர்கிறது:

குறைந்தபட்சம் இரண்டு நிகழ்வுகளில், ISF ஹன்னிபால் கட்டளையைப் பயன்படுத்தியிருக்கலாம், இதன் விளைவாக 14 இஸ்ரேலிய பிரஜைகள் கொல்லப்பட்டனர் என்பதைக் குறிக்கும் தகவலை ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது. நிர் ஓஸில் இருந்து காஸாவிற்கு போராளிகளால் கடத்தப்பட்ட ஒரு பெண் ISF ஹெலிகாப்டர் தாக்குதலில் கொல்லப்பட்டார். மற்றொரு சம்பவத்தில், பீரியில் உள்ள ஒரு வீட்டில் அடைக்கப்பட்டிருந்த 13 சிவிலியன் பணயக்கைதிகளில் சிலர் அல்லது அனைவரும் இஸ்ரேலிய பீரங்கித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஆணையம் கண்டறிந்தது.

ஆணையம் முடிவு செய்தது:

இஸ்ரேலிய அதிகாரிகள் தெற்கு இஸ்ரேலில் உள்ள அனைத்து கள முனையிலும் மக்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டனர். அக்டோபர் 7 அன்று, பொதுமக்களைப் பாதுகாப்பதற்கும், பொதுமக்களின் இருப்பிடங்களில் இருந்து அவர்களை வெளியேற்றுவதற்கும் போதுமான பாதுகாப்புப் படைகளை விரைவாக அனுப்பத் தவறியதும் இதில் அடங்கும். பல இடங்களில், ISF “ஹன்னிபால் உத்தரவு” என்று அழைக்கப்படுவதைப் பயன்படுத்தியது மற்றும் குறைந்தது 14 இஸ்ரேலிய பிரஜைகளைக் கொன்றது.

அறிக்கை குறிப்பிடுவதாவது: “இஸ்ரேலிய அதிகாரிகளால் வெளியிடப்பட்ட அறிக்கைகள், பரந்த அழிவை ஏற்படுத்துதல், ஏராளமான பொதுமக்களைக் கொல்லுதல் மற்றும் வலுக்கட்டாயமாக இடம்பெயரச் செய்தல் ஆகிய கொள்கையையும் அவை நடைமுறைப்படுத்தப்பட்டதையும் பிரதிபலித்தது.”

பைடன் வெள்ளை மாளிகையின் தலைமையிலான முழு அமெரிக்க அரசியல் ஸ்தாபனமும் ஊடகங்களும் முன்னெடுக்கும் திட்டமிட்ட அவதூறு பிரச்சாரம் ஒருபுறம் இருக்க, காஸா இனப்படுகொலைக்கு எதிராக நடந்து வரும் வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் யூதர்களுக்கு எதிரானவை அல்ல, மாறாக படு மோசமான முறையில் சர்வதேச சட்டத்தை மீறுவதற்கு எதிரான எதிர்ப்பால் தூண்டப்பட்டவை என்பதை இந்த அறிக்கை தெளிவுபடுத்துகிறது.

இந்தப் பாரிய போர்க் குற்றத்தைச் செய்தவர்கள் இஸ்ரேலில் மட்டுமல்ல, வாஷிங்டனிலும் உள்ளனர். பைடன் நிர்வாகம் இனப்படுகொலைக்கு திட்டமிட்ட முறையில் நிதியுதவி, ஆயுதம் மற்றும் அரசியல் ஆதரவை அளித்துள்ளது. இது இஸ்ரேலுக்கு 100க்கும் மேற்பட்ட தனித்தனி ஆயுத ஏற்றுமதிகளை செய்துள்ளதுடன் கடந்த வார இறுதியில் 274 பேரைக் கொன்ற நுசிராத் படுகொலை உட்பட, இஸ்ரேல் வேண்டுமென்றே செய்யும் வெகுஜனப் படுகொலைகள் ஒவ்வொன்றையும் நியாயப்படுத்தியுள்ளது.

Loading