பிரெஞ்சு திடீர் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் புதிய மக்கள் முன்னணி போரை முழுமையாக தழுவிக்கொள்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

பிரெஞ்சு திடீர் தேர்தல்களின்போது ஜோன்-லூக் மெலன்சோன், புதிய மக்கள் முன்னணி கூட்டணிக்கு அழைப்புவிடுத்தார். ஜூன் 9ல் இடம்பெற்ற ஐரோப்பிய தேர்தல்களில், அதிதீவிர வலதுசாரிகளின் எழுச்சிக்குப் பின்னர், அதற்கு புதிய வெற்றியை கொடுக்க மறுக்க முற்படும் தொழிலாளர்களுக்கு புதிய மக்கள் முன்னணியானது, ஒரு அரசியல் பொறி என்பதை நிகழ்வுகள் வேகமாக உறுதிப்படுத்துகின்றன. இந்த புதிய மக்கள் முன்னணியானது, பிரெஞ்சு ஏகாதிபத்தியத்திற்கான போர்க் கொள்கையை முன்னெடுத்துவரும் “செல்வந்தர்களின் ஜனாதிபதி” இம்மானுவேல் மக்ரோனுடன் இணக்கமாக இருக்கிறது.

17 ம் திகதி, புதிய மக்கள் முன்னணி தனது முதல் கூட்டத்தை பாரிஸ் புற நகர் பகுதியிலுள்ள மொனறோயிலில் நடத்தியது. புதிய மக்கள் முன்னணியின் கூட்டத்தில் நான்கு முக்கிய கட்சிகளின் தலைவர்கள் உரையாற்றினர். அவர்களில், மெலன்சோனின் அடிபணியாத பிரான்ஸ் (LFI) கட்சியின் பிரான்சுவா ரஃபின், முன்பு ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியிலும் (PCF), தற்போது LFI யில் இருக்கும் கிளெமென்டைன் ஆடெய்ன் மற்றும் பசுமைக் கட்சியின் மரின் டோண்டிலியே, மற்றும் பிரான்சுவா ஹாலண்டின் சோசலிஸ்ட் கட்சியின் (PS) ஒலிவியர் ஃபாரே ஆகியோர் உள்ளடங்கியிருந்தனர். புதிய மக்கள் முன்னணி கூட்டணிக்கான அழைப்பை விடுத்த ரஃபின், “நாங்கள் இன்னும் வெற்றிபெறவில்லை, ஆனால் மோசமான நிலையை நோக்கிச் சென்று ராஜினாமாவை நோக்கி வெற்றி பெற்றதாக உணர்கிறோம்” என்று கூறினார்.

பிரான்சுவா ஹாலண்டின் சோசலிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் ஒலிவியே ஃபெளர், “ஒருவரையொருவர் கைவிடமாட்டோம் என்று சத்தியம் செய்வோம்” என்று குறிப்பிட்டார். புதிய மக்கள் முன்னணி மற்றும் அதிதீவிர வலதுசாரி தேசிய பேரணி (RN) ஆகியவற்றுக்கு இடையேயான “அடையாளத்தை சமமாக வைப்பதை” எதிர்த்த அவர், காஸாவுடன் ஒற்றுமை அறிக்கைகளுக்காக மெலன்சோனுக்கு எதிரான யூத-விரோதத்தின் உத்தியோகபூர்வ குற்றச்சாட்டுகளை நிராகரித்தார். புதிய மக்கள் முன்னணியில், “சில சமயங்களில் சத்தம் போடுபவர்கள், சில சமயங்களில் சில பிரெஞ்சுக்காரர்களை எரிச்சலூட்டும் நபர்கள் உள்ளனர்... ஆனால் அவர்கள் பாதுகாக்கும் வேலைத்திட்டம் நீதியானது” என்று ஃபௌர் கூறினார்.

எவ்வாறாயினும், இந்த கூட்டத்துக்கு முன்னர், முன்னாள் சோசலிசக் கட்சியின் ஐரோப்பிய வேட்பாளர் ரஃபேல் குளுக்ஸ்மேன், இந்தக் கூட்டணியின் அடிப்படையானது, உலக ஏகாதிபத்திய போர்த் திட்டங்களுக்கான ஆதரவு என்பதை தெளிவுபடுத்தினார். அவர் ரஷ்யாவிற்கு எதிராக உக்ரேனில் நேட்டோவின் தலையீட்டை ஆதரிக்கிறார் மற்றும் காஸாவில் இஸ்ரேல் இனப்படுகொலை செய்வதை மறுத்துள்ளார். காஸா இனப்படுகொலையை மறுக்கும் அதே வேளையில், சின்ஜியாங்கில் உய்குர்களை இனப்படுகொலை செய்ததாக கூறப்படும் சீனாவுக்கு எதிரான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து நேட்டோவின் சீன எதிர்ப்புப் பிரச்சாரத்தை அவர் எதிரொலிக்கிறார்.

புதிய மக்கள் முன்னணியானது, ரஷ்யாவிற்கு எதிரான போரை விரிவாக்க உறுதி பூண்டுள்ளதோடு, உக்ரேன் போர்நிறுத்தம் பற்றிய மெலன்சோனின் முந்தைய பேச்சை நிராகரிப்பதற்கும் உறுதியாக இருப்பதாக குளுக்ஸ்மேன் கூறினார். தேர்தல் மேடையில் புதிய மக்கள் முன்னணியில் நடந்த உள் விவாதங்களை மேற்கோள் காட்டிய குளுக்ஸ்மேன், “இது வலிமைக்கான கருத்தியல் சோதனை, இது கடினமாக இருந்தது. ஆனால், உக்ரேன் மற்றும் உக்ரேனின் எல்லைகளுக்கு ஆயுதங்களை வழங்குவதில், உக்ரேனிய எதிர்ப்பிற்கு அசைக்க முடியாத ஆதரவை நாங்கள் பெற்றுள்ளோம்“ என்று குறிப்பிட்டார்.

இதற்கு விடையிறுப்பாக, ஜனாதிபதி மக்ரோன் நேற்று புதிய மக்கள் முன்னணிக்கு ஆதரவு தெரிவிக்கும் சமிக்ஞையை அனுப்பினார். அவரது மறுமலர்ச்சிக் கட்சி, பரந்த அளவில் வெறுக்கப்படும் முன்னாள் பிரெஞ்சு ஜனாதிபதியான பிரான்சுவா ஹாலண்டிற்கு எதிராக ஒரு வேட்பாளரை முன்வைக்க மாட்டோம் என்று சுட்டிக்காட்டியுள்ளது, சோசலிசக்கடசியின் பிரான்சுவா ஹாலண்ட், புதிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற வேட்பாளராக Corrèze பகுதியில் நிற்கிறார். பிரான்சின் ஜனாதிபதியாக இருந்த “[ஹாலண்டின்] முன்னாள் பதவிக்கு மதிப்பளித்து” இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மக்ரோன் கூறினார்.

ஜூன் 30 மற்றும் ஜூலை 7ம் திகதி இடம்பெறும் இரண்டு சுற்று திடீர் பாராளுமன்ற பொதுத் தேர்தல்களுக்கு அழைப்பு விடுவதில், ரஷ்யாவுடனான நேட்டோவின் போர்த் திட்டங்கள் மக்ரோனின் கணக்கீடுகளின் மையத்தில் உள்ளன. பிரித்தானிய பிரதம மந்திரி ரிஷி சுனக் ஜூலை 4 க்கு ஒரு திடீர் தேர்தலுக்கு அழைப்பு விடுத்த பின்னரே, மக்ரோன் இந்த தேர்தலுக்கு அழைப்பு விடுத்தார். மேலும், மக்ரோனும் இதர நேட்டோ அதிகாரிகளும் உக்ரேனுக்கு துருப்புக்களை அனுப்ப அழைப்பு விடுத்தனர். ஜூலை 9 ம் திகதி, நேட்டோ போர் உச்சிமாநாடு ரஷ்யாவிற்கு எதிரான நேரடி நேட்டோ தலையீட்டிற்கு தயாராகும் வகையில், வாஷிங்டனில் நடைபெறுவதால் பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் புதிய அரசாங்கங்களைக் கொண்டிருக்கும்.

மக்ரோனின் திடீர் தேர்தல் அழைப்பானது, வெளிநாட்டில் ரஷ்யா மீது போர் தொடுப்பதற்கும், உள்நாட்டில் உள்ள தொழிலாளர்கள் மீது போர் தொடுப்பதற்கும் அரசு இயந்திரத்தை தயார்படுத்தும் அவநம்பிக்கையான முயற்சியாகும். கடந்த ஆண்டு, பெரும் மக்கள் எதிர்ப்பு மற்றும் பாரிய வேலைநிறுத்தங்கள் இருந்தபோதிலும், இராணுவ செலவினங்களின் அதிகரிப்புக்கு நிதியளிப்பதற்காக, மக்ரோன் ஆணை மூலம் ஓய்வூதியங்களை வெட்டிக் குறைத்தார். இந்தக் கொள்கையால் உருவாக்கப்பட்ட வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்புக்கள், மே 1968 பொது வேலைநிறுத்தத்திற்குப் பின்னர் பிரான்ஸ் அனுபவித்த ஆழமான அரசியல் நெருக்கடியாக முதலாளித்துவ ஊடகங்களால் கூட பரவலாக ஒப்புக் கொள்ளப்பட்டது.

ரஷ்யாவிற்கு எதிராக நேட்டோ தயாராகி வரும் இராணுவ விரிவாக்கம், கடந்த ஆண்டு ஓய்வூதியக் குறைப்பு போன்று பெரும்பான்மையான மக்களால் எதிர்க்கப்படுகிறது. 68 சதவீதமான பிரெஞ்சு மக்களும், 80 சதவீத ஜேர்மனியர்களும், 90 சதவீத போலந்து மக்களும் ரஷ்யாவை எதிர்த்துப் போரிட உக்ரேனுக்கு துருப்புக்களை அனுப்பும் மக்ரோனின் அழைப்பை எதிர்க்கின்றனர் என்று கருத்துக் கணிப்புகள் காட்டுகின்றன. இந்தத் தேர்தல்களின் மூலம் மக்ரோன் தீர்ப்பதற்கு நோக்கமாகக் கொண்ட கேள்வி என்னவென்றால், அணுவாயுதப் போரைத் தூண்டும் அச்சுறுத்தலைக் கொடுக்கும் இந்த பிரமாண்டமான மற்றும் பொறுப்பற்ற விரிவாக்கத்தை எந்த அரசாங்கம் தொழிலாளர்கள் மீது திணிக்க முடியும் என்பதுதான்.

இந்த வெடிக்கும் சூழ்நிலையில், தேர்தல் முடிவுகளில் பெரும் நிச்சயமற்ற நிலை உள்ளது. கருத்துக் கணிப்புகள் அதிதீவிர வலதுசாரி RNக்கு 33 சதவீத வாக்குகளையும், மக்களை முன்னணி கூட்டணிக்கு 25 சதவீதத்தையும், மக்ரோன் கூட்டணிக்கு 20 சதவீத வாக்குகளையும் அளிக்கின்றன. வலதுசாரி குடியரசுக் (Les Républicains) கட்சிக்கு 7 சதவீதமும், அதிதீவிர வலதுசாரி Reconqueste கட்சிக்கு 3 சதவீதமும் கிடைக்கும், மீதமுள்ள வாக்குகள் பெரும்பாலும் மக்கள் முன்னணி கூட்டணி வைத்துள்ள சிறிய கட்சிகளுக்கு இடையே பிரிக்கப்படும்.

மக்ரோன் தனது சொந்தக் கட்சிக்குள் பாராளுமன்ற பெரும்பான்மையை திரட்ட முடியாத நிலையில், அவர் RN அல்லது மக்கள் முன்னணியின் சக்திகளுடன் இணைந்து அரசாங்கத்தை அமைப்பாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது. கடந்த வாரம், ஜேர்மன் டேப்லாய்டு Bild பத்திரிகை, ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் தனது கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியத்தின் (CDU) தலைவர்களிடம், RN ஐ ஆட்சியில் அமர்த்துவது குறித்து மக்ரோன் பரிசீலித்து வருவதாகக் கூறியதாகக் கூறியது. RN பிரபலமற்றதாக மாறும், இது அதிதீவிர வலதுசாரிகளுடன் பிரான்சில் நீடித்த “அதிருப்திக்கு” வழிவகுக்கும் என்று மக்ரோன் கூறியதாக, வான் டெர் லேயன் தெரிவித்தார்.

இத்தகைய அறிக்கைகள், மக்ரோன் ஆட்சியின் அடக்குமுறை தன்மைக்கு பிரான்சில் பரவலான எதிர்ப்புடன் சேர்ந்து, அதிதீவிர வலதுசாரிகளுடன் அவர் கூட்டுச் சேர்ந்தது குறித்து எதிர்ப்புகள் மற்றும் சமூக கோபத்திற்கு வழிவகுத்துள்ளது. புதிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கல்வியாளர்கள் மற்றும் நடுத்தர வர்க்க நிர்வாகிகள் இந்தக் கோபத்தைப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிப்பது ஆழ்ந்த சிடுமூஞ்சித்தனமாகும்.

PS உடன் LFI இணைந்ததன் மூலம், புதிய மக்கள் முன்னணி தன்னை முதலாளித்துவ அரசாங்கம் மற்றும் போரின் மற்றொரு சாத்தியமான கட்சியாகக் தன்னை முன்னிறுத்திக் கொள்கிறது. 2022 தேர்தல்களின் போது, ​​மெலன்சோன் மக்ரோனின் கீழும் ஒரு நவபாசிச ஜனாதிபதியின் கீழும் கூட பிரதம மந்திரி ஆவதற்கு முன்மொழிந்தார். எவ்வாறாயினும், கொரேஸ் தொகுதியில் பிரான்சுவா ஹாலண்ட், புதிய மக்கள் முன்னணியில் பதவியேற்பதை அவர் வரவேற்கிறார் என்பது இந்த நோக்குநிலையை மட்டுமே உறுதிப்படுத்துகிறது. முன்னாள் ஜனாதிபதியான பிரான்சுவா ஹாலண்ட் சிக்கன நடவடிக்கைகளை சுமத்தியதுக்காகவும், ஜனநாயக உரிமைகளை அழிக்கும் அவசரகால நிலையை அமுல்படுத்தியதுக்காகவும், மாலி மீது படையெடுத்ததுக்காகவும் பரவலாக வெறுக்கப்படுகிறார்.

உண்மையில், ஒரு மக்கள் முன்னணிக்கு அழைப்பு விடுக்கும் LFI இன் முடிவு வெற்று சொல்லாடல்கள் அல்லது வாய்வீச்சு அல்ல. பிரான்சில் மே 1968 பொது வேலைநிறுத்தத்திற்குப் பின்னர் மெலன்சோன் ஒரு மாணவராக அரசியலில் நுழைந்தபோது, ​​அவர் ட்ரொட்ஸ்கிசம் மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் (ICFI) இருந்து முறித்துக் கொண்ட பியர் லம்பேர்ட்டின் சர்வதேச கம்யூனிஸ்ட் அமைப்பில் (OCI) இணைந்து கொண்டார். பின்பு, 1976 இல் PS இல் இணைந்து கொண்ட அவர், இறுதியில் செனட்டராகவும் அமைச்சராகவும் ஆனார். ஸ்ராலினிசம் மற்றும் மக்கள் முன்னணியின் எதிர்ப்புரட்சிகர பாத்திரம் பற்றிய ட்ரொட்ஸ்கியின் விமர்சனத்தை மெலன்சோன் ஆரம்பத்தில் இருந்தே அறிந்திருந்தார்.

1934-1938 ஆம் ஆண்டுகளில், மக்கள் முன்னணியின் தாராளவாதிகள், சமூக ஜனநாயகவாதிகள் மற்றும் ஸ்ராலினிஸ்டுகள் 1936 பொது வேலைநிறுத்தத்தின் போது தொழிலாள வர்க்கத்தின் அதிகாரம் மற்றும் சோசலிசத்திற்கான போராட்டத்தை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர்கள் உருவாக்கிய முதலாளித்துவ அரசாங்கம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் வெடித்த வேலைநிறுத்தங்களை கொடூரமாக நசுக்கியது. இரண்டாம் உலகப் போரின் போது, ஐரோப்பாவில் கடைசியாக இருந்த பெரும் புரட்சிகர வாய்ப்புகளை மக்கள் முன்னணி இவ்வாறு தடுத்தது. இறுதியில், பெரும்பான்மையான தாராளவாத மற்றும் சமூக ஜனநாயக பிரெஞ்சு பாராளுமன்ற உறுப்பினர்கள் 1940 இல் நாசி ஒத்துழைப்பு சர்வாதிகாரியான பிலிப் பெத்தானின் சர்வாதிகார அதிகாரங்களுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

2009 இல் சோசலிசக் கட்சியை விட்டு விலகிய மெலன்சோன் பின்னர் இடது கட்சிக்கும், பின்னர் LFI யையும் உருவாக்கினார். அதே நேரத்தில், அவர் ட்ரொட்ஸ்கிசத்தை நிராகரித்ததில் இருந்து பிறந்த இந்த அத்தியாவசிய நோக்குநிலையைத் தக்க வைத்துக் கொண்டார். இது கடந்த ஆண்டு மக்ரோனின் ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிரான போராட்டத்தின் போது, அவரது பாத்திரத்தில் ஒரு குறிப்பிடத்தக்க வடிவத்தை எடுத்தது. LFI-PCF-PS கூட்டணியானது, மக்ரோனிடம் வெற்று தார்மீக முறையீடுகளைத் செய்ததோடு, அதற்கு எதிரான வேலைநிறுத்தங்களை நிறுத்துவதற்கும் முடிவுக்கு கொண்டுவருவதற்கும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் முடிவை ஆதரித்தது.

கடுமையான எச்சரிக்கைகள் விடுக்கப்பட வேண்டும்: நவ பாசிசத்திற்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் கோபத்தை சுரண்டிக்கொள்ள முற்படும் புதிய மக்கள் முன்னணி, போரையோ சர்வாதிகாரத்தையோ எதிர்க்காத நடுத்தர வர்க்கத்தின் ஏகாதிபத்திய சார்பு அடுக்குகளுக்காகப் பேசுகிறது. ஏகாதிபத்திய போர், சிக்கன நடவடிக்கை மற்றும் முதலாளித்துவத்திற்கு எதிரான ஒரு இயக்கம், புதிய மக்கள் முன்னணியை எதிர்ப்பதன் மூலம் மட்டுமே தொழிலாள வர்க்கத்திற்குள் கட்டியெழுப்பப்பட முடியும். இந்தப் போராட்டம் ஸ்ராலினிசம் மற்றும் மக்கள் முன்னணியின் கொள்கைகளுக்கு எதிரான ட்ரொட்ஸ்கிசத்தின் போராட்டத்திலிருந்து பிரிக்க முடியாதது.

Loading