முன்னோக்கு

குற்றத்தின் புதிய வெளிப்பாடுகளுக்கு மத்தியில், அமெரிக்க செனட் போயிங்கிற்கு மறுவாழ்வு அளிக்க முயல்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

போயிங் நிறுவனம் தனது இலாபத்தை அதிகரிப்பதற்காக பயணிகளின் பாதுகாப்பை திட்டமிட்டு கைவிட்டது என்று தகவல்கள் வெளியிடுபவர் புதிய தகவலை வெளியிட்டதிற்கு மத்தியில், ஜனநாயகக் கட்சியின் கட்டுப்பாட்டில் இருக்கும் செனட், உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் அரசாங்க விவகாரங்களுக்கான நிரந்தர துணைக்குழுவினது விசாரணைகள், செவ்வாயன்று பாரிய போயிங் நிறுவனத்தையும், இராணுவ ஒப்பந்தக்காரரையும் மறுவாழ்வு செய்யும் நோக்கில் விசாரணை நடத்தியது.

போயிங் தலைமை நிர்வாக அதிகாரி டேவ் கால்ஹவுன் செவ்வாயன்று கேபிடல் ஹில்லில் விசாரணைகள் தொடர்பான செனட் உள்நாட்டுப் பாதுகாப்பு துணைக்குழுவிற்கு சாட்சியமளித்தார்.  June 18, 2024, in Washington.  [AP Photo/Mariam Zuhaib]

சில மாதங்கள் இடைவெளியில், விமானத்தில் இருக்கும் தானியங்கி இயந்திர அமைப்பு பழுதடைந்ததால் ஏற்பட்ட இரண்டு வெவ்வேறு விபத்துகளில், போயிங் 737 MAX 8 விமானத்தின், மொத்தம் 346 ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் இறந்து ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. ஒரு குறைபாடுள்ள தானியங்கி இயந்திர அமைப்பில் ஆபத்துள்ளது என்று போயிங் நிறுவனம் அறிந்திருந்தும், அந்த நிறுவனம் அல்லது அதன் நிர்வாகிகள் மீது குற்றவியல் வழக்குகள் எதுவும் இல்லை.

மாறாக, முதலாளித்துவத்தின் செயல்பாடு மற்றும் நிதி மற்றும் கார்ப்பரேட் தன்னலக்குழுவின் விதிக்கு இணங்க, போயிங் தனது நிதிநிலையை மேம்படுத்துவதற்கும் அதன் பங்குகளின் விலையை ஒருங்கிணைப்பதற்கும் கூட்டாட்சி பாதுகாப்பு விதிமுறைகளை தொடர்ந்து மீறுவதற்கும், உற்பத்தி செலவுகளைக் குறைப்பதற்கும் அனுமதிக்கப்பட்டது.

கடந்த ஜனவரியில், அலாஸ்கா ஏர்லைன் போயிங் 737 MAX 9 விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானத்தின் மையப் பகுதியிலிருந்த கதவு வெடித்தது, விமானம் அதிஷ்டவசமாக பேரழிவில் இருந்து தப்பித்தது. விமானத்தை வழங்கிய நிறுவனம் கதவு செருகியை சரியாக செய்யத் தவறியது தெரியவந்தது.

இந்த மிகப்பெரிய தோல்வியைத் தொடர்ந்து, தொடர்ச்சியான பாதுகாப்புத் தோல்விகள் தொடர்கின்றன. குறிப்பாக, விமானம் தரையிறங்குவதற்கான சில்லுகள் மற்றும் விமானம் புறப்படும் போது அல்லது விமானம் பறக்கும் போது இறக்கைகளின் தகடுகள் கீழே விழுவது, விமானம் புறப்படும்போது ஏற்படும் தீ விபத்து, பயணிகளை பயமுறுத்தி காயங்களை ஏற்படுத்துகின்ற விவரிக்கப்படாத ஊசலாடும் விமான அசைவுகள்வரை, விபத்துகளுக்கு அருகில் விமானங்களை கொண்டு செல்லுகின்றன.

விமான உற்பத்தியை அதிகரிப்பதற்கு, உற்பத்தித் தரத்தை புறக்கணித்ததற்காக போயிங் நிறுவனத்தை கண்டிக்கவும், மற்றும் சட்டத் தேவைகளை நிலைநிறுத்துவதற்கான அவர்களின் முயற்சிகளுக்கு அச்சுறுத்தல் அல்லது பதிலடி கொடுப்பதற்கும், தொடர்ச்சியாக தகவல்கள் வழங்குவோர் முன்வந்து கொண்டிருக்கின்றனர்.

கடந்த செவ்வாய் கிழமை விசாரணைக்கு முன்னதாக, வாஷிங்டனில் உள்ள ரெண்டனில் உள்ள போயிங் ஆலையில் தர உத்தரவாத ஆய்வாளரின் புதிய புகார்களை மேற்கோள் காட்டி செனட் துணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அது கூறுகையில்:

இதபற்றி புதிதாக தகவல் வழங்குபவரும் மற்றும் தற்போதைய போயிங் பணியாளருமான சாம் மொஹாக், போயிங் சேதமடைந்த அல்லது விவரக்குறிப்புக்கு அப்பாற்பட்ட பகுதிகளை முறையற்ற முறையில் ஆவணப்படுத்துகிறது, கண்காணிக்கிறது மற்றும் சேமித்து வருகிறது என்றும், அந்த பாகங்கள் விமானங்களில் நிறுவப்பட்டிருக்கலாம் என்றும் குற்றம் சாட்டினார். … கூட்டாட்சி விமான போக்குவரத்து நிர்வாகத்திலிருந்து (FAA) ஆதாரங்களை மறைக்குமாறு தனது மேற்பார்வையாளர்கள் தன்னிடம் கூறியதாகவும், அதன் விளைவாக தான் பழிவாங்கப்படுவதாகவும் மொஹாக் குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த ஜனவரி முதல், போயிங் தொடர்பான தகவல்களை வழங்கிய இருவர் மர்மமான சூழ்நிலையில், ஊடகங்களால் மிகக் குறைவாக கவனம் செலுத்தப்பட்ட நிலையில் இறந்து கிடந்துள்ளனர். கடந்த மார்ச் மாதம், ஜோன் பார்னெட், நிறுவனத்தின் 787 ட்ரீம்லைனர் திட்டத்தில் பாதுகாப்பு மீறல்களை அம்பலப்படுத்தியதற்காக போயிங்கின் சவுத் கரோலினா ஆலையில் தர மேலாளர் பணியிலிருந்து நீக்கப்பட்டார். அவர், நிறுவனத்திற்கு எதிரான சிவில் வழக்கின் இறுதி நாளுக்கு முன், வாடகை காரில் இறந்து கிடந்தார்.

சார்லஸ்டன் பகுதி பிரேத பரிசோதனை செய்பவர் அலுவலகம் உடனடியாக எந்த ஆதாரத்தையும் பகிரங்கமாக வெளியிடாமல், அவரது மரணம் “சுய துப்பாக்கிச் சூட்டுக் காயத்தின்” விளைவு என்று தீர்ப்பளித்தது. சிறிது நேரத்திற்குப் பிறகு, ஒரு குடும்ப நண்பர் பார்னெட்டை மேற்கோள் காட்டி, “எனக்கு ஏதாவது நேர்ந்தால், அது தற்கொலை அல்ல” என்று குறிப்பிட்டார்.

இரண்டு மாதங்களுக்குப் பிறகு, தகவல் வழங்குபரான ஜோசுவா டீன் “737 ரக போயிங் விமான தயாரிப்பு வரிசையில் மூத்த தர நிர்வாகத்தால் கடுமையான மற்றும் மொத்த தவறான நடத்தைக்கான” குற்றச்சாட்டுகளை பகிரங்கமாக தெரிவித்தபின்பு திடீரென இறந்து போனார்.

கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற செனட் விசாரணையானது, துணைக்குழுத் தலைவர் ரிச்சர்ட் புளூமெண்டால் (ஜனநாயகக் கட்சி-கனெக்டிகட்) போயிங் மற்றும் சிறப்புச் சாட்சியான தலைமை நிர்வாக அதிகாரி டேவிட் கால்ஹவுன் ஆகியோருக்குக் “கணக்கீடு” செய்ததை வெளிப்படுத்தும் வகையில் அவர்கள் விரும்பும் முடிவை அடைவதற்காக கவனமாக ஒழுங்கமைக்கப்பட்டது.

737 மேக்ஸ் 8 விபத்துகளில் இறந்த பயணிகளின் உறவினர்கள், ஜோன் பார்னெட்டின் குடும்ப உறுப்பினர்களைப் போலவே, இறந்த தங்கள் அன்புக்குரியவர்களின் புகைப்படங்களை கொண்ட பதாகைகளை வைத்திருந்தனர். விசாரணையைத் தொடங்கும்போது, துணைக்குழுத் தலைவர் புளூமெண்டல் இரு குழுக்களுடனும் உரையாற்றினார்.

குறிப்பிடத்தக்க வகையில், பார்னெட்டின் மரணத்தை தற்கொலை என்று திட்டவட்டமாக ப்ளூமென்டல் அழைத்தார்.

கால்ஹவுன், விசாரணை அறையில் இருந்த பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் பக்கம் திரும்பி அவர்களின் இழப்புக்கு மன்னிப்பு கேட்பதன் மூலம் தனது கருத்துக்களைத் தொடங்கினார். புளூமெண்டால் கருத்து கேட்க, அவர் பார்னெட்டின் மரணத்தில் தனது “திகிலை” வெளிப்படுத்தினார்.

அறையில் இருந்த காஸா இனப்படுகொலைக்கு எதிரான போராட்டக்காரர்கள் இரு தரப்பிலும் உள்ள கமிட்டி உறுப்பினர்களால் வெறுமனே புறக்கணிக்கப்பட்டனர்.

இரு கட்சிகளின் அரசியல்வாதிகளிடமிருந்தும் கால்ஹோன் மீது விமர்சனங்கள் இருந்தன. ஆனால், முழு நடைமுறையும் கேவலமாக இருந்தன. நிறுவனத்தின் நம்பகத்தன்மையை மீட்டெடுக்க ஒரு புதிய நிர்வாகக் குழுவிற்கு புளூமெண்டல் அழைப்பு விடுத்தார். “போயிங் வெற்றிபெற வேண்டும் என்று நாங்கள் விரும்புவதால், நாங்கள் இங்கே இருக்கிறோம்,” என்று கூறிய அவர், மேலும் போயிங்கின் மெக்டோனல் டக்ளஸ் பிரிவைப்பற்றி குறிப்பிடுகையில், “எங்கள் இராணுவத்திற்காக” அது தேவை என்று குறிப்பிட்டார்.

பல டிரில்லியன் டாலர்களை கொண்டிருக்கின்ற வங்கிகள் மற்றும் முதலீட்டு நிதிகளுக்கு கட்டுப்பட்டுள்ள, தனியார் முதலாளிகளின் கைகளில் பொதுப் போக்குவரத்தின் முக்கிய அங்கமான பகுத்தறிவற்ற மற்றும் சமூக விரோதச் சாரம் பற்றி எதுவும் இங்கு பேசப்படவில்லை.

போயிங் விமானம் 737 MAX 8 அறிமுகப்படுத்தப்பட்டபோது தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த டென்னிஸ் முய்லன்பெர்க், தனது பதவிக்காலத்தில், $80 மில்லியன் டொலர்கள் அல்லது இரண்டு MAX விபத்துக்களில் இறந்த ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்ட $231,000 டொலர்களுக்கும் அதிகமான பணத்தை சம்பாதித்தார். அவரது வாரிசான கால்ஹவுன், 2021 முதல் $76 மில்லியனுக்கும் அதிகமாக சம்பாதித்துள்ளார்.

தி சியாட்டில் டைம்ஸ் பத்திரிகையானது, 2014 முதல் 2018 வரை, “போயிங் 92 சதவீத இயக்கப் பணப்புழக்கத்தை ஈவுத்தொகை மற்றும் பங்குகளை வாங்குவதற்காக முதலீட்டாளர்களுக்குப் பயனளிக்கும் வகையில் திருப்பியளித்துள்ளது “ என்று குறிப்பிட்டுள்ளது.

நிதி ஒட்டுண்ணித்தனத்தின் இத்தகைய நிலைகள் குற்றவியல் மற்றும் இராணுவவாதத்துடன் கைகோர்த்துச் செல்கின்றன. மேலும், இவை ஜனநாயகத்துடன் பொருந்தாது. உற்பத்திச் சாதனங்கள், தேசியவாதம் மற்றும் போர் ஆகியவற்றின் தனியார் ஏகபோகம் மற்றும் அனைத்து சமூகத் தேவைகளையும் பெருநிறுவன இலாபம் ஈட்டுதல் மற்றும் ஒரு தன்னல உயரடுக்கின் தனிப்பட்ட செல்வாக்கிற்கு அடிபணிதல் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு அமைப்பின் திவால்நிலைக்கு தொழிலாள வர்க்கம்தான் விலை செலுத்துகிறது.

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

சோசலிச சமத்துவக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான ஜோசப் கிஷோர் செவ்வாய் மாலை இந்த விசாரணைகள் குறித்து X டுவிட்டரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். “நிச்சயமாக அங்கு கூடியிருந்த செனட்டர்கள் எவரும் வெளிப்படையாகப் பேச விரும்பாத அடிப்படைக் கேள்வி என்னவென்றால், பயணப் போக்குவரத்து போன்ற அடிப்படை சமூகத் தேவைகளை, தனியார் இலாபத்திற்காக, அவை அடிபணியச் செய்கின்றன” என்று அவர் எழுதினார்.

“கால்ஹவுன் மற்றும் பிற நிர்வாகிகளுக்கு பத்து மில்லியன்கள், நூற்றுக்கணக்கான மில்லியன்கள் அல்லது எலோன் மஸ்க் விஷயத்தில் $45 பில்லியன் டொலர்கள், மேல்மட்ட முதலீட்டாளர்களுக்கு முடிவில்லாத லாபம் வருவதை உறுதி செய்வதற்காக வழங்கப்படுகிறது. ஏறக்குறைய அனைத்து பெரிய நிறுவனங்களைப் போலவே, போயிங்கின் முதலீட்டாளர்களிடையே பிளாக்ராக் மற்றும் வான்கார்ட் போன்ற முக்கிய தனியார் பங்கு நிதிகள் உள்ளன, அவை டிரில்லியன் கணக்கான டாலர்களைக் கட்டுப்படுத்துகின்றன.

“இதர முக்கிய சமூக உள்கட்டமைப்புகளுடன் (சுகாதாரம், கல்வி, வீடு, எரிசக்தி போன்றவை) முழுப் போக்குவரத்து அமைப்பும் சமூக தேவையின் அடிப்படையில் இயக்கப்பட வேண்டும், தனியார் இலாபத்துக்காக அல்ல. இந்த வழியில் மட்டுமே தொழிலாளர்களுக்கு நவீன சமுதாயத்திற்கு இன்றியமையாத அடிப்படை உரிமைகளை உத்தரவாதப்படுத்த முடியும்” என்று கிஷோர் மேலும் தெரிவித்தார்.

போயிங்கைக் கட்டுப்படுத்தும் பாரிய கொலையாளிகள் பொறுப்புக் கூறப்பட்டு நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும். ஆனால், இது முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியப்பட்ட மற்றும் சர்வதேச தாக்குதலில் இருந்து பிரிக்க முடியாதது.

இதன் தொடக்கப் புள்ளியானது, போயிங்கின் முதலாளித்துவ உரிமையாளர்கள் மற்றும் ஒட்டுமொத்த போக்குவரத்துத் தொழிலையும் கையகப்படுத்துவதும், விமான உற்பத்தியை தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் ஒரு பொதுச் சேவையாக மாற்றுவதும் அவசியமாகும்.

Loading