இஸ்ரேலிய இராணுவம் "உலகின் மிகவும் மோசமான குற்றவியல் இராணுவங்களில் ஒன்று" என ஐ.நா விசாரணை முடிவு

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் சர்வதேச சட்டத்தை மீறியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் உத்தியோகபூர்வ விசாரணை நேற்று தனது கண்டுபிடிப்புகளை வெளியிட்டுள்ளது. காஸாவில் நடந்து வரும் இனப்படுகொலையில் பாலஸ்தீனியர்களை “அழித்தொழிப்பது” உட்பட, போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களை இஸ்ரேலிய தலைவர்கள் மேற்கொண்டு வருவதாக அவர்கள் மீது ஐ.நா. குற்றம் சாட்டியுள்ளது.

காஸா பகுதியில் இஸ்ரேலிய குண்டுவீச்சில் காயமடைந்த பாலஸ்தீனியர்கள் வியாழன் அன்று, காஸா பகுதியில் உள்ள டெய்ர் அல் பலாவில் உள்ள அல் அக்சா மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர். [AP Photo/Abdel Kareem Hana]

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான முன்னாள் உயர்ஸ்தானிகரும், தென்னாப்பிரிக்க உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியுமான நவி பிள்ளை இந்த விசாரணைக்கு தலைவராக இருப்பதுடன், இஸ்ரேலிய போர்க்குற்றங்களின் அளவு “முன்னெப்போதும் இல்லாதது” என்று தெரிவித்தார்.

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட், போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களை மேற்கொண்டுள்ளனர் என்று குற்றம் சாட்டி, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) தலைமை வழக்கறிஞர் கரீம் கானிடம் 7,000ம் ஆதாரங்களை ஆணையம் சமர்ப்பித்துள்ளது என்று நவி பிள்ளை தெரிவித்தார்.

இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் “உலகின் மிகவும் தார்மீக இராணுவம்” என்ற பெஞ்சமின் நெதன்யாகுவின் கூற்றுகளுக்கு பதிலளித்த ஆணையத்தின் உறுப்பினர் கிறிஸ் சிடோட்டி, இந்த அறிக்கையை மேற்கோள் காட்டி, “இஸ்ரேலிய இராணுவம்தான் உலகின் மிகவும் குற்றவியல் இராணுவங்களில் ஒன்று என்பதை மட்டுமே நீங்கள் எடுக்கக்கூடிய ஒரே முடிவாகும்” என்று தெரிவித்தார்.

மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு இஸ்ரேலே பொறுப்பு என்று ஆணையம் முடிவு செய்துள்ளது. அதன் அறிக்கையின்படி, “அழித்தொழித்தல்; படுகொலை; பாலஸ்தீனிய ஆண்கள் மற்றும் சிறுவர்களை குறிவைத்து பாலின அடிப்படையிலான துன்புறுத்தல்கள்; கட்டாய இடமாற்றம்; சித்திரவதைகள் மற்றும் மனிதாபிமானமற்ற முறையில் கொடூரமான செயல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.”

ஆணையத்தின் வார்த்தைகளில், “காஸா பகுதியில் உள்ள பொதுமக்களின் வாழ்விடங்களை பரவலாகவும் கண்மூடித்தனமாகவும் குறிவைக்க இஸ்ரேலிய அரசாங்கம் [இஸ்ரேலிய இராணுவத்திற்கு] பொது அங்கீகாரம் வழங்கியதால், பாரிய அளவிலான பொதுமக்கள் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக அறிக்கை குறிப்பிடுகிறது.

“அரசியல் மற்றும் இராணுவ நோக்கங்களை அடைவதற்காக காஸா பகுதியின் மக்களை பிணைக் கைதிகளாக வைத்திருக்கும்” இஸ்ரேலிய அதிகாரிகளின் அறிக்கைகள், ஒரு “சிலரின் செயல்களுக்கு ஒட்டுமொத்த மக்கள் மீதும் கூட்டுத் தண்டனையை நிறைவேற்றுவதை நோக்கமாகக் கொண்ட நடவடிக்கைகள், சர்வதேச மனிதாபிமான சட்டத்தை தெளிவாக மீறும் செயல்” என்று ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

குறிப்பிடத்தக்க வகையில், இஸ்ரேலிய அரசாங்கம் மற்றும் இராணுவத்தின் மீது அக்டோபர் 7 தாக்குதலின் இறப்பு எண்ணிக்கைக்கான பொறுப்பின் கணிசமான பகுதியை ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது. இந்த தாக்குதலுக்கு முன்னதாக காஸா எல்லையில் இருந்து இஸ்ரேலியப் படைகள் பின்வாங்கியதுபற்றி இன்னும் விவரிக்கப்படவில்லை என்றும், வேண்டுமென்றே இஸ்ரேலியப் பணயக்கைதிகள் மற்றும் பொதுமக்களை இஸ்ரேலியப் படைகள் இலக்கு வைத்தன என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கை தொடர்கிறது:

குறைந்தபட்சம் இரண்டு சந்தர்ப்பங்களில், இஸ்ரேலிய இராணுவம் ஹன்னிபால் கட்டளையைப் (எதிரிகளால் கடத்தப்படுவதை விட சாவது மேல்) பயன்படுத்தியிருக்கலாம், இதன் விளைவாக 14 இஸ்ரேலிய பிரஜைகள் கொல்லப்பட்டனர் என்பதைக் குறிக்கும் தகவலை ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது. நிர் ஓஸில் இருந்து காஸாவிற்கு போராளிகளால் கடத்தப்பட்ட ஒரு பெண் இஸ்ரேலிய இரிணுவத்தின் ஹெலிகாப்டர் தாக்குதலில் கொல்லப்பட்டார். மற்றொரு சம்பவத்தில், பீரியில் உள்ள ஒரு வீட்டில் அடைக்கப்பட்டிருந்த 13 பொதுமக்கள் பணயக்கைதிகளில் சிலர் அல்லது அனைவரும் இஸ்ரேலிய டாங்கித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஆணையம் கண்டறிந்தது.

ஆணையம் பின்வருமாறு முடிவு செய்தது:

இஸ்ரேலிய அதிகாரிகள் தெற்கு இஸ்ரேலில் உள்ள அனைத்து கள முனையிலும் மக்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டனர். அக்டோபர் 7 அன்று, பொதுமக்களைப் பாதுகாப்பதற்கும், பொதுமக்களின் இருப்பிடங்களில் இருந்து அவர்களை வெளியேற்றுவதற்கும் போதுமான பாதுகாப்புப் படைகளை விரைவாக அனுப்பத் தவறியதும் இதில் அடங்கும். பல இடங்களில், இஸ்ரேலிய இராணுவம் “ஹன்னிபால் உத்தரவு” என்று அழைக்கப்படுவதைப் பயன்படுத்தியதோடு, குறைந்தது 14 இஸ்ரேலிய பிரஜைகளைக் கொன்றுள்ளது.

அக்டோபர் 7ம் தேதி, இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதல் மற்றும் அதைத் தொடர்ந்து இஸ்ரேலிய இராணுவம் செய்த போர்க்குற்றங்கள் ஆகிய இரண்டிற்கும் “மூலக் காரணம்” காஸாவை இஸ்ரேல் “சட்டவிரோதமாக” ஆக்கிரமித்ததே என்று நவி பிள்ளை தனது கருத்துக்களில் தெளிவுபடுத்தினார்.

“இந்த ஆக்கிரமிப்புடன், நாங்கள் சேகரித்த அனைத்து தகவல்களின் அடிப்படையில், மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதற்கான மிகத் தெளிவான நோக்கம் உள்ளது என்பது எங்களுக்கு மிகவும் அப்பட்டமாகத் தெரிகிறது” என்று நவி பிள்ளை மேலும் தெரிவித்தார்.

“உயிர்கள், அழிவுகள் மற்றும் இடப்பெயர்வுகளைப் பற்றி கவலைப்படாத மனப்பான்மை, இந்த குறிப்பிட்ட மோதல், ஆம், ஆக்கிரமிப்பு பிரச்சினையை மூலகாரணமாக கூர்மையாக வெளிப்படுத்தியுள்ளது என்று நான் கூறுவேன்” என்று அவர் சுட்டிக் காட்டினார்.

அக்டோபர் 7 ஆம் தேதி, இஸ்ரேலிய குடிமக்களுக்கு எதிராக ஹமாஸ் குற்றவியல் தாக்குதல்களை நடத்தியதாக அறிக்கை குற்றம் சாட்டினாலும், நவி பிள்ளை பின்வரும் வெளிப்படுத்தும் கருத்தை தெரிவித்தார்:

நெல்சன் மண்டேலா ஒரு பயங்கரவாதியாக வகைப்படுத்தப்பட்டார், அவர் விடுவிக்கப்படும் வரை அமெரிக்கா உட்பட, அவர்கள் அந்த பயங்கரவாத முத்திரையை விரைவாக தூக்கி எறிய வேண்டியிருந்தது. அதனால் அவர் நியூயோர்க்கின் தெருக்களில் டிக்கர்-டேப் அணிவகுப்பில் சேரலாம், மேலும் அனைவரும் அவரை ஒரே இரவில் சுதந்திரப் போராட்ட வீரராக ஏற்றுக்கொண்டனர். எனவே ஒருவருக்கு அவர் சுதந்திரப் போராட்ட வீரர் மற்றொருவருக்கு அவர் பயங்கரவாதியாக இருக்கலாம்.

காஸாவில் போர்க்குற்றங்களை எளிதாக்குவதில் அமெரிக்கா போன்ற “மூன்றாம் தரப்பினரின்” பங்கு பற்றி கேட்கப்பட்டதற்கு, “பலம் வாய்ந்த நாடுகளின் உதவி இல்லாமல் இருந்திருந்தால், இஸ்ரேலால் இந்த நிரந்தரமான ஆக்கிரமிப்பை இதே போல் வெறித்தனமாக செய்திருக்க முடியாது” என்று நவி பிள்ளை பதிலளித்தார்.

தவிர்க்க முடியாமல் பின்பற்றப்படும் முடிவு என்னவென்றால், போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைகளை மேற்கொண்டு வருவதில் நெதன்யாகு மற்றும் கேலன்ட் மட்டுமே குற்றம் சாட்டப்படவில்லை, மாறாக, இஸ்ரேலின் இரத்தக்களரி படுகொலைக்கு முறையாக நிதியுதவி, ஆயுதமளித்து மற்றும் அரசியல் ரீதியில் பாதுகாத்து வருகின்ற அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் மற்றும் அவரது நிர்வாகத்தின் முக்கிய உறுப்பினர்களும் கூட குற்றம்சாட்டப்பட்டுள்ளனர்.

Loading