முன்னோக்கு

சமூகக் கொள்ளை: எலான் மஸ்க் 45 பில்லியன் டாலர்கள் ஊதியம் வாங்கி சாதனை புரிந்துள்ளார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம் 

கடந்த வியாழக்கிழமை டெஸ்லா, அதன் பங்குதாரர்கள் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) எலோன் மஸ்க்கிற்கு முன்னெப்போதும் இல்லாத அளவில், 45 பில்லியன் டாலர்களுக்கும் அதிக மதிப்புடைய ஊதியப்பொதிக்கு மீண்டும் ஒப்புதல் அளித்ததாக அறிவித்தது. “பில்லியனரை அநியாயமாக செழிப்பாக்குவதற்கு” பணம் வழங்குவதை முன்னதாக தடுத்து நிறுத்திய டெலாவேர் நீதிபதி குறிப்பிட்டதைப் போல, இந்தத் தொகை “பொதுச் சந்தைகளில் இதுவரை காணப்படாத மிகப் பெரிய சாத்தியமான ஊதிய வாய்ப்பாகும்.”

எலோன் மஸ்க், நடுவில், இந்தோனேசியாவின் பாலியில் உள்ள நுசா துவாவில் 10வது உலக நீர் மன்றத்தில் மே 20, 2024 திங்கட்கிழமை கலந்து கொள்கிறார். [AP Photo/Firdia Lisnawati]

பணம் செலுத்துவது என்பது சமூகக் கொள்ளையின் ஒரு வடிவமாகும். பெரும்பாலானவர்கள் தங்கள் செலவுகளை செலுத்த முடியாத நேரத்தில், இது அமெரிக்காவின் ஒவ்வொரு தனி குடும்பமும் உலகின் மிகப் பெரிய பணக்காரருக்கு 350 டாலருக்கான காசோலையை அனுப்ப நிர்பந்திக்கப்படுவதற்கு சமமாகும். மத்திய காலத்தில் “பிரபுத்துவ கொள்ளைக்காரர்கள்” சாலையின் ஓரத்தில் பயணிகளிடமிருந்து ஒவ்வொருவராக வழிமறித்து கொள்ளையடித்தார்கள். ஆனால், முதலாளித்துவ “சுதந்திர சந்தையின்” செயல்பாடுகள் மூலமாக, மஸ்க்கும் அவரது சக செல்வந்த தன்னலக்குழுக்களும் மனிதகுலம் முழுவதையும் கொள்ளையடித்தும் ஏமாற்றியும் வருகின்றனர்.

அமெரிக்காவில் வீடற்ற நிலையை தீர்ப்பதற்கும் (20 பில்லியன் டாலர்கள்) மற்றும் பட்டினியை அகற்றுவதற்கும் (25 பில்லியன் டாலர்கள்) செலவாகும் என்று மதிப்பிடப்பட்டதை விட மஸ்க்கின் ஊதியம் பெரியது. இது, வரி செலுத்துவதற்கு முன்பு, அமெரிக்காவில் சராசரி வருவாய் ஈட்டும் 1.2 மில்லியன் தொழிலாளர்களால் (தலா 37,500 டாலர்கள்) ஒரு முழு ஆண்டில் ஈட்டப்படுவதற்கு சமமாகும்.

முதல் 10 பணக்காரர்களின் சமீபத்திய ஃபோர்ப்ஸ் பட்டியலின்படி, எலோன் மஸ்க் ஏற்கனவே 208.4 பில்லியன் டாலர்கள் நிகர மதிப்புடன் இந்தப் பூமிக் கிரகத்தின் மிகப் பெரிய பணக்காரராக உள்ளார். ஜெஃப் பெசோஸ் (அமேசான்), மார்க் ஜுக்கர்பெர்க் (மெட்டா / பேஸ்புக்) மற்றும் பெர்னார்ட் அர்னால்ட் (LVMH) உள்ளிட்ட இந்தக் குழுவில் உள்ள மற்றவர்களுடன், மஸ்க்கின் செல்வமும் சேர்ந்து உலகின் முக்கால்வாசி நாடுகளின் (212 நாடுகளில் 156 இல்) மொத்த உள்நாட்டு உற்பத்தியை (GDP) விட அதிகமாக உள்ளது.

மஸ்க்கிற்கு இந்த தொகுப்பை வழங்குவதற்கான டெஸ்லா பங்குதாரர்களின் முடிவானது, சமூக சமத்துவமின்மையின் விரைவான வளர்ச்சி, பொருளாதாரத்தின் நிதிமயமாக்கம், ஏகாதிபத்தியப் போர் மற்றும் ஜனநாயக அரசாங்கத்தின் பொறிவு ஆகியவற்றின் உள்ளடக்கத்தில் நடைபெறுகிறது.

சனிக்கிழமையன்று பைனான்சியல் டைம்ஸ் பிரசுரித்த புள்ளிவிபரங்களின்படி, தலைமை நிர்வாக அதிகாரிகளின் ஊதியங்களின் போக்குகள் குறைந்தபட்சம் கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத வேகமான விகிதத்தில் அதிகரித்து வருகின்றன. இது அதீத செல்வந்தர்களை, எஞ்சிய மக்களிடம் இருந்து பிரிப்பதை சாதனை மட்டங்களுக்கு கொண்டு வந்துள்ளது.

பைனான்சியல் டைம்ஸ் அறிக்கை இவ்வாறு கூறுகிறது, “2024 ஆம் ஆண்டில் இதுவரை, S&P 500 நிறுவனங்களில் சராசரி தலைமை நிர்வாக அதிகாரியின் ஊதியம் 12 சதவீதம் உயர்ந்துள்ளது என்று பினாமி ஆலோசகர் நிறுவன பங்குதாரர் சேவைகளின் (Institutional Shareholder Services) ஒரு பகுதியான ஐஎஸ்எஸ் கார்ப்பரேட் (ISS Corporate) தெரிவித்துள்ளது. இது உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின்படி, அமெரிக்க ஊதிய வளர்ச்சியில் ஆண்டுக்கு 4.1 சதவீத அதிகரிப்புடன் ஒப்பிடப்படுகிறது.”

எக்ஸான் (Exxon) நிர்வாகக் குழுவின் முன்னாள் ஊதியக் குழுத் தலைவரும், மெட்ரானிக் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி வில்லியம் ஜோர்ஜை பைனான்சியல் டைம்ஸ் மேற்கோளிடுகிறது. தலைமை நிர்வாக அதிகாரியின் ஊதியம் “கட்டுப்பாட்டை மீறிவிட்டது” என்றும், மஸ்க்கின் ஊதிய பொதி “இங்கே வானமே எல்லை” என்ற செய்தியை அனுப்புகிறது என்றும், எவ்வளவு வேண்டும் என்றாலும் பெறலாம் என்றும்” அவர் கூறினார். 

சமூகக் கோபம் மற்றும் எதிர்ப்பின் வளர்ச்சி குறித்து கவலை தெரிவித்த ஜோர்ஜ், “இது நம் நாட்டில் இருப்பவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் இடையே மேலும் பிளவை ஏற்படுத்தப் போகிறது. இது எனக்கு ஒரு தீவிர கவலையாக உள்ளது, ஏனென்றால் [நிறுவனங்களில்] நம்பிக்கை இழப்பு ஏற்படும் என்று நான் நினைக்கிறேன்” என்று தெரிவித்தார்.

மஸ்க் மற்றும் பிற செல்வந்த தன்னலக்குழுக்களால் கட்டுப்படுத்தப்படும் செல்வவளம், அமெரிக்காவிலும் உலகெங்கிலும் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் முகங்கொடுக்கும் தீவிர சமூக நெருக்கடியுடன் நேரடியாக தொடர்புடையதாகும்.

உத்தியோகபூர்வமாக, அமெரிக்காவில் 582,500 வீடற்ற மக்கள் உள்ளனர். குறிப்பிடத்தக்க வகையில் இது குறைவாக மதிப்பிடப்பட்டதாகவே அறியப்படுகிறது. எண்ணற்ற பில்லியன்கள் மஸ்க்கிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்ற அதேவேளையில், தொழிலாளர்களும் அவர்களது குடும்பங்களும் விலைவாசி உயர்வை எதிர்கொள்வதுடன், வெறுமனே உயிர் வாழ்வதற்காக பல வேலைகளை செய்து வருகின்றனர். அதேவேளையில் அரசாங்கம் சமூக நலத் திட்டங்கள், கல்வி, சுகாதாரம் மற்றும் உள்கட்டமைப்புக்கான நிதிகளை வெட்டித் தள்ளி வருகிறது.

அரசாங்கத்தின் ஒவ்வொரு மட்டத்திலும் ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினர் இரண்டுமே அடிப்படை சமூக திட்டங்களுக்கு அங்கே பணமில்லை என்று வாதிடுகின்றனர். அதேவேளையில், செல்வந்தர்கள் மிகக் குறைவாகவே வரி செலுத்துகின்றனர் அல்லது வரியே செலுத்துவதில்லை. உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போருக்கும் மற்றும் காஸாவில் இஸ்ரேலிய அரசாங்கத்தால் பாலஸ்தீனியர்கள் இனப்படுகொலை செய்யப்படுவதற்கும் எண்ணற்ற பில்லியன்கள் வழங்கப்படுகின்றன.

பில்லியனர் உயரடுக்கினரால் குவிக்கப்படுகின்ற செல்வ வளமானது, சமூகத்தின் செல்வ வளத்தை பெருநிறுவன மற்றும் நிதியியல் செல்வந்த தட்டுக்களின் கரங்களுக்குள் பாய்ச்சுவதற்கான ஒரு இயங்குமுறையான, பங்குச் சந்தையின் பல தசாப்த கால எழுச்சியுடன் பின்னிப்பிணைந்துள்ளது. மஸ்க்கிற்கு செல்லும் 45 பில்லியன் டாலர்கள் டெஸ்லா பங்குகளின் வடிவத்தில் உள்ளது. இது, 2018 முதல் நிறுவனத்தின் பங்கு மதிப்புகளை 50 பில்லியன் டாலர்களில் இருந்து இன்று 558 பில்லியன் டாலர்களாக விரைவாக அதிகரித்ததற்கான “வெகுமதி” ஆக இருக்கின்றன.

பங்கு மதிப்புக்களில் ஏற்றம் என்பது வோல் ஸ்ட்ரீட்டில் கட்டுப்பாடற்ற ஊகத்தின் விளைவு ஆகும். இது செல்வந்தர்களுக்கு பணத்தை அச்சிடும் மத்திய வங்கிக் கூட்டமைப்பு (Federal Reserve) கொள்கையால் எரியூட்டப்பட்டது. 2020 பிப்ரவரி மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் நிதியியல் செல்வந்த தன்னலக்குழுவிற்கு 3 ட்ரில்லியன் டாலர்கள் ஒப்படைக்கப்பட்டது. கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோய்க்கு ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினரின் விடையிறுப்பின் போது மத்திய வங்கியில் இருந்து அதீத செல்வந்தர்களுக்கு சொத்துக்களை மாற்றுவதில் ஒரு உயர்ந்த புள்ளியை எட்டியது.

மார்ச் 2020 இல் கேர்ஸ் சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர், ஆளும் வர்க்கம் தொழிலாளர்களை மீண்டும் வேலைக்குத் திரும்ப கட்டாயப்படுத்தும் ஒரு நடவடிக்கையைத் தொடங்கியது, இது அமெரிக்காவில் 1.5 மில்லியனுக்கும் அதிகமானவர்களையும், உலகளவில் 27 மில்லியனுக்கும் அதிகமானவர்களையும் அதிகளவில் உயிரிழக்க இட்டுச் சென்றது. கோவிட்-19 உடன் பாரிய தொற்றுநோய்க்கான ஒரு முன்னணி ஆதரவாளராக இருந்த மஸ்க், கலிபோர்னியா மாநில சட்டத்தை மீறி டெஸ்லா ஆலைகளை மீண்டும் திறந்தார். இது மாநில ஜனநாயகக் கட்சியினரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு குற்றவியல் கொள்கையாகும்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியிடப்பட்ட அதன் அறிக்கையில், உலக சோசலிச வலைத் தளம் இவ்வாறு விளக்கியது, “தனிப்பட்ட செல்வக் குவிப்பானது, அதன் சொந்த உரிமையில் மகத்தான முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தாலும், முதலாளித்துவ ஆளும் உயரடுக்குகளுக்கு சொந்தமான ஒரு சில இராட்சத நிறுவனங்களில் பொருளாதார சக்தி அளப்பரிய அளவில் குவிந்திருப்பதுடன் தொடர்புபட்டதாகும்.”

குறிப்பாக விரல்விட்டு எண்ணக்கூடிய தொழில்நுட்ப நிறுவனங்களின் பாரிய செல்வாக்கை அது குறிப்பிட்டது. இவைகள் ட்விட்டர்/எக்ஸ் இல் மஸ்க் வைத்திருப்பதை மேற்கோளிட்டு, “இணையம் மற்றும் சமூக ஊடகங்கள் மீது பெரும் அதிகாரத்தைச் செலுத்துகின்றன”. இந்த பில்லியனர், அதிவலது சதி கோட்பாடுகள் மற்றும் பாசிச அரசியல் அமைப்புக்கள் மற்றும் 2024 ஜனாதிபதித் தேர்தலில் குடியரசுக் கட்சியின் அனுமான வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் போன்ற தனிநபர்களை ஊக்குவிப்பதற்காக நிறுவனத்தின் மீதான தனது கட்டுப்பாட்டைப் பயன்படுத்தியுள்ளார்.

WSWS ன் அந்த அறிக்கையானது, உலகெங்கிலும் பொருளாதார சக்தியின் அதீத ஒன்றுகுவிப்புக்கும் எதேச்சாதிகாரம் மற்றும் சர்வாதிகாரத்தின் வளர்ச்சிக்கும் இடையிலான உறவை விளக்கியது. “உலகெங்கிலும் உள்ள ஜனநாயகத்தின் பிராணவாயுவை உறிஞ்சும் சக்திகள் இவை. அடிப்படையான பொருளாதார சக்திகள் மற்றும் வேலையில் உள்ள நலன்களுக்கு தீர்வுகாணாமல் அடிப்படை ஜனநாயக உரிமைகள் பாதுகாக்கப்பட முடியும் என்ற எண்ணம் வெறும் ஆசையாகவே மட்டும் இருக்கும்”.

டெஸ்லாவின் அறிவிப்புக்கு விடையிறுக்கையில், அமெரிக்க ஜனாதிபதிக்கான சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளர் ஜோசப் கிஷோர் வெளியிட்ட ஒரு அறிக்கையின் ஒரு பகுதி பின்வருமாறு குறிப்பிட்டது:

சுரண்டுவோரின் உடைமைகளைப் பறிமுதல் செய்து, முதலாளித்துவத்தை ஒழித்து அதை சோசலிசத்தைக் கொண்டு பிரதியீடு செய்வதன் அவசியம் அமெரிக்காவிலும் உலகெங்கிலும் கடந்த நான்காண்டுகளில் மிகவும் அழுத்தமாக உள்ளது. செல்வவளத்தில் மூழ்கியுள்ள செல்வந்த தட்டுக்கள், இந்த பெருந்தொற்று நோயில் பாரிய உயிரிழப்புகளை இயல்பாக்கியுள்ளன, காஸாவில் இனப்படுகொலையை இயல்பாக்கியுள்ளன மற்றும் மனிதகுலத்தை அணுஆயுத போரின் படுகுழிக்குள் தள்ளி வருகின்றன.

உலகெங்கிலும் உள்ள பரந்த தொழிலாளர்களை எதிர்கொண்டுள்ள ஒரேயொரு சமூகப் பிரச்சினையைக் கூட சமூக மற்றும் பொருளாதார வாழ்வின் அடிப்படை மறுசீரமைப்புக்கு வெளியே தீர்க்க முடியாது. பெருநிறுவன மற்றும் நிதியியல் செல்வந்த தன்னலக்குழுக்களால் குவிக்கப்பட்ட அபரிமிதமான செல்வவளம் பறிமுதல் செய்யப்பட்டு, அழுத்தும் சமூக தேவைகளைப் பூர்த்தி செய்ய திருப்பி விடப்பட வேண்டும். பிரம்மாண்டமான பெருநிறுவனங்களும் நிதிய நிறுவனங்களும் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும், அவைகள் தனியார் இலாபத்திற்காக அல்லாமல் சமூக தேவையின் அடிப்படையில் நிர்வகிக்கப்பட வேண்டும்.

சமூக சமத்துவமின்மையின் தீவிர வளர்ச்சிக்கு இந்த வேலைத்திட்டம் மட்டுமே பகுத்தறிவான பதிலாகும். முழு ஆளும் வர்க்கத்திற்கும் அதன் அரசு எந்திரத்திற்கும் எதிரான வர்க்கப் போராட்டத்தின் மூலம் மட்டுமே அதன் சாதனையை சாத்தியமாக்க முடியும். இதன் பொருள், அமெரிக்காவிலும் உலகெங்கிலும் உள்ள பொருளாதார வாழ்க்கையை சோசலிசத்தின் மூலம் மறுஒழுங்கமைப்பதையும், அதிகாரத்தை கைப்பற்றுவதையும் இலக்காகக் கொண்ட ஒரு தொழிலாள வர்க்க இயக்கத்தின் வளர்ச்சியாகும்.

Loading