அமெரிக்க ஆதரவுடன் இஸ்ரேல் ரஃபா படுகொலையை தொடர்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

கடந்த வெள்ளியன்று இஸ்ரேல் அதன் பாரிய இடப்பெயர்வு, இனச்சுத்திகரிப்பு மற்றும் பாரிய படுகொலைகளை காஸா பகுதியின் தெற்கு நகரமான ரபாவில் தீவிரப்படுத்தியதுடன், நகரத்திற்கு வடக்கே ஒரு அகதிகள் முகாம் மீது அது மேற்கொண்ட தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டனர்.

ஜூன் 21, 2024 வெள்ளியன்று தெற்கு காஸா பகுதியில் கான் யூனிஸ் என்ற இடத்தில் இஸ்ரேலிய குண்டுவீச்சினால் அருகிலுள்ள வீடு தாக்கப்பட்டதற்கு அடுத்த நாள், இடம்பெயர்ந்த மக்கள் வசிக்கும் UNRWA பள்ளியின் விரிவான சேதத்தை ஒரு பாலஸ்தீனிய குடும்பம் உன்னிப்பாகக் பார்க்கிறது. [AP Photo/Jehad Alshrafi]

இஸ்ரேலிய டாங்கிகளின் தாக்குதல், இஸ்ரேலிய இராணுவம் “பாதுகாப்பு மண்டலம்” என்று அறிவித்திருந்த ஒரு செஞ்சிலுவைச் சங்கத்தின் மனிதாபிமான கட்டிடத்துக்கு வெளியே திடீரென்று நடத்தியது.

இஸ்ரேலிய ஷெல்கள் அதன் அலுவலகங்களில் இருந்து சில அடி தூரத்தில் விழுந்ததாகவும், அவை சேதமடைந்ததாகவும் செஞ்சிலுவை சங்கம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த கட்டிடம் “கூடாரங்களில் வசிக்கும் நூற்றுக்கணக்கான இடம்பெயர்ந்த மக்களால் சூழப்பட்டிருந்தது.”

இந்த தாக்குதலில் உயிர் தப்பிய ஒருவர் அல் ஜசீராவிடம், “நாங்கள் அப்போதுதான் சாப்பிட்டு விட்டு தூங்கி சிறிது ஓய்வெடுக்க இருந்தோம், அடுத்து வெடிச்சத்தத்துடன் எங்கள் இடங்களை அழிக்கும் சத்தம் கேட்டது! என்ன செய்வது என்று தெரியாமல் தனிமையில் இருக்கிறோம். என்ன நடந்தது என்பதை எங்களால் இன்னும் ஜீரணிக்க முடியவில்லை!” என்று குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்தார், “ஓ கடவுளே, எங்களைப் பாருங்கள், ஓ உலகம், எங்கள் நிலையைப் பாருங்கள். ... நெருப்பு ஒவ்வொரு திசைகளிலிருந்தும் எங்களை எரிக்கிறது.”

உயிர்தப்பிய மற்றொருவர் அல் ஜசீராவிடம்,  “இன்று, பிற்பகல், செஞ்சிலுவை சங்கத்திற்கு அருகில் ஒரு குண்டு வீசப்பட்டது. வெடிச்சத்தம் கேட்டு என் கணவர் வெளியே சென்றார். இரண்டாவது குண்டு செஞ்சிலுவைச் சங்க கட்டிடம் அருகே வீழ்ந்தது. அதில் சிலர் காயமடைந்ததால் அனைத்து இளைஞர்களும் அங்கு சென்றனர்”  என்று கூறினார்

வெள்ளிக்கிழமை நடந்த படுகொலை ரபா மீது அமெரிக்க ஆதரவு பெற்ற இஸ்ரேலிய தாக்குதலில் சமீபத்தியது மட்டுமே; இது நகரத்தில் இருந்து ஒரு மில்லியனுக்கும் மேலான மக்களை இடம்பெயரச் செய்துள்ளது; அவர்களில் பெரும்பாலானவர்கள் காஸாவின் மற்ற பகுதிகளில் இருந்து இடம் பெயர்ந்திருந்தனர்.

“நேற்று இரவு மேற்கு ரஃபாவில் மிக மோசமான இரவுகளில் ஒன்றாகும்: ஆளில்லா விமானங்கள், டாங்கிகள் மற்றும் போர்க்கப்பல்கள் அப்பகுதியில் குண்டுவீசின. இஸ்ரேல் ஆக்கிரமிப்பின் மூலம் நகரத்தின் கட்டுப்பாட்டை எடுக்க முயற்சிக்கிறது என்று நாங்கள் நம்புகிறோம்” என்று ரஃபாவில் வசிக்கும் ஹடெம் ராய்ட்டர்ஸிடம் கூறினார்.

ரஃபா மீதான இஸ்ரேலிய தாக்குதல் ஒரு “சிவப்புக் கோடு” என்று பைடென் நிர்வாகம் முன்னதாக கூறியிருந்தாலும், வெள்ளை மாளிகை ரஃபா மீதான தரைவழித் தாக்குதல் மற்றும் பொதுமக்களுக்கு எதிராக நடந்து வரும் வான்வழித் தாக்குதல்கள் இரண்டையும் முழுமையாக ஆதரித்துள்ளது.

இரண்டு வாரங்களுக்கு முன்னர், இஸ்ரேலிய படைகள் Nuseirat அகதிகள் முகாமில் நடத்திய ஒரு படுகொலையில் குறைந்தபட்சம் 274 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதோடு, மேலும் 500 க்கும் மேற்பட்டவர்களை காயப்படுத்தியது. Nuseirat தாக்குதல்கள் “மட்டுப்படுத்தப்பட்டவை” மற்றும் “இலக்கு வைக்கப்பட்டவை” என்று வெள்ளை மாளிகை அழைத்தது.

காஸா பகுதி முழுவதிலும் நடந்த இதர படுகொலைகளைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை ரஃபாவில் இந்த படுகொலைகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த 24 மணி நேரத்தில் குறைந்தது 35 பேர் கொல்லப்பட்டுள்ளதாக காஸாவின் சுகாதார அமைச்சர் கூறினார். இது அக்டோபரில் இருந்து உத்தியோகபூர்வ இறப்பு எண்ணிக்கையை 37,431 ஆக கொண்டு வந்துள்ளது.

ரஃபா மீதான தாக்குதலை மேற்கொண்டு, ரஃபா எல்லை கடவையை இஸ்ரேல் அழித்துள்ள நிலையில், காஸாவில் உணவு விநியோகம் பொறிவின் விளிம்பிற்கு வந்துள்ளது.

எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு (Doctors Without Borders - MSF) வெள்ளிக்கிழமையன்று ரஃபாவில் அதன் நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க நிர்பந்திக்கப்படலாம் என்று எச்சரித்தது.

இந்த பேரழிவையும், ரஃபா மீதான இஸ்ரேலின் தாக்குதலையும் குற்றஞ்சாட்டிய அது, “மே மாத தொடக்கத்தில் காஸாவின் தெற்கில் இஸ்ரேலின் தாக்குதலைத் தொடர்ந்து ரஃபா கடவை மூடியமை, மற்றும் இஸ்ரேலிய அதிகாரிகளால் திணிக்கப்பட்ட முடிவற்ற நிர்வாக சம்பிரதாயங்களுடன் சேர்ந்து, கெரெம் ஷாலோம் நுழைவாயிலில் திறந்திருக்கும் எல்லை வழியாக மனிதாபிமான உதவிகள் மிகவும் மெதுவாக வருவதற்கு வழிவகுத்துள்ளது “ என்று அறிவித்தது.

இஸ்ரேலிய அரசாங்கத்தை “நிர்மூலமாக்குதல்,” “போர் குற்றங்கள்” மற்றும் “மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள்” என்று குற்றஞ்சாட்டி, காஸா போர் மீதான ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை ஆணையம் அதன் உத்தியோகபூர்வ தீர்ப்பை வழங்கி வெறும் இரண்டு நாட்களுக்குப் பின்னர் வெள்ளிக்கிழமை படுகொலை நடந்தது.

“இஸ்ரேலிய இராணுவம் உலகின் மிகவும் குற்றகரமான இராணுவங்களில் ஒன்றாகும் என்பதே நீங்கள் எடுக்கக்கூடிய ஒரே முடிவாகும்” என்று ஆணைய உறுப்பினர் கிறிஸ் சிடோட்டி கூறினார்.

விசாரணைக் குழுவின் தலைவரான நவி பிள்ளை, காஸா இனப்படுகொலைக்கு உறுதுணையாக இருந்ததற்காக அமெரிக்காவை மறைமுகமாகக் கண்டித்தார். “சக்திவாய்ந்த நாடுகளின் உதவி இல்லாமல் இருந்திருந்தால், இஸ்ரேல் இந்த நிரந்தர ஆக்கிரமிப்பை இப்போது போல் ஆக்ரோஷமாக செயல்படுத்த முடியாது” என்று பிள்ளை கூறினார்.

காஸாவின் சுகாதார அமைப்பு சீர்குலைந்துள்ளதால், கடுமையாக காயமடைந்தவர்கள் காஸாவில் இறக்க விடப்படுகிறார்கள். வெள்ளிக்கிழமை ஒரு அறிக்கையில், உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் (Tedros Adhanom Ghebreyesus), மே 7 முதல் நோய்வாய்ப்பட்ட அல்லது காயமடைந்த ஒரு பாலஸ்தீனியர் கூட காஸாவிலிருந்து வெளியேற அனுமதிக்கப்படவில்லை என்று கூறினார்.

“மே 7 அன்று ரஃபா எல்லைக் கடக்கும் இடத்தை மூடியதில் இருந்து , எந்த நோயாளிகளும் காஸா பகுதியிலிருந்து வெளியேற்றப்படவில்லை” என்று டெட்ரோஸ் கூறினார். “அதாவது 2,000க்கும் மேற்பட்ட மக்கள் முக்கியமான உயிர் காக்கும் சிறப்பு சுகாதார சேவையைப் பெறவில்லை.

“எகிப்துக்கு இடமாற்றம் செய்வதற்கு ரஃபா, மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெருசலேமில் உள்ள பரிந்துரை மருத்துவமனைகளுக்கு மாற்றுவதற்கு கரேம் ஷாலோம் மற்றும் சிறப்புப் பராமரிப்புக்காக மற்ற நாட்டிற்கு தேவைப்பட்டால் மருத்துவ வெளியேற்றங்கள் அனைத்து சாத்தியமான குறுக்கு புள்ளிகள் மூலம் எளிதாக்கப்பட வேண்டும்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

பாரிய படுகொலைகளைத் தவிர, இஸ்ரேலிய அரசாங்கம் பரந்த அளவில் கைதிகளை சித்திரவதை செய்து வருகிறது. வெள்ளிக்கிழமை பிரபலமடைந்த ஒரு வீடியோவில், காஸாவாசியான பதர் தஹ்லான், இஸ்ரேலிய படைகளால் தான் சித்திரவதை செய்யப்பட்டதை விவரித்தார். “அவர்கள் [இஸ்ரேலிய இராணுவம்] என் கைகளிலும் கால்களிலும் அடித்தனர்,” என்று தஹ்லான் சாட்சியமளித்தார், அவர் “அத்துமீறல்கள் மற்றும் சித்திரவதை நடவடிக்கைகளுக்கு” உட்படுத்தப்பட்டார் என்று கூறினார்.

இஸ்ரேலிய படைகளால் காஸா பகுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குறைந்தது 36 கைதிகள் சித்திரவதை மற்றும் மோசமான நிலைமைகள் காரணமாக இறந்துள்ளனர் என்று காஸாவின் அரசாங்க ஊடக அலுவலகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

“இனப்படுகொலை மற்றம் போர் தொடங்கியதில் இருந்து கைதிகள் மீதான திட்டமிட்ட தாக்குதல்களுக்கு மத்தியில், பல்வேறு பாலஸ்தீனிய பிராந்தியங்களைச் சேர்ந்த 54 கைதிகள் சித்திரவதை மற்றும் மனிதாபிமானமற்ற தடுப்புக்காவல் நிலைமைகள் காரணமாக இஸ்ரேலிய சிறைகளில் இறந்துள்ளனர்” என்று கூறிய ஊடக அலுவலகம், இஸ்ரேலிய சிறைகளை “சர்வதேச அமைப்புகளால் புறக்கணிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பாலஸ்தீன கைதிகளுக்கான பாரிய கல்லறைகள்” என்று விவரித்தது.

Loading