ரஷ்யாவில் "எங்கு வேண்டுமானாலும்" உக்ரேன் தாக்குதல் நடத்தலாம் என அமெரிக்கா கூறியுள்ள நிலையில், கிரிமியாவில் கடற்கரைக்கு செல்பவர்களை அமெரிக்க ஏவுகணைகள் படுகொலை செய்கின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

கடந்த ஞாயிற்றுக்கிழமை உக்ரேனில் இருந்து அமெரிக்கா தயாரித்த நீண்ட தூர ஏவுகணை செவஸ்டோபோலில் உள்ள பரபரப்பான கடற்கரையில் கொத்து குண்டுகளை வீசியதில் நான்கு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 144 பேர் காயமடைந்தனர்.

இந்த தாக்குதலில் 82 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், 27 குழந்தைகள் காயமடைந்துள்ளதாகவும் செவஸ்டோபோல் ஆளுநர் மிகைல் ரஸ்வோஜாயேவ் தெரிவித்தார். 

ஜூன் 23, 2024 அன்று ஏவுகணைத் தாக்குதலுக்குப் பிறகு செவஸ்டோபோலில் உள்ள கடற்கரையில் இடிபாடுகள் மற்றும் கடற்கரை பொம்மைகள் சிதறிக்கிடந்தன. [Photo: RT]

கடலில் குளிப்பவர்களை இலக்கு வைத்தது “வேண்டுமென்றே” தாக்குதல் நடத்தப்பட்டது என்று கூறிய ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம், “செவஸ்டோபோலில் அப்பாவி மக்கள் மீது வேண்டுமென்றே நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலுக்கான பொறுப்பு, பிரதானமாக உக்ரேனுக்கும், இந்த ஆயுதங்களை வழங்கிய வாஷிங்டன் மீதும், மற்றும் இந்த தாக்குதலை நடத்திய கியேவ் ஆட்சியின் மீதும் தங்கியுள்ளது,” என்று குறிப்பிட்டது. 

நான்கு அமெரிக்க இராணுவ தந்திரோபாய ஏவுகணை அமைப்பு (ATACMS) ஏவுகணைகள் கிரிமியாவின் மீது நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்டன என்றும், மேலும் ஒன்று அதன் குண்டுகளை வீசி, கடற்கரைக்கு சென்றவர்களைக் கொன்று காயப்படுத்தியுள்ளதாகவும், ATACMS ஏவுகணைகளுக்கான ஆயத்தொலைவுகள் அமெரிக்க உளவு செயற்கைக்கோள்களால் அனுப்பப்பட்டதாகவும் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் கூறியது.

“விழுந்த கிளஸ்டர் கொத்துக் குண்டுகள் கடற்கரையைத் தாக்கின. அங்கு வலுவான மக்கள் இருப்பு உள்ளது, எனவே பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் “ என்று ரஷ்ய சிந்தனைக் குழுவின் ஆய்வாளர் ஒருவர் ஸ்பூட்னிக் நியூஸிடம் தெரிவித்தார். 

“செவஸ்டோபோலில் ATACMS ஏவப்பட்ட தருணத்தில், அமெரிக்க RQ-4 Global Hawk நீண்ட தூர கண்காணிப்பு ட்ரோன் கருங்கடல் மீது கண்டறியப்பட்டது” என்று ஸ்பூட்னிக் தெரிவித்துள்ளது. 

முன்னாள் ரஷ்ய ஜனாதிபதி டிமிட்ரி மெட்வெடேவ், ரஷ்யா இதற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். “அமெரிக்கா” “பூமியில் நெருப்பில்...... நரகத்தில் எரியும்” என்று மெட்வெடேவ் கூறினார். “அமெரிக்காவைச் சேர்ந்த இந்த காடையர்கள் [உக்ரேனிய பாசிஸ்ட் ஸ்டீபன்] பண்டேராவின் ஆதரவாளர்களுக்கு கிளஸ்டர் கொத்து குண்டு ஏவுகணைகளை விநியோகித்து அவர்களின் இலக்கை அடைய உதவுகிறார்கள்”  என்று அவர் தெரிவித்தார்.

டிரினிட்டி ஞாயிறு கிழக்கு ஆர்த்தடாக்ஸ் மத விடுமுறை நாளில் இந்த தாக்குதல் நடந்ததாக குறிப்பிட்ட ரஷ்ய ஆர்த்தடாக்ஸ் தேசபக்தர் கிரில், “பொதுமக்கள் மீதான ஏவுகணை தாக்குதலுக்கு எந்த நியாயமும் இல்லை” என்று அறிவித்தார். 

செவஸ்டோபோல் மீதான தாக்குதல், உக்ரேனில் இருந்து ஏவப்பட்ட அமெரிக்கா வழங்கிய ஆயுதத் தாக்குதல்களுக்கு முழு ரஷ்யாவையும் திறந்துவிடுவதை நோக்கமாகக் கொண்ட தொடர்ச்சியான அமெரிக்க போர் விரிவாக்க நடவடிக்கையில் சமீபத்தியதாகும். 

கடந்த ஏப்ரலில், பைடென் நிர்வாகம் 300 கிலோமீட்டர் வரை (186 மைல்) செல்லக் கொண்ட நீண்ட தூர ATACMS ஏவுகணைகளை உக்ரேனுக்கு வழங்கத் தொடங்கியது. அதேவேளையில் அவை ரஷ்யாவுக்குள் தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்பட மாட்டாது என்றும் கூறியது. 

கடந்த மாதம், அமெரிக்கா தனது ஆயுதங்களுக்கான ஈடுபாட்டு விதிகளை விரிவுபடுத்தியது. அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுல்லிவன், ரஷ்யாவிற்குள் “எங்கும்” ரஷ்ய படைகளை குறிவைக்க உக்ரேனிய படைகள் அனுமதிக்கப்படுகின்றன என்று கூறினார். 

PBS உடனான ஒரு நேர்காணலில், சுல்லிவனிடம் ரஷ்யா மீது தாக்குதல் நடத்துவதற்கான அமெரிக்க அனுமதி “கார்கிவ் (Kharkiv) பிராந்தியத்திற்கு அப்பால், ரஷ்ய படைகள் உக்ரேனை குறிவைத்து வரும் சுமி (Sumy) பிராந்தியம் உட்பட நீட்டிக்கப்படுகிறதா?” என்று கேட்கப்பட்டது. சுல்லிவன் இதற்கு பின்வருமாறு பதிலளித்தார்: 

ரஷ்யப் படைகள், கூடுதல் உக்ரேனியப் பகுதியைக் கைப்பற்றும் முயற்சியில், ரஷ்யப் பக்கத்திலிருந்து உக்ரேனியப் பகுதிக்குள் எல்லையைக் கடக்கும் இடமெல்லாம் இது விரிவடைகிறது. இது கார்கிவில் நடந்தது, ரஷ்யா சுமியில் ஆய்வு நடவடிக்கைகளை எடுத்ததற்கான முதல் அறிகுறிகளைக் கண்டோம். அதனால் அதுவும் அங்கு பொருந்தும். இது புவியியல் பற்றியது அல்ல. ...ரஷ்யா அதன் எல்லையில் இருந்து உக்ரேனைத் தாக்கினால் அல்லது தாக்கப் போகிறது என்றால், எல்லைக்கு அப்பால் இருந்து தாக்கும் படைகளுக்குப் பதிலடி கொடுக்க உக்ரேனை அனுமதிப்பது அர்த்தமுள்ளதாக இருக்கும்.

2022 இல், பைடென் நியூயார்க் டைம்ஸில், “உக்ரேனில் அமெரிக்கா என்ன செய்யும், செய்யாது” என்ற ஒரு தலைப்பில் ஒரு பதிப்பை வெளியிட்டார். அதில், “உக்ரேன் அதன் எல்லைகளுக்கு அப்பால் தாக்குவதை நாங்கள் ஊக்குவிக்கவோ அல்லது அதற்கு உதவவோ இல்லை” என்று அறிவித்தார்.

மே மாதத்தில், நியூ யோர்க் டைம்ஸ் ரஷ்யாவிற்குள் உக்ரேனை ஆழமாக தாக்க அனுமதிக்கும் பைடெனின் முடிவின் தாக்கங்களை விளக்கி, பின்வருமாறு குறிப்பிட்டது: 

உக்ரேனுக்கு அதிநவீன ஆயுதங்களை அமெரிக்கா அனுப்பியதில் இருந்து, ஜனாதிபதி பைடென் ஒருபோதும் தடைக்கு தயங்கவில்லை. மூன்றாம் உலகப் போரைத் தவிர்ப்பதற்கான திரு. பைடெனின் ஆணையை மீறும் என்று வலியுறுத்தி, அவர்களை ஒருபோதும் ரஷ்ய எல்லைக்குள் சுடக்கூடாது என்று ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி ஒப்புக் கொள்ள வேண்டியிருந்தது. ஆனால் அந்தக் கொள்கையைச் சுற்றி ஒருமித்த கருத்து வறண்டு போகிறது.

இம்மாதம் முன்னதாக வெள்ளை மாளிகை அமெரிக்கா அணுவாயுதங்களை நிலைநிறுத்துவதில் உள்ள அனைத்து எண்ணிக்கை கட்டுப்பாடுகளையும் கைவிடுவதற்கு நகர்ந்து வருகிறது என்ற அறிவிப்பை தொடர்ந்து இத்தாக்குதல் வந்துள்ளது. 

இந்த தீவிரப்படுத்தும் நகர்வுகள் அனைத்தும் வாஷிங்டனில் வரவிருக்கும் ஜூலை 9-11 நேட்டோ உச்சிமாநாட்டின் பின்புலத்தை உருவாக்குகின்றன. இது தரைப்படை துருப்புகளை நிலைநிறுத்துவதற்கான சாத்தியக்கூறு உட்பட உக்ரேன் போரில் அமெரிக்க-நேட்டோவின் நேரடி ஈடுபாடு மற்றும் பங்கேற்பின் ஒரு பெரும் விரிவாக்கத்தை அறிவிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. 

மே மாதத்தில், அமெரிக்க முப்படைகளின் கூட்டுத் தளபதி சார்ல்ஸ் கியூ. பிரவுன் நியூ யோர்க் டைம்ஸ் க்கு கூறுகையில், நேட்டோ இராணுவக் கூட்டணியானது, “இறுதியில்” கணிசமான எண்ணிக்கையிலான சுறுசுறுப்பான நேட்டோ துருப்புக்களை உக்ரேனுக்கு அனுப்பும் என்றும், இந்த நிலைநிறுத்தல் “தவிர்க்க முடியாதது” என்றும், அப்பத்திரிகை கூறியது. 

சமீபத்திய தாக்குதல் உக்ரேனிய அரசாங்கம் இன்னும் அதிகமான மக்களை போர் முனையில் போரிட தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வரும் நிலையில் வந்துள்ளது. உக்ரேனிய இளைஞர்கள் எந்த பயங்கரத்திற்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்பதைக் குறித்த ஒரு அரிதான நேர்மையான சித்தரிப்பில், நியூ யோர்க் டைம்ஸ் பின்வருமாறு குறிப்பிட்டது, “தற்போது 25 முதல் 60 வயது வரையிலான இராணுவ வயதுடைய ஆட்களை ஆட்சேர்ப்பதற்கு, அதிகாரிகள் நாட்டின் நகரங்களைத் தேடி அலையும் போது, கட்டாய இராணுவ சேவை என்பது போர் முனைக்கான ஒருவழிச் சீட்டு என்று அஞ்சி பல இளைஞர்கள் தலைமறைவாகி விட்டனர்,” என்று குறிப்பிட்டது. 

28 வயதான ஒரு வலைத் தள டெவலப்பர், “எனக்கு போதுமான பயிற்சி கிடைக்காது என்று நான் பயப்படுகிறேன், பின்னர் நான் போர்முனைக்கு நெருக்கமாக நகர்த்தப்பட்டு முட்டாள்தனமாக அங்கு இறந்துவிடுவேன்” என்று கூறியதாக டைம்ஸ் மேற்கோள் காட்டியுள்ளது.

மேலும் டைம்ஸ் “இந்த அச்சங்கள் சில இராணுவ பகுப்பாய்வாளர்களால் ஆதரிக்கப்படுகின்றன, உக்ரேனிய துருப்புகள் பெரும்பாலும் போதுமான பயிற்சி கொண்டிருக்கவில்லை. போர் இழப்புகளை மாற்றுவதற்கு விரைவாக போருக்கு இவர்கள் அனுப்பப்படுவதால், கியேவ் அதன் நிலைகளை வைத்திருப்பதை கடினமாக்குகிறது” என்று கருத்துரைத்தது.

ரஷ்யாவிற்குள் நேட்டோ-ஆதரவிலான தாக்குதல்கள் தீவிரமடைந்து வருவதன் மத்தியில், ரஷ்ய அரசாங்கம் அணுஆயுதங்களை ஏவுவதற்கான முடிவை இன்னும் துரிதமாக எடுக்க அதன் உத்தியோகபூர்வ இராணுவ கோட்பாட்டை மாற்ற நகர்ந்து வருகிறது என்பதற்கான அறிகுறிகள் உள்ளன. 

ஞாயிற்றுக்கிழமை, RIA நோவோஸ்டி, அணு ஆயுதங்களைப் பயன்படுத்தக்கூடிய விதிமுறைகளை மாற்றுவதற்கான வாய்ப்பை எழுப்பிய ரஷ்ய பாராளுமன்றத்தின் பாதுகாப்புக் குழுவின் கீழ்சபையின் தலைவரான Andrei Kartapolov ஐ மேற்கோள் காட்டியது.

“சவால்களும் அச்சுறுத்தல்களும் அதிகரித்து வருவதை நாம் கண்டால், அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான நேரம் மற்றும் அதைப் பயன்படுத்துவதற்கான முடிவு குறித்து (கோட்பாட்டில்) ஏதாவது சரிசெய்ய முடியும் என்று அர்த்தம்” என்று Kartapolov கூறியதாக RIA மேற்கோளிட்டுள்ளது. 

Loading