முன்னோக்கு

அமெரிக்க ஏகாதிபத்தியம் லெபனானில் இஸ்ரேலின் போருக்கு ஒப்புதல் அளிக்க தயாராகி வரும் நிலையில், வாஷிங்டன் போர்க் குற்றவாளி கேலண்டிற்கு சிவப்புக் கம்பளம் விரிக்கிறது.

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

ஒரு போர்க் குற்றவாளியும் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சருமான யோவ் ட்டின் (Yoav Gallant) வாஷிங்டனுக்கான விஜயம், ஈரானை இலக்கு வைக்கும் பிராந்திய அளவிலான போரின் பாகமாக, காஸாவில் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதரவை, மீண்டுமொருமுறை நிரூபிக்கிறது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF) காஸா மீது அதன் இனப்படுகொலை தாக்குதலைத் தொடங்கியபோது, பாலஸ்தீனியர்களை “மனித விலங்குகள்” என்று இழிவாக முத்திரை குத்திய கேலண்ட், லெபனானில் ஹிஸ்புல்லாவை எதிர்கொள்ள இன்னும் கூடுதலான அமெரிக்க ஆயுதங்களைப் பெறுவது மற்றும் போரை விரிவுபடுத்துவது குறித்து விவாதங்களை நடத்தினார்.

இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கல்லண்டுடன் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன், நவம்பர் 30, 2023.  [AP Photo/Saul Loeb]

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்கறிஞரான கரீம் கான், போர்க்குற்றவாளி என்ற குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில், கேலண்ட்டுக்கும், பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுக்கும் கைது உத்தரவுகளை விண்ணப்பித்து கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு கேலண்ட் வாஷிங்டனுக்கு வந்தார். காஸா பகுதிக்குள் அனைத்து அடிப்படை தேவைகளும் மனிதாபிமானமற்ற முறையில் முற்றுகையிடப்படுவதை அவர் மேற்பார்வையிட்டுள்ளார். இது காஸாவில், பசி, நோய் மற்றும் துயரத்தை கொடூரமான அளவில் பரப்புவதற்கு இட்டுச் சென்றுள்ளது. காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலின் இரண்டாம் நாளில், “காஸா பகுதியில் ஒரு முழுமையான முற்றுகைக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். மின்சாரம் இருக்காது, உணவு இருக்காது, எரிபொருள் இருக்காது, அனைத்தும் மூடப்பட்டுள்ளன” என்று அவர் அறிவித்தார்,

சமீபத்திய ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை, கேலண்ட் மற்றும் நேதன்யாகு ஆகியோர் முன்னணி பிரதிநிதிகளாக உள்ள இஸ்ரேலிய இஸ்ரேலிய ஆட்சியை “அழித்தொழித்தல்”, “போர் குற்றங்கள்” மற்றும் பிற “மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக” குற்றஞ்சாட்டியது. “உலகின் மிகவும் குற்றகரமான இராணுவங்களில் ஒன்று” என்று அந்த அறிக்கை விவரித்ததை கேலண்ட்டின் பாதுகாப்பு அமைச்சகம் மேற்பார்வையிடுகிறது. இந்த இராணுவம் உத்தியோகபூர்வமாக ஒன்பது மாதங்களுக்கும் குறைவான காலத்தில் 37,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களைக் கொன்றுள்ளது. அவர்களில் மிகப் பெரும்பான்மையானவர்கள் பெண்களும் குழந்தைகளும் ஆவர்.

உரிமைகளின் அடிப்படையில், கேலண்ட் மற்றும் அவரது குழுவினர் விமானத்தில் இருந்து இறங்கிய உடனேயே கைது செய்யப்பட்டு, தண்டனைக்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டிருக்க வேண்டும். ஆனால் பாதுகாப்பு அமைச்சர் வாஷிங்டன் பயணத்தின் போது பயப்பட ஒன்றுமில்லை. அவரது காட்டுமிராண்டித்தனமான குற்றங்களுக்கு, அவரை பொறுப்பேற்க வைப்பதற்குப் பதிலாக, பாலஸ்தீனியர்கள், ஈராக்கியர்கள், ஆப்கானியர்கள், உக்ரேனியர்கள் மற்றும் ரஷ்யர்களின் இரத்தத்தில் தோய்ந்த உலக ஏகாதிபத்தியத்தின் முதன்மையான சக போர் குற்றவாளிகளால் திறந்த கரங்களுடன் வரவேற்கப்பட்டார். இந்த போர் குற்றவாளிகள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆக்கிரமிப்பு போர்களின் இலக்குகளைக் கண்டனம் செய்ய சர்வதேச சட்டத்தின் கட்டளைகளைப் பயன்படுத்துவதில் ஒருபோதும் சோர்வடைவதில்லை. ஆனால், அவர்களும் அவர்களின் கூட்டாளிகளும் “விதிகள் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கை” பாதுகாப்பதைப் பின்தொடர்கின்ற நிலையில், அதுபோன்ற எந்தவொரு கட்டுப்பாடுகளுக்கும் கட்டுப்பட மறுக்கின்றனர்.

வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் (Antony Blinken), மத்திய கிழக்கிற்கான பைடன் நிர்வாகத்தின் சிறப்பு தூதர் அமோஸ் ஹொச்ஸ்டீன் (Amos Hochstein) மற்றும் குடியரசுக் கட்சியின் செனட்டர் லிண்ட்ஸி கிரஹாம் (Lindsey Graham) ஆகியோருடன் கேலண்ட் சந்திப்புகளை நடத்தியுள்ளார்.

Iron Dome பாதுகாப்பு முறையை மீறி, இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா நடத்தும் எந்தத் தாக்குதலும் “இஸ்ரேலுக்கு எதிரான ஈரானிய தாக்குதலாக கருதப்படும்” என்று கேலண்ட் உடனான விவாதத்தை தொடர்ந்து கிரஹாம் குறிப்பிட்டார். அவர் தொடர்ந்தார்:

இஸ்ரேல் அரசின் வாழ்வின் இந்த முக்கியமான தருணத்தில் ஹிஸ்புல்லா உட்பட அதன் பினாமிகளின் நடவடிக்கைகளுக்கு ஈரானை உலகம் பொறுப்பேற்க வைக்க வேண்டும்.

இஸ்ரேலை அழிக்க ஹிஸ்புல்லாவைப் பயன்படுத்த முயன்றால், நாம் அனைவரும் ஈரானிய ஆட்சிக்குப் பின்னால் வருகிறோம் என்பதை ஈரானுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

வாஷிங்டனில் நடந்த கேலண்டின் ஆலோசனைகள், மத்திய கிழக்கு முழுவதிலும் போரை எவ்வாறு சிறப்பாக விரிவுபடுத்துவது என்று துல்லியமாக திட்டமிடும் ஒரு போர் கவுன்சிலின் தன்மையைக் கொண்டுள்ளன. இந்த சாத்தியக்கூறு பல சர்வதேச சக்திகளால் உடனடியாக பார்க்கப்படுகிறது. கடந்த செவ்வாயன்று இஸ்ரேலிய பாதுகாப்புப் படை லெபனானில் ஒரு போருக்கான செயற்பாட்டுத் திட்டங்கள் “ஒப்புதலளிக்கப்பட்டுவிட்டன” என்று அறிவித்ததை அடுத்து, ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் ஜோசப் போரெல் திங்களன்று, “லெபனானின் தெற்குப் பகுதியை பாதிக்கும் இப்போராபத்து ஒவ்வொரு நாளும் அதிகமாகத்தான் உள்ளது. நாம் போர் விரிவடைவதற்கு முன்னதாக இருக்கிறோம்”

இஸ்ரேலின் சேனல் 12 இன் படி, போர் வெடிக்கும்போது லெபனானில் உள்ள 45,000 கனேடிய குடிமக்களை வெளியேற்றுவதற்கான திட்டமிடலைத் தொடங்க கனேடிய அரசாங்கம் ஏற்கனவே இராணுவ சிப்பாய்களை அப்பகுதிக்கு அனுப்பியுள்ளது.

காஸாவில் ஒரு “போர்நிறுத்தத்தை” பாதுகாப்பதற்கான பைடன் நிர்வாகத்தின் முயற்சிகள் குறித்த பேச்சுக்களுடன் உத்தியோகபூர்வ ஊடக பிரசித்தத்தில் இந்த யதார்த்தம் மறைக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையே கூட ரபாவில் அதன் பெரிய அளவிலான நடவடிக்கைகள் முடிவுக்கு வந்து கொண்டிருப்பதாக கூறியுள்ளது. அங்கு மே மாத தொடக்கத்தில் இருந்து ஒரு மில்லியனுக்கும் மேலான மக்கள் நாட்டை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்பட்டுள்ளனர்.

கெலண்ட்டின் பாதுகாப்புத் துறை சமீபத்தில் காஸாவில் மோதலின் “மூன்றாம் கட்டத்தைப்” பற்றி பேசியது, கிட்டத்தட்ட ஒன்பது மாதங்கள் தொடர்ச்சியான குண்டுவீச்சுகளுக்குப் பிறகு பாலஸ்தீனிய உள்கட்டமைப்பில் எஞ்சியிருப்பதை அகற்றும் நோக்கத்துடன் “குறைந்த தீவிரம்” கொண்ட தாக்குதல்களால் வகைப்படுத்தப்பட்டது. ஆனால், இது காஸாவில் இருந்து முன்னாள் போர் மந்திரிசபை உறுப்பினர் பென்னி காண்ட்ஸ் வழமையாக “வடக்கு முன்னணி” என்று குறிப்பிடும் ஹிஸ்புல்லா மற்றும் லெபனான் மீது குவிமையத்தை மாற்றும் சாத்தியத்தை மட்டுமே அர்த்தப்படுத்தும்.

பிராந்தியம் தழுவிய போரைத் தீவிரப்படுத்தும் பிரதான சக்தி அமெரிக்க ஏகாதிபத்தியமாகும். உலக சோசலிச வலைத் தளம் விளக்கியதைப் போல, எரிசக்தி வளம் மிக்க மத்திய கிழக்கில் அமெரிக்க ஏகாதிபத்திய மேலாதிக்கத்தை பலப்படுத்துவதற்கான ஒரு போருக்கான அதன் தயாரிப்புகளின் பாகமாக, காஸாவில் பாலஸ்தீன பிரச்சினைக்கான இஸ்ரேலின் இனப்படுகொலை “இறுதி தீர்வை” வாஷிங்டன் முழுமையாக ஆமோதித்தது. அக்டோபர் 7 நிகழ்வுகளுக்கு விடையிறுப்பாக, சியோனிச ஆட்சியின் தாக்குதலைத் தொடங்கியதைக் கண்டித்து நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு அக்டோபர் 9 அன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தீர்க்க தரிசனத்துடன் எச்சரித்தது:

ஏகாதிபத்திய தலைவர்களும் அவர்களின் ஊடக ஊதுகுழல்களும் “பயங்கரவாதத்தை” எதிர்க்கவில்லை. ஆனால் ஆக்கிரமிப்பு மற்றும் இஸ்ரேலால் தினசரி திணிக்கப்படும் பயங்கரவாதத்திற்கு எதிரான வெகுஜன எதிர்ப்பை எதிர்க்கின்றனர். பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இனப்படுகொலைக்கு ஆதரவளிப்பது மற்றும் ஈரான், சிரியா மற்றும் லெபனானுக்கு எதிரான பிராந்திய போருக்கு இதை விரிவுபடுத்துவது வரை அவர்கள் அவ்வாறு அதைச் செய்வார்கள்.

அமெரிக்க ஏகாதிபத்தியம் வேகமாக அபிவிருத்தி அடைந்து வரும் மூன்றாம் உலகப் போரின் மத்திய கிழக்கு போர் முனையில், ஈரானுக்கு எதிரான ஒரு பிராந்தியந் தழுவிய போரை நோக்கி அழுத்தமளித்து வருகிறது. பெரும் சக்திகள் உலகை இரக்கமற்ற முறையில் மறுபங்கீடு செய்வதில் ஈடுபட்டுள்ளன. இது மூலப் பொருட்கள், சந்தைகள் மற்றும் புவிசார் மூலோபாய செல்வாக்கை அடைவதையும், அத்துடன் அவற்றின் போட்டியாளர்களை விஞ்சும் வகையில் செயல்பட்டு, இறுதியில் அவர்களை அடிமைப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.

மத்திய கிழக்கு, மத்திய ஆசியா மற்றும் வட ஆபிரிக்காவில் மூன்று தசாப்தங்களாக இடைவிடாத போர்களை நடத்தியுள்ள அமெரிக்க ஏகாதிபத்தியத்தைப் பொறுத்த வரையில், அதன் பொருளாதார வீழ்ச்சியை அதன் அபரிமிதமான இராணுவ வலிமையைப் பயன்படுத்துவதன் மூலமாக ஈடுகட்டும் ஒரு பெரும்பிரயத்தன முயற்சியில், அதன் உலகளாவிய மேலாதிக்கத்தைப் பாதுகாப்பது பணயத்தில் உள்ளது. இந்த இலக்கை ஒட்டி, அது அதன் முக்கிய பொருளாதார போட்டியாளரான சீனாவை நசுக்குவதற்கு ஒரு படிக்கல்லாக உக்ரேனிலும் கிழக்கு ஐரோப்பா முழுவதிலும் ரஷ்யா மீது பேரழிவு தரும் மூலோபாய தோல்வியை சுமத்த தீர்மானகரமாக உள்ளது.

இத்தகைய மோதல்களில், வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியவாதிகள், மனிதயினத்தின் உயிர்வாழ்வையே கேள்விக்குறியாக்கக் கூடிய ஓர் அணுஆயுத மோதல் வெடிப்பது உட்பட எந்தவொரு குற்றத்தையும் இழைக்கவும் மற்றும் அனைத்தையும் அபாயத்திற்கு உட்படுத்தவும் தயாராக உள்ளனர். இதனால் தான் அமெரிக்கா, ஜேர்மனி மற்றும் பிற ஏகாதிபத்திய மையங்களில் உள்ள அரசாங்கங்கள் இஸ்ரேலின் இனப்படுகொலையை முழுமையாக ஆதரித்துள்ளன, மேலும் பாலஸ்தீனியர்களை நிர்மூலமாக்குவதற்கான அனைத்து எதிர்ப்புகளுக்கும் எதிராக கொடூரமான அரச ஒடுக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டுள்ளன. பாலஸ்தீனிய குடிமக்களின் உயிர்களுக்கு சியோனிச ஆட்சி செய்து வருவதைப் போலவே, ஈவிரக்கமின்றியும் பாதிக்கப்பட்டவர்களின் உயிர்கள் குறித்து சிறிதும் அக்கறை கொள்ளாமலும் அனைத்து முனைகளிலும் தங்கள் உலகப் போரை நடத்த அவர்கள் உத்தேசித்துள்ளனர்.

அமெரிக்க அரசியல் ஸ்தாபனத்தின் இரு கட்சிகளும் போர்க்குற்றவாளி கேலண்டை அரவணைத்திருப்பது, உலக சோசலிச வலைத் தளம் ஜூலை 24 அன்று வாஷிங்டன் டி.சி.யில் காங்கிரசில் நெதன்யாகுவின் திட்டமிடப்பட்ட உரை இடம்பெறும் நேரத்தில் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்ததன் அடிப்படையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. WSWS சர்வதேச ஆசிரியர் குழு பேரணிக்கு அழைப்பு விடுத்து தனது அறிக்கையில் எழுதியது:

எவ்வாறாயினும், இந்த ஆர்ப்பாட்டத்தின் நோக்கம், வெறுமனே நெதன்யாகுவை எதிர்ப்பது மட்டுமல்ல, மாறாக அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் இனப்படுகொலையை வழிநடத்தி, நிதியளித்து, ஆயுதம் வழங்கி மற்றும் அரசியல்ரீதியாக நியாயப்படுத்திவரும் முழு அரசியல் ஸ்தாபனத்தின் பங்கிற்கு எதிராகவும் இருக்க வேண்டும்….

தமது நலன்கள் மற்றும் முதலாளித்துவ இலாப அமைப்புமுறையைப் பாதுகாக்க, பெருநிறுவன மற்றும் நிதிய தன்னலக்குழு, மனிதகுலத்தை படுகுழியை நோக்கி இட்டுச் செல்கிறது. ஆளும் வர்க்கத்தின் நிரந்தரப் போருக்கு, தொழிலாள வர்க்கத்தால் நிரந்தரப் புரட்சி என்ற முன்னோக்கின் மூலம் பதிலளிக்க வேண்டும். தொழிலாள வர்க்கத்தின் மூலோபாய இலக்கு தேசிய-அரசு அமைப்பு முறையை ஒழித்து, உலக சோசலிச கூட்டமைப்பை ஸ்தாபிப்பதாகும்.

Loading