மக்ரோனுடன் கூட்டணி வைக்க முயலும் புதிய மக்கள் முன்னணியை, பிரான்சின் தொழிலாளர் போராட்ட (LO) அமைப்பு ஆதரிக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

அதி தீவிர வலதுசாரி தேசிய பேரணி (RN) கட்சியின் எழுச்சி மற்றும் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் குழுமத்தின் வீழ்ச்சி என்பன, ஜூன் 30 அன்று நடந்த முதல் சுற்று பாராளுமன்றத் தேர்தல்களில் மத்தியதர வர்க்க போலி இடதான தொழிலாளர் போராட்டம் என்ற கட்சியின் (LO) திவால்நிலையை அம்பலப்படுத்துகிறது. மக்களுக்கு எதிராக ஆட்சி செய்யும் ஒரு வங்கியாளரான மக்ரோனிடம் தொழிலாளர்களை முடிச்சுப் போட பிரெஞ்சு ஆளும் வர்க்கம் அமைத்துள்ள அரசியல் இயந்திரத்தில் LO ஒரு பற்சக்கரமாக செயல்படுகிறது.

2012 இல் ரென்ஸில் நடந்த கூட்டத்தில் ஜனாதிபதித் தேர்தலில் LO வேட்பாளரான நெத்தாலி ஆர்தோ உரையாற்றுகிறார்.

ஜோன்-லூக் மெலன்சோன் உருவாக்கிய புதிய மக்கள் முன்னணி (NPF) கூட்டணியை LO ஆதரிக்கிறது. NPF என்பது மெலன்சோனின் அடிபணியாத பிரான்ஸ் கட்சி உட்பட பெருவணிக சோசலிஸ்ட் கட்சி (PS), ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி, பசுமைவாதிகள் மற்றும் பப்லோவாத புதிய முதலாளித்துவ எதிர்ப்பு கட்சி (NPA) உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணியாகும். LO வின் ஜூலை 1 தலையங்கத்தில், “ஒரு புரட்சிகர கம்யூனிஸ்ட் தொழிலாளர் கட்சியைத் தவிர வேறு பாதையில்லை” என்று LO பேச்சாளர் நெத்தாலி ஆர்தோ எழுதுகிறார்:

எனவே ஒரு வர்க்க உணர்வுள்ள தொழிலாளி தேசிய பேரணிக் கட்சிக்கு வாக்களிக்க முடியாது. தொழிலாளர்களை மிதித்துவரும் மக்ரோன் ஆதரிக்கும் வேட்பாளருக்கு வாக்களிப்பது என்பது வெளிப்படையாகவே கேள்விக்குறியாக உள்ளது. LO வாக்காளர்கள் RNக்கு எதிராக, புதிய மக்கள் முன்னணி கூட்டணியின் வேட்பாளருக்கு வாக்களிக்க விரும்பலாம். அப்படியானால், அவர்கள் வருத்தப்படாமல் அதனை செய்யலாம்.

முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் ஜனாதிபதிகள் உள்ளிட்ட இடதுசாரி வேட்பாளர்களுக்கு இலவச பாஸ் வழங்க விரும்பாதவர்கள், குற்ற உணர்ச்சியின்றி வாக்களிக்காமல் போகலாம். மேலும் இந்த வழியில் முதலாளித்துவத்தின் முழு அரசியல் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் அரசு நிறுவனங்களின் மீதும் தங்கள் அவநம்பிக்கையை வெளிப்படுத்தலாம்.

இறுதி ஆய்வில், புதிய மக்கள் முன்னணியில் உள்ள பிற்போக்குவாதிகள் மற்றும் மக்ரோனுக்கு LO இன் நோக்குநிலையை மறைப்பதற்கான ஒரு இழிந்த முயற்சியாக இந்த கூற்றுக்கள் இருக்கின்றன. மக்ரோனை எதிர்ப்பதற்கு அழைப்பு விடுக்க முடியாது. ஆனால், புதிய மக்கள் முன்னணிக்கு ஆதரவளிக்க வேண்டும். உண்மையில், புதிய மக்கள் முன்னணி வருகின்ற ஞாயிற்றுக்கிழமை இரண்டாவது சுற்றுத் தேர்தலுக்குப் பிறகு மக்ரோனுடன் ஒரு கூட்டணி அரசாங்கத்தை அமைப்பதற்காக மக்ரோனின் குழுமத்துடனான தேர்தல் ஒப்பந்தங்களில் நுழைகிறது.

இதற்கு LO, புதிய மக்கள் முன்னணிக்கு ஒப்புதல் அளிக்க மறுக்கிறது, ஏனெனில் அத்தகைய அரசாங்கம் அமைக்கப்பட்டால், அதன் கொள்கைகள் பாரிய மக்கள் எதிர்ப்பைத் தூண்டும் என்பதை அது முழுமையாக அறிந்திருக்கிறது.

“முதலாளித்துவத்தின் அரசியல் ஏற்றத்தாழ்வுகளை” உருவாக்கும் புதிய மக்கள் முன்னணியின் “முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் தலைவர்களுக்கு” தொழிலாளர்கள் “வருத்தமில்லாமல்” வாக்களிக்க முடியும் என்று நெத்தலி ஆர்தோ கூறும்போது அதன் அர்த்தம் என்ன?

புதிய மக்கள் முன்னணியின் திட்டம், ரஷ்யாவுடன் போருக்கு ஆயுதங்கள் மற்றும் பிரெஞ்சு துருப்புக்களை உக்ரேனுக்கு அனுப்பவும், பிரெஞ்சு இராணுவ போலீஸ் மற்றும் உளவுத்துறை சேவைகளை கட்டமைக்கவும் அழைப்பு விடுக்கிறது. சோசலிசக் கட்சியின் முன்னாள் ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட் போன்ற புதிய மக்கள் முன்னணியின் பிற்போக்குவாதிகளால் முன்னெடுக்கப்படும் வெளிநாட்டில் ஏகாதிபத்திய யுத்தம் மற்றும் உள்நாட்டில் வர்க்கப் போரின் வேலைத்திட்டத்தினால் LO “வருத்தப்படவில்லை” என்பதே இதன் பொருளாகும்.

புதிய மக்கள் முன்னணியிலுள்ள தீவிர வலதுசாரி போட்டியாளர்களால் முன்வைக்கப்படும் ஆபத்தை எடுத்துக்காட்டி, நெத்தலி ஆர்தோ இந்த சிக்கலை விரித்து வைக்கிறார். 57 சதவீத தொழிலாளர்கள் உட்பட 11 மில்லியன் மக்கள் தேசிய பேரணி கட்சிக்கும், அதன் கூட்டாளிகளுக்கும் வாக்களித்துள்ள நிலையில், நவ பாசிச வாக்குகளின் பாரிய எழுச்சியை அவர் குறிப்பிடுகிறார். 2022 இல் தேசிய பேரணி கட்சி 4 மில்லியன் வாக்குகளைப் பெற்ற முதல் சுற்று பாராளுமன்றத் தேர்தலில் கிடைத்த அதன் வாக்குகளை விட, இது இரண்டு மடங்கு அதிகமாகும்.

நெத்தலி ஆர்தோ பின்வருமாறு கூறகிறார்:

உண்மையான தொழிலாள வர்க்க கட்சி இல்லாத நிலையில், உழைக்கும் மக்கள் உயரத்தில் இருக்கும் இல்லாத மீட்பரை தேடுவதில் தொலைந்து போகிறார்கள். இந்த மீட்பரை அவர்கள் இடதுபுறத்தில் மேலே இருந்து நீண்ட காலமாகத் தேடினர். இன்று, தேசிய பேரணியில் பல தொழிலாளர்கள் இதைப் பார்க்கிறார்கள். தொழிலாளி வர்க்கம் பின்பற்றுகின்ற மரணப் பாதை இது.

என்ன ஒரு அழிவுகரமான சுய குற்றச்சாட்டு! ஆர்லெட் லாகியேயின் (முன்னாள் LO பேச்சாளர்) 1974 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தில் LO முக்கியத்துவம் பெற்றதிலிருந்து, இப்போது அரை நூற்றாண்டுக் காலம் ஆகிறது. பல தசாப்தங்களாக, மூத்த LO அதிகாரிகள் பரந்த ஊடக அணுகலைக் கொண்டிருந்தனர் மற்றும் மில்லியன் கணக்கான வாக்குகளைப் பெற்றிருந்தனர். ஆயினும்கூட, LO எதனையும் கட்டியெழுப்ப இலாயக்கற்றிருந்தது என்பதை நிரூபித்துள்ளது. மேலும், மில்லியன் கணக்கான சீற்றம் மற்றும் எரிச்சல் கொண்ட தொழிலாளர்கள் நவ-பாசிஸ்டுகளுக்கு வாக்களிப்பதால், “தொழிலாளர் வர்க்கத்துக்கு உண்மையான கட்சி” இல்லை என்று இப்போது வாதிட்டு வருகிறது. உண்மையில், LO நடுத்தர வர்க்க அதிகாரத்துவங்களின் கட்சியே ஒழிய, தொழிலாளர்களின் கட்சி அல்ல.

பல தசாப்தங்களாக LO கூடிப் பணியாற்றிய சோசலிசக் கட்சி, பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் புதிய முதலாளித்துவ எதிர்ப்பு கட்சி போன்ற கட்சிகளை விட, உடலுழைப்புத் தொழிலாளர்கள் அதி வலது தேசியப் பேரணிக் கட்சியை ஏன் விரும்புகிறார்கள் என்று கூட ஆர்தோ கேட்கவில்லை. ஆனால் இந்தக் காலகட்டம் முழுவதும், முதலாளித்துவ அரசாங்கத்திலிருந்த சமூக ஜனநாயக மற்றும் ஸ்டாலினிசக் கட்சிகளுக்கு அப்பால் அவர்களது “இடது” அரசியல் கடந்து சென்றது. அதே நேரம், ட்ரொட்ஸ்கிசத்தில் இருந்து விட்டோடிய இந்த குட்டி-முதலாளித்துவ துரோகிகள், சமூக ஜனநாயக மற்றும் ஸ்டாலினிசக் கட்சிகளுடன் தங்களை இணைத்துக் கொண்டனர். இந்தக் கட்சிகள் ஆட்சியில் இருந்தபோது, ஏகாதிபத்தியப் போர்களை நடத்தி, சிக்கனக் கொள்கைகளைத் திணித்து, இந்தக் கொள்கைகளுக்கு எதிரான தொழிலாளர்களின் போராட்டங்களின் கழுத்தை நெரித்தனர்.

தேசிய பேரணி கட்சியின் எழுச்சியில் LO இன் பங்கை விளக்குவதற்கு, 2016 இல் உலக சோசலிச வலைத் தளத்தின் (WSWS) உடனான ஆர்லத் லாகியேயின் நேர்காணலை மேற்கோள் காட்டுவது பொருத்தமானது. தொழிற்சங்கங்களில் இருந்து தொழிலாள வர்க்க உறுப்பினர்களின் எண்ணிக்கை ஏன் வீழ்ச்சியடைந்து வருகிறது என்று லாகியே இடம் கேட்டதற்கு, “பல போராட்டங்கள் காட்டிக் கொடுக்கப்பட்டதாகவே நினைக்கிறேன். பல தொழிலாளர்கள் தாங்கள் நடத்திய போராட்டங்கள் இறுதியில் வெற்றியை அடைய விடாமல் தொழிற்சங்கங்கள் அவர்களை பணிக்குத் தள்ளியது. அதனால் கோபம் எல்லாம் இருக்கிறது” என்று பதிலளித்தார்.

இந்த காட்டிக்கொடுப்புகளுக்கு, தொழிற்சங்க அதிகாரத்துவங்களில் LO இன் பங்குடன் தொடர்புடையதா என்று WSWS கேட்டபோது, ​​இந்த அதிகாரத்துவங்களுக்கு முதன்மையாக அரசு மற்றும் முதலாளிகளால் நிதியளிக்கப்படுகின்றன என்ற உண்மையுடன், அவர் பதிலளிக்கையில், “நீங்கள் ஒரு புரட்சிகர கம்யூனிஸ்டாக இருக்கும் போது குறைந்தபட்சம் தொழிற்சங்க வேலையாவது செய்வது சகஜம். … பிரச்சனை நிதியுதவி என்று நான் நினைக்கவில்லை. நிச்சயமாக, கட்சிகள், தொழிற்சங்கங்கள் எனில், அனைவரும் தங்கள் உறுப்பினர்களின் பங்களிப்பு மூலம் நிதியுதவி செய்தால் அது ஆரோக்கியமானதாக இருக்கும். நிச்சயமாக, அதுவும் உண்மைதான். ஆனால் இங்கே நாம் இருக்கிறோம்” என்று லாகியே குறிப்பிட்டார்.

LO போன்ற நிறுவனங்களை விலை கொடுத்து வாங்கி, அதி தீவிர வலதுசாரிகளின் எழுச்சிக்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் போராட்டத்தைத் தடுக்க அவை அயராது உழைத்து வருகின்றன. 2002 ஜனாதிபதி தேர்தல் நெருக்கடியின் போது இது அப்பட்டமாக வெளிப்பட்டது. அந்த நேரத்தில், முதல் சுற்றுத் தேர்தலில் சிக்கன நடவடிக்கைக்கு ஆதரவான சோசலிசக் கட்சி வேட்பாளர் லியோனல் ஜோஸ்பனுக்கு வாக்குகள் சரிந்ததால், இரண்டாவது சுற்றுத் தேர்தலில் நவ-பாசிச ஜோன்-மேரி லு பென் மற்றும் வலதுசாரி வேட்பாளரான ஜாக் சிராக்குக்கு இடையே ஒரு போட்டி ஏற்பட்டது.

உலக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் தலைமையான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) தீர்க்கமான முறையில் இத் தேர்தலில் தலையிட்டது. முதலாளித்துவத்தின் இரண்டு பிற்போக்குத்தனமான பாதுகாவலர்களுக்கு இடையிலான மோசடியான இரண்டாவது சுற்றுத் தேர்தலை நிராகரிக்குமாறு தொழிலாள வர்க்கத்தைப் பாதுகாப்பதாகக் கூறும் அனைத்து அமைப்புக்களுக்கும் ICFI அழைப்பு விடுத்து, செயலூக்கமிக்க தேர்தல் புறக்கணிப்புக்கு அழைப்பு விடுத்தது. லு பென்னுக்கு எதிராக ஜனநாயகத்தைப் பாதுகாக்க தொழிலாளர்கள் சிராக்கை நம்பியிருக்க முடியும் என்ற பொய் கட்டுக்கதையை ICFI நிராகரித்து, தொழிலாள வர்க்கத்தில் ஒரு செயலூக்கமிக்க புறக்கணிப்புக்கான பிரச்சாரம், எந்த வேட்பாளர் வென்றாலும் அதற்கு எதிராகப் போராட தொழிலாளர்களைத் தயார்படுத்தும் என்று அது விளக்கியது.

2002 தேர்தல்களில் அவர்கள் கூட்டாக 3 மில்லியனுக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்ற போதிலும், LO மற்றும் பப்லோவாதிகள் அத்தகைய கொள்கையை மறுத்தனர். ஆரம்பத்தில், அவர்கள் இருவரும் சிராக்கிற்கான உத்தியோகபூர்வ பிரச்சாரத்தின் பின்னால் நேரடியாக அணிவகுத்தனர்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பகிரங்கக் கடிதம் வெளியான பிறகு, LO ஆனது வாக்காளர்களை வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வெற்று அல்லது செல்லாத வாக்களிக்குமாறு அழைப்பு விடுத்ததன் மூலம் ஒரு நிலைப்பாட்டை எடுத்தது. தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்கள் மத்தியில் ஒரு இயக்கத்தை கட்டியெழுப்ப, அதன் பாரிய தேர்தல் தளத்தை அணிதிரட்ட ஒரு பொதுப் பிரச்சாரத்தை நடத்த LO விரும்பவில்லை. இது தொழிற்சங்க எந்திரத்தில் அரசு மற்றும் முதலாளிகள் மற்றும் சோசலிசக் கட்சியுடனான LO வின் தொடர்புகளையும், நிதியுதவிகளையும் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என்று அது தெளிவாக அஞ்சியது.

தேர்தலில் சிராக்கிற்கான வாக்கெடுப்புக்கான பிரச்சாரத்திற்கு எந்தவொரு குறிப்பிடத்தக்க எதிர்ப்பையும் ஏற்க மறுத்த LO, தற்போதுள்ள ஒழுங்கிற்கு அரசியல் எதிர்ப்பு என்ற போர்வையை தீவிர வலதுசாரிகளுக்கு திறம்பட விட்டுக் கொடுத்தது. மெலன்சோன் தொழிலாளர்களை மக்ரோனுடன் இணைக்க முயல்கையில், தொழிலாளர்களை மெலன்சோனுடன் இணைக்க முற்படும் கொள்கையைத்தான் LO இன்றும் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.

இந்த நிலைமையில், முதலாளித்துவத்திற்கு எந்த சவாலும் இல்லாததால் உருவாக்கப்பட்ட வெற்றிடத்தை, நவ-பாசிச தேசிய பேரணி கட்சி பிரெஞ்சு மக்களின் பாதுகாவலர்களாக தன்னைக் காட்டிக் கொள்ள சிடுமூஞ்சித்தனமான முறையில் பயன்படுத்திக்கொண்டது. தேசிய பேரணி கட்சி, சமூக அதிருப்தியை வலதுசாரி, குடியேற்ற எதிர்ப்பு மற்றும் தேசியவாத வழிகளில் திசை திருப்ப முயல்கிறது. அதனது இழிந்த ஜனரஞ்சக தோரணை இருந்தபோதிலும், அது ஒரு ஆபத்தான பாசிச அச்சுறுத்தலை முன்வைக்கிறது. தேசி பேரணி, ஏற்கனவே போர் மற்றும் பாசிச பொலிஸ் அடக்குமுறையின் பிற்போக்குத்தனமான கட்சியாக ஆட்சி செய்யும் என்பதை சமிக்கை செய்து, வேலைநிறுத்தங்களை தடைசெய்வதாக அச்சுறுத்தும் அதே வேளையில் யுத்தப் பொருளாதாரத்திற்கு நிதியளிக்க அழைப்பு விடுத்துள்ளது.

தேர்தல்களின் முடிவுகள் எதுவாக இருந்தாலும், அனைத்தும் இழக்கப்படாது என்று வாதிடுவதன் மூலம் ஆர்தோ தனது தற்போதைய கட்டுரையை முடிக்கிறார். முதலாளித்துவ வர்க்கம் உழைப்பைச் சுரண்டாமல் லாபத்தைப் பெற முடியாது என்பதால், தொழிலாள வர்க்கம், மார்க்சிசத்தின் ஒரு பிடிவாதமான மற்றும் சீரியசான அழைப்பில் இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்துகிறார்.

நெத்தலி ஆர்தோ பின்வருமாறு எழுதுகிறார்,

உற்பத்தி, போக்குவரத்து, வணிகம், வங்கி, பொதுச் சேவைகள் ஆகியவற்றின் மையத்தில் தொழிலாளர்கள் உள்ளனர். முதலாளிகளுக்கு நாம் தேவை, அதுவே போராடுவதற்கும், அவர்கள் நம்மை மதிக்கச் செய்வதற்கும் வழிவகை செய்கிறது. … கடந்த காலத்தில், தொழிலாள வர்க்கம் பெரும் போராட்டங்களை நடத்தியது. இந்த வளமான வரலாற்றின் அடிப்படையில்தான் நாம் ஒரு உண்மையான கம்யூனிஸ்ட் தொழிலாளர் கட்சியை, புரட்சிகர மற்றும் சர்வதேசியவாதிகளை உருவாக்க வேண்டும்!

இது தற்போதைய நெருக்கடியால் முன்வைக்கப்படும் பெரும் ஆபத்துக்களுக்கு குற்றவியல் ரீதியாக இலகுவாக முன்வைக்கப்படும் அணுகுமுறையாகும். பாராளுமன்றத்தையும் அரசாங்கத்தையும் இடைநிறுத்தி ஒரு சர்வாதிகாரியாக ஆட்சி செய்ய அனுமதிக்கும் பிரெஞ்சு அரசியலமைப்பின் 16 வது பிரிவை செயல்படுத்துவதாக மக்ரோன் அச்சுறுத்தி வருகிறார். தேசிய பேரணி மற்றும் புதிய மக்கள் முன்னணி, காஸா இனப்படுகொலையை பாதுகாத்து, ரஷ்யாவிற்கு எதிரான போரை விரிவாக்குவதற்கு மக்ரோனின் போர் பொருளாதார நடவடிக்கைகளை ஆதரிக்கின்றன.

இலாபத்தை குவிப்பதுக்கு முதலாளிகளுக்கு தொழிலாள வர்க்கம் இன்றியமையாதது, அதற்காக, பாசிச பொலிஸ் ஆட்சியை சுமத்துவதற்கு மக்ரோன் மற்றும் லு பென்னின் அச்சுறுத்தல்கள் அல்லது ரஷ்யாவுடனான அணு ஆயுத யுத்த அச்சுறுத்தல் பற்றி தொழிலாளர்கள் அலட்சியமாக இருக்க முடியும் என்று அர்த்தமல்ல. இந்தச் சூழலில் “வருத்தப்பட வேண்டாம்” என்ற LO வின் வேண்டுகோள் நினைவுகூரத்தக்க வகையில் அதற்கு மனநிறைவைத் தருகிறது. இந்த சூழலில், ஏகாதிபத்திய போர், பாசிசம் மற்றும் முதலாளித்துவத்திற்கு எதிரான அரசியல் போராட்டத்தில் தொழிலாள வர்க்கம் அணிதிரட்டப்பட வேண்டும்.

LO போன்ற குட்டி முதலாளித்துவக் கட்சிகளுக்கு எதிராக ட்ரொட்ஸ்கிசத்திற்கான அரசியல் போராட்டம் அத்தகைய இயக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு முக்கியமானது. ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், போரை எதிர்ப்பதற்கும், LO உடன் பிணைந்துள்ள தொழிற்சங்க அதிகாரத்துவங்களிலிருந்து சுயாதீனமாக, சாமானிய தொழிலாளர்களை அணிதிரட்ட வேண்டும். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மற்றும் அதன் பிரெஞ்சுப் பிரிவான சோசலிச சமத்துவக் கட்சி ஆகியவற்றால், போலி-இடதுகளுக்கு எதிராக ட்ரொட்ஸ்கிசத்தைப் பாதுகாப்பதே இத்தகைய போராட்டத்திற்கான அடிப்படையாகும்.

Loading