MERA25 அமைப்பின் பிற்போக்குத்தனமான தன்மை: ஒரே நேரத்தில் ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோ போரை ஆதரிக்கிறது அதே வேளையில், காஸா இனப்படுகொலை பற்றி விமர்சிக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

MERA25 அமைப்பானது, முன்னாள் கிரேக்க நிதி மந்திரி யானிஸ் வரூஃபாகிஸ் (Yanis Varoufakis) தலைமையிலான ஐரோப்பிய DiEM25 இயக்கத்தின் ஜேர்மன் கிளையாகும், இது ஐரோப்பிய தேர்தல் பிரச்சாரத்தில் காஸா இனப்படுகொலை பற்றிய கேள்வியில் அது கவனம் செலுத்துகிறது.

இந்தக் கட்சியானது, அதன் அறிக்கைகள் மற்றும் தேர்தல் ஒளிபரப்புகளில், பாலஸ்தீனியர்களின் மீதான இனப்படுகொலையை கண்டிப்பதுடன் ஜேர்மன் அரசாங்கத்தின் உடந்தையை சாடுகிறது. மற்றும் பாலஸ்தீனிய மருத்துவர்களை பேச அனுமதிப்பதோடு களத்திலுள்ள பயங்கரமான நிலைமைகளை விவரிக்கிறது. அவர்களின் பிரதிநிதிகள் இனப்படுகொலைக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் தவறாமல் பங்கேற்கிறார்கள், எனவே, இனப்படுகொலையின் மற்ற எதிர்ப்பாளர்களைப் போலவே, யூத அமைப்புகள் உட்பட, பாரிய அரசு அடக்குமுறைக்கு ஆளாகிறார்கள்.

எடுத்துக்காட்டாக, ஏப்ரல் 12 அன்று பேர்லினில் நடந்த பாலஸ்தீன காங்கிரஸை ஒழுங்கமைப்பதில் ஈடுபட்ட MERA25 அமைப்பானது, பொலிசாரினால் கொடூரமாக ஒடுக்கப்பட்டது. வரூஃபாகிஸ் ஜேர்மனியில் நுழைவதற்கு ஆரம்பத்தில் ஜேர்மன் அதிகாரிகளால் தடை செய்யப்பட்டார், பின்னர் அவர் மீது பொது அரசியல் தடை விதிக்கப்பட்டது. MERA25 அமைப்பின் அறிக்கையில், வரூஃபாகிஸ் “தனது அடிப்படை உரிமைகள் மற்றும் அவதூறுகளை ஏற்படுத்தியதற்காக ஜேர்மன் அதிகாரிகள் மீது வழக்குத் தொடுத்துள்ளார்” என்றும், தேவைப்பட்டால், “ஐரோப்பிய நீதிமன்றங்களிலும் வழக்குத் தொடரப் போவதாகவும்” அறிவித்துள்ளார்.

சோசலிச சமத்துவக் கட்சியானது வரூஃபாகிஸ் மீதான தடையை சாத்தியமான வலுவான வார்த்தைகளில் கண்டிக்கிறது. வெளிப்படையாக, இது முன்னாள் நிதி மந்திரியைப் பற்றியது மட்டுமல்ல, அந்த நேரத்தில் கிரேக்கத் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக ஐரோப்பிய ஒன்றிய சிக்கன ஆணையை அமல்படுத்த ஜேர்மன் அரசு இவருடன் நெருக்கமாக வேலை செய்திருக்கிறது.

இந்த நடவடிக்கையானது ஜனநாயக உரிமைகள் மீதான பெரும் தாக்குதலின் ஒரு பகுதியாகும் மற்றும் எந்தவொரு சமூக மற்றும் அரசியல் எதிர்ப்பையும் அடக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆளும் வர்க்கமானது தீவிர இனப்படுகொலை முறையை நாடுகிறது, ரஷ்யாவிற்கு எதிராக ஒரு நேரடி நேட்டோ போரைத் தயாரித்து, தொழிலாள வர்க்கத்தின் மீது வரலாற்றுத் தாக்குதல்களை பெருமளவில் ஆயுதம் ஏந்தி, திட்டமிட்டு, ஆளும் வர்க்கம் ஒரு பொலிஸ் அரசை நிறுவுகிறது.

MERA25 அமைப்பானது இந்த வளர்ச்சிப்போக்கை வார்த்தைகளில் திட்டுகிறது, ஆனால் அதை எதிர்ப்பதற்கு அதனிடம் எந்த முன்னோக்கும் இல்லை. மாறாக, இனப்படுகொலை பற்றிய அதன் விமர்சனம் மற்றும் “சர்வதேசியவாதம்,” “அமைதி,” “ஜனநாயகம்” மற்றும் “சமூக நீதி” பற்றிய சொற்றொடர்கள், பாசிசம் மற்றும் போருக்கு எதிராக ஒரு சுயாதீன சோசலிச இயக்கத்தைத் தடுப்பதற்கும், முதலாளித்துவத்தையும் அதன் நிறுவனங்களையும் காப்பாற்றுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன. வேலைத்திட்டம் மற்றும் MERA25 அமைப்பு மற்றும் அதன் ஐரோப்பிய தாய்க் கட்சியான DiEM25 ஆகியவற்றின் வரலாற்றை ஒரு உன்னிப்பாக ஆய்வு செய்கையில், இவைகளின் திட்டங்கள் முற்றிலும் பிற்போக்குத்தனமான மற்றும் தொழிலாளர் விரோதத் தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுவதாக உள்ளது.

வரூஃபாகிஸின் கடந்த காலம்

அனைத்து அரசியல் சாணக்கியர்கள் மற்றும் சந்தர்ப்பவாதிகளைப் போலவே வரூஃபாகிஸும் மூடிமறைக்க முயற்சிக்கும் போக்கின் தோற்றத்தில் இது முதன்மையாகவும் முக்கியமாகவும் பார்க்கப்படுகிறது. MERA25 அமைப்பு தனது தேர்தல் திட்டத்தில் “தன்னலக்குழுவின் அதிகார அமைப்புகளை” கண்டித்து, “இன்று நாம் அனுபவித்து வருவது நமது சமூகத்தில் உள்ள சிலருக்கு சாதகமாகவும், பலரை மறந்துவிடும் அரசியல் முடிவுகளின் விளைவு” என்று அறிவித்திருக்கிறது, இது பாசாங்குத்தனத்தின் உச்சமாகும்.

வரூஃபாகிஸ் போலி-இடது கிரேக்க சிரிசா அரசாங்கத்தின் நிதியமைச்சராக இருந்த நிலையில், இந்த “அரசியல் முடிவுகளுக்கும்” பொறுப்பாளியாக இருக்கிறார். அவரது அரசாங்கம் “சிலருக்கு” மட்டும் ஆதரவாக “தன்னலக்குழுவின் அதிகார அமைப்புகளை” வலுப்படுத்தியது. அதாவது, நிதிய உயரடுக்குகளை மட்டும், அதே நேரத்தில் “பலரை” அதாவது உழைக்கும் மக்களைக் கொடிய வறுமைக்குள் தள்ளியதன் மூலம் இதை நிறைவேற்றியது. அலெக்சிஸ் சிப்ராஸின் (Alexis Tsipras) கீழ் சிரிசா அரசாங்கம் 2015 இன் ஆரம்பத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட போது, ஏறக்குறைய அரை வருடம் இவர் அதில் உறுப்பினராக இருந்துள்ளார். ஏனெனில் அது ஐரோப்பிய மத்திய வங்கி (ECB), ஐரோப்பிய ஒன்றிய (EU) ஆணையம் மற்றும் சர்வதேச நாணய நிதியம் (IMF) ஆகியவை சேர்ந்த முக்கூட்டால் (troika) கட்டளையிடப்பட்ட சிக்கன நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவருவதாக உறுதியளித்திருந்தது.

அதிகாரத்திற்கு வந்தபோது, சிரிசா இந்த ஆணையை சில வாரங்களுக்குள் காட்டிக்கொடுத்துவிட்டது. முந்தைய சமூக ஜனநாயக மற்றும் பழமைவாத அரசாங்கங்களின் சிக்கன நடவடிக்கைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு புதிய ஐரோப்பிய ஒன்றிய குறிப்பாணையில் கையெழுத்திட்டது. அதற்காக ஜூலை 2015 இல் நடந்த தேர்தல் வாக்கெடுப்பில் சிக்கன திணிப்புக்கு எதிராக 61 சதவிகித பெரும்பான்மையான மக்கள் வாக்களித்திருந்தனர். ​​சிரிசா இதைப் புறக்கணித்தது மட்டுமல்லாமல், சிக்கன நடவடிக்கைகளை மீண்டும் தீவிரப்படுத்தியது மற்றும் அதற்கான எதிர்ப்பை பொலிஸ் வன்முறையைப் பயன்படுத்தி நசுக்கியது.

அதி தீவிர வலதுசாரி சுதந்திர கிரேக்கர்களுடன் (Anel) கூட்டணியுடன் சிரிசா செயல்படுத்திய இந்த சதித்திட்டத்தின் மையத்தில் வரூஃபாகிஸ் இருந்தார். அவர் ஐரோப்பிய மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் மீதான சிக்கன நடவடிக்கைக்காக பரந்த எதிர்ப்பிற்கு முறையிடவில்லை. ஆனால், சற்று மாற்றியமைக்கப்பட்ட சிக்கனக் கொள்கையில் பேச்சுக்களை நடத்த ஐரோப்பிய உயரடுக்குகளுடன் திரைக்குப் பின்னால் சதியில் ஈடுபட்டிருந்தார்.

அதன் பின்னர் வரூஃபாகிஸ் பிரிட்டிஷ் ஆப்செர்வர் (British Observer) பத்திரிகையில் “சாதாரண, தாட்சர் மற்றும் ரீகன் மேற்கொண்ட” பொருளாதார நடவடிக்கைகளை அந்த கூட்டங்களில் முன்மொழிந்ததாக பெருமையாக கூறினார். அந்த நேரத்தில் ஜேர்மன் மற்றும் ஐரோப்பிய நிதி மூலதனத்தின் நலன்களுக்காக கிரேக்க சமூக அழிவுக்கு உந்திய ஜேர்மன் சான்சலரான ஏஞ்சலா மேர்க்கலை (கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சி) “ஐரோப்பாவின் புத்திசாலி அரசியல்வாதி” என்று பாராட்டினார். இன்னும் ஆக்ரோஷமாக இருந்த இழிவான வலதுசாரி ஜேர்மன் நிதி மந்திரி வொல்ப்காங் ஷௌபிள் (Wolfgang Schäuble) ஐ “அறிவுசார் பொருள் கொண்ட ஒரே ஐரோப்பிய அரசியல்வாதி” என்று வரூஃபாகிஸ் விவரித்துள்ளார்.

காஸா இனப்படுகொலை

வரூஃபாகிஸ் மற்றும் MERA25 அமைப்பானது ஆளும் கட்சியாக அவ்வாறு ஆளும் வாய்ப்பு கிடைத்தால் சிரிசா கிரேக்கத் தொழிலாளர்களைக் காட்டிக் கொடுத்தது போல், பாலஸ்தீனிய மக்களுக்கு அவர்கள் துரோகம் செய்வார்கள் என்பதில் சந்தேகமில்லை. பிரஸ்ஸல்ஸ் மற்றும் பேர்லினுக்கு முறையீடு செய்வதன் மூலம் கிரேக்கத்திற்கு எதிரான சிக்கன நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டு வர முடியாதது போல், முன்னணி ஏகாதிபத்திய சக்திகளிடம் முறையீடு செய்வதன் மூலம் காஸாவில் இனப்படுகொலையை நிறுத்துவது சாத்தியமில்லை.

இஸ்ரேலின் இனப்படுகொலைக்கான அவர்களின் ஆதரவு ஒரு மேற்பார்வை அல்ல, ஆனால் ஆழமான புறநிலை காரணங்களைக் கொண்டுள்ளது. உலக சோசலிச வலைத்தளம் (WSWS) அதன் புத்தாண்டு முன்னோக்குக் கட்டுரையில் சுட்டிக் காட்டியது போல், “ஏகாதிபத்திய மற்றும் [முதலாளித்துவ] உலக அமைப்பு முறையானது போட்டி தேசிய-அரசுகளாகப் பிரிந்துள்ளதன் பின்னணியில் மட்டுமே இதனை புரிந்து கொள்ள முடியும் மற்றும் விளக்க முடியும்.”

பிரஸ்ஸல்ஸ் மற்றும் பேர்லின், இஸ்ரேல் ஆகியன வாஷிங்டனுக்காக மத்திய கிழக்கு மற்றும் அதற்கு அப்பால் தங்கள் பொருளாதார மற்றும் பூகோள மூலோபாய நலன்களை உறுதிப்படுத்த ஒரு நீட்டிக்கப்பட்ட கையாக செயல்படுகின்றன. இஸ்ரேலிய இராணுவத்தால் பாலஸ்தீனியர்களை அழித்தொழிப்பதும் வெளியேற்றுவதும் இறுதியில் லெபனானில் ஹிஸ்புல்லா, யேமன் மற்றும் ஈரானில் உள்ள ஹவுத்திகளை ஒழிப்பது என்பது, ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் எதிரான போர்த் தாக்குதலை தீவிரப்படுத்துவது மற்றும் உலகை ஏகாதிபத்திய சக்திகளுக்குள் மறுபகிர்வு செய்வது ஆகியவற்றின் இலக்கின் ஒரு பகுதியாகும்.

அமெரிக்க-நேட்டோ மற்றும் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான உக்ரேன் போரை தொடர்ந்து விரிவுபடுத்துவதற்கு எதிரான போராட்டம் போன்று இனப்படுகொலைக்கு எதிரான போராட்டத்திற்கும் ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அணிதிரட்டல் தேவைப்படுகிறது. சோசலிச சமத்துவக் கட்சி ஐரோப்பிய தேர்தல்களுக்கான அதன் தேர்தல் செயற்திட்டத்தில் பின்வருமாறு எழுதுகிறது:

அத்தகைய இயக்கம் முதலாளித்துவத்திற்கு எதிராகவே ஒழுங்கமைக்கப்பட வேண்டும். உக்ரேன் போர், முதலாளித்துவத்தின் கீழ் ஐரோப்பாவை அமைதியான முறையில் ஒன்றிணைப்பது ஒரு பிற்போக்குத்தனமான மாயை என்பதை காட்டுகிறது. ஐரோப்பிய ஒன்றியமானது ரஷ்யாவிற்கு எதிராக போர் தொடுத்து, காஸாவில் இனப்படுகொலைக்கு ஆதரவளித்து, கண்டம் முழுவதும் தொழிலாளர்கள் மீதான தாக்குதல்களுக்கு ஒரு கருவியாக செயல்படுகிறது.

வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களின் ஐரோப்பிய ஒன்றியத்தை தொழிலாளர்கள் எதிர்க்க வேண்டும். பாரியளவிலான மக்களின் இறப்புகள் மற்றும் போரை, ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகளின் முன்னோக்குடன் எதிர்க்க வேண்டும். வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களின் அதிகாரத்தை உடைத்து அதனை ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் வைக்காமல் போரை நிறுத்த முடியாது, மனித உயிர்களைக் காப்பாற்ற முடியாது, ஊதியத்தைப் பாதுகாக்க முடியாது. ஒருவரையொருவர் சுடுவதற்குப் பதிலாக, ஐரோப்பா முழுவதிலும் உள்ள ரஷ்ய மற்றும் உக்ரேனிய தொழிலாளர்கள் மற்றும் உலகத் தொழிலாளர்கள் இந்த முன்னோக்குடன் உள்நாட்டில் உள்ள போர்வெறியர்களுக்கு எதிராக போராட வேண்டும்.

MERA25 அமைப்பு மற்றும் வரூஃபாகிஸ் இந்த ஒரே சாத்தியமான மற்றும் முற்போக்கான முன்னோக்கை கடுமையாக நிராகரிக்கின்றனர். அவர்கள் ஏகாதிபத்தியத்தை எதிர்க்கவில்லை மாறாக அதற்கான மாற்று வேலைத்திட்டத்தை வகுத்து முதலாளித்துவத்தை வெகுஜனங்களின் தேவைகளுடன் சமரசம் செய்து கொள்ள முடியும் என்ற மாயையை வளர்க்கிறார்கள்.

இராணுவவாத வேலைத்திட்டங்கள்

அவர்களின் தேர்தல் வேலைத்திட்ட அறிக்கையானது, முதலாளித்துவ ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் சுதந்திரமான ஐரோப்பிய வெளியுறவுக் கொள்கைக்கும் வெளிப்படையான அர்ப்பணிப்பாக இருக்கிறது. “உலகளாவிய அமைதிக்கு உறுதியளிக்கும் ஒரு சுதந்திரமான மற்றும் அணிசேரா ஐரோப்பிய ஒன்றியத்தை நாங்கள் விரும்புகிறோம்,” என்றும் “ஒவ்வொரு முகாமில் இருந்தும் அனைத்து ஆக்கிரமிப்பாளர்களுக்கும் எதிராக ஐரோப்பா தைரியமாக எழுந்து நிற்க வேண்டும், மேலும் ஐநா சாசனத்தின் அடிப்படையில் அமைதியான மோதல் தீர்வுகளுக்கு உழைக்க வேண்டும்” என்று அது கூறுகிறது.

ஏற்கனவே இருக்கின்ற கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் இதேபோல் வாசகங்கள் காணப்படலாம் அல்லது ஜேர்மன் சான்சலர் ஓலாஃப் ஷொல்ஸ் அல்லது பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் வாயில் இருந்தும் இது போன்ற வாக்கியங்கள் வரலாம். அவர்கள் அனைவரும் அமைதி மற்றும் சர்வதேச சட்டம் பற்றிய சொற்றொடர்களுடன் ஐரோப்பாவை ஒரு சுதந்திரமான அல்லது இறையாண்மை சக்தியாக மாற்றும் தங்கள் இலக்கை மறைக்கிறார்கள். உண்மையில், அவர்கள் ஐரோப்பாவை மறுசீரமைத்து அதை “போருக்குத் தயார்” (பாதுகாப்பு மந்திரி பிஸ்டோரியஸ்) ஆக்குவதற்கு உழைக்கின்றனர். அது ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் நலன்களை ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் எதிராகவும், மேலும் பெருகிய முறையில் அமெரிக்காவிற்கு எதிராகவும் செயல்படுத்துகிறது.

MERA25 அமைப்பானது அடிப்படையில் இந்த இராணுவவாத நிகழ்ச்சி நிரலை ஆதரிக்கிறது. ஐரோப்பிய தேர்தல்களுக்கான கட்சியின் முன்னணி வேட்பாளர் கரின் டி ரிகோ (Karin de Rigo) போலி-இடது ஜாகோபின் (Jacobin) பத்திரிகைக்கு சமீபத்தில் அளித்த பேட்டியில், “ஒரு ஐரோப்பிய இராணுவம் என்கிற யோசனை” “ஆரம்ப நிலையில் நல்லது” என்று விவரிக்கிறார். அதே நேரத்தில், “நாம் ஒரு ஐரோப்பிய இராணுவத்தை உருவாக்க வேண்டும் என்றால், உறுப்பு நாடுகள் தங்கள் தேசிய பாதுகாப்பை விட்டுக்கொடுக்க வேண்டும். எங்களுக்கு இரட்டை படைகள் தேவையில்லை” என அவர் வலியுறுத்தினார்.

“அனைத்து பாதுகாப்புச் செலவினங்களும் நேட்டோவால் கோரப்படுகின்றன, இது எங்கள் நலனுக்காக அவசியமில்லை” என்ற உண்மையையும் அவர் விமர்சிக்கிறார். இதனை வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அமெரிக்க தலைமையிலான நேட்டோவில் இருந்து சுதந்திரமாக தலையிடக்கூடிய உண்மையான ஐரோப்பிய படைக்கு MERA25 அமைப்பு அழைப்பு விடுக்கிறது.

அதே நேர்காணலில், MERA25 அமைப்பானது ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோ போரை முழுமையாக ஆதரிக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்பதை டி ரிகோ வெளிப்படுத்தியுள்ளார். ரஷ்யா, நிச்சயமாக, “ஒரு ஆக்கிரமிப்பாளராகக் பார்க்கப்பட வேண்டும்” என்று ரிகோ விளக்குகிறார், உக்ரேன் மீதான புட்டினின் படையெடுப்பு “தூண்டப்படவில்லை” என்ற உத்தியோகபூர்வ கதையை ஆதரிக்கிறார். நேட்டோ சக்திகளால் ரஷ்யாவை திட்டமிட்ட முறையில் சுற்றி வளைத்திருப்பது மற்றும் உக்ரேன் போரில் ஆக்கிரோஷமான விரிவாக்கக் கொள்கைகள் நடப்பது பற்றி ஒரு வார்த்தை கூட அவர் பேசவில்லை.

புட்டினின் போர் பிற்போக்குத்தனமானது, ஆனால் இது உக்ரேனை இணைத்து ரஷ்யாவை அடிபணியச் செய்யும் நோக்கில் நேட்டோவின் ஆக்கிரமிப்புக் கொள்கைக்கு ரஷ்ய தன்னலக்குழுக்களின் அவநம்பிக்கையான பதிலாக இருக்கிறது. உக்ரேனிய மக்களைத் தங்கள் ஏகாதிபத்திய இலக்குகளுக்கு பீரங்கித் தீவனமாகப் அவர்கள் பயன்படுத்துகிறார்கள்.

இந்த இலக்குகள் பெரும்பாலும் MERA25 அமைப்பால் ஆதரிக்கப்படுகின்றன. மே 2022 இல் Diem25 கட்சியின் இணையத் தளத்தில் வெளிவந்த “உக்ரேனில் போர் எப்போது, ​​எப்படி முடிவடையும்?” என்ற தலைப்பிலான ஒரு கட்டுரை, அதில் நேட்டோ போர்த் தாக்குதலுக்கு ஒற்றுமையை வெளிப்படுத்துவது மட்டுமல்லாமல், புட்டின் ஆட்சியைக் கவிழ்த்து மேற்கத்திய சார்பு பொம்மை ஆட்சிக்கு அதை மாற்றுவதற்கான போர் இலக்கையும் வெளிப்படுத்தியிருக்கிறது.

“ரஷ்யாவில் புட்டின் ஆட்சியில் இருக்கும் வரை இராணுவ மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு ஆழ்ந்த தீர்வை எட்ட முடியாது. வஞ்சகமான விரிவாக்கத் திட்டங்களைக் கைவிடுவது ரஷ்யத் தலைமையை மாற்றுவதன் மூலம் மட்டுமே நடைபெற முடியும்” என்று அது கூறுகிறது.

அது தொடர்ந்து குறிப்பிட்டது: “புட்டினை நோக்கிய மேற்கின் சந்தேகத்திற்கிடமற்ற அணுகுமுறை விட்டுக்கொடுப்பதற்கு இடமளிக்கவில்லை. ஆகவே, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் உக்ரேனில் ஏற்படும் அழிவின் அளவு, அத்துடன் ஒட்டுமொத்த கிரகத்தையும் பாதிக்கும் துன்பங்கள் மற்றும் இழப்புகள், ரஷ்ய உயரடுக்குகளால் புட்டின் பிரதியீடு செய்யப்படும் வேகத்தைப் பொறுத்தது.”

DiEM25 கட்சியானது, ஏகாதிபத்திய போர் மற்றும் ஆட்சி மாற்ற திட்டத்திற்கான தனது ஆதரவை நேட்டோ அரசாங்கங்களின் அதே பிரச்சாரத்துடன் மறைக்கிறது. அதாவது “தற்போதைய வரலாற்று மற்றும் அரசியல் சூழலில், உக்ரேனிய மக்கள் தங்கள் சொந்த விதியைத் தேர்ந்தெடுப்பதற்கான சுதந்திரத்தைப் பாதுகாக்க முடிவு செய்தால், இந்த நேரத்தில் அவர்கள் உருவாக்க விரும்பும் விதி மேற்கு மற்றும் நேட்டோவில் சேர வேண்டும் என்றால், பின்னர் இதை கவனத்தில் எடுத்து இறுதியில் ஆதரவளிப்பதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியாது.”

அணு ஆயுத சக்தியைக் கொண்டிருக்கிற ரஷ்யாவை தோற்கடிக்க நேட்டோ ஒன்றன் பின் ஒன்றாக சிவப்புக் கோட்டைக் கடக்கும் அதே வேளையில், அணு ஆயுத தலைமையிலான மூன்றாம் உலகப் போரின் அபாயத்தைக் குறைத்து மதிப்பிடுவதில் DiEM25 கட்சி பங்கேற்கிறது. இது நேட்டோவின் தாக்குதலை மேலும் அதிகரிக்கவும் அதற்கு எதிரான எதிர்ப்பை அடக்கவும் மையமாக செயற்படுகிறது. அதே DiEM25 கட்சியின் கட்டுரையில், இது போன்ற சொற்றொடர்கள் உள்ளன: அதாவது “ஐரோப்பாவின் பிற பகுதிகளிலோ அல்லது உலகின் பிற பகுதிகளிலோ மோதலின் அதிகரிப்பு சாத்தியமில்லை.” மேலும் “அணு ஆயுத தாக்குதலின் அபாயமும் குறைவாகவே தெரிகிறது” என்ற சொற்றொடர்களாகும்.

குடிமை நலன்கள்

ரஷ்யாவிற்கு எதிரான ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ ஆக்கிரமிப்புக்கு ஆதரவளிப்பதன் மூலம், அதே சக்திகளால் தூண்டிவிடப்படும் காஸா இனப்படுகொலைக்கு எதிரான தீவிரமான போராட்டத்தில் தான் ஈடுபடப்போவதில்லை என்பதையும் MERA25 அமைப்பு தெளிவுபடுத்துகிறது. உக்ரேனில் நடக்கும் போரும் காஸாவில் நடக்கும் இனப்படுகொலையும், உலகினை ஏகாதிபத்திய மறுபகிர்வு செய்வது மீதான பூகோள மோதலின் இரு போர் முனைகளாகும். MERA25 அமைப்பு முற்றிலும் இந்தப் போர்த் தாக்குதல் மற்றும் அதை உருவாக்கும் முதலாளித்துவ அமைப்புமுறையின் கட்டமைப்பிற்குள் செயல்படுகிறது. மேலும், காஸாவில் உள்ள போர் முனைகளில் ஒன்றின் தந்திரோபாய நோக்குநிலை பற்றிய விமர்சனத்தை மட்டுமே அது வெளிப்படுத்துகிறது.

சிரிசாவுடன் ஐரோப்பிய ஒன்றியத்தை பாதுகாத்து, சிக்கன நடவடிக்கையை முடிவுக்கு கொண்டு வர முடியும் என்று வரூஃபாகிஸ் கூறியது போல், இன்று இனப்படுகொலை மற்றும் அணு ஆயுத யுத்தம் இல்லாமல் அது ஒழுங்கமைக்கப்படலாம் என்ற மாயையை தூண்டும் அவர், MERA25 அமைப்புடன் சேர்ந்து ஏகாதிபத்தியத்தை பாதுகாக்கிறார். பரவிவரும் முதலாளித்துவ காட்டுமிராண்டித்தனம் இதற்கு நேர்மாறாக நிரூபித்து MERA25 அமைப்பின் அரசியல் திவால்நிலையையும் அம்பலப்படுத்துகிறது.

அதன் சமூக மற்றும் மனிதாபிமான சொற்றொடர்கள் ரஷ்யாவிற்கு எதிரான ஆக்கிரமிப்பு போர்வெறி மற்றும் ஒரு சுதந்திரமான ஐரோப்பிய பெரும் சக்தி கொள்கைக்கான அழைப்பிற்கான ஒரு மறைப்பாக இருக்கின்றன. கிரேக்கத்தில் சிரிசாவின் காட்டிக்கொடுப்பைப் போலவே, MERA25 அமைப்பு பேசும் அடுக்குகளின் வர்க்க நலன்களில் அவற்றின் வேர்களைக் கொண்டுள்ளன.

சில தீவிரமான கோரிக்கைகள் இருந்தபோதிலும், MERA25 அமைப்பானது குட்டி முதலாளித்துவத்தின் செல்வந்த அடுக்குகளை அடிப்படையாகக் கொண்ட முற்றிலும் முதலாளித்துவக் கட்சியாகும். இனப்படுகொலை மற்றும் போர் மற்றும் அதற்கு வேகமாக வளர்ந்து வரும் எதிர்ப்பு ஆகியவற்றின் நிலைமைகளின் கீழ், வரூஃபாகிஸ் ஒருமுறை கூறியது போல், “முதலாளித்துவத்தை தன்னிடமிருந்தே காப்பாற்ற” முயற்சிப்பதன் மூலம் அவர்கள் தங்கள் சிறப்புரிமைகளைப் பாதுகாக்கத் தீவிரமாக உள்ளனர். வேறு வார்த்தைகளில் கூறுவதானால்: தொழிலாள வர்க்கத்தின் சோசலிசப் புரட்சியிலிருந்து முதலாளித்துவத்தை பாதுகாப்பதாகும்.

இனப்படுகொலை, உலகப் போர் மற்றும் அதனுடன் தொடர்புடைய சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலுக்கு எதிராக தீவிரமாகப் போராட விரும்பும் எவரும், சர்வதேச சோசலிசத்திற்கான இந்தப் போராட்டத்தையே கையிலெடுத்து, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் புதிய புரட்சிகர தலைமையாக சோசலிச சமத்துவக் கட்சியை (SGP) கட்டியெழுப்ப வேண்டும். அடிப்படையில் இராணுவ சார்பு மற்றும் முதலாளித்துவ சார்பு நோக்குநிலையுடன் உள்ள MERA25 அமைப்பு போன்ற தொழிலாள வர்க்கத்தின் போலி-இடது எதிர்ப்பாளர்களுடன், தெளிவான அரசியல் கணக்கீடு செய்வது அவசரமாக தேவையாக இருக்கிறது.

Loading