கென்யாவின் ரூட்டோ, சிக்கன நடவடிக்கை எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களை படுகொலை செய்த பிறகு, சமூக வெடிப்பைத் தடுக்கும் முயற்சியாக IMF-நிதி மசோதாவை திரும்பப் பெறுகிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

நைரோபியின் தெருக்களில் சிக்கன நடவடிக்கை திட்டத்திற்கு எதிரான ஏராளமான போராட்டக்காரர்களை காவல்துறையினர் சுட்டுக் கொன்றதற்கு பிறகு கென்யாவின் ஜனாதிபதி வில்லியம் ரூட்டோ (William Ruto) புதன்கிழமையன்று (26-06-2024) நிதி மசோதா 2024 ஐ திரும்பப் பெறுவதாக அறிவித்தார். ​​இரத்தக்களரியான போராட்டத்துக்கு பிறகு எழுந்த வெகுஜன எதிர்ப்பைக் கண்டு அவர் அச்சமடைந்துள்ளார்.

ஆளும் வர்க்கங்களின் செழுமை மற்றும் ஊழலுக்கு மத்தியில், ஏற்கனவே உயர்ந்து வரும் உணவு மற்றும் எரிபொருள் விலைகள் மற்றும் அதிக வேலைவாய்ப்பின்மை ஆகியவற்றை எதிர்கொள்ளும் மக்கள் மீது சர்வதேச நாணய நிதியத்தால் (IMF) ஆணையிடப்பட்ட இந்த மசோதா கடுமையான வரி உயர்வுகளை உள்ளடக்கியிருக்கிறது.

நிதி மசோதாவுக்கு எதிரான போராட்டங்கள் கிளர்ச்சியாக உருவெடுத்துள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்கள் ரூட்டோவின் இரத்தம் தோய்ந்த ஆட்சியை மட்டும் குறிவைக்கவில்லை, அமெரிக்க மற்றும் நேட்டோ ஏகாதிபத்திய சக்திகளால் ஆதரிக்கப்படும் சுதந்திரத்திற்குப் பிந்தைய 60 ஆண்டுகள் பழமையான முழு கட்டுமானத்தையும் குறிவைத்தனர்.

47 மாவட்டங்களைக் கொண்ட நாட்டில் 37 மாவட்டங்களில், பழங்குடி பிரிவினர்களையும் ஊடறுத்து நாடு முழுவதும் மில்லியன் கணக்கானோர் எதிர்ப்புகளைத் தெரிவித்தனர். இளைஞர்கள் தலைமையில், “நிராகரி” மற்றும் “ரூட்டோ விலக வேண்டும்” என்று கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ஒரு படுகொலையுடன் அந்த நாள் முடிந்தது.

போலீஸ் சீர்திருத்த பணிக்குழுவின் (Police Reforms Working Group) கூற்றுப்படி, உண்மையான தோட்டாக்களால் நேரடியாக சுட்டதன் விளைவாக, குறைந்தது 53 பேர் கொல்லப்பட்டதாகவும் மற்றும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்ததாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளன. நைரோபியின் புறநகரில் உள்ள கிதுரை (Githurai) பகுதியில், போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 30 பேர் கொல்லப்பட்டனர். மற்ற 23 பேர் நைரோபி மற்றும் நாடு முழுவதும் நிகழ்ந்த சம்பவத்தால் இறந்துள்ளனர்.

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

இந்த அடக்குமுறை கொடூரமானதாகும். ஒரே நாளில் பாதுகாப்புப் படைகள் செய்த குற்றத்தை ஒப்பிடத்தக்க வகையில், 1969 கிசுமு (Kisumu) படுகொலையை நினைவுபடுத்திப் பார்க்க வேண்டும், கென்யாவின் சுதந்திரத்திற்குப் பிந்தைய முதல் தலைவர் ஜனாதிபதி ஜோமோ கென்யாட்டா (Jomo Kenyatta) அவரது வருகையின் போது கூட்டத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்த காவல்துறைக்கு உத்தரவிட்டார். இதன் விளைவாக ஏராளமானவர்கள் கொல்லப்பட்டனர்.

செவ்வாய்கிழமை நடந்த படுகொலை என்பது கென்யா பொலிஸை ஹெய்ட்டியில் (Haiti) அமெரிக்க நிதியுதவியுடன் நிலைநிறுத்தியதன் தன்மை பற்றிய ஒரு எச்சரிக்கையாகும். அதன் முதல் தொகுதி நேற்று கரீபியன் நாட்டில் மக்களை பயமுறுத்தும் பணியில் இறங்கியுள்ளது.

பதினேழு மணி நேரத்தில், ரூட்டோ எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வெகுஜனத்தை வன்முறையால் அச்சுறுத்துவதை நிறுத்தி சமரச உரையை நிகழ்த்தியதன் மூலம் மசோதாவை திரும்பப் பெறுவதாக அறிவித்தார்.

செவ்வாய் இரவு, அவர் “வன்முறை மற்றும் அராஜகத்திற்கு தூண்டுபவர்கள்” தலைமையிலான “தேசத்துரோக நிகழ்வுகள்” என்று போராட்டங்களை விவரித்தார். “நாட்டை பாதுகாப்பதற்கும் இயல்புநிலையை மீட்டெடுப்பதற்கும்” முழு அரசு எந்திரத்தையும் பயன்படுத்தப்போவதாக உறுதி பூண்டார். அடக்குமுறையை தீவிரப்படுத்துவதில் பொலிசாருக்கு ஆதரவாக கென்யா பாதுகாப்புப் படைகளை அனுப்புவதாக அவர் அறிவித்தார்.

அடுத்த நாள், “மசோதா நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, நாடு பரவலான அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறது, வருந்தத்தக்க வகையில் உயிர் இழப்பு, சொத்து அழிவு மற்றும் அரசியலமைப்பு நிறுவனங்களை இழிவுபடுத்தியுள்ளது”, தனது பாதுகாப்புப் படையினரால் படுகொலை செய்யப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தனது இரங்கலைத் தெரிவித்த அவர், “மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க மறுப்பதாக” கூறினார்.

ரூடோ அதற்கு பதிலாக “நம் தேசத்தின் இளைஞர்களுடன் அவர்களின் பிரச்சினைகளைக் கேட்கவும், அவர்களின் முன்னுரிமைப் பகுதிகளில் அவர்களுடன் உடன்படவும்” ஈடுபடுவதாக தெரிவித்தார். “மசோதாவின் உள்ளடக்கம் மற்றும் சிக்கன நடவடிக்கைகளின் தேவை மற்றும் ஊழலுக்கு எதிரான நமது போராட்டத்தை வலுப்படுத்துவது குறித்து சமீப நாட்களில் எழுப்பப்பட்ட துணைப் பிரச்சனைகள் தொடர்பான விஷயங்களைப் பற்றி விவாதிக்க அடுத்த இரண்டு வாரங்களில் “பல துறைகள், பல பங்குபற்றாளர்களின் ஈடுபாட்டை மேற்கொள்ள” அவர் முன்மொழிந்தார்.”

ஜூன் 26, 2024 புதன்கிழமை, கென்யாவின் நைரோபியில் உள்ள அரச மாளிகையில் கென்ய ஜனாதிபதி வில்லியம் ரூடோ உரையாற்றும்பொழுது.

மக்களில் சில பிரிவினர் இதை ஒரு வெற்றியாகக் கருதினாலும், எதிர்க்கட்சியான அசிமியோ லா உமோஜா (Azimio la Umoja) கூட்டணி மற்றும் தொழிற்சங்கங்களின் மத்திய அமைப்பு (COTU) தலைமையிலான தொழிற்சங்க அதிகாரத்துவத்துடன் கூட்டுச் சேர்ந்து IMF சிக்கனத் திட்டத்தை சுமத்துவதற்கான சிறந்த வழியை உருவாக்க ரூட்டோ விரும்புகிறார்.

பாராளுமன்றம், நீதித்துறை மற்றும் மாவட்ட அரசாங்கங்கள் கருவூலத்துடன் இணைந்து “நாங்கள் எங்களின் வசதிகளுக்குள் வாழ்கிறோம்” என்பதை உறுதி செய்வதற்காக பட்ஜெட் வெட்டுக்கள் மற்றும் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக ரூடோ அறிவித்துள்ளார். முதலாளித்துவ பத்திரிகைகள் தெரிவித்துள்ளது போல், மசோதாவை நிராகரிப்பது 200 பில்லியன் ஷில்லிங் ($1.5 பில்லியன்) வருவாயில் ஓட்டை விழும், இதன் விளைவாக சுகாதாரம், கல்வி மற்றும் சமூக செலவுகளில் அதே அளவு வெட்டுக்கள் ஏற்படும்.

“அதிக வாழ்க்கைச் செலவுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்பாக அமைதியின்மை [அது] மீண்டும் தோன்றக்கூடும். மேலும், வரிகள் மற்றும் தேர்தல் செயல்முறைகளை உயர்த்த வேண்டும்”. கென்ய அரசாங்கத்தின் “திட்டத்தின் கீழ் சீர்திருத்தங்களுக்கு உறுதியுடன் இருக்க வேண்டும்” என்று ஜனவரியில் எச்சரித்த IMF இன் திட்டத்தை ரூட்டோ பின்பற்றுகிறார்.

ரூட்டோ அரசு இப்போது எதிர்க்கட்சி மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் விசுவாசத்தை சார்ந்திருக்கிறது.

இரண்டு தசாப்தங்களாக COTU தொழிற்சங்கத்தின் பொதுச்செயலராக இருக்கும் பிரான்சிஸ் அட்வோலி (Francis Atwoli) நேற்று ஒரு செய்தியாளர் மாநாட்டை ஏற்பாடு செய்தார். “மாண்புமிகு ஜனாதிபதியின் நிதி மசோதாவை இடைநிறுத்தவும், Z தலைமுறையினர் (Generation Z - 1997-2012 க்கு இடையில் பிறந்தவர்கள்), மில்லினியல் தலைமுறை இளைஞர்கள் (Millennial - 1981-1996 க்கு இடையில் பிறந்தவர்கள்) மற்றும் பிற கென்யர்களின் கோரிக்கைகளை ஆராய விசாரணைக் குழுவை நியமிக்கவும் அவர் வலியுறுத்தினார். நாடு வீழ்ச்சியடைந்தால், அது ரூட்டோவால் மட்டும் வீழ்ச்சியடையாது, அது எல்லோரிடமும் வீழ்ச்சியடையும் என்பதை நான் கென்யா மக்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். நான் முன்பே கூறியது போல், ஒரு மோசமான அரசாங்கம் இல்லாததை விட ஒரு மோசமான அரசாங்கத்தை வைத்திருப்பது நல்லது. ஏனென்றால் அராஜகம் என்பது எவரும் அனுபவிக்க வேண்டிய மிக மோசமான விஷயம்” என்று அட்வோலி தெரிவித்தார்.

அட்வோலியின் எதிர்வினை தொழிற்சங்கங்கள் அரசாங்கத்திற்கும் பெருவணிகத்திற்கும் ஒரு தொழில்துறை பொலிஸ் படையாக செயல்படுகின்றன என்பதற்கான மற்றொரு அறிகுறியாகும். ரூட்டோவின் கொடிய வன்முறை மற்றும் சிக்கன நடவடிக்கையை அவர்கள் எதிர்க்க மாட்டார்கள். மாறாக அட்வோலி, “கென்யா இந்த பிராந்தியத்தில் பொருளாதார நடவடிக்கைகளின் மையமாக உள்ளது, மேலும் நாங்கள் அதை எல்லா விலைகொடுத்தும் பாதுகாக்க வேண்டும். இந்த நாடு அமைதியாக இருக்க ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் நாம் ஆதரவளிக்க வேண்டும்” என்று வலியுறுத்திக் கூறினார்.

கோடீஸ்வரர் ரைலா ஒடிங்கா (Raila Odinga) தலைமையில் எதிர்க்கட்சி உள்ளது, மற்றும் ரூடோ அரசாங்கத்தின் பொருளாதார திட்டத்துடனும் எந்த அடிப்படை வேறுபாடுகளும் அவருக்கு இல்லை. ஒடிங்காவின் கவலை என்னவென்றால், தற்போதைய அரசாங்கம் அதிகரித்து வரும் எதிர்ப்பினை முகங்கொடுத்து தேவையான சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்த இயலாதுள்ளது என்பதேயாகும்.

போராட்ட எதிர்ப்புக்கள் தொடங்கியதில் இருந்து கிட்டத்தட்ட ஒரு வாரமாக மௌனமாக இருந்த ஒடிங்கா, ரூட்டோவின் அடக்குமுறையை எதிர்கொண்டு எதிர்கட்சியுடன் “புதிய தொடக்கம் மற்றும் உரையாடலுக்கு” எதிர்ப்பு தெரிவித்தார். அவருடைய ஆசை நிறைவேறிவிட்டது.

ஒடிங்காவின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் வைப்பர் (Wiper) கட்சியின் தலைவரும், அசிமியோ லா உமோஜாவின் (Azimio la Umoja) செய்தித் தொடர்பாளராகத் தொடர்ந்து செயல்பட்டு வருபருமான கலோன்சோ முஸ்யோகா (Kalonzo Musyoka) “ரூட்டோ நிதி மசோதாவை நிராகரிப்பதற்கும், அதை திரும்பப் பெறுவதற்காக பாராளுமன்றத்திற்கு திருப்பி அனுப்புவதற்கும் அதிகம் தாமதிக்கவில்லை” என்று கூறினார்.

ரூட்டோ, கலோன்சோ மற்றும் ஒடிங்கா ஆகியோர் கென்ய அரசியல் ஸ்தாபனத்திற்குள் பல தசாப்தங்களாக எப்போதாவது ஒரே கட்சியிலும் மற்றும் அரசாங்கத்திலும் கூட பணியாற்றியுள்ளனர். அவர்கள் அனைவரும் நைரோபியில் உள்ள கரேன் (Karen) என்ற செல்வச் செழிப்பான சுற்றுப்புறத்தில் வசிக்கின்றனர். மக்கள் தொகையில் 0.1 சதவீதத்தினர் (8,300 பேர்) கீழே உள்ள 99.9 சதவீதத்தை விட (44 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்) அதிக செல்வத்தை வைத்துள்ளனர் என ஆக்ஸ்பாம் அறிக்கை தெரிவித்துள்ளது.

ஒடிங்கா கென்ய அரசியல் ஸ்தாபனத்திற்கு எதிராக தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தின் பிரிவுகளின் வெகுஜன இயக்கங்களைத் தடம் புரளச் செய்வதற்கு தனது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளார். 1990 களில், மேற்கத்திய ஆதரவுடைய மோய் (Moi) ஆட்சியின் வெறுக்கப்பட்ட ஆட்சிக்கு எதிராக பெருகிய எதிர்ப்பின் மத்தியில், ஒடிங்கா, 1982 இல் மோயினால் சித்திரவதை செய்யப்பட்ட போதிலும், அவரை ஆதரிப்பதைத் தேர்ந்தெடுத்தார். அவர் தனது அப்போதைய தேசிய வளர்ச்சிக் கட்சியை (National Development Party) மோயின் வெறுக்கப்பட்ட கானு (KANU) கட்சியுடன் இணைத்து அவரது அரசில் எரிசக்தி அமைச்சராக பணியாற்றினார்.

2007 இல், அப்போதைய ஜனாதிபதி மவாய் கிபாகி (Mwai Kibaki) அவரிடமிருந்து தேர்தலைத் திருடிய பின்னர், ஒடிங்காவின் ஆதரவாளர்கள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட போதும், வெகுஜன எதிர்ப்பு போராட்டங்களை ஒடிங்கா கைவிட்டு, இரண்டாவது பிரதமராக அரசாங்கத்தில் நுழைந்தார். தேர்தலுக்குப் பிறகு ஏற்பட்ட வன்முறையில் 1,200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் மற்றும் அரை மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்தனர். அப்போது ஒடிங்காவின் கூட்டாளியான ரூட்டோ, இன வன்முறையைத் தூண்டி, குற்றப் பாத்திரத்தை வகித்தார். அதனால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் குற்றவாளியாக குற்றம்சாட்டப்பட்டிருந்தார்.

2017 இல், உஹுரு கென்யாட்டா (Uhuru Kenyatta) சம்பந்தப்பட்ட மற்றொரு சர்ச்சைக்குரிய தேர்தலைத் தொடர்ந்து, பரவலான கோபத்திற்கு மத்தியில் ஒடிங்கா மீண்டும் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டார். கடந்த ஆண்டு, ரூட்டோவின் நிதி மசோதா 2023 க்கு எதிராக எதிர்ப்பைத் தணிக்க அவர் இடையிடையே போராட்டங்களை ஏற்பாடு செய்தார். இறுதியில் அரசு ஊழியர்கள், மருத்துவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வேலைநிறுத்தப் போராட்டங்களுடன் தலையிடப்போவதாக அச்சுறுத்தியபோது அவற்றை அவர் கைவிட்டார்.

கலோன்சோ, ரூட்டோவைப் போலவே, மோயின் பொலிஸ் அரசின் கீழ் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். மேலும் தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் இடதுசாரி எதிர்ப்பாளர்கள் கொல்லப்பட்டு மற்றும் சித்திரவதை செய்யப்பட்ட நிலையில், ஆட்சியில் வெளியுறவு மந்திரியாகவும் (1993-1998), தேசிய பாராளுமன்றத்தின் துணை சபாநாயகராகவும் (1988-1992) மற்றும் மோயின் கீழ் உள்ள ஒரே சட்டக் கட்சியான KANU இன் தேசிய அமைப்பு செயலாளராகவும் இருந்தார்.

ரூட்டோ வெகுஜன எழுச்சியை செயலிழக்கச் செய்ய எண்ணியுள்ளார். எவ்வாறாயினும், நூறாயிரக்கணக்கான பயனர்கள் #ராஜினாமா (#Resign), #நிராகரிப்பு நிதியில்2024 (#RejectingFinanceBill2024), #ராஜினாமா செய்தல் (#Resignation), #ரூட்டொ வெளியேற வேண்டும் (#RutoMustGo), #அரசு இல்லத்திற்கு செல்லும் சாலை (#Roadtostatehouse) போன்ற ஹேஷ்டேக்குகளை பெரும்பான்மையினர் ஆதரித்ததால் மீண்டும் எதிர்ப்புப் போராட்டங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றன.

கென்ய ஆளும் வர்க்கம் அச்சமடைந்துள்ளது. பிசினஸ் டெய்லி (Business Daily) பத்திரிகை நேற்று குறிப்பிட்டுள்ளதன்படி, “கென்யாவில் ஆர்ப்பாட்டங்கள் பொதுவாக அரசியல் தலைவர்களால் அணிதிரட்டப்படுகின்றன, அவர்கள் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகள் மற்றும் அதிகாரப் பகிர்வு ஒப்பந்தங்களை [ஒடிங்காவைக் குறிக்கும் வகையில்], மேற்கொள்பவர்களாக இருக்கின்றனர். ஆனால், தற்போதைய போராட்டங்களில் பங்கேற்கும் இளம் கென்யர்களுக்கு அதிகாரப்பூர்வ தலைவர் இல்லை, மேலும் அவர்களின் கோரிக்கைகளில் பெருகிய முறையில் தைரியமான தன்மை வளர்ந்து வருகிறது.”

நேற்று, துணை ஜனாதிபதி ரிகாதி கச்சகுவா (Rigathi Gachagua) செய்தியாளர் சந்திப்பை ஏற்பாடு செய்து அதில் “தயவு செய்து உங்கள் தந்தையைப் போலவே கேட்டுக்கொள்ளுகின்றேன், எனது மகன்களும் மகள்களும் ஒரு அறிவிப்பை வெளியிட்டு போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறினார்.

சர்வதேச அளவில், இதேபோன்ற IMF நடவடிக்கைகள் செயல்படுத்தப்படும் பாகிஸ்தானின் முன்னாள் உள்துறை அமைச்சர் ஷேக் ரஷீத் நேற்று கூறியதாவது: “கென்யாவில் ஓடும் திரைப்படம் பாகிஸ்தானிலும் மீண்டும் ஒடலாம் என்பது அவர்களுக்குத் தெரியாமால் இருக்கிறது. அதற்குத் தயாராகுங்கள், தேசம் உங்களைப் பொறுப்புக்கூற வைக்கும்... எந்தத் தலைவருக்காகவும் காத்திருக்காது.”

Loading