காஸாவில் இனப்படுகொலையை நிறுத்து! வாஷிங்டன் டி. சி. யில் ஜூலை 24 அன்று நடைபெறவுள்ள பேரணியில் சேருங்கள்!

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

ஜூலை 24 அன்று வாஷிங்டன் டி.சி.யில் நடைபெறவுள்ள காஸா இனப்படுகொலைக்கு எதிரான பேரணியில் சேருங்கள்! பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்திற்குப் பிந்தைய கூட்டத்தில் கலந்து கொள்ள பதிவு செய்ய அல்லது நிகழ்வுகள் பற்றிய புதுப்பிப்புகளைப் பெற இறுதியில் படிவத்தை நிரப்பவும்.

ஜூலை 24 புதன்கிழமை, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் போர் குற்றங்களுக்காக குற்றம் சாட்டப்பட்டுள்ள இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு, காங்கிரஸின் ஒரு கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றுவார். இந்த அழைப்பு, இஸ்ரேலிய அரசுடன் அமெரிக்க அரசாங்கத்தின் எல்லையற்ற ஐக்கியத்தின் மற்றொரு நிரூபணம் ஆகும்.

வாஷிங்டனில் நெதன்யாகு, இஸ்ரேலை வழிநடத்தும் பாசிச சதிக்குழுவின் தலைவர் என்ற முறையில் மட்டும் பேசாமல், மத்திய கிழக்கில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அரசியல் முகவர் என்ற முறையிலும் பேசுவார். பாரிய படுகொலை மற்றும் காஸா சமூகத்தை திட்டமிட்டு அழிப்பதில் ஈடுபட்டுள்ள ஒரு அரசாங்கத்தின் தலைவராக அவர் காங்கிரஸின் முன் தோன்றி அதன் கைதட்டலைப் பெறுவார். காஸாவின் சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, கடந்த ஒன்பது மாதங்களில் கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை ஜூன் 19 நிலவரப்படி 37,396 ஆகும்.

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

எவ்வாறிருப்பினும், ஜூலை 5 அன்று தி லான்செட் (The Lancet) ஆல் வெளியிடப்பட்ட அழிவின் அளவு குறித்த மிகவும் தீவிரமான பகுப்பாய்வு, கடந்த அக்டோபரில் இருந்து கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்களின் உண்மையான எண்ணிக்கையின் ஒரு பரந்த குறைமதிப்பீடாகும் என்று கூறுகிறது. அடையாளம் காணப்பட்ட பாதிக்கப்பட்டவர்களைத் தவிர, பிப்ரவரி பிற்பகுதியில் காசாவில் உள்ள அனைத்து கட்டிடங்களில் 35 சதவீதம் அழிக்கப்பட்டுவிட்டதாகவும், 10,000 க்கும் அதிகமானவர்கள் இடிபாடுகளில் புதையுண்டிருக்கலாம் என்று நம்பத்தகுந்த வகையில் மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் ஐ.நா.வின் அறிக்கையை லான்செட் குறிப்பிடுகிறது.

ஆனால் இந்த 10,000 பாதிக்கப்பட்டவர்களை உத்தியோகபூர்வ இறப்பு எண்ணிக்கையுடன் சேர்த்தாலும் கூட, கொல்லப்பட்டவர்களின் உண்மையான எண்ணிக்கையை விட மிகக் குறைவான எண்ணிக்கையைத்தான் நாம் பெறுகிறோம். காஸாவின் சமூக உள்கட்டுமானத்தின் மொத்த அழிவால் ஏற்படும் மறைமுக இறப்புகள், பீரங்கி குண்டுகள் மற்றும் ஏவுகனைகளால் ஏற்பட்ட நேரடி இறப்புகள் என்பன கணிசமான மடங்காக இருக்கிறது என்று லான்செட் கூறுகிறது. தி லான்செட் பின்வருமாறு எழுதுகிறது:

சமீபத்திய மோதல்களின் போது, ​​நேரடி மரணங்களின் எண்ணிக்கையை விட மறைமுக இறப்புகளின் எண்ணிக்கை மூன்று முதல் 15 மடங்கு அதிகமாகும். 37,396 இறப்புகளுக்கு ஒவ்வொரு நேரடி மரணத்திற்கும் நான்கு மறைமுக இறப்புகள் என்ற முந்தைய மதிப்பீட்டைப் பயன்படுத்தினால், காஸாவில் தற்போதைய மோதலுக்கு 186,000 அல்லது அதற்கு மேற்பட்ட இறப்புகள் இருக்கலாம் என்று மதிப்பிடுவது நம்பமுடியாத அளவில் உள்ளது. காஸா பகுதியின் 2022ம் ஆண்டு மக்கள்தொகை மதிப்பீட்டின்படி 2,375,259 பேர்களாகும். இது காஸா பகுதியில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 7.9 சதவீதமாக இருக்கும்.

அமெரிக்காவின் மக்கள் தொகை சுமார் 333 மில்லியன் மக்கள். ஒரு போரில் 7.9 சதவீத அமெரிக்கர்கள் கொல்லப்பட்டால், இறப்பு எண்ணிக்கை 26.3 மில்லியன் மக்களாக இருக்கும்.

நெதன்யாகுவுக்கு அழைப்பு விடுத்திருப்பது ஒரு அரசியல் ஆத்திரமூட்டல் ஆகும். இது காஸா மக்களுக்கு எதிரான இனப்படுகொலைப் போரில் அமெரிக்க அரசாங்கம் உடந்தையாக இருந்து வருவதை அம்பலப்படுத்துகிறது.

இந்த ஆத்திரமூட்டலுக்கு எவ்வாறு பதிலளிக்க முடியும்?

உலக சோசலிச வலைத் தளம், சோசலிச சமத்துவக் கட்சி, சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பு மற்றும் சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணி ஆகியவை, நெதன்யாகுவின் விஜயம் மற்றும் அமெரிக்க அரசாங்கத்திலுள்ள அவரது அரசியல் உடந்தையாளர்கள் மற்றும் உதவியாளர்கள் அனைவரையும் கண்டிக்க வாஷிங்டன் டிசி இல் ஒரு ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. இந்த ஆர்ப்பாட்டம், இந்த நாட்டிற்குள்ளும், உலகெங்கிலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் இஸ்ரேலிய அரசில் உள்ள அதன் முகவர்களுக்கும் இடையிலான குற்றவியல் கூட்டணிக்கு எதிரான வெகுஜன எதிர்ப்பிற்கு குரல் கொடுக்கும். 

நம் காலத்திற்கு ஏற்ற சிறிய மாற்றங்களுடன் ஃபிரடெரிக் டக்ளஸின் (Frederick Douglass) வார்த்தைகளை பொருத்திக்கொள்ள நீங்கள் என்னை அனுமதிப்பீர்களானால்: “தேசத்தின் உணர்வு துரிதப்படுத்தப்பட வேண்டும், உலகின் மனசாட்சி தட்டியெழுப்பப்பட வேண்டும்... அமெரிக்க அரசின் பாசாங்குத்தனம் அம்பலப்படுத்தப்பட வேண்டும்; மற்றும் பாலஸ்தீன மக்கள் மற்றும் ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கு எதிரான அதன் குற்றங்கள் பிரகடனப்படுத்தப்பட வேண்டும் மற்றும் கண்டிக்கப்பட வேண்டும்.”

ஆனால் இந்த ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் வெறுமனே சீற்றத்தை வெளிப்படுத்துவது மட்டுமல்ல, மாறாக ஏகாதிபத்திய இராணுவவாதத்தின் உலகளாவிய வெடிப்பு, ரஷ்யா மற்றும் சீனாவுக்கு எதிரான அணுஆயுதப் போரை நோக்கிய இடைவிடாத தீவிரப்பாடு, மற்றும் தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகள் மீதான தாக்குதல் ஆகியவற்றுடன் பிரிக்கவியலாமல் பிணைந்துள்ள காஸா இனப்படுகொலையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒரு பாரிய இயக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான ஒரு மூலோபாய திசையை வழங்குவதும் ஆகும். கடந்த நூற்றாண்டில் இரண்டு உலகப் போர்கள், பாசிசம், யூத இனப்படுகொலை மற்றும் அணுகுண்டுகள் வீச்சு ஆகியவற்றில் விளைந்த, முதலாளித்துவ அமைப்புமுறையில் வேரூன்றிய அதே பொருளாதார நலன்களும், அதே அரசியல் நிகழ்ச்சிப்போக்குகளும் இன்றும் செயலாற்றி வருகின்றன.

வரலாற்றின் படிப்பினைகளை இன்றைய போராட்டங்களுக்கு நாம் பொருத்திப் பார்க்க வேண்டும்.

ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து, சோசலிச சமத்துவக் கட்சி பின்வரும் கோட்பாடுகளின் அடிப்படையில் ஒரு பாரிய போர்-எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான ஒரு சோசலிச மூலோபாயத்தை முன்னெடுக்கவும் விவாதிக்கவும் ஒரு கூட்டத்தை நடத்தும்:

  1. போருக்கான அடிப்படைக் காரணம் முதலாளித்துவ தேசிய-அரசு அமைப்புமுறையிலும், மிகப்பெரும் பெருநிறுவனங்களின் பூகோள நிதிய நலன்களிலும் மற்றும் பூகோள மேலாதிக்கத்தை அடைவதற்கான அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் இடைவிடாத முனைப்பிலும் தங்கியுள்ளது.
  2. போருக்கு எதிரான போராட்டத்திற்கு அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் அளப்பரிய சக்தியை அணிதிரட்டுவதும், ஆளும் வர்க்கத்தின் ஏகாதிபத்தியப் போரின் கட்சிகளான ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சியில் இருந்து அதன் அரசியல் சுயாதீனமும் அவசியமாகும்.
  3. இனப்படுகொலை மற்றும் போருக்கு எதிரான இயக்கம் சர்வதேசரீதியானதாக இருக்க வேண்டும், தொழிலாளர்களை அவர்களின் பொதுவான வர்க்க நலன்களின் அடிப்படையில் ஐக்கியப்படுத்த வேண்டும்.

ஜூலை 24 அன்று வாஷிங்டனுக்கு வாருங்கள். பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இழைக்கப்பட்டுவரும் குற்றங்கள் குறித்து தனிப்பட்ட தார்மீக சீற்றம் மட்டும் போதாது.

ஓரமாக நிற்க வேண்டாம். போரை முடிவுக்குக் கொண்டு வந்து உலகை மாற்றும் ஒரு வெகுஜன இயக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான போராட்டத்தில் இணைந்து கொள்ளுங்கள்.

Loading