முன்னோக்கு

டொனால்ட் டிரம்ப் மீதான படுகொலை முயற்சி குறித்து

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

பட்லரில் நடந்த பிரச்சார நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீதான படுகொலை செய்ய முயற்சித்ததைத் தொடர்ந்து பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்படுகிறார். ஜூலை 13, 2024 சனிக்கிழமை, பென்சில்வேனியா. [AP Photo/Gene J. Puskar]

சனிக்கிழமையன்று இடம்பெற்ற அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீதான படுகொலை முயற்சியின் சூழ்நிலைகள் குறித்து இன்னும் விடை தெரியாத பல கேள்விகள் உள்ளன. தாக்குதலின் தோற்றம் எதுவாக இருந்தாலும், ஒன்று மட்டும் நிச்சயம்: இது முழு அரசியல் ஸ்தாபனத்தின் மேலும் கூர்மையான வலதுசாரி மாற்றத்திற்கு வழிவகுக்கும்.

ஞாயிற்றுக்கிழமை மாலை ஆற்றிய ஒரு உரையில், ஜனாதிபதி பைடென், 20 வயதான தோமஸ் மேத்யூ க்ரூக்ஸ் என அடையாளம் காணப்பட்ட துப்பாக்கிச் சூடு நடத்தியவர் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகக் கூறினார். 'துப்பாக்கி சூடு நடத்தியவரின் நோக்கம் எங்களுக்கு இன்னும் தெரியவில்லை, அவரது கருத்துக்கள் அல்லது தொடர்புகள் எங்களுக்குத் தெரியாது. அவர் ஏதாவது உதவி அல்லது ஆதரவைப் பெற்றாரா அல்லது அவர் வேறு யாருடனும் தொடர்பு கொண்டாரா என்பது எங்களுக்குத் தெரியாது' என்று பைடென் கூறினார்.

இந்த தாக்குதலின்போது, டிரம்ப் ஆதரவாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டு, மேலும் இருவர் படுகாயமடைந்தனர். ட்ரம்ப் உரையாற்ற இருந்த இடத்தை தெளிவாகக் காணக்கூடிய ஒரு கூரையின் இருப்பிடத்தையும், 150 கெஜத்தில், துப்பாக்கி சூட்டு வரம்பிற்குள் மேத்யூ க்ரூக்ஸுக்கு அணுகல் இருந்ததால், இது கடுமையான பாதுகாப்பு அலட்சியத்தைப் பரிந்துரைக்கிறது. அவர், ஒரு இரகசிய சேவையிலிருந்த குறி பார்த்து துப்பாக்கியால் சுடும் சிப்பாயால் கொல்லப்படுவதற்கு முன்பு, குறைந்தது அரை டசின் துப்பாக்கி ரவைகளை தீர்த்திருந்தார்.

இதுவரை, ஆளும் உயரடுக்கிற்குள்ளேயே, முதன்மையாக வெளியுறவுக் கொள்கையில் உள்ள பிளவுகளின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, இது தொடர்பான எந்த சூழ்நிலையையும் நிராகரிக்க முடியாது.

எவ்வாறாயினும், இந்த சம்பவத்தின் ஆரம்ப கட்டத்தில் கூட, துல்லியமான அரசியல் கொள்கை முடிவுகளை எடுக்க முடியும். படுகொலை முயற்சி என்பது அமெரிக்க அரசியல் அமைப்பில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமூகத்தின் நெருக்கடியின் ஒரு குவிந்த வெளிப்பாடாக இருக்கிறது.

அமெரிக்காவில் ஊடுருவி இருக்கும் ஆழமான அரசியல் மற்றும் சமூக பிளவுகளை அம்பலப்படுத்தும் ஒரு நிகழ்வை எப்பொழுதும் எதிர்கொள்ளும்போது, ​​அரசியல் ஸ்தாபனமும் ஊடகங்களும் வெற்று மற்றும் சுய-ஏமாற்றும் தந்திரங்களில் தஞ்சம் அடைகின்றன. ஞாயிற்றுக்கிழமை பைடெனின் அறிக்கையில், 'அமெரிக்காவில் இதுபோன்ற வன்முறைகளுக்கோ அல்லது எந்த வன்முறைகளுக்கோ இடமில்லை' என்று சுருக்கிக் கூறப்பட்டுள்ளன.

இது யதார்த்தத்துடன் எந்த தொடர்பும் இல்லாத அமெரிக்காவின் டிஸ்னிலேண்ட் படமாகும். 2022 ஆம் ஆண்டில், அமெரிக்காவில் இடம்பெற்ற கொலைகளின் எண்ணிக்கை 21,593 ஆக இருந்தது. 'பெரும் உயிரிழப்பு நிகழ்வுகள்' என்று அழைக்கப்படும் கொலைகளில் ஒரு குறிப்பிட்ட வகை உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்கப் பொலிசார் 1,000 பேரை ஏதோ ஒரு சாக்குப்போக்கில் கொலை செய்கிறார்கள்.

ஆனால் உலகெங்கிலும் வன்முறையைத் தூண்டும் அமெரிக்காவின் முதன்மை பாத்திரத்துடன், குடும்ப வன்முறை பிரிக்கமுடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளது. கடந்த 30 ஆண்டுகளில், அமெரிக்க அரசாங்கத்தின் நேரடி அல்லது மறைமுக நடவடிக்கைகளின் விளைவாக கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை மில்லியன் கணக்கில் உள்ளது.

அரசியல் வன்முறைச் செயல்கள் ஒரு பிறழ்வு என்று பைடென் பலமுறை அறிவித்தார்: 'இது நாம் அல்ல' என்பது அவருக்குப் பிடித்த பல்லவி. இந்த அறிக்கை பைடெனின் முதுமைக்கு மிகவும் உறுதியான ஆதாரமாக இருக்கலாம். அவரது சொந்த வாழ்நாளில் அவர் பல அரசியல் படுகொலைகளின் அனுபவத்தை கடந்து வந்துள்ளார், அதில் 1963 இல் ஜனாதிபதி ஜான் எஃப். கென்னடி, 1965 இல் மால்கம் எக்ஸ், மார்ட்டின் லூதர் கிங் மற்றும் 1968 இல் செனட்டர் ராபர்ட் எஃப். கென்னடி ஆகியோர் அரசியல் ரீதியாக முக்கியமானவர்கள், இந்த நான்கு படுகொலைகளும் அரச சதித்திட்டங்களை உள்ளடக்கியது.

இந்த சம்பவத்தில், ஜனநாயகக் கட்சி மற்றும் பைடெனின் பிரதிபலிப்பு, குறிப்பாக, படுகொலை முயற்சிக்கு முற்றிலும் கோழைத்தனமானது மற்றும் நேர்மையற்றது. இந்தத் தோல்வியுற்ற தாக்குதலுக்குப் பிறகு, தாக்குபவர்களின் இலக்கு அல்லது நோக்கங்கள் எதுவாக இருந்தாலும், தனிநபர் வன்முறை எந்த முற்போக்கான நோக்கத்திற்கும் உதவாது என்பதை, உறுதிப்படுத்துவதுக்கு இது போதுமானதாக இருக்கும்.

ஆனால், ஜனநாயகக் கட்சியினர் ஐக்கியம், பாராட்டு, பாசிச முன்னாள் ஜனாதிபதிக்கான பாசத்தின் வெளிப்பாடுகள் ஆகியவற்றிற்கு அப்பால் செல்கின்றனர். பைடென் சனிக்கிழமை இரவு தனது கருத்துக்களில் 'டொனால்ட்' என்று திரும்பத் திரும்பக் குறிப்பிட்டார். வலதுசாரி சக்திகளின் வன்முறைத் தாக்குதல்களுக்கு ட்ரம்ப் பலமுறை அழைப்பு விடுத்து ஆதரவளித்து வருகிறார் என்பதை, எந்த ஜனநாயகக் கட்சியினரும் வெளிப்படையாக சுட்டிக்காட்டவில்லை.

2017 இல், வர்ஜீனியாவின் சார்லட்டஸ்வில்லியில் வெள்ளை மேலாதிக்க அணிவகுப்பை நடத்திய நவ நாசிக்கள் மற்றும் பாசிஸ்டுகளை டிரம்ப் பாராட்டினார். 2020 ஆம் ஆண்டில், COVID-19 முடக்குதல்களுக்கு எதிராக ட்ரம்ப் மாநில தலைநகரங்களிலுள்ள அரசாங்க அலுவலகங்கள் மீது தொடர்ச்சியான ஆயுதமேந்திய ஆயுததாரிகளின் தாக்குதல்களைத் தூண்டினார். இது மிச்சிகன் கவர்னர் க்ரெட்சன் விட்மரை கடத்தி கொலை செய்யும் தோல்வியடைந்த முயற்சிக்கு வழிவகுத்தது. 2020 ஆம் ஆண்டில், விஸ்கான்சினில் உள்ள கெனோஷாவில் பொலிஸ் அட்டூழியத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது திட்டமிட்ட தாக்குதல் நடத்திய பாசிச இளைஞரான கைல் ரிட்டன்ஹவுஸின் கொடிய செயல்களை டிரம்ப் குறிப்பாக பாராட்டினார்.

அரசியல் வன்முறையின் உச்சக்கட்டம் ஜனவரி 6, 2021 அன்று நடந்தது. டிரம்ப்பால் வாஷிங்டனுக்கு வரவழைக்கப்பட்ட ஒரு குண்டர்கும்பல், பைடெனின் தேர்தல் வெற்றிக்கான சான்றிதழைத் தடுத்து, டிரம்பை சர்வாதிகாரி ஜனாதிபதி ஆக்குவதற்கான கடைசி முயற்சியாக, காங்கிரஸின் உறுப்பினர்களையும், ட்ரம்பின் சொந்த துணை ஜனாதிபதி மைக் பென்ஸைக் கூட கொல்லவோ அல்லது உயிருடன் பிடிக்கவோ முயன்று, காங்கிரஸ் கட்டிடமான கேபிட்டலுக்குள் நுழைந்தது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை பைடெனின் கருத்துக்கள் வெற்றுப் பேச்சுக்கள் மற்றும் அபத்தங்கள் நிறைந்தவையாக இருந்தன. 'வன்முறையை இயல்பாக்குவதை நாங்கள் அனுமதிக்க முடியாது,' என்று அவர் அறிவித்தார். 'அவரை அமைதிப்படுத்த வேண்டிய நேரம் இது,' கருத்து வேறுபாடுகள் எதுவாக இருந்தாலும், இது 'அமைதியான விவாதத்திற்கான' அரசியல் களமாக இருக்க வேண்டும் என்றார். 'நாங்கள் ஒரு அமெரிக்காவுக்காக ... கண்ணியம் மற்றும் கருணைக்காக நிற்கிறோம்' என்று அவர் குறிப்பிட்டார்.

கண்ணியம் மற்றும் கருணை.…. மருத்துவ இதழான தி லான்செட் வெளியிட்ட மதிப்பீடுகளின்படி, பைடென் நிர்வாகமானது முழு அரசியல் ஸ்தாபனத்துடன் கூட்டுச் சேர்ந்து, காஸாவில் கிட்டத்தட்ட 200,000 பேரைக் கொன்ற ஒரு இனப்படுகொலையை ஆதரித்து வருகிறது. அமெரிக்க ஏகாதிபத்தியம் வெளிநாட்டில் நடக்கும் கொலைகாரப் போர்களில் ஈடுபடுவது தவிர்க்க முடியாமல் அமெரிக்காவில் உள்ள அரசியல் சூழ்நிலையில் அதன் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

ட்ரம்ப் மீதான துப்பாக்கிச் சூட்டைப் பயன்படுத்தி, ஜனநாயகக் கட்சியினரே இந்த தாக்குதலைத் தூண்டியதாகக் குடியரசுக் கட்சியினர் தயக்கமின்றி குற்றம்சாட்டி இதற்கு பதிலளித்தனர். இதற்கு, ஜனநாயகக் கட்சி முதுகெலும்பற்ற சரணாகதியுடன் பதிலளிக்கிறது. ராய்ட்டர்ஸ் பத்திரிகையின் அறிக்கை, 'வரவிருக்கும் நாட்களில் ட்ரம்பை வாய்மொழியாகத் தாக்குவதற்குப் பதிலாக, வெள்ளை மாளிகை மற்றும் பைடெனின் பிரச்சாரம், இஸ்ரேல்-காசா மோதல் தொடர்பாக பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த போராட்டங்களால் உருவாக்கப்பட்ட குழப்பம் பற்றிய அவரது கடுமையான விமர்சனம் உட்பட, அனைத்து வகையான அரசியல் வன்முறைகளையும் கண்டிக்கும் ஜனாதிபதியின் வரலாற்றை உள்ளடக்கும் என்று பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரிகள் தெரிவித்தனர்' என்று குறிப்பிட்டது.

இதற்கு ஜனநாயகக் கட்சியினரின் பதில் இரண்டு மேலோட்டமான கருத்துக்களால் தூண்டப்படுகிறது. முதலில், அவர்கள் இன்னும் குடியரசுக் கட்சியினரின் ஆதரவையும் ஒத்துழைப்பையும் தக்கவைத்துக் கொள்ள முயல்கின்றனர். அத்தோடு, 2024 தேர்தல்களுக்குப் பிறகு, அவர்கள் அதிகாரத்தை எடுத்துக் கொண்டால், பைடென் மற்றும் ஜனநாயகக் கட்சியின் மைய முன்னுரிமையான உலகளாவிய போரைத் தொடர வேண்டும்.

இரண்டாவது, ஒரு சமூக வெடிப்பைத் தூண்டிவிடுமோ என்ற பயத்தில், அமெரிக்காவில் அரசியல் பிற்போக்குத்தனத்தின் நிலையான வளர்ச்சியை மூடிமறைக்க ஜனநாயகக் கட்சியினர் தொடர்ந்து முயன்று வருகின்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை பைடெனின் கருத்துக்களில் வியாபித்து இருந்தது என்னவென்றால், அமெரிக்காவின் முழு சமூக மற்றும் அரசியல் சூழ்நிலையும் சிதைந்து போகிறது என்ற ஆழ்ந்த அச்சம்தான்.

இதுவே ஞாயிற்றுக்கிழமை இரவு, பைடெனால் 'ஐக்கியத்துக்கு' திரும்பத் திரும்ப அழைக்கப்பட்ட இடைவிடாத அழைப்புகளை, ட்ரம்ப்பும் எழுப்பியிருந்தார். எவ்வாறாயினும், அமெரிக்காவைப் போன்ற வர்க்க விரோதங்களால் சிதைந்த ஒரு நாட்டில் 'ஐக்கியம்' இருக்க முடியாது. உலகப் போர் மற்றும் சர்வாதிகாரத்திற்குள் தலைகீழாகச் செல்லும் ஆளும் வர்க்கத்துடன் 'ஐக்கியம்' இருக்க முடியாது.

சோசலிச சமத்துவக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோசப் கிஷோர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட ஒரு அறிக்கையில், 'ஐக்கியத்துக்கான அழைப்பின் உண்மையான அர்த்தம் ஆளும் வர்க்கத்திற்குள் ஒற்றுமைக்கான அழைப்பு ஆகும்' என்று கூறினார்.

ஐக்கியத்திற்கான அவரது அழைப்பில், பைடென், பெருநிறுவன மற்றும் நிதிய தன்னலக்குழுவிற்குள் உள்ள கன்னை பிளவுகள் மற்றும் அத்தியாவசிய கூறுகளான வெளிநாட்டு மீதான போர் மற்றும் உள்நாட்டில் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான போர் உட்பட ஒட்டுமொத்த ஆளும் வர்க்கத்தின் நலன்களை கீழறுக்க அனுமதிக்க வேண்டாம் என்று குடியரசுக் கட்சியிடம் கெஞ்சுகிறார். அத்தகைய 'ஐக்கியத்தை' அடைவதற்கு ஜனநாயகக் கட்சியினர் ஒவ்வொரு சமரசத்தையும் செய்யத் தயாராக உள்ளனர்.

அமெரிக்க ஜனநாயகத்தின் நீடித்த நெருக்கடி மணிக்கணக்கில் தீவிரமடைகிறது. முக்கியமான பிரச்சினை தேசத்தின் 'ஐக்கியம்' அல்ல, மாறாக அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியம் ஆகும்.

அமெரிக்க ஜனநாயகத்தின் நெருக்கடிக்கான ஒரே தீர்வு, தொழிலாள வர்க்கம் அதன் சொந்த நலன்களின் அடிப்படையில் சுயாதீனமான நடவடிக்கை மூலம் தலையிடுவதும், புதிய போராட்ட அமைப்புகளை கட்டியெழுப்புவதும் மற்றும் ஒரு புரட்சிகர சோசலிச வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதும் ஆகும்.


Loading