முன்னோக்கு

பென்டகனின் சாதனை செலவின மசோதாவும் அமெரிக்காவில் மறைக்கப்பட்டுவரும் மீள் அணுஆயுதமயமாக்கலும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

இந்த வாரம், அமெரிக்க பிரதிநிதிகள் சபை, மீண்டுமொருமுறை, உலகெங்கிலும் போருக்கு நிதியளிக்க சாதனையளவிலான தொகையை ஒதுக்க பெரும்பான்மையுடன் வாக்களித்துள்ளது. கடந்த புதனன்று, பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தேசிய பாதுகாப்பு அங்கீகார சட்டம் (NDAA) 895 பில்லியன் டாலரில் நிற்கிறது. பொதுவாக கூறப்போனால், இது, மனித வரலாற்றில் எந்த நாட்டிலும் இல்லாத மிகப்பெரிய இராணுவ வரவு செலவுத் திட்டமாகும்.

மினிட்மேன் III கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையின் மேல் அமெரிக்க படையினர்கள் புதுப்பிக்கப்பட்ட அணு ஆயுதங்களை பொருத்துகின்றனர். [AP Photo/Eric Draper]

வருடாந்தர இராணுவ நிதிக்கான இந்த மசோதா, செனட்டால் பரிசீலிக்கப்பட்டு, மாத இறுதியில் சட்டமாக கையொப்பமிட திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு தசாப்தத்திற்கு முன்பு 607 பில்லியன் டாலர்களில் இருந்த இராணுவ நிதி, தற்போது 47 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இந்த மசோதாவில் என்ன இருக்கிறது அல்லது வரலாற்று முன்னுதாரணத்துடன் அது எவ்வாறு ஒப்பிடப்படுகிறது என்பது பற்றி சராசரி அமெரிக்கருக்கு முற்றிலும் மறைக்கப்பட்டுள்ளது. இது, வேண்டுமென்றே, சிப்பாய்களின் குழந்தைகளைப் பராமரிப்பது தொடர்பாக, ஜனநாயகக் கட்சியினருக்கும் குடியரசுக் கட்சியினருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் பற்றிய மேலோட்டமான விவாதத்திற்கு அப்பால், மசோதாவின் உண்மையான உள்ளடக்கத்தில் மொத்த இருட்டடிப்பு உள்ளது.

அமெரிக்க இராணுவ திட்டமிடுபவர்கள் “புதிய அணுஆயுத யுகம்” என்று அழைக்கும் அமெரிக்க அணு ஆயுதக் களஞ்சியத்தை விரிவுபடுத்துதல் மற்றும் நவீனமயமாக்குதல் ஆகியவற்றின் மையக் கொள்கைக்கு இது இரட்டிப்பாக உண்மை. எந்த ஒரு பிரதான அமெரிக்கப் பத்திரிகையிலும் ஒரு கட்டுரை கூட, அணு ஆயுதங்களை விரிவுபடுத்தும் மசோதாவின் திட்டங்களைப் பற்றிய ஆய்வுகள் விரிவாக இல்லை.

இந்த மசோதா மீதான பிரதிநிதிகள் சபை கமிட்டியினரின் கருத்துக்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட யதார்த்தம் வெளிப்படுகிறது. இதனை பெரும்பான்மையான பொதுமக்களால் அறிந்துகொள்ள முடியாது.

பிரதிநிதிகள் சபை ஆயுத சேவைக் குழுவில் உள்ள ஜனநாயகக் கட்சியினரின் மசோதாவைப்பற்றிய உத்தியோகபூர்வமான சுருக்கம், அணுஆயுத உருவாக்கம் மற்றும் அணுஆயுத நவீனமயமாக்கல் முயற்சிகளுக்கு மசோதாவின் நிதியுதவியில் கவனம் செலுத்துவதை முக்கியமாக எடுத்துக்காட்டுகிறது. மேலும், தரை, கடல் மற்றும் ஆகாய வழியிலான அமெரிக்க அணுஆயுத முக்கோணத் திட்டத்தை நவீனமயமாக்குவதும் அடங்கியுள்ளது.

இந்த மசோதா, அதன் உத்தியோகபூர்வ கமிட்டியின் சுருக்கத்தின்படி, “அணுஆயுத அளவுக்கான தேவைகள் உட்பட, இரண்டு நெருங்கிய அணுஆயுத போட்டியாளர்களின் ஒரே நேரத்திலான தாக்குதலைத் தடுக்கவும், அதனை தோற்கடிக்கவும் பாதுகாப்பு துறையினருக்கு (DOD) திட்டம் தேவைப்படுகிறது.”

இந்த மசோதாவில், அமெரிக்க அணு ஆயுதக் களஞ்சியத்தின் ஒவ்வொரு கூறுகளையும் நவீனமயமாக்குவதற்கான விதிகள் உள்ளன. அணுஆயுத நீர்மூழ்கிக் கப்பல்கள் முதற்கொண்டு, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் மற்றும் அணு குண்டுவீச்சுகள் வரை, மேலும், “கப்பல்கள் அல்லது நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்து அணுஆயுதத்தை ஏந்திச்செல்லும் ஏவுகணையின்” முற்றிலும் புதிய வகை அணுஆயுதங்களை உருவாக்குவதற்கு களமிறக்கப்பட்டிருக்கிறது.

கடலில் இருந்து ஏவப்படும் அணு ஆயுத ஏவுகணையைக் கொண்டிருக்கும் கடற்படையை தொடர்ந்தும் மேம்படுத்துவதற்கு 252 மில்லியன் டாலர்களை இந்த மசோதா அங்கீகரிக்கிறது. இது முழுமையாக, B-52 மூலோபாய குண்டுவீச்சு விமானங்களில் அணுஆயுத திறன்கள் கொண்டிருப்பதை குறிப்பிடுகிறது. “400 க்கும் குறையாமல் பதிலடி கொடுக்க எச்சரிக்கையுடன் கூடிய யு.எஸ் கண்டம் விட்டு கண்டம் பாயும் தொலைதூர ஏவுகணைகளை (ICBM)  நிலைநிறுத்த வேண்டியுள்ளது.” மேலும், “450 சென்டினல் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளைப் பெற்று நிலைநிறுத்துவதற்கு” ஒரு திட்டத்தையும் இந்த மசோதா கட்டளையிடுகிறது.

கடந்த அக்டோபரில், தேசிய பாதுகாப்பு அங்கீகார சட்டம் வரைவு செய்யப்பட்டுக் கொண்டிருந்த சமயத்தில், நியூ யோர்க் டைம்ஸ், “ஒரு கொந்தளிப்பான புதிய அணுஆயுத யுகத்திற்கான நவீன ஆயுத தளவாடங்களை” உருவாக்குவதன் மூலமாக “அமெரிக்காவை மீண்டும் அணுஆயுதமாக்குவதற்கு” அர்ப்பணிக்கப்பட்ட இரகசிய திட்டம் குறித்து 100 க்கும் அதிகமான நேர்காணல்களின் அடிப்படையில் ஒரு பாரிய சிறப்புக் கட்டுரையை வெளியிட்டது.

“நீர்மூழ்கிக் கப்பல்கள் கட்டப்படும் இடத்தில் அல்லது ஏவுகணை குழிகள் தோண்டப்படும் இடத்தில் நீங்கள் வசிக்கவில்லை என்றால், அங்கு என்ன நடக்கிறது என்பதை நீங்கள் அறியாமல் இருப்பதற்கு அங்கே ஒரு நல்ல வாய்ப்பு இருக்கிறது,” என்று டைம்ஸ் குறிப்பிட்டது. “காங்கிரஸ் விசாரணைகள் மற்றும் மூலோபாய ஆவணங்களுக்கு வெளியே, அல்லது செலவிடப்படும் பெரும் தொகைக்கு வெளியே, இந்த திட்டம் குறித்து மத்திய கூட்டாட்சி அரசாங்கம் பகிரங்கமாக எதையும் கூறவில்லை. அங்கு குறிப்பிடத்தக்க விவாதம் எதுவும் நடைபெறவில்லை. பில்லியன் டாலர் திட்டங்கள் டறிய முடியாத வகையில் நகர்கின்றன” என்று டைம்ஸ் மேலும் குறிப்பிட்டது.

“கண்கானிப்பின் கீழ்” நிகழும் அணுஆயுத உருவாக்கம் மற்றும் அர்த்தமுள்ள விவாதம் இல்லாமல் இது நடந்து வருவது குறித்து டைம்ஸ் எழுதியுள்ள அனைத்தும் இந்த இந்தாண்டின் தேசிய பாதுகாப்பு அங்கீகார சட்டம் பற்றிய செய்திகளுக்கு பெருமளவில் பொருந்தும். மேலும், அது நிறைவேற்றப்பட்டது பற்றிய சுருக்கமான அறிவிப்பை, டைம்ஸ் பத்திரிகை பக்கம் 19 இல் மறைத்து வெளியிட்டிருந்தது.

அக்டோபர் மாதம் வெளியான விரிவான நியூ யோர்க் டைம்ஸ் கட்டுரையும், அணுஆயுதப் போரின் கொடூரமான விளைவுகளை விவரிக்கும் அதனுடன் தொடர்புடைய தொடர் கட்டுரைகளும் உடனடியாக புதைக்கப்பட்டன. பிரதான செய்தித்தாள்களில், கலந்துரையாடல் நிகழ்ச்சிகளில் அல்லது அமெரிக்க அரசியல்வாதிகளின் அறிக்கைகளில், அதிகாரப்பூர்வ விளக்க ஆவணங்களுக்கு வெளியே, இராணுவ செலவின மசோதா பற்றிய எந்த விவாதத்திலும் அணுஆயுத உருவாக்கம்பற்றிய குறிப்புகள் இல்லை.

“இரண்டாவது அணுஆயுத யுகத்தின்” திட்டம் நிர்வாகங்களைக் கடந்துள்ளது. அமெரிக்க அரசுக்குள் அடிக்கடி நிலவும் கடுமையான கன்னை மோதல்களுக்கு அப்பால், ஒபாமாவின் கீழ் முதன்முதலில் 2010 இல் கருத்தாக்கம் செய்யப்பட்டு 2014 இல் பெருமளவில் தொடங்கப்பட்ட அரை-இரகசிய அணுஆயுத நவீனமயமாக்கல் திட்டம், ட்ரம்ப், பைடென் மற்றும் இரண்டாவது ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ் தொடர்ந்து துரிதப்படுத்தப்படுகிறது.

வெறுமனே செய்தி ஊடகங்களில் ஒருபோதும் குறிப்பிடப்படாததன் மூலமாக, பார்வையில் இருந்து மறைக்கப்படும் அணுஆயுத கட்டமைப்பின் கூறுகள், உண்மையிலேயே இரகசியமான திட்டங்களுடன் கைகோர்த்து செல்கின்றன.

இத்தகைய இரகசியத் திட்டங்களில், ஆகஸ்ட் மாதம் டைம்ஸ் செய்தி வெளியிட்ட “அணுஆயுத வேலைவாய்ப்பு வழிகாட்டுதலுக்கான” புதுப்பித்தலும் உள்ளது. “சீனா, ரஷ்யா மற்றும் வட கொரியாவின் சாத்தியமான ஒருங்கிணைந்த அணுஆயுத சவால்களுக்கு அமெரிக்காவை புதிதாக தயார்படுத்தும்” அணுஆயுத வேலைவாய்ப்பு வழிகாட்டல் என்று அழைக்கப்படும் திருத்தப்பட்ட மூலோபாயத்திற்கு திரு. பைடென் ஒப்புதல் அளித்ததை, வெள்ளை மாளிகை ஒருபோதும் அறிவிக்கவில்லை” என்று அப்பத்திரிகை எழுதியது.

ஆனால், இரகசிய மூலோபாய ஆவணத்தின் உள்ளடக்கங்கள் ஜூன் மாதம் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் ஆயுதக் கட்டுப்பாட்டுக்கான மூத்த இயக்குனரான பிரனய் வாடியால் எழுப்பப்பட்டன. அவர் அமெரிக்காவை தளமாகக் கொண்ட சிந்தனைக் குழுவிடம் ஆற்றிய உரையில், அணு ஆயுதங்களுக்கான “புதிய சகாப்தத்தை” அறிவித்தார். அதில் அமெரிக்கா “எண்ணிக்கை கட்டுப்பாடுகள் இல்லாமல்” அணுஆயுதங்களை நிலைநிறுத்தும் என்றும் அறிவித்தார்.

மேலும், “நாங்கள் எங்கள் அணுஆயுத முக்கோண தளங்களான தரை, ஆகாயம் மற்றும் கடல் தளங்களின் ஒவ்வொரு பகுதியையும் நவீனமயமாக்குகிறோம். எங்கள் அணுஆயுத கட்டளை கட்டுப்பாடு மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகளை மேம்படுத்துகிறோம். மேலும் எங்கள் அணுஆயுத நிறுவனத்தில் முதலீடு செய்கிறோம்” என்று வாடி அறிவித்தார்.

அமெரிக்காவில் பாரிய இராணுவ செலவின அதிகரிப்பு உலகின் ஒவ்வொரு நாட்டிலும் பிரதிபலிக்கிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீத இலக்கில் இருந்து ஏறத்தாழ 4 சதவீதத்திற்கு மாற்றி, இராணுவச் செலவுகளை இரட்டிப்பாக்கும் திட்டங்களை ஐரோப்பிய அரசியல்வாதிகள் செயலூக்கத்துடன் விவாதித்து வருகின்றனர்.

“போர்க்கால மனநிலைக்கு மாற வேண்டிய நேரம் இது” என்று நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ருட்டே கடந்த வியாழக்கிழமை கூறினார். “மேலும் எங்கள் பாதுகாப்பிற்கான உற்பத்திக்கு, பாதுகாப்பு செலவினங்களில் செயல்திறன்களை அதிகரியுங்கள்” என்று ருட்டே மேலும் கூறிப்பிட்டார்.

நிச்சயமாக, இந்த ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டால் என்ன நடக்கும் என்பதுதான் மீள் அணுஆயுதமயமாக்கலின் மிகப்பெரிய தாக்கமாகும். ஆனால், இந்த பேரழிவுகரமான காட்சி இல்லாவிட்டாலும் கூட, உலகளாவிய இராணுவ செலவினங்களில் முன்னொருபோதும் இல்லாத அதிகரிப்பின் பாகமாக, பல ட்ரில்லியன் டாலர் மதிப்பிலான நவீனமயமாக்கல் திட்டம் மிகவும் நீண்டகால சமூக விளைவுகளைக் கொண்டுள்ளது.

உலகளாவிய இராணுவ மீள்ஆயுதமயமாக்கலுக்கான பொது நிதிகள், சமூக திட்டங்களை எவ்வாறு பாதிக்கும் என்பதை விளக்கி இந்தாண்டின் தொடக்கத்தில் புளூம்பேர்க் ஒரு கட்டுரையை வெளியிட்டது. “உலகளாவிய மீள்ஆயுதமயமாக்கலின் ஒரு புதிய சகாப்தம் வேகம் பெற்று வருகிறது. இது மேற்கத்திய அரசாங்கங்கள், பரந்த செலவுகளையும், சில கடுமையான முடிவுகளையும் எடுத்துவருவதை அர்த்தப்படுத்தும்,” என்று அக்கட்டுரை அறிவிக்கிறது.

“பனிப்போருக்குப் பிந்தைய ‘அமைதி இடைவெளி’ முடிவுக்கு வருகிறது” என்றும், இது “பொது நிதியில் மாற்றத்தை” ஏற்படுத்தும் என்றும் ஒரு பகுப்பாய்வாளர் கூறியதை புளூம்பேர்க் மேற்கோள் காட்டியது.

“ஒரு இராணுவமயமாக்கப்பட்ட உலகம், வரையறுக்கப்பட்ட வரி வருவாய்கள் மற்றும் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமான நலன்புரி மற்றும் சுகாதாரத் தேவைகளுடன் அத்தகைய கடப்பாடுகளை எவ்வாறு சமரசம் செய்ய முடியும் என்பது வரவிருக்கும் ஆண்டுகளில் ஒரு தீவிரமான அரசியல் கேள்வியாக அமைகிறது” என்று புளூம்பேர்க் மேலும் தெரிவித்தது.

இதன் உட்குறிப்பு தெளிவாக உள்ளது: உலகெங்கிலும் உள்ள நாடுகள் தங்கள் இராணுவங்களை பாரியளவில் விரிவுபடுத்தி வருகையில், அமெரிக்காவில் சமூகப் பாதுகாப்பு, மருத்துவப் பாதுகாப்பு, மருத்துவ உதவி உட்பட அடித்தளத்தில் உள்ள சமூகநலத் திட்டங்கள் வெட்டித் தள்ளப்படும்.

ட்ரம்பின் முதல் பதவிக்காலத்தின் கீழிருந்த இராணுவ செலவினங்களில், முன்னொருபோதும் இல்லாத வளர்ச்சியைத் தொடர உறுதியளித்துள்ள வரவிருக்கும் ட்ரம்ப் நிர்வாகம், சமூக செலவினங்களை எலும்பு வரை வெட்டித் தள்ளுவதற்கு சூளுரைத்துள்ளது. 400 பில்லியன் டாலருக்கும் அதிகமாக நிகர சொத்து மதிப்பை கொண்டிருக்கும் எலோன் மஸ்க்கின் தலைமையின் கீழ், ட்ரம்ப் நிர்வாகத்தின் புதிய அரசாங்க திணைக்களம் (DOGE)” எல்லாவற்றையும் வெட்டித் தள்ளுவதற்கான திட்டத்தை வைத்துள்ளது.

“மருத்துவ காப்பீடு, மருத்துவ உதவி, சமூக பாதுகாப்பிற்கான அந்தப் பணம் எவ்வாறு செலவிடப்படுகிறது என்பதைப் பாருங்கள்” என்று செயல்திறன் திணைக்களத்திற்கு முன்மொழியப்பட்ட இணை இயக்குநரான விவேக் ராமசாமி கூறியுள்ளார். “நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்கள் சேமிப்பில் இருந்து பிரித்தெடுக்கப்பட வேண்டும்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இதற்கிடையில், ஜனநாயகக் கட்சியின் “முற்போக்கு” பிரிவானது, ட்ரம்பின் புதிய நிர்வாகத்திற்கு நம்பகத்தன்மையை அளித்து வருகிறது. “எலோன் மஸ்க் சொல்வது சரிதான்,” என்று அறிவித்த செனட்டர் பேர்ணி சாண்டர்ஸ், மிகப் பெரிய அமெரிக்க இராணுவ ஒப்பந்ததாரரின் தலைமையில் உள்ள அரசாங்க செயல்திறன் திணைக்களம், எப்படியாவது இராணுவச் செலவினங்கள் ஆயுத உற்பத்தியாளர்களுக்கு குறைந்த லாபத்தை தரும் என்று அபத்தமாகக் கூறினார்.

“ஜனநாயகக் கட்சியினர் அரசாங்க செயல்திறன் திணைக்களத்துடன் இணைந்து வேலை செய்ய முடியும்,” என்று பிரகடனப்படுத்திய சக “முற்போக்குவாதியான” ரோ கன்னா, “அமெரிக்கா உலகின் மிகச்சிறந்த இராணுவத்தையும், எமது எதிரிகளிடமிருந்து வரும் அதிநவீன அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வளங்களையும், கொண்டிருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்று வலியுறுத்தினார். சாண்டர்ஸ் மற்றும் கன்னா இருவருமே உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க போர் மற்றும் சீனாவுக்கு எதிரான ஆக்ரோஷமான வர்த்தகப் போர் நடவடிக்கைகளின் ஆர்வமுள்ள ஆதரவாளர்கள் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

வருங்கால சர்வாதிகாரி டொனால்ட் ட்ரம்ப் தொடங்கி ஜனநாயகக் கட்சியின் அனைத்துப் பிரிவுகள் வரை, ஒட்டுமொத்த அமெரிக்க அரசியல் ஸ்தாபகமும், பாரிய அமெரிக்க இராணுவ மீள்ஆயுதமயமாக்கலை ஆதரிக்கின்றன. பைடெனின் வெள்ளை மாளிகையின் வார்த்தைகளில் கூறுவதானால், அணுஆயுத ஆயத்தப்படுத்தல் என்பது “அடித்தளமாக” மற்றும் “தேசத்திற்கான ஒரு முதன்மையான முன்னுரிமையாக” உள்ளது.

சர்வாதிகாரியாக வரவிருக்கும் டொனால்ட் ட்ரம்பின் கீழ், அமெரிக்க இராணுவத்திற்கு பாரிய நிதியளிக்கும் இந்த மசோதா நிறைவேற்றப்படுவதானது, இராணுவக் கட்டமைப்பிற்கு பணம் செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்ட தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான இரண்டு கட்சிகளின் தாக்குதலின் மற்றொரு படியைக் குறிக்கும்.

இக்காரணத்தினால், போருக்கு எதிரான போராட்டமானது தொழிலாள வர்க்கத்தின் சமூகப், பொருளாதார உரிமைகளைக் காக்கும் போராட்டத்தில் இருந்து பிரிக்க முடியாதது ஆகும். உலகப் போர், சர்வாதிகாரம் மற்றும் பாரிய சமூக செலவின வெட்டு நடவடிக்கைகளுக்கான ஆளும் வர்க்கங்களின் திட்டங்கள், ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தில் ஒரு பாரிய இயக்கத்தைக் கட்டியெழுப்புவதன் மூலமாக எதிர்கொள்ளப்பட வேண்டும்.

Loading