முன்னோக்கு

எலான் மஸ்க்கின் சொத்துமதிப்பு அரை டிரில்லியன் டாலர்களை நெருங்குகிறது: முதலாளித்துவமும் தன்னலக்குழுவும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

எலோன் மஸ்க் டிசம்பர் 7, 2024 சனிக்கிழமை பாரிஸில் உள்ள நோட்ரே டேம் தேவாலயத்திற்குள் வருகிறார். [AP Photo/Thibault Camus]

டெஸ்லா (Tesla), ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) மற்றும் சமூக ஊடக தளமான எக்ஸ் (X) (ட்விட்டர்) ஆகியவற்றின் உரிமையாளர் எலான் மஸ்க்கின் (Elon Musk) சொத்து மதிப்பு வேகமாக அரை டிரில்லியன் டாலர்களை நெருங்கி வருவதாக ஃபோர்ப்ஸ் இதழின் சமீபத்திய மதிப்பீடு தெரிவிக்கிறது. டொனால்ட் டிரம்ப் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு வாரங்களில் ஏற்பட்ட இந்த அதிகரிப்புடன், கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் மஸ்க்கின் தனிப்பட்ட சொத்து மதிப்பு சுமார் $180 பில்லியன் டாலர் அதிகரித்து $442 பில்லியன் டாலராக உள்ளது.

மஸ்க்கின் நிகர சொத்து மதிப்பு இப்போது அடுத்த பணக்காரரான ஜெஃப் பெசோஸை (Jeff Bezos) (அமேசான், $248 பில்லியன் டாலர்) விடக் கிட்டத்தட்ட $200 பில்லியன் டாலர் அதிகமாகும், அவரைத் தொடர்ந்து மார்க் ஜுக்கர்பெர்க் (Mark Zuckerberg) (மெட்டா, $223 பில்லியன் டாலர்) மற்றும் லாரி எலிசன் (Larry Ellison) (ஆரக்கிள், $195 பில்லியன் டாலர்) உள்ளனர். ஒட்டுமொத்தமாக, உலகின் 10 மிகப்பெரும் செல்வந்தர்கள் —ஒன்பது அமெரிக்கர்கள் அத்துடன் பிரான்ஸின் பேர்னார்ட் ஆர்னோ (Bernard Arnault)— வெறும் ஐந்தே வாரங்களில் தங்களின் செல்வ வளத்தை $305 பில்லியன் டாலர் அளவுக்கு அதிகரித்துள்ளனர். இது அவர்களின் ஒட்டுமொத்த மதிப்பையும் மலைப்பூட்டும் வகையில் $2.1 ட்ரில்லியன் டாலருக்கு கொண்டு வந்துள்ளது.

இந்த 10 தனிநபர்களின் மொத்த சொத்து மதிப்பு ஏழு நாடுகளைத் தவிர மற்ற அனைத்து நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை (GDP) விட அதிகம். இது உலகப் பட்டினியை முடிவுக்குக் கொண்டுவர மதிப்பிடப்பட்ட ஆண்டுச் செலவை விட 40 மடங்கும் மேலும் அமெரிக்காவில் வீடற்ற நிலையை முடிவுக்குக் கொண்டுவர மதிப்பிடப்பட்ட ஆண்டுச் செலவை விட 100 மடங்கும் அதிகமாகும்.

இந்த அடுக்கின் செல்வ வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள தீவிர அதிகரிப்பு, செல்வந்தர்களுக்கான வரிக் குறைப்பு, ஒழுங்குமுறை தளர்வு மற்றும் சமூக திட்டங்களுக்கான பெரும் வெட்டுக்கள் போன்ற ட்ரம்ப்பின் கொள்கைகள் மீதான எதிர்பார்ப்பால் தூண்டப்பட்டு, பங்குச் சந்தையில் நிலவும் ஊக வணிக வெறியுடன் நெருக்கமாக இணைந்துள்ளது. குறிப்பாக, டெஸ்லாவின் பங்கு விலை புதிய உச்சங்களை தொட்டுள்ளது, அதே வேளையில் தற்போது $350 பில்லியன் மதிப்புள்ள ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், இந்த மாதம் தனது பங்கு மதிப்புகளை உயர்த்த பங்கு மீள்கொள்முதலை மேற்கொண்டது. மஸ்க்கின் சொத்து மதிப்பில், தற்போது டெலவேர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள $50 பில்லியன் டெஸ்லா ஊதியத் தொகுப்பும் அடங்கும்.

மஸ்க் வரவிருக்கும் நிர்வாகத்தில் தன்னலக்குழு மற்றும் அரசின் இணைவை உருவகப்படுத்துகிறார். அவர் தனிப்பட்ட முறையில் ட்ரம்ப்பின் தேர்தலுக்கு சுமார் $277 மில்லியன் டாலர் பங்களித்துள்ளார், அதே வேளையில் தேர்தல் முடிவுகளில் செல்வாக்கு செலுத்த எக்ஸ் மீதான தனது கட்டுப்பாட்டைப் பயன்படுத்தினார். தற்போது ட்ரம்ப் நிர்வாகத்தின் கொள்கைகள் மற்றும் அமைப்பை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறார். மற்றொரு செல்வந்த பில்லியனர் விவேக் ராமசாமியுடன் இணைந்து, அரசாங்க செயல்திறன் துறை (Department of Government Efficiency - DOGE) என அழைக்கப்படும் அமைப்பின் இணைத் தலைவராக மஸ்க் நியமிக்கப்பட்டுள்ளார். $2 டிரில்லியன் ஃபெடரல் அரசு செலவினங்களை குறைப்பதே இத்துறையின் அறிவிக்கப்பட்ட இலக்காகும், இது குறிப்பிடத்தக்க வகையில் உலகின் முதல் 10 பில்லியனர்களின் மொத்த செல்வத்திற்கு ஏறக்குறைய சமமாகும்.

இந்தச் சிக்கன நடவடிக்கைகளின் இலக்குகள் மிகத் தெளிவாக உள்ளன. கடந்த வாரம், “வீடற்றோர்” என்ற சொல் ஒரு “தவறான பெயர்” என மஸ்க் அறிவித்தார். “வீடற்ற நபர்கள் உண்மையில் உயிரற்ற கண்களுடன், தெருக்களில் ஊசிகளும் மனித மலமும் கொண்ட வன்முறை போதை பிணங்கள்” என்று அவர் கூறினார். “வீடற்றோர் பிரச்சினையை எதிர்த்துப் போராட எவ்வளவு அதிகம் செலவிடப்படுகிறதோ, அவ்வளவும் வீணாகிறது” என்று மஸ்க் மேலும் கூறினார். இதற்கிடையில், இரண்டு முக்கிய அரசாங்கத் திட்டங்களான மருத்துவ காப்பீடு மற்றும் மருத்துவ உதவியிலிருந்து “நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களை” வெட்ட ராமசாமி முன்மொழிந்துள்ளார்.

ட்ரம்பின் பில்லியனர்கள் நிறைந்த அரசாங்கத்தில் மஸ்க் மற்றும் ராமசாமி இணைந்துள்ளனர் மேலும் வாரன் ஸ்டீபன்ஸ் (பிரிட்டனுக்கான தூதர்), ஸ்காட் பெசன்ட் (கருவூலச் செயலர்), லிண்டா மக்மஹோன் (கல்வித்துறை செயலர்), ஜாரெட் ஐசக்மன் (நாசா நிர்வாகி), ஹோவார்ட் லுட்னிக் (வர்த்தக செயலர்) மற்றும் ஸ்டீவன் விட்கோஃப் (மத்திய கிழக்கு தூதர்) போன்ற பிரமுகர்களும் இணைந்துள்ளனர்.

ஆரம்பத்தில் ட்ரம்பை ஆதரிக்காத பில்லியனர்கள் புதிய ஆட்சியுடன் தங்களை இணைத்துக் கொள்ள விரைந்துள்ளனர். நியூயார்க் டைம்ஸின் அறிக்கையின்படி, பெசோஸ், ஜுக்கர்பெர்க், சாம் ஆல்ட்மன் (OpenAI), டிம் குக் (ஆப்பிள்) மற்றும் செர்கெய் பிரின் (கூகுள்) உள்ளிட்ட சிலிக்கான் பள்ளத்தாக்கு தலைவர்கள், “கடந்த வாரத்தில் ஏழு இலக்க தொகை கொண்ட காசோலைகளுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி டொனால்ட் ஜே. ட்ரம்பின் பதவியேற்பு குழுவிற்கு ஆதரவு அளிப்பதாக உறுதியளித்துள்ளனர். இது பெரும்பாலும் மார்-அ-லாகோவிற்கு சென்று பணிந்து வணங்கும் யாத்திரையுடன் இணைந்ததாக இருந்தது.”

ட்ரம்பின் மீள்தேர்தலுக்கும், மஸ்க்கின் பங்கிற்கும் ஜனநாயகக் கட்சியின் எதிர்வினை சமமான அளவில் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. ஜனநாயகக் கட்சியானது வோல் ஸ்ட்ரீட் மற்றும் இராணுவவாதத்தின் கட்சியாக இருப்பதால், உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போரை தீவிரப்படுத்துவதே அதன் முதன்மை முன்னுரிமையாக உள்ளது என்ற உண்மையால் ட்ரம்பின் மீள்தேர்தல் சாத்தியமானது. ட்ரம்ப் வெள்ளை மாளிகைக்குத் திரும்புவதற்கு, முக்கிய ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் ஒத்துழைப்பு மற்றும் கூட்டுறவு வாக்குறுதிகளுடன் பதிலளித்துள்ளனர்.

மஸ்க் விஷயத்திலும் இதே போக்கு தொடர்கிறது. ரோ கன்னா போன்ற ஜனநாயகக் கட்சி பிரதிநிதிகளும், பெயரளவில் சுயேச்சையான செனட்டர் பெர்னி சாண்டர்ஸும் உலகின் மிகப் பெரிய பணக்காரர் மீது பெருமதிப்புக் காட்டி, மஸ்க்கின் அரசாங்க செயல்திறன் துறையுடன் “இணைந்து பணியாற்ற” உறுதியளித்துள்ளனர். பொலிடிகோ (Politico) சமீபத்தில் குறிப்பிட்டதாவது, “தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், மஸ்க்கை ஃபெடரல் அரசாங்கத்தின் முதன்மை வெட்டுக்கார தலைவராக நியமிக்க தயாராகும் நிலையில், சில சில ஆர்வம் நிரம்பிய ஜனநாயகக் கட்சியினர் இந்த பில்லியனர் தொழிலதிபரை நெருக்கமாக அணுகும் போக்கைக் கடைபிடிக்கின்றனர்.”

ட்ரம்ப்பின் வெற்றியைத் தொடர்ந்து உலக சோசலிச வலைத் தளம் தனது அறிக்கையில் விளக்கியபடி, இந்தத் தேர்தல் “அமெரிக்காவில் நிலவும் உண்மையான சமூக உறவுகளுக்கு ஏற்ப அமெரிக்க அரசியல் மேற்கட்டுமானத்தின் ஒரு வன்முறையான மறுஒழுங்கமைப்பை” குறிக்கிறது. ட்ரம்புடன் தங்களின் “ஒத்துழைப்பை” உறுதிப்படுத்துவதன் மூலம், ஜனநாயகக் கட்சியினர் ஆளும் வர்க்கத்தின் அடிப்படை நலன்களைப் பாதுகாப்பதில் அதன் ஒற்றுமையை பிரகடனம் செய்கின்றனர்.

உலகின் மிகப் பெரிய செல்வந்தர்கள் குவித்துள்ள தனிப்பட்ட செல்வங்கள் வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவிற்கு முன்னுதாரணமின்றி உள்ளன. அவற்றின் திரட்சியானது ஊக வணிகங்களின் கட்டுப்பாடற்ற வெறித்தனம், சமூகத் திட்டங்களை வெட்டுதல் மற்றும் வாழ்வின் அனைத்து அம்சங்களையும் தனியார் இலாபத்திற்கான உந்துதலுக்கு அடிபணியச் செய்தல் ஆகியவற்றுடன் பிணைந்துள்ளது.

“1996 ஆம் ஆண்டு டிசம்பர் 5 அன்று, அப்போது அமெரிக்க மத்திய வங்கி தலைவராக இருந்த அலன் கிரீன்ஸ்பேன், பங்கு மதிப்புகளை (share values) முன்னெடுக்கின்ற ‘அர்த்தமற்ற பொங்கும் உற்சாகம்’ குறித்து எச்சரித்தார். அதிலிருந்து கடந்த மூன்று தசாப்தங்களிலும், டோ ஜோன்ஸ் (Dow Jones) சராசரி குறியீடு 6,381 லிருந்த தொழில்துறை இந்த மாத தொடக்கத்தில் 45,000 க்கும் மேல் அதிகமான சாதனையளவு உயர்ந்துள்ளது (700 சதவீதம் அதிகமாக அதிகரித்துள்ளது).” நாஸ்டாக் (Nasdaq) 1,300 இல் இருந்து 20,000 க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது (1,100 சதவீதத்திற்கும் அதிகமான அதிகரிப்பு). பங்கு மதிப்புகளின் உயர்வு கிரிப்டோ நாணயங்கள் (cryptocurrencies) உள்ளிட்ட ஊகவணிக சொத்துக்களின் பெருக்கமும் இணைந்துள்ளது. கடந்த வாரம் ஒரு பிட்காயினின் (bitcoin) விலை முதல் முறையாக $100,000 ஐ தாண்டியுள்ளது.

குறிப்பாக 2008 நிதியியல் நெருக்கடிக்கு மத்தியிலும், மற்றும் இன்னும் அதிகமாக, 2020 இல் கோவிட்-19 பெருந்தொற்று நோயின் முதல் ஆண்டிலும், வங்கிகளைப் பிணையெடுப்பதற்காக ஆதாரவளங்களை முடிவில்லாமல் திருப்பிவிட்டதன் மூலமாக நிதியியல் சொத்துக்களின் விலை அதிகரிக்கப்பட்டு தொடர்ந்து நிலைத்திருக்கின்றன. பெடரல் ரிசர்வ் மற்றும் பிற உலக மத்திய வங்கிகளால் டிரில்லியன்கள் பணம் நேரடியாக நிதிய அமைப்புமுறைக்குள் செலுத்தப்பட்டதன் மூலம் அரசாங்கக் கடனில் அதிகரிப்பை உருவாக்கியுள்ளது.

இவை அனைத்திற்கும் தொழிலாள வர்க்கத்தின் மீதான ஒரு பாரிய தாக்குதல் மூலமாக விலை கொடுக்கப்பட வேண்டும், தொழிலாள வர்க்கத்தின் உழைப்பே அனைத்து மதிப்பிற்கும் ஆதாரமாக உள்ளது.

இதற்கு வெளிநாடுகளில் ஏகாதிபத்தியப் போரை பெருமளவில் தீவிரப்படுத்த வேண்டியுள்ளது. லெனின் விளக்கியபடி, ஏகாதிபத்தியம் என்பது “(1) ஏகபோக முதலாளித்துவம்; (2) ஒட்டுண்ணித்தனம் அல்லது சிதைந்து வரும் முதலாளித்துவம்; (3) மரணத் தருவாயில் உள்ள முதலாளித்துவம். சுதந்திரப் போட்டியை ஏகபோகத்தால் இடம்பெறச் செய்வதே ஏகாதிபத்தியத்தின் அடிப்படை பொருளாதார அம்சமாகும், இதுவே அதன் உச்சகட்டமாகும்.” “நாங்கள் யாரை வேண்டுமானாலும் ஆட்சிக் கவிழ்ப்பு செய்வோம்” என்று மஸ்க் கூறும்போது, அவர் உலக ஆதிக்கத்திற்கான பெருநிறுவன-நிதி மூலதனத்தின் முயற்சியை குறிப்பாக முரட்டுத்தனமான மற்றும் மடத்தனமான முறையில் வெளிப்படுத்துகிறார்.

சர்வாதிகாரமே இந்த சமூக யதார்த்தத்திற்கு ஏற்ற அரசியல் வடிவமாகும். இத்தாலியின் ஜியோர்ஜியா மெலோனி மற்றும் அர்ஜென்டினாவின் ஜேவியர் மிலேய் போன்ற தீவிர வலதுசாரி மற்றும் பாசிச தலைவர்களுடன் மஸ்க் கொண்டுள்ள நெருங்கிய உறவுகள், உலகளாவிய அளவில் எதேச்சதிகார சக்திகளுடன் நிதியத் தன்னலக்குழுக்கள் இணைவதற்கு சிறந்த உதாரணமாகும். தனது சமூக ஊடகத் தளமான எக்ஸில் (X), தன்னை “டார்க் மாகா”வின் (Dark Maga) ஆதரவாளர் என்று கூறிக்கொள்ளும் மஸ்க், நவ-நாஜிக்களை முன்னிலைப்படுத்தி, அந்தத் தளத்தை தீவிர வலதுசாரிகளின் வளர்ப்பிடமாக மாற்றியுள்ளார்.

இது வெறுமனே மஸ்க்கின் தனிப்பட்ட சார்புகளின் ஒரு பிரதிபலிப்பு அல்ல, மாறாக அதிகரித்து வரும் சமூக எதிர்ப்பை முகங்கொடுத்து வருகின்ற நிலையில், முதலாளித்துவ தன்னலக்குழுக்கள் சர்வாதிகாரத்தை நோக்கிச் செல்லும் பரந்த திருப்பத்தின் ஒரு வெளிப்பாடாகும்.

அமெரிக்காவில், இந்த மாற்றம், ட்ரம்பின் இரண்டாவது பதவிக்காலத்திற்கான திட்டங்களில் மிகத் தெளிவாக வெளிப்படுகிறது. இதில் உள்நாட்டில் இராணுவத்தை பயன்படுத்துவது, அடிப்படை ஜனநாயக உரிமைகளைத் தகர்ப்பது மற்றும் புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் அகதிகளை இலக்கில் வைப்பது ஆகியவை அடங்கும். இந்த நடவடிக்கைகளின் இறுதி இலக்கு “உள்ளே இருக்கும் எதிரி”, அதாவது தொழிலாள வர்க்கமாகும்.

இனி சமூகம் பணக்காரர்களின் சுமையைத் தாங்க முடியாது. அடிப்படை ஜனநாயக உரிமைகள் உட்பட எந்தப் பிரச்சினையையும் தீர்க்க, முதலாளித்துவ தன்னலக்குழுக்களின் செல்வம் மற்றும் அதிகாரத்தின் மீதான ஒரு நேரடித் தாக்குதல் இல்லாமல் மிக அடிப்படையான ஜனநாயக உரிமைகளின் பாதுகாப்பு உட்பட எந்தவொரு பிரச்சினையும் தீர்க்க முடியாது.

பில்லியனர்களின் பேரளவு செல்வம், உலகப் பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தும் வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களின் மீதான அவர்களின் ஏகபோக ஆதிக்கத்துடன் பிணைந்துள்ளது. மஸ்க், பெசோஸ், ஜுக்கர்பெர்க் மற்றும் மற்றவர்கள், நிதியியல் முதலைகளுடன் சேர்ந்து, பெரும் வளங்கள், உற்பத்தித் திறன் மற்றும் தொழில்நுட்பங்களைக் கட்டுப்படுத்துகின்றனர். இவை ஜனநாயக முறையில் நிர்வகிக்கப்பட்டால், ஒட்டுமொத்த மக்களின் வாழ்க்கைத் தரத்தை பெருமளவில் மேம்படுத்த முடியும். ஆனால், அதற்கு மாறாக, இவை தனியார் இலாபத்திற்கும், மனித குலம் முழுவதையும் அச்சுறுத்தும் போரைத் தீவிரப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படுகின்றன.

“அபரிகரித்தவர்களிடமிருந்து அபகரிப்பது” என்ற மார்க்ஸ் முன்வைத்த பணியை அடைவதற்கு நேரடியானதும் அவசரமான அவசியமாக மாறியுள்ளது. சோசலிச சமத்துவக் கட்சியானது (சோசக), முதலாளித்துவ தன்னலக்குழுக்களின் செல்வத்தைக் கைப்பற்றுவதற்கும், அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள மிகப்பெரும் நிறுவனங்களைப் பொது பயன்பாடுகளுக்கு மாற்றுவதற்கும் அழைப்பு விடுக்கின்றது. இந்த நிறுவனங்கள் தனியார் கரங்களிலிருந்து எடுக்கப்பட்டு இலாபத்திற்காக அல்லாமல் சமூகத் தேவையின் அடிப்படையில் ஜனநாயக ரீதியில் மறுசீரமைக்கப்பட வேண்டும்.

தொழில்நுட்ப மற்றும் உற்பத்தி சக்திகளில் உள்ளார்ந்த சாத்தியக்கூறுகளுக்கும், இந்த உற்பத்தி சக்திகள் மீதான தனியார் உடைமையை நிலைநிறுத்த தேவைப்படும் பிற்போக்கு மற்றும் பின்தங்கிய நிலைக்கும் இடையே பெரும் முரண்பாடு நிலவுகிறது. தொழிலாள வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதன் மூலமும், உலகப் பொருளாதார வாழ்க்கையை சோசலிச முறையில் மாற்றியமைப்பதன் மூலமும் இந்த முரண்பாடு களையப்பட்டு, மனிதகுலம் ஒரு முன்னோக்கி செல்லும் பாதை உறுதி செய்யப்பட வேண்டும்.

Loading