தோழர் எம்.பி. அல்பர்ட் அவர்களின் நினைவு நீடூழி வாழ்க!

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பகுதியான சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) நீண்டகால உறுப்பினரான தோழர் எம்.பி. அல்பர்ட் காலமாகி இன்றுடன் மூன்று மாதங்கள் ஆகின்றன. டிசம்பர் 9 திங்கட்கிழமை அதிகாலை அவர் இறக்கும் போது அவருக்கு 74 வயது கடந்திருந்தது. 1990களின் தொடக்கத்தில் சோ.ச.க.யின் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தில் (பு.க.க.) இணைந்த நாளிலிருந்து, மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக உலக சோசலிசப் புரட்சியின் ட்ரொட்ஸ்கிசக் கொடியைத் தொடர்ந்து உயர்த்திப் பிடித்து போராடிய ஒரு புரட்சிகரப் போராளியாக அவர் விளங்கினார்.

தோழர் எம்.பி. அல்பர்ட்

கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்த அவரது வாழ்க்கையின் இறுதி சில ஆண்டுகளில், சமூக சேவைகள் திணைக்களத்தால் நிர்வகிக்கப்படும் தெரணியகல முதியோர் இல்லமே அவரது வசிப்பிடமாக இருந்தது. தனது பொருளாதார மற்றும் உடல்ரீதியான பலவீனங்களை கருத்தில் கொண்டு, தோழர் அல்பர்ட் கட்சியுடன் கலந்துரையாடி, முதியோர் இல்லத்தில் வசிக்கத் தீர்மானித்தார்.

குடலில் ஏற்பட்ட தொற்று காரணமாக, 2024 நவம்பர் மாதம் அவிசாவளை மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட பின்னர் மீண்டும் முதியோர் இல்லத்திற்குத் திரும்பி குணமடைந்து வந்த அல்பர்ட், திடீரென காலமானார்.

அவர் சிறுவயது முதல் வாழ்ந்தது கேகாலை மாவட்டத்திற்குட்பட்ட ருவன்வெல்ல, மதமகொட கிராமத்திலாகும். அது விவசாயிகளையும் தோட்டத் தொழிலாளர்களையும் கொண்ட பிரதேசமாகும். தனது வாழ்வாதாரத்திற்காக, பழங்களையும் கிராமப்புற வீடுகளில் பயிரிடப்படும் விளைபொருட்களையும் நகரத்திற்கு எடுத்துச் சென்று விற்பனை செய்யும் சுயதொழிலை அல்பர்ட் தேர்ந்தெடுத்திருந்தார். அது அந்தப் பிரதேச கிராம மக்களின் பாரம்பரியமான தொழிலாகும்.

கொள்கை பிடிப்பான ஒருவராக அந்தப் பிரதேசத்தில் நற்பெயர் பெற்றிருந்த அல்பர்ட் தோழருக்கு, விற்பனைப் பொருட்களை வழங்குவதற்கு கிராமப்புற நண்பர்கள் மிகவும் விருப்பத்துடன் முன்வந்தனர். தனது கடினமான வாழ்வாதாரப் பணியின்போது சந்திக்கும் கிராம மக்கள், தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் சிறு வியாபாரிகளுடன் கட்சி மற்றும் அதன் சர்வதேசவாத வேலைத்திட்டம் குறித்து அவர் அடிக்கடி கலந்துரையாடியதையும், அவர்களிடையே கட்சி இலக்கியங்களை விநியோகித்ததையும் பிரதேசவாசிகள் பெரும் மகிழ்ச்சியுடன் நினைவுகூருகின்றனர்.

அவர் வாழ்ந்த ருவன்வெல்ல பிரதேசம் லங்கா சம சமாஜக் கட்சியின் (ல.ச.ச.க.) அரசியல் கோட்டையாகும். ல.ச.ச.க. தலைவர் என்.எம். பெரேரா பல தசாப்தங்களாகத் தொடர்ச்சியாக பாராளுமன்றத்தில் அந்தப் பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தினார். ல.ச.ச.க.யின் ஆரம்பகாலத்தில் அதற்கு இருந்த ஏகாதிபத்திய எதிர்ப்பு தன்மையும், பின்னர் அது ஒரு தொழிலாள வர்க்கக் கட்சியாக எடுத்துக்கொண்ட கொள்கைரீதியான நிலைப்பாடுகளும் காரணமாக, பெரும்பான்மையான தொழிலாளர்களும் கிராமப்புற வறிய மக்களும் தமது தேவைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியாக அதைப் பார்த்தனர்.

ல.ச.ச.க. தனது ட்ரொட்ஸ்கிச, சர்வதேசவாத கொள்கைகளை படிப்படியாகக் கைவிட்டு, சிங்கள தேசியவாதத்திற்கு மேலும் மேலும் தன்னைத் தகவமைத்துக்கொண்டு சீரழிந்து கொண்டிருந்த காலகட்டத்திலேயே அல்பர்ட் இளைஞராக வளர்ந்தார். தொழிலாள வர்க்கத்தின் வர்க்க சுயாதீனத்தை முற்றிலும் காட்டிக்கொடுத்து, அது 1964 இல் முதலாளித்துவ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் சேர்ந்துகொண்டது. எனினும், ல.ச.ச.க.யின் கடந்தகால நற்பெயர் காரணமாக, தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற வறிய மக்கள் மத்தியில் கணிசமான பகுதியினர் அப்போதும் அதன் மீது நம்பிக்கை வைத்திருந்தனர். இன மற்றும் சாதி ஒடுக்குமுறை உட்பட ஒடுக்கப்பட்ட சமூக நிலைமையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ல.ச.ச.க. மீது நம்பிக்கை வைத்திருந்த அந்தப் பகுதியைச் சேர்ந்தவராகவே இளம் அல்பர்ட் தோழர் இருந்தார்.

எவ்வாறாயினும், ல.ச.ச.க. தனது கிராமப்புறக் கிளைகளை முதலாளித்துவ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் படிப்படியாகக் கரைத்துவிட்ட நிலையில், அல்பர்ட் போன்ற இளைஞர்கள் அரசியல் ரீதியாகத் தனிமைப்படுத்தப்பட்டனர். தமது தேவைகளை இனியும் ல.ச.ச.க. மூலம் நனவாக்க முடியுமா என்ற சந்தேகம் அவர்களிடையே வளரத் தொடங்கியது.

ஏமாற்றமடைந்த தோழர் அல்பர்ட், ல.ச.ச.க.வின் காட்டிக்கொடுப்பினால் ஏற்பட்ட வெற்றிடத்திற்குள் நுழைய முயன்றுகொண்டிருந்த, மாவோயிசம், காஸ்ட்ரோயிசம், சே குவேராயிசம் மற்றும் சிங்கள ஜனரஞ்சகவாதம் ஆகியவற்றின் கலவையை அடிப்படையாகக் கொண்ட குட்டி முதலாளித்துவ தீவிரவாத இயக்கமாக ஆரம்பிக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) பக்கமே முதலில் திரும்பினார். அவர் ஜே.வி.பி. உடன் கலந்துரையாடிய போதிலும், ஒருபோதும் அதன் கருத்துக்களுடன் உடன்படவில்லை.

1990களின் தொடக்கத்தில் பு.க.க. தோழர்களைச் சந்தித்த பின்னர், அனைத்துலகக் குழுவின் முன்னோக்கு மற்றும் வேலைத்திட்டம், ல.ச.ச.க.வின் மாபெரும் காட்டிக்கொடுப்பின் வேர்கள், சோவியத் ஒன்றியம் தொடர்பான ட்ரொட்ஸ்கியின் பகுப்பாய்வு மற்றும் ஜே.வி.பி.யின் அரசியலை உள்ளடக்கிய கட்சியின் வரலாறு குறித்து நீண்ட கலந்துரையாடல்களில் அவர் ஈடுபட்டார்.

1950களின் தொடக்கத்தில் ட்ரொட்ஸ்கிச நான்காம் அகிலத்திற்குள் தோன்றிய ஒரு திருத்தல்வாதப் போக்கான பப்லோவாதத்திற்கு அடிபணிந்ததே ல.ச.ச.க.யின் காட்டிக்கொடுப்பிற்கான அடிப்படைக் காரணம் என்பதை அவர் புரிந்துகொண்டார். அப்போது ல.ச.ச.க. நான்காம் அகிலத்தின் இலங்கைப் பிரிவாக இருந்தது.

ட்ரொட்ஸ்கிசத்தின் அடித்தளமான நிரந்தரப் புரட்சிக் கோட்பாடு மற்றும் வேலைத்திட்டத்தையும், தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரப் பாத்திரத்தையும், சுயாதீன ட்ரொட்ஸ்கிசப் புரட்சிகரக் கட்சிகளைக் கட்டியெழுப்புவதன் அவசியத்தையும் நிராகரித்த பப்லோவாதிகள், மனித வரலாறானது ஏகாதிபத்திய முகாமுக்கும் “தனி நாட்டில் சோசலிசம்” என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்ட ஸ்ராலினிச அதிகாரத்துவ முகாமுக்கும் இடையிலான மோதலால் தீர்மானிக்கப்படுகிறது என்று வாதிட்டனர். உலக சோசலிசப் புரட்சியின் வேலைத்திட்டத்திற்கு எதிரான “தனி நாட்டில் சோசலிசம்” என்ற மார்க்சிச விரோதக் கோட்பாடு, லெனினின் மரணத்திற்குப் பின்னர் சோவியத் ஒன்றியத்தின் தலைமைக்கு வந்த ஜோசப் ஸ்ராலின் தலைமையிலான அதிகாரத்துவத்தால் உருவாக்கப்பட்டு முன்வைக்கப்பட்டது.

அப்போது சோவியத் ஒன்றியத்திலும் கிழக்கு ஐரோப்பாவிலும் இருந்த ஸ்ராலினிச அதிகாரத்துவங்கள் வரலாற்றுரீதியாக முற்போக்கான பாத்திரத்தை ஆற்றிக்கொண்டிருந்ததாக பப்லோவாதம் கோட்பாட்டுரீதியாக முன்வைத்தது. இது நான்காம் அகிலத்தினதும் ட்ரொட்ஸ்கிசத்தினதும் அடிப்படைப் பகுப்பாய்வுகளுக்கு முற்றிலும் முரணானதாகும். அந்தப் பகுப்பாய்வுகளின்படி, ஸ்ராலினிசம் என்பது “ஏகாதிபத்தியத்தின் ஒரு முகவர்” ஆகும்.

பப்லோவாத திருத்தல்வாதப் போக்கிற்கு எதிராக கொள்கைரீதியான ட்ரொட்ஸ்கிஸ்டுகள் நடத்திய போராட்டத்தின் விளைவாக, 1953 இல் நான்காம் அகிலம் பிளவுபட்டது. பப்லோவாதிகள் நான்காம் அகிலத்தின் சர்வதேச செயலகமாகவும், கொள்கைரீதியான ட்ரொட்ஸ்கிஸ்டுகள் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவாகவும் பிளவுபட்டனர் என்பதை அந்தக் கலந்துரையாடல்களில் அல்பர்ட் புரிந்துகொண்டார். இதன் போது ல.ச.ச.க. பப்லோவாதிகளுடன் இணைந்துகொண்டதையும், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பிரிவாக 1968 இல் பு.க.க. ஸ்தாபிக்கப்பட்டதையும் அறிந்துகொண்ட அவர், மார்க்சிச இயக்கத்தின் வரலாற்றை மிகுந்த ஆர்வத்துடன் கற்கத் தொடங்கினார்.

போலி இடது கட்சிகளும் சந்தர்ப்பவாத தொழிற்சங்கங்களும் அடிக்கடி கூறிவரும், “தொழிலாளர்களுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் பு.க.க. கூறுவது எதுவுமே புரிவதில்லை என்பதால் புரட்சிகரக் கட்சியைக் கட்டியெழுப்ப முடியாது” என்ற அபத்தத்தை பொய்யாக்கும் வகையில், முறையான பாடசாலைக் கல்வியைக்கூடப் பெறாத அல்பர்ட், கட்சிக்குள் மிக வேகமாக அரசியல் கல்வியைப் பெற்றுக்கொண்டார்.

அதேவேளை, பு.க.க.வின் ஸ்தாபகப் பொதுச் செயலாளரான கீர்த்தி பாலசூரிய எழுதிய “மக்கள் விடுதலை முன்னணியின் அரசியலும் வர்க்கத் தன்மையும்” என்ற நூலையும் அவர் கற்றார். குட்டி முதலாளித்துவ வர்க்கத்தை அடிப்படையாகக் கொண்ட ஜே.வி.பி.யின் தொழிலாள வர்க்க விரோதமும் சிங்கள ஜனரஞ்சகவாதமும் எதிர்கால பாசிச இயக்கத்திற்கான விதைகளாகும் என்பதை பாலசூரிய தனது நூலில் எடுத்துக்காட்டினார்.

பாலசூரியவின் பகுப்பாய்வுகளை உறுதிப்படுத்தும் வகையில், 1988-89 காலப்பகுதியில், ஜே.வி.பி. தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான பாசிசத் தாக்குதலை முன்னெடுத்தது. அல்பர்ட், அந்தப் பகுப்பாய்வுகளை கிளைக் கூட்டங்களில் மேற்கோள் காட்டினார். இன்று ஆட்சியில் இருக்கும், ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், சர்வதேச மற்றும் தேசிய மூலதனத்தின் தேவைகளுக்காக அப்பட்டமாக நின்றுகொண்டு, தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக சர்வதேச நாணய நிதியத்தின் கொடூரமான சிக்கன நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தி வருகிறது.

தோழர் அல்பர்ட் உயிருடன் இருந்திருந்தால், இந்தத் தாக்குதல்களைத் தோற்கடிப்பதற்காக, சர்வதேச சோசலிசக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் தொழிலாளர்-விவசாயிகள் அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டுவருவதற்காக, தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் சோ.ச.க. முன்னெடுக்கும் போராட்டத்தில் தனது முழுமையான பங்களிப்பை வழங்கியிருப்பார் என்பதில் சந்தேகமில்லை.

அல்பர்ட் முதலில் தொடர்பு கொண்டது, தமிழ் மக்கள் மட்டுமன்றி ஒரு பெருந்தொகையான தொழிலாள வர்க்கமும் வாழ்கின்ற வெள்ளவத்தைப் பகுதியிலுள்ள கட்சிக் கிளையுடனாகும். குழுக் கலந்துரையாடல்களிலும், தேசிய ரீதியாக ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டங்களிலும், கட்சிக் கிளையின் தீர்மானத்திற்கு ஏற்ப அவர் பங்கேற்ற விதத்தை முன்னாள் மற்றும் தற்போதைய தோழர்கள் உற்சாகத்துடன் நினைவுகூருகின்றனர்.

குறிப்பாக, கொழும்பு முதலாளித்துவ அரசாங்கங்கள் முன்னெடுத்த இனவாதப் போருக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரிவினைவாதத்திற்கும் எதிராக, சிங்கள மற்றும் தமிழ் மொழி பேசும் தொழிலாளர்களின் ஐக்கியத்தின் மூலம் ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிசக் குடியரசை கட்டியெழுப்புவதற்கான முன்னோக்கை அடிப்படையாகக் கொண்டு சோ.ச.க. முன்னெடுத்த கொள்கைரீதியான போராட்டத்தில் அல்பர்ட் உறுதியாக நின்றார். ருவன்வெல்ல போன்ற கிராமப்புறப் பகுதியில் இதற்காக அசைக்க முடியாத வகையில் போராடியதன் மூலம், அவரது புரட்சிகர உயிர்த்துடிப்பு மேலும் தெளிவாக வெளிப்பட்டது.

ஜே.வி.பி.யின் சிங்கள பேரினவாத அரசியலுக்கும், தொழிற்சங்க சந்தர்ப்பவாதத்திற்கும் எதிரான போராட்டத்தை அவர் ஒருபோதும் கைவிடவில்லை. 2019 இல் கண்ணில் கண்புரை ஏற்பட்டதன் காரணமாக அறுவைச் சிகிச்சைக்கு உட்பட்டு, தொடர் சிகிச்சைக்காக அவிசாவளை மருத்துவமனைக்குச் சென்று திரும்பிக்கொண்டிருந்த போது, சம்பளக் கோரிக்கைகளுக்காக அப்போது ஆசிரியர்கள் நடத்திய போராட்டத்தின் ஒரு பகுதியாக அவிசாவளை நகரில் நடத்தப்பட்ட ஆசிரியர்களின் மறியல் போராட்டம் அவரது கண்ணில் பட்டது. இதில் தனியாக தலையிட்ட அல்பர்ட் தோழர், அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் கோரிக்கைகளை வென்றெடுக்க முயற்சிப்பது பயனற்றது என்பதை விளக்கி, சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோக்குப் பிரசுரங்களை விநியோகித்தார்.

முதியோர் இல்லத்தில் வசிப்பதற்கு முன்னர், ஒரு நண்பர் வழங்கிய இடத்தில் மிகவும் கடினமான வாழ்க்கையை வாழ்ந்தபோதிலும், அவர் கட்சிப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டார். வெள்ளத்தில் மூழ்கும் அந்த இடத்தில் இருந்த அவரது கட்சி ஆவணங்கள் உட்பட சில உடைமைகள் திடீர் வெள்ளப்பெருக்கினால் பல தடவைகள் அழிந்தன. நீண்ட காலமாக கடினமான நிலைமைகளை எதிர்கொண்டதன் காரணமாக, அவருக்கு பல்வேறு நோய்கள் ஏற்பட்டன.

இதன் காரணமாகவே அல்பர்ட் முதியோர் இல்லத்திற்குச் செல்லத் தீர்மானித்தார். உணவு மற்றும் தங்குமிடம் தொடர்பாக அந்த இடம் அவருக்கு ஒப்பீட்டளவில் வசதியாக இருந்தது. ஆனால் அங்கு நிலவிய கடுமையான மதப் பிற்போக்குத்தனம், ஒரு பொருள்முதல்வாதியான அல்பர்ட்டுக்கு சிறிதும் விருப்பமாக இருக்கவில்லை. அந்த மதரீதியான அழுத்தங்களின் காரணமாக, ஒரு சந்தர்ப்பத்தில் அல்பர்ட் நிர்வாகத்தினருக்குத் தெரியப்படுத்தாமலேயே அங்கிருந்து வெளியேறினார். ஆனால் வேறு மாற்று வழி இல்லாததால், அவர் மீண்டும் அங்கு செல்ல வேண்டியிருந்தது. இல்லத்திற்குள் தொலைபேசி பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டிருந்ததால், அரசியல் கலந்துரையாடல்களில் பங்கேற்பதற்கான வாய்ப்பும் அவருக்கு இல்லாமல் போனது.

2023 இல் கொழும்பு தேசிய நூலகத்தில் நடைபெற்ற ட்ரொட்ஸ்கிசத்தின் நூற்றாண்டு விழா கூட்டத்தில், அனைத்து தடைகளையும் மீறி அவர் பங்கேற்றது, ஏனைய தோழர்களுக்கு ஊக்கமளிப்பதாக இருந்தது. கடுமையாக நோய்வாய்ப்பட்டு அறுவைச் சிகிச்சைக்கு உட்பட்டு மருத்துவமனைப் படுக்கையில் இருந்தபோதும்கூட, கடந்த பொதுத் தேர்தலில் சோ.ச.க. பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை குறித்து அவர் விசாரித்தார்.

அந்த நேரத்தில், சோ.ச.க. ஆவணங்களை வாசிக்கும் அளவிற்கு அவரது உடல்நிலை நன்றாக இருக்கவில்லை. அல்பர்ட் தோழர் நோயுற்ற நிலையில் தனது கண்களை நிரந்தரமாக மூடிக்கொண்ட போதிலும், அவரது நம்பிக்கையை நிறைவேற்றுவதற்காக உலக சோசலிசப் புரட்சியைச் சாதிக்கும் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்று, சோ.ச.க. உறுப்பினர்கள் அவரது புரட்சிகரத் துணிவுக்கும் வாழ்க்கைக்கும் மிக உயர்ந்த மரியாதையை செலுத்துவார்கள்.

Loading