மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
கடந்த சனிக்கிழமை அமெரிக்கா முழுவதும், மில்லியன் கணக்கான மக்கள் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே பரந்த எதிர்ப்பு மற்றும் கோப மனநிலையின் ஒரு பகுதியாக, நாடு முழுவதிலும் உள்ள நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
புலம்பெயர்ந்தோர் மீதான தாக்குதல்கள், பேச்சுரிமை மீதான தாக்குதல்கள் மற்றும் காஸாவில் இடம்பெற்றுவரும் இனப்படுகொலைப் போரால் மில்லியன் கணக்கான மக்கள் பீதியடைந்துள்ளனர். மேலும், அவர்கள் அதற்கு எதிராகப் போராட விரும்புகிறார்கள். ஆனால், அதனை எதிர்ப்பதற்கான உறுதியானது, சூழ்நிலை, அதன் தோற்றம் மற்றும் அதை முடிவுக்குக் கொண்டுவர எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றிய தெளிவான புரிதலால் வழிநடத்தப்பட வேண்டும்.
சூழ்நிலைமையை மிகத் தெளிவாகக் கூற வேண்டும்: ட்ரம்ப் நிர்வாகம் ஒரு சர்வாதிகாரத்தை நிறுவுவதற்கு திட்டமிட்டு முறையாக வேண்டுமென்றே நகர்ந்து வருகிறது. அடிப்படை ஜனநாயக உரிமைகளை ஒழித்தல், கட்டுப்பாடற்ற நிர்வாக அதிகாரத்தை பலப்படுத்துதல் மற்றும் அனைத்து எதிர்ப்பையும் நசுக்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு பாசிச வேலைத் திட்டத்தை அது செயல்படுத்தி வருகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, இது முதன்மையாக தொழிலாள வர்க்கத்தை இலக்காகக் கொண்டுள்ளது. இன்று மாணவர்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர் மீது பரிசோதிக்கப்படுவது நாளை வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களையும், அனைத்து சமூக எதிர்ப்பு மற்றும் அனைத்து வகையான அரசியல் எதிர்ப்புகளையும் அடக்குவதற்குப் பயன்படுத்தப்படும்.
நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழக வளாகங்களில், ஏற்கனவே ஒரு பயங்கரவாத ஆட்சி நடந்து வருகிறது. காஸாவில் அமெரிக்க ஆதரவுடன் நடத்தப்பட்டுவரும் இனப்படுகொலையை எதிர்த்ததற்காக அமைதியான போராட்டக்காரர்கள் கண்காணிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டு, நாடு கடத்தப்படுகிறார்கள். “பிடித்து ரத்துசெய்” என்ற செயற்கை நுண்ணறிவுத்திறன் கொண்ட கண்காணிப்பு திட்டத்தின் கீழ், மாணவர்களின் சமூக ஊடகப் பதிவுகள் மற்றும் பொது அறிக்கைகள் என்பன வெளியுறவுத்துறையால் கண்காணிக்கப்பட்டு, அவர்களை வெளியேற்றுவதற்கான இலக்குகளின் அடையாளமாக உள்ளன.
ட்ரம்பின் நிர்வாக உத்தரவுகளை நீதிமன்றத்தில் சவால் செய்ததற்காக, கோர்னெல் பல்கலைக்கழக முனைவர் பட்ட மாணவர் மொமோடூ தாலை கூட்டாட்சி அரசு முகவர்கள் கைது செய்ய முயன்றதைத் தொடர்ந்து, அவர் இந்த வாரம் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார். கொலம்பியா பல்கலைக்கழக பட்டதாரி மாணவரும் சட்டப்பூர்வ நிரந்தர குடியிருப்பாளருமான மஹ்மூத் கலீல், அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்துறையினரின் (ICE) தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். ஃபுல்பிரைட் அறிஞர் ருமேசா ஓஸ்டுர்க் உட்பட மற்றவர்கள், முகமூடி அணிந்த கூட்டாட்சி அரசு முகவர்களால் பட்டப்பகலில் கடத்தப்பட்டுள்ளனர்.
அரசியல் எதிரிகளை பெருமளவில் நாடுகடத்துவதற்கும், வெளியேற்றுவதற்கும் ட்ரம்ப் நிர்வாகம், போர்க்காலச் சட்டமான அந்நிய எதிரிகள் சட்டத்தை - இதற்கு முன்பு இந்த வழியில் பயன்படுத்தப்படாத ஒரு போர்க்கால சட்டம் - செயல்படுத்தியுள்ளது. இந்த சட்டமானது, நீதிமன்ற தீர்ப்புகள் மற்றும் நடைமுறையில் இருக்கும் சட்டங்களை மீறுவதற்கும், ஜனாதிபதிக்கு கட்டுப்பாடற்ற நிர்வாக அதிகாரத்தை வழங்குவதற்கும் அதிகாரத்தை வலியுறுத்துகிறது. உருவாக்கப்படும் சட்ட கட்டமைப்பானது, உரிமைகள் மசோதாவை அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை, மாறாக நிரந்தர “விதிவிலக்கு நிலை” மூலம் இறையாண்மை ஆட்சி செய்கிறது என்று வலியுறுத்திய நாஜி சட்ட வல்லுநர் கார்ல் ஷ்மிட்டின் சர்வாதிகார கோட்பாடுகளின் அடிப்படையில் அமைந்துள்ளது.
உள்நாட்டில், ஆளும் வர்க்கம் தொழிலாள வர்க்கத்தின் மீது ஒரு போரை நடத்தி வருகிறது: அவை, லட்சக்கணக்கான கூட்டாட்சி அரசுத் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்தல், சமூக திட்டங்களை அழித்தல், பொதுக் கல்வியை அகற்றுதல், தொழிலாளர் ஒப்பந்தங்களை அழித்தல் மற்றும் “கீழ்ப்படியாத” தொழிலாளர்களை இலக்கு வைக்க கூட்டாட்சி அரசு முகவர்களின் அதிகாரங்களை விரிவுபடுத்துதல் ஆகும். அறிவியல் மற்றும் பொது சுகாதாரத்தைப் பொறுத்தவரை, COVID-19 தொற்றுநோய் மற்றும் H5N1 “பறவைக் காய்ச்சல்” தொற்றுநோயின் வளர்ந்து வரும் அச்சுறுத்தலுக்கு மத்தியில், தடுப்பூசி எதிர்ப்பு சதிக் கோட்பாட்டாளர் ரொபர்ட் எஃப். கென்னடி ஜூனியர், அனைத்து சுகாதார மற்றும் மனித சேவைகளையும் மூடும் பணியை மேற்கொண்டுள்ளார்.
சர்வதேச அளவில், ட்ரம்ப் நிர்வாகம் ஒரு உலகப் போருக்குத் தயாராகி வருகிறது. கடந்த வியாழக்கிழமை, அது முழு உலகிற்கும் எதிரான பொருளாதாரப் போரை அறிவிப்பதற்குச் சமமான கடுமையான புதிய சுங்க வரிகளை அறிவித்தது. “அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டது” என்ற பதாகையின் கீழ் இந்த நடவடிக்கைகள், சீனாவை முடக்குவதையும், ஒவ்வொரு நாட்டையும் அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களுடன் இணைந்து கொள்ள கட்டாயப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன. இவை உலகளாவிய மோதலைத் தீவிரப்படுத்துவதுடன், வெளிநாடுகளில் மட்டுமல்ல, அமெரிக்காவிற்குள்ளும் பாரிய பொருளாதார மற்றும் சமூக அமைதியின்மையை உருவாக்கும் - பணிநீக்கங்கள், பணவீக்கம் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல்கள் மேலும் அதிகரிக்கும்.
பைடெனின் ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட காஸா மீதான இன அழிப்புப் பணியை “முடிக்க”, யேமனை “அழிக்க”, கிரீன்லாந்து, கனடா மற்றும் பனாமாக் கால்வாயை இணைக்க, சீனா மீது முழு அளவிலான போரை நடத்த ட்ரம்ப் உறுதியளித்துள்ளார். 1917 அக்டோபர் ரஷ்யப் புரட்சியின் மாபெரும் இணைத் தலைவரான லியோன் ட்ரொட்ஸ்கி, ஏகாதிபத்திய நெருக்கடியின் ஆரம்பக் கட்டத்தின் போது விளக்கியது போல, உலகம் “அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் எரிமலை வெடிப்பை” எதிர்கொள்கிறது.
இதற்கிடையில், பில்லியனர்கள் — ட்ரம்ப், மஸ்க், பெசோஸ் மற்றும் மற்றவர்கள்— மோசடி, சட்டவிரோத வர்த்தகம் மற்றும் வெளிப்படையான திருட்டு மூலம் தங்களை வளப்படுத்திக் கொண்டுள்ளனர். வோல் ஸ்ட்ரீட் ஒரு குற்றவியல் கும்பலைக் கொண்டிருக்கிறது. இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு நிறுவனமும் — அரசியல், பொருளாதார, கலாச்சார — உள்ளிருந்து அழுகி வருகிறது. ஆளும் உயரடுக்கு பிற்போக்குத்தனத்தின் ஆழத்தை உறிஞ்சி வருகிறது.
தொழிலாளர்களும் இளைஞர்களும் எதிர்கொள்ளும் அவசர கேள்வி: என்ன செய்ய வேண்டும்?
முதலாவதாக, ட்ரம்ப் இந்த அமைப்பு முறைக்கு வெளியே செயல்படும் ஒரு அந்நிய சக்தி அல்ல என்பதைப் புரிந்துகொள்வது அவசியமாகும். அமெரிக்க முதலாளித்துவத்தின் ஒரு விளைபொருளான அவர், தனது செல்வத்தையும் அதிகாரத்தையும் எந்த வகையிலும் தக்க வைத்துக் கொள்ளத் தீர்மானித்த ஒரு ஆளும் வர்க்கத்திற்காகப் பேசுகிறார். ட்ரம்ப் எங்கிருந்தோ வந்த பிசாசு அல்ல. அமெரிக்க சமூகத்தின் இயல்புக்கு ஏற்றவாறு அரசியலை வன்முறையில் மறுகட்டமைக்கும் ஒரு தன்னலக்குழுவின் உருவகமாக அவர் இருக்கிறார்.
ஜனநாயகக் கட்சி எதிர்க்கட்சி அல்ல - அது ஒரு விருப்பமான கூட்டாளி. பைடெனின் ஆட்சிக் காலத்தில்தான் காஸாவில் அமெரிக்க ஆதரவுடன் இஸ்ரேலிய இனப்படுகொலை தொடங்கியது. பைடெனின் ஆட்சிக் காலத்தில்தான் மாணவர் போராட்டக்காரர்கள் மீதான துன்புறுத்தல் தொடங்கியது. ஜனநாயகக் கட்சியினர்தான், குடியரசுக் கட்சியினர் தொடர்ச்சியாக தீர்மானங்களை நிறைவேற்றுவதை உறுதி செய்தவர்கள் ஆவர். இதன் மூலம் ட்ரம்ப் நிர்வாகம் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களை ஆழப்படுத்த நிதியளித்தனர்.
ஜனவரி மாதம் கமலா ஹாரிஸ் ட்ரம்பை ஒரு பாசிஸ்ட் என்று வெளிப்படையாக அழைத்த சிறிது நேரத்திலேயே, பைடென் ட்ரம்பை வெள்ளை மாளிகைக்கு வரவேற்று “வெற்றிபெற” வாழ்த்துக்களைத் தெரிவித்தார். ஜனநாயகக் கட்சியினர் ட்ரம்பின் சர்வாதிகாரத்தை எதிர்க்க மறுத்து வருகிறார்கள். ஏனெனில், அவர்கள் அதன் அடிப்படை இலக்குகளுடன் உடன்படுகிறார்கள்: அவை, அமெரிக்க ஏகாதிபத்தியத்தைப் பாதுகாத்தல், சமூக எதிர்ப்பை அடக்குதல் மற்றும் வோல் ஸ்ட்ரீட்டின் ஆதிக்கத்தைப் பராமரித்தல் ஆகும். ஜனநாயகக் கட்சி என்பது, நிதி மூலதனம், இராணுவ-உளவுத்துறை எந்திரம், சிஐஏ, பென்டகன் மற்றும் உயர் நடுத்தர வர்க்கத்தின் சலுகை பெற்ற பிரிவுகளின் கட்சியாகும். அதன் முக்கிய அக்கறை ஜனநாயகம் அல்ல, மாறாக அமெரிக்க உலகளாவிய மேலாதிக்கத்தைப் பாதுகாப்பதும் உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான போரும் ஆகும்.
ஜனநாயகக் கட்சிக்கு முறையீடுகள் செய்வதன் மூலம் ட்ரம்ப் தடுத்து நிறுத்தப்பட மாட்டார். தொழிற்சங்க எந்திரத்தால் ஊக்குவிக்கப்படும் வெற்று சாகசங்கள் மற்றும் அடையாள சைகைகள் மூலம் அவர் எதிர்க்கப்பட மாட்டார். ட்ரம்பின் தேசியவாத பொருளாதாரப் போர்க் கொள்கைகளை அவை தழுவியிருந்தாலும், “காங்கிரஸில் உள்ள உங்கள் பிரதிநிதிக்கு கடிதம் எழுதுங்கள்” என்ற அழைப்புகளுடன் பாரிய பணிநீக்கங்களுக்கு தொழிற்சங்க எந்திரம் பதிலளித்துள்ளது. பேர்னி சாண்டர்ஸ் மற்றும் அலெக்ஸாண்ட்ரியா ஒகாசியோ-கோர்டெஸ் போன்றவர்கள் நம்மை நம்ப வைப்பது போல, இது திவாலாகிப்போன ஒரு அமைப்பைமுறையை சரிசெய்வது பற்றிய விடயம் அல்ல. இவர்களின் பாத்திரமானது, எதிர்ப்புக்களை சமாதானப்படுத்தி ஜனநாயகக் கட்சியின் கட்டமைப்பிற்குள் அதைக் கட்டுப்படுத்தி வைத்திருப்பதாகும்.
பாசிச அச்சுறுத்தல் என்பது, முதலாளித்துவ அமைப்பு முறையின் முறிவிலிருந்துதான் எழுகிறது என்ற தெளிவான புரிதலால் வழிநடத்தப்படும் தொழிலாள வர்க்கத்தின் ஒரு பாரிய புரட்சிகர இயக்கம் அவசியமாகும்.
இந்தப் போராட்டம், ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான உண்மையான தொகுதியான தொழிலாள வர்க்கத்திற்குள் எடுத்துச் செல்லப்பட வேண்டும். சர்வாதிகாரத்திற்கு எதிரான போராட்டம், அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கும், முதலாளித்துவத்தை ஒழித்துக் கட்டுவதற்கும், சோசலிசத்தை நிறுவுவதற்கும் ஒரு வேலைத் திட்டத்துடன் ஆயுதபாணியாகிய தொழிலாள வர்க்கத்தின் ஒரு பாரிய அரசியல் இயக்கமாக மாற வேண்டும்.
தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள், தொழிற்சாலைகள், பணியிடங்கள் மற்றும் சுற்றுப்புறங்களில் வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் உட்பட பாரிய எதிர்ப்புக்களை அணிதிரட்டுவதற்காக சாமானிய தொழிலாளர் குழுக்களை உருவாக்க வேண்டும் என்று சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுக்கிறது. முதலாளித்துவ தன்னலக்குழுவால் தொழிலாள வர்க்கத்தின் மீது நடத்தப்படும் பாரிய தாக்குதலுக்கு எதிராக உண்மையான போராட்டத்தை நடத்த, தொழிற்சங்க அதிகாரத்துவங்களிலிருந்து சுயாதீனமாக, ஒருங்கிணைந்த அமைப்புகளின் வலையமைப்பை சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணி (IWA-RFC) உருவாக்கி வருகிறது.
இந்த எழுச்சி பெற்றுவரும் இயக்கத்திற்கு ஒரு சோசலிச மற்றும் சர்வதேசிய வேலைத்திட்டம் மற்றும் முன்னோக்கால் இட்டுநிரப்ப சோசலிச சமத்துவக் கட்சி போராடுகிறது. சர்வாதிகாரத்திற்கு எதிரான போராட்டம், நிதிய தன்னலக்குழு மற்றும் முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்திலிருந்து பிரிக்க முடியாதது. இந்த தன்னலக்குழுவின் செல்வம் பறிமுதல் செய்யப்பட்டு, சமூகத் தேவைகள் மற்றும் சமத்துவத்தின் அடிப்படையில் சமூகம் மறுஒழுங்கமைக்கப்பட வேண்டும்.
பாசிசம், போர் மற்றும் சர்வாதிகாரத்திற்கு எதிரான போராட்டத்தை தேசிய எல்லைகளுக்குள் நடத்த முடியாது. முதலாளித்துவ அமைப்பு முறையின் உலகளாவிய தன்மைக்கு ஒரு சர்வதேசிய மூலோபாயம் அவசியமாக தேவைப்படுகிறது. உலகம் முழுவதும், ஆளும் வர்க்கம் பாசிசம், சர்வாதிகாரம் மற்றும் போருக்குத் திரும்பி வருகிறது. அதே நேரத்தில், அமெரிக்காவிலிருந்து ஜேர்மனி வரை, பிரான்சிலிருந்து இலங்கை வரை ஒவ்வொரு நாட்டிலும் - எதிர்ப்புகள் மற்றும் வேலைநிறுத்தங்களின் வளர்ந்து வரும் அலை உருவாகி வருகிறது. தொழிலாள வர்க்கம் ஒரு சர்வதேச வர்க்கம், அதன் போராட்டங்கள் அனைத்து தேசிய, இன மற்றும் நிற வேறுபாடுகளையும் கடந்து ஒன்றுபட வேண்டும்.
ஆளும் வர்க்கத்திடம் ஒரு திட்டம் உள்ளது: அது, சர்வாதிகாரம், போர் மற்றும் அடக்குமுறையாகும். தொழிலாள வர்க்கமும் ஒரு திட்டத்தைக் கொண்டிருக்க வேண்டும்: அது, அதிகாரத்தைக் கைப்பற்றுதல், முதலாளித்துவத்தை முடிவுக்குக் கொண்டுவருதல், உண்மையான ஜனநாயகம், பொருளாதார திட்டமிடல் மற்றும் ஏகாதிபத்தியப் போரை முடிவுக்குக் கொண்டுவருதல் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு சோசலிச எதிர்காலத்தை கட்டியெழுப்புவதாகும்.
இதுதான் சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் அதன் இளைஞர் இயக்கமான சர்வதேச இளைஞர்கள் மற்றும் சமூக சமத்துவத்திற்கான மாணவர்கள் அமைப்பு (IYSSE) ஆகியவற்றின் வேலைத்திட்டமாகும். இந்தப் போராட்டத்தை முன்னெடுங்கள். சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் IYSSE இல் சேருங்கள்! சர்வாதிகாரத்தையும் போரையும் முடிவுக்குக் கொண்டுவரவும், தனியார் இலாபத்தின் அடிப்படையில் அல்லாமல் மனிதத் தேவையின் அடிப்படையில் சமூகத்தை மறுஒழுங்கமைக்கவும் தேவையான புரட்சிகரத் தலைமையை கட்டியெழுப்புங்கள்!
ட்ரம்பின் சர்வாதிகாரத்தை நிறுத்து! ஜனநாயகக் கட்சியினருடனும் குடியரசுக் கட்சியினருடனும் முறித்துக் கொள்ளுங்கள்! சோசலிசத்திற்கான தொழிலாள வர்க்க இயக்கத்தைக் கட்டியெழுப்புங்கள்!