உக்ரேன் விவகாரத்தில் அமெரிக்கா “காட்டிக்கொடுப்பதாக” ஐரோப்பிய தலைவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

உக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்காவின் புதிய முன்முயற்சியின் விளைவு என்னவாக இருக்கும் என்பது தெளிவாக இல்லை. தற்போது பல்வேறு பங்கேற்பாளர்களுடன் பல்வேறு இடங்களில் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.

ஜெனீவாவில், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவின் மேற்பார்வையின் கீழ், ட்ரம்பின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்கோஃப் மற்றும் புட்டினின் நம்பிக்கைக்குரிய கிரில் டிமிட்ரிவ் ஆகியோரால் முன்வைக்கப்பட்ட 28-அம்சத் திட்டத்தைத் திருத்துவது குறித்து அமெரிக்கா, உக்ரேன் மற்றும் ஐரோப்பிய சக்திகளின் பிரதிநிதிகள் பேரம் பேசி வருகின்றனர். ஜெனீவாவில் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் தலைமைத் தளபதி ஆண்ட்ரி யெர்மாக் மற்றும் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் ருஸ்டெம் உமிரோவ் ஆகியோர் உக்ரேனை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். விட்காஃப், ட்ரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் மற்றும் இராணுவச் செயலாளர் டான் டிரிஸ்கோல் ஆகியோரும் ஜெனீவாவில் சிறிது காலம் இருந்தனர்.

அமெரிக்க துணை ஜனாதிபதி ஜேடி வான்ஸின் நம்பிக்கைக்குரியவரும், அவரது கல்லூரி நண்பருமான 39 வயதான டிரிஸ்கோல், அமெரிக்க போர்த் துறையில் ஒரு வளர்ந்து வரும் நட்சத்திரமாகக் கருதப்படுகிறார் மற்றும் உக்ரேனை நோக்கிய அமெரிக்க கொள்கையில் முக்கிய பங்கு வகித்து வருகிறார். கியேவில், அவர் 28-அம்சத் திட்டத்தை ஏற்றுக்கொள்ளக் கோரினார், “நாங்கள் விவரங்களைப் பேச்சுவார்த்தை நடத்தவில்லை” மற்றும் “அது செய்யப்பட வேண்டும்” என்று கூறினார். பைனான்சியல் டைம்ஸின் கூற்றுப்படி, அவர் திங்களிலிருந்து அபுதாபியில் ரஷ்ய மற்றும் உக்ரேனிய தூதுக்குழுவுடன் இரகசிய பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறார்.

இந்த வார இறுதியில் உக்ரேனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி வெள்ளை மாளிகைக்கு வருகை தருவது குறித்தும் கலந்துரையாடல் இடம்பெற்று வருகிறது. இதன் போது ஒரு ஒப்பந்தம் கையெழுத்திடப்படலாம்.

இதற்கிடையில், முன்னணி ஐரோப்பிய நாடுகளின் அரசுத் தலைவர்கள் ஒரு உடன்பாட்டைத் தடுக்க முயன்று வருகின்றனர். தென்னாப்பிரிக்காவில் நடந்த G20 உச்சிமாநாட்டில், அமெரிக்காவால் புறக்கணிக்கப்பட்ட விட்கோஃப்-டிமிட்ரிவ் ஆவணத்தால் ஆச்சரியப்பட்ட அவர்கள், அன்றிலிருந்து ட்ரம்பைத் தடுக்க கடுமையாக உழைத்து வருகின்றனர். அதேநேரம், ரஷ்யாவால் ஏற்றுக்கொள்ள முடியாத சொந்த திட்டத்தை அவர்கள் முன்வைத்துள்ளனர். மேலும், ஜேர்மன் சான்சலர் மெர்ஸ் ட்ரம்புடன் இதுபற்றி தொலைபேசியில் பேசியுள்ளார்.

ஆனால், பிப்ரவரியில் வெள்ளை மாளிகையில் இருந்து ஜெலென்ஸ்கி வெளியேற்றப்பட்ட பின்னர் ஆகஸ்ட் மாதம் அலாஸ்காவில் நடந்த ட்ரம்ப்-புட்டின் உச்சிமாநாட்டிற்குப் பிறகு, ஒரு உடன்பாட்டைத் தடுப்பதில் அவர்கள் வெற்றி பெற்றனர். இந்த முறை இது தோல்வியடையக்கூடும்.

உக்ரேன் வறண்டு போய்விட்டது. அதன் இராணுவம் நூறாயிரக்கணக்கான சிப்பாய்களை இழந்துள்ளது. மேலும், பாரியளவில் தப்பி ஓடுதல் காரணமாக, தேவையான கூடுதல் படைகளுக்கு இனியும் ஆட்சேர்க்க முடியாதுள்ளது. இது, அமெரிக்காவின் உளவுத்துறை, ஆயுதங்கள், மற்றும் வெடிமருந்துகள் ஆகியவற்றின் மீதும் சார்ந்துள்ளது. இவை நிறுத்தப்பட்டால், போர் முன்னரங்க வரிசைகளில் நெருக்கடி நிலை பெருமளவில் அதிகரிக்கும். போரின் தொடக்கத்திலிருந்து, பெருமளவிலான இடப்பெயர்வு, குறைந்த பிறப்பு விகிதங்கள் மற்றும் போர் இறப்புகள் காரணமாக மக்கள் தொகை சுமார் 10 மில்லியனாக குறைந்துள்ளது. மேலும், ஜெலென்ஸ்கியின் புகழ் மிகவும் மோசமாக அடி நிலையில் உள்ளது. சமீபத்திய இலஞ்ச ஊழலில், அவரது அரசாங்கம் அதன் முன்னோடிகளை விட குறைவான ஊழல் அல்ல என்பதை அனைவருக்கும் தெளிவுபடுத்தியுள்ளது.

எனவே, போர் தொடங்கும் முன் ரஷ்யா கோரியிருந்த அனைத்தையும் கிட்டத்தட்ட வழங்கும் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டிய கட்டாயத்தை ஜெலென்ஸ்கி உணரலாம். 28 அம்ச திட்டத்தில் கிரிமியா, லுஹான்ஸ்க் மற்றும் டோனெட்ஸ்க் ஆகிய பகுதிகள் ரஷ்ய நாடுகளாக மாறும் என்றும், ஹெர்சன் மற்றும் ஜபோரிஜியா பகுதிகள் ரஷ்ய இராணுவ கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. நேட்டோவில் அங்கத்துவம் மற்றும் உக்ரேனில் நேட்டோ துருப்புக்களை நிலைநிறுத்துவது என்றென்றும் நிராகரிக்கப்படும். மேலும். உக்ரேனிய இராணுவம் அதிகபட்சமாக 600,000 துருப்புக்களுக்கு மட்டுப்படுத்தப்படும். நேட்டோவின் மேலதிக விரிவாக்கமும் நிராகரிக்கப்படும்.

இந்த முன்மொழிவில் உக்ரேனுக்கு அமெரிக்காவின் பாதுகாப்பு உத்தரவாதங்களும் அடங்கும். இருப்பினும், அதற்கு பதிலாக அமெரிக்கா “இழப்பீடு” கோருகிறது. உக்ரேன் ரஷ்ய பிராந்தியத்தைத் தாக்கினால் அல்லது ரஷ்யாவை நோக்கி ஏவுகணைகளை வீசினால், பாதுகாப்பு உத்தரவாதங்கள் காலாவதியாகிவிடும்.

அமெரிக்காவும் நிதி நன்மைகளைப் பெற்று வருகிறது. எடுத்துக்காட்டாக, முடக்கப்பட்ட ரஷ்ய சொத்துக்களில் இருந்து 100 பில்லியன் டாலர், உக்ரேனுக்கான அமெரிக்கா தலைமையிலான புனரமைப்பு நிதியத்திற்கு அனுப்பப்பட உள்ளன. இதற்கு ஐரோப்பிய சக்திகள் அதன் சொந்த ஆதாரங்களில் இருந்து இன்னுமொரு 100 பில்லியன் டாலரை வழங்கும். இந்த புனரமைப்பு நிதியில் இருந்து கிடைக்கும் இலாபத்தில் ஐம்பது சதவீதம் அமெரிக்காவுக்குச் செல்லும். முடக்கப்பட்ட நிதிகளின் மீதமுள்ள பகுதி அமெரிக்காவும் ரஷ்யாவும் கூட்டாக ஒரு முதலீட்டு நிதியில் நிர்வகிக்கும்.

ஐரோப்பிய வல்லரசுகளுக்கான பேச்சுவார்த்தையாளர்கள், இந்த முன்னேற்றங்களால் கண்மூடித்தனமாக, இதுவரை இந்தக் கோரிக்கைகளை மாற்றியமைப்பதில் கவனம் செலுத்தியுள்ளனர். குறிப்பாக உக்ரேன் இராணுவத்தின் அளவிற்கான வரம்புகள் மற்றும் கைப்பற்றப்பட்ட ரஷ்ய சொத்துக்களை அமெரிக்கா பயன்படுத்துவது குறித்து கவனம் செலுத்தியுள்ளனர். இவை, அமெரிக்காவின் ஆதரவை முற்றிலுமாகத் திரும்பப் பெறுவதைத் தடுக்க வடிவமைக்கப்பட்ட நட்புரீதியான விமர்சனத்தின் அடிப்படையில் பெரும்பாலும் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும், போருக்குப் பிறகு உக்ரேனில் ஐரோப்பிய துருப்புக்கள் நிறுத்தப்படுவதைத் தடுக்கும் ட்ரம்ப்பின் முன்மொழியப்பட்ட விதிகளை நேரடியாக எதிர்ப்பதற்குப் பதிலாக, உக்ரேனுக்கு பாதுகாப்பு உத்தரவாதங்களை நீட்டிக்க அமெரிக்காவிற்கான அழைப்புகளும் இதில் அடங்குகின்றது.

ஒரு உடன்பாடு எட்டப்படுமா அல்லது போர் தொடருமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், ஒன்று மட்டும் நிச்சயம்: ஒரு உடன்பாடு கூட, மூன்றாம் உலகப் போருக்கான பாதையில் மற்றொரு படியாக மட்டுமே இருக்கும். இது, நீடித்த சமாதானத்திற்கு அடித்தளம் அமைக்காது. ஆனால், உக்ரேனிய மற்றும் ரஷ்ய மக்களின் தலைகளுக்கு மேல் மோதல் கோடுகளை உறுதிப்படுத்தும். அவை எந்த நேரத்திலும் மீண்டும் பற்ற வைக்கப்படலாம்.

ஐரோப்பிய, அமெரிக்க, உக்ரேனிய மற்றும் ரஷ்ய தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான, ஐக்கியப்பட்ட தலையீட்டின் மூலம், போர்வெறியர்களை முடிவுக்குக் கொண்டுவருவதன் மூலம் மட்டுமே உண்மையான அமைதியை அடைய முடியும்.

ஐரோப்பா மீள் ஆயுதமயமாக்கலை தீவிரப்படுத்துகிறது

குறிப்பாக ஐரோப்பிய வல்லரசுகள், ரஷ்யாவிற்கும் உக்ரேனுக்கும் இடையே ஒரு உடன்பாடு எட்டப்பட்டால், அவற்றின் மீள் ஆயுதமயமாக்கல் மற்றும் போர் முயற்சிகளை இரட்டிப்பாக்கப் போவதாக தெளிவுபடுத்தியுள்ளன.

“மேற்கத்திய மதிப்புகளை” பாதுகாக்கிறோம் என்ற பொய்யான சாக்குப்போக்கின் கீழ், அவர்கள் ஐரோப்பாவை நூறாயிரக்கணக்கான உக்ரேனிய மற்றும் ரஷ்ய சிப்பாய்களின் உயிர்களைப் பலிகொண்டு, பில்லியன் கணக்கான யூரோக்களை விழுங்கி, ஐரோப்பா முழுவதும் ஒரு தீவிரப் போரின் அச்சுறுத்தலை எழுப்பிய ஒரு போரில் ஆழமாக இழுத்துச் சென்றுள்ளனர். உக்ரேனின் மதிப்புமிக்க இயற்கை வளங்களைக் கட்டுப்படுத்துவதும், ரஷ்யாவை அழிப்பதும் அவர்களின் குறிக்கோளாக இருந்தது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், முன் கண்டிராத அளவில் மீண்டும் ஆயுதபாணியாக்குவதற்கான ஒரு சாக்குப்போக்காகவும் அவர்கள் இந்தப் போரை பயன்படுத்தியுள்ளனர்.

இப்போது அவர்கள் வெறுங்கையுடன் விடப்பட்டுள்ளனர். போர் இல்லாமல் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், அமெரிக்கா இப்போது எதிர்பார்க்கும் உடன்பாட்டை விட, அவர்கள் தங்கள் நலன்களுக்கு சாதகமான ஒரு உடன்பாட்டை பெற்றிருக்க முடியும். இப்போது அவர்கள் துரோகம் செய்யப்பட்டதாக உணர்கிறார்கள். பல ஆண்டுகளாக, அவர்கள் அமெரிக்காவுடன் இணைந்து நேட்டோவை கிழக்கு நோக்கி விரிவுபடுத்தினர். 2014 இல், அவர்கள் அப்போதைய உக்ரேனிய ஜனாதிபதியை தூக்கியெறிவதை ஒழுங்கமைக்க வாஷிங்டனுடன் ஒத்துழைத்தனர். உக்ரேனை நேட்டோவின் ஒரு இராணுவ புறக்காவல் நிலையமாக மாற்றி, ரஷ்யாவின் பிற்போக்குத்தனமான படையெடுப்பை அவர்கள் தூண்டினர். அத்துடன், ரஷ்யாவுடனான பொருளாதார உறவுகளை, குறிப்பாக மலிவான இயற்கை எரிவாயு இறக்குமதியை பெருமளவில் அவர்கள் துண்டித்தனர். ஆனால், இப்போது அமெரிக்கா, ஐரோப்பாவின் செலவில் புட்டினுடன் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தி, உக்ரேனிய கொள்ளைகளில் பெரும்பாலானவற்றைப் பெறத் தயாராக உள்ளது.

ஐரோப்பிய வல்லரசுகள், அமெரிக்காவிலிருந்து சுயாதீனமாக, தங்கள் உலகளாவிய பொருளாதார மற்றும் அரசியல் நலன்களைப் பின்தொடர்வதற்கும், தேவைப்பட்டால், அதற்கு எதிராகவும் தங்கள் இராணுவக் கட்டமைப்பை துரிதப்படுத்துவதன் மூலம் இதற்கு பதிலளித்து வருகின்றன. இது, சர்வாதிகார ஆட்சி வடிவங்கள் மூலமாக, தொழிலாள வர்க்கத்தின் மீதான ஒரு நேரடித் தாக்குதலின் மூலம் மட்டுமே, பிரமாண்டமான தொகை பணத்தை திரட்டி விழுங்க முடியும்.

ட்ரம்பின் உக்ரேன் ஒப்பந்தம் குறித்த பெரும்பாலான ஐரோப்பிய வர்ணனைகள் இந்த வழிகளில்தான் உள்ளன. ஜேர்மன் கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கை வல்லுனரான நோர்பேர்ட் ரோட்ஜென் இதை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார்.

Die Zeit பத்திரிகைக்கு அளித்த பேட்டி ஒன்றில், ரோட்ஜென் அமெரிக்காவின் நடவடிக்கைகள், அவரது கற்பனைக்கு அப்பாற்பட்டவை என்று விளக்கினார். அவர்கள் “புட்டினின் பக்கம் சேர்ந்து, உக்ரேனின் இறையாண்மை மற்றும் ஐரோப்பாவின் பாதுகாப்பு இரண்டையும் விற்றுவிடுவார்கள்.” அமெரிக்காவுடன் அட்லாண்டிக் கடந்த கூட்டணி பற்றிய முந்தைய அனுமானம் இனியும் இதற்கு இயைந்திருக்காது என்று அவர் கூறினார்.

ரோட்ஜென் இரண்டு புதிய சகாப்தங்களைப் பற்றி பேசினார்: “முதல் புதிய சகாப்தம் ஐரோப்பாவில் ரஷ்யா மீண்டும் போருக்குத் திரும்புவதாகும். இரண்டாவது புதிய சகாப்தம், ஐரோப்பிய பாதுகாப்பு பிரச்சினைகளில் போர்வெறி வெறி கொண்ட சர்வாதிகாரியின் பக்கம் நிற்க அமெரிக்கா எடுத்த முடிவாகும்.”

ஐரோப்பா அடிப்படையில் தன்னை மறு நோக்குநிலைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறிய அவர், “ஐரோப்பாவில், நாம் இன்னும் விரைவாகவும், கணிசமாகவும், தீர்க்கமான முறையிலும், அனைத்துத் துறைகளிலும், எமது பொருளாதார மற்றும் இராணுவ திறன்களிலும், அவ்வாறு செய்ய விரும்புபவர்களுடன், எமது சொந்தப் பலத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும். இப்போது நாம் அமெரிக்காவை சார்ந்திருப்பதைக் குறைக்க வேண்டும். குறிப்பாக, பாதுகாப்புக் கொள்கையின் அடிப்படையில், மிக விரைவாக, அமெரிக்காவை சார்ந்திருப்பதைக் குறைக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

அமெரிக்காவின் பாதுகாப்பு உத்தரவாதங்களை நம்பியிருக்க முடியாது என்று அவர் தொடர்ந்து வலியுறித்தினார். உக்ரேன் “ஒரு முள்ளம்பன்றியைப் போல ஆயுதம் ஏந்தியிருக்க வேண்டும். இது ரஷ்யாவிற்கு மேலும் எந்தவொரு தாக்குதலையும் பயனற்றதாகத் தோன்றச் செய்ய போதுமான தடுப்பு சக்தியைக் கொடுக்கும்” என்று ரோட்ஜென் வலியுறுத்தினார். அதற்கு முன்பு, மேலும் ஜேர்மன் டாரஸ் ஏவுகணைகளை உக்ரேனுக்கு வழங்குவதை அவர் ஆதரித்தார்.

ஜோகன்னஸ்பேர்க்கில் RTL உடனான ஒரு பேட்டியில், பிரெஞ்சு ஜனாதிபதி மக்ரோன், போர் நிறுத்தம் ஏற்பட்டால், உக்ரேனில் பிரெஞ்சு, பிரிட்டிஷ் மற்றும் துருக்கிய துருப்புக்களை உடனடியாக நிலைநிறுத்த வலியுறுத்தினார். இதை ரஷ்யா திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. ரஷ்யாவின் சைபர் தாக்குதல்கள், மருத்துவமனைகள் மீதான தாக்குதல்கள் மற்றும் சூழ்ச்சியான செய்திகளால் ஐரோப்பாவிற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் குறித்து அவர் கூச்சலிட்டார். பிரான்சில் யூத-விரோத மற்றும் முஸ்லிம்-விரோத தாக்குதல்களுக்கு ரஷ்யாவை அவர் குற்றம் சாட்டினார்.

மக்ரோன், “தேசத்திற்கும் இராணுவத்திற்கும் இடையிலான ஒப்பந்தத்தை” பலப்படுத்துவதற்கு அழைப்பு விடுத்ததுடன், இராணுவ இருப்புக்களை பலப்படுத்துவதற்கும் மற்றும் தேசிய சேவையின் ஒரு புதிய வடிவத்தை மீண்டும் அறிமுகப்படுத்துவதற்கும் அறிவித்தல் விடுத்தார். 1997 இல் பிரான்சில் கட்டாய இராணுவ சேவை ஒழிக்கப்பட்டது. பிரெஞ்சு இராணுவத்தின் தளபதியான ஜெனரல் மாண்டன், பிரான்ஸ் மீண்டுமொருமுறை “அதன் பிள்ளைகளை இழக்க” தன்னை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவித்தார்.

அமெரிக்காவில் ட்ரம்பின் எழுச்சிக்கு ஐரோப்பா தனது சொந்த கொள்கைகளை “ட்ரம்பிங்” செய்வதன் மூலம் பதிலளிக்கிறது. முதலாளித்துவமானது, இராணுவவாதம் மற்றும் சர்வாதிகாரத்திற்குள் வீழ்ந்து வருவது என்பது ஒரு தனிப்பட்ட நிகழ்வு அல்ல. மாறாக, முதலாளித்துவத்தின் நம்பிக்கையற்ற நெருக்கடிக்கு ஆளும் வர்க்கத்தின் விடையிறுப்பாகும் என்பதை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. சர்வதேச தொழிலாள வர்க்கத்தால் முதலாளித்துவத்தை தூக்கியெறிந்தால் மட்டுமே இந்த பைத்தியக்காரத்தனத்தை நிறுத்த முடியும்.

Loading