மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
கடந்த வெள்ளிக்கிழமை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கரீபியன் பகுதியில் உள்ள வெனிசுவேலா நாட்டின் மீது, அமெரிக்கா “மிக விரைவில்” தரைவழித் தாக்குதல்களைத் தொடங்கும் என்று கூறியுள்ளார். இது வெனிசுவேலா மீது அமெரிக்காவின் வான்வழித் தாக்குதலை நடத்துவதற்கான சாத்தியத்தை அதிகரித்துள்ளது.
“கடல் வழியாக வந்துகொண்டிருந்த போதைப் பொருட்களில் 96 சதவீதத்தை நாங்கள் முறியடித்துவிட்டோம், இப்போது நாங்கள் தரை வழியாகத் தொடங்குகிறோம்...” என்று வெள்ளை மாளிகை ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், மேலும் “இது மிக விரைவில் தரை வழியாக தொடங்கவுள்ளது” என்றும் கூறினார்.
வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவின் “நாட்கள் எண்ணப்பட்டுவிட்டன” என்று கடந்த வார தொடக்கத்தில் ட்ரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து, வெள்ளியன்று அவரது அச்சுறுத்தல் வந்துள்ளது. வெனிசுவேலாவுக்கு தரைப்படைகள் அனுப்பப்படுமா என்று கேட்டபோது, ட்ரம்ப் அதை நிராகரிக்க மறுத்துவிட்டார். வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் பத்திரிகையின் ஆசிரியர் குழு, ட்ரம்பின் நடவடிக்கைகளை ஆட்சி மாற்றத்தை மேற்கொள்வதற்கான ஒரு உறுதிமொழியாக குறிப்பிட்டது. மதுரோவை வெளியேற்றுவதற்கான தனது உறுதிப்பாட்டிற்கு ட்ரம்ப் இப்போது “கட்டுப்பட்டு செயல்பட வேண்டும்” என்று ஜேர்னல் எழுதியது.
ட்ரம்ப் நிர்வாகத்தின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், கரீபியன் பிராந்தியத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில், இராணுவ தளவாடங்கள் குவிக்கப்பட்டு வருகின்றன. போர் மண்டலமும் பாதுகாப்பு சீர்குலைவும் என்ற அறிக்கையின்படி, வெனிசுவேலா நாட்டின் எல்லைக்குள் வான்வழித் தாக்குதல்களுக்குத் தயாராக, புவேர்ட்டோ ரிக்கோ மற்றும் டொமினிக்கன் குடியரசில் உள்ள முன்னாள் அமெரிக்க இராணுவத் தளங்களுக்கு மேம்பட்ட போர் விமானங்களை பென்டகன் அதிவேகமாக அனுப்பி வருகிறது.
வேர்மான்ட் தேசிய விமானப் படையின் 158 வது போர் பிரிவைச் சேர்ந்த F-35A ஸ்டீல்த் போர் விமானங்களுக்கு கரீபியனுக்குச் செல்ல பெடரல் அரசின் ஒருங்கிணைப்பு உத்தரவுகள் கிடைத்துள்ளதாக தி வோர் சூன் என்ற பத்திரிகையின் அறிக்கை வியாழக்கிழமையன்று செய்தி வெளியிட்டது. 2,000ம் பவுண்டுகள் எடையுள்ள தடம் கண்டறிந்து தாக்கும் குண்டுகளை சுமந்து செல்லக்கூடிய மற்றும் வெனிசுவேலா வான்வெளிக்குள் ஆழமாக சென்று இலக்குகளைத் தாக்கக்கூடிய F-35A போர் விமானம் நிலைநிறுத்தப்பட்டிருப்பது, அப்பிராந்தியத்தில் நிலைகொண்டுள்ள அமெரிக்க இராணுவத்தின் ஒரு குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் குறிக்கிறது. “F-35A விமானங்களின் குவிப்பு, எந்த வகையான நடவடிக்கைகள் வரவிருக்கின்றன என்பதற்கான ஒரு முக்கிய சமிக்ஞையாகும்” என்று தி வோர் சூன் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
டிசம்பர் 10 அன்று, ஆறு EA-18G க்ரோலர் (Growler) மின்னணுப் போர் விமானங்கள் புவேர்ட்டோ ரிக்கோவில், முன்பு பயன்படுத்தப்பட்ட ரூஸ்வெல்ட் கடற்படைத் தளத்திற்கு வந்தடைந்தன. எதிரிகளின் ரேடார்கள் மற்றும் தகவல் தொடர்புகளை செயலிழக்கச் செய்து, வான் பாதுகாப்பு அமைப்புகளை முடக்குவதுக்கு வடிவமைக்கப்பட்ட இந்த க்ரோலர் விமானங்கள், “கடந்த சில மாதங்களில் அமெரிக்காவின் வான்வழித் தாக்குதல்கள், தயாராகி வருவதற்கான மிகத் தெளிவான அறிகுறியாக இருக்கக்கூடும்” என்று பிரேக்கிங் டிஃபென்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.
HC-130J கொம்பாட் கிங் II தேடல் மற்றும் மீட்பு (CSAR) ரக போர் விமானங்கள் மற்றும் HH-60W ஜோலி கிரீன் ஹெலிகாப்டர்கள் ரூஸ்வெல்ட் சாலை தளத்திற்கு வந்தடைந்தன. “இப்பிராந்தியத்தில் பிரத்யேக CSAR விமானங்களை நிலைநிறுத்தியிருப்பது என்பது, ட்ரம்ப் நிர்வாகம் மதுரோ மீதான அழுத்தத்தை அதிரடியாக அதிகரிக்கவும், உள்நாட்டில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்களைத் தாக்கத் தொடங்கவும் கூடும் என்பதற்கான அறிகுறியாகும். இராணுவ நடவடிக்கைகளின்போது, குறிப்பாக சர்ச்சைக்குரிய பகுதியில், இழக்கவிருக்கும் எந்தவொரு விமானப் பணியாளர்களையும் விரைவாக மீட்க, இந்த விமானங்கள் தேவைப்படுகின்றன” என்று தி வார் ஸோன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
USS ஜெரால்ட் ஆர் ஃபோர்ட் விமானம் தாங்கிக் கப்பலின் தாக்குதல் குழு, ஏற்கனவே இப்பிராந்தியத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ள 15,000 க்கும் மேற்பட்ட துருப்புக்கள் மற்றும் டசின் கணக்கான விமானங்களுடன் இணைந்து கொண்டதானது, இந்த இராணுவக் குவிப்பு 1962 கியூப ஏவுகணை நெருக்கடிக்குப் பிறகு, கரீபியன் பகுதியில் உள்ள மிகப்பெரிய அமெரிக்கப் படையைக் குறிக்கிறது.
அமெரிக்க ஊடகங்கள், வெனிசுவேலா நாட்டின் ஆட்சி மாற்றத்தை தீவிரமாக ஊக்குவித்து வருகின்றன. கடந்த ஞாயிற்றுக்கிழமை, CBS இன் “Face the Nation” நிகழ்ச்சியில் இடம்பெற்ற ஒரு வெறுப்பூட்டும் நேர்காணலில், மரியா கொரினா மச்சாடோ —சமீபத்தில் நோபல் அமைதிப் பரிசைப் பெறுவதற்காக அமெரிக்க இராணுவப் பாதுகாப்பின் கீழ் நாட்டை விட்டு வெளியேறிய வெனிசுவேலாவின் எதிர்க்கட்சித் தலைவர்— மதுரோ அரசாங்கத்தை கவிழ்க்க வெளிப்படையாக அழைப்பு விடுத்ததோடு, ட்ரம்பின் இராணுவக் படைக்குவிப்பை பாராட்டினார்.
“ஜனாதிபதி ட்ரம்பின் மூலோபாயத்தை நான் முழுமையாக ஆதரிக்கிறேன். வெனிசுலா மக்களாகிய நாங்கள், அவருக்கும் அவரது நிர்வாகத்திற்கும் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருப்போம், ஏனென்றால் அவர் இந்த அரைக்கோளத்தின் சுதந்திர வீரர் என்று நான் நம்புகிறேன்” என்று மச்சாடோ அறிவித்தார்
வெனிசுவேலாவில் அமெரிக்க இராணுவ நடவடிக்கையை அவர் வரவேற்கிறாரா என்று கேட்கப்பட்டபோது, “மதுரோ வெளியேற வேண்டும், அவரது நேரம் முடிந்துவிட்டது என்பதை புரிந்து கொள்ளும் வகையில், நான் மேலும் மேலும் அழுத்தம் கொடுப்பதை வரவேற்கிறேன்,” என்று மச்சாடோ பதிலளித்தார்.
அமைதிக்கான நோபல் பரிசை ட்ரம்புக்கு அர்ப்பணித்த மச்சாடோ, மதுரோவின் “ஆட்சியின் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன” என்று நம்புவதாகக் கூறினார். வெனிசுவேலாவின் பொருளாதாரத்திற்கான 1.7 ட்ரில்லியன் டாலர் தனியார்மயமாக்கல் திட்டத்தை அவர் முன்னதாகவே கோடிட்டுக் காட்டியுள்ளார்.
இலத்தீன் அமெரிக்காவில் ஆட்சி மாற்றத்தை நோக்கிய ட்ரம்பின் நகர்வுகளைக் கண்டிக்க ஜனநாயகக் கட்சி மறுத்துள்ளது. செனட் உளவுத்துறை குழுவிலுள்ள ஜனநாயகக் கட்சி வேட்பாளரான வேர்ஜீனியாவின் செனட்டர் மார்க் வார்னர், கடந்த ஞாயிறன்று ஏபிசியின் “இந்த வாரம்” நிகழ்ச்சியில் தோன்றினார். இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் மார்த்தா ராடாட்ஸ் வார்னரிடம் “சர்வாதிகாரி மதுரோவை வெளியேற்றுவதற்கான ட்ரம்பின் முயற்சியுடன் நீங்கள் உடன்படுகிறீர்களா” என்று கேட்டபோது, ”வெனிசுலா மக்கள் மதுரோவை அகற்ற விரும்புகிறார்கள் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்” என்று வார்னர் பதிலளித்தார்.
படகுகளில் சென்ற பொதுமக்களை ட்ரம்ப் நிர்வாகம் படுகொலை செய்ததையும் வார்னர் நியாயப்படுத்தினார். கடந்த செப்டம்பரில் இருந்து, அமெரிக்கப் படைகள், போதைப்பொருள் கடத்தலை மேற்கொண்டதாக கூறப்படும் படகுகள் மீது, டிரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை மேற்கொண்டதில் குறைந்தது 87 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கனெக்டிகட்டின் ஜனநாயகக் கட்சி பிரதிநிதி ஜிம் ஹிம்ஸ், கடந்த வார இறுதியில் “Face the Nation” நிகழ்ச்சியில், அழிக்கப்பட்ட படகுகளில் இருந்து தப்பிப்பிழைத்தவர்களைத் தாக்குவது “போர் சட்டங்களை மீறுவதாகும்” என்று கூறினார்.
ஆயினும்கூட, வார்னர் “இது ஒரு சட்டவிரோத தாக்குதல் என்று எனது சக ஊழியர்கள் சிலர் கூறியுள்ளனர் என்ற முடிவுக்கு வருவதற்குத் தயங்குகிறேன்” என்று அறிவித்தார்.
செப்டம்பர் 2 அன்று, அழிக்கப்பட்ட படகின் இடிபாடுகளில் ஒட்டிக்கொண்டிருந்த தப்பிப்பிழைத்தவர்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட ஒரு தாக்குதல், சுயாதீன நிபுணர்களால் ஒரு சாத்தியமான போர்க் குற்றம் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் இலக்கு வைக்கப்பட்ட படகுகளில் இருந்த “அனைவரையும் கொல்லும்படி” தளபதிகளிடம் கூறியதாக கூறப்படுகிறது.
போதைப்பொருள் கடத்தலை எதிர்த்துப் போராடுவதாக ட்ரம்ப் நிர்வாகத்தின் கூற்று ஒரு வெளிப்படையான மோசடியாகும். கொலம்பிய ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோவை அச்சுறுத்தியுள்ள ட்ரம்ப், “பெட்ரோ அடுத்தவர்” என்று அறிவித்துள்ளார். இந்த தாக்குதல்கள், வாஷிங்டனின் உத்தரவுகளுக்கு அடிபணியத் தவறும் எந்தவொரு இலத்தீன் அமெரிக்க அரசாங்கத்திற்கும் நீட்டிக்கப்படுகிறது என்பதை தெளிவுபடுத்துகிறது.
ட்ரம்ப் நிர்வாகம் வெனிசுலாவிற்கு எதிராக ஒரு பொருளாதார முற்றுகைக்கும் தயாராகி வருகிறது. மேலும் எண்ணெய்க் கப்பல்களைப் பறிமுதல் செய்வதற்கான அச்சுறுத்தல் ஏற்கனவே “வெனிசுவேலாவுக்கு உள்ளேயும் வெளியேயும் செல்லும் சரக்குக் கப்பல் போக்குவரத்தைப் முடக்கிவிட்டது” என்று தி வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் வெள்ளிக்கிழமை அன்று செய்தி வெளியிட்டது. வியாழக்கிழமை அன்று, வெனிசுவேலாவின் பிரதான எண்ணெய் துறைமுகத்திற்கு வெளியே ஒரு டசின் கப்பல்கள் காத்திருந்தன. ஆனால், கச்சா எண்ணெயை ஏற்ற எந்தக் கப்பலும் நகரவில்லை. பதற்றம் அதிகரித்துள்ளதால் நாடு முழுவதும் உள்ள ஊழியர்கள் விடுமுறை கேட்பது அல்லது வேலைக்கு வராமல் இருப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்று வெனிசுலா துறைமுக அதிகாரி ஒருவர் ஜேர்னலிடம் தெரிவித்தார்.
கடந்த புதன்கிழமை கைப்பற்றப்பட்ட எண்ணெய்க் கப்பலில் சுமார் 80 மில்லியன் டாலர் மதிப்புள்ள எண்ணெய் இருந்தது. இது வெனிசுலா இறக்குமதி செய்யும் பொருட்களுக்காக மாதந்தோறும் செலவிடும் தொகையில் சுமார் 5 சதவீதம் ஆகும். இது “பற்றாக்குறைக்கான வாய்ப்பை எழுப்புகிறது.” இந்த பறிமுதல் நடவடிக்கை “எண்ணெய் வருவாயைச் சார்ந்து இயங்கும் ஒரு ஆட்சிக்கு இருத்தலியல் நெருக்கடியை (existential crisis) ஏற்படுத்துகிறது” என்று ஜேர்னல் குறிப்பிட்டது.
டென்வர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வெனிசுலா பொருளாதார நிபுணர் ஃபிரான்சிஸ்கோ ரோட்ரிக்ஸ், ஜேர்னலிடம், “அமெரிக்கா மாதத்திற்கு ஒரு சரக்குக் கப்பலைப் பறிமுதல் செய்தால், அது வெனிசுவேலாவை பொருளாதார மந்தநிலைக்குள் தள்ளும்,” என்று கூறினார்.
இந்த இராணுவக் குவிப்பு, ட்ரம்ப் நிர்வாகத்தின் தேசியப் பாதுகாப்புக் கொள்கையின் பின்னணியில் புரிந்து கொள்ளப்பட வேண்டும். இந்தக் கொள்கை, மேற்கு அரைக்கோளத்தில் (அமெரிக்க கண்டத்தில்) “அமெரிக்காவின் மேலாதிக்கத்தை மீட்டெடுப்பதை” இலக்காகக் கொண்டுள்ளது. அதே நேரத்தில், சீனாவிற்கு “அந்தப் பகுதியில் படைகள் அல்லது அச்சுறுத்தும் பிற திறன்களை நிலைநிறுத்தும் திறனையும்” மறுக்கிறது. இலத்தீன் அமெரிக்கா வளங்களின் ஒரு சிறைப்பிடிக்கப்பட்ட ஆதாரமாகவும், சீனாவுடனான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தீவிரமடைந்து வரும் மோதலுக்கான ஒரு அதிகாரத் தளமாகவும் இலக்கு வைக்கப்பட்டு வருகிறது.
