இலங்கை மற்றும் ஆசியாவில் பாரிய வெள்ளத்தால் ஏற்பட்ட மனிதப் பேரழிவு: எப்படி நடந்தது?

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

டிட்வா சூறாவளி தாக்கி ஐந்து நாட்களுக்குப் பிறகும், 2 டிசம்பர் 2025 அன்று இலங்கையின் கொழும்பில், வெல்லம்பிட்டியவில் அவிஸ்சாவலை வீதியில் வெள்ள நீர் வடியவில்லை.

இலங்கை தீவு, தென்கிழக்குப் பகுதியில் நவம்பர் 26 அன்று கரையைக் கடந்த டிட்வா சூறாவளியால் பெரும் சேதத்தை சந்தித்துள்ளது. சூறாவளியானது கிழக்கு கடற்கரையோரத்திலிருந்து வடக்கு நோக்கி நகர்ந்தது. உத்தியோகப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, சூறாவளி மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் காரணமாக 643 பேர் இறந்துள்ளதுடன் 183 பேர் காணாமல் போயுள்ளனர்.

4,500க்கும் மேற்பட்ட வீடுகள் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளதுடன் 76 ஆயிரத்துக்கும் மேற்பட்டவை பகுதியளவு சேதமடைந்துள்ளன. மொத்தம் 247 கிலோமீட்டர் வீதிகள் பாதிக்கப்பட்டுள்ளதோடு 40 பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டன. மத்திய மலையகப் பகுதிகள் வழியாக செல்லும் பிரதான ரயில் பாதையின் பல பகுதிகள் இடிந்து விழுந்ததனால் இந்த பிரதான பாதையில் போக்குவரத்து காலவரையின்றி நிறுத்தப்பட்டுள்ளது.

சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவு இலங்கைக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட ஒரு தனிமைப்படுத்தப்பட்ட நிகழ்வு அல்ல. நவம்பர் இறுதி வாரத்தில், தென்கிழக்கு ஆசியா முழுவதும் பெய்த மழையால், இந்தோனேசியா, தாய்லாந்து மற்றும் மலேசியாவில் பெரும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதுடன் மில்லியன் கணக்கானவர்கள் இடம்பெயர்ந்தனர். பத்தாயிரக்கணக்கான வீடுகள் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அழிக்கப்பட்டன. சொத்து சேதத்தின் முழு அளவு இன்னும் மதிப்பிடப்படவில்லை.

இலங்கையின் கொழும்பில் 30 நவம்பர் 2025 ஞாயிற்றுக்கிழமை அன்று ஏற்பட்ட வெள்ளப்பெருக்கிற்குப் பிறகு, மக்கள் நீரில் மூழ்கிய பகுதி வழியாக நடந்து செல்கின்றனர். [AP Photo/Eranga Jayawardena]

பேரழிவுக்கு பிரதிபலித்த இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக, 'நமது வரலாற்றில் மிகப்பெரிய மற்றும் மிகவும் சவாலான இயற்கை பேரழிவை நாம் எதிர்கொள்கிறோம்' என்று அறிவித்தார். அழிவின் அளவு உண்மையில் மிகப்பெரியது என்றாலும், பேரழிவு முற்றிலும் ஒரு 'இயற்கை' நிகழ்வு என்று கூறுவதானது அதன் அடி நிலையில் உள்ள ஆழமான சமூக ரீதியன மற்றும் விஞ்ஞான ரீதியான யதார்த்தங்களை மூடிமறைக்கிறது.

பலர் இந்தப் பேரழிவு எப்படி நடந்தது? என்று ஒரு எளிய மற்றும் அவசரமான கேள்வியைக் கேட்கிறார்கள்.

பதில் விதியிலோ அல்லது இயற்கையிலோ இல்லை, மாறாக, முதன்மையாக புவி வெப்பமடைதலால் இயக்கப்படுகின்ற காலநிலை மாற்றத்தின் ஒருங்கிணைந்த தாக்கத்திலும் மற்றும் ஆட்சியில் இருந்த அரசாங்கங்களால் விஞ்ஞான மற்றும் பேரிடர் தடுப்பு உள்கட்டமைப்பு திட்டமிட்டு கலைக்கப்பட்டதிலுமே உள்ளது.

கடல் மேற்பரப்பு வெப்பநிலையை அதிகரிப்பதன் மூலமும், சூறாவளி உருவாக்கத்தை தீவிரப்படுத்துவதன் மூலமும், வளிமண்டல ஈரப்பதனின் அளவை அதிகரிப்பதன் மூலமும், கடும் மழைப்பொழிவை உருவாக்குவதன் மூலமும், குறுகிய காலத்தில் மிகப்பெரிய அளவிலான நீரை கொட்டித்தீர்க்கும் வகையில் 'மேகமூட்டம் நகராமல் இருக்கும்' சாத்தியக்கூறுகளை அதிகரிப்பதன் மூலமும், புவி வெப்பமடைதலானது இந்து சமுத்திரத்தில் வானிலை அமைவை மறுவடிவமைத்து வருவதாக பல தசாப்த கால ஆராய்ச்சிகள் காட்டுகின்றன.

நவம்பர் 28 அன்று, இலங்கையில் பெய்த வரலாறு காணாத மழைப்பொழிவு, இந்த காலநிலை சீர்குலைவின் தெளிவான வெளிப்பாடாகும். தி டிப்ளமோட் ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி, “நவம்பர் 28 அன்று வெறும் 24 மணி நேரத்தில் இலங்கையில் கிட்டத்தட்ட 13 பில்லியன் கன மீட்டர் மழை பெய்துள்ளது. இது இலங்கையின் சராசரி ஆண்டு மழைப்பொழிவில் சுமார் 10 சதவீதத்திற்கு சமம் ஆகும். வெளியேற்ற விகிதம் வினாடிக்கு சுமார் 150,000 கன மீட்டர் ஆகும், இது உச்ச ஓட்டத்தில் அமேசன் நதி பெருக்கெடுக்கும் அளவுக்கு அருகில் உள்ளது.”

இந்த புள்ளிவிவரங்களை பகுப்பாய்வு செய்து, நீர்வளவியலாளர் பேராசிரியர் லக்ஷ்மன் கலகெதேரா விளக்கியதாவது: “முந்தைய மழை காரணமாக மண் ஏற்கனவே ஊறிப்போயிருந்ததால், இந்த நீர் அனைத்தும் ஓடையாக மாறியது. இதன் விளைவாக நாடு இதற்கு முன்பு அனுபவித்திராத வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன.”

உலகளவில் காலநிலை அமைவை விரைவாக மாற்றும் புவி வெப்பமடைதல் நிகழ்வை, தனியார் இலாபத்தை அடிப்படையாகக் கொண்ட முதலாளித்துவ அமைப்பிற்குள் கட்டுப்படுத்தவும் மாற்றியமைக்கவும் முடியாது. கடந்த மாதம் பிரேசிலில் நடந்த COP-30 காலநிலை உச்சி மாநாடு இந்த யதார்த்தத்தை மேலும் உறுதிப்படுத்தியது.

இந்த உச்சிமாநாட்டில் புதைபடிவ எரிபொருள் மீதான ஆர்வங்கள் ஆதிக்கம் செலுத்தியதுடன், அமெரிக்கா, சீனா, ரஷ்யா, ஜப்பான் மற்றும் இந்தியா உட்பட, வெப்பத்தை பிடித்துவைக்கும் வாயுக்களை உமிழும் முன்னணி நாடுகளின் பிரதான உலகத் தலைவர்கள் கூட கலந்து கொள்ளவில்லை. தொழில்துறைக்கு முந்தைய காலத்திலிருந்த, உலகளாவிய சராசரி வெப்பநிலை உயர்வான 1.5 பாகை செல்சியசுக்கு கட்டுப்படுத்தும் இலக்கை அடைவதற்காக இந்த அரசாங்கங்களும் நிறுவனங்களும் பாசாங்கு காட்டுவதைக் கூட கைவிட்டுவிட்டன. புதைபடிவ எரிபொருளை பிரித்தெடுக்கும் புதிய திட்டங்கள், பூமியால் தாங்கக்கூடிய அளவை விட மிக அதிகமாக அங்கீகரிக்கப்படுகின்றன.

மனிதகுலம் குறைந்தபட்சம் 2.6 பாகை செல்சியஸ் வெப்பநிலை உயர்வை நோக்கிச் செல்கிறது என்பதை விஞ்ஞான அறிக்கைகள் இப்போது உறுதிப்படுத்துகின்றன. இது பேரழிவு தரும் வெப்ப அலைகள், வறட்சி, வெள்ளம், நோய் வெடிப்புகள், உணவுப் பற்றாக்குறை மற்றும் கட்டாய இடம்பெயர்வு ஆகியவற்றின் சகாப்தத்திற்கு உறுதியாக வழி வகுக்கின்றன. இது உலகின் ஏழ்மையான மக்களை பெரிதும் பாதிக்கிறது. அதே நேரம், மாசுபாடு, காடழிப்பு, நுண் பிளாஸ்டிக் துகள்கள் மற்றும் நச்சு இரசாயனங்களும் தொடர்ந்து பரந்த சுற்றுச்சூழல் சீர்குலைவுக்கு வழிவகுக்கின்றன.

இந்த பேரழிவு தனிப்பட்ட அறியாமையின் விளைவு அல்ல, மாறாக தனியார் இலாபத்தையும் தனிப்பட்ட செல்வத்தையும் மனித உயிருக்கு மேலாக வைக்கின்ற, உலகளாவிய முதலாளித்துவ அமைப்பின் தேவைகளுக்கு வேண்டுமென்றே முன்னுரிமை கொடுப்பதன் விளைவாகும். டிரில்லியன் கணக்கான டொலர்கள் புதைபடிவ எரிபொருட்களில் முதலீடு செய்யப்படுகின்றன. கோடீஸ்வரர்களால் தீவிர சமத்துவமின்மை பராமரிக்கப்படுகிறது. இராணுவச் செலவு அதிகரித்து வருகிறது. ஆளும் வர்க்கம் காலநிலை பாதுகாப்பிற்காக அதன் இலாபத்தை தியாகம் செய்யப் போவதில்லை. மாறாக, போர் மற்றும் ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான மோதல்கள் வாயு உமிழ்வைத் தீவிரப்படுத்தி வளங்களைச் சூறையாடி வருகின்றன. நிலையான தொழில்நுட்பங்கள் இருக்கின்ற போதிலும், உற்பத்தியின் தனியார் உரிமை மற்றும் தேசிய-அரசுகளுக்கு இடையிலான போட்டி ஆகியவற்றில் வேரூன்றிய உலகளாவிய அமைப்பின் கீழ் அவற்றை செயல்படுத்த முடியாது.

மழைப்பொழிவுக்கு முன்னர் சரியான நேரத்தில் எச்சரிக்கைகளை வெளியிடவோ அல்லது அதிக ஆபத்துள்ள பகுதிகளிலிருந்து பொதுமக்களை வெளியேற்றவோ தவறியமை பேரழிவை அதிகப்படுத்தியது.

பாதிக்கப்பட்ட நாடுகளின் வானிலை நிறுவனங்களில் நவீன தொழில்நுட்பம் மற்றும் போதுமான வளங்கள் இல்லாமையும் இந்த தோல்விக்கான பிரதான காரணங்களில் ஒன்றாகும்.

உதாரணமாக, இலங்கையின் வளிமண்டலவியல் திணைக்களம், ஒரு இயங்கும் ரேடார் வலையமைப்பு, செங்குத்து வளிமண்டலத் தரவைச் சேகரிப்பதற்கான போதுமான வளிமண்டல அளவீட்டு அமைப்புகள், முழு மாவட்டங்களிலும் போதுமான தானியங்கி வானிலை நிலையங்கள், முன்னறிவிப்பு மாதிரிகளுக்கான உயர் செயல்திறன் கணினி வசதி இல்லாமை மற்றும் காலாவதியான செயற்கைக்கோள்-தரவுபெறும் கருவிகளுடனேயே செயல்படுகிறது. இது தற்செயலானது அல்ல. இது தற்போதைய மக்கள் விடுதலை முன்னணி / தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி./தே.ம.ச.) நிர்வாகம் உட்பட ஆட்சியில் இருந்த அரசாங்கங்களால் திணிக்கப்பட்ட செலவு வெட்டுக்களின் விளைவாகும்.

கிட்டத்தட்ட பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நாட்டிலும், நிலச்சரிவுகளுக்கு முதன்மையான காரணம், வணிக நோக்கங்களுக்காக மலைப்பகுதிகளில் காடுகளை அழிப்பதாகும்.

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் உள்ள ஆச்சே தமியாங்கில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில், வியாழக்கிழமை, 4 டிசம்பர் 2025 அன்று உயிர் பிழைத்த ஒருவர் மூக்கை மூடிக்கொண்டு செல்கிறார். [AP Photo/Binsar Bakkara]

இலங்கையில், பிரிட்டிஷ் காலனித்துவ நிர்வாகம் மலைநாட்டின் பெரும் பகுதிகளை தேயிலை மற்றும் பிற பயிர்களை பயிரிடுவதற்காக சுத்தம் செய்தது. காடுகள் அழிக்கப்பட்டு, இயற்கை நீர் ஓட்ட முறைகள் சீர்குலைக்கப்பட்டதுடன் நிலச்சரிவு ஏற்படக்கூடிய சூழ்நிலைகள் உருவாக்கப்பட்டன. 1880 மற்றும் 1950க்கு இடையில், பெருந்தோட்டப் பொருளாதாரத்தின் விரிவாக்கமானது இலங்கையின் வனப்பகுதியில் சுமார் 40 சதவீதத்தை அழித்தது. 1930 வாக்கில், மேல் நதிப் படுகைப் பகுதிகளில் பாதிக்கும் மேற்பட்டவை தேயிலை சாகுபடிக்காக அழிக்கப்பட்டன, இதன் விளைவாக ஆண்டுதோறும் 500,000 முதல் 800,000 டன் வரை மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது -இவை நிலச்சரிவு அபாயத்தை கடுமையாக அதிகரித்த நிலைமைகளாகும். இடம்பெயர்ந்த கிராமவாசிகள் பேரழிவு ஏற்படக்கூடிய பகுதிகளுக்குள் வாழத் தள்ளப்பட்டனர்.

இதர நாடுகளிலும் இதே போன்ற நிலைமைகள் நிலவுகின்றன. 4 டிசம்பர் 2025 அன்று வெளியிடப்பட்ட உலக சோசலிச வலைத் தள கட்டுரை விளக்கியது போல், “இந்தோனேசியாவின் முக்கிய ஏற்றுமதிப் பொருட்களில் ஒன்றான பனை எண்ணெய் உற்பத்தி செய்வதற்காக, பனைத் தோட்டங்களுக்கு வழிவகுக்க இந்தோனேசியாவில் பல காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. Global Forest Watch (பூகோள காடு கண்காணிப்பு) இன் கூற்றுப்படி, வடக்கு சுமத்ரா மட்டும், 2001 மற்றும் 2024 ஆண்டுகளுக்கு இடையில் அதன் மரங்கள் நிறைந்த பகுதியில் 28 சதவீதத்தை -1.6 மில்லியன் ஹெக்டேர்களை- இழந்தது.'

இலங்கையில் பிரதான உள்கட்டமைப்பு திட்டங்களில் ஆலோசகராகப் பணியாற்றிய நீர்ப்பாசன பொறியியலாளரான பாலித தேஷப்ரிய எமக்கு விளக்குகையில், அரிதான கடும் மழை நிகழ்வுகளைத் தாங்கும் வகையில் பெரிய நீர்த்தேக்கங்கள் கட்டப்பட்டுள்ள போதிலும், முழுமையான பொருளாதாரத் தேவையின் காரணமாக, இலட்சக்கணக்கான மக்கள் வெள்ளப்பெருக்குகளில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள நிலையில் இருக்கும்போது, ​​சரியாகச் செயல்படும் வடிகால்கள் கூட ஆபத்தானவையாக உள்ளன, என்றார்.

“கொழும்புக்கு அருகில் பாயும் களனி ஆற்றின் தாழ்வான பகுதிகளில் கூட, இலட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வாழ்கின்றனர்,” என்று தேஷப்ரிய கூறினார். இந்த மக்களில் பெரும்பாலோர் பாதுகாப்பான இடங்களில் நிலம் வாங்க முடியாத அளவுக்கு ஏழ்மையானவர்கள். இந்த சமூகங்கள் தொடர்ந்து வெள்ளத்தில் மூழ்கடிக்கப்படுவதோடு நீரில் மூழ்காத பாதுகாப்பான வீடுகளே அவர்களின் முதன்மையான கோரிக்கை ஆகும்.

இலங்கையில் வெள்ளத்தால் 40க்கும் மேற்பட்ட பாலங்கள் அழிக்கப்பட்டன. 'பாலங்கள் மற்றும் அணைகள், நீர் வெளியேற்றங்களின் போது எதிர்பார்க்கப்படும் அதிகபட்ச நீர் வெளியேற்றத்தை அலட்சியம் செய்து மிகக் குறுகியதாகவோ அல்லது மிகக் தாழ்வாகவோ கட்டப்பட்டதால் அவை பாதிக்கப்பட்டன. இந்த செலவு வெட்டானது, வெள்ள நீரின் சக்தியைப் பெரிதாக்கி, வீதிகள் அடித்துச் செல்லப்பட்டு மரணங்களை ஏற்படுத்தும்' என்று தேசப்பிரிய குறிப்பிட்டார்,

கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சிரிமல் அபேரத்ன, இலங்கையில், குறைந்த அளவிலான தொழில்துறைமயமாக்கல் மற்றும் மோசமாக அபிவிருத்தி செய்யப்பட்ட சேவைத்துறை காரணமாக, பெரும்பான்மையான மக்கள் இன்னும் தொலைதூர கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். அவற்றில் பல சூறாவளியால் பேரழிவிற்கு உள்ளானவை என்று வலியுறுத்தினார்.

'நகர்ப்புறங்களில் மக்கள் தொகை குவிந்துள்ள அபிவிருத்தியடைந்த நாடுகளைப் போலல்லாமல், இலங்கையின் ஜனத்தொகை வளர்ச்சி, தீவு முழுவதும் மிகக் குறைவாகவே பரவியுள்ளது. 2024 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவு, மக்கள்தொகையில் நான்கில் மூன்று பங்கிற்கும் அதிகமானோர் இன்னும் கிராமப்புறங்களில் வாழ்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்துகிறது,' என்று பேராசிரியர் அபேரத்ன கூறினார்.

காலநிலை மாற்றம், பேரிடர் தடுப்பு ஆகியவை ஒரு நாட்டின் எல்லைகளுக்குள் தீர்க்கப்பட முடியும் என்பது போல, பல்வேறு அறிவுஜீவிகள் தனிமைப்படுத்தப்பட்ட 'தேசிய தீர்வுகளை' முன்மொழிந்துள்ளனர். இது ஒரு ஆபத்தான மாயை ஆகும். உலகளாவிய ஒருங்கிணைந்த முயற்சியின் ஒரு பகுதியாக இல்லாமல், எந்தவொரு தேசியவாத திட்டமும் காலநிலையை நிலைப்படுத்தவோ, நவீன முன்னறிவிப்பு அமைப்புகளை உருவாக்கவோ அல்லது உயிர்களைப் பாதுகாக்கத் தேவையான உள்கட்டமைப்பை உருவாக்கவோ முடியாது.

காலநிலை மாற்றம் என்பது உலகளாவிய தீர்வைக் கோரும் ஒரு உலகளாவிய நெருக்கடி என்பதை உலக சோசலிச வலைத தளம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இதற்கு கீழ்வரும் திட்டங்கள் அடங்கிய, ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் சர்வதேச தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்ட வேண்டும்:

· புதைபடிவ எரிபொருட்களைச் சார்ந்திருப்பதை அகற்ற உலகளாவிய உற்பத்தியை மறுசீரமைத்தல்

· விஞ்ஞான வளங்களை காலநிலை மாதிரியாக்கம், முன்னறிவிப்பு மற்றும் பொருத்தமாக்கிக்கொள்ளுவதை நோக்கி திருப்பிவிடுதல்

· வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் பாதிக்காத வீட்டுவசதியை ஒரு சமூக உரிமையாக வழங்குதல்

· எரிசக்தி, போக்குவரத்து மற்றும் தொழில்துறையை தொழிலாளர்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் வைத்தல்

· போட்டித்தன்மை வாய்ந்த தேசியக் கொள்கைகளை அன்றி, சர்வதேச அறிவியல் திட்டமிடலை ஒருங்கிணைத்தல்

சமூகத்தை ஒரு சர்வதேச சோசலிச முறையில் மறுசீரமைப்பு செய்வதன் மூலம் மட்டுமே புவி வெப்பமடைதலை நிவர்த்தி செய்வதற்கும் மனித வாழ்க்கையைப் பாதுகாப்பதற்கும் தேவையான தொழில்நுட்ப, விஞ்ஞான மற்றும் பொருள் வளங்களை ஒருங்கிணைக்க முடியும். சமூகத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் தனியார் இலாபத்திற்குக் கீழ்ப்படுத்தி, தேசிய மற்றும் வகுப்புவாதப் பிரிவைத் தூண்டும் முதலாளித்துவத்தின் கீழ் இது நடக்காது. தேசிய எல்லைகளில் நம்பிக்கை வைக்காத சர்வதேச தொழிலாள வர்க்கத்தால் மட்டுமே உலக அளவில் சோசலிசத்திற்கான போராட்டத்தை வழிநடத்த முடியும்.

ஆசியாவில் இப்போது வெளிப்படும் பேரழிவு, ஸ்திரமின்மையால் பாதிக்கப்பட்ட ஒரு கிரகத்திலிருந்து வரும் எச்சரிக்கையாகும் - மனித வாழ்வின் மீது முதலாளித்துவ இலாபத்தின் தொடர்ச்சியான ஆதிக்கம் ,மில்லியன் கணக்கான மக்களின் உயிர்வாழ்வோடு பொருந்தாது என்பதற்கான எச்சரிக்கை ஆகும். சர்வதேச தொழிலாள வர்க்கம் முதலாளித்துவ அமைப்பைத் தூக்கியெறிந்து ஒரு சோசலிச எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்கான போராட்டத்தை மேற்கொள்ள வேண்டும்.

Loading