முன்னோக்கு

வெனிசுவேலாவுக்கு எதிராக நவ காலனித்துவ கொள்ளையடிக்கும் போரை தொடுக்க இருப்பதாக ட்ரம்ப் அச்சுறுத்துகிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

USS ஜெரால்ட் ஆர் ஃபோர்டு விமானம் தாங்கிக் கப்பல் [Photo: US Strategic Command]

யுத்தத்தின் பாதையில் மீண்டும் இறங்கியுள்ள அமெரிக்க ஏகாதிபத்தியம், இந்த முறை இலத்தீன் அமெரிக்கா முழுவதையும் அடிபணியச் செய்வதற்கான ஒரு திட்டமிட்ட உந்துதலின் ஒரு பாகமாக வெனிசுலாவை அச்சுறுத்தி வருகிறது. ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த வாரம் பொலிடிகோ பத்திரிகையிடம், வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவின் “நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன” என்றும், “மிக விரைவில்” தரை வழித் தாக்குதல்கள் அங்கு தொடங்கும் என்றும் கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தார்.

வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலின் ஆசிரியர் குழு, ட்ரம்பின் நடவடிக்கைகளை ஆட்சி மாற்றத்தை மேற்கொள்வதற்கான ஒரு உறுதிமொழியாக வகைப்படுத்தியதோடு, மதுரோவை பதவியிலிருந்து வெளியேற்றுவதற்கான அவரது உறுதிப்பாட்டை ட்ரம்ப் இப்போது “பின்பற்ற கடமைப்பட்டுள்ளார்” என்று எழுதியது.

1962 கியூபா ஏவுகணை நெருக்கடிக்குப் பிறகு, கரீபியன் கடலில் அமெரிக்கா மேற்கொண்டுவரும் மிகப்பெரிய இராணுவப் படைக் குவிப்பானது, ட்ரம்பின் அச்சுறுத்தல்களுடன் அரங்கேறியுள்ளது. பென்டகன் 15,000க்கும் மேற்பட்ட துருப்புக்களை, யு.எஸ்.எஸ் ஜெரால்ட் ஆர். ஃபோர்டு (USS Gerald R. Ford) விமானம் தாங்கிக் கப்பல் உட்பட ஒரு டசின் போர்க் கப்பல்களையும், டசின் கணக்கான போர் விமானங்களையும் வெனிசுலாவைத் தாக்கும் எல்லைக்குள் நிலைநிறுத்தியுள்ளது.

செப்டம்பர் முதல், அமெரிக்கப் படைகள் தெற்கு கரீபியன் மற்றும் கிழக்கு பசிபிக் பகுதிகளில் உள்ள படகுகள் மீது 22க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதலை நடத்தி, குறைந்தது 87 பேரைக் கொன்றுள்ளன.

போதைப் பொருள் கடத்தலை எதிர்த்துப் போராடுவதை நோக்கமாகக் கொண்டே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்ற வெள்ளை மாளிகையின் கூற்று அப்பட்டமான மோசடி ஆகும். வெனிசுவேலாவில் அமெரிக்காவின் தலையீட்டின் உண்மையான நோக்கங்கள் கடந்த புதன்கிழமை தெளிவாகின. அன்றைய தினம், ட்ரம்ப் 78 மில்லியன் டாலர் மதிப்புள்ள 1.1 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெயைக் கொண்டு சென்ற ஒரு வெனிசுவேலாவின் எண்ணெய்த் தாங்கிக் கப்பல் அமெரிக்காவால் கைப்பற்றப்பட்டது.

இந்த சம்பவம் நடந்த மறுநாள், கைப்பற்றப்பட்ட எண்ணெய்க்கு என்ன ஆகும் என்று கேட்கப்பட்டபோது, ட்ரம்ப் தனது குண்டர் பாணியில், “நல்லது, அது எமக்குத் தான் என்று நினைக்கிறேன், நாமே அதை வைத்துக்கொள்வோம்” என்று பதிலளித்தார். இந்த எண்ணெய்த் தாங்கிக் கப்பல், தற்போது அமெரிக்க இராணுவத்தின் பாதுகாப்பின் கீழ், அமெரிக்க எண்ணெய் தொழிலின் மையமான டெக்சாஸிலுள்ள கால்வெஸ்டனை (Galveston, Texas) வந்தடைந்துள்ளது.

வெனிசுவேலாவிற்கு எதிரான தாக்குதலின் கொள்ளையடிக்கும் நோக்கங்களும், இலத்தீன் அமெரிக்காவில் மேற்கொள்ளப்படும் விரிவான தலையீடுகளும் கடந்த மாதம் வெள்ளை மாளிகையினால் வெளியிடப்பட்ட தேசிய பாதுகாப்பு மூலோபாயத்தில் (National Security Strategy) கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன. அந்த ஆவணம், “மன்ரோ கோட்பாட்டிற்கான ட்ரம்ப்பின் பின்னிணைப்பு” என்பதை அறிவிப்பதோடு, “மேற்கு அரைக்கோளத்தில் அமெரிக்காவின் மேலாதிக்கத்தை” மீட்டெடுப்பதையும், “எமது அரைக்கோளத்தில் மூலோபாய ரீதியாக முக்கியமான சொத்துக்களை சீனா சொந்தமாக்கிக் கொள்வதையோ அல்லது கட்டுப்படுத்துவதையோ” தடுப்பதையும் ஒரு தெளிவான இலக்காக முன்வைக்கிறது. இப்பிராந்தியத்தில் “அமெரிக்க நிறுவனங்களுக்கான மூலோபாய கையகப்படுத்தல் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை அடையாளம் காணுமாறு” இந்த ஆவணம் அரசாங்கத்தைப் பணிக்கிறது.

இந்த ஆவணம், “எமது அரைக்கோளம்” (அமெரிக்கக் கண்டம்) என்று குறிப்பிடப்படும் இரண்டு கண்டங்கள் மீதான அமெரிக்க உரிமையை திறம்பட வலியுறுத்துகிறது. இலத்தீன் அமெரிக்காவின் வளங்கள் அமெரிக்காவுக்கு “சொந்தமானதாக” இருக்கும், அவற்றை அது “கட்டுப்படுத்தும்”, ஏனெனில் ரஷ்யா மற்றும் சீனாவுடனான மோதலுக்கான ஒரு அதிகாரத் தளமாகப் பயன்படுத்த, அவற்றை பலவந்தமாக முறையில் கையகப்படுத்த அது திட்டமிடுகிறது.

வெனிசுவேலா, 300 பில்லியனுக்கும் அதிகமான பீப்பாய்களைக் கொண்டிருக்கின்ற உலகின் மிகப்பெரியளவில் நிரூபிக்கப்பட்ட எண்ணெய் வளங்களைக் கொண்டுள்ள நாடாகும். எண்ணெயைத் தவிர, இலத்தீன் அமெரிக்கா லித்தியம் மற்றும் தாமிரத்தின் பரந்த இருப்புகளையும் கொண்டுள்ளது. இவை மோட்டார்கள், மின்குறைக்கடத்திகள் (semiconductors) மற்றும் பேட்டரிகளுக்கு இன்றியமையாத பொருட்களாகும். சிலி, உலகின் முதல்தர தாமிர உற்பத்தியாளராக உள்ளது மற்றும் மிகப்பெரியளவில் லித்தியம் இருப்புகளையும் கொண்டுள்ளது.

வெனிசுவேலாவின் எண்ணெய் மற்றும் இயற்கை வளங்களை கைப்பற்றுவதற்கான அமெரிக்காவின் திட்டம், ரஷ்யா மற்றும் சீனா இரண்டையும் குறிவைத்து நகர்கிறது. வெனிசுவேலாவின் மிகப்பெரிய கடன் வழங்குநராக சீனா உள்ளது, இது 2005 இல் இருந்து 62 பில்லியன் டாலருக்கும் அதிகமான கடன்களை வழங்கியுள்ளது. இவற்றில் பெரும்பாலானவை உத்தரவாதமான எண்ணெய் விற்பனையின் மூலம் திருப்பிச் செலுத்தப்படுகின்றன. தற்போது, வெனிசுவேலாவின் ஏற்றுமதியில் 80 சதவீதத்தை சீனா வாங்குகிறது. ரஷ்யா வெனிசுவேலாவின் எரிசக்தி உள்கட்டமைப்பில் பில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்துள்ளது.

வெனிசுவேலாவுக்கு எதிரான அதன் தாக்குதலில், ட்ரம்ப் நிர்வாகம் சட்டபூர்வமான தன்மைக்கான மிகவும் அற்பமான பாசாங்குகளைக்கூட கைவிட்டுவிட்டது. 2003 ஈராக் மீதான ஆக்கிரமிப்பு, குற்றகரமானதாக இருந்தபோதிலும், புஷ் நிர்வாகம் தனது நடவடிக்கைகளுக்கு—எவ்வளவு மோசடியானதாக இருந்தாலும்—சட்டப்பூர்வ நியாயப்பாட்டைக் கட்டமைக்க குறைந்தபட்சம் முயற்சித்தது. ஆனால், இங்கு அத்தகைய எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. அமெரிக்க நிர்வாகம், ஆழ் கடலில் வைத்து மக்களைக் கொலை செய்ய, வெளிநாடுகளின் சொத்துக்களைப் பறிமுதல் செய்ய மற்றும் அரசாங்கங்களைத் தனது விருப்பப்படி கவிழ்க்கத் தனக்கு உரிமை இருப்பதாக வெறுமனே அறிவித்துள்ளது. அமெரிக்கா, இப்போது வெனிசுவேலாவை நோக்கிப் பின்பற்றும் கொள்கைக்கும், 1930களின் பிற்பகுதியில் ஹிட்லர் அண்டை நாடுகள் மீது நடத்திய படையெடுப்புகளுக்கும் இடையே எந்த அர்த்தமுள்ள வேறுபாடும் கிடையாது.

வெனிசுவேலாவில் அமெரிக்காவின் தலையீடுகளுக்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு. 1908 இல், அடுத்த 27 ஆண்டுகளுக்கு ஒரு மிருகத்தனமான சர்வாதிகாரியாக ஆட்சி செய்த ஜுவான் வின்சென்ட் கோமஸை பதவியில் அமர்த்திய ஒரு ஆட்சிக்கவிழ்ப்பை அமெரிக்கா ஆதரித்தது. இதன் மூலம் வெனிசுவேலாவின் எண்ணெய் வளங்கள் அமெரிக்க நிறுவனங்களுக்காகத் திறந்துவிடப்பட்டன.

நேரடி இராணுவத் தலையீடு அல்லது சிஐஏ சதித்திட்டங்கள் மூலம் இலத்தீன் அமெரிக்கா முழுவதும் அமெரிக்கா நடத்திய ஆட்சி மாற்ற நடவடிக்கைகளின் நீண்ட, இரத்தக்களரி வரலாற்றில் இது ஒரு அத்தியாயம் மட்டுமே. அமெரிக்கா, கவுதமாலா (1954), பிரேசில் (1964), மற்றும் சிலி (1973) ஆகிய நாடுகளில் உள்ள அரசாங்கங்களை கவிழ்த்தது; 1980களில் எல் சால்வடாரில் கொலைப் படைகளுக்கு (death squads) ஆயுதம் வழங்கியது; 1989 இல் பனாமாவை ஆக்கிரமித்தது; மேலும் சமீபத்திய ஆண்டுகளில் பிரேசிலில் ஜேர் போல்சனாரோ மற்றும் ஆர்ஜென்டினாவில் ஜாவியர் மிலே ஆகியோரின் அதிதீவிர வலதுசாரி அரசாங்கங்களை ஆதரித்துள்ளது.

வெனிசுவேலா, கொலம்பியா மற்றும் கியூபா அரசாங்கங்களைத் தூக்கியெறிந்து, இந்த நாடுகளின் இயற்கை வளங்களை கொள்ளையடித்து, தொழிலாள வர்க்கத்தை மிருகத்தனமாக ஒடுக்கக் கூடிய இரத்தக்களரி சர்வாதிகாரங்களை ஸ்தாபிப்பதே ட்ரம்ப் நிர்வாகத்தின் நோக்கமாகும்.

அமெரிக்க செய்தி ஊடகம் இந்த நடவடிக்கையின் பிரச்சாரப் பிரிவாக செயல்பட்டு வருகிறது. வார இறுதியில், CBS செய்திகள், வெனிசுவேலா எதிர்க்கட்சியின் முன்னணி நபரும், அமெரிக்க இராணுவத் தலையீட்டை வெளிப்படையாக ஆதரித்து வருபருமான மரியா கொரினா மச்சாடோவுடனான ஒரு நேர்காணலை ஒளிபரப்பியது. மச்சாடோவுக்கும் வெனிசுவேலாவிலுள்ள எதிர்க்கட்சியினருக்கும், அமெரிக்க படையெடுப்பு தேவைப்படுவதற்கான காரணம் எளிமையானது: வெனிசுவேலாவிற்குள்ளேயே இவர்களுக்கு மக்கள் ஆதரவு இல்லை. பல ஆண்டுகளாக அமெரிக்க ஆதரவுடன் கூடிய ஸ்திரமின்மைக்கு வழிவகுக்கும் இவர்களின் முயற்சிகளுக்குப் பிறகு, வாஷிங்டனின் கைப்பாவைகளின் ஆட்சிக்கு கீழ் இருப்பதுக்கு வெனிசுவேலா மக்கள் மறுத்து வருவதால், உள்நாட்டு வழிமுறைகள் மூலம் மதுரோவை வீழ்த்துவதற்கான எதிர்க்கட்சியினரின் முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன.

அமெரிக்க அரசியல் ஸ்தாபகத்திற்குள், வெனிசுவேலாவுக்கு எதிரான ட்ரம்ப் நிர்வாகத்தின் நடவடிக்கைகளுக்கு எந்த எதிர்ப்பும் இல்லை. செனட் சிறுபான்மை கட்சித் தலைவர் சக் ஷூமர், வெனிசுவேலாவில் ஆட்சி மாற்றத்தை அவர் எதிர்க்கிறாரா என்று கடந்த புதன்கிழமை கேட்கப்பட்டபோது, “பாருங்கள், வெளிப்படையாக, மதுரோ தானாகவே வெளியேறினால், எல்லோரும் அதை விரும்புவார்கள்” என்று பதிலளித்தார்.

செனட் புலனாய்வுக் குழுவில் உள்ள ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரான வேர்ஜீனியாவின் செனட்டர் மார்க் வார்னர், ABC தொலைக்காட்சியின் “இந்த வாரம்” (This Week) நிகழ்ச்சியில் ஞாயிற்றுக்கிழமை தோன்றினார். “சர்வாதிகாரி மதுரோவை வெளியேற்றுவதற்கான ட்ரம்பின் முயற்சியை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா” என்று தொகுப்பாளர் மார்த்தா ராடாட்ஸ் வார்னரிடம் கேட்டபோது, “வெனிசுவேலா மக்கள் மதுரோ வெளியேற விரும்புகிறார்கள் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்” என்று வார்னர் பதிலளித்தார்.

கடந்த வாரம், ஜனநாயகக் கட்சியின் காங்கிரஸ் தலைமை, குடியரசுக் கட்சியினருடன் இணைந்து அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய இராணுவ வரவுசெலவுத் திட்டத்தை நிறைவேற்றியது. 901 பில்லியன் டாலர் தேசிய பாதுகாப்பு அங்கீகாரச் சட்டமானது, —கூடுதல் நிதியுடன் சேர்த்து 1 டிரில்லியன் டாலருக்கும் அதிகமாக— பிரதிநிதிகள் சபையின் சிறுபான்மைத் தலைவர்களான ஹக்கீம் ஜெஃப்ரிஸ், கொறடா கேத்தரின் கிளார்க் மற்றும் ஜனநாயகக் கட்சியின் குழுக் தலைவர் பீட் அகுய்லார் ஆகியோரின் வாக்குகளைப் பெற்றது.

ஜனநாயகக் கட்சியின் ஆதிக்கப் பிரிவுகளின் குரலாக விளங்கும் நியூ யோர்க் டைம்ஸ் பத்திரிகையானது, “ஈடுகொடுக்க முடியாத நிலை: அமெரிக்க இராணுவம் தன்னை ஏன் மறுசீரமைத்துக் கொள்ள வேண்டும்” என்ற தலைப்பில் தொடர்ச்சியான தலையங்க கட்டுரைகளை வெளியிட்டுள்ளது. பென்டகன் ஒரு புதிய உலகப் போருக்குப் போதுமான அளவு தயாராகவில்லை என்று வாதிடும் அந்த நாளிதழ், “குறுகிய காலத்தில், அமெரிக்க இராணுவத்தின் இந்த மாற்றத்திற்கு கூடுதல் நிதிச் செலவு தேவைப்படலாம்” என்று ஒப்புக்கொள்கிறது. ட்ரம்ப் உடனான ஜனநாயகக் கட்சி அதிகார வர்க்கத்தின் வேறுபாடு என்னவென்றால், ரஷ்யாவுடனான இராணுவ மோதலில் ட்ரம்ப் போதிய அர்ப்பணிப்புடன் இல்லை என்ற அவர்களின் கருத்திலிருந்து வருகிறது.

இராணுவக் குவிப்பிற்கு மத்தியில் அலெக்ஸாண்ட்ரியா ஒகாசியோ-கோர்டெஸ் மற்றும் பேர்னி சாண்டர்ஸ் ஆகியோர் மௌனம் காத்து வருகின்றனர். அதே சமயம், வெனிசுவேலா கடல் பகுதியில் நிராயுதபாணியான பொதுமக்கள் மீது ட்ரம்ப்பின் படைகள் தாக்குதல் நடத்திக்கொண்டிருந்த வேளையில், நியூ யோர்க்கின் புதிய மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோஹ்ரான் மம்தானி, வெள்ளை மாளிகையில் ட்ரம்பைச் சந்தித்து புன்னகையுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதுடன், ட்ரம்ப்பின் “மலிவு வாடகை” முயற்சிகளையும் பாராட்டினார்.

ட்ரம்ப் நிர்வாகம் வெனிசுவேலாவில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இலத்தீன் அமெரிக்காவிலும், அமெரிக்காவிற்குள்ளும் ஒரு வெடிமருந்து கிடங்கிற்குத் தீ மூட்டி வருகிறது. வெனிசுவேலாவைக் கைப்பற்றி ஆக்கிரமிப்பதற்கான ஒரு போர், வெனிசுவேலா தொழிலாள வர்க்கத்திடமிருந்தும், கண்டம் முழுவதிலுமுள்ள தொழிலாளர்களிடமிருந்தும் பெரும் எதிர்ப்பைச் சந்திக்கும். இலத்தீன் அமெரிக்கா ஏற்கனவே வர்க்கப் போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் ஒரு பிராந்தியமாக உள்ளது. அமெரிக்கா மேற்கொள்ளும் ஆக்கிரமிப்பு இந்த எதிர்ப்பை மேலும் தீவிரப்படுத்தி, அமெரிக்க கண்டம் முழுவதும் புரட்சிகர எழுச்சிகளை முடுக்கிவிடும்.

இலத்தீன் அமெரிக்காவில் உள்ள தங்களது வர்க்க சகோதர சகோதரிகளின் மீதான ஏகாதிபத்திய அடக்குமுறையை எதிர்ப்பதில் அமெரிக்கத் தொழிலாளர்களுக்குப் பெரும் பங்கு உள்ளது. ட்ரம்ப் நிர்வாகத்தின் கெஸ்டாப்போ (Gestapo என்பது நாஜி ஆட்சியின் கீழ் இருந்த கொடூரமான இரகசிய பொலிஸ் படை) பாணியில், புலம்பெயர்ந்தவர்கள் மீதான சோதனைகளுக்கு எதிராக வளர்ந்து வரும் எதிர்ப்பை, ட்ரம்ப் நிர்வாகம் எதிர்கொள்கிறது; இது நாடு முழுவதிலும் உள்ள நகரங்களில் போராட்டங்களையும் வேலைநிறுத்தங்களையும் தூண்டியுள்ளது. பெருமளவிலான ஆட்குறைப்பு, குறைந்து வரும் உண்மையான ஊதியங்கள், பொதுக் கல்வி மற்றும் சுகாதாரச் சீரழிவு ஆகியவற்றின் மீதான கோபமும் அதிகரித்து வருகிறது. கரீபியன் பிராந்தியத்தில் இராணுவக் குவிப்பிற்குப் பயன்படுத்தப்படும் இராணுவ வரவுசெலவுத் திட்டத்திற்கான நிதியானது, உணவு முத்திரைகள் (Food stamps), மருத்துவ உதவி (Medicaid), மருத்துவப் பாதுகாப்பு (Medicare) மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றின் மீதான வெட்டுக்கள் மூலமே ஈடுசெய்யப்பட உள்ளது.

வெளிநாட்டில் போர் என்பது உள்நாட்டில் அடக்குமுறையைத் தீவிரப்படுத்தப் பயன்படுத்தப்படுகிறது. சர்வதேசக் கடல் பகுதிகளில் எவ்வித ஆதாரமும் அல்லது சட்ட நடைமுறையும் இன்றி மக்களைக் கொல்ல தமக்கு உரிமை உண்டு என்று கூறும் அதே நிர்வாகம், அமெரிக்காவிற்குள் கருத்து வேறுபாடுகளைக் குற்றமாக்குவதற்கான அடித்தளத்தை அமைத்து வருகிறது. வெனிசுவேலா கடல் பகுதியில் தான் செய்துவரும் கொலைகளுக்கு, அவர்கள் “பயங்கரவாதிகள்” என்று எந்த ஆதாரமும் இன்றி ட்ரம்ப் நிர்வாகம் நியாயம் கற்பித்து வருகிறது. வெளிநாட்டில் உருவாக்கப்பட்ட இந்த முன்னுதாரணம் அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும். இங்கு பாசிசத்தை எதிர்க்கும் அமெரிக்கர்களை விவரிக்க ட்ரம்ப் நிர்வாகம் ஏற்கனவே “பயங்கரவாதிகள்” என்ற அதே வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளது.

1980-களில் மத்திய அமெரிக்காவில், குறிப்பாக நிகரகுவாவை இலக்காகக் கொண்டு முழு அளவிலான போருக்கு அமெரிக்கா தயாராகிக் கொண்டிருந்தபோது, அத்தகைய போரை எதிர்க்க வாய்ப்புள்ள 300,000 பேரை வளைத்துப் பிடித்து சிறையிலடைக்க ரீகன் நிர்வாகத்தால் திட்டங்கள் தீட்டப்பட்டன. வெள்ளை மாளிகையில் ஒரு பாசிசக் கும்பல் அமர்ந்திருக்கும் நிலையில், 40 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று பாரிய அடக்குமுறைக்கான தயாரிப்புகள் மிகவும் முன்னேறிய நிலையில் உள்ளன.

எனவே, வெனிசுவேலா மீதான ஏகாதிபத்தியத் தாக்குதலுக்கு எதிரான போராட்டமானது, போர், சர்வாதிகாரம் மற்றும் சமூக எதிர்ப்புரட்சிக்கு எதிராக சர்வதேச தொழிலாள வர்க்கம் நடத்தும் ஒரு பரந்த போராட்டத்தின் ஒரு பகுதியாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டும்.

போருக்கு எதிரான எதிர்ப்பு என்பது புலம்பெயர்ந்தோர் மீதான சோதனைகள், சிக்கன நடவடிக்கைகள் மற்றும் சமூக உரிமைகள் பறிக்கப்படுவதற்கு எதிரான போராட்டத்துடன் ஒன்றிணைக்கப்பட வேண்டும். இதற்கு இரண்டு முதலாளித்துவக் கட்சிகளுடனும் நனப்பூர்வமான முறிவை ஏற்படுத்திக்கொள்வதும், தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான, சர்வதேச சோசலிச இயக்கத்தைக் கட்டியெழுப்புவதும் அவசியமாகும். இந்த அடிப்படையில் மட்டுமே, போர் மற்றும் சர்வாதிகாரத்தை நோக்கிய நகர்வை நிறுத்துவதுடன், ஒரு சிறு அளவிலான நிதிய தன்னலக்குழுக்களின் இலாபத்திற்காகவும் அதிகாரத்திற்காகவும் அல்லாமல், மனிதத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் சமூகத்தை மறுசீரமைக்கவும் முடியும்.

Loading