இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
உலக சோசலிச வலைத் தளமும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் ஏற்பாடு செய்திருந்த 2026 மே தின இணையவழிப் பேரணியில், சோசலிச சமத்துவக் கட்சி – நான்காம் அகிலம் (Socialist Eşitlik Partisi – Dördüncü Enternasyonal) அமைப்பின் தலைவர் உலாஸ் செவின்ச் இந்த உரையை ஆற்றினார்.
சோசலிச சமத்துவக் கட்சி–நான்காம் அகிலம் (Socialist Eşitlik Partisi–Dördüncü Enternasyonal) சார்பாக, உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களுடன் மே தினத்தைக் கொண்டாடி, அனைவருக்கும் எங்களின் புரட்சிகர வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். ஈரானுக்கு எதிரான ஏகாதிபத்தியப் போருக்கு மத்தியில், துருக்கியத் தொழிலாள வர்க்கம் பல தசாப்த கால அடக்குமுறையிலிருந்து விடுபட்டு களத்தில் இறங்கி வரும் சூழலில் இந்த மே தினத்தை நாம் கொண்டாடுகிறோம். இந்த எழுச்சிக்கு ஆளும் வர்க்கமும் அதன் அரச எந்திரமும் வன்முறைத் தாக்குதல் மூலம் பதிலளித்துள்ளன.
தங்களுக்கு வழங்கப்படாத ஊதியம் மற்றும் அபகரிக்கப்பட்ட பிற உரிமைகளுக்காகப் போராடுவதற்காக, ஏப்ரல் 13 அன்று எஸ்கிசெஹிரிலிருந்து புறப்பட்டு, அங்காரா வரை சுமார் 190 கிலோமீட்டர் தூரம் நடந்த டொரூக் சுரங்கத் தொழிலாளர்களின் எதிர்ப்பு, வர்க்கப் போராட்டத்தை நாட்டின் நிகழ்ச்சி நிரலில் முன்னணிக்குக் கொண்டுவந்தது. அங்காரா மக்களும், கலைஞர்கள், கல்வியாளர்கள் மற்றும் பிற தொழிற்சாலைத் தொழிலாளர்களும், சுதந்திர சுரங்கத் தொழிலாளர் சங்கத்தின் தலைமையில் இயங்கும் டொரூக் சுரங்கத் தொழிலாளர்களுக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர். இதற்குப் பதிலடியாக அரசாங்கம் கண்ணீர்ப் புகைக் குண்டுகள், பொலிஸ் முற்றுகைகள் மற்றும் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டது.
இந்தப் போராட்டம், வளர்ந்து வரும் ஒரு சுயாதீனத் தொழிலாளர் இயக்கத்தின் பகுதியாகும். அரசின் அடக்குமுறை, தொழிற்சங்க அதிகாரத்துவங்களின் காட்டிக்கொடுப்புகள், அடையாள அரசியல் ஆகியவற்றால் பல ஆண்டுகளாக ஒடுக்கப்பட்டிருந்த வர்க்கப் போராட்டம் மீண்டும் தலைதூக்குகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், இஸ்மிரில் உள்ள போலியாக் சுரங்கத் தொழிலாளர்கள் ஒரு ஜெண்டர்மெரி தடுப்பை (இராணுவ பலம்கொண்ட பொலிஸ் படை) உடைத்துக்கொண்டு, சுரங்கத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றி, 'நாட்டின் ஆட்சியைத் தொழிலாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டியதன் அவசியம்' பற்றிய பிரச்சினையை எழுப்பினர். சுமார் 5,000 மைக்ரோஸ் கிடங்குத் தொழிலாளர்கள், பொலிசின் அழுத்தத்தை மீறி, தங்களது திட்டமிடப்படாத வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்தனர்.
வளர்ந்து வரும் இந்த இயக்கம், ஏகாதிபத்தியப் போரை எதிர்ப்பதற்கும் மக்களின் அவசரமான சமூக மற்றும் ஜனநாயக அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கும் அணிதிரட்டப்பட வேண்டிய சமூக சக்தியை சுட்டிக்காட்டுகிறது. அது சர்வதேசத் தொழிலாளர் வர்க்கமாகும்.
சுயாதீனத் தொழிலாளர் இயக்கத்தின் தலைவர்களைக் குறிவைப்பது, ஒட்டுமொத்தத் தொழிலாளர் வர்க்கத்தையும் அச்சுறுத்தும் ஒரு வழிமுறையாகும். சுதந்திரச் சுரங்கத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர்களில் ஒருவரான பஷரன் அக்சு, டொரூக் சுரங்கத் தொழிலாளர்களின் பேரணியில் சேரப் புறப்பட முயன்றபோது கைது செய்யப்பட்டார். சுதந்திர ஜவுளித் தொழிற்சங்கமான BİRTEK-SEN-இன் தலைவர் மெஹ்மத் துர்க்மென், வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்கள் முன் ஆற்றிய உரையில் உண்மையைச் சொன்னதற்காக ஆறு வாரங்களாகச் சிறையில் உள்ளார். அக்பெலன் காடு மற்றும் கிராமவாசிகளின் நிலங்களைப் பாதுகாத்த எஸ்ரா இஷிக் இன்னும் சிறையில் இருக்கிறார். இந்த அடக்குமுறை, எதிர்க்கட்சிப் பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளைக் குறிவைக்கும் பரந்த அளவிலான கைது நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும்.
குறிப்பாக, அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்கு எதிராகத் தங்கள் போரைத் தொடங்கிய பிறகு, இந்த அழுத்தம் தீவிரமடைந்தது என்பது தற்செயலானதல்ல. போரின் முழுச் செலவையும் தொழிலாளர் வர்க்கமே தாங்க வேண்டியிருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தனது சொந்த நலன்களுக்காகச் சுயாதீனமாகச் செயல்படுகின்ற தொழிலாள வர்க்கத்தை, போருக்குத் தயாராகி வரும் துருக்கிய ஆளும் வர்க்கத்தால் சகித்துக்கொள்ள முடியாது.
ஜனநாயக உரிமைகளை ஒழித்து, ஒரு சர்வாதிகாரத்தைக் கட்டியெழுப்புவதன் முக்கிய நோக்கம், தொழிலாளர் வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் அணிதிரட்டல் வேரூன்றுவதற்கு முன்பே அதை ஒடுக்குவதே ஆகும். கருத்துச் சுதந்திரம், வாக்களிக்கும் மற்றும் தேர்தலில் போட்டியிடும் உரிமை, ஆர்ப்பாட்டம் செய்யும் உரிமை, மற்றும் வேலைநிறுத்தம் செய்யும் உரிமை போன்ற அடிப்படை அரசியலமைப்பு உரிமைகளைக் குறிவைக்கும் இந்தத் தாக்குதலுக்கு, தொழிலாளர் வர்க்கம் தனது சொந்த எதிர் தாக்குதல் மூலம் பதிலளிக்க வேண்டும்.
இதற்கு, டோருக் சுரங்க தொழிலாளர் போராட்டத்தை புறக்கணித்து, வர்க்கப் போர்க் கைதிகளைப் பாதுகாக்க மறுக்கும் DİSK அதிகாரத்துவ வர்க்கம் உட்பட, முழு தொழிற்சங்க அமைப்பிலிருந்தும் சுயாதீனமாக ஒன்று திரள வேண்டும். ஒவ்வொரு தொழிற்சாலையிலும், ஒவ்வொரு சுரங்கத்திலும், ஒவ்வொரு குடியிருப்புப் பகுதியிலும், ஒவ்வொரு பாடசாலையிலும் சுயாதீனமான அடிமட்டத் தொழிலாளர் நடவடிக்கை குழுக்கள் ஸ்தாபிக்கப்பட வேண்டும். இந்தக் குழுக்கள், தொழிலாளர் நடவடிக்கை குழுக்களின் சர்வதேச கூட்டணி (IWA-RFC) மூலம் எல்லைகளைக் கடந்து ஒன்றிணைக்கப்பட வேண்டும். தொழிலாளர்கள் ஒரு உலகளாவிய முதலாளித்துவத் தாக்குதலை எதிர்கொள்வதன் காரணமாக, அதை ஒரு சர்வதேச மூலோபாயத்தால் மட்டுமே எதிர்கொள்ள முடியும்.
அனைத்து வர்க்கப் போர்க் கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையைத் தொழிலாளர்கள் தங்கள் பதாகைகளில் பொறிக்க வேண்டும். இது, உலகெங்கிலும் உள்ள அனைத்து அரசியல் கைதிகளுக்கும், குறிப்பாகப் போருக்கு எதிரான தனது சர்வதேசவாத நிலைப்பாட்டிற்காக 2024 ஏப்ரலில் சிறையில் அடைக்கப்பட்ட உக்ரேனிய சோசலிஸ்டும் நமது தோழருமான போக்டான் சிரோடியுக்கிற்கும் விடுதலை கோரும் அழைப்பின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக இருக்க வேண்டும்.
தற்போது நீதித்துறை அடக்குமுறைக்கு உள்ளாகியுள்ள குடியரசுக் மக்கள் கட்சியின் (CHP) 'தொழிலாளர் சார்பு' வாய்ச்சவடால்களில் யாரும் ஏமாந்துவிடக் கூடாது. இது தனது சொந்த மாநகராட்சிகளில் உள்ள தொழிலாளர்கள் மீது வறுமை ஊதியத்தைத் திணிக்கும், வேலைநிறுத்தங்களை ஒடுக்கும் ஒரு கட்சி மட்டுமன்றி, இது 2025 செப்டம்பர் விடுத்த அறிக்கையில், ஈரானை ஒரு ஸ்திரமின்மைக்கான காரணியாக அறிவித்து, மத்திய கிழக்கில் நேட்டோவின் விரிவாக்கத்தை ஆதரித்தது. ஜெர்மனி, பிரிட்டன் மற்றும் பிரான்சில் உள்ள சி.எச்.பி.யின் சமூக ஜனநாயகக் கூட்டாளிகளின் செயல்பாடுகள், ஏகாதிபத்தியப் போர், சமூக நல வெட்டுக்கள் மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பறித்தல் ஆகியவற்றால் நிறைந்துள்ளன.
அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்கு எதிராகத் தொடங்கியுள்ள போர், நேட்டோவின் ஆதரவுடன் நடத்தப்படும் ஒரு ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புப் போராகும். இந்தப் போரில், ஈரானில் குறைந்தபட்சம் 376 பிள்ளைகள் உட்பட 3,375 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஈரானில் 3 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளனர். படசாலைகள், மருத்துவமனைகள் மற்றும் ஏனைய குடிமை உள்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டதால், வறுமையும் வேலையின்மையும் மிகப்பெரிய அளவில் அதிகரித்தன. இந்தப் போர், பிராந்தியம் முழுவதும் உணவுப் பாதுகாப்பின்மையை மோசமாக்கியுள்ளதுடன், தண்ணீர் நெருக்கடிக்கும் வழிவகுத்துள்ளது. அமெரிக்க-இஸ்ரேலியத் தாக்குதலுக்கு உதவியதற்காக ஈரானின் பதிலடியை எதிர்கொண்ட அரபு நாடுகளின் பொருளாதாரங்கள், ஒரு கடுமையான சுருக்கத்தை எதிர்நோக்குகின்றன. தொழிலாளர்கள் போருக்கும், அத்துடன் உயர்ந்த வாழ்க்கைச் செலவுக்கும் விலைகொடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.
ஈரானிய நாகரிகத்தை அழித்து, நாட்டை கற்காலத்திற்குத் தள்ளுவதாக ட்ரம்ப் அச்சுறுத்தியபோது, ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகனின் அரசாங்கம் வெறுமனே மௌனம் காக்கவில்லை. அமெரிக்காவின் பெயரைக் குறிப்பிடாத, தற்காப்பு உரிமையைப் பயன்படுத்தியமைக்காக ஈரானைக் கண்டிக்கும் ரியாத் பிரகடனத்தில் கையெழுத்திட்டதன் மூலம், அது போரில் தனது நிலைப்பாட்டை சந்தேகத்திற்கு இடமின்றித் தெளிவுபடுத்தியுள்ளது. துருக்கியில் உள்ள தளங்கள், போரின் உள்கட்டமைப்பிற்குத் தொடர்ந்து சேவை செய்கின்றன. அஜர்பைஜான் எண்ணெய் இன்னும் துருக்கி வழியாக இஸ்ரேலுக்குச் செல்கிறது. ஈரானுக்கு எதிரான போர் தொடங்கியதைத் தொடர்ந்து, நேட்டோ இன்கிர்லிக் மற்றும் குரேசிக் தளங்களில் பேட்ரியாட் வான் பாதுகாப்பு அமைப்புகளை நிலைநிறுத்தியது. இவற்றுக்கும் மேலாக, இந்த ஆண்டுக்கான நேட்டோ உச்சிமாநாடு ஜூலை மாதம் அங்காராவில் நடைபெறவுள்ளது.
ஆளும் வர்க்கத்தின் இராணுவ-மூலோபாய மற்றும் நிதி சார்ந்த ஏகாதிபத்திய சார்புநிலையின் விளைவான இந்த ஒத்துழைப்பு மனப்பான்மை, தொழிலாள வர்க்கத்தின் மனப்பான்மைக்கு முற்றிலும் நேர்மாறானது. கருத்துக் கணிப்புகளின்படி, துருக்கிய மக்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் ஈரானுக்கு எதிரான அநியாயப் போரையும், துருக்கியில் உள்ள அமெரிக்கத் தளங்களையும் எதிர்க்கின்றனர்.
எர்டோகன் அரசாங்கம், போருக்கான பழியை இஸ்ரேல் மீது மட்டும் சுமத்துவதன் மூலம் இந்த எதிர்ப்பைத் திசை திருப்ப முயற்சிக்கிறது. ஆனால், இஸ்ரேலிய சியோனிசம் இப்பகுதியில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தாக்குதல் நாயாகச் செயல்படுகிறது. அமெரிக்கக் கொள்கை இஸ்ரேலால் தீர்மானிக்கப்படுவதில்லை. ஈரான் மீதான தாக்குதலை வெறும் இஸ்ரேலியப் போராக சித்தரிப்பதானது, அமெரிக்க ஏகாதிபத்தியத்தினதும் ட்ரம்ப் நிர்வாகத்தினதும் உடந்தையை மூடிமறைப்பதை தவிர வேறொன்றுமில்லை.
துருக்கிக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான பதற்றம், உள்நாட்டு மக்களின் கருத்தை சமாளிப்பதோடு மட்டும் நின்றுவிடவில்லை. மத்திய கிழக்கில் முழுமையான ஆதிக்கத்தை நாடும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இரண்டு கூட்டாளிகளுக்கும் இடையே வளர்ந்து வரும் போட்டியின் விளைவே இது. ட்ரம்பின் காசா அமைதி மன்றம் என்று அழைக்கப்படும் அமைப்பில் இணைந்து, ஈரானிய ஆட்சியை சண்டையின்றி சரணடையுமாறு அறிவுறுத்தியுள்ள அங்காராவின் நிலைப்பாட்டிற்கும், பாலஸ்தீன மற்றும் ஈரானிய மக்களுடன் நின்று, ஏகாதிபத்தியத்தையும் சியோனிசத்தையும் வெறுக்கும் துருக்கிய மக்களின் நிலைப்பாட்டிற்கும் இடையே ஒரு சரிசெய்ய முடியாத முரண்பாடு உள்ளது.
இந்தச் சூழ்நிலைகளில், 'அமைதி மற்றும் ஜனநாயகமயமாக்கலை' நோக்கிய நடவடிக்கைகளை எடுக்குமாறும், குர்து பிரச்சினையைத் தீர்க்குமாறும் எர்டோகன் அரசாங்கத்துக்கு அழைப்புவிடுப்பது, தொழிலாளர்கள் முன் உண்மையை மறைப்பதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு ஏமாற்று வேலை என்பது முன்னெப்போதையும் விட தெளிவாகியுள்ளது. அங்காராவுக்கும் குர்திஷ் தொழிலாளர் கட்சிக்கும் (PKK) இடையிலான பேச்சுவார்த்தைகளின் நோக்கம், குர்து மக்களின் நியாயமான ஜனநாயகக் கோரிக்கைகளை நிறைவேற்றுவது அல்ல. துருக்கிய மற்றும் குர்து முதலாளித்துவ வர்க்கம், அமெரிக்காவின் நிலைப்பாட்டிற்கு இணங்க ஒரு உடன்பாட்டை எட்டுவதையும், உள்நாட்டில் தொழிலாள வர்க்கத்தை கட்டுப்படுத்துவதையும் உறுதி செய்வதே இதன் நோக்கமாகும்.
மேலும், ஏகாதிபத்தியத்தின் கீழ் ஒரு 'ஜனநாயக அமைதியை' கொண்டுவருதல் என்பது ஒரு பெரும் ஏமாற்று ஆகும். முதலாம் உலகப் போரின் போது, 1915இல் விளாடிமிர் லெனின் இந்த விஷயத்தில் பின்வருமாறு எழுதினார்: “அமைதிவாதம், அதாவது கருத்தியல் ரீதியாக அமைதியைப் போதிப்பது, தொழிலாள வர்க்கத்தை ஏமாற்றுவதற்கான வழிமுறைகளில் ஒன்றாகும். முதலாளித்துவத்தின் கீழ், குறிப்பாக அதன் ஏகாதிபத்திய கட்டத்தில், போர்கள் தவிர்க்க முடியாதவை... தொடர்ச்சியான புரட்சிகளை நடத்தாமல் ஒரு ஜனநாயக அமைதியைக் கற்பனை செய்ய முடியும் என்ற எண்ணம் முற்றிலும் தவறானது.”
துருக்கி, ஈரான், சிரியா மற்றும் ஈராக்கில், குர்து மக்களின் ஜனநாயக உரிமைகளை அங்கீகரிப்பதற்கான போராட்டத்தின் களம், ஏதாவதொரு ஏகாதிபத்திய சக்தியோ அல்லது முதலாளித்துவ அரசாங்கமோ அல்ல, மாறாக தொழிலாளர் வர்க்கமே ஆகும். ஒடுக்கப்பட்ட தேசங்களைச் சேர்ந்த தங்கள் சகோதர சகோதரிகளின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்காமல், தொழிலாளர்களால் சோசலிசத்திற்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல முடியாது.
இந்தப் போராட்டத்தில், அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் சர்வதேச தொழிலாளர் வர்க்கம், குர்து, துருக்கிய, அரபு, பாரசீக, யூத மற்றும் பிற தேசிய இனங்களைச் சேர்ந்த தொழிலாளர்களின் கூட்டாளியாக விளங்குகிறது. லியோன் டிராட்ஸ்கி தனது “நிரந்தரப் புரட்சிக் கோட்பாடு” நூலில் விளக்கியது போல், தீர்க்கப்படாத அனைத்து ஜனநாயகப் பணிகளையும் நிறைவேற்றுவதும், ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டமும் தொழிலாளர் வர்க்கத்தின் தலைமையின் கீழ் மட்டுமே முன்னெடுக்கப்பட முடியும். இதன் பொருள், மத்திய கிழக்கின் ஒரு சோசலிசக் கூட்டமைப்பிற்காகப் போராடுவதாகும். உலக சோசலிசப் புரட்சிக்கான போராட்டத்தின் ஒரு பகுதியான இந்தப் போராட்டத்தின் வெற்றி, தொழிலாளர் வர்க்கத்தின் புரட்சிகரத் தலைமையைக் கட்டியெழுப்புவதைப் பொறுத்தே அமைகிறது.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் துருக்கியப் பிரிவாக, 2025 ஜூனில் சோசலிச சமத்துவக் கட்சி (Socialist Eşitlik Partisi) நிறுவப்பட்டமை, இந்தப் போராட்டத்தில் ஒரு முக்கியமான முன்னேற்றத்தைக் குறிக்கிறது. ட்ரொட்ஸ்கிசத்தின் சர்வதேசவாத வேலைத்திட்டம் மற்றும் கொள்கைகளின் அடிப்படையில் துருக்கியில் ஒரு கட்சி நிறுவப்படுவது இதுவே முதல் முறையாகும். உலகளாவிய புவிசார் அரசியல் மற்றும் வர்க்கப் போராட்டத்தில் துருக்கியின் தீர்க்கமான நிலை குறித்தும், முதலாளித்துவம் மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான பூகோளப் போராட்டத்தில் அதன் பன்னாட்டுப் பாட்டாளி வர்க்கத்தின் ஆற்றல் குறித்தும், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) வலியுறுத்தியது உறுதிப்படுத்தப்பட்டு ஏறக்குறைய ஒரு வருடம் கடந்துவிட்டது.
இந்த மே தினத்தில், இப்பிராந்தியம் முழுவதிலுமுள்ள தொழிலாளர்கள், புத்திஜீவிகள் மற்றும் இளைஞர்களை இந்தப் போராட்டத்தில் எங்களுடன் இணையவும், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் புதிய பிரிவுகளைக் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கவும் நாங்கள் அழைக்கிறோம்.
