மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
மே 3 அன்று, ஜோன்-லூக் மெலோன்சோன் TF1 இன் மாலைச் செய்தி ஒளிபரப்பில் 2027 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தார். ஆன்-கிளேர் கூட்ரே உடனான அவரது நேர்காணல் ஒரு புரட்சிகர முன்னோக்கை முன்வைக்கவில்லை, மாறாக, அத்தகைய முன்னோக்கு இல்லாததையே அம்பலப்படுத்தியது. அவர் தனது கட்சியான அடிபணியாத பிரான்ஸ் (LFI – La France insoumise) கட்சியுடன் இணைந்து, சிக்கன நடவடிக்கை மற்றும் போருக்கு எதிராக தொழிலாளர்களை அணிதிரட்டுவதற்கு மாறாக, பிரெஞ்சு முதலாளித்துவ நிறுவனங்களை நோக்கிய ஒரு தேசியவாத நோக்குநிலைக்குள் அவர்களை நசுக்குவதற்காகவே செயல்படுகிறார்.
2022-ல் நடந்த கடைசி ஜனாதிபதித் தேர்தலில் தனது ஓய்வை அறிவித்திருந்த போதிலும், மீண்டும் போட்டியிடுவதற்கான தனது முடிவை விளக்குமாறு வற்புறுத்தப்பட்டபோது, மெலென்சோன் அந்தக் கேள்வியை தட்டிக்கழித்தார்: “நான் எனது மனதை மாற்றிக்கொள்ளவில்லை.... விவாதம் ஏதோ ஒரு அழகியல் கண்ணோட்டத்தில் யார் சிறந்த வேட்பாளர் என்பது பற்றியது அல்ல. மாறாக, வரவிருக்கும் சூழ்நிலையை எதிர்கொள்ள யார் சிறப்பாகத் தயாராக இருக்கிறார்? என்பதைப் பற்றியதே ஆகும்”. மேலும், ஒரு “பரவலான போர்” ஏற்படும் அபாயத்தை அவர் இங்கு சுட்டிக்காட்டினார்.
இன்று, இந்த நெருக்கடியை எதிர்கொள்ள பிரான்சுக்குத் தேவையான நபராக, தான் மட்டும்தான் இருக்கிறேன் என்று மெலென்சோன் உரிமை கோருகிறார். ஆனால், இந்த நெருக்கடி உருவானதற்கு அவருடைய தொடர்ச்சியான அடிபணிவுகளே முக்கியக் காரணமாக இருந்துள்ளன. ஜனாதிபதித் தேர்தல் போட்டி என்ற விஷயத்தில், அவர் நிச்சயமாகத் தன் கருத்தை மாற்றியிருக்கிறார். ஏப்ரல் 2022-இல், ஜனாதிபதித் தேர்தலின் முதல் சுற்று வாக்குப்பதிவு நடந்த அன்று மாலையில், வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து கொண்டிருந்த போதும், அவர் இன்னும் இரண்டாம் சுற்றுக்குத் தகுதி பெறக்கூடும் என்ற நம்பிக்கை இருந்த நிலையிலும், தோல்வியை ஒப்புக்கொள்வதற்காக அவர் அவசரமாக கேமராக்களின் முன்னால் தோன்றினார். தனது அரசியல் ஓய்வை அறிவித்த அவர், தனது வாக்காளர்களை “லூ பென்னுக்கு எதிராக” —அதாவது, மக்ரோனுக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு அழைப்பு விடுத்தார்.
உலக சோசலிச வலைத் தளம் (WSWS) அவரது தலைகீழ் மாற்றத்தை அன்றே ஆய்வு செய்தது. தோல்வியை நேர்மையாக ஒப்புக்கொள்வதற்குப் பதிலாக, மெலன்சோனின் “ஓய்வு” என்பது, அவருக்கு வாக்களித்திருந்த மில்லியன் கணக்கான தொழிலாளர்களையும் இளைஞர்களையும் அணிதிரட்ட விடாமல் செயலற்றதாக்குவதையும், போர் மற்றும் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான ஒரு சுயாதீனமான போராட்டத்திற்கான எந்தவொரு முன்னோக்கையும் அவர்களிடம் இருந்து பறிப்பதையும் நோக்கமாகக் கொண்டிருந்தது. அவரது விலகல் அறிக்கை ஒரு பணிவான செயல் அல்ல, மாறாக அது அவரது பிரச்சாரத்தால் உருவாக்கப்பட்ட சமூக ஆற்றலை அணைத்துவிடும் நோக்கில் வடிவமைக்கப்பட்ட, முன்கூட்டியே சரணடைவதற்கான ஒரு சமிக்ஞையாகும்.
பிரெஞ்சு பொதுமக்களின் பெரும்பான்மையினரின் எதிர்ப்பையும் மீறி, நாடாளுமன்ற வாக்கெடுப்பு இல்லாமலேயே மக்ரோனால் திணிக்கப்பட்ட ஓய்வூதிய சீர்திருத்தத்திற்கு எதிராக 2023 இல் நடந்த வேலைநிறுத்தங்களின் போது இது தெளிவாகியது. ஜனவரி மற்றும் மே மாதங்களுக்கு இடையே மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மீண்டும் மீண்டும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். LFI அதை ஒரு நாடாளுமன்ற முட்டுச்சந்திற்குள் தள்ளியது: நாடாளுமன்றப் பெரும்பான்மையினர் கடுமையாக எதிர்த்தபோதிலும், அந்தச் சீர்திருத்தத்தை ரத்து செய்யும் மசோதாவிற்கு வாக்களிக்குமாறு அது தேசியப் பேரவையைக் கேட்டுக்கொண்டது. LFI —அந்த எதிர்ப்பை மக்ரோனை வீழ்த்துவதற்கும், உக்ரேனில் ஏற்கனவே நடந்து வரும் போரை நிறுத்துவதற்கும் ஒரு பொது வேலைநிறுத்தமாக மாற்றுவதற்குப் பதிலாக— அதனை ஒரு நாடாளுமன்ற முட்டுச்சந்துக்குள் தள்ளியது: நாடாளுமன்ற பெரும்பான்மை அதை கடுமையாக எதிர்த்த போதிலும், அந்தச் சீர்திருத்தச் சட்டத்தை ரத்து செய்வதற்கான மசோதாவிற்கு வாக்களிக்குமாறு அது தேசிய சட்டமன்றத்திற்கு அழைப்பு விடுத்தது.
மெலென்சோன் அந்த நேரத்தில், “தேசிய சட்டமன்றத்தில் எங்களுக்கு ஒரு சந்திப்பு உள்ளது ... இந்த மோதல் நீடிக்க வேண்டும் என்று யாரும் விரும்பவில்லை” என்று அறிவித்திருந்தார். இந்த வார்த்தைகள் இன்றைய அவரது அரசியலைச் சுருக்கமாகக் கூறுகின்றன: அதாவது, தொழிலாள வர்க்கத்தை ஒரு தீர்க்கமான போராட்டத்திற்குத் தயார்படுத்துவது அல்ல, மாறாக முற்றிலும் நிறுவன ரீதியிலான தீர்வு என்ற முட்டுச்சந்திற்குள் அதைத் தள்ளுவதுதான் அவரது அரசியலாகும்.
ஈரான் மற்றும் காஸா: பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் உடந்தையைப் பற்றிய மௌனம்
மெலென்சோன் சர்வதேச சூழ்நிலையை பின்வருமாறு பகுப்பாய்வு செய்தார்: “நாம் உலக வரலாற்றில் மிகவும் கொந்தளிப்பான ஒரு காலகட்டத்திற்குள் நுழைந்து கொண்டிருக்கிறோம். நாம் ஒரு பரவலான போரினால் அச்சுறுத்தப்படுகிறோம். ஒரு அதிர்ச்சியூட்டும் காலநிலை மாற்றத்தால் நாம் அச்சுறுத்தப்படுகிறோம். மேலும், எம்மை அழுத்திக்கொண்டிருக்கும் ஒரு பொருளாதார மற்றும் சமூக நெருக்கடியையும் நாம் எதிர்கொண்டிருக்கிறோம்.” பிரான்சில் எரிபொருள் விலை உயர்வு குறித்து அவர் தொடர்ந்து பேசினார்:
“இவை எதுவுமே வானத்திலிருந்து குதிக்கவில்லை. இது போதுமான அளவு வேலைக்குச் செல்லாத ஏழை மக்கள் செய்த தவறும் அல்ல. இவை அனைத்தும் இரண்டு நாடுகளால் தொடங்கப்பட்ட ஒரு போர் நடவடிக்கை: அவை இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா. எனவே, இந்தச் சூழ்நிலையை உருவாக்கியவர்கள் யாரோ, அவர்களிடம் ஒரு அரசியல் காரணமும் உள்ளது.”
ஈரானுக்கு எதிரான இராணுவ ஆக்கிரமிப்பிற்கு ட்ரம்ப் மற்றும் இஸ்ரேலிய ஆட்சியின் வெளிப்படையான மற்றும் மறுக்க முடியாத பொறுப்பை விமர்சித்த மெலோன்சோன், பின்னர் மக்ரோனின் இடத்தில் தான் இருந்திருந்தால் என்ன செய்திருப்பார் என்ற பத்திரிகையாளரின் கேள்விக்கு பதிலளித்தார். சர்வதேச சட்டத்தைப் பாதுகாப்பதற்கும் போரை நிறுத்துவதற்கும் ஸ்பெயினில் உள்ள PSOE-Sumar அரசாங்கத்துடன் தான் ஒரு கூட்டணியை உருவாக்கியிருப்பேன் என்று மெலோன்சோன் பதிலளித்தார். அவர் பின்வருமாறு கூறினார்:
“நான் சர்வதேச சட்டத்தை எனது பதாகையாக மாற்றியிருப்பேன்... ஸ்பானியர்களுடன் இணைந்து ஒரு மறுப்பு முன்னணியை உருவாக்கியிருப்பேன்... நாங்கள் ஒரு விஷயத்திலிருந்து தொடங்குவோம்: இஸ்ரேலுடனான ஐரோப்பிய ஒன்றியத்தின் வணிக ஒத்துழைப்பு உறவைத் துண்டிப்பது. ஐரோப்பிய ஒன்றியம் இல்லாமல் இஸ்ரேலால் உயிர்வாழ முடியாது. அதனுடன் சேர்த்து, ஆயுதத் தடையும் விதித்திருப்பேன்.”
இந்த வாதம் பார்ப்பதற்கு ஒரு சீரான தன்மையைக் கொண்டிருப்பது போலவும், காஸாவில் நடந்து வருகின்ற இனப்படுகொலையைத் தொடர்ந்து இஸ்ரேலைக் குறிவைத்து ஆயுதத் தடை விதிப்பது போன்ற நியாயமான நடவடிக்கைகளை முன்மொழிவது போலவும் தோன்றும். ஆனால், இது பல தீர்க்கமான கேள்விகளில் மௌனம் காக்கிறது. முதலாவதாக, இதற்கு நாம் மீண்டும் வருவோம். முதலாளித்துவ PSOE-Sumar அரசாங்கத்துடனான கூட்டணியால் தொழிலாளர்களுக்கு ஏற்படும் விளைவுகளைப் பற்றி இது பேசவில்லை.
ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக, மக்ரோன் ஒரு அரசியல் குற்றவாளி என்று மெலோன்சோன் கூறவில்லை. கடந்த பிப்ரவரி 28 அன்று போர் தொடங்கியதிலிருந்து, ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிற்கு இஸ்த்ரெஸ் மற்றும் பாரசீக வளைகுடாவில் உள்ள தனது இராணுவத் தளங்களை பிரான்ஸ் வழங்கியது என்று அவர் கூறவில்லை. காஸாவில் இனப்படுகொலை நடந்து கொண்டிருந்த போதும், மக்ரோனின் கீழ் பிரான்ஸ் இஸ்ரேலுக்கு தொடர்ந்து ஆயுதங்களை வழங்கியது என்று அவர் கூறவில்லை. மக்ரோன் நெதன்யாகு ஆட்சியுடன் தனது நட்பை பகிரங்கமாக அறிவித்ததன் மூலம், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் தன்னை உடந்தையாக ஆக்கிக் கொண்டார் என்பதையும் அவர் கூறவில்லை.
பிரெஞ்சு அரசு நிறுவனங்களின் எல்லைக்குள்ளேயே தொழிலாளர்களை முடக்கி வைக்க விரும்பும் மேலென்சோன், பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் அரசியல்ரீதியான குற்றவியல் பரிணாமத்தைப் பற்றியோ அல்லது இஸ்ரேலிய அரசாங்கத்தைப் பாதுகாப்பதற்காக மக்ரோனின் அமைச்சர்கள் நவ-பாசிச தேசியப் பேரணி (RN) கட்சியினருடன் இணைந்து அணிவகுத்து நின்றார்கள் என்ற உண்மையைப் பற்றியோ எதுவும் பேசுவதில்லை.
இந்த மௌனம் எங்கிருந்து வருகிறது? இது அவருடைய சொந்தச் செயல்பாடுகளிலிருந்தே வருகிறது. 2024 நாடாளுமன்றத் தேர்தலின் போதும், காஸாவில் இனப்படுகொலை மாதக்கணக்கில் நடந்து கொண்டிருந்த போதும், இஸ்ரேலின் கொள்கைகளை ஆதரித்துவந்த சோசலிசக் கட்சி (PS) மற்றும் மக்ரோனிச அணியின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு மெலென்சோன் அழைப்பு விடுத்தார். இன்று மக்ரோனை இனப்படுகொலைக்கு உடந்தையாக இருப்பவர் என்று சுட்டிக்காட்டுவது, மெலோன்சோன் தனது சொந்த புதிய மக்கள் முன்னணிக்காக (NFP) விளக்கத்தை அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். இந்த மௌனம் அடக்கம் அல்ல; இது குற்றத்திற்கு உடந்தையாக இருப்பதாகும்.
உலக சோசலிச வலைத்தளம் ஆவணப்படுத்தியுள்ளபடி, அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்கு எதிராகப் போரைத் தொடங்கியபோது, மெலென்சோன் இந்தப் போருக்கு எதிராக வேலைநிறுத்தம் செய்யுமாறு மில்லியன் கணக்கான LFI வாக்காளர்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை. ஈரானிய தொழிலாளர்களின் போராட்டங்கள் குறித்தும், அந்தப் போரைத் தயாரிப்பதற்கான வாஷிங்டனின் சூழ்ச்சிகள் குறித்தும் மௌனம் காத்த அவர், சர்வதேச சட்ட மீறல்களுக்காக வருத்தம் தெரிவிப்பதோடு மட்டுமே தன்னை நிறுத்திக்கொண்டார்.
மேலும், ஈரானில் சிஐஏ மற்றும் மொசாட் தலையிட்டுக் கொண்டிருந்த ஒரு இயக்கத்தை, குறிப்பாக ஜனவரி 14 மற்றும் அதற்குப் பிறகான தனது ட்வீட் பதிவுகளில், அவர் அதனை ஒரு “குடிமக்கள் புரட்சி” என்று விவரித்தார். அவ்வாறு செய்வதன் மூலம், அந்த இயக்கத்தில் தலையிட்ட அனைத்து சக்திகளுக்கும் அவர் ஒரு ஆதரவாளராக மாறினார். ஏனெனில், “குடிமக்கள் புரட்சி” என்பது அவருடைய மக்களின் சகாப்தம் என்ற புத்தகத்தின் மையக் கருத்தாகவும், அவர் இன்றும் தொடர்ந்து முன்னெடுக்கும் முன்னோக்காகவும் உள்ளது. இந்த வழியில், ஈரானிலும் மத்திய கிழக்கு முழுவதிலும் ஏகாதிபத்தியம் மற்றும் சியோனிசத்தின் தலையீட்டை அவர் மூடிமறைத்தார்.
சமூக நெருக்கடி குறித்து: விலைகளை முடக்குங்கள், ஆனால் 2027 வரை காத்திருங்கள்
மெலோன்சோன் தனது நேர்காணலின் பெரும் பகுதியை எரிபொருள் விலைகளுக்காக ஒதுக்கினார், விலையை முடக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். மில்லியன் கணக்கான தொழிலாளர்களுக்கு உண்மையாக புரியும் வகையில், அவர் பின்வருமாறு தொடர்ந்து கூறினார்:
“பெருமளவிலான மக்களின் ஊதியத்தின் ஒரு பகுதி, அவர்கள் வேலைக்குச் செல்வதற்கு அவசியமாகத் தேவைப்படும் பெட்ரோலுக்காகத் திருடப்படுகிறது. ஆம், அவர்களுடைய ஊதியம் நேரடியாக டோட்டல் நிறுவனப் பங்குதாரர்களின் பாக்கெட்டுகளுக்குச் செல்கிறது. நான் பழைய சொற்களஞ்சியத்தை [அதாவது, மார்க்சிய மொழியை, இதனை மெலென்சோன் காலாவதியானது எனக் கருதுகிறார்— பதிப்பாசிரியர் குறிப்பு] பயன்படுத்தினால், நான் கூறுவேன்: இது உழைப்பிலிருந்து மூலதனத்திற்குப் பணம் கைமாறுவதாகும்”
மூலதனம்-உழைப்பு வேறுபாட்டின் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிடும் கூற்றைத் தவிர, இந்த நோயறிதல் பரந்த அளவில் சரியானது. எரிபொருள் விலை நெருக்கடி என்பது ஹோர்முஸ் நீரிணையை ட்ரம்ப் முற்றுகையிட்டதன் நேரடி விளைவாகும் மற்றும் உலகப் பொருளாதாரம் முழுவதும் தொடர்ச்சியான நெருக்கடிகளைத் தூண்டும் எரிசக்தி சந்தைகளின் ஊக வணிகத்தின் விளைவாகும். இது உண்மையில் திட்டமிட்ட திருட்டு ஆகும். ஆனால், விலையேற்றத்தை தடுப்பதுக்கு நாம் என்ன செய்ய வேண்டும்?’ என்ற கேள்வியை மெலென்சோன் கேட்கவில்லை.
இந்த நேர்காணலில் அவர் அளிக்கும் மறைமுகமான பதில்: ஒரு வருடம் காத்திருங்கள், பின்னர் என்னை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுங்கள். ஆனால், தற்போதைய சூழ்நிலையில், இந்த செயலற்ற தன்மை என்பது அரசியல் ரீதியாகக் குற்றவியல் தன்மையைக் கொண்டதாகும்.
ஹோர்முஸ் நீரிணை முற்றுகையால் தூண்டப்பட்ட நெருக்கடி —போக்குவரத்து, உணவு, வீட்டுவசதி என தற்போது மக்களைத் தாக்கி வருகிறது. இது 2027-ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் இரண்டாம் சுற்று முடியும் வரை காத்திருக்காது. அதற்குள், உலகளாவிய பொருளாதார மந்தநிலை ஆழமாக வேரூன்றிவிடக்கூடும், மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் தங்கள் வேலைகளை இழந்திருக்கவும் கூடும். விலையேற்றத்தை தடுக்கவும், எண்ணெய் நிறுவனங்களின் யுத்த கால இலாபங்களைப் பறிமுதல் செய்யவும், எல்லாவற்றிற்கும் மேலாக, போரையும் உலகப் பொருளாதாரத்தின் எரிசக்தி கழுத்து நெரிப்பை தடுத்து நிறுத்தவும் ஒரு சர்வதேச சமூக அணிதிரட்டல் அவசியமாகிறது.
ஆயினும் மெலோன்சோன் இதற்கு நேர்மாறானதைச் செய்கிறார்: அவர் தனது வாக்காளர்களைத் தேர்தல் காலக்கெடு வரை காத்திருக்குமாறும், முதலாளித்துவ நிறுவனங்களின் கட்டமைப்பிற்குள் பொறுமையாக இருக்குமாறும், டோட்டல் நிறுவனத்தின் சொத்துக்களைப் பறிமுதல் செய்வதற்குப் பதிலாக, அதனுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக உறுதியளிக்கும் ஒரு பிரதிநிதியிடம் தங்களின் சமூக அதிகாரத்தை ஒப்படைக்குமாறும் கேட்டுக்கொள்கிறார். இந்த வழியில், அவர் தொழிலாள வர்க்கம் தனது சொந்த கூட்டு வலிமையைப் பற்றிய விழிப்புணர்வைப் பெறுவதைத் தடுத்து, சர்வதேச அளவிலான அணிதிரட்டலுக்கான எந்தவொரு முன்னோக்கையும் செயலிழக்கச் செய்கிறார். இது போராட்டத்திற்கான ஒரு புரட்சிகரத் திட்டம் அல்ல. இது அணிதிரட்டலைத் தடுக்கும் ஒரு திட்டமாகும்.
“புதிய பிரான்ஸ்”: மக்கள் எதிர் வர்க்கம்
மெலோன்சோன் தனது பிரச்சாரமானது அவர் “புதிய பிரான்ஸ்” என்று அழைப்பதை முன்வைக்கும் என்று அறிவித்தார், அதற்கு அவர் இன மற்றும் பாலின அடையாளத்தை முன்னிறுத்தி ஒரு மக்கள் நல வடிவத்தைக் கொடுக்க முயல்கிறார். அந்த முழக்கத்திற்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக அவர் மேலும் கூறியதாவது:
“மூன்று பிரெஞ்சு மக்களில் ஒருவருக்கு வெளிநாட்டுப் பூர்வீகம் உள்ளது. இரண்டு குடும்பங்களில் ஒரு குடும்பம் தனது பூர்வீகப் பகுதியை விட்டு வெளியேறியுள்ளது. 1958 இல் இருந்ததை விட பெண்கள் முற்றிலும் மாறுபட்ட அந்தஸ்தைப் பெற்றுள்ளதை நீங்கள் காணவில்லையா? முன்னெப்போதையும் விட இப்போது அதிக எண்ணிக்கையில் இளைஞர்களும் முதியவர்களும் இருக்கிறார்கள். இவை அனைத்தும் சேர்ந்ததுதான் புதிய பிரான்ஸ். புதிய பிரான்ஸ் என்பது பிரான்சின் ஒரு பகுதி மற்றொரு பகுதிக்கு எதிராக நிற்பது அல்ல; அது ஒட்டுமொத்த பிரான்ஸ் ஆகும்.”
பெண்களையும், இன அல்லது தேசிய சிறுபான்மையினரையும் முன்னிலைப்படுத்துவதன் மூலம், இந்த புதிய பிரான்சுக்குள்ளும் இருக்கும் வர்க்கப் பிரிவினையை மெலென்சோன் புறந்தள்ளுகிறார். உண்மையில், இந்த வர்க்கப் பிரிவினை “பழைய” பிரான்சில் இருந்ததைப் போன்றதே ஆகும். இந்த அடையாளப் பிரிவுகளின் கீழ் முதலாளித்துவ வர்க்கத்தினர், சிறு சொத்து உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் ஆகியோரை ஒன்றாகக் கலப்பதன் மூலம், ஒரு மார்க்சியப் பார்வையில் மிக முக்கியமாக இருக்க வேண்டிய ஒன்றை அவர் அப்படியே விட்டுவிடுகிறார்: அதாவது, “புதிய” மற்றும் “பழைய” பிரான்ஸ் ஆகிய இரண்டிலும் உள்ள பெரும்பான்மையான மக்கள், முதலாளித்துவ தன்னலக்குழுவால் சுரண்டப்படும் தொழிலாளர்களே ஆவர்.
போர், பாசிசம் மற்றும் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக, ஒவ்வொரு நாட்டிலும் எழுப்பப்பட்டுள்ள இன மற்றும் பாலின எல்லைகள் உட்பட, அனைத்து தேசிய எல்லைகளையும் கடந்து தொழிலாளர்கள் ஒன்றுபட வேண்டும். “புதிய பிரான்ஸ்” என்ற அரசியல் இத்தகையதொரு வளர்ச்சிக்கு எதிராகச் செயல்படுகிறது. முக்கிய நகரங்களின் புறநகர்ப் பகுதிகளில் மட்டுமே தேர்தல் பிரச்சாரங்களில் கவனம் செலுத்துவதன் மூலம், பிரான்சின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளின் சுரங்க மற்றும் எஃகு உற்பத்தித் தளங்கள் போன்ற தொழிலாளர் இயக்கத்தின் பிற பாரம்பரிய மையங்களை நவ-பாசிச RN கட்சியிடம் அவர் தாரை வார்க்கிறார். 2024 தேர்தல்களில், அங்கு சென்று பிரச்சாரம் செய்யுமாறு LFI கட்சிக்குள்ளிருந்து வந்த கோரிக்கைகளைக் கூட அவர் நிராகரித்தார்.
ஒரு வர்க்கப் பார்வைக்கு பதிலாக “மக்கள்” மற்றும் இன அல்லது பாலினப் பிரிவுகளை மாற்றீடு செய்வது என்பது வெறும் வாய்வீச்சு சரிசெய்தல் அல்ல: இது ஒரு அரசியல் முடிவாகும். தொழிலாளர்களை வர்க்க ஐக்கியத்துக்கான அவசியமான போராட்டத்திலிருந்து திசைதிருப்புவதன் மூலம், ஒரு ஜனரஞ்சக அரசியல் சூழலை உருவாக்குவதற்குச் சாதகமாக இது அமைகிறது. இந்தச் சூழலில், முதலாளித்துவ தன்னலக் குழுவால் நவ-பாசிச ஜனரஞ்சக அரசியலை மிக இயல்பான ஒன்றாக மாற்ற முடியும்.
இதற்கான மாற்றீடு: சர்வதேச ஐக்கியத்தைக் கட்டியெழுப்புதல், தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனம்
தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் எரியும் பிரச்சினைகள் எதுவும் ஜனாதிபதித் தேர்தல்கள் மூலம் தீர்க்கப்படாது என்பதை TF1-இல் மெலன்சோனின் நேர்காணல் நிரூபிக்கிறது. இந்த நேர்காணல் ஆளும் வர்க்கத்திற்கு ஒரு தெளிவான சமிக்ஞையை அனுப்புகிறது: உலகப் போர், இனப்படுகொலை மற்றும் சிக்கன நடவடிக்கை மற்றும் பாசிசத்திற்கு எதிராக தொழிலாளர்களை அவசியமான முறையில் அணிதிரட்டுவது போன்ற பிரச்சினைகளை விலக்கி, தேர்தல் பிரச்சாரத்திற்காக ஒரு அரசியல் கட்டமைப்பை உருவாக்க மெலோன்சோன் முயற்சிக்கிறார்.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) பிரெஞ்சுப் பிரிவான சோசலிச சமத்துவக் கட்சி (PES) எப்போதும் வலியுறுத்தி வந்ததை இது விளக்குகிறது: LFI என்பது ஒரு குட்டி முதலாளித்துவ போலி-இடது அமைப்பாகும், இது தொழிலாள வர்க்க எதிர்ப்பை வாக்குப்பெட்டியை நோக்கியும் முதலாளித்துவ அரசின் கட்டமைப்பை நோக்கியும் திருப்புகிறது.
ஈரானுக்கு எதிரான போரை எதிர்கொள்ளும் போது, மெலோன்சோன் அணிதிரட்டவில்லை — மாறாக, அவர் வேடிக்கை பார்க்கிறார். காஸாவில் நடக்கும் இனப்படுகொலையை எதிர்கொள்ளும் போது, அவர் மக்ரோன் உடந்தையாக இருப்பதை மறைக்கிறார். ஏனெனில் அவரே 2024 தேர்தல்களில் மக்ரோனின் கூட்டாளிகளுக்கு வாக்களிக்குமாறு கோரினார். ஹோர்முஸ் நீரிணை முற்றுகையால் தூண்டப்பட்ட சமூக நெருக்கடியை எதிர்கொள்ளும் போது, அவர் தொழிலாளர்களின் அணிதிரட்டலை அல்ல, மாறாகத் தேர்தலுக்காகக் காத்திருப்பதை முன்மொழிகிறார். இறுதியாக, வர்க்கப் பதட்டங்களின் வெடிப்பை எதிர்கொள்ளும் போது, வர்க்கங்களைக் கடந்த ஒரு கூட்டணியின் ஒற்றுமையைப் பாதுகாப்பதற்காக, அவர் தொழிலாள வர்க்கத்திற்குப் பதிலாக “மக்களைப்” பிரதியீடு செய்கிறார்.
முன்னாள் PSOE-பொடெமோஸ் என்று அழைக்கப்பட்ட PSOE-சுமர் அரசாங்கத்துடன் கூட்டணி அமைக்க அவர் விடுத்த அழைப்பு, ஒரு மெலென்சோன் அரசாங்கம் எப்படி இருக்கும் என்பதற்கான ஓர் எச்சரிக்கையாகவும் அமைய வேண்டும். ஸ்பானிய அரசாங்கம் தொழிலாளர்களுக்குச் சார்பானது அல்ல. அது பாரிய இராணுவச் செலவின அதிகரிப்பு, சமூகச் சிக்கன நடவடிக்கை, கட்டலான் தேசியவாதிகள் ஒடுக்கப்படுவதற்கு எதிரான போராட்டங்களை ஒடுக்குதல் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக, ஸ்பெயினில் வேலைநிறுத்தங்களை திட்டமிட்டு ஒடுக்குதல் போன்ற கொள்கைகளைப் பின்பற்றி வருகிறது.
நவம்பர் 2021 இல் காடிஸில் (Cadiz) நடந்த உலோகத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்கள் அல்லது மார்ச்-ஏப்ரல் 2022 இன் தேசிய லாரி ஓட்டுநர்களின் வேலைநிறுத்தத்தில் தொழிலாளர்கள் போராட்டத்தில் இறங்கியபோது, அவர்களை அடக்குவதற்காக PSOE-பொடெமோஸ் அரசாங்கம் பாதுகாப்புப் படைகளை அனுப்பியது. மெலோன்சோன் மௌனம் காக்கும் இந்த அனுபவங்கள், தொழிலாளர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக அமைய வேண்டும். மெலோன்சோன் பதவிக்கு வந்தால், 1980கள் மற்றும் 1990களில் மெலோன்சோன் இன்னும் PS உறுப்பினராக இருந்தபோது பிரான்சில் PS செய்ததைப் போலவே, அவரும் தொழிலாளர்களின் அணிதிரட்டல்களை ஒடுக்கும் திறன் கொண்டவராக இருப்பார்.
உண்மையில், ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலியப் போரும் அதன் உலகளாவிய பொருளாதார விளைவுகளும், நாம் ஒரு கடுமையான முதலாளித்துவ நெருக்கடிக் கட்டத்திற்குள் நுழைந்துள்ளோம் என்பதை நிரூபிக்கின்றன. இது சூழ்நிலைக்கு ஏற்ற சர்வதேச அரசியல் பதிலை அவசியமாக்குகிறது. பிரான்ஸ், ஈரான், அமெரிக்கா மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள தொழிலாளர்கள் ஒரே எதிரிகளை எதிர்கொள்கின்றனர் —அந்த எதிரிகள் பல்லாயிரக்கணக்கான உயிர்களைப் பலிகொடுத்து, தங்கள் இலாபங்களைப் பாதுகாக்கப் போர் தொடுக்கும் முதலாளித்துவக் தன்னலக் குழு ஆட்சியாளர்கள் ஆவர். இந்தச் சூழ்நிலைக்கான பதில் தேசிய அளவிலோ, நிறுவன அளவிலோ, அல்லது ஓராண்டுக்குத் தள்ளிப்போடுவதாகவோ இருக்க முடியாது.
போர், சிக்கன நடவடிக்கைகள் மற்றும் திட்டமிட்ட கொள்ளையை எதிர்த்துப் போராட உண்மையாகவே விரும்பும் தொழிலாளர்கள், மெலன்சோனின் வேட்பாளர் தேர்வில் தங்கள் கருவியைக் காணமாட்டார்கள். அவர்கள் தொழிற்சங்க அதிகாரத்துவங்களிலிருந்து சுயாதீனமான சமானியர்கள் குழுக்களை உருவாக்க வேண்டும்; சர்வதேச அளவில் தங்கள் வர்க்க சகோதர சகோதரிகளுடன் ஒன்றிணைய வேண்டும். மேலும், மெலென்சோன் தலைமையிலான புதிய மக்கள் முன்னணியுடன் (Nouveau Front Populaire) தொடர்புடைய அரசியல் மற்றும் தொழிற்சங்க அமைப்புகளிலிருந்து சுயாதீனமாக அணிதிரள வேண்டும்.
இத்தகைய போராட்டத்தை முன்னெடுக்க, இந்த முன்னோக்கையும் அரசியல் மூலோபாயத்தையும் ஆதரிப்பவர்கள் முதலில் ஒன்றிணைந்து அமைப்பாகத் திரள வேண்டும். இதன் பொருள் சோசலிச சமத்துவக் கட்சியை (PES) கட்டியெழுப்புவதாகும் —இதுதான் நிரந்தரப் புரட்சி தத்துவத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச மற்றும் சுயாதீனமான அமைப்பிற்கான முன்னோக்கை, பிரான்சில் பாதுகாக்கும் ஒரே அமைப்பாகும்.
- பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தல்களின் பின்னணியில் இந்த முன்னோக்கின் உள்ளடக்கத்தைக் குறிக்கும் வகையில், PES பின்வரும் கோரிக்கைகளை முன்வைக்கிறது:
- ஈரானுக்கு எதிரான போரையும் காஸாவில் நடந்துவரும் இனப்படுகொலையையும் நிறுத்து!
- மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவிலிருந்து பிரெஞ்சுப் படைகள் வெளியேற்று!
- ஏகாதிபத்தியப் போர்களுக்கு ஒரு யூரோ கூட வேண்டாம், ஒரு சிப்பாய் கூட வேண்டாம்!
- தொழிலாளர்களை அணிதிரட்டுவதன் மூலம் விலைகளை முடக்கி, போர் இலாபங்களைப் பறிமுதல் செய்!
- போருக்கு எதிராகவும், முதலாளித்துவ தன்னலக்குழுவின் சொத்துக்களைப் பறிமுதல் செய்யவும், சோசலிசத்திற்காகவும், ஒரு சர்வதேச தொழிலாளர் வர்க்க இயக்கம் வேண்டும்!
