இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்
2022 மே மாதம், நாட்டில் நடந்த மாபெரும் வெகுஜன எழுச்சியின் போது, முன்னாள் அரசாங்கப் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரல மற்றும் அவரது பொலிஸ் பாதுகாவலர் கொல்லப்பட்ட வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பன்னிரண்டு பேர், உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யத் தயாராகி வருகின்றனர்.
பலவீனமான சான்றுகளின் அடிப்படையில் வழங்கப்பட்ட அவர்களின் குற்றத்தீர்ப்புகளும் தண்டனைகளும் நீதியின் கேலிக்கூத்தாகும். ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவின் பதவியிழப்பில் முடிவடைந்த அந்த எழுச்சியில் பங்கேற்ற அனைவரையும் அச்சுறுத்தும் நோக்கிலேயே இந்த 12 பேரும் தண்டிக்கப்படுகின்றனர்.
பெப்ரவரி 1 அன்று கம்பஹா உயர் நீதிமன்றத்தின் விசாரணை அமர்வு வழங்கிய தீர்ப்பைத் தொடர்ந்து, இந்த நபர்கள் தற்போது கொழும்பில் உள்ள வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
'கொலை' மற்றும் 'சட்டவிரோதக் கூட்டம் கூடியமை' உட்பட குற்றச்சாட்டுகளில் இந்த 12 பேரையும் நீதிமன்றம் குற்றவாளிகள் எனக் கண்டறிந்துள்ளது. இந்த வழக்கில் 43 பிரதிவாதிகள் சம்பந்தப்பட்டிருந்தனர். தொடர்புடைய குற்றங்களுக்காகப் பலருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனைகள் வழங்கப்பட்ட அதேநேரம், போதிய ஆதாரங்கள் இல்லாததால் பலர் விடுவிக்கப்பட்டனர்.
குறிப்பிடத்தக்க வகையில், இந்தத் தீர்ப்பு ஒருமனதாக வழங்கப்படவில்லை. மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்குத் தலைமை தாங்கிய தலைமை நீதிபதி சஹான மபாபண்டார, 'வழக்குத் தொடுத்த தரப்பு வலுவான வழக்கை முன்வைக்கவில்லை' என்று கூறி, மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார்.
அவர் மேலும் கூறியதாவது: 'குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் எதுவும், அதில் பெயரிடப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக வழங்குத் தொடுத்த தரப்பால் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை என்று நான் காண்கிறேன். அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளிலிருந்து குற்றவாளிகளை நான் விடுவிக்கிறேன்.'
மற்ற இரண்டு நீதிபதிகள் தலைமை நீதிபதியின் தீர்ப்புடன் உடன்படாததோடு 'சந்தேக நபர்களில்' 12 பேர் கொலைக் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தனர்.
இலங்கையில் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி கொல்லப்பட்ட நான்கு மாத கால வெகுஜன எழுச்சி, 2022 ஏப்ரலில் வெடித்தது. இதில் நாடு முழுவதும் இலட்சக்கணக்கான தொழிலாளர்கள், கிராமப்புற ஏழைகள் மற்றும் இளைஞர்களும் பங்குபற்றினர். கோவிட்-19 பெருந்தொற்று மற்றும் உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான நேட்டோவின் பினாமிப் போரினாலும் தூண்டப்பட்ட பொருளாதார நெருக்கடிக்காக, உழைக்கும் மக்களைப் பொறுப்பேற்க வைக்கும் நோக்கில், இராஜபக்ஷ அரசாங்கம் அவர்களின் வாழ்க்கை நிலைமைகள் மீது நடத்திய கடுமையான தாக்குதல்களுக்குப் பதிலடியாகவே இந்த மாபெரும் போராட்டங்கள் நடைபெற்றன. எரிபொருள், மருந்து மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களுக்குக் கடுமையான பற்றாக்குறையும், விண்ணை முட்டும் விலையேற்றமும், பல மணிநேர மின்வெட்டும் ஏற்பட்டன.
ஏப்ரல் 9 அன்று தொடங்கி, கொழும்பில் உள்ள காலிமுகத் திடல், போராட்ட இயக்கத்தின் மையமாக மாறியது; ஆயிரக்கணக்கானோர் திடலை ஆக்கிரமித்தனர். ஏப்ரல் 28 மற்றும் மே 6 ஆகிய திகதிகளில், இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் ஒரு நாள் பொது வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இரண்டாவது வேலைநிறுத்தத்திற்கு, இலட்சக்கணக்கானோர் ஹர்த்தால் அல்லது வணிக நிறுவனங்களின் பொது முடக்கத்தின் மூலம் ஆதரவளித்தனர்.
இந்த நிகழ்வுகளால் அதிர்ச்சியடைந்த, அப்போதைய பிரதமரும் ஜனாதிபதியின் மூத்த சகோதரருமான மஹிந்த இராஜபக்ஷ, மே 9 அன்று, ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.) கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களைத் தனது இல்லத்திற்கு அழைத்தார். அமரகீர்த்தி இந்தக் கூட்டத்தில் பங்கேற்றதாகத் தெரிகிறது.
பிரதமர் மற்றும் ஏனைய ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. தலைவர்களின் உரைகளுக்குப் பிறகு, அவர்களது ஆதரவாளர்கள் பிரதமர் இல்லத்துக்கு அருகே இருந்த போராட்டக்காரர்களைத் தாக்கினர். பின்னர் அவர்கள் காலிமுகத் திடலுக்கு பேரணியாகச் சென்று, நிராயுதபாணி ஆக்கிரமிப்பாளர்களை வன்முறையாகத் தாக்கினர். பொலிசும் இராணுவமும் அந்த அத்துமீறிய குண்டர்களை முன்னேற அனுமதித்தன. சில ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதேசத் தலைவர்களும் போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல்களையும் அவர்களது முகாமை அழிப்பதையும் வழிநடத்துவதை காணக்கூடியதாக இருந்தது.
காலிமுகத் திடலில் இருந்த போராட்டக்காரர்களின் கூடாரத்தின் மீது வலதுசாரி குண்டர்கள் தாக்குதல் நடத்தியபோது
சுமார் 150 போராட்டக்காரர்கள் காயமடைந்தனர், அவர்களில் பலர் படுகாயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இந்த வன்முறைத் தாக்குதல், வெகுஜன எழுச்சியில் ஒரு திருப்புமுனையாக அமைந்ததுடன், தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகள் எனப் பலதரப்பட்ட மக்களையும் ஈர்த்தது. நாடு முழுவதும் சீற்றம் பரவியதுடன், பல நகரங்களிலும் மாநகரங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. ஆயிரக்கணக்கான தபால், சுகாதார மற்றும் துறைமுகத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்து பேரணி நடத்தினர்.
அன்று மாலை, கொழும்பிலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நிட்டம்புவவில், நூற்றுக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அமரகீர்த்தியின் வாகனம் கூட்டத்தில் சிக்கிக்கொண்டது. உள்ளூர் தகவல்களின்படி, அவரது பொலிஸ் மெய்க்காப்பாளர் ஆர்ப்பாட்டத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில், ஒரு இளைஞர் கொல்லப்பட்டதுடன் மற்றொருவர் காயமடைந்தார். பின்னர், பாராளுமன்ற உறுப்பினரும் மெய்க்காப்பாளரும் அருகிலுள்ள ஒரு கட்டிடத்திற்குள் தஞ்சம் புகுந்தனர், பின்னர் அங்கு அவர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன.
வழக்குத் தொடுத்த தரப்பு, சூழ்நிலைச் சான்றுகளைப் பெரிதும் நம்பியிருந்தது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிலரை அடையாளம் காண சிசிடிவி காட்சிகள் பயன்படுத்தப்பட்டதாகத் தெரியவருகின்ற போதிலும், கொலைகளை யார் செய்தார்கள் என்பதை நிலைநாட்ட நேரடி காணொளி ஆதாரமோ அல்லது நேரில் கண்ட சாட்சியமோ சமர்ப்பிக்கப்படவில்லை. பாராளுமன்ற உறுப்பினரும் அவரது பாதுகாவலரும் கொல்லப்பட்ட இரண்டாவது மாடியில் அல்லாமல், தரை மற்றும் முதல் மாடிகளில் மட்டுமே கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. ஆதாரங்களின் இந்த அப்பட்டமான பற்றாக்குறை, 12 பேரை குற்றவாளியாக்கி அவர்களுக்கு மரண தண்டனை விதிப்பதில் நீதிமன்றத்தைத் தடுக்கவில்லை.
கைது செய்யப்பட்ட 12 பேரில் பெரும்பாலானோர், இலங்கையின் பொருளாதார வீழ்ச்சியால் பாதிக்கப்பட்ட ஏழை மற்றும் கீழ்-நடுத்தர வர்க்கக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். மேல்முறையீடு செய்யத் தயாராகிக் கொண்டிருந்த சிலரின் குடும்ப உறுப்பினர்களிடம் உலக சோசலிச வலைத் தளத்தின் செய்தியாளர்கள் பேசினர். கைதுகள், பல ஆண்டுகால விளக்கமறியல் மற்றும் அதிகரித்து வரும் சட்ட நடவடிக்கை செலவுகளாலும் அவர்களின் வாழ்க்கை சிதைந்துவிட்டது.
முதல் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட தனுஷ்க லக்ஷந்த விக்ரமாராச்சி, ஒரு முச்சக்கர வண்டி ஓட்டுநராகப் பணியாற்றி, தனது குடும்பத்தின் பிரதான வருமானம் ஈட்டுபவராக இருந்தார். தற்போது தனது நான்கு வயது மகளைப் பராமரிக்கப் போராடிவரும் அவரது துணைவியான விஜிதா, அவரது வருமானத்தைக் கொண்டும், வெளிநாட்டில் பணிபுரியும் உறவினர்களின் அவ்வப்போதைய ஆதரவுடனேயே குடும்பத்தை நடத்திக்கொண்டிருந்ததாகக் கூறினார்.
'அவர் கைது செய்யப்பட்ட பிறகு எல்லாம் சரிந்துவிட்டது,' என்று அவர் விளக்கினார். 'நீதிமன்றங்களுக்குச் செல்வதற்கும், வழக்கறிஞர்களுக்குப் பணம் செலுத்துவதற்கும், சிறைகளுக்குச் செல்வதற்கும் நாங்கள் லட்சக்கணக்கான ரூபாய்களைச் செலவழித்தோம். இப்போது மேல்முறையீட்டு வழக்கை எப்படித் தொடர்வது என்று எங்களுக்குத் தெரியவில்லை.'
நிட்டம்புவ நகரத்திற்கு அருகில் வாடகை வீட்டில் வசித்து வரும் அவர்கள், கடுமையான நிதி நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர். தனுஷ்காவிற்கு முந்தைய திருமணத்தின் மூலம் உருவான பிள்ளைகளும் உள்ளனர். அவர்களுக்கு ஆதரவு தேவைப்படுகிறது. இந்த நிலைமை குடும்பத்தின் மீது மேலதிக சுமையை ஏற்படுத்துகிறது.
மற்றொரு பிரதிவாதியான, 48 வயதான இந்திகா குமார விஜேசிங்க, அரசுக்குச் சொந்தமான சமுர்த்தி வங்கியில் பணிபுரிந்தார்.
மேல்முறையீடு செய்வதற்கும் வழக்கறிஞர்களை நியமிப்பதற்கும் மில்லியன் கணக்கான ரூபாய் தேவைப்படும் என்று உறவினர்கள் கூறினர். ஏற்கனவே கடனில் மூழ்கியுள்ள அவர்கள், மிகுந்த விரக்தியில் உள்ளனர்.
தண்டிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் மீது இந்த வழக்கு ஏற்படுத்திய உளவியல் தாக்கத்தை அவர்கள் விவரித்தனர். பிள்ளைகள் பாடசாலைகளில் கேலிக்கு உள்ளாக்கப்பட்டுள்ள அதேநேரம் மனைவிகளும் பெற்றோரும் தங்கள் சமூகங்களுக்குள் தனிமைப்படுத்தலை எதிர்கொள்கின்றனர். பல குடும்பங்கள் இப்போது பிழைப்பதற்காக தற்காலிக கூலி வேலை, கடன்கள் அல்லது வெளிநாடுகளில் உள்ள உறவினர்களின் உதவியைச் சார்ந்துள்ளன.
2022 ஆம் ஆண்டு கலவரத்தில் சிக்கிய சாதாரண மக்கள் மீது கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல்களுடன் தொடர்புடைய பல அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிற அரசியல் அமைப்பாளர்கள் குற்றமற்றவர்கள் என விடுவிக்கப்பட்டுள்ளனர். சில அறிக்கைகளின்படி, அவர்கள் ஏற்படுத்திய சேதத்திற்கு விகிதாசாரமற்ற பெரும் தொகைகளைக் கொண்ட காப்புறுதி இழப்பீடுகளையும் பெற்றுள்ளனர்.
இந்த இரட்டை நிலைப்பாடு, முதலாளித்துவ அரசின் மற்றும் அதன் சட்ட அமைப்பின் வர்க்கப் பண்பை அம்பலப்படுத்துகிறது.
மக்கள் விடுதலை முன்னணி / தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி./தே.ம.ச) அரசாங்கம், 2022 மாபெரும் எழுச்சியின் பின்னணியில் உள்ள அபிலாஷைகளைத் தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்துவதாகப் பொய்யாகக் கூறிக்கொள்கின்ற போதிலும், அது நீதிமன்றத்திற்கு எதிராகத் தலையிட மறுத்துவிட்டது. பெப்ரவரி 23 அன்று, தண்டனை பெற்ற 12 பேரின் உறவினர்கள் ஜனாதிபதி செயலகத்திற்குச் சென்று, 'எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை விளக்கி' ஒரு கடிதத்தைக் கொடுத்தனர். அவர்களுக்கு எந்தப் பதிலும் கிடைக்கவில்லை.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரின் தாய், தனது மகன் நகரில் உருவாகி வரும் பதற்றமான சூழ்நிலையைக் கவனிப்பதற்காக மட்டுமே மே 9 அன்று வீட்டை விட்டு வெளியேறியதாகக் கூறினார். 'அவர் ஒரு குற்றவாளி அல்ல, நாங்கள் ஏழை மக்கள். எங்களுக்கு அதிகாரமோ, பணமோ, செல்வாக்கோ இல்லை. நாங்கள் நீதியை மட்டுமே கேட்கிறோம்,' என்று அவர் கூறினார்.
மேல்முறையீட்டை முன்னெடுக்கக் காத்திருக்கும் குடும்பங்கள் உணரும் விரக்தியை மற்றொரு உறவினர் விவரித்தார். 'ஒவ்வொரு நாளும் நாங்கள் அச்சத்தில் வாழ்கிறோம். அவர்களுக்கு என்ன நடக்கும் என்று எங்களுக்குத் தெரியாது. எங்கள் வாழ்க்கை அழிக்கப்பட்டுவிட்டது என்பது மட்டுமே எங்களுக்குத் தெரியும்,' என்று அவர் கூறினார்.
இந்த நீதிமன்றத் தீர்ப்பும் தண்டனையும் ஒட்டுமொத்த உழைக்கும் வர்க்கத்திற்கும் நாட்டின் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்ட 12 பேரும், வெகுஜனங்களிடமிருந்து பெருகி வரும் எதிர்ப்பைக் கண்டு பீதியடைந்துள்ள, உழைக்கும் மக்களை அச்சுறுத்துவதற்கு ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்த விரும்புகின்ற ஒரு ஆளும் வர்க்கத்தின் பலிகடாக்களாவர்.
பல தசாப்தங்களாக, இலங்கை மரண தண்டனையை நிறைவேற்றுவதற்குத் தற்காலிகத் தடையை பேணுகின்ற போதிலும், நீதிமன்றங்கள் தொடர்ந்து மரண தண்டனைகளை வழங்கி வருகின்றன. தவறான தண்டனைகள், அரசியல் தலையீடு மற்றும் சட்டப் பாதுகாப்பைப் பெறுவதில் சமத்துவமின்மை ஆகியவற்றின் அபாயங்களைச் சுட்டிக்காட்டி, மனித உரிமை அமைப்புகள் இந்த நடைமுறையை மீண்டும் மீண்டும் விமர்சித்துள்ளன.
ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் என அனைத்து முதலாளித்துவக் கட்சிகளும், அந்த 12 பேர் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் கதி குறித்து மௌனம் காத்து வருகின்றன. விசாரணையின் நேர்மை, பிளவுபட்ட தீர்ப்பு, அல்லது மரண தண்டனை விதிப்பதில் சூழ்நிலைச் சான்றுகளைச் சார்ந்திருப்பது குறித்து யாரும் எந்தக் கவலையையும் எழுப்பவில்லை.
இதற்கிடையில், முதலாளித்துவ ஊடகங்கள் நிட்டம்புவ சம்பவத்தை, 2022 ஆம் ஆண்டின் பரந்த கொந்தளிப்புகளிலிருந்து துண்டிக்கப்பட்ட ஒரு தனிப்பட்ட குற்றச் செயலாகவே பெரும்பாலும் சித்தரித்துள்ளன. தொலைக்காட்சி அலைவரிசைகளும் செய்தித்தாள்களும், நாடு தழுவிய போராட்டங்களுக்குத் தூண்டுகோலாக இருந்த சமூக விரக்தி மற்றும் அரசியல் கோபத்தைப் பற்றி சிறிதும் கவனம் செலுத்தாமல், பாராளுமன்ற உறுப்பினரதும் அவரது மெய்க்காப்பாளரினதும் மரணங்களை மீண்டும் மீண்டும் தூக்கிப்பிடிக்கின்றன.
சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.), 12 பேர் மீதான குற்றத்தீர்ப்புகளையும் மரண தண்டனைகளையும் திட்டவட்டமாக எதிர்க்கிறது. மரண தண்டனை என்பது, ஒடுக்கப்பட்டவர்களை அச்சுறுத்தவும் அடக்கவும் வரலாற்று ரீதியாகப் பயன்படுத்தப்பட்ட ஒரு கொடூரமான கருவியாகும்.
இலங்கையிலும் சர்வதேச அளவிலும் உள்ள தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கும் அனைவரையும், ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. பாராளுமன்ற உறுப்பினர் படுகொலை தொடர்பான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் கைவிடவும், தவறாகத் தண்டிக்கப்பட்ட 12 பேரை விடுதலை செய்யவும் கோருமாறு சோ.ச.க. அழைப்பு விடுக்கிறது. 2022 மே 9 அன்று நிராயுதபாண போராட்டக்காரர்கள் மீது வன்முறைத் தாக்குதல்களை ஏற்பாடு செய்த உண்மையான குற்றவாளிகளே தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.
மேலும் படிக்க
- இலங்கை: 2022 எழுச்சியின் மத்தியில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரைக் கொன்றதற்காக 12 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது
- ஜனநாயகத்திற்கும் சோசலிசத்திற்குமான இலங்கை தொழிலாளர்களினதும் கிராமப்புற வெகுஜனங்களினதும் மாநாட்டிற்காக!
- இலங்கை: "மக்கள் போராட்டத்தின் செயல் திட்டம்" பற்றிய கலந்துரையாடல்: தொழிலாளர்-ஒடுக்கப்பட்ட மக்களை முதலாளித்துவ அரசோடு கட்டிவைக்கும் வஞ்சகப் பொறி
