இலங்கை பொலிஸ் கொடூரமான பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தமிழ் சொல்லிசைக் கலைஞரை கைது செய்துள்ளது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

சங்கீத்சன் கணேஸ்குமார் [Photo: Sangeethsan Ganeskumar]

இலங்கையின் போரினால் பேரழிவிற்குள்ளான வடபகுதியின் கிளிநொச்சி, உதயநகரைச் சேர்ந்த 'ஹிப்ஹாப் சங்கீ' (Hiphop Sangee) என்ற பெயரில் கலைத்துறையில் இயங்கி வரும் 24 வயதான சொல்லிசைக் கலைஞரான சங்கீத்சன் கணேஸ்குமார், கொடூரமான பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் ஜூன் 2 அன்று யாழ்ப்பாண பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். சாவகச்சேரி நீதவான் முன்னிலையில் நிறுத்தப்பட்டதை அடுத்து, பொலிசின் வற்புறுத்தலின் பேரில் அவர் ஜூன் 17 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ், தடுப்புக்காவலில் வைக்கப்படுபவர்களை ஒரு வருடத்திற்கும் மேலாக நீண்ட காலத்திற்குத் தடுத்து வைக்கவும், நீண்ட விசாரணைக்கு உட்படுத்தவும் முடியும். சித்திரவதைகள் மற்றும் பிற வகையான துஷ்பிரயோகங்கள் மூலம் ஒப்புதல் வாக்குமூலங்களைப் பெறுவதில் இலங்கை பொலிஸ் பேர் போனது. சங்கீத்சன் இப்போது இந்த கடுமையான ஆபத்துக்களை எதிர்கொள்கிறார்.

மே 31 அன்று, யாழ்ப்பாண மாவட்டத்தின் சாவகச்சேரி, நாவற்குழியில் உள்ள ஒரு இந்து ஆலயத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியொன்றில் சங்கீத்சன் பங்கேற்றிருந்தார். இந்த நிகழ்வின் போது, பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளை மறைமுகமாகப் பெருமைப்படுத்தும் பாடல்களை அவர் பாடியதாக பொலிஸ் குற்றம் சாட்டுகிறது. பின்னர் அந்தப் பாடல்களின் திருத்தப்பட்ட பதிப்புகள் அவரது டிக்டொக் கணக்கிலும் பதிவேற்றப்பட்டிருந்தன.

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் சங்கீத்சனைச் சந்தித்த பின்னர் ஊடகவியலாளர்களிடம் பேசிய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம். ஏ. சுமந்திரன், இந்த பாடகரின் செயல்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றமாகாது என்றும், இந்த வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் சட்டத்தரணி கே. சயந்தன் நீதிமன்றத்தில் வாதிட்டதாகக் கூறினார். நீதிமன்றம் அவரை விடுதலை செய்ய மறுத்துவிட்டதால், உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு ஒன்று தாக்கல் செய்யப்படும் என்றும் சுமந்திரன் தெரிவித்தார்.

சனிக்கிழமையன்று, பாடகரை உடனடியாக விடுதலை செய்யக் கோரி கிளிநொச்சி நகரில் நூற்றுக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று வடக்கு நகரான வவுனியாவிலும் ஒரு போராட்டம் நடைபெற்றது.

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) கருத்துச் சுதந்திரத்தின் மீதான இந்த அப்பட்டமான தாக்குதலைக் கண்டிப்பதுடன், சங்கீத்சனை உடனடியாகவும் நிபந்தனையின்றியும் விடுதலை செய்ய வேண்டும் என கோருகிறது. சோ.ச.க., தமிழ் தேசியவாதத்தையும் பிரிவினைவாத விடுதலைப் புலிகளையும் சோசலிச அடிப்படையில் நீண்ட காலமாக எதிர்த்து வருகின்ற போதிலும், இந்த கொள்கை ரீதியான கோரிக்கையை முன்வைக்கின்றது.

இந்தக் கைது நடவடிக்கையானது, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயகவின் அரசாங்கத்தின் மேற்பார்வையின் கீழ் ஜனநாயக உரிமைகள் மீது தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் தாக்குதலின் ஒரு பகுதியாகும். அரசியல் எதிர்ப்பாளர்களையும், தொழிலாளர்கள், ஏழைகள் மற்றும் இளைஞர்களின் போராட்டங்களையும் ஒடுக்குவதற்கு பொலிஸ்-அரசு வழிமுறைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

மக்கள் விடுதலை முன்னணி / தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி./தே.ம.ச.) அரசாங்கம், எதேச்சதிகாரமான நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறையை ஒழிப்பதாகவும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதாகவும், அடக்குமுறைச் சட்டங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதாகவும், கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாப்பதாகவும் உறுதியளித்துக்கொண்டே ஆட்சிக்கு வந்தது. 2009 இல் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதுடன் முடிவுக்கு வந்த 26 ஆண்டுகால தமிழர்-விரோத போரின் வடுக்களால் மக்கள் இன்னும் அவதிப்பட்டு வரும் வடக்கு மற்றும் கிழக்கில்,  அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாகவும், இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள சாதாரண மக்களுக்குச் சொந்தமான நிலங்களை மீள ஒப்படைப்பதாகவும் ஜே.வி.பி./தே.ம.ச. வாக்குறுதியளித்திருந்தது.

கைது செய்யப்பட்ட ராப் இசைக்கலைஞர் சங்கீத்சன் கணேஸ்குமாரை விடுதலை செய்யக் கோரி ஜூன் 6 அன்று கிளிநொச்சியில் நடைபெற்ற போராட்டம் [Photo: Facebook/Varadan Kirushna]

முந்தைய அரசாங்கங்களின் ஜனநாயக விரோத ஆட்சிக்கு எதிரான மக்களின் கோபத்தைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதற்காகவே இந்த வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. திசாநாயகவின் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் அந்த வாக்குறுதிகள் கைவிடப்பட்டன. அது பயங்கரவாதத் தடைச் சட்டத்தை தாராளமாகப் பயன்படுத்துவதற்கு பொலிசுக்கு உடந்தையாக இருப்பதுடன், தொழிற்சங்கப் போராட்டங்களைத் தடை செய்வதற்காக அத்தியாவசிய பொதுச் சேவை விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளதோடு, சாதாரண சட்டங்களை விஞ்சுவதற்குப் பயன்படுத்தக்கூடிய அவசரகால விதிமுறைகளையும் பிரகடனப்படுத்தியுள்ளது.

தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு மற்றும் கிழக்கில், 'விடுதலைப் புலிகளின் பயங்கரவாத மீளுருவாக்கத்தை' தடுப்பதாக எனக் கூறிக்கொண்டு, அரசியல் செயற்பாட்டாளர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் இளைஞர்களை பொலிஸ் மற்றும் இராணுவமும் கண்காணித்து வருகின்றன. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகள், சிங்கள இனவாத அரசியலையும் தமிழர்களுக்கு எதிரான பேரினவாதத்தையும் ஊக்குவித்து வரும் ஜே.வி.பி.யின் நீண்டகால வரலாற்றுப் பின்னணியுடன் ஒத்துப்போகின்றன.

சங்கீத்சனின் கைது நடவடிக்கையானது, ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் மற்றும் பாடகர்களுக்கு எதிராகத் திட்டமிட்ட முறையில் முன்னெடுக்கப்படும் அச்சுறுத்தல் மற்றும் ஒடுக்குமுறையின் பாகமாகும். மே மாத இறுதியில், பாடகர் எஸ். கோகுலனின் நேரடி இசை நிகழ்ச்சி ஒன்றின் போது, மேடையில் ஏறிய பொலிஸ் அதிகாரிகள், அவரது பாடல் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இருப்பதாகக் கூறி பாடலை நிறுத்துமாறு உத்தரவிட்டனர். அடுத்த நாள், அவர் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

செம்மணி மனிதப் புதைகுழி குறித்து செய்தி வெளியிட்டதற்காக, கணபதிப்பிள்ளை குமனன் என்ற ஊடகவியலாளர் 2025 ஆகஸ்டில் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். அந்த இடத்தில் போரின் போது கொல்லப்பட்டவர்களின் எச்சங்கள் என நம்பப்படும், குழந்தைகளின் எலும்புக்கூடு உட்பட சுமார் 300 எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன,

கிளிநொச்சியில் ஆசிரியராகப் பணிபுரியும் எழுத்தாளரான பிரதீபன் தீபச்செல்வன், இந்தியாவில் அச்சிடப்பட்ட புத்தகங்களை இலங்கைக்குக் கொண்டு வந்தபோது, எந்தவொரு ஆதாரமும் இன்றி அவை 'தேசிய பாதுகாப்புக்கு' அச்சுறுத்தலாக அமையலாம் என்று கூறி, சுங்க அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்தனர்.

ஜூன் 5 வெள்ளிக்கிழமையன்று, வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் தவிசாளர் தி. நிரோஷ், 1974 ஆம் ஆண்டு கைது செய்யப்படுவதைத் தவிர்ப்பதற்காக சயனைட் குப்பியை உட்கொண்டு உயிரிழந்த விடுதலைப் புலிகளின் உறுப்பினரான 'தியாகி பொன். சிவகுமாரனின்' 52 வது நினைவு தினத்தை ஏற்பாடு செய்ததற்காகக் பொலிசாரினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

இந்த ஒடுக்குமுறையானது காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் இனப்படுகொலை போரை எதிர்க்கும் முஸ்லிம்கள் மீதும் நீண்டுள்ளது. காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களைக் கண்டிக்கும் ஸ்டிக்கர்களை ஒட்டினார் என்ற குற்றச்சாட்டின் கீழ், கொழும்பில் உள்ள பொலிஸ் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் முகமது ருஷ்டி என்பவர் 2025 மார்ச் 22 அன்று பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இதற்கு எழுந்த பரவலான எதிர்ப்பை அடுத்து, இரண்டு வார கால தடுப்புக் காவலுக்குப் பின் பொலிஸ் அவரை விடுதலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டது.

21 வயதான முஸ்லிம் இளைஞரான முகமது ரிபாய் முகமது சுஹைல், இதேபோன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, 2024 அக்டோபரிலிருந்து ஒன்பது மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

விடுதலைப் புலிகளின் இராணுவத் தோல்வியின் பின்னர் பதினேழு ஆண்டுகள் கடந்த பின்னரும், நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கில் தொடரும் இராணுவ ஆக்கிரமிப்பும், தீவு முழுவதும் இன்னும் பரந்த அளவில் திணிக்கப்பட்டு வரும் ஜனநாயக விரோத நடவடிக்கைகளும், அதிகரித்து வரும் சமூக சமத்துவமின்மை மீதான வெகுஜனக் கோபம் குறித்து ஆளும் வர்க்கத்திற்குள் காணப்படும் ஆழமான பீதியைப் பிரதிபலிக்கின்றன.

சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளைகளுக்கு இணங்க, ஜே.வி.பி. அரசாங்கம் உழைக்கும் மக்கள் மீது வரி அதிகரிப்பு, (மின்சாரம், நீர் போன்ற) பாவனைக் கட்டணங்கள் அதிகரிப்பு மற்றும் சமூகச் செலவினக் வெட்டுக்கள் உட்பட கொடூரமான சிக்கன நடவடிக்கைகளைத் திணித்து வருகிறது. எதிர்காலத்தில் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் போராட்டங்களை ஒடுக்குவதற்காக அரசாங்கம் தனது ஒடுக்குமுறை இயந்திரத்தை பலப்படுத்தி வருகிறது. பாடகர் சங்கீத்சனுக்கு எதிரான இந்த கொடூரமான நடவடிக்கை, பரந்த அளவில் மக்கள் மீது தொடுக்கப்படவுள்ள தாக்குதல்களுக்கான மேலும் ஒரு எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.

சங்கீத்சனின் கைது நடவடிக்கையைப் பல தமிழ் கட்சிகள் கண்டித்துள்ளன. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் கூறுகையில், கருத்துச் சுதந்திரம் ஒடுக்கப்பட்டு வருவதாகவும், இனவாதம் தலைவிரித்தாடுவதால் இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்படுவதாகவும் தெரிவித்தார். அத்துடன், திசாநாயகக அரசாங்கமும் முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா குமாரதுங்க, ரணில் விக்ரமசிங்க மற்றும் மஹிந்த இராஜபக்ஷ ஆகியோரின் அதே ஒடுக்குமுறைப் பாதையையே பின்பற்றுகிறது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஏனைய தேசியவாத அமைப்புகள், 'சர்வதேச சமூகம்' என்று அழைக்கப்படுபவற்றிடம் இந்த விவகாரத்தில் தலையிடுமாறு கோரிக்கை விடுத்துள்ளன. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் கூறுகையில், இலங்கை அரசாங்கங்கள் ஜனநாயக உரிமைகளின் பாதுகாவலர்களைப் போல நடித்து 'சர்வதேச விசாரணைகளில் இருந்து தப்பித்து வருகின்றன' என்றார்.

இது முற்றிலும் போலியானது. அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய வல்லரசுகள் தங்களின் சொந்த நலன்களைப் பேணுவதற்காகக் கொழும்பு அரசாங்கங்களின் ஜனநாயக விரோத ஆட்சிக்கு ஆதரவளித்து வந்துள்ளன, இப்போதும் ஆதரிக்கின்றன. அவர்கள் எப்போதாவது இலங்கையில் மனித உரிமை மீறல்கள் குறித்து குரல் எழுப்புகிறார்கள் என்றால், அது அரசாங்கத்தின் மீதான தங்களது கட்டுப்பாட்டை வலுப்படுத்துவதற்காக மட்டுமே ஆகும்.

தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கும் பொறுப்பைத் தமிழ் முதலாளித்துவக் கட்சிகளிடம் ஒப்படைக்க முடியாது. இக்கட்சிகள் பொதுமக்களை ஏமாற்றுவதற்காக மட்டுமே பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரியும் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரியும் சத்தமிடுகின்றன. அவர்கள் தமிழ் மேல்தட்டு வர்க்கத்தினரின் சலுகைகளைப் பாதுகாப்பதற்காகத் திசாநாயக நிர்வாகத்தின் ஆதரவைத் தேடுகிறார்கள்.

இக்கட்சிகள் பகிரங்கமாக ஏகாதிபத்திய ஆதரவு நிலப்பாட்டைக் கொண்டிருப்பதுடன், காசா மீதான இனப்படுகொலைத் தாக்குதல் உட்பட மத்திய கிழக்கில் நடந்து வரும் அமெரிக்க-இஸ்ரேலிய போர்கள் மற்றும் இராணுவ நடவடிக்கைகளை ஆதரிக்கின்றன.

சோசலிச சமத்துவக் கட்சியானது, அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த இலங்கை அரசாங்கங்களால் நடத்தப்பட்ட இரத்தக்களறி தமிழர்-விரோத இனவாதப் போரை எதிர்த்ததுடன், வடக்கு மற்றும் கிழக்கிலிருந்து இராணுவம் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும் கோருகிறது. அனைத்து முதலாளித்துவக் கட்சிகளுக்கும் எதிராக, சோசலிசம் மற்றும் அனைத்துலகவாதத்திற்கான போராட்டத்தை முன்னெடுப்பதற்கு ஐக்கியப்படுமாறு சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லிம்களுமாக அனைத்து தொழிலாள வர்க்கத்தினருக்கும் கிராமப்புற மக்களுக்கும் நாங்கள் அழைப்பு விடுக்கிறோம். இனவாதப் பாகுபாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும், தமிழ் சிறுபான்மையினர் மற்றும் ஏனைய ஒடுக்கப்பட்ட சமூகங்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் இதுவே ஒரே வழியாகும்.

Loading