இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
கடந்த வியாழக்கிழமை இரவு வெள்ளை மாளிகையிலிருந்து டொனால்ட் ட்ரம்ப் ஆற்றிய முதன்மை நேர உரை, அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் உள்ள தொழிலாள வர்க்கத்திற்கு விடுக்கப்பட்ட ஒரு கடுமையான எச்சரிக்கையாகும். வரவிருக்கும் தேர்தல்களை, குறிப்பாக நவம்பர் இடைக்காலத் தேர்தல்களில் தொடங்கி தேர்தல்களை ஒடுக்குவதற்கும், முறைகேடு செய்வதற்கும் அல்லது ரத்து செய்வதற்கும் ஒரு சாக்குப்போக்கை உருவாக்குவதே அதன் நோக்கமாக இருந்தது.
வெறித்தனமானதாகவும், சில சமயங்களில் சற்றும் தொடர்பற்றதாகவும் இருந்த இந்த உரையே, ஒரு அதிர்ச்சியூட்டும் நெருக்கடியின் பிடியில் சிக்கியுள்ள ஒரு நிர்வாகத்தினதும், ஆளும் வர்க்கத்தினதும் வெளிப்பாடாகவே இருந்தது. சீனா 22 கோடி அமெரிக்க வாக்காளர்களின் கோப்புகளைத் திருடிவிட்டது என்றும், ஒபாமா விட்டுச் சென்ற குற்றச்சாட்டுக்குரிய ஆவணங்கள் அடங்கிய “எரிக்கும் பைகள்” “கடும் திறமையின்மை” காரணமாக எரிக்கப்படாமல் தப்பித்துவிட்டன என்றும், “ஆய்வு செய்தாலும் கண்டறிய முடியாத வகையில்” வெனிசுவேலாவுடன் இணைந்து வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்யப்பட்டுள்ளது என்றும்—அபத்தமான மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளின் பட்டியலை ட்ரம்ப் அடுக்கிக் கொண்டே போனார்.
செப்டம்பர் மாதம் ஷி ஜின்பிங்குடன் தனது நிர்வாகம் ஒரு உச்சிமாநாட்டிற்குத் தயாராகி வரும் நிலையிலும், தன்னை அழிப்பதற்காக சீனா ஒரு மாபெரும் சதியைத் தீட்டியுள்ளதாக ட்ரம்ப் சாடினார்.
அவரது உரை சுயவிளம்பரத்தின் பெருவெள்ளத்தோடு தொடங்கியது—அமெரிக்கா “உலகிலேயே மிகவும் பரபரப்பான நாடு”, சந்தைகள் “எல்லாக் காலத்தையும் விட” உச்சத்தில் உள்ளன, எல்லைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன, குற்றங்கள் 125 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளன, “நாங்கள் வெனிசுவேலாவில் வெற்றி பெற்றோம்”, “ஈரானில் பெரிய அளவில் வெற்றி பெற்று வருகிறோம்” என்று அவர் பேசினார். யதார்த்தத்தின் மீதும் நிகழ்வுகளின் மீதும் தனது பிடியை இழந்து வரும் ஒரு ஆட்சியின் அறிகுறியே இந்த கற்பனை உலகம் ஆகும்.
இந்த ஒட்டுமொத்த செயல்பாடும், நன்கு நிறுவப்பட்ட ஒரு விரக்தியை வெளிப்படுத்தியது. புவிசார் அரசியல் ரீதியாக, அமெரிக்க ஏகாதிபத்தியம் ஈரானுக்கு எதிரான போரில் தனது ஒரு குறிக்கோளைக் கூட அடையத் தவறிவிட்டது. அதே நேரத்தில் இப்போது அந்தப் போரை அது தீவிரப்படுத்தி வருகிறது — இது எண்ணெய் விலையையும் பணவீக்கத்தையும் உயர்த்துகிறது, அளவுக்கு அதிகமாக மதிப்பிடப்பட்ட நிதியச் சந்தைகளின் வீழ்ச்சிக்கு அச்சுறுத்தல் விடுக்கிறது, மேலும் ஏற்கனவே தாங்க முடியாத தேசியக் கடனை இன்னும் அதிகமாக்குகிறது.
பொருளாதார ரீதியாக, ட்ரம்ப், அவரது குடும்பத்தினர் மற்றும் அவரது நெருங்கிய வட்டாரத்தினரால் சமூகம் கொள்ளையடிக்கப்படுவது குறித்த புதிய அறிக்கைகள் நாளுக்கு நாள் வெளிவந்த வண்ணம் இருக்கும் நிலையிலும், முன்னெப்போதும் இல்லாத சமூக சமத்துவமின்மையை இந்த நிர்வாகம் வழிநடத்திச் செல்கிறது: சிறு முதலீட்டாளர்கள் பில்லியன் கணக்கான பணத்தை இழந்து தவிக்கும் அதே வேளையில், கிரிப்டோகரன்சி (cryptocurrency) முதலீடுகள் மூலம் ஒரே ஆண்டில் 1.4 பில்லியன் டாலருக்கும் அதிகமான பணம் இவர்கள் கைக்குச் சென்றுள்ளது.
அரசியல் ரீதியாக, தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் பரந்த பிரிவினர் இடது நோக்கி நகர்ந்து வருகின்றனர். இதற்கு நிதிய தன்னலக் குழுவின் பதில், தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான, குறிப்பாக முதற்கட்டமாக குடியேறியவர்களுக்கு எதிரான வன்முறையைத் தீவிரப்படுத்துவதாகும்.
நாடு முழுவதும் உள்ள மாநகரங்களிலும், நகரங்களிலும் அரசாங்கம் தனது வன்முறை ஒடுக்குமுறையை தீவிரப்படுத்திவரும் வேளையில், குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவினரால் (ICE) மேலும் இரண்டு பேர் படுகொலை செய்யப்பட்டதற்கு —டெக்சாஸில் லோரென்சோ சல்காடோ அரூஜோ மற்றும் மெய்னில் ஜோன் செபாஸ்டியன் குரேரோ— எதிரான போராட்டங்களுக்கு மத்தியில் ட்ரம்ப் தனது உரையை நிகழ்த்தினார்.
வெள்ளை மாளிகையிலிருந்து உரை நிகழ்த்தப்பட்ட அதே நாளில், வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ மற்றும் வெள்ளை மாளிகை ஆலோசகர் ஸ்டீபன் மில்லர் ஆகியோர், “இடதுசாரி பயங்கரவாதம்” என்று அழைக்கப்படுவதன் மீதான உலகளாவிய தாக்குதலை ஊக்குவிக்கும் வகையில் வெளியுறவுத்துறை மாநாட்டில் பாசிச உரைகளை ஆற்றினர்.
இந்த உரையில் கூறப்பட்டுள்ள கூற்றுகள் வெளிப்படையான பொய்களாகும். அவை பொய்கள் என்று அனைவருக்கும் தெரியும். ட்ரம்ப் தனது முதல் பதவிக்காலத்தில் நியமித்த அதிகாரிகளின் கீழ் தயாரிக்கப்பட்டவை உட்பட முந்தைய உளவுத்துறை மதிப்பீடுகள், அமெரிக்கத் தேர்தல்களில் முறைகேடு நடந்ததற்கான எந்த ஆதாரத்தையும் கண்டறியவில்லை. ஆனால், இந்தப் பொய்களின் நோக்கம் யாரையும் நம்ப வைப்பது அல்ல, மாறாக பரவலாக கணிக்கப்படும் குடியரசுக் கட்சியின் தோல்வியை, வெளிநாட்டு நாசவேலையின் விளைவாக சித்தரிப்பதற்கான நியாயத்தை நான்கு மாதங்களுக்கு முன்பே உருவாக்குவதும், அதற்கேற்ப செயல்படுவதற்கான இயந்திரங்களை தயார்படுத்துவதும் ஆகும்.
அந்த இயந்திரம் ஏற்கனவே கட்டமைக்கப்பட்டு வருகிறது. உளவுத்துறை அமைப்புகள், FBI மற்றும் நீதித்துறை ஆகியவை இந்த மோசடியை மறைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகளை அடையாளம் கண்டு, பணிநீக்கம் செய்து, அவர்கள் மீது வழக்குத் தொடர உத்தரவிடுவதாக ட்ரம்ப் அறிவித்தார்—இது தன் மீது தனிப்பட்ட முறையில் விசுவாசம் இல்லாத எவரையும் அரசாங்கத்தில் இருந்து அகற்றும் ஒரு துடைத்தெறிதல் நடவடிக்கையாகும். வழக்கமான நிகழ்ச்சிகளை நிறுத்த மறுத்த ABC மற்றும் NBC ஆகிய ஊடகங்கள் உண்மையை மறைக்கும் சதியில் இணைந்ததாகக் குற்றம் சாட்டி, அவற்றின் ஒளிபரப்பு உரிமங்களை ரத்து செய்வதாக அவர் மிரட்டினார்.
மிகக் கடுமையான குடியுரிமைக்கான சான்றுகள் மற்றும் புகைப்பட அடையாள அட்டைத் தேவைகள் மூலமும், தபால் வாக்கு முறையைத் திறம்பட ஒழிப்பதன் மூலமும், மில்லியன் கணக்கான குடியுரிமை பெற்ற குடிமக்கள், முதியவர்கள், குறைந்த வருமானம் உடையவர்கள் மற்றும் தொழிலாள வர்க்க வாக்காளர்களின் வாக்குரிமையைப் பறிக்கும் SAVE அமெரிக்கா சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றும் ட்ரம்ப் கோரினார். வாக்காளர் பட்டியலில் 278,000 பிற நாட்டு குடிமக்கள் இருப்பதாக ஒரு ஜோடிக்கப்பட்ட கூற்றைக் குறிப்பிட்டு, அவர்களை நீக்குமாறு மாநிலங்களுக்கு அவர் உத்தரவிட்டார்.
இதில் மிகவும் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், அரசியல் கட்டமைப்பிற்குள் இருந்து இதற்கு எந்தவொரு தீவிரமான எதிர்ப்பும் அல்லது பதிலும் வரவில்லை என்பதாகும். சர்வாதிகாரத்திற்கு எதிரான உத்தரவாதங்களாக இரண்டு நூற்றாண்டுகளாக நிலைநிறுத்தப்பட்ட அரசியலமைப்பு வடிவங்கள் இப்போது வெற்றுத்தனமாக மாற்றப்பட்டுள்ளன. இந்த நெருக்கடி எந்தளவுக்கு தீவிரமடைந்துள்ளது என்பதற்கான அளவுகோல் இதுவே ஆகும்.
எதிர்க்கட்சி என்று சொல்லப்படும் ஜனநாயகக் கட்சி, இதில் அலட்சியம் மற்றும் உடந்தையின் கலவையாகவே செயல்படுகிறது. செனட் சிறுபான்மைத் தலைவர் சக் ஷுமர், ட்ரம்பை “பலவீனமானவர் மற்றும் தடுமாறுபவர்” என்று அழைத்ததோடு, அவரது வாக்குரிமை மசோதாவை “கைவிடுமாறு” கூறினார். பிரதிநிதிகள் சபை சிறுபான்மைத் தலைவர் ஹக்கீம் ஜெஃப்ரிஸ் அவரை “பலவீனமானவர்” என்றும் “பரிதாபகரமானவர்” என்றும் குறிப்பிட்டார். கலிபோர்னியா கவர்னர் கவின் நியூசோம் இந்த உரையை “கற்பனையானது” என்று நிராகரித்து, நவம்பர் தேர்தலுக்குத் தயாராகுமாறு வாக்காளர்களைக் கேட்டுக்கொண்டார்.
பெர்னி சாண்டர்ஸ், “சர்வாதிகாரத்திற்கு எதிராக அனைத்து அமெரிக்கர்களும் ஒன்றிணைய வேண்டும்” என்று அழைப்பு விடுத்தார்—இது ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலுக்குப் பின்னால் இருக்கும் வர்க்க சக்திகளை மறைக்கும் ஒரு சூத்திரமாகும். ட்ரம்பை உருவாக்கியதும், அவரது போலீஸ் அரசு கொள்கைகளை ஆதரிப்பதுமான பெருநிறுவனங்கள், வங்கிகள், உளவுத்துறை மற்றும் இராணுவ அமைப்புகளுடன் சேர்ந்துகொண்டு சர்வாதிகாரத்திற்கு எதிராக எந்தவொரு ஒற்றுமையையும் உருவாக்க முடியாது.
ட்ரம்பின் அடுத்தடுத்த நகர்வுகள் ஜனநாயகக் கட்சியின் செயல்பாட்டைப் பொறுத்தே அமைந்துள்ளது. ஜனநாயகக் கட்சியினரின் நடத்தை இரு முக்கிய கவலைகளால் வழிநடத்தப்படுகிறது. முதலாவது, தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடமிருந்து கீழிருந்து எழும் ஒரு சுயாதீனமான இயக்கத்தைத் தடுப்பதாகும். ட்ரம்பைக் காட்டிலும் இந்த இயக்கத்தைக் கண்டுதான் அவர்கள் அதிகம் பயப்படுகிறார்கள்; எனவேதான் இதனை நீதிமன்றங்கள், ஊடகங்கள் மற்றும் நவம்பர் மாதத் தேர்தல்களை நோக்கி அவர்கள் திசைதிருப்புகிறார்கள். இரண்டாவது, போரைத் தீவிரப்படுத்துவதற்கு, குறிப்பாக உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிராக இன்னும் ஆழமான பங்களிப்பை வழங்குவதற்கு அழுத்தம் கொடுப்பதாகும்.
ஜனநாயகக் கட்சியின் இத்தகைய பாத்திரம், அதே ஆளும் வர்க்கத்தின் கட்சி என்ற அதன் தன்மையிலிருந்தே எழுகிறது. இங்கு நடப்பது ஒரு மனிதனின் குற்றத்தன்மையோ அல்லது மனநலப் பாதிப்போ அல்ல. ட்ரம்ப் என்பவர், சமூகத்தின் செல்வத்தை முன்னெப்போதும் இல்லாத அளவுக்குத் தன்வசப்படுத்தியுள்ள ஒரு நிதிய தன்னலக் குழுவின் கருவியாக உள்ளார். இவர்களால் இனி ஜனநாயக வடிவங்களின் மூலம் ஆட்சி செய்ய முடியாது.
ஜனநாயகத்தின் வீழ்ச்சி என்பது, சமூக ஒழுங்கின் முறிவின் அரசியல் வெளிப்பாடாகும் — அதாவது ஒரு சில பில்லியனர்களுக்கும், பெரும்பான்மையான உழைக்கும் மக்களுக்கும் இடையில் பிளவுண்டுள்ள ஒரு சமூகத்தின் வெளிப்பாடாகும். இத்தகைய அளவிலான சமத்துவமின்மையுடன் ஜனநாயக உரிமைகள் இணைந்து நீடிக்க முடியாது. சர்வாதிகாரத்தை நோக்கிய இந்தத் திருப்பம் என்பது ஜனநாயகக் கட்சியினர் உட்பட ஒட்டுமொத்த ஆளும் வர்க்கத்தினுடையதுமாகும். தன்னலக்குழுவைப் பாதுகாக்கும் இவர்கள், ட்ரம்புடன் தந்திரோபாயத்தில் வேறுபடுகிறார்கள்.
ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பது என்பது தன்னலக் குழுவிற்கும் முதலாளித்துவ அமைப்பு முறைக்கும் எதிரான போராட்டத்தில் இருந்து பிரிக்க முடியாததாகும். ஆளும் வர்க்கத்தைச் சர்வாதிகாரத்தை நோக்கித் தள்ளும் அதே சக்திகள் தான் — போர், சமத்துவமின்மை, அதன் சட்டபூர்வ தன்மையின் வீழ்ச்சி — தொழிலாளர்களையும் இளைஞர்களையும் போராட்டத்தை நோக்கித் தள்ளுகின்றன, இதனை ICE-க்கு எதிராகவும், போருக்கு எதிராகவும், தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கு எதிராகவும் ஏற்கனவே எழுந்துள்ள எதிர்ப்புகள் காட்டுகின்றன.
சர்வாதிகாரத்தை நோக்கிய உந்துதலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதுக்கு, தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான தொழில்துறை மற்றும் அரசியல் அணிதிரட்டல் அவசியமாகும். இந்த அணிதிரட்டல், ஒரு சோசலிச வேலைத்திட்டத்தைக் கொண்டு ஆயுதபாணியாக்கப்பட்டு, சர்வாதிகாரம், போர் மற்றும் இவை இரண்டையும் உருவாக்கும் முதலாளித்துவ அமைப்பு முறைக்கு எதிராகத் திருப்பப்பட வேண்டும்.
