இலங்கை ஆசிரியர்கள் ஊதிய பற்றாக்குறைக்கும் தாங்க முடியாத வேலைச் சுமைகளுக்கும் எதிராக போராடுகின்றனர்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

2026 ஆகஸ்ட் 4 அன்று இலங்கை அரச பாடசாலை ஆசிரியர்கள் கல்வி அமைச்சுக்கு வெளியே நடத்திய மறியல் போராட்டம்

ஆகஸ்ட் 4 அன்று சுமார் 200 அரச பாடசாலை ஆசிரியர்கள், பதவி உயர்வுகள் மற்றும் சம்பள அதிகரிப்புகளில் நிலவும் தாமதங்களை முடிவுக்குக் கொண்டுவருவதுடன், உறுதியளிக்கப்பட்ட சம்பள அதிகரிப்பில் இதுவரை வழங்கப்படாத மூன்றில் இரண்டு பங்கையும் வழங்க வேண்டும் என்று கோரி கொழும்பிலுள்ள கல்வி அமைச்சுற்கு முன்பாகப் போராட்டம் நடத்தினர்.

மக்கள் விடுதலை முன்னணி / தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி./தே.ம.ச.), தனது தேர்தல் பிரச்சாரங்களின்போது இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்திருந்தது. 2024 இல் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், அது தனது வாக்குறுதிகளைக் கைவிட்டு, தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது.

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்தப் போராட்டம், ஜே.வி.பி./தே.ம.ச. ஆட்சிக்கு வந்த பின்னர் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் தொழிற்சங்கக் கூட்டணி (TPTUA) ஏற்பாடு செய்த முதல் நடவடிக்கையாகும். ஆசிரியர்களின் ஊதியங்கள் மற்றும் வேலை நிலைமைகள் மீதான அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு எதிராகப் போராட வேண்டும் என்ற அழுத்தம் ஆசிரியர்கள் மத்தியில் அதிகரித்து வருகின்ற போதிலும், தொழிற்சங்கங்கள் அவர்களை அணிதிரட்ட மறுத்ததுடன், போராட்டத்தின் அளவை வேண்டுமென்றே மட்டுப்படுத்த முயன்றன.

அரச துறை ஆசிரியர்களின் எண்ணிக்கை சுமார் 240,000 ஆக இருந்த போதிலும், அவர்களில் ஒரு சிறுபான்மையினர் மட்டுமே தொழிற்சங்க உறுப்பினர்களாக இருப்பதானது தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் மீது பரவலாக நிலவும் அவநம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக, தொழிற்சங்கத் தலைவர்கள் போராட்டத்திற்கு அழைப்பு விடுப்பதாக மீண்டும் மீண்டும் வெற்று அச்சுறுத்தல்களை விடுத்துவிட்டு, பின்னர் அரசாங்கம் ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்ப்பதாக “உறுதியளித்துள்ளது” என்று கூறி அவற்றைக் கைவிட்டுள்ளனர். அரசாங்கம் சர்வதேச நாணய நிதியம் (IMF) கோரிய சிக்கன நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துகின்ற நிலையில், தொழிற்சங்கங்களின இந்த நடத்தை எதிர்ப்பை ஒடுக்குவதற்கே உதவியது.

ஒரு மணி நேரம் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்குப் பின்னர், பல தொழிற்சங்கத் தலைவர்கள் கல்வி அமைச்சரும் பிரதமருமான ஹரிணி அமரசூரியவைச் சந்திப்பதற்காக அமைச்சுக்குள் சென்றனர். அவர் அங்கு இல்லாததால், அமைச்சின் செயலாளர் மற்றும் ஏனைய அதிகாரிகளை அவர்கள் சந்தித்தனர்.

கலந்துரையாடலில் இருந்து திரும்பிய பின்னர், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் (CTU) பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் உரையாற்றினார். அரசாங்கத்தின் பொறுப்பை மூடிமறைக்கும் வகையில், ஆசிரியர்களின் கோரிக்கைகளை அரச சேவை சம்பள ஆணைக்குழுவிடம் (PSSC) சமர்ப்பிக்கத் தவறியதற்காக அமைச்சு அதிகாரிகளை அவர் குற்றம்சாட்டினார். ஆகஸ்ட் 11 அன்று நடைபெறவுள்ள அரச சேவை சம்பள ஆணைக்குழு உடனான சந்திப்புக்கு முன்னதாக ஆசிரியர்களின் கோரிக்கைகளை குழுவிற்கு சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளிடம் தான் கேட்டுக்கொண்டதாக ஸ்டாலின் தெரிவித்தார்.

இந்த ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு எந்தத் தடையும் இல்லை என்று இலங்கை ஆசிரியர் சங்கத் தலைவர் அறிவித்தார். “அரசாங்கத்திற்கும் அமைச்சுக்கும் வெட்கக்கேடு” என அறிவித்த அவர், இந்தக் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டியது அமைச்சின் கடமை என்றார்.

ஆசிரியர் மற்றும் அதிபர் தொழிற்சங்கக் கூட்டணியைப் பிரதிநிதித்துவம் செய்யும் இலங்கை அரச ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் நாலக டி சில்வா, “நீங்கள் [அரசாங்கம்] எப்போதும் ஆசிரியர்களை ஏமாற்றிக்கொண்டிருக்க முடியாது. பணம் இல்லை என்றால், அது வேறு விடயம்,” என கூச்சலிட்டார்.

அவர் விரிவாக விளக்காத இந்தக் கருத்து, அரச துறை ஊழியர்களின் ஊதியங்களை அதிகரிக்க அரசாங்கத்திடம் பணம் இல்லை என்ற அதன் இழிவான கூற்றையே எதிரொலிக்கிறது. மறுபக்கம், அரசாங்கம் வெளிநாட்டுக் கடனை திருப்பிச் செலுத்துவதற்கும் பெருநிறுவனங்களுக்கு சலுகைகளை வழங்குவதற்கும் முயற்சித்து வரும் நிலையில், அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை அதிகரித்தும் உழைக்கும் மக்கள் மீது வரிகளை விதித்தும் வருகிறது.

2026 ஆகஸ்ட் 4 அன்று கல்வி அமைச்சுக்கு வெளியே இலங்கை அரச துறை ஆசிரியர்கள் நடத்திய போராட்டம்

இலங்கை ஆசிரியர் சங்கம் மற்றும் ஜே.வி.பி. கட்டுப்பாட்டில் உள்ள இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் (CTSU) உட்பட இருபதுக்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களைக் கொண்ட கூட்டணியான ஆசிரியர்கள் அதிபர்கள் தொழிற்சங்க கூட்டணி, இறுதியாக அழைப்பு விடுத்த பெரிய தொழிற்சங்கப் போராட்டம், ஜே.வி.பி./தே.ம.ச. ஆட்சிக்கு வருவதற்கு வெறும் மூன்று மாதங்களுக்கு முன்னர், 2024 ஜூன் 26–27 அன்று நடைபெற்ற நாடளாவிய ரீதியிலான சுகயீன விடுமுறை வேலைநிறுத்தமாகும்.

நாடளாவிய ரீதியில் சுமார் 250,000 ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் பயிற்றுநர்கள் அதில் பங்கேற்றனர். ஜூன் 26 அன்று சுமார் 10,000 பேர் கொழும்பில் திரண்டனர். அப்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் பொலிஸாரை களமிறக்கி, நீர்த்தாரைப் பிரயோகம், கண்ணீர்ப்புகைக் குண்டுகள் மற்றும் தடிகளையும் கொண்டு ஆசிரியர்களைத் தாக்கியது. இதில் டசின் கணக்கான ஆசிரியர்கள் காயமடைந்தனர். சமீபத்திய போராட்டத்தைப் போலவே, 2024 இல் பிரதானமாக முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளும் நீண்டகாலமாக நிலுவையில் இருந்த சம்பள அதிகரிப்பை வழங்குதல் மற்றும் ஆசிரியர், அதிபர் சேவைகளில் பதவி உயர்வுகளை வழங்குதல் ஆகியவையாகும். 2021 இல் தொழிற்சங்கங்கள் 100 நாள் வேலைநிறுத்தத்தைக் காட்டிக்கொடுத்த பின்னர் உறுதியளிக்கப்பட்ட சம்பள அதிகரிப்பில் மீதமிருந்த மூன்றில் இரண்டு பங்கு ஒருபோதும் வழங்கப்படவில்லை.

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போராட்டத்தில், கல்வியைத் தனியார்மயமாக்குவதை நிறுத்த வேண்டும், சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என 2024 இல் முன்வைக்கப்பட்ட இரண்டு கோரிக்கைகளை தொழிற்சங்கங்கள் முற்றாகக் கைவிட்டன. இந்தத் தாக்குதல்களை திணிப்பதில் தொழிற்சங்க அதிகாரத்துவம் ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்துடன் கூட்டுச் சேர்ந்து செயல்படுகிறது.

2024 போராட்டங்களின்போது, ஜே.வி.பி. கட்டுப்பாட்டிலுள்ள இலங்கை ஆசிரியர் சேவை சங்கத் தலைவர் மகிந்த ஜயசிங்க, “மக்கள் அரசாங்கத்தை கட்டியெழுப்புவதன் மூலம் இந்தப் பிரச்சினைகள் தீர்க்கப்படும்” என்று பொய் வாக்குறுதியளித்தார். விக்கிரமசிங்க ஆட்சிக்கு எதிரான ஆசிரியர்களின் கோபத்தை ஜே.வி.பி.க்கான தேர்தல் ஆதரவாகத் திருப்புவதற்கு உதவிய ஜயசிங்க, இரண்டு ஆண்டுகளாக, பிரதி தொழில் அமைச்சர் பதவியால் அலங்கரிக்கப்பட்டுள்ளார்.

ஸ்டாலினும் ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்திற்கு முழுமையான ஆதரவு வழங்கியதுடன், கற்பிப்போர் மீதான அதன் தாக்குதல்களையும் நியாயப்படுத்தியுள்ளார். அரசாங்கம் பதவியேற்ற சிறிது காலத்திலேயே, 2024 டிசம்பர் 2 அன்று, ஆசிரியர்களைவிட குறைந்த ஊதியம் பெற்றாலும் அதே பணிகளைச் செய்து வரும் பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சுமார் 1,000 பேர், தங்களை ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்குமாறு கோரி அமைதியான போராட்டத்தை நடத்தினர். அரசாங்கம் பொலிஸாரை பயன்படுத்தி அந்தப் போராட்டத்தை கொடூரமாகக் கலைத்ததுடன், பங்கேற்றவர்களில் பலரையும் கைது செய்தது. ஸ்டாலின், ஆசிரியர் சேவை சட்ட விதிமுறைகளை அது மீறுவதாகக் கூறி, அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் கோரிக்கையை பகிரங்கமாக எதிர்த்தார்.

வாழ்க்கைச் செலவு அதிகரித்து வருவதுடன் கடுமையாக்கப்படும் வேலைப் பளுவின் மத்தியில், தொழிற்சங்கங்களுக்கு ஆசிரியர்களின் போராட்டங்களை ஒடுக்குவது மேலும் மேலும் கடினமாகி வருகிறது. இலங்கை மத்திய வங்கி மற்றும் உலக வங்கியின் தரவுகளின்படி, 2022 முதல் அதிகரித்து வரும் பணவீக்கத்தின் காரணமாக அரச துறை ஊழியர்களின் உண்மையான ஊதியங்கள் 33 சதவீதத்திற்கும் மேலாக அரிக்கப்பட்டுள்ளன.

சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கனத் திட்டத்தின் கீழ், டசின் கணக்கான அத்தியாவசியப் பொருட்கள் மீதான அதிகரிக்கப்பட்ட வரிகள், கல்வி மற்றும் சுகாதாரத்திற்கான செலவினங்களில் வெட்டுக்கள், ஆசிரியர்கள் உட்பட அரச சேவைக்கான ஆட்சேர்ப்பில் கட்டுப்பாடுகள் ஆகியவற்றின் மூலம் தொழிலாள வர்க்கம் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகிறது. ஐம்பதுக்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதோடு நகர்ப்புற பாடசாலைகளில் வகுப்பறைகள் அளவுக்கு அதிகமாக நெரிசலடைந்துள்ளன. பாடசாலைகளைப் பராமரிப்பதற்கான செலவுகள் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் மீது சுமத்தப்படுகின்றன.

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போராட்டத்தில், 3 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்களைக் கொண்ட கொழும்பின் பிரபலமான ஒரு பாடசாலையைச் சேர்ந்த சங்கீத ஆசிரியர் ஒருவர், தாம் எதிர்கொள்ளும் சிரமங்களைப் பின்வருமாறு விளக்கினார்:

“தற்போது நான் மட்டுமே சங்கீத ஆசிரியராக இருக்கிறேன். மேலும் சுமார் மூன்று ஆசிரியர் வெற்றிடங்கள் காலியாக உள்ளன. 6 ஆம் தரம் முதல் 13 ஆம் தரம் வரை நான் கற்பிக்க வேண்டியுள்ளது. ஒரே நேரத்தில் இரண்டு தரங்களைச் சேர்ந்த மாணவர்கள் வகுப்புக்கு வருகின்றனர். எனவே, வாரத்திற்கு 40 பாடவேளைகளை நடத்த வேண்டும் என்ற நிலை இருந்தாலும், நான் 52 பாடவேளைகளை நடத்துகிறேன். தவணைப் பரீட்சைக்கான சுமார் 450 விடைத்தாள்களை மதிப்பிட வேண்டியுள்ளது. இந்த வேலைக்கு முடிவே இல்லை.

“பாடசாலைக்காக ஒரு பேருந்தை வாங்குவதற்குப் பணம் திரட்டுவதற்காக நாங்கள் ஒரு கலை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தோம். இசைப் போட்டிகளை நடத்துவதுடன், இவ்வாறான ஏனைய அனைத்து வேலைகளையும் நாங்கள் செய்ய வேண்டியுள்ளது.”

கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் மற்றும் கலைப் பாடங்களுக்கான ஆசிரியர் பற்றாக்குறை தற்போது பெருமளவில் அதிகரித்துள்ளது. நகர்ப்புற பாடசாலைகளில் ஆசிரியர்-மாணவர் விகிதம் 1:50 வரை அதிகரித்துள்ளது. குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களைக் கொண்ட நூற்றுக்கணக்கான பாடசாலைகள் ஆசிரியர்களும் வளங்களும் வழங்கப்படாததன் காரணமாக நடைமுறையில் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளில், இவற்றில் பல பாடசாலைகளில் முதலாம் தரத்தில் ஒரு பிள்ளைகூட சேர்க்கப்படவில்லை.

அனைத்து தொழிற்சங்கங்களும் தொழிலாளர்களின் எதிர்ப்பைக் கட்டுப்படுத்தி மட்டுப்படுத்துவதற்கும், ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம் இடையூறு இல்லாமல் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த அனுமதிப்பதற்கும் நனவுபூர்வமாகச் செயல்பட்டு வருகின்றன.

ஜே.வி.பி. சார்பு இலங்கை ஆசிரியர் சேவை சங்கம், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்கவில்லை. ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் தொழிற்சங்கக் கூட்டணியை பிரதிநிதித்துவப்படுத்தும், போலி-இடது முன்னிலை சோசலிசக் கட்சி (FSP) சார்ந்த, ஐக்கிய ஆசிரியர் சேவை சங்கமும் (UTSU) இதில் பங்கேற்கவில்லை. அது வெளியிட்ட அறிக்கையில், போராட்டம் “நல்லது, ஆனால் நாம் அரசாங்கத்துடன் ஒட்டி உறவாடுவதை நிறுத்திவிட்டு உண்மையாகவே தெருவில் இறங்க வேண்டும்” என்று கூறியது. இத்தகைய போர்க்குணமிக்க தோரணையைக் காட்டிய போதிலும், அது எந்தவொரு போராட்ட நடவடிக்கையையும் அறிவிக்கவில்லை.

ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் ஊதியப் பற்றாக்குறையும் கடுமையான வேலை நிலைமைகளும், இலவசக் கல்வி முறைமை முழுவதற்கும் எதிராக முன்னெடுக்கப்படும் பரந்த தாக்குதலின் ஒரு பகுதியாகும். முதலாளித்துவ அமைப்புக்கு எதிராகவும், சமூகத்தை சோசலிச அடிப்படையில் மறுஒழுங்கமைப்பதற்காகவும் தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கத்திற்காகப் போராடுவதன் மூலமே ஆசிரியர்கள் இந்தத் தாக்குதல்களை எதிர்க்க முடியும். ஆசிரியர்கள், ஒரு உண்மையான போராட்டத்தை முன்னெடுப்பதற்கு, முதலாளித்துவ அரசுடன் ஆயிரம் நூல்களால் பிணைக்கப்பட்டுள்ள தொழிற்சங்க அதிகாரத்துவம் மற்றும் போலி-இடது கட்சிகளிலிருந்து சுயாதீனமாக, தங்களது சொந்த போராட்ட அமைப்புகளான நடவடிக்கைக் குழுக்களை கட்டியெழுப்ப வேண்டும்.

Loading