இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற பெருவாரியான இருகட்சி வாக்கெடுப்பில், ரஷ்யா மீதான தடைகளைக் கடுமையாக்கும் சட்டத்திற்கு அமெரிக்க செனட் ஒப்புதல் அளித்துள்ளது. அத்தோடு இந்த சட்டமானது. அமெரிக்க இராணுவப் படைகள் ஈரான் மீது தொடர்ந்து குண்டுவீச்சு நடத்தி, அந்நாட்டை முற்றுகையிட்ட போதிலும், ரஷ்ய எண்ணெய், எரிவாயு அல்லது பிற ஏற்றுமதிப் பொருட்களை வாங்கும் நாடுகள் மீது 100 சதவீத சுங்க வரிகளை விதிக்கவும், ஈரான் மீதான தடைகளை நீட்டிக்கவும் ஜனாதிபதி ட்ரம்பிற்கு அதிகாரம் அளிக்கிறது.
86-11 என்ற வாக்குகள் கணக்கில், இரண்டு முதலாளித்துவக் கட்சிகளின் பெரும் பான்மையினரும் இந்தச் சட்டத்திற்கு ஆதரவளிப்பதைக் காண முடிந்தது. குடியரசுக் கட்சியினர் 49-1 என்ற விகிதத்தில் வாக்களித்தனர், மூன்று உறுப்பினர்கள் வரவில்லை. அதே நேரத்தில், ஜனநாயகக் கட்சியினர் 37-10 என்ற விகிதத்தில் மசோதாவை ஆதரித்தனர். குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ஒரே எதிர்ப்பாளர் ராண்ட் போல் ஆவார். ஒரு பாசிஸ்ட்டான இவர்தான், இதற்கு முந்தைய நாள் டாக்டர் அந்தோனி பெளசி காங்கிரஸை அவமதித்ததாகக் கூறி, குற்றவியல் வழக்குத் தொடர அவரை நீதித்துறைக்கு அனுப்பிய செனட் குழுவின் தீர்மானத்தை நிறைவேற்றியவர் ஆவர்.
பெயரளவில் சுயேச்சையான பெர்னி சாண்டர்ஸ் உட்பட, எதிர்த்து வாக்களித்த 10 ஜனநாயகக் கட்சியினரும், அக்குழுவின் “இடது” பிரிவைச் சேர்ந்தவர்கள் ஆவர். அவர்களில் ஒருவர் கூட பொருளாதாரத் தடைகளை எதிர்க்கவில்லை. இறக்குமதி வரி தொடர்பான விதிகள் மீதே அவர்களின் ஆட்சேபனை இருந்தது; உச்சநீதிமன்றம் அரசியலமைப்புக்கு எதிரானது என்று தீர்ப்பளித்த இறக்குமதி வரிகளுக்கு, இந்த விதி பாராளுமன்றத்தின் பின்புறக் கதவு வழியாக அனுமதியை வழங்கிவிடும் என்பதே அவர்களின் வாதம். இது அதிகாரப் பகிர்வு தொடர்பான ஒரு நடைமுறை புகாரே தவிர, ரஷ்யாவுடனான போருக்கான அரசியல் எதிர்ப்பு அல்ல.
மேலும், அவர்களது திருத்தச் சட்டத்தின் கதி இந்த மோசடியை அம்பலப்படுத்துகிறது. சிறுபான்மைத் தலைவர் ரிச்சர்ட் டர்பின் மற்றும் வெளியுறவுக் குழுவின் மூத்த ஜனநாயகக் கட்சி உறுப்பினரான ஜீன் ஷாஹீன் உட்பட 16 ஜனநாயகக் கட்சியினர், 48 குடியரசுக் கட்சியினருடன் சேர்ந்து அதைத் தோற்கடிக்க வாக்களித்ததால், அந்தத் திருத்தம் 32-64 என்ற கணக்கில் தோற்கடிக்கப்பட்டது. முப்பது ஜனநாயகக் கட்சியினர் அந்தத் திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். ஆனால் 10 பேர் மட்டுமே மசோதாவிற்கு எதிராக வாக்களித்தனர். அவர்களில் இருபது பேர் எந்தப் பலனுமற்ற ஒரு எதிர்ப்பைப் பதிவு செய்துவிட்டு, பின்னர் போருக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
இந்தச் சட்ட மசோதாவை, கடந்த மாதம் உக்ரேன் பயணம் முடித்துத் திரும்பிய சிறிது காலத்திலேயே திடீரென மரணமடைந்த, தீவிரப் போர்க் கொள்கையாளரும், குடியரசுக் கட்சிக்காரருமான மறைந்த செனட்டர் லிண்ட்சே கிரஹாம் மற்றும் கனெக்டிகட்டைச் சேர்ந்த ஜனநாயகக் கட்சிக்காரரான ரிச்சர்ட் ப்ளூமென்டால் ஆகியோர் எழுதினர். “இன்று, ஜனாதிபதி ஜெலென்ஸ்கி உக்ரேனிலிருந்தும் — புட்டின் மாஸ்கோவிலிருந்தும் இதைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்,” என்று மசோதா மீதான விவாதத்தின் போது புளூமென்டால் அறிவித்தார். “இன்று நாம் உக்ரேன் மக்களுக்குச் சொல்கிறோம்: நீங்கள் தனியாக இல்லை. இன்று நாம் விளாடிமிர் புட்டினுக்குச் சொல்கிறோம்: நீங்கள் உக்ரேனை வெற்றி கொள்ள முடியாது” என்று அவர் மேலும் கூறினார்.
உக்ரேனில், அமெரிக்கா மற்றும் நேட்டோ நடத்தி வருகின்ற போரின் நோக்கம் — பொருளாதாரத் தடைகள் இதற்கு ஒரு துணை நடவடிக்கையாக அமைந்துள்ளன — ரஷ்யாவின் ஆக்கிரமிப்பிலிருந்து உக்ரேனைப் பாதுகாப்பது அல்ல. மாறாக, ஏகாதிபத்திய சக்திகள் ரஷ்யாவையே கைப்பற்றித் துண்டு துண்டாகப் பிளவுபடுத்துவதற்கான ஆயத்தங்களைச் செய்வதே இதன் நோக்கமாகும். இந்த நோக்கம் 1991 இல் சோவியத் யூனியன் கலைக்கப்பட்டதிலிருந்தே இரக்கமின்றிப் பின்தொடரப்பட்டு வருகிறது.
வெள்ளை மாளிகையின் ஆதரவைப் பெறுவதற்காக சேர்க்கப்பட்ட ஒரு விதியின் மூலம், இந்த மசோதா ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளையும் மேலும் ஐந்தாண்டுகளுக்கு நீடிக்கிறது. ரஷ்யா மற்றும் உக்ரேன் ஆகிய இரு நாடுகளின் பரந்த இயற்கை வளங்களையும், தனது ஐரோப்பியப் போட்டியாளர்களை விட அமெரிக்க ஏகாதிபத்தியமே முதலில் கைப்பற்றுவதை உறுதிசெய்யும் ஒப்பந்தத்தை நோக்கமாகக் கொண்டு, புட்டினுடன் பேச்சுவார்த்தை நடத்திய ட்ரம்ப், ஓராண்டுக்கும் மேலாக இந்த மசோதாவைத் தடுத்து நிறுத்தியிருந்தார். இப்போது, இந்த மசோதாவை ஆதரிக்கின்ற ட்ரம்ப், குடியரசுக்கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதிநிதிகள் சபையினர் ஆகஸ்ட் விடுமுறை முடிந்து திரும்பியதும் இந்தச் சட்டத்தை உடனடியாக நிறைவேற்றுமாறு கோரியுள்ளார்.
உக்ரேனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, இஸ்ரேலிய போர்க் குற்றவாளியான பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் இணைந்து, செனட்டர் கிரகாமின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக வாஷிங்டனுக்கு வந்திருந்த நிலையில் இந்தச் செனட் வாக்கெடுப்பு நடைபெற்றுள்ளது. இந்த விஜயத்தின் போது, வெள்ளை மாளிகையில் ட்ரம்ப்புடன் ஜெலென்ஸ்கி குறிப்பிடத்தக்க நட்பு ரீதியிலான சந்திப்பை மேற்கொண்டார். பின்னர், ஏறக்குறைய அனைத்து செனட் உறுப்பினர்களுடனும் சந்திப்பு நடத்தினார். அதில் உக்ரேனுக்கு கூடுதல் இராணுவ உதவிகளையும் ரஷ்யா மீது கூடுதல் பொருளாதாரத் தடைகளையும் விதிக்குமாறு அவர் மன்றாடினார்.
ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகள், உக்ரேனுக்கான அமெரிக்க ஆதரவின் அரசியல் சமிக்ஞையாகவும், ரஷ்யப் பொருளாதாரத்தின் மீதான அவற்றின் தாக்கத்தினாலும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன. செனட் சிறுபான்மைத் தலைவர் சக் ஷுமர் (ஜனநாயகக் கட்சி - நியூ யோர்க்) இந்த மசோதா “அமெரிக்கா உக்ரேனை முழுமையாக ஆதரிக்கும் என்ற தெளிவான செய்தியை மாஸ்கோவிற்கு அனுப்பும்” என்று கூறினார்.
ஜனநாயகக் கட்சியின் சார்பில் இம்முன்மொழிவை முன்னெடுத்த செனட்டர் புளூமென்டால், புட்டினை நேரடியாக நோக்கி இவ்வாறு கூறினார்: “ஏற்கனவே வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கும் உங்கள் பொருளாதாரம், ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயுவிலிருந்து வரும் வருவாய் தடைப்படுவதன் மூலம் முற்றிலும் முடக்கப்படும், அழிக்கப்படும்” என்றார். ஆனால், கியேவில் உள்ள ஜெலன்ஸ்கி ஆட்சியின் அதிகரித்து வரும் விரக்தி நிலையைக் குறிப்பிட்டு, “காலம் எமக்குச் சாதகமாக இல்லை” என்றும் அவர் மேலும் கூறினார்.
கியேவ் நகரின் மீது ரஷ்யா நடத்திய பேரழிவுகரமான ஏவுகணைத் தாக்குதலுக்கு இரண்டு நாட்களுக்குப் பிறகே செனட்டின் இந்த நடவடிக்கை வந்துள்ளது. இந்தத் தாக்குதலின்போது, இடைமறித்து அழிக்கும் ஏவுகணைகள் தடுப்பான்கள் (interceptors) தீர்ந்துவிட்டதால், உக்ரேனிய இராணுவத்தால் ஒரு ஏவுகணையைக்கூட சுட்டு வீழ்த்த முடியவில்லை என்று ஜெலன்ஸ்கி கூறியிருந்தார். இந்த இடைமறிப்பு ஏவுகணைகள் பெரும்பாலும் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டு, ஐரோப்பிய நேட்டோ நாடுகள் மூலம் உக்ரேனுக்கு வழங்கப்பட்டவை ஆகும்.
ஈரானுக்கு எதிரான போர் ஆறாவது மாதமாக நீடித்து வரும் நிலையில், அமெரிக்க இராணுவத்தின் சொந்த ஏவுகணை எதிர்ப்பு மற்றும் ட்ரோன் எதிர்ப்பு ஆயுதக் கையிருப்பு கடுமையாகக் குறைந்துள்ளன. ரஷ்யா மற்றும் சீனா போன்ற பெரிய இராணுவ சக்திகளுடனான போர்களுக்குத் தேவையான விநியோகங்களை மீண்டும் கட்டியெழுப்ப பல ஆண்டுகள் ஆகும் என்று பென்டகன் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
செனட்டர் கிறிஸ் கூன்ஸ் (ஜனநாயகக் கட்சி-டெலவேர்) கடந்த வாரம் தி ஹில் இதழிடம் கூறுகையில், “அவர்களிடம் உள்ள ஏவுகணைத் தடுப்பான்கள் தொடர்ந்து தீர்ந்து வருகின்றன என்று ஜெலென்ஸ்கி எங்களிடம் மிகத் தெளிவாகக் கூறியுள்ளார்” என்றார். மேலும் அவர், “உண்மையில் முக்கியமானது இந்த மசோதா அல்ல; டொனால்ட் ட்ரம்ப் இதைக் கொண்டு என்ன செய்யப் போகிறார் என்பதே முக்கியம். எமது விழுமியங்கள், நலன்கள் மற்றும் முன்னுரிமைகளுடன் ஒத்துப்போகாத நாட்டிற்கு எதிராக, ஒத்துப்போகும் நாட்டின் பக்கத்தை ஜனாதிபதி ட்ரம்ப் இறுதியாக உறுதியாக எடுப்பாரா? அவர் ஒரு தீவிரமான பங்களிப்பை ஆற்ற வேண்டும் என்று பாராளுமன்றம் விரும்புகிறது என்பதற்கான ஒரு முக்கிய அடையாளமாக நாம் ஒரு மசோதாவை நிறைவேற்ற முடியும், ஆனால் அதைச் செய்ய அவர் தான் தீர்மானிக்க வேண்டும். அதுதான் முக்கியமானது” என்றும் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்தில் உள்ள ஜனநாயகக் கட்சியினருக்கும், ட்ரம்ப்பின் வெள்ளை மாளிகைக்குமான முக்கிய முரண்பாடு என்பது, ஜனநாயக உரிமைகள் மீதான ட்ரம்பின் தாக்குதல்கள், சர்வாதிகாரத்திற்கான அவரது ஆயத்தங்கள் அல்லது எஞ்சியுள்ள சமூக நலத் திட்டங்கள் மீதான அவரது தாக்குதல்கள் பற்றியது அல்ல. மாறாக, இது உக்ரேன் பற்றியதாகும். இந்த விஷயத்தில், ட்ரம்ப் இன்னும் தீவிரமாகப் போரை நடத்த வேண்டும் என்பதே ஜனநாயகக் கட்சியினரின் கோரிக்கையாகும்.
சுங்க வரிகளை விதிப்பதற்கான ட்ரம்பின் அதிகாரத்தை விரிவாக்குவது தொடர்பான முரண்பாடு, இந்த முன்னுரிமையின் மற்றொரு வெளிப்பாடாக அமைந்தது. இந்த மசோதா, ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயுவை வாங்கும் ஐந்து பெரிய நாடுகளைக் குறிவைத்து பதிலடி வரிகளை விதிக்கும் அதிகாரத்தை ட்ரம்புக்கு வழங்கும். இதில் சீனா முதலிடத்திலும், இந்தியா இரண்டாம் இடத்திலும் உள்ளன. குறிப்பிடப்படாத “தேசிய பாதுகாப்பு” கவலைகளைச் சுட்டிக்காட்டி இந்த வரிகளிலிருந்து விலக்கு அளிக்கும் அதிகாரம் ட்ரம்பிற்கு இருக்கும். இதன் மூலம், ட்ரம்பின் சுங்க வரிகளுக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் தேவை என்று கூறிய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு பதிலடியாக, சீனா மற்றும் வெள்ளை மாளிகையின் பிற இலக்குகளுக்கு எதிரான ஒரு புதிய பொருளாதார ஆயுதத்திற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்கிறது.
இந்த மசோதா, ரஷ்யா தனது வாடிக்கையாளர்களுக்கு எண்ணெய் மற்றும் எரிவாயுவை விநியோகிக்க ரகசியமாக வாடகைக்கு அமர்த்தியுள்ள “நிழல் கடற்படை” (shadow fleet) எனப்படும் எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கவும், அதன் மூலம் மறைமுகமாக அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளுக்கும் அனுமதி அளிக்கிறது. இது அமெரிக்க மற்றும் ரஷ்ய இராணுவப் படைகளுக்கு இடையே ஆயுதமேந்திய மோதல்களுக்கு வழிவகுக்கும்.
WSWS குறிப்பிட்டது போல, லிண்ட்சே கிரஹாமின் இறுதிச் சடங்கு போருக்கான இருகட்சிகளின் அணிதிரட்டலாக மாறியது. ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா, உக்ரேன் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளின் போர்களை மிகக் கொடூரமாக ஆதரித்த ஒருவருக்கு ஜனநாயகக் கட்சியினர் வழங்கிய புகழஞ்சலிகள், ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பின் மையக் கேள்வியில், எல்லாவற்றிற்கும் மேலாக உக்ரேன் போரில் இரு கட்சிகளும் ஒன்றாக இணைந்திருப்பதை நிரூபிக்கின்றன.
இப்போது லிண்ட்சே கிரஹாம் வரைந்த, மற்றும் அவரது பெயரிடப்படவுள்ள இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட நிகழ்வானது, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சார்பாக மேற்கொள்ளப்படும் இராணுவ-உளவுத்துறை கட்டமைப்பு மற்றும் அதன் வெளிநாட்டு நடவடிக்கைகளுக்கு ஜனநாயகக் கட்சி தனது அசைக்க முடியாத ஆதரவை வெளிப்படுத்துவதற்கான ஒரு சந்தர்ப்பமாக மாறியுள்ளது.
உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரானதாக இருந்தாலும் சரி, அல்லது ஈரானுக்கு எதிரானதாக இருந்தாலும் சரி, ஏகாதிபத்திய போருக்கு எதிரான போராட்டத்திற்கு தொழிலாள வர்க்கம் ஜனநாயகக் கட்சியிடமிருந்து அரசியல் ரீதியாக துண்டித்துக் கொள்ள வேண்டும் என்பதையும், ஒரு சோசலிச மற்றும் சர்வதேசியவாத வேலைத்திட்டத்தின் அடிப்படையில் போருக்கு எதிரான ஒரு இயக்கத்தைக் கட்டியெழுப்புவதும் அவசியமென்பதை இந்த நடவடிக்கை நிரூபிக்கிறது.
