மெஹ்ரிங் பதிப்பகத்தின் வெளியீட்டின் முன்னுரை

தன்னலக்குழு: ட்ரம்பும் அமெரிக்க ஜனநாயகத்தின் முறிவும்

“தன்னலக்குழு: ட்ரம்பும் அமெரிக்க ஜனநாயகத்தின் முறிவும்” (Oligarchy: Trump and the Breakdown of American Democracy) என்ற புத்தகத்தை மெஹ்ரிங் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்தப் புத்தகத்தின் பதிப்பாசிரியரான டேவிட் நோர்த் எழுதிய முன்னுரை கீழே பதிவிடப்பட்டுள்ளது. இந்தப் புத்தகத்தை வாங்க இங்கே பதிவு செய்யலாம்.

வரலாற்றாசிரியர்கள் ஜெபர்சனின் யுகம், லிங்கனின் யுகம் மற்றும் ரூஸ்வெல்ட்டின் யுகம் குறித்து எழுதியுள்ளனர். அமெரிக்கா இப்போது கடந்து கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்திற்கு அவர்கள் என்ன பெயரிடுவார்கள்? ஒரு தசாப்தத்திற்கும் மேலாக, அமெரிக்க அரசியல் வாழ்வில் டொனால்ட் ட்ரம்ப் ஆதிக்கம் செலுத்தி வருகிறார் — அவர் ஒரு வோல் ஸ்ட்ரீட் சண்டாளர்; இருமுறை பதவிநீக்க குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்பட்டவர்; முப்பத்து நான்கு கடுமையான குற்றவியல் பிரிவுகளில் தண்டனை பெற்றவர்; பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் பல ஆண்டுகால வணிக மோசடிகளுக்காக நீதிமன்றத்தால் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டவர். அவர் தொடர்ந்து மூன்று ஜனாதிபதி தேர்தல்களில் போட்டியிட்டு, இரண்டில் வெற்றியும் பெற்றுள்ளார். அமெரிக்க வரலாற்றில் வல்லுநர்கள் ஒரு விஷயத்தை நினைவு கூர்வார்கள்: அமெரிக்காவின் 22-வது மற்றும் 24-வது ஜனாதிபதியாக பணியாற்றிய குரோவர் கிளீவ்லேண்ட் மட்டுமே, ட்ரம்பிற்கு முன்பாக வெள்ளை மாளிகையைக் கைப்பற்றி, அதை இழந்து, மீண்டும் மீட்டெடுத்த ஒரே மனிதராவார். ட்ரம்பின் எழுச்சி வரை, அந்த வரலாற்று உண்மை பெரிய முக்கியத்துவமற்ற ஒரு அரிதான செய்தியாக மட்டுமே இருந்தது. ஆனால், ட்ரம்பின் முதல் பதவிக் காலமோ, தான் தோற்ற தேர்தலைச் செல்லாததாக்கி, அரசியலமைப்பைக் கவிழ்க்க அவர் மேற்கொண்ட முயற்சியோடு முடிந்தது. அதைத் தொடர்ந்து நான்கு ஆண்டுகால விசாரணைகள், குற்றச்சாட்டுகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் நடந்தபோதிலும், முடிவில் அவர் சிறையில் அடைக்கப்படவில்லை. மாறாக, மீண்டும் ஜனாதிபதியாக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இத்தகைய சூழலில், ட்ரம்பை ஒரு இயல்பு பிறழ்வு என்றோ அல்லது அமெரிக்க ஜனநாயகத்தின் ஈடன் தோட்டத்திற்குள் தற்செயலாக நுழைந்த பாம்பு என்றோ சித்தரிப்பது இனி சாத்தியமில்லை. அப்படிப்பட்ட ஒரு தனிநபர் அமெரிக்காவின் அரசியல் வாழ்வில் ஆதிக்கம் செலுத்த வந்திருப்பது, அமெரிக்க ஜனநாயகம் நீண்டகாலமாக சந்தித்து வரும் அதிர்ச்சியூட்டும் முறிவையே காட்டுகிறது. அந்த முறிவுதான் இந்தப் புத்தகத்தின் முக்கியப் பொருளாகும்.

ட்ரம்ப் எண்ணற்ற கருத்துரைகளின் மையப்புள்ளியாக இருந்து வருகிறார். ஆனால், அவை அனைத்தும் கிட்டத்தட்ட இரண்டு விதமான விளக்கங்களுக்குள் சுருங்கி விடுகின்றன. மிகவும் பொதுவாகக் காணப்படும் முதல் விளக்கம், அவரைப் பாதாளத்திலிருந்து எழுந்து வந்த ஒரு அரக்கனாகவும், மற்றபடி ஆரோக்கியமாக உள்ள ஒரு ஜனநாயகத்திற்குள் விவரிக்க முடியாதபடி திடீரென வெடித்துக் கிளம்பிய ஒருவராகவும் சித்தரிக்கிறது. இரண்டாவது விளக்கம், ஆதரவற்ற ஒரு தேசத்தின் மீது தனது விருப்பத்தைத் திணிக்கும் ஒரு சாத்தானிய மேதையின் குணாதிசயங்களை அவருக்கு அளிக்கிறது. இந்த இரண்டு விளக்கங்களுமே அற்பமானவை. அதிலும் இரண்டாவது விளக்கம், இந்தத் தனிநபர் உண்மையில் கொண்டிருக்கும் ஆற்றலை விட மிக அதீதமான ஒரு முக்கியத்துவத்தை அவருக்குக் கற்பிக்கிறது. உண்மையான தீவிரமான கேள்விகள் வேறு எங்கோ உள்ளன. எந்த சமூக மற்றும் பொருளாதார செயல்முறைகளின் சேர்க்கை இத்தகைய ஒரு மனிதனை ஆட்சிக்குக் கொண்டு வந்தது? முந்தைய எந்தவொரு அமெரிக்க அரசியல்வாதியாக இருந்தாலும், இவற்றில் ஒரேயொரு குற்றம் மட்டுமே அவரது அரசியல் வாழ்க்கையை முற்றிலுமாக அழித்திருக்கும். அப்படியிருக்க, ஒரு தசாப்த கால ஊழல்களுக்கும் குற்றங்களுக்கும் மத்தியிலும் ட்ரம்ப்பைத் தொடர்ந்து தாங்கிப் பிடித்தது எது? எல்லாவற்றிற்கும் மேலாக, மிக முக்கியமாக, அவர் யாருடைய நலன்களுக்காக ஆட்சி செய்கிறார்?

கடைசிக் கேள்விக்கான பதிலில் எந்தவிதமான ஐயப்பாட்டிற்கும் இடமில்லை. அமெரிக்காவை ஆட்சி செய்ய வந்துள்ள பெருநிறுவன-நிதிய தன்னலக்குழுக்களின் அரசியல் கருவியே ட்ரம்ப் ஆவார். இது மனித வரலாற்றில் ஈடு இணையற்ற அளவில் செல்வத்தைக் குவித்து வைத்துள்ள ஒரு நிதிப் பிரபுத்துவம் ஆகும். மேலும் இது, தன் அத்தியாவசிய நலன்களின் அடிப்படையில், ஜனநாயக ஆட்சி வடிவங்களுக்குச் சமரசம் செய்ய முடியாத பகைமை கொண்டதாகும். அமெரிக்காவில் தொள்ளாயிரத்திற்கும் மேற்பட்ட பில்லியனர்கள் இப்போது 8.2 டிரில்லியன் டாலர் ஒருங்கிணைந்த செல்வத்தைக் கட்டுப்படுத்துகின்றனர் — இது முழு மக்கள்தொகையின் கீழ் பாதியினரின் மொத்த செல்வத்தை விடக் கிட்டத்தட்ட இருமடங்காகும். அதே நேரத்தில் உழைக்கும் மக்கள் குடியிருப்பு, சுகாதாரம் மற்றும் உணவுக்கான செலவுகளால் நசுக்கப்படுகிறார்கள். தன்னலக்குழு ஒரு வர்க்கமாகச் சர்வாதிகார ஆட்சிக்கு பின்னால் அணிதிரண்டுள்ளது: இது 2024-இல் ட்ரம்ப் மீண்டும் அதிகாரத்திற்கு வர நிதியளித்ததுடன், அதன் முன்னணி நபர்கள் ட்ரம்பின் இரண்டாவது பதவியேற்பு விழாவில் கெளரவ இடங்களில் அமர வைக்கப்பட்டனர்.

வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் 2025 மே 30 வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (வலது), நிதித்துறை செயலாளர் ஸ்காட் பெசென்ட் (இடமிருந்து முதலாவதாக) மற்றும் வர்த்தகத்துறை செயலாளர் ஹோவர்ட் லட்னிக் ஆகியோர் கவனித்துக் கொண்டிருக்கும் போது எலோன் மாஸ்க் பேசுகிறார். [AP Photo/Evan Vucci]

தன்னலக்குழு ஆட்சியின் நேரடி வடிவமாக இருக்கும் எலோன் மாஸ்க்கை விடச் சிறந்த உதாரணம் வேறு எதுவும் இல்லை. மனித வரலாற்றிலேயே மிகச் செல்வந்தரான, விரைவில் உலகின் முதல் டிரில்லியனராக மாறவுள்ள மாஸ்க், 2024-இல் ட்ரம்பை மீண்டும் வெள்ளை மாளிகைக்குக் கொண்டு வர கால் பில்லியன் டாலர்களுக்கும் மேல் செலவிட்டார். அதற்குப் பிரதிபலனாக, புதிதாக உருவாக்கப்பட்ட அரசாங்க செயல்திறன் துறையின் (DOGE) தலைமைப் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது. அங்கிருந்து அவர் கூட்டாட்சி முகமைகளையும் சமூக நலத்திட்டங்களையும் ஒட்டுமொத்தமாக அழிக்கத் தொடங்கினார். ட்ரம்பிற்குப் பின்னால் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட தனது வர்க்கத்தின் மிகவும் கவனிக்கத்தக்க நபர் அவரே. ஆனால், அவர் மட்டுமே ஒரே நபர் அல்ல. தொழில்நுட்பத் தன்னலக்குழுக்கள் இந்தச் சர்வாதிகார வேட்பாளருக்குப் பின்னால் அணிதிரண்டன: பீட்டர் தீல், ஆரக்கிள் நிறுவனர் லாரி எலிசன், மற்றும் நீண்ட காலமாகத் தாராளவாதப் புகழைக் கட்டிக்காத்து வந்த அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் போன்ற பெரும் தொழிலதிபர்கள் அனைவரும், சிதைந்து வரும் ஜனநாயக வடிவங்களை விட ஒரு சர்வாதிகார ஆட்சியே தங்கள் செல்வத்தை மிகவும் நம்பகத்தன்மையுடன் பாதுகாக்கும் எனக் கணக்கிட்டனர். ட்ரம்ப் இந்த நலன்களின் அரசியல் பிரதிநிதியே தவிர, வேறு எதுவுமே இல்லை. அவர் உருவகப்படுத்தும் அமெரிக்க அரசியல் வாழ்க்கையின் குற்றமயமாக்கல் என்பது ஒரு தனிநபரின் மனப்பிறழ்வில் வேரூன்றியதல்ல. மாறாக, நிதிச் சூறையாடலைத் தங்கள் செல்வத்தின் ஆதாரமாகக் கொண்டதும், தங்களின் கீழ் உள்ள சமூக அடித்தளம் சுருங்கும்போது மேலும் சட்டவிரோத முறைகளைக் கையாள்வதுமான ஓர் ஆளும் வர்க்கத்தின் இருப்பிலேயே அது வேரூன்றியுள்ளது. சுருக்கமாகச் சொன்னால், ட்ரம்ப் தன்னலக்குழு ஆட்சியின் வெளிப்பாடே தவிர, அதன் காரணமல்ல.

இந்தப் புத்தகத்தின் தனித்துவமான அம்சம் என்னவென்றால், அமெரிக்க ஜனநாயக அமைப்பின் முறிவு நிகழ்ந்தபோதே அது உடனுக்குடன் பதிவு செய்யப்பட்டது என்பதாகும். உலக சோசலிச வலைத் தளம் (WSWS) மற்றும் அதன் சர்வதேச ஆசிரியர் குழுவின் முன்னணி உறுப்பினர்களால் எழுதப்பட்டு இங்குத் தொகுக்கப்பட்டுள்ள இந்த ஆவணங்கள், நிகழ்வுகள் வாரந்தோறும் நடைபெற்றபோதும், ஒவ்வொரு நெருக்கடி வெடித்தபோதும் உடனுக்குடன் எழுதப்பட்டவை ஆகும். இவற்றை முழுமையாகப் படிக்கும் போது, ஓர் அரசியல் பேரழிவைத் திரையில் நேரடிப் பதிவாகக் காண்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகின்றன. இந்த நிகழ்வுகளின் இறுதி முடிவுகள் என்னவாகும் என்பதை இன்னும் அறியப்படாத சூழ்நிலையில்தான் இவை எழுதப்பட்டன. இருப்பினும், முதலாளித்துவ சமூகத்தைப் பற்றிய மார்க்சிசப் பகுப்பாய்வின் அடிப்படையில் அணுகியதால், உலக சோசலிச வலைத் தளத்தால் இந்நிகழ்வுகளை உரிய வரலாற்று மற்றும் அரசியல் பின்னணியில் பொருத்த முடிந்ததோடு, அவற்றின் உடனடி மற்றும் நீண்டகால விளைவுகள் இரண்டையுமே துல்லியமாக முன்னறிவிக்க முடிந்தது. அமெரிக்க அரசியல் மற்றும் ஊடகத் துறை முழுவதுமே இந்த அபாயத்தை வெறும் வீண் பேச்சும் நாடகமும் என்று அலட்சியமாக நிராகரித்த நேரத்தில், அமெரிக்க ஜனநாயகத்திற்கு எதிரான பாசிச சதித்திட்டம் உருவாகிக் கொண்டிருந்தபோதே அது அடையாளப்படுத்தப்பட்டு விளக்கப்பட்டது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், ட்ரம்பின் எழுச்சிக் காலம் முழுவதிலும் அமெரிக்க ஜனநாயகம் சரிவைச் சந்தித்தபோது, நிகழ்நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரே தொடர்ச்சியான மார்க்சிசப் பகுப்பாய்வாக இந்த ஆவணங்கள் திகழ்கின்றன.

இந்தப் புத்தகத்திலுள்ள ஒவ்வொரு ஆவணமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தின் நிலைப்பாட்டிலிருந்தே தொடங்குகிறது. இது ட்ரம்பின் அதிகார எழுச்சியை, அமெரிக்க முதலாளித்துவத்தின் நீண்டகால வீழ்ச்சியின் பின்னணியில் வைத்து அணுகுகிறது. 1971-இல் டாலர்-தங்க மாற்று முறை ரத்து செய்யப்பட்டதன் மூலம் போருக்குப் பிந்தைய பணவியல் ஒழுங்கு முறிந்தமை, அதைத் தொடர்ந்து வந்த தசாப்தங்களில் தொழில்துறைகள் சீரழிந்தமை, தொழிற்சங்க அதிகாரத்துவங்களால் வர்க்கப் போராட்டம் அடக்கப்பட்டமை, நிதி ஒட்டுண்ணித்தனத்தின் இடைவிடாத வளர்ச்சி, மற்றும் 1991-இல் சோவியத் ஒன்றியம் ஸ்டாலினிசத்தினால் கலைக்கப்பட்டதன் உலகளாவிய தாக்கம் ஆகியவற்றின் ஊடாக இந்த வீழ்ச்சியின் கட்டங்களை இந்த ஆவணங்கள் வரிசைப்படுத்திக் காட்டுகின்றன. சோவியத் ஒன்றியத்தின் கலைப்பானது அமெரிக்க இராணுவவாதத்தின் மீதிருந்த கடைசி வெளிப்புறக் கட்டுப்பாட்டையும் அகற்றி, முப்பத்தைந்து ஆண்டுகாலத் தொடர் போர்க் காலத்தைத் தொடங்கி வைத்தது. இவ்வாறு அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் பரந்த பிரிவினர் பாசிசத்தை நோக்கித் திரும்புவது என்பது, அந்த வர்க்கத்திடம் எந்தவொரு முற்போக்கான தீர்வும் இல்லாத ஒரு அமைப்புரீதியான நெருக்கடியின் வெளிப்பாடே ஆகும்.

இந்தப் புத்தகம் ட்ரம்பின் அரசியல் வாழ்க்கை வளர்ந்து வந்த பாதையைப் பின்பற்றி, இந்த வரலாற்றை மூன்று பகுதிகளாகக் விவரிக்கிறது.

முதல் பகுதி 2015 முதல் 2020 வரையிலான ஆண்டுகளை—அதாவது ட்ரம்பின் முதல் தேர்தல் பிரச்சாரத்தையும் அவரது முதல் ஆட்சிக் காலத்தையும் உள்ளடக்கியது. இது, ட்ரம்பின் எழுச்சியைச் சாத்தியமாக்கிய சூழ்நிலைகளை நிறுவுகிறது: உழைக்கும் மக்கள் மீது பல தசாப்தங்களாக திணிக்கப்பட்ட சமூகப் பேரழிவு, ஒரு நிதியியல் தன்னலக் குழுவின் அபரிமிதமான வளர்ச்சி, போரை ஆதரிப்பதில் இரு கட்சிகளுக்கும் இடையிலான கூட்டு உடன்பாடு மற்றும் ஜனநாயகக் கட்சியின் பிற்போக்குத்தனமான அடையாள அரசியல் ஊக்குவிப்பு ஆகியவை இதில் அடங்கும். அவரது பிரச்சாரத்தின் முதல் மாதங்களிலிருந்தே, உலக சோசலிச வலைத்தளம், ட்ரம்ப்பை தன்னலக்குழுவின் பாசிசத்திற்கு முந்தைய கருவியாக அடையாளம் காட்டியதுடன், மேலும் அவர் ஒரு “பிற்போக்குத்தனமான வெள்ளை தொழிலாள வர்க்கத்தால் உருவாக்கப் பட்டவர்” என்று ஜனநாயகக் கட்சியினராலும் பெருநிறுவன ஊடகங்களாலும் பரப்பப்பட்ட பொய்யைத் தவிடுபொடியாக்கியது. இந்த அவதூறுப் பிரச்சாரமானது, பெருநிறுவனங்களால் கட்டுப்படுத்தப்படும் இரு-கட்சி முறைமை, தான் உருவாக்கிய சூழ்நிலைகளுக்கான பொறுப்பில் இருந்து தப்பிக்க உதவியது. அத்துடன், ட்ரம்ப் உண்மையில் எந்த நிதிசார் உயரடுக்கிலிருந்து உருவானாரோ, அந்த உயரடுக்கினருக்கு எதிராகத் திருப்பப்பட வேண்டிய விரோத உணர்வை, அதற்குப் பதிலாகத் தொழிலாளி வர்க்கத்திற்கு எதிராகக் கீழ்நோக்கித் திருப்பியது. ட்ரம்பினது முதல் பதவிக்காலமே ஒரு பாசிச இயக்கத்திற்கான கூறுகளைக் கட்டமைப்பதிலேயே செலவிடப்பட்டது: ஆயுதம் ஏந்திய துணை இராணுவக் குழுக்களை வளர்த்தெடுத்தல், குடியேறிய மக்களுக்கு எதிரான அந்நிய வெறுப்புப் பிரச்சாரம், நிர்வாகத் துறையின் கட்டமைப்பிற்குள் சர்வாதிகாரப் பாணியிலான ஆட்சியை உருவாக்குதல் மற்றும் வெளிநாடுகளில் ஏகாதிபத்தியப் போரைத் தீவிரப்படுத்துதல் ஆகியவை இதில் அடங்கும்.

இரண்டாம் பகுதி, 2020 தேர்தலைச் செல்லாததாக்குவதற்காக நடத்தப்பட்ட சதித்திட்டம், ஜனவரி 6, 2021 அன்று ட்ரம்ப் மேற்கொண்ட ஆட்சி கவிழ்ப்பு முயற்சி, மற்றும் அதன் பின்விளைவுகள் குறித்து விவரிக்கிறது. இதிலுள்ள ஆவணங்கள், ஒரு ஜனாதிபதி சர்வாதிகாரத்தை நிறுவுவதற்காக அரசியலமைப்பை தூக்கியெறிந்து, வெள்ளை மாளிகையிலிருந்தே நேரடியாக வழிநடத்தப்பட்டு, பல மாதங்களாகத் திட்டமிடப்பட்ட ஒரு சதியின் உச்சக்கட்டமே ஜனவரி 6 என்பதை திட்டவட்டமாக நிறுவுகின்றன. “திருட்டை நிறுத்து” என்ற பெரும் பொய், போலி வாக்காளர் பட்டியலை உருவாக்கும் திட்டம், மற்றும் நாடாளுமன்றக் கட்டிடத்தின் மீதான தாக்குதலுக்காக ஆயுதம் ஏந்திய பாசிசக் குழுக்களைத் திரட்டியது ஆகியவற்றுக்கு அரசு இயந்திரத்திலும் குடியரசுக் கட்சியிலும் பரந்த ஆதரவு இருந்தது. மேலும் ஜனநாயகக் கட்சியினரிடமிருந்து இதற்கு எந்தவொரு தீவிரமான எதிர்ப்பும் எழவில்லை. இந்தச் சதித்திட்டத்தை, அதன் ஒவ்வொரு கூறுகளாக இந்த உரைகள் ஆராய்கின்றன. அந்த நேரத்தில், புதிதாகப் பொறுப்பேற்ற பைடென் நிர்வாகம் இந்த விவகாரத்தை புதைக்கப் பார்த்ததையும், இதை ட்ரம்ப் மற்றும் அவரது கலவரக்காரக் கும்பலின் தனிப்பட்ட செயல் போலக் காட்ட முனைந்ததையும், இந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்கு உறுதுணையாக இருந்த அதிகாரிகள், நிதி அமைப்பாளர்கள் மற்றும் குடியரசுக் கட்சித் தலைவர்கள் அடங்கிய வலையமைப்பை எந்தப் பொறுப்பிலிருந்தும் பாதுகாப்பதாக இருந்த உறுதியையும் இவை வெளிச்சம்போட்டுக் காட்டுகின்றன.”

ஜனவரி 6, 2021 அன்று, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு விசுவாசமான வலதுசாரிக் கலவரக்காரர்கள் ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சியாக வாஷிங்டனிலுள்ள அமெரிக்க கேபிட்டல் கட்டிடத்தை முற்றுகையிடுகின்றனர். [AP Photo/Jose Luis Magana]

மூன்றாவது பகுதி, 2025-இல் தொடங்கிய ட்ரம்பின் தற்போதைய இரண்டாவது ஆட்சிக்காலம் குறித்தும், அதை எதிர்த்துப் போராடுவதற்குத் தேவையான சோசலிச மூலோபாயம் குறித்தும் கவனம் செலுத்துகிறது. ட்ரம்ப் மீண்டும் அதிகாரத்திற்கு வந்ததன் மூலம், தன்னலக்குழு, அரசின் நேரடிக் கட்டுப்பாட்டைக் கையில் எடுத்துக்கொண்டது. விசுவாசிகளின் அமைச்சரவை மற்றும் ஊடகப் பிரச்சார இயந்திர சூழலுக்கு மத்தியில் பணக்காரர்களின் அரசாங்கம் பகிரங்கமாக நிறுவப்பட்டமை; நாஜிக்களால் ஈர்க்கப்பட்ட “விதிவிலக்கான நிலை” பிரகடனம் செய்யப்படல்; அமெரிக்க நகரங்களுக்குள் குடியேற்ற மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவு (ICE) துணை இராணுவப் படைகளும் கூட்டாட்சிப் படைகளும் இறக்கப்படல்; கூட்டாட்சி முகவர்களால் குடிமக்கள் படுகொலை செய்யப்படலும் ஜனவரி 2026-இல் மினியாபோலிஸில் நடந்த கொடூரங்களும்; வெனிசுவேலா மீதான சட்டவிரோதப் படையெடுப்பு; மற்றும் ஈரானுக்கு எதிரான போர் தொடுத்தது ஆகியவற்றை இந்த ஆவணங்கள் விரிவாகப் பரிசீலிக்கின்றன. வெளிநாடுகளில் ஏகாதிபத்திய விரிவாக்கம், உள்நாட்டில் சமூக அடக்குமுறை ஆகியவற்றுடன் பிரிக்க முடியாத நலன்களைக் கொண்ட ஓர் ஆளும் உயரடுக்கின் கைகளில் அதிகாரம் குவிக்கப்படுவதை இவை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. இதற்கு மாற்றாக, இந்த ஆவணங்கள் ஒரு தெளிவான மூலோபாயத்தை முன்வைக்கின்றன: பெருநிறுவனங்களின் நலன் சார்ந்த தொழிற்சங்கக் கட்டமைப்புகளிலிருந்து சுயாதீனமான சாமானிய தொழிலாளர் குழுக்களை அமைத்தல்; மூலதனத்தின் இரு கட்சிகளிடமிருந்தும் தொழிலாளர் வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தைப் பேணுதல்; மற்றும் முதலாளித்துவ அமைப்பிலிருந்து முற்றிலும் முறித்துக் கொண்டு, ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் கீழ் தொழிலாளர் வர்க்கத்தைச் சர்வதேச அளவில் அணிதிரட்டுவதன் மூலமாக மட்டுமே பாசிசத்திற்கும் போருக்கும் எதிரான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல முடியும் என்ற புரிதலை உருவாக்குதல் ஆகியவை இதில் அடங்கும்.

ஆனால் இந்தப் புத்தகம் ட்ரம்பைப் பற்றி மட்டுமே பேசவில்லை. அவருக்கு உடந்தையாக இருந்தவர்களுக்கும், அவர் அதிகாரத்திற்கு வரத் துணை நின்றவர்களுக்கும் ஒருபோதும் பற்றாக்குறை இருந்ததில்லை. அவரது எழுச்சியை எளிதாக்கியதும், அவரைத் தடுக்கக்கூடிய ஒரேயொரு சமூக சக்தியான தொழிலாள வர்க்கத்தை திட்டமிட்டு ஒடுக்கியதுமான ஒவ்வொரு அரசியல் சக்தியையும் அம்பலப்படுத்தும் ஆவணங்களின் தொகுப்பாக இது திகழ்கிறது. ட்ரம்பின் சதித்திட்டங்களுக்குத் தங்கள் கட்சியின் முழு அமைப்பையும் பயன்படுத்திக்கொள்ள அனுமதித்த குடியரசுக் கட்சி கூட்டாளிகளே அவருக்கு உடந்தையாக இருக்கின்றனர். ஜனநாயகக் கட்சியினரோ அவருக்குத் துணையாக நிற்கின்றனர். இந்தக் கட்சி தனது இடது எதிரிகளை எதிர்த்துப் போராடுவதில் அளப்பரிய ஆற்றலையும் இரக்கமற்ற தீவிரத்தையும் வெளிப்படுத்துகிறது. ஆனால், ட்ரம்பை எதிர்கொள்வதில் இது சக்தியற்றதாகவே நிரூபிக்கப்பட்டுள்ளது. ஏனெனில், தன்னலக்குழுவின் ஆதிக்கத்தின் செல்வத்தைப் பாதுகாப்பதிலும் ஏகாதிபத்திய போர்களைத் தொடர்வதிலும் இவர்களும் ட்ரம்பை விடக் குறைந்தவர்கள் அல்ல.

ஆரம்பத்திலிருந்தே, ஜனநாயகக் கட்சியினர் ட்ரம்பின் எழுச்சியை இணக்கப் போக்குடனேயே எதிர்கொண்டனர். 2016-இல் ட்ரம்ப் வெற்றி பெற்ற மறுநாள், ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும் ஒரே அணியின் உறுப்பினர்கள் என்றும், இத்தேர்தல் ஒரு “உள் மோதல்” என்பதைத் தவிர வேறொன்றுமில்லை என்றும் ஒபாமா நாட்டிற்கு உறுதியளித்தார். ஜனவரி 6 ஆட்சிக் கவிழ்ப்பு சதி நடந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு பைடென்: “எமக்கு ஒரு குடியரசுக் கட்சி தேவை; கொள்கைப்பிடிப்புள்ள மற்றும் வலிமையான ஒரு எதிர்க்கட்சி எமக்குத் தேவை” என்று அறிவித்தார். அதன் பின்னர், ஜனநாயகக் கட்சியினரின் தெரிவுக் குழு தனது விசாரணையைப் பதினெட்டு மாதங்களுக்கு இழுத்தடித்து, இறுதியில் அந்தச் சதித்திட்டத்தை ஒரே ஒரு தனிமனிதனின் செயல் என்று கூறி மூடி மறைத்தது. அதே நேரத்தில், நீதித்துறை ட்ரம்பின் பாசிச ஆதரவுப் படையினரை மட்டும் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தியதே தவிர, பின்னணியிலிருந்த அதிகாரிகள், செயல்பாட்டாளர்கள் மற்றும் நிதியுதவி அளித்தவர்கள் அடங்கிய வலையமைப்பைத் தொடாமல் அப்படியே விட்டுவிட்டது. பைடெனின் ஜனாதிபதி பதவிக் காலம் என்பது, முன்னைய போக்கில் ஏற்பட்ட எந்தவொரு முறிவும் அல்ல; மாறாக அது ஒரே செயல்முறையின் இடைப்பட்ட காலக்கட்டமாகவே இருந்தது. அது ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்குப் பதிலாக, உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான பினாமிப் போருக்கும் காஸாவில் நடைபெற்ற இனப்படுகொலைக்கும் இருகட்சிகளின் கூட்டு ஆதரவைத் திரட்டுவதிலேயே கவனம் செலுத்தியது. ஆளும் வர்க்கத்தின் அடிப்படை நலன்கள் சார்ந்த ஒவ்வொரு விவகாரத்திலும் — செல்வப் பகிர்வு, நிதி மூலதனத்தின் அதிகாரம், போரை நடத்துதல், கண்காணிப்பு அரசை உருவாக்குதல் என அனைத்திலும் — இரு கட்சிகளுக்கும் இடையிலான இந்தத் தொடர்ச்சி எவ்விதத் தடையுமின்றி நீடித்தது.

ஜனாதிபதி ஜோ பைடென், நியூ யோர்க் மாநிலத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர் அலெக்ஸாண்ட்ரியா ஒகாசியோ-கோர்டெஸ் மற்றும் செனட்டர் பெர்னி சாண்டர்ஸ் ஆகியோருடன் நிற்கிறார். ஏப்ரல் 22, 2024 [AP Photo/Manuel Balce Ceneta]

தங்களை சோசலிஸ்டுகள் என்று பொய்யாகக் கூறிக்கொள்ளும் தனிநபர்களாலும் குழுக்களாலும் ஜனநாயகக் கட்சியினர் ஒவ்வொரு கட்டத்திலும் பலப்படுத்தப்பட்டு வந்துள்ளனர். இவர்களைத்தான் உலக சோசலிச வலைத் தளம் (WSWS) ‘போலி-இடதுகள்’ என அடையாளம் கண்டுள்ளது. 2016-இல் “பில்லியனர் வர்க்கத்திற்கு” எதிரான கண்டனங்கள் மூலம் மில்லியன் கணக்கான மக்களின் ஆதரவைப் பெற்ற பெர்னி சாண்டர்ஸ், எந்தவொரு எதிர்ப்பும் காட்டாமல் சரணடைந்து ஹிலாரி கிளிண்டனை ஆதரித்தார். ட்ரம்பின் வெற்றிக்குப் பிறகு புதிய ஜனாதிபதியுடன் “இணைந்து பணியாற்றத் தயார்” என்றும் அவர் அறிவித்தார். ஜனவரி 6 சம்பவம் நடந்தபோது, இந்த போலி-இடதுகள் அங்கே ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியே நடக்கவில்லை என மறுப்பதில் முனைப்புடன் செயல்பட்டனர். அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகள் (DSA) அமைப்போடு தொடர்புடைய ஜக்கோபின் இதழ், ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள் பற்றி முடிந்தவரை மௌனம் காப்பதையே தனது ஆசிரிய தலையங்கக் கொள்கையாகக் கொண்டிருந்தது.

ட்ரம்பின் எழுச்சிக்குரிய இந்த முழு தசாப்த காலமும் தொடர்ச்சியான சமூக எதிர்ப்புகளால் நிறைந்ததாகவே இருந்தது — அவரது முதல் பதவிக்காலத்தின் முதல் முழு நாளன்று வீதிகளை நிரப்பிய இலட்சக்கணக்கான மக்கள்; ஜோர்ஜ் பிலாய்ட் பொலிசாரால் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து நடைபெற்ற பல இன மக்கள் பங்கேற்ற பெருந்திரள் போராட்டங்கள்; மற்றும் அமெரிக்க வரலாற்றிலேயே மிகப்பெரிய ஒரே நாள் போராட்டங்களாக அமைந்த 2025 மற்றும் 2026-ஆம் ஆண்டுகளின் “மன்னர்கள் வேண்டாம்” (No Kings) ஆர்ப்பாட்டங்கள் என இவை அனைத்தும் இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ளன. இத்தகைய சூழலில், அதிகாரப்பூர்வ “எதிர்க்கட்சியின்” இயலாமை என்பது மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாக உள்ளது. ஒரு பாரிய சோசலிச இயக்கத்திற்கான புறநிலைச் சூழல் நிலவுகிறது; ஆனால், அதற்கான நனவான அரசியல் தலைமைதான் இல்லை. அத்தகைய தலைமையைக் கட்டியெழுப்புவதை நோக்கியே இந்நூலின் முன்னோக்கு அமைந்துள்ளது.

தென்மேற்கு டெட்ராய்ட்டில் “மன்னர்கள் வேண்டாம்” ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள்

இத்தொகுதியில் சேகரிக்கப்பட்டுள்ள ஆவணங்கள் உலக சோசலிச வலைத் தளத்தின் முன்னணி எழுத்தாளர்களின் படைப்புகளாகும். சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) தேசியச் செயலாளரும், 2020 மற்றும் 2024 ஜனாதிபதி தேர்தல்களில் அக்கட்சியின் வேட்பாளருமான ஜோசப் கிஷோர்; ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் பல தசாப்தங்களாகப் பெற்ற அரசியல் அனுபவம், ஆராய்ச்சி மற்றும் எழுத்தாற்றலைக் கொண்டு அமெரிக்க அரசியலைப் பகுப்பாய்வு செய்யும் பட்ரிக் மார்ட்டின் மற்றும் பாரி கிரே; ஆகஸ்ட் 2021-இல் “ஜனவரி 6, 2021: அமெரிக்காவிற்கு எதிரான டொனால்ட் ட்ரம்பின் சதி” எனும் தலைப்பில் உரையாற்றிய எரிக் லண்டனின் உரை இந்தத் தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளது. அவரது உரை, ட்ரம்பின் சமூக பின்னணி குறித்தும், நாடாளுமன்ற (Capitol) கட்டிட முற்றுகையில் உச்சக்கட்டத்தை அடைந்த சதித்திட்டம் குறித்தும் ஆழமான கண்ணோட்டத்தை வழங்குகிறது. மற்றும் பலரின் ஆக்கங்கள் இதில் அடங்கும். இங்குள்ள பல அறிக்கைகள் சோசலிச சமத்துவக் கட்சி (அமெரிக்கா) மற்றும் உலக சோசலிச வலைத் தள ஆசிரியர் குழுவின் பெயரின்கீழ் வெளியிடப்பட்டுள்ளன. இவை இவ்விரு அமைப்புகளின் முன்னணி உறுப்பினர்களால் கூட்டாக எழுதப்பட்டவை. இங்கு தோன்றும் ஒவ்வொன்றும் உலக சோசலிச வலைத் தளத்தின் அன்றாட அரசியல் பகுப்பாய்வுப் பணியின் விளைவே ஆகும். இக்காலகட்டத்தில் ட்ரம்ப் நிர்வாகங்கள் மற்றும் அமெரிக்க அரசியல் குறித்து WSWS வெளியிட்ட பல்லாயிரக்கணக்கான கட்டுரைகளிலிருந்து இந்த ஆவணங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன; இதன் முழுமையான பதிவை வெளியிட முயன்றால் அது பல தொகுதிகளைக் கொண்டதாக அமைந்திருக்கும்.

இங்குத் தொகுக்கப்பட்டுள்ள இந்த ஆவணம், இன்றைய அரசியல் களத்தில் வேறு எங்குமே ஈடு இணையற்றவை. வேறு எந்தப் போக்கோ, கட்சியோ அல்லது வெளியீடோ இதைப் போன்ற ஒன்றைச் சுட்டிக்காட்ட முடியாது—பாசிச அபாயத்தை அதன் தொடக்கத்திலேயே அடையாளம் கண்டு, அரசியலமைப்பு ஆட்சி மீதான தொடர்ச்சியான தாக்குதல்களைக் கண்டறிந்து, ஒவ்வொரு கட்டத்திலும் அவற்றைத் தோற்கடிக்க ஒரு சோசலிசத் திட்டத்தை முன்னெடுத்த ஒரு நீடித்த, பத்தாண்டு காலப் பகுப்பாய்வு இது. இது தற்செயலானது அல்ல. இது ஒரு வழிமுறை மற்றும் ஒரு இயக்கத்தின் விளைவாகும். உலக சோசலிச வலைத் தளத்தை வெளியிடும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI), இன்று உலகில் மரபுவழி மார்க்சியம் மற்றும் ட்ரொட்ஸ்கியத்தின் ஒரே பிரதிநிதியாகும். இந்தப் புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு கட்டுரையும், உரையும், அறிக்கையும் வரலாற்றுப் பொருள்முதல்வாதத்திலும், ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சித் தத்துவத்திலும் வேரூன்றியவை. இவை மட்டுமே அமெரிக்க ஜனநாயகம் தன்னலக்குழு சர்வாதிகாரத்தை நோக்கி வீழ்ந்ததை புரிந்துகொள்ள வைப்பதுடன், தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஒற்றுமையிலேயே அதற்கான தீர்வும் உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டுகின்றன. எப்போதும் ஆழமடைந்து வரும் இந்நெருக்கடியின் ஒவ்வொரு திருப்புமுனையிலும், உலக சோசலிச வலைத் தளமும் சோசலிச சமத்துவக் கட்சியும் ட்ரம்பைத் தடுப்பதற்கும், பாசிச அச்சுறுத்தலைத் தோற்கடிக்கவும், சோசலிசத்திற்கான போராட்டத்தில் அமெரிக்க மற்றும் சர்வதேசத் தொழிலாளர்களை ஒன்றுபடுத்துவதற்குமான ஒரு புரட்சிகர முன்னோக்கிற்காகப் போராடி வந்துள்ளன. ஒவ்வொரு நாள் கடக்கும்போதும் இந்த முன்னோக்கு மேலும் தீவிரமான முக்கியத்துவத்தைப் பெற்று வருகிறது.

பிப்ரவரி 28, 2026 அன்று ஈரான் மீது தொடங்கப்பட்ட போரில்தான் இந்த அரசியல் பார்வையின் பொருத்தம் வேறு எங்குமே இல்லாதவாறு மிகத் தெளிவாக வெளிப்படுகிறது. உக்ரேன், காஸா, வெனிசுவேலா மற்றும் இப்போது ஈரான் ஆகிய அனைத்தும் மூன்றாம் உலகப் போரின் தொடக்கக் களங்களாக அமைந்துள்ளன. ஜனநாயகக் கட்சியின் மிக அதிகாரப்பூர்வக் குரலான நியூ யோர்க் டைம்ஸ் நாளிதழின் பதிலானது, இந்தப் போரை ஒரு சர்வதேசக் குற்றம் என்று வரையறுப்பதற்குப் பதிலாக, வெறும் தவறான கணக்குப்போடல் என்றே சித்தரித்துள்ளது. ட்ரம்ப் மீதான ஜனநாயகக் கட்சியின் “எதிர்ப்பு” என்பது முற்றிலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நிகழ்ச்சி நிரலோடும்—எல்லாவற்றிற்கும் மேலாக ரஷ்யாவிற்கு எதிரான போரை முன்னெடுப்பதற்கான அதன் தீவிர அர்ப்பணிப்போடும்—மட்டுமே பிணைக்கப்பட்டுள்ளது என்பதை இது மீண்டும் ஒருமுறை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. அணுஆயுதப் போருக்கான ஆபத்து உண்மையானதாகவும் உடனடியானதாகவும் உள்ளது. உள்நாட்டில் சர்வாதிகாரத்தை நிறுவிவரும் அதே ஆளும் வர்க்கம்தான் வெளிநாடுகளில் பேரழிவை ஏற்படுத்தவும் தயார்படுத்தி வருகிறது; பாசிசமும் போரும் ஒரே நெருக்கடியிலிருந்தே உருவாகின்றன.

அமெரிக்கா உருவாவதற்குக் காரணமான புரட்சியின் 250-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்தப் புத்தகம் வெளியிடப்படுகிறது. இவற்றுக்கு இடையிலான முரண்பாடு மிகத் தீவிரமானது. சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்டு, மனிதர்கள் அனைவரும் சமம் என்று பிரகடனம் செய்த ஒரு நாடு, இன்று அந்த மூலக்கோட்பாடுகளை வெளிப்படையாக அவமதிக்கும் ஒரு தன்னலக்குழுவின் இரும்புப் பாதங்களின் கீழ் கிடக்கிறது. ஆளும் வர்க்கத்திற்கு 1776-ன் ஜனநாயக மரபுகள் மீது எந்தப் பற்றும் இல்லை. மாறாக, அவற்றை நிராகரிப்பதையே அது தனது நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த நிராகரிப்பின் மிகச் செறிவூட்டப்பட்ட வெளிப்பாடாக நியூ யோர்க் டைம்ஸ் இதழின் 1619 திட்டம் அமைந்தது. ஜனநாயகக் கட்சியினாலும், கல்வியாளர்களின் ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தினாலும் முன்னெடுக்கப்பட்ட இத்திட்டம்—அமெரிக்க வரலாற்றை முழுவதுமாக இன ஒடுக்குமுறையின் முறியாத தொடர் கதையாக மறுவடிவமைக்கவும், அமெரிக்கப் புரட்சி மற்றும் உள்நாட்டுப் போரின் ஜனநாயக, சமத்துவ உள்ளடக்கங்களை நீக்கவும், வர்க்கப் போராட்டத்திற்குப் பதிலாக இனங்களுக்கு இடையிலான முடிவில்லாத போர் என்ற பிற்போக்குத்தனமான புனை கதையை முன்வைக்கவும் முயன்றது. அமெரிக்கப் புரட்சி மற்றும் உள்நாட்டுப் போரின் உண்மையான புரட்சிகர மரபுகளைப் பாதுகாத்து, வரலாற்றைத் திரிக்கும் இம்முயற்சிக்கு எதிரான போராட்டத்தை உலக சோசலிச வலைத் தளம் முன்நின்று நடத்தியது.

வில்லியம் ட்ரெகோவின் புகழ்பெற்ற ஓவியமான “வேலி ஃபோர்ஜை நோக்கிய அணிவகுப்பு (The March to Valley Forge)” (1883) — இது பிலடெல்பியாவில் உள்ள அமெரிக்கப் புரட்சி அருங்காட்சியகத்தின் சேகரிப்பில் உள்ள கலைப்படைப்பு.

இந்தப் புரட்சிகரப் பாரம்பரியத்தைப் பாதுகாப்பது என்பது தற்போதைய காலகட்டத்தின் மையப் பணியுடன் பிணைக்கப்பட்டுள்ளது. இங்கு தொகுக்கப்பட்டுள்ள கட்டுரைகள், முதல் இரண்டு அமெரிக்கப் புரட்சிகளால் நிறுவப்பட்ட ஜனநாயகக் கொள்கைகளைப் பாதுகாக்கவும் விரிவாக்கவும் மூன்றாவது சோசலிசப் புரட்சியால் மட்டுமே முடியும் என்பதை வலியுறுத்துகின்றன. முதல் அமெரிக்கப் புரட்சி, முதலாளித்துவ ஜனநாயகக் குடியரசை நிறுவியதுடன் காலனித்துவ எதேச்சாதிகாரத்தையும் தூக்கியெறிந்தது. இரண்டாவது புரட்சி, உள்நாட்டுப் போரின் மூலம், மனிதர்களை அடிமைகளாக வைத்து விற்கும் கொடுமையை அழித்தது. மூன்றாவது அமெரிக்கப் புரட்சி என்பது தொழிலாள வர்க்கத்தால் அதிகாரத்தைக் கைப்பற்றுவதாகவும், சோசலிச அடித்தளத்தில் பொருளாதார வாழ்க்கையை மறுஒழுங்கமைப்பதாகவும் மட்டுமே இருக்க முடியும். மேலும் இது உலக சோசலிசப் புரட்சியின் ஒரு அங்கமாகவே நிறைவேற்றப்பட வேண்டும்.

எனவே, இந்தத் தொகுதி “தொலைதூரத்திலிருந்து ஆ. லிங்கனின் ஒரு கடிதம்” என்ற கற்பனையான ஆவணத்துடன் முடிவது மிகவும் பொருத்தமானது—இதன் தோற்றுவாயை வாசகர்கள் தங்கள் விருப்பம்போல் தீர்மானித்துக்கொள்ளலாம். நேர்மையான ஏபின் (Honest Abe) [நேர்மையான ஏப் - ஆபிரகாம் லிங்கனின் புகழ்பெற்ற அடைமொழி] கடிதம் சொல்லப்பட வேண்டியதை வெளிப்படையாகச் சொல்கிறது: லிங்கனின் சொந்தக் காலத்தில் அடிமைத்தனம் எவ்வளவு சகித்துக்கொள்ள முடியாததாக இருந்ததோ, அதேபோல் தற்போதைய உலகிற்கு முதலாளித்துவமும் சகித்துக்கொள்ள முடியாத ஒன்றாகும். இப்போது அவரது முன்னாள் இருப்பிடத்தை (வெள்ளை மாளிகையை) ஆக்கிரமித்திருக்கும் நபர் ஒரு “அறிகுறி மற்றும் கருவி” மட்டுமே தவிர, அவரே நோயல்ல; மேலும் 1776-இல் பெற்ற சுதந்திரமும், அல்லது அப்போமேட்டாக்ஸில் (Appomattox) உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தும் நிறைவடையாத அந்தப் புரட்சிகர இலட்சியமானது, இப்போது இந்த தேசத்தினதும் மற்றும் அனைத்து நாடுகளினதும் உழைக்கும் ஆண்களிடமும் பெண்களிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மனிதகுலத்தின் முன் நிற்கும் மாற்று வழி, இன்று உலகம் முழுவதிலும் மிகத் தீவிரமான அவசரத்துடன் முன்வைக்கப்படுகிறது: ஒன்றில் பாசிசம், அல்லது சோசலிசம். பாசிச காட்டுமிராண்டித்தனத்தை நோக்கிய வீழ்ச்சியைத் தடுப்பதற்குத் தேவையானது, வரலாற்றில் தொழிலாள வர்க்கத்தின் நனவான தலையீடு ஆகும். அத்தகைய தலையீட்டிற்கு ஒரு புதிய புரட்சிகரத் தலைமையைக் கட்டியெழுப்புவது அவசியமாகும். தொழிலாளர்களும் இளைஞர்களும் இந்த நூலைக் கற்று, கடந்த தசாப்தத்தின் பாடங்களை உள்வாங்கி, தற்போதைய சூழ்நிலை கோரும் வரலாற்று முடிவுகளுக்கு வர வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். உலக சோசலிச வலைத் தளம் மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் இந்தப் பக்கங்களில் வகுத்தளிக்கப்பட்ட முன்னோக்கை, இன்று போராட்டத்தில் இறங்கும் வெகுஜனங்கள் முன்னெடுக்க வேண்டும். இந்த நோக்கம் நிறைவேறுவதற்காகவே இந்தத் தொகுப்பு திரட்டப்பட்டு வெளியீடாகக் கொண்டுவரப்பட்டுள்ளது.

டேவிட் நோர்த்

டெட்ராய்ட், மிச்சிகன்

ஜூன் 10, 2026

Loading