இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
கடந்த புதன்கிழமை காலை சில மணிநேரங்களுக்குள், திரிசூலி மற்றும் போத்தே கோஷி நதிகளின் 72 கிலோமீட்டர் (45 மைல்) நீளப் பகுதி வழியாக நீரும் பாறையும் பெருக்கெடுத்துப் பாய்ந்தன. இதனால் ஏற்பட்ட திடீர் வெள்ளம், நேபாளத்தின் ரசுவா மற்றும் நுவாகோட் மாவட்டங்களில் உள்ள டசின் கணக்கான நகரங்களை அழித்ததுடன், பலவற்றிற்குப் பெரும் சேதத்தையும் ஏற்படுத்தியது. இப்பகுதியின் முக்கிய வர்த்தக மற்றும் சுற்றுலா மையமாகத் திகழ்ந்த நேபாளம்-திபெத் இடையிலான கிரிசாங் துறைமுக எல்லைக் கடப்புப் பகுதி முற்றிலுமாக அழிந்துபோனது.
நேபாளத்தில் குறைந்தது 389 பேரும் சீனாவில் 3 பேரும் இறந்ததாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும், முறையே நேபாளத்தில் 910 பேரும், சீனாவில் 558 பேரும் காணாமல் போயுள்ளனர். நீரியல் வல்லுநர்களால் “திரவ கான்கிரீட்” என்று விவரிக்கப்பட்ட அந்த வெள்ளப் பெருக்கிலிருந்து தப்பிக்க முயன்ற மக்களின், இதயத்தைப் பிளக்கும் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளன; அவர்களில் பலர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
“இன்று அதிகாலை வரை இங்குள்ள பகுதிகள் மிகவும் இயற்கை எழில் கொஞ்சும் இடமாக இருந்தது… அங்கு ஒரு நீர்மின் நிலையமும் ஆலை அமைப்பும் இருந்தது. அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன,” என்று பெட்ராவதி நகரத்தைச் சேர்ந்த சுகாதார ஊழியரான ராஜேந்திர பௌடெல் வியாழக்கிழமை அல் ஜசீராவிடம் தெரிவித்தார். “இது மிகவும் இதயத்தை பிளக்கும் சம்பவமாக உள்ளது; என்னிடம் பேசுவதற்கு வார்த்தைகளே இல்லை.”
இந்த வெள்ளப்பெருக்கு ரசுவாவில் உள்ள திமுரே மற்றும் சியாப்ரு பெசி மற்றும் நுவாகோட்டில் உள்ள பெட்ராவதி ஆகிய பல கிராமங்களை புதைத்ததுடன், குறைந்தது 19 பாலங்களையும் சுமார் 40 கிலோமீட்டர் (25 மைல்) சாலைகளையும் அழித்தது. 430 மெகாவாட் மின் உற்பத்தி திறன் முடங்கியுள்ளதாக நேபாள மின்சார வாரியம் மதிப்பிட்டுள்ளது. நிலச்சரிவு இடிபாடுகளுக்குப் பின்னால் தேங்கியுள்ள புதிய ஏரி ஒன்று உடைந்து, அதே பள்ளத்தாக்குகளில் இரண்டாவது முறையாக வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தக்கூடும் என்று சீன அதிகாரிகள் வியாழக்கிழமை எச்சரிக்கை விடுத்தனர்.
செயற்கைக்கோள் படங்கள், திபெத்தில் பனியாறு மூடிய சரிவிலிருந்து உடைந்து விழுந்த பனி மற்றும் பாறைகளின் பெரும் திரளே இந்தப் பேரழிவிற்கு உடனடிக் காரணம் என்று சுட்டிக்காட்டுகின்றன. இதனால் ஏற்பட்ட பனிச்சரிவானது, ஜேர்மனியிலும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தாலும் 5.2 ரிக்டர் அளவு நில அதிர்வு நிகழ்வாகக் கண்டறியப்படும் அளவுக்குப் பெரியதாக இருந்தது. இருப்பினும், உலகின் முதலாளித்துவ அரசாங்கங்கள் காலநிலை மாற்றத்தைத் தடுக்கவோ அல்லது அதன் தவிர்க்க முடியாத கொடிய விளைவுகளுக்குத் தங்கள் மக்களைத் தயார்படுத்தவோ மறுத்ததன் சமீபத்திய விளைவாகவே இந்த சமூகப் பேரழிவு ஏற்பட்டுள்ளது.
வெள்ளத்தில் மூழ்கிய நேபாளம் மற்றும் திபெத்தின் எல்லை உட்பட இமயமலை போன்ற உயரமான பகுதிகள் பற்றிய ஆய்வுகள், இதுபோன்ற பகுதிகள் புவி வெப்பமயமாதலால் குறிப்பாகப் பாதிக்கப்படக்கூடியவை என்பதை பல ஆண்டுகளாகக் காட்டுகின்றன. குறைந்த அளவிலான வெப்பமயமாதலும் பனியை உருக்குகிறது. அதிலிருந்து வெளிப்படும் பாறை பின்னர் அதிக சூரிய ஒளியை உறிஞ்சி, கூடுதல் வெப்பத்தை உருவாக்கி, மேலும் பனியை உருக்குகிறது. இப்படியே ஒரு நேர்மறை பின்னூட்டச் சுழற்சியில் இது தொடர்கிறது.
இமயமலைப் பனிப்பாறைகள் முந்தைய தசாப்தத்தை விட 2011-2020 காலக்கட்டத்தில் 65 சதவீதம் வேகமாகக் மறைந்துவிட்டதாக, அரசாங்கங்களுக்கு இடையேயான அறிவியல் நிறுவனமான ஒருங்கிணைந்த மலை மேம்பாட்டுக்கான சர்வதேச மையம் (ICIMOD) 2023 இல் தெரிவித்தது. இந்த ஆண்டின் மார்ச் மாதத்தில் ICIMOD வெளியிட்ட இதேபோன்ற ஒரு ஆய்வு, இமயமலைப் பனிப்பாறைகளின் பனி இழப்பு விகிதம் 2000 ஆம் ஆண்டில் இருந்ததை விட இரட்டிப்பாகியுள்ளது என்று முடிவுக்கு வந்தது. “இது ஒரு தொலைவில் உள்ள பிரச்சினை அல்ல; இது ஒவ்வொரு கோடையிலும் பருவமழையின் போதும் புதிய பேரழிவுகளுடன் நிகழ்நேரத்தில் வெளிப்படும் ஒரு கடுமையான நெருக்கடியாகும்” என்று அந்த அறிக்கை ஐந்து மாதங்களுக்கு முன்பு எச்சரித்தது.
காலநிலை நெருக்கடியின் இந்தக் குறிப்பிட்ட அம்சத்திற்கு உலக அரசாங்கங்களின் பதில் நடவடிக்கை மிகவும் அற்பமானதாகவே இருந்துள்ளது. பனிப்பாறை வெள்ளத்திலிருந்து 2.4 மில்லியன் நேபாள மக்களைப் பாதுகாப்பதற்காக, அதிக ஆபத்துள்ள நான்கு ஏரிகளை வடிகட்டுதல் மற்றும் முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்புகளை உருவாக்குதல் உள்ளிட்ட ஒரு திட்டத்திற்கு பசுமை காலநிலை நிதியம் (GCF) ஜூலை 2025 இல் ஒப்புதல் அளித்தது. இந்தத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு ஏழு ஆண்டுகளுக்கு 49.9 மில்லியன் டாலர்கள் ஆகும். இது, கடந்த ஜனவரி மாதம் பிரதிநிதிகள் சபை நிறைவேற்றிய 839 பில்லியன் டாலர் இராணுவ நிதியுதவி மசோதாவின் வீதத்தில் பார்த்தால், அமெரிக்க இராணுவச் செலவினத்தின் வெறும் 30 நிமிடச் செலவுக்குச் சமமாகும்.
காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான இதர அனைத்து முயற்சிகளும் அதே அளவிற்குப் பயனற்றவையாகவே உள்ளன. ஏனெனில், அவை பெருநிறுவனங்களின் இலாப வேட்டைக்கும், போருக்காகத் திருப்பிவிடப்படும் வளங்களின் அதிகரிப்புக்கும் கீழ்ப்படுத்தப்பட்டு கிடக்கின்றன. ட்ரம்ப் நிர்வாகம் ஜனவரி 27 அன்று பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்திலிருந்து விலகியதுடன், பிப்ரவரி 12 அன்று பசுமை இல்ல வாயுக்கள் குறித்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமையின் (EPA) விதிமுறையை ரத்து செய்வதாக அறிவித்தது. மேலும், “அமெரிக்க வரலாற்றிலேயே கட்டுப்பாடுகளை நீக்கும் மிகப்பெரிய நடவடிக்கை” இதுவே என்று இது தற்பெருமையும் பேசியது.
கடந்த நவம்பரில் பிரேசிலின் பெலெமில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் காலநிலை உச்சிமாநாட்டில் (COP30) அமெரிக்கா பங்கேற்கவே இல்லை. மேலும், புதைபடிவ எரிபொருட்களைப் படிப்படியாக ஒழிப்பதற்கும் கார்பன் உமிழ்வைக் கட்டுப்படுத்துவதற்குமான சாலை வரைபட முன்மொழிவை சீனா, இந்தியா, சவூதி அரேபியா மற்றும் ரஷ்யா ஆகியவை தடுத்து நிறுத்தின. ஐரோப்பாவில், ரஷ்யாவுடன் நேரடி மோதலுக்குத் தயாராகும் வகையில் ஏகாதிபத்திய வல்லரசுகள் தொடர்ந்து மறு ஆயுதம் ஏந்தி வருவதால், காலநிலை உறுதிமொழிகள் மொத்தமாக கைவிடப்பட்டு வருகின்றன.
இமயமலையின் வெப்பமயமாதல், உலகளாவிய வெப்பநிலை அதிகரிப்பின் பரந்த போக்கோடு இணைந்தே நிகழ்கிறது. வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு நான்கு நாட்களுக்கு முன்பு, ஆகஸ்ட் 22 அன்று, ஐரோப்பிய யூனியனின் கோப்பர்நிக்கஸ் காலநிலை மாற்ற சேவை, 2024 மார்ச் மாதத்தில் பதிவு செய்யப்பட்ட சாதனையை முறியடித்து, உலகளாவிய கடல் மேற்பரப்பின் அதிகபட்ச தினசரி வெப்பநிலையான 21.1 டிகிரி செல்சியஸை (70 டிகிரி பாரன்ஹீட்) பதிவு செய்தது. கடல்கள் பொதுவாகக் குளிர்ந்துகொண்டிருக்கும் ஆகஸ்ட் மாத இறுதியில் இந்த அளவீடு வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜூலை மாதத்தில், மேற்கு ஐரோப்பாவில் சராசரி வெப்பநிலை வரலாற்று சராசரியை விட 2.79 டிகிரி செல்சியஸ் (5 டிகிரி பாரன்ஹீட்) அதிகமாக பதிவானது. இது பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் 375,000 க்கும் மேற்பட்ட மக்களை அவர்களின் வீடுகளை விட்டு வெளியேறச் செய்த காட்டுத் தீயை உருவாக்கியது. அதே மாதத்தில், கனடா மற்றும் அமெரிக்க மத்திய மேற்குப் பகுதிகளில் ஏற்பட்ட காட்டுத் தீ, வட அமெரிக்காவின் கிழக்கு பாதியை நச்சுப் புகையால் மூடியது. இதில், மினசோட்டாவின் டுலூத்தில் காற்றின் தர குறியீடு 900-ஐத் தாண்டியது, டெட்ராய்ட் போன்ற பெரிய பெருநகரப் பகுதிகளில் 500-ஐத் தாண்டியது.
மேலும், ஆகஸ்ட் 13 அன்று, அமெரிக்காவின் தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, இந்த இலையுதிர் மற்றும் குளிர் காலங்களில் மிகத் தீவிரமான எல் நினோ (El Niño) நிகழ்வு உருவாக 90 சதவீதத்திற்கும் அதிகமான வாய்ப்பும், அது இதுவரை பதிவானவற்றிலேயே மிகத் தீவிரமானதாக அமைந்து புவி வெப்பமடைதலை இன்னும் கடுமையாக அதிகரிக்கச் செய்ய 69 சதவீத வாய்ப்பும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வளவு அதிகமான பேரழிவுகள் நிகழ்ந்துள்ளதும், இனியும் நிகழவிருப்பதும் முதலாளித்துவ அமைப்பு முறைக்கு எதிரான ஒரு குற்றச்சாட்டாக அமைகிறது. புவி வெப்பமடைதலால் ஏற்படும் ஆபத்துகள் குறித்த ஆரம்பகால முக்கிய எச்சரிக்கைகளில் ஒன்றை மறைந்த வானியலாளர் கார்ல் சேகன் விடுத்தார். 1985-லேயே, ஆபத்துக்கான தெளிவான அறிகுறிகள் தென்படத் தொடங்கிவிட்டன என்றும், அதன் மிக மோசமான விளைவுகளைத் தவிர்க்க ஒரு பரந்த அளவிலான சர்வதேச ஒருங்கிணைந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் எச்சரித்திருந்தார்.
இந்த எச்சரிக்கைகளும், இந்தப் பூமியில் உள்ள பெரும்பான்மையான விஞ்ஞானிகளின் எச்சரிக்கைகளும் வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்ட ஒரு உலகத்தில்தான் மனிதகுலம் இன்று வாழத் தள்ளப்பட்டிருக்கிறது. தொழிலாளர்களும், உழைக்கும் மக்களும் ஒவ்வொரு நாளும் மேலும் அழிவுகரமான புயல்களையும், நீண்டகால வெப்ப அலைகளையும், மேலும் கடுமையான வறட்சிகளையும், மற்றும் முடிவில்லாதது போல் தோன்றும் காட்டுத்தீ ஆகியவற்றையும் எதிர்கொள்கின்றனர். பவளப் பாறைகள் அழிந்து வருகின்றன. இது பூமியின் உணவுச் சங்கிலியின் முக்கிய பகுதிகளை அச்சுறுத்துகிறது. பனிப் பாறைகள் உருகுவதும் கடல் மட்டம் உயர்வதும் பூமியில் உள்ள ஒவ்வொரு கடற்கரை நகரத்தையும் மெதுவாக மூழ்கடித்து வருகின்றன. இது உலகின் மூன்றில் ஒரு பங்கு மக்களை இடம்பெயரச் செய்யும் அபாயத்தைக் கொண்டுள்ளது.
இத்தகைய இயற்கை நிகழ்வுகளைப் புரிந்துகொண்டு அவற்றைக் கையாளும் திறன் மனிதகுலத்திற்கு முன்னெப்போதையும் விட இப்போது அதிகமாக உள்ளது என்பதை கடந்த 41 ஆண்டுகால நிகழ்வுகள் நிரூபித்துள்ளன. செயற்கைக் கோள்கள் இமயமலை மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள பனிப் பாறைகளை வரைபடமாக்குகின்றன; செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் சூப்பர் கம்ப்யூட்டர்கள் பல தசாப்தங்களுக்கு முந்தைய காலநிலையை முன்கூட்டியே கணிக்கின்றன. சூரிய சக்தி, காற்று, அலை ஆற்றல், புவிவெப்ப ஆற்றல் மற்றும் பிற மாற்று எரிசக்தி வடிவங்களில் ஏற்பட்டுள்ள பெரும் முன்னேற்றங்கள், நிலக்கரி, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆகியவற்றின் தேவையை கோட்பாட்டளவில் தேவையற்றதாக்கியுள்ளன. புதிய மீக்கடத்துத் திறன் கொண்ட (superconductive) பொருட்களின் வளர்ச்சியானது, பெருமளவில் மின்சாரத்தை உற்பத்தி செய்ய வேண்டிய தேவையையே வெகுவாகக் குறைக்கும் நிலையில் உள்ளது.
ஆனால், இந்த ஆற்றலைப் பயன்படுத்துவதும், அதன் அடிப்படையில் சமூக மற்றும் பொருளாதார வாழ்க்கையை சர்வதேச அளவில் மறு ஒழுங்கைமைப்பதும், தனிப்பட்ட இலாப நோக்கம் மற்றும் உலகை போட்டியிடும் தேசிய அரசுகளாகப் பிரித்து வைத்திருக்கும் நிலை ஆகியவற்றால் ஒவ்வொரு கட்டத்திலும் தடுக்கப்படுகின்றன. எனவே, காலநிலை மாற்றத்திற்கான தீர்வு என்பது ஒரு அறிவியல் அல்லது தொழில்நுட்பம் சார்ந்த கேள்வி அல்ல. மாறாக, அது ஒரு அரசியல் மற்றும் கூர்மையான புரட்சிகரமான கேள்வியாகும்.
பிரெட்ரிக் எங்கெல்ஸ்சின் மனிதன் குரங்கிலிருந்து மனிதனாக மாறிய இடைநிலைக் கட்டத்தில் உழைப்பின் பங்கு என்ற நூலில், இயற்கையின் மீது நாம் பெறும் “அத்தகைய ஒவ்வொரு வெற்றிக்கும்” ஈடாக, “இயற்கை எம் மீது பழிவாங்குகிறது”. மேலும், உற்பத்தியின் விளைவுகளைக் கட்டுப்படுத்துவதற்கு “வெறும் அறிவு மட்டும் போதாது. அதற்கு, இதுவரை நிலவி வந்த எமது உற்பத்தி முறையில் ஒரு முழுமையான புரட்சியும், அதே வேளையில் எமது ஒட்டுமொத்த சமகால சமூக ஒழுங்கிலும் ஒரு புரட்சியும் தேவைப்படுகிறது” என்று எழுதினார்.
இப்போதும் இக்கருத்தை இன்னும் அழுத்தமாக சொல்ல முடியும். எந்தவொரு முதலாளித்துவ அரசாங்கமும் காலநிலை மாற்றத்திற்கு எந்தவொரு முறையான தீர்வையும் முன்வைப்பதில்லை. ஏனெனில், நிதியியல் தன்னலக்குழுவின் பொருள்சார் நலன்களுக்கு பொருளாதார வாழ்க்கை கீழ்ப்படுத்தப்பட்டிருக்கும் வரை அதைச் செய்ய முடியாது. அதேபோல, பசுமைக் கட்சிகள் மற்றும் போலி-இடது அமைப்புகளின் வேலைத் திட்டங்கள் மீதும் நம்பிக்கை வைக்க முடியாது. ஏனெனில், இவை அனைத்தும் தற்போதைய சமூக ஒழுங்கை வெறுமனே சீர்திருத்தம் மட்டுமே செய்யப்பட வேண்டிய ஒன்றாகவே ஏற்றுக்கொள்கின்றன.
எனவே, காலநிலை மாற்றத்திற்கான தீர்வு என்பது முதலாளித்துவ அமைப்பு முறையையே புரட்சிகரமான முறையில் தூக்கியெறிவதாகும். இப்பணியை தொழிலாளி வர்க்கமே மேற்கொள்ள வேண்டும். ஏனெனில், சர்வதேச அளவில் அமைந்திருக்கும் ஒரே சமூக சக்தியான இவ் வர்க்கத்தால் மட்டுமே, காலநிலை மாற்றத்தைத் தணிக்கவும், அதைத் தலைகீழாக மாற்றவும், கட்டுப்படுத்தவும் தேவையான வகையில் எரிசக்தி, விவசாயம் மற்றும் சரக்குக் போக்குவரத்துத் துறைகளில் மாற்றங்களைச் செயல்படுத்த முடியும்.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, சோசலிச சமத்துவக் கட்சிகள் மற்றும் சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணி (IWA-RFC) ஆகியவை இந்த அடிப்படையில் தொழிலாளர்களை அணிதிரட்டவும், நிதியியல் தன்னலக்குழுவின் சொத்துகளைப் பறிமுதல் செய்யவும், உலகப் பொருளாதாரத்தை சோசலிச அடித்தளத்தில் மறுஒழுங்கைமைக்கவும் போராடி வருகின்றன.
