போக்டன் சிரோட்டியுக்கின் விடுதலைக்காக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பிரச்சாரம் செய்த சோ.ச.க. உறுப்பினர்களுக்கு இலங்கை பொலிஸ் தொந்தரவு

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்

ஆகஸ்ட் 19 அன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுழைவாயிலுக்கு அருகில் அரசியல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) உறுப்பினர்களை, ஜனநாயக உரிமைகளை அப்பட்டமாக மீறும் வகையில், இலங்கைப் பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்தி, சோதனையிட்டு, அவர்களது தனிப்பட்ட விபரங்களை வலுக்கட்டாயமாகப் பெற்றுக் கொண்டனர்.

கட்சியின் உறுப்பினர்கள், 27 வயதான உக்ரேனிய ட்ரொட்ஸ்கிசவாதியும், போல்ஷிவிக்-லெனினிஸ்டுகளின் இளம் காவலர் அமைப்பின் முன்னணி உறுப்பினருமான போக்டன் சிரோட்டியுக்கை விடுதலை செய்யக் கோரும் சர்வதேச பிரச்சாரத்திற்கு ஆதரவைக் கோரி மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்களுடன் கலந்துரையாடி வந்தனர். “தேசத்துரோகம்” என்ற மோசடியான குற்றச்சாட்டுகளின் பேரில் போக்டனுக்கு ஆகஸ்ட் 10 அன்று 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு அருகில் போக்டன் சிரோடியுக்கிற்கான பிரச்சாரம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களிடையே சோ.ச.க. நடத்திய பிரச்சாரத்திற்கு பரவலான ஆதரவு கிடைத்துள்ளது. போக்டனை விடுதலை செய்யக் கோரும் மனுவில் பலர் கையெழுத்திட்டுள்ளனர். போலியான குற்றச்சாட்டின் அடிப்படையிலான தீர்ப்பைக் கண்டித்து யாழ்ப்பாண மாணவர்கள் வெளியிட்ட கருத்துக்களை ஆகஸ்ட் 22 அன்று உலக சோசலிச வலைத் தளம் வெளியிட்டது. சோ.ச.க. மற்றும் சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் (IYSSE) அமைப்பும் பல்கலைக்கழக சமூகத்துடன் அரசியல் பிரச்சாரங்களிலும் கலந்துரையாடல்களிலும் அடிக்கடி ஈடுபட்டு வருகின்றன.

பிற்பகல் சுமார் 1 மணியளவில், சோ.ச.க. பிரச்சாரக் குழு பல்கலைக்கழக வளாகத்திற்கு வெளியேயுள்ள பகுதியிலிருந்து வெளியேறத் தயாராகிக் கொண்டிருந்தபோது, ஒரு பொலிஸ் அவசரகால வாகனம் அங்கு வந்தது. அதிலிருந்து மூன்று பொலிஸ் அதிகாரிகள் இறங்கி, தோழர்களை வழிமறித்து, “நீங்கள் யார், ஏன் இங்கு வந்தீர்கள், எங்கிருந்து வந்தீர்கள்?” என்று கேட்டனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்குள் இருந்து 119 அவசரகால இலக்கத்திற்கு ஒரு “அடையாளம் தெரியாத நபரிடமிருந்து அழைப்பு” வந்ததாகவும், “சிலர்” ஒரு பெண் மாணவியை குரல் பதிவொன்றை வழங்குமாறு வற்புறுத்தியதுடன், அவரை புகைப்படங்களும் காணொளிகளும் எடுத்ததாகவும் அந்த அழைப்பில் தெரிவிக்கப்பட்டதாகப் பொலிஸார் கூறினர். இந்தக் குற்றச்சாட்டை நிரூபிப்பதற்கு எந்தவொரு ஆதாரமும் முன்வைக்கப்படாததோடு முறைப்பாட்டாளர் எவரும் முன்வரவில்லை. இந்த போலியான “அடையாளம் தெரியாத முறைப்பாடு”, சோ.ச.க. உறுப்பினர்களை அச்சுறுத்துவதற்கும், கட்சியுடன் தொடர்பு வைத்திருப்பது பொலிஸ் கண்காணிப்புக்கு வழிவகுக்கும் என்ற செய்தியை மாணவர்களுக்கு உணர்த்துவதற்கும், வளாகத்தில் அரசியல் நடவடிக்கைகளைச் சுற்றி அச்சச் சூழலை உருவாக்குவதற்குமான ஒரு வெளிப்படையான சாக்குப்போக்காகும்.

சோ.ச.க. அரசியல் குழு உறுப்பினர் பரமு திருஞான சம்பந்தர், கட்சியின் குழுவினரே அரசியல் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருவதாக விளக்கியபோது, பிரச்சாரம் செய்வதற்கு சோ.ச.க. யாரிடமிருந்து அனுமதி பெற்றது என்று பொலிஸார் கேட்கத் தொடங்கினர். “தெருக்களில் பிரச்சாரம் செய்வதற்கு எங்களுக்கு ஜனநாயக உரிமை உள்ளது” என்று சம்பந்தர் வலியுறுத்தியபோது, பொலிஸார் ஆணவத்துடன் அவரது கருத்தை நிராகரித்தனர்.

அதன் பின்னர், சோ.ச.க. அரசியல் குழு உறுப்பினர் மகாலிங்கம் டிலக்ஷனின் பையை பொலிஸார் வலுக்கட்டாயமாகச் சோதனையிட்டு, துண்டுப் பிரசுரங்களை கைப்பற்றினர். அவரது குறிப்புப் புத்தகத்தையும் சோதனையிட்ட பின்னர் அதைத் திருப்பிக் கொடுத்தனர். பெண் தோழர் ஒருவரின் பையையும் சோதனையிட்ட பொலிஸார், அவரது கையடக்கத் தொலைபேசியை எடுத்துக்கொண்டு, அதிலிருந்த கோப்புகளையும் தரவுகளையும் ஆய்வு செய்தனர். மற்றொரு சோ.ச.க. உறுப்பினரின் முச்சக்கர வண்டியையும் பொலிஸார் சோதனையிட்டு, அதன் உரிமை ஆவணங்கள், சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் ஏனைய ஆவணங்களை ஆராய்ந்தனர். டிலக்ஷனின் மோட்டார் சைக்கிள் தொடர்பான ஆவணங்களையும் அவர்கள் பரிசோதித்தனர்.

அதன் பின்னர், அங்கு இருந்த ஒவ்வொரு சோ.ச.க. உறுப்பினரின் தனிப்பட்ட விபரங்களையும் பொலிஸ் அதிகாரிகள் பதிவு செய்தனர்: முழுப் பெயர், தேசிய அடையாள அட்டை இலக்கம், முகவரி மற்றும் தொலைபேசி இலக்கமும் பதிவு செய்யப்பட்டன. இரண்டாவது பெண் கட்சி உறுப்பினர் ஒருவர் தன்னிடம் தேசிய அடையாள அட்டை இல்லை என்று தெரிவித்தபோது, இலங்கையில் பயணம் செய்யும்போது தேசிய அடையாள அட்டையை எடுத்துச் செல்வது சட்டரீதியான கட்டாயம் அல்லாத போதிலும், பொலிஸார் அவரை கைது செய்ய தங்களுக்கு அதிகாரம் இருப்பதாக அச்சுறுத்தினர்.

தனது விபரங்களை மட்டும் பதிவு செய்யுமாறு சம்பந்தர் விடுத்த கோரிக்கையை நிராகரித்த பொலிஸார், “இது எமது கடமை, எங்களைத் தடுக்க உங்களால் முடியாது” என்று வலியுறுத்தினர்.

சோ.ச.க. உறுப்பினர்கள் பொலிஸாரால் தொந்தரவு செய்யப்படுவது குறித்து அவருக்குத் தெரிவிக்கப்பட்டபோது, சோ.ச.க. பொதுச் செயலாளர் தீபால் ஜயசேகர, பொலிஸ் அதிகாரி ஒருவருடன் தொலைபேசியில் நேரடியாகப் பேசினார். பொலிஸார் தமது நடவடிக்கையை கைவிட மறுத்ததுடன், அனைத்து தோழர்களின் தனிப்பட்ட விபரங்களையும் தொடர்ந்து பதிவு செய்தனர்.

“யாராவது 119 இலக்கத்திற்கு அழைத்திருந்தால், அதைச் சோதித்து விசாரிக்க எங்களுக்கு முழு உரிமையும் உள்ளது” என்று ஒரு பொலிஸ் அதிகாரி தெரிவித்தார். பொலிஸாரின் தொந்தரவு கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் தொடர்ந்தது.

சோ.ச.க. பிரச்சாரக் குழுவினரை பொலிஸார் தொந்தரவு செய்ததைக் கண்டித்து, கொள்கைரீதியான நிலைப்பாட்டை எடுத்து பகிரங்கமாக கண்டனம் செய்யுமாறு கோரி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் சங்கம் ஆகியவற்றுக்கு ஜயசேகர கடிதம் எழுதியுள்ளார்.

அவரது கடிதத்தில் குறிப்பிடப்பட்டதாவது: “இந்த பொலிஸ் நடவடிக்கையானது பல்கலைக்கழக ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்கு ஆபத்தானதும், நீண்டகால தாக்கங்களைக் கொண்டதுமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. அவர்களில் எவரேனும் தங்களது நியாயமான உரிமைகளுக்காக நடத்தும் எந்தவொரு போராட்டத்திலும் அல்லது வர்க்க நடவடிக்கையிலும் பொலிஸார் தலையிட முடியும். எனவே, சோ.ச.க. பிரச்சாரகர்கள் மீதான இந்த பொலிஸ் தொந்தரவை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. அடிப்படை ஜனநாயக உரிமைகளை மதிக்கும் அனைத்து தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் அனைவராலும் இது எதிர்க்கப்பட வேண்டும்.”

ஜனநாயக உரிமைகள் மீறப்படுவது தொடர்பாக, மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி./தே.ம.ச.) அரசாங்கத்தின் கீழ் பொலிஸார் மற்றும் பாதுகாப்புப் படையினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் தொடர்ச்சியான நடவடிக்கைகளில் இந்தச் சம்பவமும் சமீபத்திய ஒன்றாகும்.

ஒரு சோசலிஸ்டும் போர் எதிர்ப்பு செயற்பாட்டாளருமான போக்டனின் விடுதலைக்காக பிரச்சாரம் செய்துகொண்டிருந்தபோதே சோ.ச.க. உறுப்பினர்கள் குறிவைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். எழுத்துமூலம் கோரிக்கைகள் விடுக்கப்பட்ட போதிலும், இலங்கையின் எந்தவொரு பிரதான செய்தித்தாளும் போக்டன் சிறையில் அடைக்கப்பட்டதைப் பற்றி செய்தி வெளியிடவில்லை. உலகெங்கிலும் உள்ள ஏனைய பெருநிறுவன ஊடக நிறுவனங்களைப் போலவே, அவற்றின் மௌனமும் உக்ரேனில் உள்ள செலென்ஸ்கி ஆட்சியின் பாசிச நடவடிக்கைகளுக்கு அவை ஆதரவளிப்பதைக் காட்டுகிறது.

இலங்கையின் வடக்கில் சோ.ச.க. எதிர்கொண்டு வரும் இராணுவ மற்றும் பொலிஸ் அச்சுறுத்தல்களுக்கு நீண்ட வரலாறு உள்ளது.

2007 மார்ச் 22 அன்று, சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர் நடராஜா விமலேஸ்வரனும், அவரது நண்பரும் சோ.ச.க. ஆதரவாளருமான சிவநாதன் மதிவதனனும், யாழ்ப்பாணத்திற்கு அருகில் உள்ள வடக்குத் தீவுகளான புங்குடுதீவுக்கும் ஊர்காவற்துறைக்கும் இடையில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்துகொண்டிருந்தபோது காணாமல் போயினர். அவர்கள் கடற்படையின் சோதனைச் சாவடியொன்றைக் கடந்து சென்றபோது கடைசியாகக் காணப்பட்டனர். அவர்களது கடத்தலில் இலங்கை கடற்படையே சம்பந்தப்பட்டிருப்பதை வலுவாகச் சுட்டிக்காட்டும் சான்றுகள் உள்ளன.

சர்வதேச பிரச்சாரம், மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறையான முறைப்பாடுகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் ஆகியவை மேற்கொள்ளப்பட்ட போதிலும், இராணுவமும் ஆட்சியில் இருந்த அரசாங்கங்களும் மௌனச் சுவரை தொடர்ந்து பேணி வருகின்றன. ஏறக்குறைய இரண்டு தசாப்தங்கள் கடந்துள்ள நிலையிலும், அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பது குறித்து எந்தவொரு தகவலும் இதுவரை வழங்கப்படவில்லை.

2012 ஆம் ஆண்டில், பாதுகாப்பு அமைச்சினால் ஒரு பொதுக் கூட்டம் தடைசெய்யப்பட்டமை, கட்சி உறுப்பினர்களை இராணுவச் சிப்பாய்கள் சட்டவிரோதமாகத் தடுத்து வைத்து விசாரணை செய்தமை மற்றும் அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட உடல்ரீதியான தாக்குதல்கள் குறித்தும் உலக சோசலிச வலைத் தளம் செய்தி வெளியிட்டிருந்தது.

கடந்த மாதம், யாழ்ப்பாணத்தில் மீனவர்கள் நடத்திய போராட்டம் குறித்து செய்தி சேகரித்த பின்னர், உலக சோசலிச வலைத் தள இலங்கைச் செய்தியாளரை கைது செய்வதாக ஊர்காவற்துறை பொலிஸார் அச்சுறுத்தினர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தோல்வியுடன் நாட்டின் இரத்தக்களரியான இனவாதப் போர் முடிவடைந்து 17 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தொடர்ந்து இராணுவ ஆக்கிரமிப்பின் கீழேயே உள்ளன. அரசியல் கட்சிகள், இளைஞர் குழுக்கள் மற்றும் சாதாரண தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் மீது இராணுவமும் பொலிஸாரும் பரந்தளவிலான கண்காணிப்பு வலையைப் பேணி வருகின்றனர். ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள், அத்துடன் அரசியல் கட்சிகளும், தமது கருத்துச் சுதந்திரத்தின் மீது அடிக்கடி தாக்குதல்களை எதிர்கொள்கின்றனர். இதில், பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதாக அவர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதும் அடங்கும்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஜே.வி.பி./தே.ம.ச. உடன் இணைந்துள்ள மாணவர் தலைவர்களும் சோ.ச.க.வின் நடவடிக்கைகளைத் தடுக்கவும், மாணவர்கள் மத்தியில் சோசலிசக் கருத்துக்கள் குறித்து கலந்துரையாடல் நடைபெறுவதைத் தடுக்கவும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர். அரசாங்கத்தின் தொழிலாள வர்க்க விரோத குணாம்சத்தை அம்பலப்படுத்தும் ஒரே கட்சி சோ.ச.க. ஆகும்.

பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் கொண்டுள்ள விரோதம், 2025 ஜனவரியில் வெளிப்படையாக அம்பலமானது. பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பதில் துணைவேந்தர், அரசியல் விஞ்ஞானத் துறைத் தலைவரிடமிருந்து ஏற்கனவே அனுமதி பெறப்பட்டிருந்தபோதிலும், “சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கனத் திட்டத்திற்கு எதிராக எவ்வாறு போராடுவது?” என்ற தலைப்பில் ஐ.வை.எஸ்.எஸ்.இ. ஏற்பாடு செய்திருந்த விரிவுரையை திடீரென இரத்து செய்தார்.

“இந்தக் கூட்டம் அரசாங்கக் கொள்கைகளுக்கு சவால் விடுப்பதாகத் தோன்றாத வகையில்” தலைப்பை மாற்றுமாறு அந்த உத்தரவு கோரியது. பிரதமர் ஹரிணி அமரசூரியவின் அலுவலகம் அந்த விரிவுரை குறித்து விசாரித்திருந்தது. இது, சர்வதேச நாணய நிதியம் (IMF) கோரிய சிக்கன நடவடிக்கைகளை மறுபரிசீலனை செய்வதாகத் தேர்தல் வாக்குறுதிகளை அளித்த பின்னர் அவற்றைக் காட்டிக்கொடுத்த ஜே.வி.பி./தே.ம.ச. நிர்வாகம், சிக்கன நடவடிக்கைகளுக்கு ஒரு சோசலிச மாற்றீட்டை முன்வைத்த ஒரே அரசியல் போக்கை ஒடுக்குவதற்காக, பல்கலைக்கழக நிர்வாகத்துடன் தீவிரமாகக் கூட்டுச் சேர்ந்திருந்ததை உறுதிப்படுத்தியது.

ஆகஸ்ட் 19 அன்று மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் நடவடிக்கை, இந்தக் கொள்கையின் தொடர்ச்சியையே குறிக்கிறது. சர்வதேச நாணய நிதியத்தால் கட்டளையிடப்பட்ட சிக்கன நடவடிக்கைகளுக்கு வளர்ந்து வரும் எதிர்ப்பை எதிர்கொள்வதற்கு அரசாங்கம் மேலும் மேலும் சர்வாதிகார வழிமுறைகளை நாடி வருகிறது.

சோ.ச.க. மீதான பொலிஸ் தொந்தரவுகளை எதிர்க்குமாறு அனைத்து தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் அடிப்படை ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கும் அனைவரையும் சோ.ச.க. கேட்டுக்கொள்கிறது.

Loading