இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
ஐரோப்பாவிலுள்ள சோசலிச சமத்துவக் கட்சிகள், போருக்கும் இனப்படுகொலைக்கும் இராணுவமயமாக்கலுக்கும் எதிராக அக்டோபர் 30 வெள்ளிக்கிழமை கப்பல்துறை மற்றும் துறைமுகத் தொழிலாளர்கள் நடத்தும் சர்வதேச நடவடிக்கை தினத்தை வரவேற்று ஆதரிக்கின்றன. “துறைமுகத் தொழிலாளர்கள் போருக்காக உழைக்க மாட்டார்கள்” என்ற முழக்கத்தின் கீழ், தங்கள் அரசாங்கங்களின் போர்க் கொள்கைகளை எதிர்ப்பதற்கும், அவற்றைத் தடுத்து நிறுத்தத் தங்களது கூட்டு வலிமையைப் பயன்படுத்துவதற்கும் உள்ள தங்கள் உறுதியைத் தொழிலாளர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்த நடவடிக்கையின் முக்கியத்துவம் துறைமுகங்களையும் தாண்டி வெகுதூரம் விரிகிறது. ஐரோப்பா முழுவதும் வேலைநிறுத்தங்களும் வெகுஜனப் போராட்டங்களும் வெடித்துள்ள சூழலில், போர், சிக்கன நடவடிக்கைகள், அரசு ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தின் தலையீடு வளர்ந்து வருவதை இது குறிக்கிறது. முதலாளித்துவ அரசாங்கங்களுக்கும் அவற்றின் போர்க் கொள்கைகளுக்கும் எதிராகச் சர்வதேச அளவில் ஒருங்கிணைக்கப்பட்ட இயக்கம் உருவாவதற்கான சாத்தியத்தை இது வெளிப்படுத்துகிறது.
ஏற்பாட்டாளர்களின் கூற்றுப்படி, ஐந்து கண்டங்களிலுள்ள 22 நாடுகளிலும் பிராந்தியங்களிலும் அமைந்துள்ள 113 துறைமுகங்களின் தொழிலாளர்கள் வேலைநிறுத்தங்கள், ஆர்ப்பாட்டங்கள் அல்லது ஒருமைப்பாட்டு நடவடிக்கைகளில் பங்கேற்கின்றனர். மார்சேய், ஜெனோவா, பிரேயஸ் முதல் ஹம்பேர்க், டாஞ்சியர், மும்பை, ஓக்லாண்ட் வரை, தொழிலாளர்கள் தேசிய எல்லைகளைக் கடந்து ஐக்கியப்பட்டு வருகின்றனர்.
பாலஸ்தீனர்கள் மீதான இனப்படுகொலையையும் ஒடுக்குமுறையையும், ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலியப் போரையும், இராணுவ உபகரணங்களையும் இராணுவத்தினரையும் கொண்டு செல்வதற்குத் துறைமுகங்கள் பயன்படுத்தப்படுவதையும் அவர்கள் எதிர்க்கின்றனர். மீள் ஆயுதமயமாக்கலை நிராகரிக்கும் அவர்கள், தானியங்கிமயமாக்கல் மூலம் வேலைகள் அழிக்கப்படுவதற்குப் பதிலாக, பொது வளங்கள் சமூகத் தேவைகளுக்கும், உயர்ந்த ஊதியங்களுக்கும், பாதுகாப்பான வேலைகளுக்கும், குறைந்த வேலை நேரத்திற்கும் ஒதுக்கப்பட வேண்டும் என்று கோருகின்றனர்.
போருக்கும் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தின் மீதான தாக்குதலுக்கும் இடையிலான பிரிக்க முடியாத தொடர்பை இந்தக் கோரிக்கைகள் வெளிப்படுத்துகின்றன. ஆயுதங்களுக்காக நூற்றுக்கணக்கான பில்லியன்களைச் செலவிடும் அரசாங்கங்கள், அதேவேளையில் பொதுச் சேவைகளை வெட்டுகின்றன; ஊதியங்களின் மீது தாக்குதல் தொடுக்கின்றன; தங்கள் மக்களைப் போருக்குத் தயார்படுத்துகின்றன.
கிரீஸ், பாஸ்க் பிரதேசம், துருக்கி, மொரோக்கோ, இத்தாலி, பிரான்ஸ் ஆகியவற்றின் தொழிற்சங்கங்கள் தொடங்கிய இந்த நடவடிக்கை, பிப்ரவரி 6 அன்று நடைபெற்ற முந்தைய அணிதிரட்டலைத் தொடர்ந்து வந்துள்ளதுடன், கணிசமாக விரிவடைந்துள்ளது. ஹம்பேர்க்கிலுள்ள ver.di (ஐக்கிய சேவைத் தொழிற்சங்கம்), சான் பிரான்சிஸ்கோ மற்றும் ஓக்லாண்டிலுள்ள ILWU (சர்வதேசத் துறைமுக மற்றும் சரக்குக் களஞ்சியத் தொழிலாளர் சங்கம்) 10ஆம் கிளை, பிற இடங்களிலுள்ள அமைப்புகள் ஆகியவையும் ஆதரவை அறிவித்துள்ளன.
துறைமுகங்கள் உலகளாவிய உற்பத்தி மற்றும் இராணுவ விநியோகச் சங்கிலிகளின் உயிர்நாடிகளாகும். துறைமுகத் தொழிலாளர்கள் மூலோபாய ரீதியில் முக்கிய இடத்தை வகிக்கின்றனர். போர் எந்திரத்தை முடக்குவதற்குச் சர்வதேசத் தொழிலாள வர்க்கத்திடம் உள்ள மகத்தான சக்தியை அவர்களின் ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுத்துக்காட்டுகிறது. இந்தச் சக்தி இப்போது நனவுபூர்வமாக ஒழுங்கமைக்கப்பட்டு விரிவுபடுத்தப்பட வேண்டும்.
போராட்டங்களிலிருந்து ஐரோப்பிய பொது வேலைநிறுத்தத்திற்கான தயாரிப்பை நோக்கி
வர்க்கப் போராட்டத்தின் அசாதாரணமான வளர்ச்சிக்கு மத்தியில் வெள்ளிக்கிழமை நடவடிக்கை நடைபெறுகிறது. பிரான்சில், பாரிய கைதுகளுக்கும் போலிஸ் வன்முறைக்கும் மத்தியிலும், சிக்கன நடவடிக்கைகளுக்கும் ஒடுக்குமுறைக்கும் எதிராக நூறாயிரக்கணக்கான தொழிலாளர்களும் இளைஞர்களும் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். நவம்பர் 5 அன்று நாடு தழுவிய வேலைநிறுத்தம் திட்டமிடப்பட்டுள்ளது. இத்தாலியில், அணிதிரட்டலைத் துறைமுகங்களுக்கு அப்பாலும் விரிவுபடுத்தி, அக்டோபர் 30 அன்று USB (இத்தாலிய சாமானியத் தொழிற்சங்க ஒன்றியம்) பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. ஆசிரியர்களும் பிற பொதுத்துறைத் தொழிலாளர்களும் நடத்திய வேலைநிறுத்தங்களையும் போராட்டங்களையும் தொடர்ந்து, ஊதியங்கள் மற்றும் வேலை நிலைமைகள் தொடர்பாகப் போராடும் உலோகத் தொழிலாளர்களுடன் இணைந்து கிரேக்கத் துறைமுகத் தொழிலாளர்கள் செயல்படுகின்றனர்.
ஸ்பெயின், போர்த்துக்கல், பெல்ஜியம், செர்பியா, அல்பேனியா மற்றும் பிற இடங்களிலும் போராட்டங்கள் வெடித்துள்ளன. ஜேர்மனியில், சிக்கன நடவடிக்கைகள், கட்டாய இராணுவச் சேவை, அரசாங்கக் கொள்கை ஆகியவற்றுக்கு எதிராகச் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் செய்வதற்குப் பத்தாயிரக்கணக்கான பள்ளி மாணவர்களும், பல்கலைக்கழக மாணவர்களும், இளம் தொழிலாளர்களும் தயாராகி வருகின்றனர்.
இளைஞர்களிடையேயான போராட்ட இயக்கங்கள் தொழிலாளர்களின் போராட்டங்களுடன் சந்தித்து இணைந்து வருகின்றன. போர், சமூக வெட்டுக்கள், எதேச்சாதிகாரம் ஆகியவற்றுக்கு எதிரான எதிர்ப்பு ஒரு பரந்த இயக்கமாக ஒன்றிணையத் தொடங்கியுள்ளது. துறைமுகத் தொழிலாளர்களின் சர்வதேச நடவடிக்கை இந்த வளர்ச்சியின் குறிப்பிடத்தக்க வெளிப்பாடாகும்.
ஆனால் ஒருநாள் ஆர்ப்பாட்டத்தோடு இதை நிறுத்திவிட முடியாது. ரயில்வே, போக்குவரத்து, தளவாடம், தொழில்துறை ஆகிய துறைகளின் தொழிலாளர்களையும், ஆசிரியர்கள், சுகாதாரத் தொழிலாளர்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் பிற பிரிவினரையும் உள்ளடக்கிய, தொடர்ச்சியான, ஒருங்கிணைந்த வேலைநிறுத்த நடவடிக்கைக்கான தொடக்கப் புள்ளியாக இது மாற வேண்டும்.
போர், சிக்கன நடவடிக்கைகள், அரசு ஒடுக்குமுறைக்கு எதிரான ஐரோப்பிய பொது வேலைநிறுத்தத்தின் அவசியத்தைப் புறநிலைச் சூழ்நிலை முன்வைக்கிறது. அத்தகைய இயக்கம் அடிப்படையான அரசியல் கேள்வியை எழுப்பும்: சமூகத்தின் எதிர்காலத்தை யார் தீர்மானிப்பது, நிதியியல் தன்னலக்குழுவும் அதன் அரசாங்கங்களுமா, அல்லது சமூகத்தின் செல்வத்தை உற்பத்தி செய்யும் தொழிலாள வர்க்கமா?
ரஷ்யாவுக்கு எதிரான நேட்டோவின் போரை எதிர்க்காமல் போருக்கு எதிரான போராட்டம் இல்லை
இந்த இயக்கத்தை வளர்த்தெடுப்பதற்கு, நடத்தப்படும் மற்றும் தயாரிக்கப்படும் போர்கள் குறித்த அரசியல் தெளிவு அவசியம். அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்கு எதிராக மற்றொரு தாக்குதலுக்குத் தயாரிக்கும் அதேவேளையில், உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான நேட்டோ போரை ஐரோப்பிய சக்திகள் தீவிரப்படுத்தி, அணு ஆயுதம் ஏந்திய சக்திகளுக்கு இடையிலான நேரடி மோதலை மேலும் மேலும் நெருக்கமாகக் கொண்டுவருகின்றன.
ஐரோப்பிய அரசாங்கங்கள் தங்கள் இராணுவங்களையும் இராணுவ உற்பத்தியையும் போர்த் தயாரிப்புகளையும் விரிவுபடுத்தி வருகின்றன. உக்ரேன் மீதான ஆதிக்கத்தையும் ரஷ்யாவை மூலோபாய ரீதியாகப் பலவீனப்படுத்துவதையும் தங்கள் ஏகாதிபத்திய நலன்களின் மையமாக ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் பிற பெரும் சக்திகள் கருதுகின்றன.
நடைமுறையிலுள்ள இந்தப் போர்களைப் புறக்கணித்துவிட்டு, அருவமான “இராணுவவாதத்திற்கு” எதிராகத் தொழிலாள வர்க்கம் போராட முடியாது. எல்லாவற்றுக்கும் மேலாக, ஐரோப்பிய மீள் ஆயுதமயமாக்கலுக்கும் இராணுவத் தீவிரப்படுத்தலுக்கும் மைய அச்சாக உள்ள, உக்ரேனில் நடைபெறும் நேட்டோ-ரஷ்யப் போரை அது எதிர்கொண்டாக வேண்டும்.
இங்குதான் ஏற்பாட்டாளர்களின் அரசியல் வரம்புகள் வெளிப்படுகின்றன. அவர்களது கூட்டுப் பிரகடனம் உக்ரேனைக் குறிப்பிடவே இல்லை. பங்கேற்கும் பல சங்கங்கள் இணைந்துள்ள உலகத் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் (WFTU) அறிக்கை, அந்தப் போரை மேலோட்டமாக மட்டுமே குறிப்பிடுகிறது.
உக்ரேனைக் குறிப்பிடாமல் விட்டது தற்செயலானது அல்ல. ஜேர்மனியின் ver.di உள்ளிட்ட ஐரோப்பாவின் பிரதான தொழிற்சங்க அதிகாரத்துவங்கள், உக்ரேனில் நேட்டோவின் போர்க் கொள்கையையும் அதனுடன் தொடர்புடைய இராணுவப் பெருக்கத்தையும் ஆதரிக்கின்றன. உக்ரேனிய இறையாண்மையையும் ஜனநாயகத்தையும் பாதுகாப்பதற்கான வேண்டுகோள்கள், ஆயுத உற்பத்தியை விரிவுபடுத்துவதையும் ஐரோப்பாவைப் போர்ப் பொருளாதாரமாக மாற்றுவதையும் நியாயப்படுத்துகின்றன.
ஸ்ராலினிச மரபில் வேரூன்றிய இத்தாலியின் USB போன்ற WFTU உறுப்புச் சங்கங்கள், நேட்டோவின் ஆயுத விநியோகங்களை எதிர்க்கின்றன; முதலாளித்துவக் கட்சிகளுக்கு இடையிலான இராஜதந்திரத்திற்கு அழைப்பு விடுக்கின்றன. பிரெஞ்சுப் பொதுத் தொழிலாளர் கூட்டமைப்பு (CGT) தனது பங்கிற்கு, பேச்சுவார்த்தைகளுக்கான அழைப்புகளை ரஷ்யா மீதான கண்டனங்களுடனும் உக்ரேனுக்கான ஒருமைப்பாட்டுப் பிரச்சாரங்களுடனும் இணைக்கிறது. போர் ஆதரவு தொழிற்சங்க அதிகாரத்துவங்களுடனான கூட்டணிகளைப் பேணுவதற்கான முயற்சிகள், ஐரோப்பிய இராணுவவாதம் என்ற மையக் கேள்வியை அடக்கிவைப்பதற்கே தவிர்க்க முடியாமல் இட்டுச் செல்கின்றன.
இது ஓர் அரசியல் முட்டுச்சந்து. நேட்டோ-ரஷ்ய மோதலைத் தவிர்ப்பதன் மூலமோ, ஏகாதிபத்திய அரசாங்கங்களும் ரஷ்ய முதலாளித்துவத் தன்னலக்குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் புட்டினின் பிற்போக்கு ஆட்சியும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுப்பதன் மூலமோ உலகப் போர் ஆபத்தைத் தடுக்க முடியாது. அதற்கு, சோசலிச, சர்வதேசியவாத வேலைத்திட்டத்தின் அடிப்படையில், அனைத்து முதலாளித்துவ அரசாங்கங்களுக்கும் எதிரான சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அணிதிரட்டல் தேவை.
தொழிற்சங்க அதிகாரத்துவங்களுடனும் போலி-இடதுகளுடனும் முறித்துக்கொள்ளுங்கள்
வெகுஜனப் போராட்டத்திற்கு ஆளும் வர்க்கம் அளிக்கும் பதில், அரசியல் போராட்டத்தின் பரிமாணத்தை அடிக்கோடிடுகிறது. பிரான்சில், ஊரடங்கு உத்தரவுகள், தடைகள், போலிஸ் வன்முறைக்கு மத்தியில் 10,000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்; அதேவேளை அரசியல் ஸ்தாபனம் பாசிசத் தேசிய பேரணியை (RN) ஊக்குவிப்பதுடன், “இடதுசாரித் தீவிரவாதத்திற்கு” எதிராக நடவடிக்கை எடுக்கப்போவதாக அச்சுறுத்துகிறது. இத்தாலியில், மெலோனி அரசாங்கம் ஆர்ப்பாட்டங்களை ஒடுக்கியுள்ளதுடன், பாலஸ்தீன ஆதரவு செயற்பாட்டாளர்களைக் கண்டித்துள்ளது. ஜேர்மனியில், சனிக்கிழமை இளைஞர் போராட்டங்கள் நடைபெறுவதற்கு முன்பாகவே, அவை வன்முறையாக மாறக்கூடும் என்று அரசியல்வாதிகள், போலிஸ் மற்றும் ஊடகங்கள் அவதூறு பரப்பி வருகின்றன.
போரும் சிக்கன நடவடிக்கைகளும் மேலும் மேலும் எதேச்சாதிகார முறைகளின் மூலம் திணிக்கப்படுகின்றன. இவற்றைத் தோற்கடிப்பதற்கு, முதலாளித்துவ அரசாங்கங்களுக்குச் சவால் விடும் ஓர் இயக்கம் தேவை.
ஆயினும், தொழிற்சங்க அதிகாரத்துவங்களும் போலி-இடது அமைப்புகளும் போராட்டங்களை வரம்புக்குட்பட்ட ஆர்ப்பாட்டங்களுக்கும் அதே அரசாங்கங்களுடனான பேச்சுவார்த்தைகளுக்கும் மட்டுப்படுத்த முயல்கின்றன. பிரான்சில், CGT மற்றும் பிற கூட்டமைப்புகள் வெகுஜன எதிர்ப்பைத் தனித்தனி வேலைநிறுத்தங்களுக்குள்ளும் ஜனாதிபதி மக்ரோனுடனான பேச்சுவார்த்தைகளுக்குள்ளும் திருப்பிவிட முயல்கின்றன. ஜோன்-லூக் மெலோன்சோனின் அடிபணியாத பிரான்ஸ் கட்சி அந்த எதிர்ப்பை முதலாளித்துவக் குடியரசின் நிறுவனங்களுக்குள் திசைதிருப்ப முயல்கிறது. இதே நோக்குநிலைதான் 2023இல் ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிரான போராட்டத்தைத் தோல்விக்கு இட்டுச் சென்றது.
தடையாக இருப்பது, நீண்ட வேலைநிறுத்தங்களை ஒழுங்கமைப்பதில் தொழிற்சங்க அதிகாரிகளுக்குள்ள தயக்கம் மட்டுமல்ல. முதலாளித்துவ அரசுடனான தங்கள் உறவைப் பாதுகாத்துக்கொள்வதும், தொழிலாள வர்க்கம் ஒரு சுயாதீன அரசியல் சக்தியாக எழுவதைத் தடுப்பதுமே அவர்களது அரசியல் நோக்குநிலையாகும். எனவே, துறைமுகத் தொழிலாளர்களின் நடவடிக்கையை விரிவுபடுத்துவதற்கான போராட்டத்திற்கு, இந்த அதிகாரத்துவங்களினதும் அவற்றின் போலி-இடது பாதுகாவலர்களினதும் அதிகாரத்திற்கு எதிரான கிளர்ச்சி அவசியமாகிறது.
சாமானிய தொழிலாளர் குழுக்களைக் கட்டியெழுப்புவோம்! சோசலிசத்திற்காகப் போராடுவோம்!
சோசலிச சமத்துவக் கட்சிகள், துறைமுகங்கள், தொழிற்சாலைகள், போக்குவரத்து, பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், தொழிலாள வர்க்கக் குடியிருப்புப் பகுதிகள் ஆகியவற்றில் சுயாதீனமான, ஜனநாயக ரீதியாகக் கட்டுப்படுத்தப்படும் சாமானிய தொழிலாளர்களின் நடவடிக்கைக் குழுக்களை அமைக்க அழைப்பு விடுக்கின்றன. இந்தக் குழுக்கள் தொழிலாளர்களின் கோரிக்கைகளை வகுக்க வேண்டும், ஒடுக்குமுறைக்கு எதிரான எதிர்ப்பை ஒழுங்கமைக்க வேண்டும், தொழிற்சங்க எந்திரங்களிலிருந்தும் முதலாளித்துவக் கட்சிகளிலிருந்தும் சுயாதீனமாக வேலைநிறுத்தங்களை ஒருங்கிணைக்க வேண்டும்.
துறைமுகத் தொழிலாளர்களை ரயில்வே தொழிலாளர்கள், டிரக் ஓட்டுநர்கள், கடல்சார் தொழிலாளர்கள், தொழில்துறைத் தொழிலாளர்கள், இராணுவ உற்பத்தியிலும் போக்குவரத்திலும் ஈடுபட்டுள்ள அனைவருடனும் இணைப்பதே இவற்றின் உடனடிப் பணியாகும்; அதே சமயம், கட்டாய இராணுவச் சேவை, சிக்கன நடவடிக்கைகள், போலிஸ் வன்முறைக்கு எதிராகப் போராடும் இளைஞர்களுடனும் ஐக்கியப்பட வேண்டும்.
இந்த ஒருங்கிணைப்பு ஒவ்வொரு தேசிய எல்லையையும் கடக்க வேண்டும். ஆளும் உயரடுக்குகள் தங்கள் பொருளாதாரத் தாக்குதல்களையும் மீள் ஆயுதமயமாக்கலையும் ஒடுக்குமுறையையும் சர்வதேச அளவில் ஒருங்கிணைக்கின்றன; தொழிலாளர்கள் தங்களது சொந்தச் சர்வதேச அமைப்பைக் கொண்டு பதிலளிக்க வேண்டும். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் (ICFI) தொடங்கப்பட்ட சாமானிய தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணி (IWA-RFC), இந்தப் போராட்டத்திற்கான கட்டமைப்பை வழங்குகிறது.
தொடர்ச்சியான ஐரோப்பிய பொது வேலைநிறுத்தத்திற்குத் தயாராவதே இலக்காக இருக்க வேண்டும்; அந்த வேலைநிறுத்தம் முதலாளித்துவத் தன்னலக்குழுவின் ஆட்சிக்குச் சவால் விடுப்பதாகவும், தொழிலாளர்கள் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் கேள்வியை முன்வைப்பதாகவும் அமைய வேண்டும். இது பரந்த தொழில்துறை நடவடிக்கைக்கான கோரிக்கையைவிட மேலானது. போர், வறுமை, சமூக சமத்துவமின்மை, பாசிசம் ஆகியவற்றை முதலாளித்துவ அமைப்பின் கட்டமைப்பிற்குள் தோற்கடிக்க முடியாது.
போருக்காக வீணடிக்கப்படும் வளங்கள் சமூகத் தேவைகளுக்குத் திருப்பிவிடப்பட வேண்டும். பெரிய வங்கிகள், ஆயுத நிறுவனங்கள், மூலோபாயத் தொழில்துறைகள் பொதுச் சொத்துடமையின் கீழும் ஜனநாயகத் தொழிலாளர் கட்டுப்பாட்டின் கீழும் கொண்டுவரப்பட வேண்டும். முதலாளித்துவ ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிராக, உலக சோசலிசக் கூட்டமைப்பின் ஒரு பகுதியாக, ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகளுக்காக நாங்கள் போராடுகிறோம்.
இதைச் சாத்தியமாக்க, தொழிலாள வர்க்கத்தில் புரட்சிகர சோசலிசக் கட்சிகளைக் கட்டியெழுப்புவது அவசியம். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிவுகளான சோசலிச சமத்துவக் கட்சிகள், இந்தத் தலைமையை உருவாக்கவும், துறைமுகத் தொழிலாளர்களின் நடவடிக்கையில் வெளிப்பட்டுள்ள வளர்ந்துவரும் எதிர்ப்பை, முதலாளித்துவம், போர், சர்வாதிகாரம் ஆகியவற்றுக்கு எதிரான சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தின் ஒன்றுபட்ட அரசியல் தாக்குதலாக மாற்றவும் போராடுகின்றன.
