இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
இந்தியாவில் உணவு மற்றும் எரிபொருள் விலைகள் அதிகரித்தமை, வறுமை ஊதியங்கள், பாதுகாப்பற்ற மற்றும் குறிப்பாகச் சுரண்டல்மிக்க ஒப்பந்தத் தொழில் வேலைவாய்ப்பு, அத்துடன் பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசாங்கமும் ஏனைய அரசியல் கட்சிகளும் ஆளும் மாநில அரசாங்கங்களும் முன்னெடுக்கும் தனியார்மயமாக்கல் நடவடிக்கைகளாலும் கடந்த சில வாரங்களாக தொழிலாளர் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன.
பல பொருளாதாரத் துறைகளைச் சேர்ந்த மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் இந்தப் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, மேற்கு இந்திய மாநிலமான குஜராத்தின் சூரத் நகரில் ஜவுளித் தொழிலாளர்கள் நடத்தும் போராட்டங்கள்; இந்தியாவின் அதிக மக்கள் தொகையைக் கொண்ட இரண்டு மாநிலங்களான உத்தரப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள ஆஷா (ASHA) சுகாதாரப் பணியாளர்களின் போராட்டங்கள்; ஹரியானாவில் மின்சார விநியோகக் கட்டமைப்புத் தொழிலாளர்களின் போராட்டங்கள்; பஞ்சாபில் மாநில அரசாங்க ஊழியர்களின் போராட்டங்கள்; இந்தியா முழுவதும் வங்கித் தொழிலாளர்களின் போராட்டங்கள் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இந்தப் போராட்டங்களில் பெரும்பாலானவை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தொழிற்சங்கங்கள் வேலைநேரம் அல்லாத காலத்தில் எதிர்ப்புப் போராட்டங்களுக்கும் அல்லது மட்டுப்படுத்தப்பட்ட நேர வேலைநிறுத்தங்களுக்கும் மட்டுமே அழைப்பு விடுத்து வருகின்றன. தொழிற்சங்க எந்திரங்களின் இழுத்தடிப்பால் விரக்தியடைந்த தொழிலாளர்கள், கடந்த ஏப்ரல் மாதம் நொய்டாவில் நடந்ததைப் போல, தங்கள் கைகளிலேயே விவகாரங்களை எடுத்துக்கொள்ளும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.
சமூக எதிர்ப்பைத் தூண்டிவிடும் ஒரு முக்கிய காரணி, ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலியப் போரினால் ஏற்பட்ட விலைவாசி அதிகரிப்பாகும். இந்தக் குற்றவியல் போரில் வாஷிங்டன், டெல் அவிவ் ஆகிய இரண்டுடனும் வலுவான இராணுவ-பாதுகாப்புக் கூட்டணியைக் கொண்டுள்ள இந்தியாவின் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கமும் உடந்தையாக உள்ளது. ஆனால், வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்புப் போராட்டங்களின் இந்த அலை, அரசாங்கத்தின் தொடர்ச்சியான சிக்கன நடவடிக்கைகள், தேவையெனில் வேலைக்கு அமர்த்தி பின்னர் வேலைநீக்குவதை “சாதாரணமாக்குவதை” நோக்கமாகக் கொண்ட புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை நடைமுறைப்படுத்துதல் மற்றும் கிராமப்புற ஊதியங்களைக் குறைக்கும் வெளிப்படையான நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட மாநிலத்தின் “கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத்” திட்டத்தைச் சீர்குலைத்தல் ஆகியவற்றுக்கும் எதிரான பதிலிறுப்பாகும்.
இந்தத் தொழிலாளர் போராட்டங்கள், இந்து மேலாதிக்கவாத பா.ஜ.க. அரசாங்கம் வாக்காளர் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு எதிராக இளைஞர்கள் தலைமையில் எழுந்துள்ள போராட்ட அலையுடன் இணையாக வளர்ச்சியடைந்துள்ளன. தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல்களுக்கான விசேட தீவிரத் திருத்தத்தின் (SIR) கீழ், பாரிய வாக்காளர் ஒடுக்குமுறை நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மில்லியன் கணக்கான முஸ்லிம்கள், தலித்துகள் மற்றும் ஏனைய ஏழை மக்கள் வாக்காளர் பட்டியல்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
புதிதாக நிறுவப்பட்ட “ஜென் ஸீ” (Gen Z) மாணவர் எதிர்ப்பு இயக்கமான கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினால் (CJP) தொடங்கப்பட்ட எஸ்.ஐ.ஆர். எதிர்ப்புப் போராட்டங்கள், பிரதமர் நரேந்திர மோடியின் அதி-வலது ஆட்சியை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன.
இந்தப் போராட்டங்களை ஒடுக்குவதற்கு அரசாங்கம் அசாதாரணமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. சி.ஜே.பி. அழைப்பு விடுத்து, ஸ்ராலினிச “இடது” கட்சிகளும் அவற்றின் மாணவர் அமைப்புகளும் ஆதரவளித்த ஒக்டோபர் 10 திகதி டெல்லி எதிர்ப்புப் பொதுக் கூட்டத்தைத் தடுக்க மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்தது. இதற்காக, அதிகாரிகள் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானவர்களை முன்கூட்டியே கைது செய்தனர்; இந்தியாவின் தலைநகருக்கான மற்றும் தலைநகருக்குள் போக்குவரத்தை முடக்கினர்; மேலும் பல்லாயிரக்கணக்கான பொலிஸ் மற்றும் மத்திய ரிசர்வ் பொலிஸ் படையைச் (CRPF) சேர்ந்த துணை இராணுவப் படையினரை அணிதிரட்டினர். டஜன் கணக்கான ரயில்கள் இரத்துச் செய்யப்பட்டன, நகரின் பெரும்பாலான மெட்ரோ ரயில் சேவைகள் மூடப்பட்டன, மேலும் தேசிய தலைநகரப் பிராந்தியத்திற்கான அனைத்து பிரதான வீதிகளின் நுழைவாயில்களிலும் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டன. அடுத்த நாள் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில், உலக சோசலிச வலைத் தளம் பின்வருமாறு குறிப்பிட்டது: “சர்வாதிகார ஆட்சியை உறுதிப்படுத்துவதற்கான ஒரு முக்கியமான நடவடிக்கையாக, நாடு முழுவதும் மாணவர்களையும் அண்மையில் கல்லூரிப் படிப்பை முடித்தவர்களையும் அணிதிரட்டியுள்ள, மேலும் மக்கள்தொகையின் பரந்த பிரிவினரையும் அதிகரித்தளவில் ஈர்த்து வருகின்ற வளர்ந்து வரும் எதிர்ப்பு இயக்கத்தை மோடி அரசாங்கம் குற்றமாக்க முயல்கிறது.”
அடுத்தடுத்த எதிர்ப்புப் போராட்டத்திற்கான தயாரிப்புகளின்போது, சி.ஜே.பி.யின் உயர்மட்டத் தலைவர்கள் தடுத்து வைக்கப்பட்டனர். நிகழ்வு முடிவடைந்த பின்னரும், போராட்டங்களைத் தடைசெய்யும் ஜனநாயக விரோத அரசாங்க உத்தரவுகளுக்குக் கட்டுப்படுவதாக அவர்களிடமிருந்து சட்டரீதியாகக் கட்டுப்படும் உத்தரவாதங்களை அதிகாரிகள் பலவந்தமாகப் பெற்ற பின்னரே அவர்கள் விடுவிக்கப்பட்டனர். ஒக்டோபர் 16 டெல்லி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொள்வதைத் தடுப்பதற்காக, ஒரு நாளின் பெரும்பகுதி தடுத்து வைக்கப்பட்டு “காணாமல் ஆக்கப்பட்ட”, மாவோயிஸ்டுகளுடன் இணைந்த அகில இந்திய மாணவர் சங்கத்தின் (AISA) தலைவரான நேஹா போரா, “அமைதி உறுதிப்பத்திரத்தில்” கையெழுத்திட மறுத்துள்ளதால், இந்த மாதத்தின் பிற்பகுதியில் ஒரு விசேட நீதவான் முன்னிலையில் ஆஜராக வேண்டும்.
கடந்த சில நாட்களாக, மோடி அரசாங்கம் மேலும் அடக்குமுறை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. நவம்பர் 4 அன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின்போது, போராட்டங்களால் ஏற்பட்ட “இடையூறுகள்” காரணமாக வணிக நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள எந்தவொரு “இழப்புகளுக்கும்” போராட்ட அமைப்பாளர்களை நிர்ப்பந்தித்து பணம் செலுத்த வைக்க வேண்டும் என்று சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிட்டார். உண்மையில், சமீபத்திய போராட்டங்களுடன் தொடர்புடைய “அன்றாட வாழ்க்கையின்” எந்தவொரு இடையூறுக்கும் மிகப் பெரிய காரணம், அரசாங்கத்தின் உத்தரவின் பேரில் நடைமுறைப்படுத்தப்பட்ட கொடூரமான பாதுகாப்பு நடவடிக்கைகளே ஆகும்.
தீவிரமடைந்துவரும் ஒடுக்குமுறைக்கு ஒரு சாக்குப்போக்கை உருவாக்குவதற்கும், அதன் தீவிர வலதுசாரி அணிகளை அணிதிரட்டுவதற்கும், உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் போன்ற உயர்மட்ட பா.ஜ.க. தலைவர்கள், போராட்டங்களில் “வெளிநாட்டுத் தலையீடு” இருப்பதாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவதோடு “ஜனநாயகத்தைக் காப்போம், அராஜகத்தை அகற்றுவோம்” என்ற முழக்கத்தின் கீழ் எதிர்ப்புப் போராட்டங்களையும் ஏற்பாடு செய்து வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமை சத்தீஸ்கரின் பஸ்தாரில் மத்திய ரிசர்வ் பொலிஸ் படையினர் முன் உரையாற்றிய மோடி, நீண்டகாலமாக இருந்து வந்த மாவோவாத அல்லது நக்சலைட் கொரில்லா கிளர்ச்சியை இந்திய அரசு நசுக்கிவிட்டதாகப் பெருமை பேசினார். ஆனால், அவர் தொடர்ந்து கூறுகையில், “நமது நாட்டை ‘திமாகி-நக்சல்களிடமிருந்து’ (அறிவுஜீவி நக்சலைட்டுகள்) காப்பாற்ற வேண்டிய அவசியம் உள்ளது... ‘திமாகி-நக்சல்கள்’ பல்வேறு நிறுவனங்களைக் கைப்பற்றி, நாட்டின் அரசியலமைப்புக்கும் ஜனநாயகத்திற்கும் எதிராக மக்களைத் தூண்டிவிட்டு வருகின்றனர்” என்றார்.
விரிவடைந்துவரும் அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்களில் தொழிலாள வர்க்கம் தலையிட்டு, வர்க்கப் போராட்ட முறைகளைப் பயன்படுத்தி ஒரு சுயாதீனமான அரசியல் சக்தியாகச் செயல்படும் என்பதே அரசாங்கத்தின் மிகப்பெரிய அச்சம் ஆகும்.
கடந்த ஏப்ரல் மாதம், உத்தரப் பிரதேசத்தின் நொய்டா மற்றும் ஹரியானாவின் மனேசர் ஆகிய டெல்லியின் தொழில்துறை புறநகர்ப் பகுதிகளில் தொழிலாளர் எதிர்ப்புப் போராட்டங்களும் வேலைநிறுத்தங்களும் வெடித்தபோது, அவை கொடூரமான ஒடுக்குமுறையை எதிர்கொண்டன. அற்ப ஊதியங்கள், நீண்ட வேலை நேரங்கள் மற்றும் ஒப்பந்த வேலைவாய்ப்புக்கும் எதிராக அமைதியான முறையில் எதிர்ப்புத் தெரிவித்த தொழிலாளர்களைப் பொலிஸ் கொடூரமாகத் தாக்கியது. பொலிஸ் தாக்குதலில் இருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள முயன்ற பின்னர், கலவரத்தில் ஈடுபட்டதாகப் புனையப்பட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதேபோல், சூரத்தில் ஜவுளித் தொழிலாளர்களின் எதிர்ப்புப் போராட்டங்களை ஒடுக்குவதில் அதிகாரிகள் முதலாளிகளுடன் கைகோர்த்துச் செயல்பட்டு வருகின்றனர். நிலுவையிலுள்ள ஊதியங்களை வழங்க வேண்டும் என்றும், வாரத்திற்கு குறைந்தபட்சம் ஒரு நாள் விடுமுறை பெறுவதற்கான உரிமை உட்பட, சட்டத்தால் நிர்ணயிக்கப்பட்ட கட்டாய மேலதிக வேலை நேர வரம்புகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் கோரி, ஆகஸ்ட் 16 மற்றும் ஒக்டோபர் 15 நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டதற்காக நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் மற்றும்/அல்லது வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இரண்டு சந்தர்ப்பங்களிலும், பொலிஸ் தொழிலாளர்கள் மீது தடியடிப் பிரயோகம் செய்தது.
எவ்வாறெனினும், இளைஞர் போராட்டங்களின் தலைமையில் உள்ள அரசியல் சக்திகளான குட்டி முதலாளித்துவ சி.ஜே.பி. மற்றும் பல்வேறு ஸ்ராலினிசக் கட்சிகளும் அவற்றின் தனித்தனியான மாணவர் அமைப்புகளும், மோடி அரசாங்கத்திற்கும் அதற்குப் பின்னால் நிற்கும் முதலாளித்துவ தன்னலக்குழுவிற்கும் எதிராக ஒரு தொழில்துறை மற்றும் அரசியல் தாக்குதலை முன்னெடுப்பதற்காக தொழிலாள வர்க்கத்தின் சமூக சக்தியை அணிதிரட்டுவதை உறுதியாக எதிர்க்கின்றன.
பா.ஜ.க.வின் வாக்குரிமைகளை ஒடுக்குவதற்கான நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டத்தை, முதன்மையாக தொழிலாள வர்க்கத்தினரும் கிராமப்புற உழைப்பாளர்களுமான மக்களின் வாக்குரிமைகளைப் பாதுகாப்பதற்கான, அதிகரித்துவரும் தொழிலாளர் சுரண்டல், விரிவடைந்துவரும் சமூக சமத்துவமின்மை மற்றும் அத்தியாவசியமாகத் தேவைப்படும் பொதுச் சேவைகளிலிருந்து பாரிய சமூக வளங்களைத் திசைதிருப்பி இந்தியாவின் இராணுவ வலிமையைக் கட்டியெழுப்புவதற்கும் எதிரான போராட்டத்துடன் இணைக்க அவர்கள் மறுக்கின்றனர்.
ஜனநாயகம் ஆபத்தில் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கும் அதேவேளை, வாக்காளர் பட்டியல்களில் இருந்து பெயர்களை நீக்குவதற்கு எதிரான போராட்டங்களை, மோடி மற்றும் பா.ஜ.க. அரசாங்கத்தின் ஒரு கைக்கூலியான தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்க வேண்டும் என்றும், விசேட தீவிர திருத்தத்தை நிறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுப்பதற்கு மட்டுமே சி.ஜே.பி.யும் ஸ்ராலினிஸ்டுகளும் மட்டுப்படுத்தியுள்ளனர்.
இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து இந்தியாவின் முதலாளித்துவ உயரடுக்கின் செல்வம் அதிவேகமாகப் பெருகியுள்ள நிலையில், மக்கள்தொகையின் பெரும்பகுதியை உள்ளடக்கிய தொழிலாளர்களும் உழைப்பாளர்களும் தொடர்ந்து பசி, அவலநிலை மற்றும் வறுமையில் சிக்கித் தவிக்கின்ற சூழ்நிலையில், இளைஞர் போராட்டங்களை இந்தியாவின் முதலாளித்துவ உயரடுக்கின் கட்சிகள் மற்றும் நிறுவனங்களுடன் அரசியல் ரீதியாகப் பிணைத்துவைக்கும் அவர்களின் முயற்சிகளுடன் இது கைகோர்த்துச் செல்கிறது.
சி.ஜே.பி., கடந்த ஜூன் மாதம் தோன்றியதிலிருந்து அரசாங்கத்திற்கும் அரசியல் உயரடுக்கிற்கும் அழுத்தம் கொடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஸ்ராலினிஸ்டுகள் நீண்டகாலமாகவே அரசியல் ஸ்தாபகத்தின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக இருந்து வருகின்ற அதே வேளை, ஒக்டோபர் 10 டெல்லி எதிர்ப்புப் போராட்டத்திற்கு மோடி அரசாங்கம் சர்வாதிகார முறையில் பதிலளித்ததைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சி தலைமையிலான இந்தியா எதிர்க்கட்சிக் கூட்டணியின் பின்னால் இளைஞர் போராட்டங்களை அணிதிரட்டுவதற்கான அவர்களின் தனித்தனியான முயற்சிகள் பெருமளவில் தீவிரமடைந்தன.
மாவோவாத இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) விடுதலையின் அறிவுறுத்தலின்படி செயல்பட்ட AISA தலைவர் போரா, இரண்டு நாட்களுக்குப் பின்னர் காங்கிரஸ் கட்சி தலைமையிலான விசேட தீவிர திருத்தத்தை எதிர்க்கும் பேரணியில், காங்கிரஸ் கட்சியின் பரம்பரைத் தலைவரும் பாராளுமன்றத்தின் உத்தியோகபூர்வ எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியுடன் கைகோர்த்தபடி கலந்துகொண்டார். அரசாங்கத்தின் தடையை மீறி நடத்தப்பட்ட ஒரு “தீவிரமான” போராட்டத்தை ஆதரிப்பதாகத் தோன்றுவதை காங்கிரஸ் கட்சி விரும்பாத காரணத்தால், ஒக்டோபர் 10 போராட்டத்திலிருந்து விலகியிருக்குமாறு தனது சொந்த இளைஞர் அமைப்பிற்கு காங்கிரஸ் கட்சி அறிவுறுத்தியிருந்தது.
இதேபோல், சி.ஜே.பி.யும் காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணியினால் ஏற்பாடு செய்யப்பட்ட எதிர்ப்புப் போராட்டங்களுக்கு தனது ஆதரவை அறிவித்துள்ளதுடன், அரசின் அடக்குமுறை நடவடிக்கைகளை எதிர்கொண்டு தனது சொந்த நடவடிக்கைகளையும் மட்டுப்படுத்தியுள்ளது.
பல முன்னாள் பா.ஜ.க. கூட்டணிக் கட்சிகள் உள்ளடங்களாக இரண்டு டசினுக்கும் அதிகமான கட்சிகளைக் கொண்டுள்ள இந்தியா கூட்டணி, மோடி தடுமாறும் பட்சத்தில், பா.ஜ.க.வைப் போலவே முதலீட்டாளர்களுக்கு ஆதரவான சீர்திருத்தங்களுக்கும், அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனான இந்தியாவின் சீன-விரோத “உலகளாவிய மூலோபாயக் கூட்டாண்மைக்கும்” குறைவின்றி அர்ப்பணிப்புக் கொண்ட ஒரு மாற்று வலதுசாரி அரசாங்கத்தை நிறுவுவதற்கான ஒரு கருவியை இந்திய ஆளும் வர்க்கத்திற்கு வழங்குகிறது. மோடி ஆட்சியின் வர்க்கப் போர் திட்ட நிரல் தொடர்பாக காங்கிரஸ் கட்சிக்கும் அதன் இந்தியா கூட்டணிக் கூட்டாளிகளுக்கும் இடையில் காணப்படும் எந்தவொரு வேறுபாடுகளும், அதானி மற்றும் அம்பானி போன்ற பல்வேறு பில்லியனர் தன்னலக்குழுக்களுடன் கூட்டுச் சேர்ந்து, பா.ஜ.க. அரசியல் அதிகாரத்தை மிகப்பெருமளவுக்கு ஏகபோகமாக்கியுள்ளதனால், அரசாங்கத்தின் சலுகைகளைப் பெறுவதற்கான வாய்ப்பிலிருந்து தாங்கள் துண்டிக்கப்பட்டுள்ளமை குறித்து அவர்கள் கொண்டுள்ள கோபம் மற்றும் அதிருப்தியினால் தோன்றிய, தந்திரோபாய ரீதியான வேறுபாடுகளாகும்.
காங்கிரஸ் கட்சி தலைமையிலான கர்நாடக மாநில அரசாங்கம், மோடி அரசாங்கத்தைப் போலவே இடதுசாரி எதிர்ப்பை ஒடுக்குவதற்குத் தயாராக இருப்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளது. முதலில் சி.ஜே.பி.யின் ஆர்ப்பாட்டத்திற்குத் தடை விதித்ததுடன், பின்னர் ஒக்டோபர் 31 அன்று கரும்பு விவசாயிகள் நடத்திய போராட்டத்திற்கும் தடை விதித்தது. இரண்டாவது சம்பவத்தில், விவசாயிகள் புனே-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை மறிப்பதைத் தடுப்பதற்காக மாநில அரசாங்கம் பெருமளவிலான மாநிலப் பொலிஸ் படையினரைப் பணியில் ஈடுபடுத்தியது.
பா.ஜ.க. அரசாங்கத்திற்கு எதிராக வெகுஜன கோபம் அதிகரித்துவரும் சூழ்நிலையில், காங்கிரஸ் கட்சியின் சிதைந்துபோன “முற்போக்கு” நற்பெயரை மீண்டும் மெருகூட்ட வேண்டியதன் அவசியத்தை நன்கு உணர்ந்த அதன் தலைமை, நவம்பர் 1 அன்று டெல்லியில் நடைபெற்ற “வாக்கைக் காப்போம், நாட்டைக் காப்போம்” என்ற பொதுக் கூட்டத்தில் “இடது” கட்சிகளுக்கு முக்கியத்துவம் அளித்தது. அதற்கு ஒத்துழைப்பதில் மூன்று ஸ்ராலினிசக் கட்சிகளின் தலைவர்களான சி.பி.எம். இன் எம்.ஏ. பேபி, சி.பி.ஐ. இன் டி. ராஜா மற்றும் சி.பி.ஐ. (எம்.எல்.) விடுதலையின் பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா ஆகிய மூவரும் காந்தியுடன் இணைந்து இந்தக் கூட்டத்தில் மிகுந்த ஆர்வத்துடன் தோன்றினர்.
இந்து வலதுசாரிகளின் எழுச்சியைத் தடுப்பது என்ற பெயரில், ஸ்ராலினிஸ்டுகள் பல தசாப்தங்களாக வர்க்கப் போராட்டத்தை ஒடுக்கி வந்துள்ளனர். வறுமை ஊதியங்கள், தனியார்மயமாக்கல் ஆகியவற்றுக்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் வெகுஜன எதிர்ப்பையும் வெடிக்கும் தருவாய்க்கு வளர்ந்துள்ள ஒப்பந்தத் தொழிலாளர்களின் எதிர்ப்பையும் தனிமைப்படுத்தப்பட்ட கூட்டு பேரம்பேசும் போராட்டங்களுக்குள் அவர்கள் மட்டுப்படுத்தியுள்ள அதேவேளை, தொழிலாளர்களை அரசியல்ரீதியாக காங்கிரஸ் மற்றும் ஏனைய வலதுசாரி முதலாளித்துவக் கட்சிகளுடன் கட்டி வைக்கின்றனர். முதலாளித்துவத்தால் உருவாக்கப்பட்ட சமூக அவலநிலைக்கு தொழிலாள வர்க்கம் தனது சொந்த சோசலிசத் தீர்வை முன்வைப்பது தடுக்கப்பட்டுள்ளதால், உலகளாவிய முதலாளித்துவ நெருக்கடி ஆழமடைந்துவரும் சூழ்நிலையில் தனது “சூரியனுக்குக் கீழான இடத்தை” உறுதிப்படுத்திக்கொள்ளத் தீவிரமாக முயலும் இந்திய முதலாளித்துவ வர்க்கத்தின் முதன்மைக் கட்சியாக பா.ஜ.க. உருவெடுத்து, மேலும் வலுப்பெற்றுள்ளது.
இப்போது மோடி ஆட்சி அதிகரித்துவரும் வெகுஜன எதிர்ப்பை எதிர்கொண்டுள்ள நிலையில், அதை அரசியல்ரீதியாகத் தடம் புரளச் செய்யும் முயற்சிகளில் ஸ்ராலினிஸ்டுகள் மீண்டும் முன்னணியில் உள்ளனர். ஒருபுறம், பா.ஜ.க.வின் வாக்காளர் ஒடுக்குமுறை, ஜனநாயக உரிமைகளை அழித்தொழித்தல் மற்றும் வகுப்புவாதத் தூண்டுதலுக்கு எதிரான எதிர்ப்பை வலதுசாரி இந்தியா கூட்டணியுடன் அவர்கள் பிணைத்துள்ளனர். ஜனநாயக உரிமைகளை நீதிமன்றங்கள் மூலமாகவும், இந்துத்துவமயமாக்கப்பட்டு மேலும் சீரழிந்துவரும் இந்திய முதலாளித்துவ ஜனநாயகத்தின் ஏனைய நிறுவனங்கள் மூலமாகவும் பாதுகாக்க முடியும் என்ற அழிவுகரமான அரசியல் மாயைகளை ஊக்குவிக்கின்றனர். மறுபுறம், முக்கியமான சமூக-பொருளாதாரப் பிரச்சினைகள் தொடர்பாக தொழிலாள வர்க்கத்தினுள் பெருகிவரும் போராட்டங்களை ஒரு பொதுவான தொழில்துறை மற்றும் அரசியல் எதிர்த்தாக்குதலாக ஐக்கியப்படுத்துவதைத் தடுக்க அவர்கள் முயற்சிக்கின்றனர். CITU மற்றும் AITUC ஆகியவற்றைத் தொடக்கமாகக் கொண்ட அவர்களின் பல்வேறு தொழிற்சங்க முன்னணி அமைப்புகள், விசேட தீவிர திருத்தத்துக்கு எதிரான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்கு எதுவும் செய்யவில்லை. மேலும், வாக்காளர் ஒடுக்குமுறை நடவடிக்கைக்கு எதிராகவோ அல்லது மாணவர்கள் மீதான அரசாங்கத்தின் கொடூரமான ஒடுக்குமுறைக்கு எதிராகவோ அவர்கள் எதிர்ப்புப் போராட்டங்களுக்கு அழைப்பு விடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டாலும், அது தொழிலாள வர்க்கம் ஒரு சுயாதீனமான அரசியல் சக்தியாகத் தலையிடுவதைத் தடுப்பதையும், அதை இந்தியா கூட்டணியுடன் பிணைப்பதையும் நோக்கமாகக் கொண்டதாகவே இருக்கும்.
1917 ஒக்டோபர் ரஷ்யப் புரட்சிக்கும் அதன் ஸ்ராலினிசச் சீரழிவுக்கு எதிரான போராட்டத்திற்கும் உந்துசக்தியாக இருந்த நிரந்தரப் புரட்சி எனும் ட்ரொட்ஸ்கிச வேலைத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட, இந்தியத் தொழிலாள வர்க்கத்தின் ஒரு புதிய புரட்சிகரக் கட்சியை அபிவிருத்தி செய்வதே தீர்க்கமான பிரச்சினையாகும். இந்தியத் தொழிலாளர்கள் மற்றும் உழைப்பாளர்களின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பது என்பது, இந்திய முதலாளித்துவ வர்க்கத்தின் அனைத்து அரசியல் பிரதிநிதிகளிடமிருந்தும் தொழிலாள வர்க்கம் தன்னைத் துண்டித்துக்கொண்டு, கிராமப்புற ஏழைகளையும் தம் பின்னால் அணிதிரட்டிக்கொண்டு சோசலிசத்திற்கான உலகளாவிய தொழிலாள வர்க்கத் தாக்குதலின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக, மோடி அரசாங்கத்திற்கும் இந்திய முதலாளித்துவத்திற்கும் எதிரான போராட்டத்தை முன்னெடுப்பதன் மூலமாக மட்டுமே சாத்தியமாகும்.
மேலும் படிக்க
- இந்திய வாக்காளர் நீக்கம்: மோடி அரசாங்கம் தொழிலாள வர்க்கத்தின் வாக்குரிமையைப் பறிப்பதற்கு மேற்கொள்ளும் நடவடிக்கை
- இந்தியாவின் அதி-வலது அரசாங்கத்தை உலுக்கியெடுத்த மாணவர் போராட்டங்களின் எழுச்சி
- இந்தியாவில் அதிகரித்து வரும் தொழிலாளர் போராட்டங்களை அடக்கும் முயற்சியில் நூற்றுக்கணக்கானோரை போலீசார் கைது செய்தனர்
